உலகின் பாரிய ஜனநாயக நாடான இந்தியா சித்தாந்த ரீதியாக காட்டுமிராண்டித்தனமான இருண்ட உலகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதை உலக மக்கள் மிகவும் வியப்புடன் உற்று நோக்குகிறார்கள். இந்தியாவின் ஜனநாயக தன்மையை உலக அரங்கில் பிரகாசிக்க வைத்த சிந்தனைவாதிகள், ஒடுக்கப்பட்ட மக்கள் இந்திய மைய அரசால் உத்வேகம் பெற்ற பயங்கரவாதிகளால் தொடர்படுகொலைகளுக்கும் தாக்குதல்களுக்கும் அவமானப்படுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் நாம் இப்போதும் அறைகூவல் விடுத்து கொண்டிருக்கிறோம், உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான் என்று.

kalburgiஇந்திய ஜனநாயக நாட்டின் மதச் சார்பின்மை கொள்கையின் சித்தாந்தவாதியான மகாத்மா காந்தியின் படுகொலையில் இருந்து இந்த படுகொலை சம்பவங்கள் மீள் உருவாக்கம் பெறுகின்றன. காந்தி, கல்புர்க்கி, கோவிந்த பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகிய அனைத்து சித்தாந்தவாதிகளுமே முதுமைகாலகட்டத்தில்தான் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் இயற்கையாக இறந்து விடக்கூடாது என்பதில் அவர்களைக் கொன்ற இந்துத்துவ காட்டுமிராண்டிகள் முனைப்புடன் இருந்துள்ளனர். இந்த காட்டுமிராண்டிகள் இந்திய மக்களுக்கு இந்த கொலைகள் மூலமாக பல்வேறு செய்திகளை கூறுகின்றனர். கல்புர்க்கியை படுகொலை செய்த கையோடு அவர்கள் எழுத்தாளர் பகவானுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அனந்த மூர்த்தி இயற்கையாக மரணம் அடைந்தது அவர்களுக்கு பாரிய வருத்தத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஆயிரம் ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருந்த ஆதிக்கத் தன்மையை கேள்வி எழுப்பியவர்கள்தான் இவர்களால் படுகொலை செய்யப்பட்ட சிந்தனைவாதிகள். கல்புர்கி 'மார்கா' என்ற ஆய்வு கட்டுரையை 8 பகுதிகளாக தொகுத்து வெளியிட்டதுதான் அவரின் உயிருக்கு உலை வைத்து விட்டது. மார்காவில் அவர் இந்து மேலாதிக்கத் தன்மையை மிகவும் கடுமையாக சாடியிருக்கிறார். இவரால் வார்த்தெடுக்கப்பட்ட மாணவர்கள் இன்று உலகம் முழுவதும் உள்ளனர். அவர்கள் இன்னும் ஆயிரம் மார்காவை வெளியிட உள்ளனர். இந்த காட்டுமிராண்டிகளால் எத்தனை பேரைத்தான் கொன்றுவிட முடியும்?

மாற்று கருத்தியலுக்கு எதிரான இந்துத்துவாவின் எதிர்ப்பு தற்பொழுது உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கிறது. மகாராஷ்ட்டிராவில் பாகிஸ்தான் பாடகர் குலாம் அலி இசை நிகழ்ச்சி நடத்த வேண்டும் என்றாலோ, பாகிஸ்த்தான் வெளியுறவுத்துறை அமைச்சரும் சிறந்த எழுத்தாளருமான குர்ஷித் கசூரி நூல் வெளியிட வேண்டும் என்றாலோ இந்த காட்டுமிராண்டிகளிடம் அனுமதி வாங்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. குர்ஷித் கசூரியின் நூல் வெளியீட்டு விழாவை ஏற்பாடு செய்த குல்கர்னி மீது கருப்பு மை ஊற்றி விட்டு இதுதான் ஜனநாய ரீதியான போராட்டம் என நம் முன்பே பல் இழிக்கிறார்கள்.

இந்தியாவை காட்டுமிராண்டிகளின் கட்டமைப்பில் இருந்து மீட்ட சிந்தனைவாதிகளுக்கு இந்தக் கணம் பாரிய பதட்டத்தை உருவாக்கி உள்ளது. இதனால்தான் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்கள் விருதுகளை திரும்ப அளித்து நாட்டில் நடந்து வரும் காட்டுமிராண்டித்தனமான அரசியலை சர்வதேச சமூகத்தின் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார்கள். இலக்கியத்திற்காக வழங்கப்படும் விருதுகளை திரும்பி அளிக்கும் போராட்டத்திற்கு வித்திட்டவர் ரவீந்திரநாத் தாகூர்தான். அவர்தான் முதன் முதலாக பிரிட்டிஷாரால் இலக்கியத்திற்காக அளிக்கப்பட்ட உயரிய விருதை ஜாலியன் வாலாபாக் படுகொலையை கண்டித்து திரும்பக் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாகத்தான் இந்தியாவின் மிக பெரும் எழுத்தாளர்களான உதய் பிரகாஷ், நயந்தாரா செகல், அசோக் வாஜ்பாய், ரகுமான் அப்பாஸ், சாரா ஜோசப், அதம்ஜித் சிங், குர்பஜக்சன் புல்லார், அஜ்மர் சிங் அலாக், கும்பார் வீர பத்ரப்பா, ஸ்ரீநாத், அமான் சேத்தி, டி.என்.டெவி, குலாம் நபி கயாஸ், மங்களேஷ் தப்ரால், ராஜேஷ் ஜோஷி, சந்து, ரங்கநாத் ராவ், கணேஷ் தேவி, மாந்த கிரந்தா உட்பட 22 எழுத்தாளர்கள் இதுவரை சாகித்ய அகாடமி விருதை திரும்ப அளித்துள்ளனர். பஞ்சாபி எழுத்தாளர் தலீப் கவுர் திவானா தனக்கு அளிக்கப்பட்ட பதமஸ்ரீ விருதை திரும்ப அளித்துள்ளார். இதே போன்று பல்வேறு படைப்பாளிகள், கலைஞர்கள் தங்களது விருதுகளை திரும்ப அளிக்க முன் வந்துள்ளனர்.

இந்திய எழுத்தாளர்களின் இத்தகைய போராட்டம் சர்வதேச அளவில் பாரிய தாக்கத்தை உருவாக்கி உள்ளது. சர்வதேச அளவிலான பத்திரிகைகளில் தொடர்ந்து இந்தப் பிரச்சினை குறித்து அலசப்பட்டு வருகிறது. இது சர்வதேச அளவில் நிச்சயம் மோடி அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை அவர் இனி வரும் நாட்களில் நிச்சயம் புரிந்து கொள்வார்.

எழுத்தாளர்களின் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதத்தில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. அதில் முக்கிய விமர்சனம் சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையோடு இந்தப் போராட்டம் ஒப்பிடப்பட்டு தமிழ் தொலைக்காட்சிகளில் விவாதிப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. எழுத்தாளர்கள் படுகொலை உட்பட அனைத்து காட்டுமிராண்டி சம்பவங்களும் அந்த மாநிலங்களின் சட்ட ஒழுங்கு பிரச்சினைதானே இதில் எதற்காக மத்திய அரசை கேள்வி கேட்க வேண்டும் என இந்த பயங்கரவாதிகளை ஆதரிக்கும் இந்துத்துவாவாதிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

நாட்டில் தற்போது நடந்து கொண்டிருப்பது சாதாரண சட்ட ஒழுங்குப் பிரச்சினையா? இந்தக் கேள்வியே மிகவும் வினோதமானது. இந்துத்துவா என்ற ஆதிக்க பயங்கரவாதம் ஆயிரம் ஆண்டுகளாக இந்த நாட்டு மக்களை மதத்தின் பெயரால் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்தி வந்தன. பகுத்தறிவு சிந்தனைகள் மூலம் இதை சிந்தனைவாதிகள் தவிடு பொடியாக்கினர். இந்த ஆதிக்க சக்தியை தலை தூக்க விடாமல் கட்டுப்படுத்த சிந்தனை ரீதியான பரப்புரையை சுதந்திர இந்திய மக்களின் சிந்தனையில் புகுத்தினர். ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவை இருண்ட காலத்திற்கு அழைத்து செல்கின்ற வேலையை இந்துத்துவா குழுக்கள் திட்டமிட்டு செய்து வருகின்றன. இவர்கள் ஆட்சியில் இல்லாதபோது எழுத்துகளின் மூலம் மட்டும் பரப்புரை செய்து வந்த எழுத்தாளர்கள், தற்போது மோடி அரசால் இந்த குழுக்கள் உற்சாகம் பெற்று வலுவடைந்து கொண்டிருக்கும் கணத்தில் போராட்டத்தை வீரியப்படுத்தும் நோக்கத்தில் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்துத்துவா கும்பல்கள் செய்கின்ற நுண்ணிய கருத்தியல் ரீதியான இந்த செயல்பாடுகளுடன் சீக்கிய படுகொலையையோ அல்லது வேறு சம்பவங்களையோ ஒப்பிட முடியாது. மேலும் எழுத்தாளர்கள் போராட்டம் தீவிரமடைய முக்கிய காரணம் இந்துத்துவா பேராபத்துக்கு எதிராக பரப்புரை செய்பவர்களை படுகொலை செய்யும் புதிய போக்கை இந்த பயங்கரவாதிகள் தீவிரபடுத்தும்போது மிகவும் வீரியமான போராட்டத்தை அவர்கள் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

பெருமாள் முருகன் போன்ற எழுத்தாளர்களை உயிருடன் இருக்கும்போதே கல்லறைக்கு அனுப்பி வைத்த கொடூரம் பகுத்தறிவு சிந்தனைகள் செழித்து வளர்ந்த தமிழகத்தில் நிகழ்ந்திருப்பது மிகவும் குரூரமானது. நாடு முழுவதும் நடந்து வரும் இந்தப் போராட்டங்களை தமிழக எழுத்தாளர்கள் எதிர்கொள்ளும் விதமும் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. யுவ புரஷ்க்கார் விருது பெற்ற எழுத்தாளர் அபிலாஷ் விருதுகளை திரும்ப அளிக்கும் எழுத்தாளர்களைப் பார்த்து "இனி நீங்கள் மத்திய அரசு போட்ட சாலைகளில் நடக்க மாட்டீர்களா?" என கேட்கிறார். மிகவும் கோமாளித்தனமான கட்டுரை ஒன்றை தமிழ் இந்துவில் எழுதியிருக்கிறார். தொடர்ந்து சமூக வலைத் தளங்களில் இந்த எழுத்தாளர்களுக்கு எதிராக பரப்புரை செய்து வருகிறார்.

சாகித்ய அக்காடமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்களான இந்திரா பார்த்தசாரதி, கி.ராஜநாராயணன், பொன்னீலன், பிரபஞ்சன், அசோகமித்திரன், தோப்பில் முகம்மது மீரான், கவிக்கோ அப்துல் ரகுமான், வைரமுத்து, ஈரோடு தமிழன்பன், மு.மேத்தா, மேலாண்மை பொன்னுச்சாமி, புவியரசு, நாஞ்சில் நாடன், வெங்கடேசன், செல்வராஜ், பூமணி உட்பட யாருமே விருதை திருப்பி அளிக்கத் தயாரில்லை. ஒட்டுமொத்த இந்தியாவையும் இருண்ட கால கலாச்சாரத்தை நோக்கி மிகவும் பலவீனமான ஒரு கும்பல் அரசு இயந்திரத்தை பயன்படுத்தி நகர்த்தி கொண்டிருக்கும்போது வாய்மூடி மவுனியாக இருக்கும் தமிழ் எழுத்தாளர்களின் சிந்தனைப் போக்கை என்னவென்று சொல்ல?

இந்துத்துவா பேராதிக்கத்தை ஒட்டுமொத்த இந்திய மக்களும் எதிர்க்க வேண்டிய தருணம் இது. ஆபத்துகளின் அறிகுறி நம் எதிரே தெரிகிறது. அஹ்லாக்கின் வீட்டு கதவை தட்டிய இந்த கழுகு கூட்டம் நம் வீட்டின் வாசல் முன்பும் வர எத்தனித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்துத்துவ ஆதிக்க சக்திகளுக்கு எதிராக அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து தோளோடு தோள் சேர நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

- ஷாகுல் ஹமீது

Pin It