(முற்போக்காளர் என்று இந்தப் பதிவு முழுவதும் நான் குறிப்பிட்டிருப்பது கடவுள், சாதி, மதம், சடங்கு, மூடநம்பிக்கை மறுப்பாளர்கள்-கொள்கையளவில் யாரை தலைவராக ஏற்றுக்கொண்டிருந்தாலும் சரி, எந்தக் கொள்கை மற்றும் தத்துவத்தை பின்பற்றினாலும் சரி, எந்த மாதிரியான சமூகவிடயத்திற்காக வேலை செய்யும் இயக்கத்தில் இருந்தாலும் சரி, எந்த அமைப்பிலும் இல்லாவிட்டாலும் சரி)  

அனைவருக்கும் வணக்கம்,

எப்போதுமே முற்போக்காளர்கள் பேசினாலோ, எழுதினாலோ, சிந்தித்தாலோ கூட தொண்ணூறு சதவீத நேரங்களில் அது சமுதாயம் பற்றிய பொதுநல சிந்தனையாகத்தான் இருக்கும்.ஆனால் அவற்றையெல்லாம் கொஞ்சம்ஓரமாக ஒத்திவைத்துவிட்டு, முற்போக்காளர்களின்  மனநலனுக்காக மட்டுமே சிந்திப்பதற்காய் சுயநலமாக ஒரு பதிவு.  

பொதுவாக தமிழ்நாட்டில் பொதுபுத்தியில் வாழ்கிற ஒரு மனிதன் இன்றைய வாழ்க்கைச் சூழலில் தன் அன்றாட மனஅழுத்தங்களை, மனஉளைச்சல்களை ஓரளவேனும் சரி செய்துகொள்ள பெரும்பாலும் ஆன்மீகத்தை நாடுகிறான். கடவுள் நம்பிக்கை உடையவன் என்றாகிவிட்டாலே, தினமும் இறைவழிபாடு செய்ய செல்வது, அதன் தொடர்பாக வரும் எண்ணற்ற பண்டிகைகளில், அதுவும் போதாமல் குலதெய்வ வழிபாடு - கெடா வெட்டு என்று ஏகப்பட்ட வழிகளில் அவன் மனஅழுத்தங்களை ஓரளவேனும் சரிசெய்து கொள்கிறான். முழுவதும் ஆன்மீகத்தில் நாட்டமில்லாதவர்கள் கூட பிறந்தநாள் கொண்டாடுவது, ஆங்கில புத்தாண்டு  கொண்டாடுவது, காதலர் தினம்- நண்பர்கள்  தினம் கொண்டாடுவது, சினிமா, சீரியல், தொலைகாட்சியில் தங்களை முழுமையாக கரைத்துக்கொள்வது, மது அருந்துதலை வழக்கமாக்கிக்கொள்வது என்று ஏகப்பட்ட வழிகளை வைத்திருக்கிறார்கள். 

lantern festival

இப்போது முற்போக்காளர்களுக்கு வருவோம். சுயநலமாய் தன் வீடு தன்  குடும்பம் என்று வாழ்பவனுக்கே அவனுடைய மன அழுத்தங்களை சரி செய்துகொள்ள இத்துனை வடிகால்கள் தேவைப்படும்பொழுது, குடும்பச் சுமையோடு சேர்த்து சமூக அவலங்கள் அனைத்தையும் பற்றி  தினம் தினம் விவாதித்து, ஆராய்ந்து, பலரை-பல விடயங்களை கண்டித்து, பலரை-பல விடயங்களை வசைபாடி,  சமுதாயக் கொடுமைகளில் தினமும் நம்மை சிந்தனைகளின் வாயிலினாவது கரைத்துக்கொண்டும், ஏதேனும் அமைப்பில் இருந்தால் அமைப்பின் மூலமாக தான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காகவும் சமூக அவலங்களை எதிர்த்து போராடிக்கொண்டும், முற்போக்காளர்களுக்குள்ளேயும் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து திட்டி தீர்த்து, முற்போக்கு இயக்கங்களுக்கு நடுவிலும் தலைவர்களை விமர்சனம் செய்து திட்டி தீர்த்து, இவையனைத்திற்கும் கட்டுரை எழுதியோ அல்லது ஒரு பதிவை போட்டும், யப்பா!!! இப்போவே கண்ணைக்கட்டுதே!! ஹைய்யோ!! ஹைய்யோ!! இவ்வளவு துக்கப்பட்டு, துன்பப்பட்டு, துயரப்பட்டு நாய் பிழைப்பை பிழைக்கும் முற்போக்காளர்களுக்கு வடிகால்கள் எங்கே? 

நாம் எந்தப் பண்டிகைகளையும் கொண்டாடுவதில்லை. ஆன்மீக ஈடுபாடற்றோர் கொண்டாடுவதையும் கொண்டாடுவதில்லை. பொழுதுபோக்கிற்காக கேவலம் ஒரு சினிமாவைக்கூட நம்மால் நிம்மதியாக பார்க்க முடிகிறதா? அப்போதுதான் இன்னமும் கூர்மையாக புத்தியை தீட்டி வைத்துக்கொண்டு, கண்களை அகல விரித்துவைத்து, ஒரே ஒரு சிறிய தவறான வார்த்தை கூட நம் கவனத்தில் இருந்து தப்பிவிடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருப்போம். பிறகு அந்த சினிமாவில் நடந்த ஒவ்வொரு விடயத்திற்கும் ஆயிரம் கருத்து, ஆயிரம் குற்றம் குறை, ஆயிரம் தத்துவங்களை பேசி நம் மனஅழுத்தத்தை இன்னமும் ஆயிரம் மடங்கு கூட்டிக்கொள்கிறோம். முடிந்தால் ஒரு வசவான விமர்சனக் கட்டுரையையும் பதிவிட்டுவிடுகிறோம். நம் பொழுதுபோக்கிற்காக சினிமா பார்க்கும் லச்சணம் கூட இப்படித்தான் இருக்கிறது. மதுப்பழக்கம் உள்ள முற்போக்காளர்களுக்கு அது அவர்களுக்கு கைகொடுக்கிறதா என்று அவர்கள்தான் கூற வேண்டும். பெரும்பாலான முற்போக்கு ஆண் தோழர்கள் (தலைவரிலிருந்து தொண்டர் வரை அல்லது தனிப்பட்ட எழுத்தாளர்களும், அறிவுஜீவிகளும்) பெரும்பாலும் திருமணம் தாண்டியும் பல பெண்களுடன் உடலுறவு, கள்ளக்காதல், கள்ளத்தொடர்பு போன்றவை மூலம் வடிகால்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் இந்த வழி அவர்களுக்கு எவ்வளவு "நன்மதிப்பை" ஈட்டித் தந்திருக்கிறது என்பதை நாம் நன்கு அறிவோம். இவற்றில் பெண் தோழர்களின் நிலை என்ன என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவர்கள் கூடுதலான மன அழுத்தங்களுக்கு ஆளாவதாகவே கேள்விப்படுகிறேன். மற்றபடி இப்படித்தான் இருக்கிறது நம்ம முற்போக்காளர்களின் "நாறிய பொழப்பு". 

இவற்றையெல்லாம் தாண்டி  நாம் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிற கொண்டாடுவதற்கான சில நாட்களும் இருக்கின்றன. அவை தந்தை பெரியார் பிறந்தநாள், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள், இன்னும் ஒவ்வொரு முற்போக்கு அமைப்புக்கும் அவர் அவர் தலைவராக யாரை ஏற்றுக்கொண்டிருக்கிறார்களோ அவர்களுடைய பிறந்த நாட்கள் அல்லது புரட்சி நாட்கள், நாத்திகர் விழாக்கள் போன்றவை.    சரி.    இந்த நாட்களிலாவது அந்த அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் அதை எப்படி கொண்டாட வேண்டியிருக்கிறது? துண்டறிக்கை போடணும், போஸ்டர் ஓட்டனும், கூட்டத்திற்கோ அல்லது பேரணிக்கோ அல்லது மாலை போடுவதற்கோ கூட முன்னேற்பாடு செய்ய வேண்டும், அந்த குறிப்பிட்ட நாளன்று அந்த அந்த அமைப்புக்கான சீருடை அணிந்து, ஒரு இடத்தில் ஒன்றாக சேர்ந்து கொடி பிடித்து, பேனர் தூக்கி, முழக்கமிட்டு, வெய்யிலில் காய்ந்து, இவற்றுக்கெல்லாம் பிறகு ஒரு மூன்று நான்கு மணி நேரம் மேடையில் இருக்கும் அனைவரின் உரைகளையும் கேட்க வேண்டும். இவையனைத்தும்தான் நாம் "மகிழ்ச்சியாக கொண்டாடலாம்" என்று நாம் ஏற்றுக்கொண்ட நாட்களில் நாம் அனுபவிக்கும் "சுகங்கள்". இது ஒருபுறம் இருக்க, தமிழர் திருநாள், தமிழ் புத்தாண்டு, காதலர் தினம் அன்று நடக்கும் கதை வேறு. முற்போக்காளர்கள் கொள்கையளவில் ஏற்றுக்கொண்ட நாட்கள் இவை. அவ்வளவே. மற்றபடி சுவாரஸ்யமாக இவற்றை கொண்டாடி மகிழ்ந்ததாக நான் யாரையும் பார்த்ததில்லை. தீபாவளிக்கு காரணம் கூறி சறுக்கும் முற்போக்காளர்கள் கூட ஏனோ தமிழர் திருநாளை, தமிழ் புத்தாண்டை பெரிதாக சீண்டுவதில்லை. முற்போக்கு அமைப்புகளே கூட இவற்றை கொண்டாடினாலும் அதற்கும் முன்பு குறிப்பிட்டதைப் போல பல "சுகங்களை" அன்றும் அனுபவிக்க வேண்டியுள்ளது.  

முற்போக்காளர்களின் தனிமனித வாழ்விலும் எவ்வித கொண்டாட்டங்களும், இல்ல விழாக்களும் பெரிதாக ஒன்றும் இருப்பதில்லை. முற்போக்காளர் வாழ்வில் அவர்களுக்கென்று நடத்திக்கொள்ளும் ஒரே நிகழ்வு, "வாழ்க்கை துணை ஒப்பந்த விழா". இதுவும் எவ்வளவு "குதூகலமாக" எவ்வளவு "கொண்டாட்டமாக" எவ்வளவு "மகிழ்ச்சியாக" எவ்வளவு "சுவாரஸ்யமாக" இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான். இதைப்பற்றி நான் எதுவும் கூறப்போவது இல்லை அதற்கு தனியாக ஒரு பதிவு தேவைப்படுகிறது. அதிலும் கணவன் மனைவி இருவரும் முற்போக்காளராக இருந்துவிட்டால் கதை முடிந்தேவிட்டது போங்கள்.

இவ்வளவுக்கும் பிறகும் சில முற்போக்காளர்கள் வடிவேலு போல "இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறானே, இவன் ரொம்ப நல்லவன்டா" என்று பிறர் பாராட்ட, கம்பீரமாக நடைபோடத்தான் செய்கிறார்கள். ஆனால் சில முற்போக்காளர்கள் மன அழுத்தம் தாங்காமல் கொள்கையை சமரசம் செய்துவிடுகிறார்கள். குலசாமி கெடா விருந்து சாப்பிடுவது, கேட்டால் "சாப்பிட மட்டும் வந்தோம்" என்று கூறுவது, "குழந்தைகளுக்காக தீபாவளி கொண்டாட வேண்டியிருக்கிறது" என்று உண்மையாகவோ பொய்யாகவோ காரணம் கூறிக்கொண்டு தன் மன அழுத்தங்களுக்காகவும் தன்னை கொஞ்சம் தீபாவளியில் கரைத்துக்கொள்வது என்று  இதுபோல இன்னும் பல இடங்களில் சமரசம் செய்து பொதுபுத்திக்கு வந்துவிடுகின்றனர். இது திருட்டுத்தனம்தான்-தவறுதான்.     

இப்படி பொதுபுத்தியில் இருக்கும் பண்டிகைகளையெல்லாம் நிராகரித்தும், புரட்சி நாட்களை மட்டுமே ஏற்றுக்கொண்டும் இத்துனை வருடங்கள் முற்போக்காளராக பயணம் செய்துவந்ததில் சமுதாயத்தில் ஒரு சிறிய மாற்றத்தையேனும் நம்மால் கொண்டுவர முடிந்ததா என்று நினைத்துப்பார்க்கிறேன். நாம் ஏற்றுக்கொண்ட மகிழ்ச்சியான நாட்களையும், தலைவர்கள் பிறந்த நாட்களையும் பொதுபுத்தியில் வாழ்கிற பெரும்பான்மையினரும் ஏற்றுக்கொண்டு விட்டார்களா? அவற்றை கொண்டாடுகிறார்களா? என்றால் "இல்லை" என்றே வருத்தமாக கூற வேண்டியுள்ளது. ஆனால் வழக்கத்தை விட அதிகமான உக்கிரத்தோடு வருடந்தோறும் வரும் தீபாவளி பண்டிகை சில முற்போக்காளர்களையும் கூட குடும்பத்தோடு காவு வாங்கியதும், முன்பை விட பல மடங்கு அசுரத்தனமாய் வளர்ந்துவிட்ட விநாயகர் சதுர்த்தியும், முன்னெப்போதும் இல்லாத அக்க்ஷய திருதியையும், முன்னெப்போதும் இல்லாத புதுப்புது மதப் பண்டிகைகளும், முன்னெப்போதும் இல்லாத மூடச்சடங்குகளும் சம்பிரதாயங்களும் பன்மடங்காக பெருகி இருப்பதுதான் மிச்சம். 

இரண்டு விடயங்களை இதிலிருந்து நிறுவுகிறேன்:

1. "மகிழ்ச்சியாய் கொண்டாடுவதற்காக" என்று நாம் ஏற்றுக்கொண்ட நாட்கள் கூட முற்போக்காளர்களின் மன அழுத்தங்களை குறைக்கும் வகையில் மகிழ்ச்சிகரமாகவோ சுவாரஸ்யமாகவோ இல்லை. மாறாக, வழக்கமாக முற்போக்கு அமைப்புகளும் இயக்கங்களும் நடத்தும் நிகழ்வாகத்தான் இருக்கிறது. 

2. இந்த சுவாரஸ்யமற்ற தன்மையினால் வெகுஜனமக்களிடத்திலும் அவை வரவேற்பு பெறவில்லை. மாறாக, அவர்கள் கொண்டாடுகிற மூடமான, மதம் சார்ந்த கொண்டாட்டங்களை நாம் திருட்டுத்தனமாக சமரசம் செய்து ஏற்றுக்கொள்கிறோம் என்பதே வெட்கப்படவேண்டிய  நிதர்சனமான உண்மை.  

முற்போக்காளர்களுக்கும் "தீபாவளி" ஸ்டைலில் கொண்டாட சில நாட்களும், சில சுவாரஸ்யமான முறைகளும் வேண்டாமா? தீபாவளி ஸ்டைல் என்றதும் என்னை பிராண்ட வேண்டாம். குழந்தைகள் முதல் முற்போக்காளர் வரை சறுக்கும் ஒரே பண்டிகையாக அதுதானே இப்போதும் கோலோச்சுகிறது? இசுலாமிய மற்றும் கிறிஸ்தவக் குழந்தைகளையும் கூட தீபாவளி விட்டுவைக்கவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதனால் அதைக் குறிப்பிட்டேன். சரி இப்படி செய்யலாமா?  ஏற்கனவே இருக்கிற தமிழர் திருநாளை, அச்சு அசல் தீபாவளி போல பட்டாசு வெடித்து கொண்டாடிவிடலாமா? ஆனால் இதில் இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் பங்கெடுக்கமாட்டர்களே. தமிழ் புத்தாண்டை? இதில் வெகுஜனமக்களுக்கு தேதியில் குழப்பம் தீர்ந்தபாடு இல்லை. இதிலும் இசுலாமியர் கிறிஸ்தவர் பங்கெடுக்க மாட்டார்கள். காதலர் தினத்தை? கிறிஸ்தவப் புனிதரின் பெயரால் இருப்பதால் இதிலும் வெகுசனங்களுக்கு உடன்பாடில்லை, இசுலாமியர்களும் இதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதுதான் பிரச்சனை. நாம் கொண்டாடும் புரட்சி நாட்கள், பிறந்தநாட்கள், நாத்திகர் விழாக்கள் பொதுபுத்தியில் உள்ள வெகுசனங்களுக்கு பிடிக்கவில்லை. அவர்கள் கொண்டாடும் மதம் சார்ந்த மூடமான பண்டிகைகளை நமக்கு பிடிக்கவில்லை. இரண்டு பிரிவும் என்றுதான் ஒரு புள்ளியில் இணைவது? இதற்கு தீர்வுதான் என்ன?  

தமிழ்நாடு முழுவதும் இருக்கும் முற்போக்காளர் அனைவரும் (அமைப்பு, இயக்கம், ஏற்றுக்கொண்ட தலைவர்,கொள்கை என்று எவ்வித வேறுபாடும் இல்லாமல்) கலந்து பேசி, விவாதித்து வருடத்திற்கு ஒரு நாளை தேர்வு செய்வோம். தேர்வு செய்யப்படுகிற நாள் எந்தத் தலைவருடைய பிறந்தநாளாகவும் இருக்க வேண்டாம், புரட்சி நாளாகவும் இருக்கவேண்டாம். ஏனென்றால் தேவையில்லாமல் இயக்கங்களுக்கு இடையில் "நான் ஏற்றுக்கொண்ட தலைவன் மற்றும் தத்துவம்தான் பெரியது" என்று ஆளாளுக்கு அடித்துக்கொள்வார்கள். மேலும் அப்படி ஒருநாளை தேர்வு செய்தால் பின்னாளில் பொது புத்தியில் வாழ்கிற வெகுஜன மக்கள் எத்துணை நூற்றாண்டுகள் கடந்தாலும் அதில் தங்களை இணைத்துக்கொள்ளப்போவதில்லை (இப்போதிருக்கும் நிலை போல). 

உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாட்களாக சில நாட்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அப்படியான நாட்கள் அடங்கிய பட்டியலுக்கான லிங்க்: https://en.wikipedia.org/wiki/International_observance இதிலிருக்கும் பட்டியலில் முற்போக்காளர்களும், வெகுஜனங்களும் ஒருசேர ஏற்றுக்கொள்ளும் சில நாட்களும் இருக்கின்றன. உதாரணமாக குழந்தைகள் தினம், பெண்கள் தினம், மகிழ்ச்சி தினம், ஆடும் தினம்(டான்ஸ் டே), இசை தினம், உலக அமைதி தினம், உலக உணவு தினம், சிரிப்பு தினம் போன்றவை (மகிழ்ச்சியான நாட்களை மட்டுமே குறிப்பிட்டிருக்கிறேன்). அனைத்து முற்போக்காளர்களும் சேர்ந்து ஒருமித்து அந்த பட்டியலிலிருந்து ஒரு நாளை தேர்வு செய்யலாம். சாதி மத இனம் பாலினம் வயது கடந்து அனைவரும் கொண்டாடும் ஒரு நாளை தேர்வு செய்து கொள்ளலாம். அந்த நாளை தீபாவளி ஸ்டைலில் அப்படியே கொண்டாடிவிடலாமே. புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து, பக்கத்து வீடுகளுக்கு இனிப்பு மற்றும் பிரியாணி சப்ளை செய்து, நாமும் பிரியாணியை ஒரு வெட்டு வெட்டி,  புதுப்படம் பார்த்து, மீண்டும் பட்டாசு வெடித்து நாளை நிறைவு செய்துவிடலாமே. என்ன கெட்டுவிட்டது இப்போது?  

ஒரு உதாரணத்திற்கு கூறுகிறேன், உலக மகிழ்ச்சி தினம் அல்லது சிரிப்பு தினத்தை தேர்வு செய்து அச்சு அசல் தீபாவளியைப் போலவே கொண்டாடினால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்க்கிறேன். ஒரு இரண்டு மூன்று வருடங்கள் முற்போக்காளர்கள் மட்டுமே கொண்டாடினாலே போதும், நிச்சயம் பொது புத்தியில் வாழ்கிற வெகுஜன மக்கள் தங்களை இக்கொண்டாட்டத்தில் இணைத்துக்கொள்ளத்தான் போகிறார்கள். சாதி மதம் கடந்து அனைவரும் வரவேற்பார்கள் காலப்போக்கில் ஏற்றுக்கொண்டுவிடுவார்கள். இப்போது தீபாவளி கொண்டாடும் இந்து மதத்தினர் கூட பெரும்பாலும் தீபாவளி கதைகளைக்கூட மறந்துவிட்டார்கள். அவர்கள் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பட்டாசு, புத்தாடை, பிரியாணி, புதுப்படம் அவ்வளவே. அதை எந்த நாளுக்கு மாற்றி கொண்டாடப் போவதென்றாலும் அவர்கள் கவலைப்படப் போவதில்லை. இந்துமத தீபாவளியன்று தீபாவளி கொண்டாடுவது ஒழிந்து இந்த நாள் தீபாவளியாக மாறிவிட்டுபோகட்டுமே. காரணமாவது மதம் சாராமலும் மூடத்தனமாகவும் இருக்காதே. முற்போக்காளர்களும், இசுலாமியர்களும், கிருஸ்தவர்களும் கூட எந்த திருட்டுத்தனமும் இல்லாமல் மகிழ்ச்சியாக ஒரு நாளை பட்டாசு வெடித்து கொண்டாடியது போலவும் இருக்கும், இந்துமத தீபாவளி அன்று சமரசம் செய்யாமல் இருக்க ஒரு வாய்ப்பாகவும் இருக்கும்.  

தீபாவளி சந்தையையே அப்படியே வேறு மாதம் வேறு ஒரு நாளுக்கு மாற்றிய பெருமையாவது முற்போக்காளர்களுக்கு கிடைக்கட்டுமே. இது முடியாவிட்டாலும் தீபாவளிக்கு இருபது நாட்களுக்கு முன்போ அல்லது இருபது நாட்களுக்கு பின்போ ஒரு நாளை தேர்வு செய்து பெயரிட்டுக் கூட கொண்டாடலாமே. மார்வாடிகள் கூட அவர்களது தீபாவளியை அடுத்த நாள்தானே கொண்டாடுகிறார்கள்? உலக மகிழ்ச்சி தினம் மார்ச் 20 என்று அந்த பட்டியலில் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு அது தீபாவளிக்கு இருபது நாட்களுக்கு முன்போ பின்போ ஒரு தேதியில் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் இருந்துவிட்டு போகட்டுமே (குழந்தைகள் தினம் மற்றும் இன்னும் பிற தினங்கள் வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு தேதியில் இருப்பதைப் போல). உண்மையிலேயே இப்படி ஒரு முடிவெடுத்து, நாளை தேர்வு செய்து கொண்டாடினால், இசுலாமியர்களிடமும் கிறிஸ்தவர்களிடமும் கூட நாம் இதை பரப்பலாம் "எப்படியும் தீபாவளி அன்று வெடிக்க உங்கள் குழந்தைகளுக்கும் பட்டாசு வாங்கித்தான் தருகிறீர்கள், அதை வெடிப்பதை மட்டும் நாங்கள் தேர்வு செய்திருக்கும் இந்தநாளில் வெடிக்கலாமே" என்று அவர்களையும் இணைத்துக்கொள்ளலாம். இப்படி மூவரும் சேர்ந்துகொண்டால் அந்த நாளுக்கான visibility கொஞ்சமாவது இருக்கும். குறைந்தபட்ச முற்போக்காளர்களையும் கூட இதில் இணைத்துக்கொள்வது மிக முக்கியம்.   

தீபாவளி ஸ்டைல் கொண்டாட்டம், எல்லோராலும் தேர்வு செய்யப்படும் அந்த ஒரு நாளில் மட்டும் போதும். ஆனால் வருடம் முழுவதுமே மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இளைய தலைமுறையினரை, குழந்தைகளை, அனைவரையும் கவரும் வகையில் ஏதேனும் ஒருநாளை தேர்வு செய்து எளிமையாக கொண்டாடவேண்டிய அவசியம் உள்ளது. "முற்போக்காளர் பண்டிகைகள்" என்று நமக்கும் வருடத்தில் ஒரு நான்கைந்து நாட்கள் தேவைப்படுகிறது. அந்நாட்களில் கொண்டாட எளிமையான சுவாரஸ்யமான கொண்டாட்ட வழிகளை கண்டுபிடிக்க வேண்டும். உதாரணமாக சீன நாட்டில் lantern திருவிழா அன்று சிறிய நெருப்பேந்திய காகிதத்தால் ஆன விளக்கு வானில் பறக்க விடப்படுகிறது. இதை அவரவர் வீட்டிலேயே தயாரிக்கிறார்கள். இரவில் அதை வானில் பறக்க விடுவதை பார்க்க அவ்வளவு அழகாக இருக்கிறது. இதையே நாமும் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இதுபோல் இன்னும் அழகானதாக, எளிமையானதாக, சுவாரஸ்யமானதாக,குழந்தைகளையும் இளைஞர்களையும் அனைவரையும் கவரும் வண்ணம் கொண்டாட்டத்திற்கான வழிமுறைகளை உருவாக்கி மகிழலாமே. முற்போக்காளர் என்பதற்காக எப்போதுமே முறைத்துக்கொண்டு வெறப்பாகவே எத்தனை நாட்களுக்கு காலம் தள்ளுவது?

யாருக்கு தெரியும், காலப்போக்கில் வெகுஜனமக்களும் இணைந்து கொள்ளும் வண்ணம் மகிழ்ச்சியான நாட்களை தேர்வு செய்து அவற்றை சுவாரஸ்யமாக கொண்டாடினால் நம் மன அழுத்தங்களும் குறையும், சமூகத்தில் இருக்கும் மூடத்தனமான மதம் சார்ந்த பண்டிகைகளும் குறைய வாய்ப்பு இருக்கிறது. மதவாத சக்திகள் பண்பாட்டுத்தளத்தில் தொடுத்துள்ள போரை பண்பாட்டுத்தளத்திலேயே வென்றெடுக்கலாமே? முயன்றுதான் பார்ப்போமே? இதனால் நமக்கு எந்த நட்டமும் இருக்கப்போவதில்லையே? அப்படியே வெகுஜன மக்கள் பின்னாளில் சேர்ந்துகொள்ளாவிட்டால்தான் என்ன? தமிழ்நாட்டில் இருக்கும் அத்துணை முற்போக்காளர்களும் வருடத்தில் நான்கைந்து முறை ஒன்றாக, மகிழ்ச்சியாக சில நாட்களை கொண்டாடி நம் மனநலனை பாதுகாத்துக்கொள்ளலாமே? வெகுஜனத்துடன் தன்னை தொடர்புபடுத்திக்கொள்ள சீமான் “முருகன் என் முப்பாட்டன்” (வாவ்!!!) என்று கூறுமளவுக்கு கீழே இறங்கியுள்ளார். இந்த அளவிற்கு நம்மால் கீழே வரமுடியாவிட்டாலும், மக்களோடு மக்களாக இயங்க ஒரு சில நாட்களை தேர்வு செய்து சுவாரஸ்யமாக, மகிழ்ச்சிகரமாக கொண்டாடினால்தான் என்ன? மற்றபடி அவரவர் புரட்சி தினங்களை, தலைவர் பிறந்த நாட்களை, அவரவர் அமைப்பு சார்ந்த விழாக்களை வழக்கம் போல நடத்தலாம்.  

இப்பதிவு அபத்தமானதாக இருந்தாலோ அல்லது சில உதாரணங்களில் தவறு இருந்தால் தோழர்கள் அவற்றை தெரியப்படுத்தவும் (நான் ஒரு ஆரம்பநிலை முற்போக்காளர்தான். உண்மையில் எனக்கு பெரிய அளவில் தத்துவங்களோ, வரலாறோ, வரலாற்றுத் தலைவர்கள் பற்றியோகூட தெரியாது). ஆனால் பதிவு சரியாக இருந்தால் பிற தோழர்களுடனும், முற்போக்கு அமைப்புகளுடனும் பகிர்ந்துகொள்ளவும். இதை எப்படி சரியாக முன்னெடுப்பது என்பதை ஏனைய முற்போக்காளர்கள், முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் கட்டாயம் வழிகாட்ட வேண்டும். வெகுஜனமக்களைவிடவும் முற்போக்காளர்களின் மனநலம் மிக மிக முக்கியம் என்பதை மட்டும் மிக அழுத்தமாக பதிவு செய்கிறேன்.  

நன்றி

- முற்போக்காளர்

Pin It