vishnu priya 600

பெண்கள் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பிரதிநிதியாம் அம்மா ....

நான் சராசரி வேலைக்கு போற ஒரு குடும்பப் பொண்ணு.... டி. வில தற்கொலை பண்ணி செத்துப்போன காவலதிகாரி விஷ்ணுபிரியா பொண்ணோட போட்டோவப் பாத்து கதறாத பொம்பளங்களே தமிழ்நாட்டுல இல்ல...

நானுந்தான் வேலைக்கு போயிட்டு இருக்கேன் இப்ப என் வீட்டுக்காரர் வேலைக்குப் போக வேணாம், ஒழுங்கா புள்ளைய பாத்துட்டு வீட்டுல கெடன்னு சொல்றாரு..நா இப்ப என்ன செய்யட்டும்...?

அந்தப் பொண்ணோட சாவுக்கு விட தெரியாத வரைக்கும் வேலைக்குப் போற எல்லாப் பொண்ணுங்களும், அவங்களுக்கு மேல வேல செய்யிற ஆம்பளைங்களால சொல்லமுடியாத வேதனைகளை சுமந்துகிட்டு இருக்கிற பொண்ணுங்களும் வயித்தில நெருப்பக் கட்டிக்கிட்டு தான் வேலைக்கு போயிட்டு இருக்கோம்....

அம்மா.... இந்த மர மண்டைக்குள்ளார சிலபல கேள்விங்க கொடஞ்சிக்கிட்டு இருக்கு. அதுக்குப் பதில் தெரிஞ்சா தான் இனிமே நிம்மதியா நானும் என்னைப் போல மத்த பொண்ணுங்களும் ஆம்பளைங்களோட எணஞ்சி வேல பாக்க முடியும்னு நெனைக்கிறேன்.

1. விஷ்ணுப்ரியாவின் மரணம் தற்கொலையா, கொலையா...?

2. தற்கொலை என்றால் யாரால் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார்?

3. 18.9.15 அன்று மதியம் 3 மணி வரை பல மக்கள் போராட்டங்கள், ஊர்வலங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் இருந்துவிட்டுத்தான் உணவருந்த வீட்டிற்கு வந்துள்ளார். தனது நெருங்கிய தோழி மகேஸ்வரியிடம் மதியம் 2.48 மணியளவில் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அவரிடம் எஸ்.பி. தன்னை மனசாட்சிக்கு விரோதமாக கோகுல்ராஜ் கொலை வழக்கில் சம்பந்தமில்லாத நபர்களின் மீது குண்டாஸ் போட பரிந்துரை செய்யுமாறு வலியுறுத்துவதாகவும், அது தனக்கு மிகுந்த மன உளைச்சலைத் தருவதாகவும் சொல்லியிருக்கிறார்.

4. யாரைக் காப்பாற்ற எந்த சாதிப் பின்னணியில், எந்த அரசியல் பின்னணியில் இந்த நிர்ப்பந்தத்தை எஸ்.பி., விஷ்ணு பிரியாவின் மீது திணித்தார்? விஷ்ணு பிரியா எழுதியதாக சொல்லப்பட்ட கடிதம் உண்மையில் அவரால் எழுதப்பட்டது தானா? அவரால் எழுதப்பட்டிருந்தால் தன தோழியிடம் தனது மன உணர்வுகளை வெளிக்காட்டியது போல கடிதத்தில் காட்டியிருக்கலாமே.

5. அந்தக் கடிதம் இரண்டு பக்கத்தில் எழுதி கையெழுத்திட்ட ஒன்றும், கையெழுத்து இல்லாமல், 7வது பக்கத்தின் பின்தொடர்ச்சியுடன் விட்டுப்போன கடிதம் ஒன்றும் மட்டுமே காவல்துறை வெளியிட்டுள்ளது. எனில், மீதி பக்கங்கள் எதற்காக மறைக்கப்பட்டுள்ளது?

6. முதலில் 15 பக்க கடிதம் என்று சொன்ன காவல்துறை பிறகு 9 பக்கம்தான் என்று பொய் சொன்னது ஏன்?

7. நன்கு படித்த, யு.பி.எஸ்.சி.யில் முதல்நிலை தேர்வில் வெற்றிபெற்றுள்ள, நன்கு ஆங்கிலப் புலமை கொண்ட, தைரியமும், தன்னம்பிக்கையும் கொண்ட ஒரு காவல் அதிகாரி தமிழும் இல்லாத, ஆங்கிலமும் இல்லாத, தமிங்கிலத்தில் அதுவும் தற்கொலை எண்ணம் மேலோங்கிய நிலையில் மனக்குழப்பமான நிலையில் மிக அழகாக தெளிவாக வரிகளில் நிதானமாக எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார் என்பதை எப்படி நம்புவது? யாரை நம்பவைப்பதற்காக இப்படி ஒரு கடிதம் யாரால் எழுதப்பட்டுள்ளது?

8. இதே போலத்தான் கோகுல்ராஜ் மரணத்திற்கு முன்பும் தான் தற்கொலை செய்துகொள்வதாக விடியோ பதிவு ஒன்று வாட்சப் மூலமாக ஆதிக்க சாதி வெறியர்களால் பரப்பப்பட்டு கடைசியில் அந்தப் பதிவு திட்டமிட்டு பொய்யாக வெளியிடப்பட்டது என்று வெட்ட வெளிச்சமானது. இந்நிலையில் விஷ்ணுபிரியாவின் கடிதத்தின் உண்மை தன்மையைக் கண்டறிய இந்த அரசால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

9. சாதாரணமாக தனது கட்சியின் அடிமட்ட நிலையில் இறந்து போகும் கட்சித் தொண்டரின் இறப்புக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கும் முதலமைச்சரம்மா தனது ஆளுமையின் கீழ் உள்ள காவல்துறையின் ஒரு உயர் அதிகாரி சந்தேகமரணம் அடைத்திருக்கும் நிலையில் பிரியாவின் மரணத்திற்குத் தூண்டுகோலாக இருந்த எஸ்.பி. மீது இது வரை துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

தொக்கி நிற்கும் இத்தனை கேள்விகளுக்கும் தமிழக முதல்வரம்மா பதில் சொல்லுங்கள்.

உங்களுக்கு கீழ வேல பாக்குற பொண்ணுங்களுக்கே பாதுகாப்பும், மன உறுதியும் கொடுக்க முடியாத உங்களால என்னைப் போல உள்ள சாதாரண பொண்ணுங்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுக்க முடியும்?

ஒவ்வொரு முறையும் சமூக பிரச்சனைகளுக்காக மக்கள் போராட்டங்கள் எழுச்சியோடு வலுப் பெறும்போதேல்லாம் பசியோடு இருக்கும் நாய்க்கு எலும்புத்துண்டை வீசி எறிவது போல உடனடியாக இலவசங்களை அள்ளி வீசி மக்களின் மனங்களை மயக்க நிலையிலேயே வச்சிருக்கும் தமிழக முதலமைச்சரம்மா எங் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ....!!!

இப்படிக்கு

நிம்மதியா வேலைக்கு போக முடியாத
நிர்மலா

- வழக்கறிஞர் தமயந்தி, புரட்சிகர விடியல் பெண்கள் மையம், சேலம்

Pin It