இந்துத்துவ அரசை தவிர வேறு எந்த மத்திய அமைச்சரவைக்கும் கட்டுப்படாத ஒரு ராணுவ அமைப்பு நமது இந்திய ராணுவத்துக்குள் ஆழமாக ஊடுருவியிருக்கிறது. எதிர்கால இந்தியாவின் இறையாண்மையில் நீள்வெட்டு கோணங்களை உருவாக்கும் பேரபாயம் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது.

ramdev 251இந்திய அரசிடம் இருந்து ராணுவத்தை முழுமையாக விலக்கி அதை இந்துத்துவ கருத்தியலை உட்கொண்ட ராணுவமாகவும் இந்துத்துவ கோட்பாட்டிற்கு மட்டும் கட்டுப்படும் ராணுவ அமைப்பாகவும் இந்திய ராணுவத்தை மாற்றும் முயற்சி ஆர்.எஸ்.எஸ் பிறப்பெடுத்தது முதல் மிக ரகசியமாகவும் வேகமாகவும் நடந்து வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இன்னும் அது வேகம் கொள்கிறது.

மோடி என்ற ஒற்றை மனிதரின் பக்கம் இந்துத்துவத்திற்கு எதிரான மக்களின் சிந்தனையை திசைதிருப்பி விட்டு திரைமறைவில் நடக்கும் உள்கட்டமைப்பு வேலைகள் மிகவும் அபாயகரமானவை. இந்திய நாடு மிக வேகமாக தனது பண்பாடுகளையும் அடையாளங்களையும் இழந்து வருகிறது. மதசார்பற்ற சக்திகளால் இந்துத்துவ வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதுதான் இயல்பான உண்மை.

மகாராஷ்டிர மாநிலம் புனேயில் ஆர்.எஸ்.எஸ்சால் உருவாக்கப்பட்ட போன்ஸாலா ராணுவ பயிற்சி பள்ளியில் வர்ணாஸ்ரம அடிப்படையில் சத்திரிய இனத்தை சார்ந்த இந்துக்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டு அவர்களை ராணுவத்தில் உட்புக வைக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த ராணுவ வீரர்களையும் இந்துத்துவ பயிற்சிக்கு உட்புகுத்துகிறார்கள். இந்த பயிற்சி பள்ளியில் பாடம் படித்த ராணுவ அதிகாரியான கர்னல் புரோஹித்துதான் பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களின் முதன்மை குற்றவாளி. இவரை போன்ற ஆயிரக்கணக்கான புரோஹித்துகள் ராணுவத்திற்குள்ளேயும் வெளியேயும் இருக்கிறார்கள் எனபது மிகவும் அபாயகரமான செய்தி.

மோடியின் இந்துத்துவ அமைச்சரவை மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு ராணுவத்திற்குள் இந்துத்துவ கருத்தியலை உட்புகுத்த அவர்கள் எடுத்த கொண்ட யுக்திதான் ராணுவ வீரர்களுக்கான யோகா பயிற்சி.

மோசடி சாமியாரான ராம்தேவின் பதஞ்சலி அமைப்பு மூலமாகவும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் ஜியின் ஆர்ட் ஆஃப் லிவிங் என்ற அமைப்பு மூலமும் இந்த வேலை மத்திய அரசால் விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் ஹரித்வாரில் உள்ள பதஞ்சலி யோகா பயிற்சி முகாமில் 250 ராணுவ அதிகாரிகள் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக யோகா ஆரியர்களாக பயிற்சி எடுத்துள்ளனர். ஏற்கனவே பதஞ்சலி மூலம் 1000 ராணுவ வீரர்களுக்கு யோகா பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

ராணுவ வீரர்களின் மன அழுத்தத்தை குறைப்பதற்காக இத்தகய யோகா பயிற்சி அளிக்கப்படுவதாக மத்திய அரசு வெளியே பாசாங்கு காட்டுகிறது. ஆனால் யோகா என்ற பெயரில் இந்துத்துவ கருத்தியல் ராணுவ வீரர்களுக்கு உட்புகுத்தப்படுவதாக எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வெளியிட்டுள்ள ஆய்வு கட்டுரையில் ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது. இந்துத்துவ வெறி கொண்ட இந்துத்துவ ஆட்சியாளர்களுக்கு மட்டுமே கட்டுப்படுகின்ற ராணுவமாக இந்திய ராணுவத்தை வடிவமைக்கும் முயற்சியாகவே இத்தகய யோகா பயிற்சிகள் பயன்படுவதாக எக்கனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி அச்சம் தெரிவித்துள்ளது.

2014ம் ஆண்டு ஹரித்வார் பதஞ்சலி மைதானத்தில் நடைபெற்ற மூன்று நாள் ஆர்.எஸ்.எஸ் மாநாட்டில் ஏராளமான ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. ராம்தேவின் பதஞ்சலி மைதானம் ஆர்.எஸ்.எஸ்சின் மற்றொரு தலைமையகமாகவே செயல்பட்டு வருகிறது.

இத்தகய யோகா பயிற்சிகளில் வர்ணாஸ்ரம கொள்கையின் அடிப்படையில் நாட்டில் உள்ள அனைத்து ஷத்திரிய இனத்தை சார்ந்த இந்துக்களை ராணுவத்தில் இணைத்தால் நாடு மிகவும் பலம் வாய்ந்ததாக மாறும் என சொல்லி கொடுக்கப்படுகிறது. மேலும் இந்திய ராணுவத்தை வேதகால அடிப்படையில் மாற்றினால் மட்டுமே சிறந்த போர்வீரர்களாக இந்திய ராணுவ வீரர்கள் மாற முடியும் எனவும் படித்து கொடுக்கப்படுகிறது. நான்கு வேதங்களின் அடிப்படையில் இந்திய ராணுவத்தை வடிவமைக்க வேண்டும் எனவும் ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி கொடுக்கப்படுகிறது. இதற்காக ராணுவ வீரர்களுக்கு யோகாவுடன் தனுர்வேதா, அர்த்தசாஸ்த்திரா, பகவத்கீதை, ராமாயணம், வைசேஷிகா போன்ற இந்து மத சாஸ்த்திரங்கள் படித்து கொடுக்கப்படுகிறது.

இந்தியாவில் நீண்டகாலமாக நிலை நிறுத்தப்பட்டிருந்த இந்து ராணுவ அமைப்பு முறையை சிதைத்து அனைத்து ஜாதியினரையும் ராணுவத்தில் இணைத்ததால்தான் ராணுவம் பலகீனம் அடைந்ததாக ராணுவ அதிகாரியும் ராணுவ அறிவியல் ஆராய்ச்சியாளருமான அக்னிஹோத்திரி கூறுகிறார். இந்து ராணுவத்தை சீர்குலைத்து அதில் அனைத்து ஜாதியினரையும் சேர்த்ததன் காரணாமாக இந்திய பாதுகாப்பு துறையை பலகீனப்படுத்தியதாக அவர் முகாலயர்களை குற்றம் சாட்டுகிறார். ஜீன் அடிப்படையில் சத்திரியர்கள் மட்டும்தான் சிறந்த போர்வீரர்களாக இருக்க முடியும் எனவும் அவர் வாதிடுகிறார்.

இத்தகய போக்கு இன்று ராணுவத்தில் வேகமாக படருவது இந்திய இறையாண்மைக்கு பெரும் ஆபத்தாக மாற கூடிய அபாயம் உள்ளது. பாஜகவை தவிர எந்த மத்திய அரசுக்கும் கட்டுப்படாத நிலையில் ன் இந்த உருவாக்கம் எதிர்காலத்தில் அமையும் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய அரசுக்கு ராணுவம் கட்டுப்பட வேண்டிய போக்கு மாறி நாக்பூருக்கு கட்டுப்பட கூடிய சூழ்நிலை உருவாகும் அபாயம் உள்ளது.

மேலும் இந்திய ராணுவத்தை இந்துத்துவ மயமாக்க இஸ்ரேலிய சியோனிஸ அரசு ஆர்.எஸ்.எஸ்-ற்கு பாரிய உதவிகளை செய்து வருகிறது. இஸ்லாமியர்களை அழித்தொழித்தலில் இரு சித்தாந்தத்திற்கும் ஒற்றுமை இருப்பதால் எதிர்காலத்தில் உலக நாடுகளுக்கே அபாயகரமானதாக இந்துத்துவ சியோனிஸ உறவும் அமைய வாய்ப்பு இருப்பதாகவும் பூகோள அரசியல் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

செய்தி ஆதாரம்:

- ஷாகுல் ஹமீது

Pin It