கி.பி.1857ஆம் ஆண்டு ஆங்கில அரசு கல்வியை மாநில அரசுகளிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து தாய்மொழிக் கல்வி சிறப்படையத் தொடங்கியது.
காந்தியடிகள் காங்கிரசில் பிரவேசிக்கும் வரை அம்மகா சபையின் நடவடிக்கைகளில், ஆங்கிலமே ஆதிக்கம் பெற்றிருந்தது. மாநில காங்கிரஸ் கமிட்டிகளின் நிருவாகத்திற்கும் ஆங்கிலமே பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆங்கிலப் பள்ளிகளுக்கு எதிராக வட்டார மொழிகளை வளர்க்கும் பணியிலே வடபுலத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகள் மிகவும் தீவிரம் காட்டி தேசிய கல்விக் கூடங்களை அமைத்தன.
தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டி மட்டும் அப்பணியிலே வேகங்காட்டவில்லை. இந்நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மாநில மொழிக்கெனத் தனித்தனியே வித்யா பீடங்கள் தோன்றி வரும் நிலையிலே அப்படி ஓர் அமைப்பு தமிழகத்தில் ஏற்படவில்லை. இது குறித்து திரு.வி.க.நெஞ்சம் குமுறி,
“தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கூட்டத்தார் நிகழ்ச்சி முறைகளை தமிழிலேயே நடத்தவேண்டும், மாறாக நடப்பாராயின் நாட்டவரைத் தமிழ் வழியில் நடத்த முயல வேண்டும்” என்று கூறினார்.
திலகர் காலத்திலேயே பிரதேசமொழி வளர்ச்சிக்கான பணியிலே விடுதலைப் பாசறையினர் ஈடுபட்டனர் என்றாலும் காந்தியடிகள் காலத்தில் தான் தாய்மொழிப் பற்றானது ஆங்கில ஆதிக்க எதிர்ப்பியக்கமாகவே உருவெடுத்தது.
ஆங்கிலேயரின் அரசியல் ஆதிக்கத்தினை மட்டுமின்றி அவர்தம் மொழியான ஆங்கிலத்திலிருந்தும் நம் நாடு விடுதலை பெறுவதனையே உண்மையான விடுதலையாகக் காந்தியடிகள் கருதினார். “சுதேசியம் என்பது வெறும் பண்டங்களை மட்டும் குறிப்பதன்று; சொந்த மொழியையும் குறிப்பதாகும்” என்று விளக்கம் தந்தார் காந்தியடிகள்.
தமிழகத்துக் காங்கிரஸ் பெருந்தலைவர்களுக்கு இருந்த ஆங்கில மோகம் கண்டு அடிகள் வருந்தினார். 1915இல் காந்தி மயிலாடுதுறைக்கு வருகை தந்தபோது நகர காங்கிரஸ் வரவேற்பிதழ் ஆங்கில மொழியில் தயாரிக்கப்பட்டிருந்தது. அது கண்டு “வரவேற்பிதழ் ஆங்கில மொழியில் பெரிக்கப்பட்டிருத்தல் காண்கிறேன்.
இந்திய தேசியக் காங்கிரசில் சுதேசித் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் உங்கள் நாட்டு மொழிகளைக் கொன்று அவைகளின் சமாதி மீது ஆங்கிலத்தை நிலவச் செய்வீர்களாயின் நீங்கள் உண்மையில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாக மாட்டீர்கள்” என்று கூறினார்.
காந்திஜியினால் காங்கிரஸ் கட்சியில் துவக்கிய இத்திட்டத்தை இந்தியா முழுமைக்கும் வட்டாரக் கல்வி முறை ஏற்பட வேண்டுமென்று நினைத்து ஆங்கில வழிக் கல்வி முறையை எதிர்த்தார். அவர் தாய்மொழிக் கல்வியை ஆதரிப்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு “மெக்காலே கல்வி முறைப்படி எனது நாட்டு மக்கள் கல்வி பயின்று அறிவாளிகள் ஆவதைவிட அவர்கள் கல்வியற்ற முட்டாள்களாக இருப்பதையே நான் விரும்புவேன்” என்று கூறுகிறார்.
வார்தா திட்டம்
காந்தியடிகள் 1937ஆம் ஆண்டில் ஹரிஜன் பத்திரிகையில் தாய்மொழிக் கல்வியை ஆதரித்து ஒரு கட்டுரை எழுதி இருந்தார். இதுவே ஒரு திட்டமாக வார்தாவில் 1937இல் கூடிய கல்வி மாநாடு ஒப்புக் கொண்டது. இதில் உள்ள மூன்று திட்டத்தில் தாய்மொழியில் கல்வி புகட்டல் என்பது ஒரு முக்கிய அம்சமாகும். டாக்டர் ஜாகீர் உசேன் தலைமையில் அமைந்த குழுவினரால் இத்திட்டம் ஆராயப்பட்டு, கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
இத்திட்டமே மும்மொழித் திட்டத்திற்கு வழி வகுத்தது. ஆதாரக் கல்விக் கொள்கையின்படி எல்லாக் குழந்தைகளுக்கும் 7 ஆண்டுகள் ஆரம்பக் கல்வி அளிக்க வேண்டும். மேலும், கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டுமென்று இதில் வரையறுக்கப்பட்டு சொல்லப்பட்டது.
இத்திட்டம் வடக்கிலும் தெற்கிலும் 1937-1939 வரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற மாநிலங்களில் நடைமுறைக்கு வந்தது. 1939இல் கவர்னர் ஆட்சியில் இத்திட்டம் கைவிடப்பட்டு, 1947இல் விடுதலைக்குப் பின் திரும்பவும் இது நடைமுறைக்கு வந்தது. பிறகு கைவிடப்பட்டது.
தமிழால் முடியும்
“இந்தியாவை ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர் 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்தை ஏற்படுத்தினர். அது 1935ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்” எனப்பட்டது. அச்சட்டமே இந்தியாவில் பல பகுதிகளில் மாகாண அரசு அமையக் காரணமாய் இருந்தது. அதனடிப்படையில் 1937ஆம் ஆண்டு நடைபெற்ற மாகாணத் தேர்தல்களில், ஏழு மாகாணங்களைக் காங்கிரசு அமைப்பு கைப்பற்றியது சென்னை மாகாணமும் அவற்றில் ஒன்று.
மாகாண சுயாட்சியின் கீழ் வெற்றி பெற்ற காங்கிரசு, சென்னை மாகாணத்திற்கு இராஜாஜியை முதல் அமைச்சராகத் தேர்ந்தெடுத்தது. இவரது அமைச்சரவை 15-07-1937 அன்று பதவியேற்றது. மாகாண அளவில் முதன்முதலில் இந்த அமைச்சரவையே இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது.
இதற்கு முன்னோடியாக 1937ஆம் ஆண்டில் பம்பாயில் நடைபெற்ற அகில இந்தியக் காங்கிரசு தலைவர்கள் கூட்டத்தில் முதல் அமைச்சர் தமது மாகாண அரசில் இந்தி கட்டாயக் கல்வியாக அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்தார். இத்துடன் ராஜாஜி சென்னை மாகாண முதலமைச்சரானதும் பள்ளி இறுதி வகுப்பு வரை, அதுவரை நிலவி வந்த ஆங்கில வழிக் கல்வியை அகற்றி, தமிழைப் பயிற்று மொழியாக்கினார்.
இந்திய மாநிலங்கள் சிலவற்றில் ஓர் இடைக்கால நிகழ்ச்சியாகக் காங்கிரஸ் அமைச்சரவைகள் செயல்பட்ட காலத்திலே, அரசாங்கத் துறைதோறும் ஆங்கிலேயர்களே தலைமையதிகாரிகளாக இருந்தனர். கல்வித்துறை இயக்குநரும் ஆங்கிலேயராகவே இருந்தார். அன்னார் உயர்நிலைப் பள்ளிகளில் பாடங்கள் அனைத்தையும் வட்டார மொழியிலேயே பயிற்றுவிக்கும் முறையை விரும்பவில்லை. வெறுக்கவும் செய்தார்.
சென்னை மாநிலக் கல்வி இயக்குநராக இருந்த ஸ்டாத்தம் என்பவர் உயர்நிலைப் பள்ளிகளிலே, தமிழகத்தில் தமிழையும் தெலுங்குப் பிரதேசத்தில் தெலுங்கையும் பயிற்சி மொழிகளாகச் செய்வதற்குக் காங்கிரஸ் அமைச்சரவை எடுத்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தார். அவரது எதிர்ப்புக்கு மதிப்பளிக்க மறுத்தார் முதலமைச்சர் ராஜாஜி, 19-10-1939ஆம் தேதியிட்டு ராஜாஜி அந்த ஆங்கில அலுவலருக்கு எழுதிய கடிதம் வருமாறு:
“தென்னிந்திய மொழிகளில் தக்க பாடப் புத்தகங்கள் பிரசுரமாகி, விஞ்ஞானத் துறைகளுக்கான அகராதிகள் வகுக்கப்படுகிற வரையில், பௌதீக விஞ்ஞான கணிதங்களைக் கற்பிக்க தாய்மொழியை உபயோகிக்க இயலாது என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். இது ஒரு இக்கட்டான நிலை.
எவ்வளவு அசௌகரியமாகவும் துப்புரவில்லாமலும் இருப்பினும், ஏதாவது ஒரு கட்டத்தில் ஆரம்பித்தாலொழிய, இந்த இக்கட்டுத் தீராது. பாடப்புத்தகங்கள் எழுதுவோர் துறவிகளல்லர். அவற்றிற்குக் கிராக்கி உண்டானால் ஒழிய அவை எழுதப்படும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. தமிழில் போதிப்பது தொடங்கினாலன்றி, தமிழில் எழுதிய பாடப் புத்தகங்களின் தேவை புலப்படாது.”
“நாட்டு மொழிகளில் பௌதிக விங்ஞானங்களைக் கற்பித்தால், மாணவர் ஆங்கில மரபையும் ஆங்கில இலக்கணத்தையும் சேர்த்துக் கொள்வதில் இடையூறு ஏற்படுமா என்ற விஷயத்தைப் பற்றி நாம் ஒரு திடமான முடிவுக்கு வரவேண்டும். தற்போது உலக வழக்கத்திலுள்ள ஆங்கிலக் கலைச் சொற்கள் அந்தந்தப் பிரதேச மொழிகளுக்கு ஏற்ப எடுத்து ஆள்வதில் குற்றமொன்றுமில்லை.
இப்படிச் செய்தால் ஆங்கில அறிவுக்குப் பாதகம் ஒன்றும் விளையாது. சில பாடங்களைக் கற்பிக்கும் போது ‘மணிப் பிரவாளம்’ ஏற்படுவதால் ஆங்கில மொழிப் பயிற்சி அப்படியன்றும் கெட்டுப் போகாது. அப்படியே கொஞ்சம் நேரிட்டாலும் நஷ்டத்தைவிட லாபமே அதிகம்.”
“அறிவுத்துறைக் கல்வியில் சில அன்னியச் சொற்களை உபயோகிக்க வேண்டியிருப்பதால் போதனாமொழியே அன்னிய மொழியாகத்தான் இருக்க வேண்டும் என்று சொல்வது தவறு என்பது என் கருத்து. மாணவர்களுக்குப் புகட்டப்படும் அறிவு, தாய்மொழியிலாவது பிரதேச மொழியிலாவது வழங்கப்படுமானால், அதனால் ஏற்படுகிற உடனடியான பயன் மிகப் பெரியது. சில அன்னியக் கலைச் சொற்களை உபயோகப்படுத்துவதனால் இந்தப் பயன் கெட்டுவிடாது.
சுருங்கக் கூறினால், பயிற்றுமொழி என்பது வேறு. இந்தத் திட்டத்தைப் பின்பற்றினால் வட்டார மொழியில் கலைச் சொற்கள் விரைவில் தானாக உண்டாகும். போதனையில் அன்றாடம் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் இந்தக் கலைச் சொற்களை எளிதில் தேடியெடுத்து வழக்கத்திற்குக் கொண்டு வரமுடியும். இங்கிலாந்திலும், பிரான்சிலும் பௌதிக விஞ்ஞானக் கல்வியின் ஆரம்ப காலத்தில் லத்தீன் மொழியிலும் கிரேக்க மொழியிலுமா பள்ளிக்கூட வகுப்புகளை நடத்தினார்கள்?”
“அன்னிய கலைச் சொற்களைத் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் போதனை வட்டார மொழியிலேயே இருக்கலாம். பௌதிக விஞ்ஞானங்களுக்கு நான் கூறியுள்ளது, மற்ற வகைப் பாடங்களுக்கும் பெரிதும் பொருந்தும். ஒரு மாணவன், வீட்டில் தன் சிறிய தம்பிக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதைப் பார்த்திருந்தால், அறிவுத் துறைகளை எப்படி அன்னியக் கலைச் சொற்களை உபயோகித்துத் தாய்மொழியிலேயே கற்பிக்க முடியும் என்பது புரியும்.”
“ஆங்கிலத்திலேயே இதுவரை கற்பித்துப் பழகிவிட்ட ஆசிரியர்களுடைய கஷ்டம் எனக்குப் புரிகிறது. வேறு எந்த மொழியிலும் கற்பிக்க முடியாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். நீங்கள் குறிப்பிடுகிற அநேக ஆட்சேபணைகளைச் சொல்லுகிறார்கள்.
சென்னை போன்ற நகரத்தில் பல மொழி பேசும் மாணவர்கள் ஒருமித்துக் கூடும் வகுப்புகளில், ஒரு வட்டார மொழியைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள கஷ்டம் எனக்குத் தெரியவே செய்கிறது.”
“ஹோமர், வர்ஜில் முதலியோரின் நூல்களைக் கற்பிக்கின்ற ஆங்கிலக் கலாசாலை வகுப்புகளில், இந்த நூல்களைக் கிரேக்க மொழி, லத்தீன் மொழியிலா கற்பிக்கிறார்கள்? ஆங்கிலத்தைப் பயிற்சி மொழியாகக் கொண்டே இந்தக் கிரேக்க, லத்தீன் இலக்கியங்களைச் சொல்லிக் கொடுக்கிறார்கள்.”
“வட்டார மொழிகளில் பாடம் கற்பித்த போதிலும் கூட, இப்போதைக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் ஆங்கில மொழியில் எழுதப்பட்ட பாடப் புத்தகங்களை உபயோகிக்கும்படி சொல்லலாம். ஆனால், பள்ளிக்கூடத்தில் சொல்லித் தருவது வட்டார மொழியிலேயே இருக்கவேண்டும்.”
“நீங்கள் உடனே உங்கள் அதிகாரத்தின் கீழ் வேலை செய்யும் இன்ஸ்பெக்டர்களுக்கு உத்தரவு பிறப்பியுங்கள். அன்னியக் கலைச் சொற்களை உபயோகித்த போதிலும் பௌதீக விஞ்ஞான கணித அறிவுத் துறைகளில் வட்டார மொழியையே பயன்தரத்தக்க முறைகளில் அதிகமாகவும் உபயோகிக்கும்படி அறிவிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்”
இவைகளெல்லாம் கல்வித்துறை இயக்குநர் ஸ்டாத்தம் அவர்கள் கருத்துக்கு எதிராக ராஜாஜி எழுதிய குறிப்புகள். இதைவிட ஒரு தொலைநோக்குடன் ஒரு கருத்தைக் கூறுகிறார். “உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்று மொழியாக்கியது கல்லூரிகளிலும் தமிழிலேயே பாடங்களைப் போதிக்கப்படுவதற்கான முன்னோடி நடவடிக்கையாகும்” என்றும் அப்போது அவர் அறிவித்தார்.
இவைகளெல்லாம் கல்வியின் எல்லாக் கட்டங்களிலும் தாய்மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டுமென்பதில் அந்நாளில் ராஜாஜிக்கிருந்த உறுதியையும், தெளிவையும் காட்டுவதாகும். இந்நிலையிலேதான் ராஜாஜி “தமிழால் முடியுமா” என்ற நூலுடன், 3ஆம் வகுப்புக்கான “தம்பி வா” “இதையும்படி” என்னும் பாடநூல்களையும் எழுதினார்.
ஆனால் இதே காலகட்டத்தில்தான் இந்திய அரசியலமைப்பு உருவாவதற்கு முன்பே முதன்முதலாக தமிழ்நாட்டில் மட்டும் ராஜாஜியால் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அடுத்த மாதத்தில் இந்தி புகுத்தப்பட்டது. இதை ஏன் ராஜாஜி விரும்பினார் என்பதற்கு மேனாள் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் பெரியாண்டான் கூறும் விளக்கம்.
“ஆலோசகரது ஆட்சியாகக் காங்கிரஸ் இயக்கம் தென் மாநிலத்தில் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டு பொறுப்பேற்றது. இக்காலகட்டத்தில் மொழிவாரி மாநிலப் பிரிவினையை அவர் (ராஜாஜி) விரும்பவில்லை. நாடு விடுதலை அடைந்தால் இந்திய அரசின் கீழ் ஆட்சி வந்தால் ஆங்கிலத்தின் இடத்தில் இந்துஸ்தானி என்ற பொது மொழி இடம்பெறவேண்டும் என்பதற்காக மொழிவாரி மாநில எண்ணத்தைத் திசை திருப்ப இந்துஸ்தானியைக் கொண்டு வந்தார். பெருத்த எதிர்ப்பினால் அவர் முயற்சி தோற்கடிக்கப்பட்டது.”
இவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுதுதான் சுப்பராயன் கல்வி அமைச்சராக இருந்தபோது, உயர்நிலைப் பள்ளியிலும் தமிழ் மொழி பயிற்று மொழி ஆக்கப்பட்டாலும் தமிழ்மொழிப் பாடம் ஒரு விருப்பப் பாடமாக இருந்தது. ஆனால் ஆங்கிலப் பாடம் கட்டாயம்.
இதே காலத்தில் பிற மாநிலங்களில் ஏற்படாத ஒரு சூழ்நிலை தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டிக்கு ஏற்பட்டது. இது ஏனெனில் ராஜாஜி அமைச்சரவை உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கியதன் விளைவாக அதுவரை சமூகச் சீர்திருத்தத்தில் மட்டும் ஈடுபட்டிருந்த பெரியார் தலைமையிலிருந்த சுயமரியாதை இயக்கம் கட்டாய இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டது.
இவ்வாணைக்கு எதிர்ப்பான போராட்டமாக இந்தி எதிர்ப்புத் தொண்டர்படை திருச்சியிலிருந்து சென்னை வரை இருநூறு நபர்கள் நடைப் பயணம் செய்தனர். அதன் தொடர்பாகச் சென்னைக் கடற்கரையில் கூடிய மாபெருங் கூட்டத்தில் மறைமலையடிகள் நள்ளிரவு வரை வன்மையாக இந்தியைக் கண்டித்துப் பேசினார். மேலும் இதையட்டி பெரியாரும் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் சிறை சென்றனர்.
சுயமரியாதைக்காரர்கள் கட்டாய இந்தி எதிர்ப்பில் ஈடுபட்டதன் விளைவாக, தாய்மொழிப் பற்றுடைய புலவர் பெருமக்களிலே பலருக்கும் அவர்களுக்குமிடையே நெருங்கிய உறவு ஏற்பட்டது. அதனால் ‘இந்தி ஒழிக’ என்று உரத்த குரலெழுப்பிய சுயமரியாதைத் தொண்டர்கள் தமிழ் வாழ்க எனவும் கோஷமிட்டனர்.
இதுவே உள்மாகாண வேறுபட்ட சூழ்நிலை. அதாவது அந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் இந்திக்கு முரட்டுத்தனமாக ஆதரவு காட்டியது. காங்கிரஸ் கமிட்டி அலுவலகங்கள் பலவற்றிலே இந்தி பயிற்றுவிக்கும் வகுப்புகள் நடத்தப் பெற்றன. டி.எஸ்.சொக்கலிங்கம் அவர்களை ஆசிரியராகக் கொண்ட தினமணி நாளிதழிலே இந்திப் பாடம் நடத்தப் பெற்றது.
மேலும் இந்திப் பிரச்சார சபையும், இந்தி சாகித்திய சம்மேளனமும் மாநிலமெங்கும் இந்தி வகுப்புகள் நடத்தின. தென்னக மக்களை இந்தி கற்றுக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தி வந்தார் காந்தி. சுயமரியாதை இயக்க மேடைகளிலே இந்தி மொழி தூற்றப்பட்டதென்றால் காங்கிரஸ் மேடைகளில் இந்தி போற்றப்பட்டது.
காங்கிரஸ்காரர்கள், எவரேனும் தமிழ்ப் பற்றுடையவராக, தமிழர் என்ற இனவுணர்வுடையோராக இருந்துவிட்டால், அவருடைய தேசபக்திகூட சந்தேகிக்கப்பட்டது. இதைப் பற்றி வருந்திய திரு.வி.க. “மொழிப் பற்றில் நாம் பின்னே நிற்பது குறித்து நான் பெரிதும் வருந்துகிறேன். தமிழ்மொழி வளர்ப்பதில் தமிழ்நாட்டுக் காங்கிரஸ் கவலை செலுத்தவில்லை” என்று கூறுகிறார்.
1950இல் மாதவராவைக் கல்வியமைச்சராகக் கொண்டபோது பிறப்பிக்கப்பட்ட ஆணையிலும் 6ஆம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை இரண்டாவது மொழி ஆங்கிலம் கட்டாயம். மூன்றாம் மொழி இந்தி கட்டாயம். முதல் மொழியாக இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்று அது தமிழாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என்று கூறுகிறது. ஆக இதிலும் தமிழ் கட்டாயம் என்கிற நிலை உருவாகவில்லை.
எவ்வாறு என்றால் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம், உருது, குஜராத்தி, சமஸ்கிருதம், அரபி, பெர்சியன், பிரெஞ்சு, இலத்தீன், ஜெர்மன் ஆகிய மொழிகளுள் ஏதேனும் ஒன்றினைப் பயிற்சி மொழியாகக் கொள்ளலாம் என்று இவ்வறிக்கை கூறியது. ஆக இவ்வறிக்கை தமிழின்றி உயர்நிலைப் பள்ளி படிக்க வழி வகுத்தது. ஆனால் காமராஜர் முதலமைச்சர் பதவி ஏற்றதும் தமிழுக்கு ஏற்றம் கொடுத்தார்.
காமராஜர் அமைச்சரவையில் கல்வி அமைச்சராகப் பதவி வகித்த சி.சுப்பிரமணியமும் ராஜாஜியைப் போலவே ‘தமிழால் முடியும்’ என்று புத்தகம் எழுதியதும் குறிப்பிடத்தக்கது.
1960ஆம் ஆண்டு சி.சுப்பிரமணியம் தமிழகச் சட்டப் பேரவையில் வெள்ளை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கை 1960ஆம் ஆண்டு பி.ஏ.பட்டப்படிப்பில் தமிழைப் பயிற்றுமொழியாக்கப் போவதாக உறுதியளித்தது.
பக்தவச்சலம் - 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கிலம்
இதன் பிறகு 1962 மக்களவைத் தேர்தலில் சி.சுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சரான பின்பு காமராஜ் அமைச்சரவையில் கல்வி அமைச்சர் பொறுப்பேற்ற எம்.பக்தவச்சலம் 1963ஆம் ஆண்டு மீண்டும் 3ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வகுப்புகளைத் தொடங்க ஆணை பிறப்பித்தார்.
இராஜாஜியின் திடீர் இந்தி எதிர்ப்பு
இக்காலகட்டத்தில் இராஜாஜி ஆங்கிலமே பயிற்றுமொழியாக இருக்கவேண்டும் என்ற புதிய கருத்தையும் தெரிவித்தார். இக்கருத்தை எதிர்த்த நா.வானமாமலை “இராஜாஜி போன்ற பெரியவர்கள் தமிழைப் பயிற்சி மொழியாக ஆக்கவேண்டும் என்று சொல்லி வந்தார்கள். தமிழில் விஞ்ஞானக் கருத்துக்களை விளக்க முடியும் என்பதை நூல்கள் எழுதி இராஜாஜி நிரூபித்தார்.
ஆனால் இப்போது அவர்தம் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டார். அவருடைய பழைய கருத்து இன்று உறுதிப்பட்டிருக்கிறது. அவர் அக்கருத்தை வெளியிடும் போதிருந்ததை விட இன்று பல விஞ்ஞான நூல்கள் தோன்றியுள்ளன. தமிழில் எழுதக்கூடிய, போதிக்கக்கூடிய ஆசிரியர்களும் இருக்கிறார்கள். கல்வி பரவி வருகிறது. ஆனால் இராஜாஜி இப்போது தமிழில் முடியாது என்று சொல்கிறார்.
ஆங்கிலமே இருக்க வேண்டும் என்று சொல்கிறார். பெரியவர்கள் கருத்துக்களை மாற்றிக் கொண்டு விடுவதால் உண்மை பொய்யாகி விடாது.” (நா.வானமாமலை 1965: XXVII) என்று கூறினார். வானமாமலை பயிற்றுமொழித் திட்டத்திற்கு எதிரான கருத்துக்களை மறுக்கும் வகையில் வரலாறு, மெய்யுணர்வு, அரசியல், பொருளாதாரம், தாவரவியல், விலங்கியல், இரசாயனம், பௌதீகப் பாடங்களில் துறைசார்ந்த பேராசிரியர்களால் தமிழில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப் பெற்று ‘தமிழால் முடியும்’ என்ற நூல் 1965ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இராஜாஜி 1967ஆம் ஆண்டில் சுதந்திரா கட்சியை ஆரம்பித்த நிலையில் ஏற்கெனவே இந்தியை ஆதரித்து இந்தியை இந்தியாவிற்கே முன் மாதிரியாக பாடமொழியாக தமிழகத்தில் திணித்த இராஜாஜி “இந்தி ஒரு நாளும் கூடாது ஆங்கிலமே எந்நாளும் வேண்டும்” (English ever Hindi Never) என முழக்கம் எழுப்பினார்.
மேலும் இந்தியை ஆட்சி மொழியாக்குவதைத் தொடர்ந்து அமல் செய்தால் இத்துணைக் கண்டம் பதினைந்து பகுதிகளாகத் தனித்துப் பிரிந்துவிடும் என்றும் கூறினார். இதே இராஜாஜிதான் தமிழ் பயிற்றுமொழித் திட்டத்தைத் தம் கொள்கையாகக் கொண்டு “தமிழால் முடியும்” என்ற நூலை 1942இல் எழுதினார்.
தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு காரணமாகக் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. 1967இல் அண்ணா ஆட்சியில் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தமிழ்ப் பயிற்று மொழிக் கொள்கையை ஆதரித்துப் பேசினார்.
அதன் பின்னர் ஆட்சிமொழி தமிழ் என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில்; 1967 இறுதியில் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்தி மொழி பேசுவோர்க்குச் சார்பாக மாற்றப்பட்ட நேரு உறுதி மொழியும், அத்துடன் இணைக்கப்பட்ட மொழிக் கொள்கை தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதன் விளைவாக மூன்றாம் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழக மாணவரிடையே கிளர்ந்து நாடு முழுவதும் பரவி நடைபெற்றது.
ஆனால் இந்நிலையில் முதலமைச்சர் அண்ணா சட்டசபையில் இந்தி நீங்கிய இருமொழித் திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றி விட்டதனால் மாணவர் இந்தியெதிர்ப்பு அடங்கிற்று.
- டாக்டர் சு. நரேந்திரன்