மக்கள் நலனில் அக்கறை கொண்ட அறிஞர்கள், தங்கள் ஆழ்ந்த சிந்தனையாலும், கடுமையான உழைப்பாலும் அறிவியலை வளர்த்தனர். உழைக்கும் மக்களை எப்பொழுதும் அடிமைப்படுத்தியே வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் என்ற ஆதிக்க எண்ணம் கொண்டவர்கள் என்றுமே அறிவியலை விரும்பவில்லை. ஆனால் இந்த ஆதிக்கவாதிகளின் விருப்பங்களை மீறி அறிவியல் வளரும் போது, அதுவரைக்கும் வளர்ந்துள்ள அறிவியல் தங்களுடையது என்று உரிமை கொண்டாடுவதும், அதே சமயம் அது மேற்கொண்டு வளருவதற்குத் தடை ஏற்படுத்திக் கொண்டே இருப்பதும் அவர்களுடைய வழக்கம்.

cow farm

   இந்த வகையில் ஆதிக்கவாதிகள் மகராட்டிர மாநிலம் நாக்பூரில் பசு அறிவியல் ஆராய்ச்சி மையம் (Cow Science Research Centre) என்ற ஓர்  அமைப்பை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். இம்மையம் மிகவும் "ஆழ்ந்த" சிந்தனைக்குப் பிறகும், "கடுமையான" உழைப்பிற்குப் பிறகும் பசுவின் சாணத்தில் இருந்து உரத்தைத் தயாரிக்கலாம் என்ற வியக்கத்தகு உண்மையைக் "கண்டு பிடித்து" உள்ளது. அது மட்டும் அல்ல; இப்படித் தயாரிக்கப்பட்ட உரம், வேதிப் பொருட்களினால் தயாரிக்கப்படும் செயற்கை உரத்தை விடப் பாதுகாப்பானது என்ற "யாருக்குமே தெரியாத" மகத்தான உண்மையையும் கண்டுபிடித்து உள்ளது. இவ்விவரங்களை இம்மையத்தை நடத்திக் கொண்டு இருக்கும், விஸ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த சுனில் மன்சிங்கா (Sunil Mansinghka) என்பவர் 19.10.2015 அன்று கூறினார். ஆகவே யாரும் மாட்டுக் கறியைச் சாப்பிடக் கூடாது என்றும், தான் அப்படிக் கூறுவது இந்து தர்மத்தை ஒட்டி மட்டும் அல்ல; அறிவியல் வழியிலும் அதுவே தீர்வு என்றும் அவர் கூறினார்.

   பசுவின் சாணம் மட்டும் அல்ல; மனிதக் கழிவுகளும் கூட உரமாகப் பயன்படுகிறது. உண்மையில் பசுவின் சாணத்தை விட மனிதக் கழிவுகள் தான் மிக மிக அதிகமான அளவில் இயற்கை உரங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது. மிக மிக வெளிப்படையாகத் தெரியும் இந்த உண்மை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பசு அறிவில் ஆராய்ச்சி மையத்திற்குப் புலப்படாமல் போனது ஏனோ?

இம்மையம் தனது முழு "ஆராய்ச்சித் திறமையைப்" பயன்படுத்திச் சொல்ல வரும் முடிவு என்ன? "பசுவைப் புனிதமாகக் கொள்ள வேண்டும்; ஆகவே மாட்டுக் கறியை உண்ணக் கூடாது." என்று கூறுவது மத அடிப்படையில் மட்டும் அல்ல, அறிவியல் அடிப்படையிலும் தான் என்று தான் இம்மையம் கூற வருகிறது. ஆனால் இவர்கள் புனிதமாகக் கருதும் / நடைமுறைச் சட்டமாக இருக்க வேண்டும் என்று விரும்பும் மனு சாஸ்திரத்தின் 5வது அத்தியாயத்தின் 36வது சுலோகம் பின்வருமாறு கூறுகிறது;

   "மந்திரமல்லாமற் கொல்லப்பட்ட பசுக்களை விப்பிரன் ஒரு போதும் புசிக்கக் கூடாது. பழைமையான சாஸ்திர விதிப்படி மந்திரஞ்சொல்லிக் கொல்லப்பட்டிருந்தால் அதைப் புசிக்கலாம்."

அதே அத்தியாயத்தின் 39வது சுலோகம் பின்வருமாறு கூறுகிறது;

   "எக்கியத்திறகாகவே பசுக்கள் பிரமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கின்றன. எக்கியஞ் செய்தால் உலகமெலாம் க்ஷேமத்தை அடைகிறது. ஆகையால் எக்கியத்தில் செய்யும் ஹிம்சை ஹிம்சையல்ல."

   இப்படி இருக்கையில் மாட்டுக்கறியைச் சாப்பிடக் கூடாது என்று இந்து மதத் தீவிரவாதிகள் எப்படிக் கூறுகிறார்கள்? ஒருவேளை மனு அநீதி சாஸ்திரத்தில் யாகம் செய்யும் போது, மந்திரம் சொல்லிக் கொல்லப்படும் பசுக்களைப் பற்றிக் குறிப்பிடப்பட்டு இருப்பதால், யாகத்தில் கலந்து கொள்ளும் தகுதி பெற்ற பார்ப்பனர்களும், மற்ற உயர்சாதியினரும் மட்டுமே மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும்; உழைக்கும் சாதியினர் சாப்பிடக் கூடாது என்று கூறுகிறார்களோ?

   சரி! பசு அறிவியல் ஆராய்ச்சி மையத்தினர் மத ரீதியான வாதப்படி பார்ப்பனர்களும் மற்ற உயர்சாதியினரும் தான் மாட்டுக் கறியைச் சாப்பிட வேண்டும் என்றும் உழைக்கும் மக்கள் மாட்டுக் கறியைச் சாப்பிடக் கூடாது என்றும் சட்டம் இயற்ற அரசுக்குப் பரிந்துரை செய்யட்டும். அப்படிச் செய்வது இன்றைய அரசியல் சட்டத்திற்கு பொருந்தாது என்று நாம் வாதிடுவோம்.

   இது நிற்க, அம்-மையம் கூறியுள்ள இன்னொரு கருத்து உண்மையிலேயே ஆழந்து சிந்திக்கத்தக்கது. அதாவது இயற்கை உரங்கள் தான் நல்லது என்றும், செயற்கை உரங்கள் மக்களின் உடல் நலத்திற்குக் கேடு பயக்கிறது என்றும் தெரிந்து கொண்டு இருக்கிறார்களே! இதை மையமாக வைத்துக் கொண்டு, இனி உழவர்கள் அனைவரும் இயற்கை உரத்தைத் தான் பயன்படுத்த வேண்டும் என்றும், செயற்கை உர உற்பத்தியை அடியோடு தடை செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நெருக்குதல் தருவார்களா?

   நிச்சயமாக மாட்டார்கள். மக்ளுக்கு நன்மை தரும் இயற்கை உரங்களையே பயன்படுத்த வேண்டும் என்றும், தீமை விளைவிக்கும் செயற்கை உரங்களைப் பயன்படுத்தக் கூடாது என்றும் முடிவெடுத்தால், தங்களது ஊடக வலிமையால் நரேந்திர மோடியை இந்தியப் பிரதமராக்கிய (இந்தியப் பெருமுதலாளிகள் உள்ளிட்ட) உலகப் பெருமுதலாளிகள், அவரைக் குப்புறப் படுக்க வைத்து மிதி மிதி என்று மிதித்துத் தள்ளி விடுவார்கள். அவர்கள் ஏற்கனவே தங்களிடம் உள்ள மூலதனத்தை முதலீடு செய்ய இடம் கிடக்காமல் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது செயற்கை உர உற்பத்தியைத் தடை செய்து, ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டு இருக்கும் மூலதனத்தைச் சந்தையில் இருந்து ளெியேற்றினால், சும்மா விடுவார்களா? நரேந்திர மோடியை விட்டு வேறு ஒரு கேடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்க வைத்து விடுவார்கள் அல்லவா?

   உலகப் பெருமுதலாளிகளுக்கும், பார்ப்பன மேலாதிக்கவாதிகளுக்கும் உழைக்கும் மக்களைச் சுரண்ட வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான் உள்ளது. அகவே அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் எதிர்த்துக் கொள்ள மாட்டார்கள். இயற்கை உரம் தான் சிறந்தது என்று அனைவருக்கும் தெரிந்த செய்தியை இவர்கள் உரக்கக் கூவிக் கூறுவது உழைக்கும் மக்கள் தங்கள் விடுதலைக்கான திசையில் சிந்திப்பதில் இருந்து திசை திருப்பத் தானே ஒழிய வேறு எதுவும் இல்லை.

- இராமியா

(இக்கட்டுரை மக்கள் நெஞ்சம் (மாதமிரு முறை ஏடு) 28.10.2015 இதழில் வெளி வந்துள்ளது)

Pin It