தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பார்க்கும் இடமெல்லாம் பட்டாசுக் கடைகள் முளைத்துக்கொண்டு இருக்கின்றன. வருடம் பூராவும் உழைத்துச் சேர்த்த காசை ஒரே நாளில் கரியாக்க மக்கள் கூட்டம் பட்டாசுக் கடைகளில் அலைமோதுகின்றது. இது ஒருபுறம் இருக்க, பட்டாசு சப்தத்தை விட இன்னொரு சப்தம் நம் காதுகளைச் செவிடாக்கிக்கொண்டு இருக்கின்றது. அது சீன பட்டாசுகளைத் தடை செய்ய வேண்டும் என்பதே. கோரிக்கையில் நியாயம் இருப்பது போலத் தோன்றினாலும் கோரிக்கை வைக்கும் குரல்களில் பல குரல்கள் பட்டாசுகளுக்காக மட்டும் பயங்கரமாக வெடிப்பதுபோலத் தோன்றுகின்றது. இந்தக் குரல்கள் யாருக்கானது - பட்டாசு ஆலை முதலாளிகளுக்கானதா? இல்லை பட்டாசுத் தொழிலை மட்டுமே நம்பியுள்ள ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட சாமானிய மக்களுக்கானதா? இல்லை பட்டாசு வெடிக்கவில்லை என்றால் கண்ணீர்விட்டு அழும் நரகாசுரனின் வாரிசுகளுக்கானதா?

crackers unit

"சீனப் பட்டாசுகள் தரம் குறைந்தவை. அதில் பொட்டாசியம் குளோரைடு என்னும் விலை மலிவான வேதிப்பொருளைப் பயன்படுத்தி, பட்டாசுகள் தயாரிக்கப் படுகின்றன; எனவே அதனை இந்தியாவில் விற்க தடைவிதிக்க வேண்டும்" என்று கூறுகின்றார்கள். மத்திய அரசும், மாநில அரசும் சீன பட்டாசுகளை கடைகளில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளன. ஆனால் சீனாவில் இருந்து குண்டூசி முதல் குழந்தைகள் குடிக்கும் பால் பவுடர்வரை நூற்றுக்கணக்கான தரம் குறைந்த பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகும்போது, பட்டாசுகளுக்காக மட்டும் ஏன் இவர்கள் இவ்வளவு மெனக்கெட்டு குரல் கொடுக்கின்றார்கள் என்று யோசித்துகொண்டு இருக்கும் போதுதான் அந்த அறிவிப்பு வெளியானது.

தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம்(டான்பாமா) வெளியிட்ட அறிக்கையில் “தயவு செய்து அரசு அதிகாரிகள் யாரும் இனி இலவசப் பட்டாசுகள் கேட்டு இங்கு வராதீர்கள்” என்று கூறியிருக்கின்றார்கள். ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு சில தினங்களுக்கு முன் ஒரு அதிகாரிகள் பட்டாளமே சிவகாசிக்கு பட்டாசுப் பிச்சை எடுக்க கிளம்புமாம். ஒவ்வொரு ஆண்டும் இங்கிருந்து சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் போன்றவர்களுக்கு இலவச பட்டாசுகள் அனுப்பி வைக்கப்படுமாம். இந்தப் பட்டாசு பிச்சையில் தீயணைப்புத்துறை, வணிகத்துறை, வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை, மாவட்ட வருவாய்துறை, போலீஸ்துறை என அனைத்துத் துறைகளிலும் உள்ள பிச்சைக்காரர்களும் வித்தியாசம் இன்றி கலந்து கொள்வார்களாம். இப்படி அனுப்பப்படும் பட்டாசுகள் மதிப்பு மட்டும் பல இலட்சங்கள் வரும் என்று சொல்கின்றார்கள்.

எதற்காக இந்தப் பட்டாசுகள் அரசியல்வாதிகளுக்கும், அரசு அலுவலர்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன என்பதை நாம் புரிந்துகொண்டோம் என்றால் சீன பட்டாசுகளைத் தடை செய்ய வேண்டும் என்று அனுமதிக்கப்பட்ட டெசிமலை விட அதிகமான டெசிமலில் கத்தும் இவர்களின் யோக்கியதையைத் தெரிந்து கொள்ளலாம். கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் ஏறக்குறைய 250க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் அங்கு ஏற்பட்ட விபத்துக்களில் உடல் சிதறி உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உடல் ஊனமாகி இருக்கின்றார்கள். 2014ம் ஆண்டு மட்டும் பத்துக்கும் மேற்பட்ட விபத்துக்கள் சிவகாசியில் நடந்துள்ளன.

பட்டாசு ஆலை முதலாளிகள் தங்களுடைய லாப வெறிக்காக எந்த விதமான பாதுகாப்பு விதிகளையும் கடைபிடிக்காமால் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு எந்தவித பாதுகாப்புச் சாதனங்களையும் வாங்கித்தராமல் அவர்களை ஒட்டச் சுரண்டுகின்றனர். ஃபேன்சி ரக பட்டாசுகளுக்கு உண்மையான வெடிகுண்டுகளுக்குப் பயன்படுத்தும் ரசாயனங்களை எவ்விதமான பாதுகாப்பும் இன்றி தொழிலாளர்கள் கையாளுகின்றார்கள். சிவகாசியில் இயங்கும் பல பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கு முறையான அனுமதி இல்லை என்று சொல்கின்றார்கள். ஏற்பட்ட அனைத்து விபத்துக்களும் பட்டாசு ஆலை முதலாளிகளின் லாபவெறியே காரணம் என்று உறுதியாகத் தெரிந்திருந்தும், அவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை. பட்டாசுகளை பிச்சை எடுப்பவர்களையும், பிச்சை போடுபவர்களையும் இந்த வகையில் தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பட்டாசு ஆலை முதலாளிகளின் இந்த அராஜகத்தை எல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்கவே அவர்களுக்கு பணமும், பட்டாசும் பிச்சையாக கொடுக்கப்படுகின்றது. மற்றபடி இந்தியத் தொழிலாளர்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இவர்களுக்குச் சிறிதும் கிடையாது.

இந்தியா முழுவதும் சீனப் பொருட்களாலும், ஜப்பான் பொருட்களாலும், ஐரோப்பா, அமெரிக்கப் பொருட்களாலும் நிரம்பி வழிகின்றது. இந்திய தொழிற்துறையோ இப்பவோ அப்பவோ என்று இழுத்துக் கொண்டு கிடக்கின்றது. எப்போது காட் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்து போட்டதோ, அப்போதே இந்திய தொழிற்துறைக்கு சாவுமணி அடித்தாகிவிட்டது. அதனால் பட்டாசுகளுக்காக மட்டும் குரல் கொடுக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அந்தக் குரலைக் கொஞ்சம் பிரித்துப் பார்த்தால் உள்ளே இந்து மதவெறி, பட்டாசு ஆலை முதலாளிகள் தரும் தேர்தல் நிதி, அப்புறம் பட்டாசு என அனைத்தும் சரிவிகிதத்திலோ அல்லது கொஞ்சம் முன்னோ, பின்னோ கலந்திருப்பதைப் பார்ப்பீர்கள். பட்டாசுகளுக்காக குரல் கொடுப்பவர்கள் மற்ற இறக்குமதிப் பொருட்களுக்கு எதிராகவும் ஏன் குரல் கொடுப்பதில்லை என்ற கேள்வியையும் நாம் எழுப்ப வேண்டும்.

சரி பட்டாசு பிரச்சனை முடிந்துவிட்டது. அடுத்து நாம் தீபாவளிக்கு வருவோம். தீபாவளியைக் கொண்டாடும் மானமுள்ள தமிழ் மக்களுக்குச் சொல்வதற்கு நம்மிடம் கொஞ்சம் தகவல்கள் உள்ளன.

சமீபத்தில் சுப்ரன்ஷு செளத்ரி எழுதிய ‘அவரை வாசு என்றே அழைக்கலாம்’ என்ற புத்தகத்தைப் படித்தேன். தமிழில் மாவோயிஸ்ட்டுகள் பற்றி வந்துள்ள சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று. அதில் சுப்ரன்ஷு செளத்ரி அவர்கள் தண்டகாரண்யாவில் உள்ள அபூஜ்மட் என்ற இடத்தில் மோடி ராவண் என்ற பழங்குடி அறிஞரை சந்திக்கின்றார். அவர் ஒரு கோண்டி மொழி அறிஞர். அவரிடம் அவரின் பெயர் காரணத்தை சுப்ரன்ஷு செளத்ரி கேட்டபோது, அந்த அறிஞர் “என் பெயரின் பின்னால் ஒரு கதையே உள்ளது. எனக்கு மோடி ராம் என்றே பெயரிட்டனர். அது மரபு அடையாளத்தையே சிதைத்த பெயரென்று நான் நினைத்தேன். எங்களால் போற்றப்படும் ராவணன் இந்துக் கடவுளான ராமனால் கொல்லப்பட்டான். எனவே என் பெயரை நான் மோடி ராவண் என்று மாற்றிக்கொண்டேன்” என்கின்றார்.

அதைப் படித்தபோது நம் மானமுள்ள தமிழ்மக்களின் நினைவுதான் வந்தது. நாம் நாகரிகம் என்று சொல்லிக் கொண்டிருக்கும் எந்தப் பொருளிலேயும் அதை அறிந்திராத அந்த பழங்குடி நபரிடம் இருக்கும் தன்மான உணர்ச்சி கூட உலகத்திலேயே மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு இலக்கணம் வகுத்த நாகரிகத்தின் மிக உயர்ந்த விழுமியங்களைப் படைத்த தமிழ்மக்களிடம் ஒரு மருந்தளவு கூட இல்லாமல் போய்விட்டதே!.

புராணங்களில் அசுரன் என்று குறிப்பிடப்படும் அனைவரும் திராவிட இனத்தைச் சார்ந்தவர்கள் என்பது தெரிந்திருந்தும் கொஞ்சம் கூட சுரணையே இல்லாமல் தசரா திருவிழாவில் இராவணனை எரிப்பதும், தீபாவளி என்ற பெயரில் நரகாசுரனின் மரணத்தைப் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவதும் நாகரிகமான செயலா? அப்படி தன்மானத்தையும், சுயமரியாதையையும் இழந்த ஓர் இனம் வெற்றிபெற்றதாக எங்கேனும் வரலாறு உண்டா?. மானமுள்ள(?) தமிழ்மக்களின் முடிவுக்கே அதை விட்டுவிடுகின்றேன்.

- செ.கார்கி

Pin It