syrian refugees

1968ம் ஆண்டு மார்ச் 16ம் தேதியை இந்தப் பூமி பந்தின் மக்கள் எளிதாக மறந்து விட முடியாது. வியட்நாமில் மைலை என்ற கிராமத்தின் மீது அமெரிக்க ஏகாதிபத்தியம் குண்டு மழை பொழிந்து 504 உயிர்களை பலி வாங்கியது. மைலை தாக்குதலின் போது தீக் காயங்களுடன் வலி தாங்க முடியாமல் ஓடி வந்த அந்த சிறுமியின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அகதிகள் குறித்தான சர்வதேச தாக்கத்தை அந்தப் புகைப்படம் உருவாக்கியது. இதே போன்றுதான் சிரியாவில் அல் நுஸ்ரத் ஃப்ரண்ட், ஐ.எஸ்.ஐ.எஸ். கிளர்ச்சிக் குழுக்களுக்கும் சிரிய அரசுக்கும் இடையே நடந்து வரும் உக்கிரப் போரைத் தொடர்ந்து சிரியாவின் கோபானி என்ற கிராமத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட மக்கள் துருக்கி கடற்பகுதி வழியாக கிரீஸின் கோஸிற்கு இடம்பெயந்த போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைவரும் பலியாயினர். இதில் அய்லான் குர்தி என்ற 3 வயது சிறுவனின் பிணம் துருக்கி பாட்ரம் கடற்கரையில் செப்டம்பர் 2ம் தேதி கரை ஒதுங்கியதைத் தொடர்ந்து அகதிகள் பிரச்சினை உலக  மக்களிடையே மீண்டும் பாரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது.

அகதிகளின் வலியைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் நாமும் அகதிகளாக இருந்தால்தான் முடியும். தமிழ் இனத்தைப் பொருத்தவரை அகதிகளின் வலியும் பிரச்சினையும் நன்கு புரிந்து கொண்டுள்ளோம். இலங்கையிலிருந்து நமது உறவுகள் அபயம் தேடி ஒவ்வொரு நாட்டிற்கும் செல்வதும் கடலில் மூழ்கி இறப்பதுமாக நமது இனத்தின் வலியை நாம் உணர்ந்து கொண்டுள்ளதால் அகதிகளின் வலி தமிழனனின் இதயத்தில் குத்தி மோதுவது தவிர்க்க இயலாததுதான். சர்வதேச அகதிகள் அமைப்பு நடத்திய காணாமல் போன அகதிகள் குறித்தான ஆய்வில் 2015ம் ஆண்டில் மட்டும் மாயமானவர்களில் 3729 அகதிகள் மரணம் அடைந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். இதில் 72 சதவீதம் மக்கள் இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். 40 சதவீதம் பேர் ஆப்ரிக்கர்கள் என்று தெரிய வந்துள்ளது. பெரும்பாலான அகதிகள் கடலில் மூழ்கி பலியாகி உள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் சிரியாவில் இருந்து வந்த 800 அகதிகள் லிபிய கடல் பகுதியில் மூழ்கி இறந்துள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்த்திரியாவிற்கு வந்த 71 சிரிய அகதிகளை அந்த நாட்டு காவல் துறை சிறிய வாகனம் ஒன்றில் ஆடுகளை அடைத்துச் செல்வதைப் போன்று அடைத்துச் சென்றதில் 71 பேரும் மூச்சுத்திணறி பலியாகி உள்ளனர். இதில் 4 பேர் சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

யுனிசெஃபின் ஆய்வு படி 2015ல் மட்டும் 1 லட்சத்து 6 ஆயிரம் சிறுவர்கள் அகதிகளாக ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். தற்போது ஐரோப்பாவிற்கு வருகின்ற அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. மேற்கு ஆசியா, ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், காங்கோ, சோமாலியா, மத்திய ஆப்ரிக்க குடியரசு, தெற்கு சூடான், உக்ரைன் நாட்டு அகதிகளுடன் சிரிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அகதிகளை மேலாண்மை செய்ய ஐ.நா ஐரோப்பிய நாடுகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. ஐ.நா சபையின் மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை உலகத்தில் 59.5 மில்லியன் மக்கள் அகதிகளாக உள்ளதாக தெரிவிக்கிறது. இந்த மக்கள் தொகை என்பது இத்தாலி அல்லது இங்கிலாந்தின் மக்கள் தொகைக்கு நிகரானதாக உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இரண்டாம் உலக யுத்தத்தின் போது கூட இவ்வளவு அகதிகள் உருவாகி விடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சிரியாவின் கிளர்ச்சி குழுக்களுக்கும் அந்த நாட்டு அரசுக்குமிடையே யுத்தம் துவங்கி ஐந்தாவது வருடத்திற்குள்ளாக 2014ல் 7.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள ஐந்து அகதிகளில் ஒருவர் சிரிய வாசி என ஐ.நாவின் மனித உரிமை ஆணைய அறிக்கை தெரிவிக்கிறது. மேலும், சிரியாவின் மனித வள மேம்பாட்டு குறியீடு 38 வருடத்திற்கு முன்னால் உள்ளதைப் போன்று திரும்பி கீழ் நோக்கிச் செல்வதாக அந்த அறிக்கை கவலை தெரிவித்துள்ளது. சிரியாவில் உள் நாட்டு யுத்தம் ஆரம்பித்தது முதற்கொண்டு இதுவரை 2 லட்சம் மக்கள் மரித்துள்ளதாக குளோபல் கான்ஃப்ளிக்ட் ட்ராக்கர் அமைப்பு அமெரிக்காவின் வெளியுறவுத் துறை ஆலோசனை கூட்டத்தில் அறிக்கை அளித்துள்ளது.

ஜூலை மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 சிரிய அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சம் புகுந்துள்ளனர். வலியுடன் வருகின்ற இந்த அகதிகளை ஹங்கேரி, செக் குடியரசு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், போலந்து, ஸ்லேவேகியா  ஆகிய அரசுகள் சிறிதும் மனிதத் தன்மை இல்லாமல் அடித்துத் துரத்துகின்ற நிகழ்ச்சி தினமும் நடந்து வருகிறது. ஹங்கேரி பிரதமர் விக்டர் அர்பன் வெளிப்படையாகவே அகதிகள் எங்கள் நாட்டிற்கு வர கூடாது என உத்தரவிடுகிறார். மேலும் தனது நாட்டு எல்லைகளில் முள் வேலிகளை அமைத்து அகதிகளை ஹங்கேரிக்குள் வரவிடாமல் தடுக்கிறார். 

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும் வரும் அகதிகளை கருணையுடன் கைகளை விரிக்கும் நாடுகளின் எண்ணிக்கையை விட மக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஜெர்மனி அதிபர் ஆஞ்சலா மெர்க்கல் தனது நாட்டுக்கு வரும் அகதிகளை ஜெர்மானியர்களுடன் இணைந்து அவர்களை வரவேற்கிறார். 2015ம் ஆண்டு மட்டும் 8 லட்சம் அகதிகள் ஜெர்மனியில் தஞ்சம் புகுந்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரத்திற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அந்த அரசு செய்துள்ளது. அகதிகளை அரவணைப்பதில் ஸ்வீடன் முதல் இடத்தில் உள்ளது. ஸ்வீடன் மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 233 அகதிகள் உள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதே போன்று நார்வேயில் அந்நாட்டு மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 109 பேரும், ஜெர்மனியில் 56 பேரும், பிரான்ஸில் 46 பேரும் அகதிகள் உள்ளனர். இதேபோன்று வெனிசுலா உட்பட கம்யூனிச சோஷலிச நாடுகளும் துருக்கி உட்பட இசுலாமிய நாடுகளும் அகதிகளுக்கு பாரிய உதவிகளை செய்து வருகின்றனர்.

அகதிகளை வரவேற்கவும் அவர்களது வாழ்வாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஐரோப்பிய மக்கள் #ரெஃப்யூஜீஸ் வெல்கம் என்ற ஹேஸ் டேக்கை ஆரம்பித்து அகதிகளுக்காக பரப்புரை செய்கிறார்கள். மைக்ரேண்ட் ஆஃப்ஸோர் ஏய்டு ஸ்டேஷன், மெடிசின்ஸ் ஸேன்ஸ் ஃப்ரண்டைர்ஸ், அய்லான் குர்தி ஃபண்ட், ரெஃப்யூஜி கவுன்சில், சேவ் தி சில்ட்ரன், கேல் ஏய்டு, கிரவ்ட் ஃபண்டிங் ஆகிய அமைப்புகள் அகதிகளுக்காக நன் கொடை திரட்டி அவர்களுக்கு உதவி செய்து வருகிறது.

மனிதன் நாகரீக சமூகமாக மாறியது முதற்கொண்டு போர்களுக்கென தனி ஒழுங்கமைப்பு உருவாக்கப்பட்டது. இரண்டு பிரிவினர் அல்லது இரண்டு நாடுகளுக்கிடையே யுத்தம் என்றால் போருக்கென ஒதுக்கப்பட்ட மக்கள் வசிக்காத பகுதிகளில்தான் யுத்தம் நடைபெற்றது. காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த இந்த ஒழுங்கமைப்பை மாற்றியத்தில் முக்கிய பங்கு அமெரிக்க, பிரிட்டிஷ், சியோனிச ஏகாதிபத்தியங்களுக்குதான் உண்டு. இந்த மனித இனத்திற்கு எதிரான ஆதிக்க சக்திகள்தான் தனது எதிரி நாட்டின் மக்களை குண்டுகளை போட்டு பொசுக்கும் முறையை உலகத்திற்கு படித்து கொடுத்தவர்கள். இந்த மூன்று மேலாதிக்க சக்திகள் மூலமாக தான் இன்று உலகத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 

ரஷ்யா டுடே பத்திரிக்கைக்கு பேட்டியளித்த சிரிய அதிபர் பஷர் அஸத் அகதிகள் விவகாரத்தில் மேற்கத்திய ஏகாதிபத்தியம் ஒரு கண்ணில் கண்ணீரையும் மறு கண்ணில் துப்பாக்கியையும் வைத்துப் பார்க்கிறது. அமெரிக்கா மற்றும் இசுரேலிய ஏகாதிபத்திய வல்லூறுகள்தான் எங்கள் நாட்டில் உள்ள கிளர்ச்சி குழுக்களுக்கு பயிற்சி அளிப்பதாக அவர் குற்றம் சாட்டுகிறார். மேற்கத்திய ஏகாதிபத்தியம் இந்த உலகத்தில் உருவாக்கிக் கொண்டிருக்கும் போர்கள் மூலமாக அகதிகள் இன்னும் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். அகதிகளுக்கு கை கொடுத்து அவர்களை கருணையுடன் வரவேற்க அகதிகளுக்காக உதவி செய்து வரும் சர்வதேச தொண்டு அமைப்புகளுடன் அகதிகளின் வலி குறித்து நன்கு அறிந்துள்ள தமிழ் சமூகம் கைகோர்க்க வேண்டும். நாடுகளின் எல்லைகளை உடைத்து மனிதத்திற்காக மட்டும் ஒன்றிணைவோம்.

செய்தி ஆதாரம்: இந்த கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள தகவல்கள் ஃப்ரண்ட் லைன், ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் இணையதளம், தி கிரஸண்ட் இண்டர் நேஷ்னல் மாத இதழ், ஃபின்லாந்தின் ஓ.வி.ஐ. செய்தி நிறுவனம், ரஷ்யா டுடே ஆகிய ஊடகங்களில் இருந்து எடுக்கப்பட்டது.

-          ஷாகுல் ஹமீது

Pin It