ஆபாச இணையதளங்களுக்கு பாஜக அரசு விதித்த தடையைப் பார்த்து நாம் கூட ஒரு கணம் ஆச்சரியப்பட்டோம். காம சூத்திரத்தையும், செளந்திர லகரியையும் கரைத்துக் குடித்த பண்டிதர்கள் நிறைந்த பாஜக அரசா இப்படியொரு தடையைக் கொண்டுவந்தது என்று. ஒரு வேளை இந்தியப் பெண்கள் மீது உண்மையிலேயே பாஜக காக்கி டவுசர்களுக்கு அக்கறை வந்துவிட்டதோ என எண்ணினோம். அப்படியெல்லாம் எங்களைப் பார்த்து நினைத்துவிடாதீர்கள்! என்ன பெரிய போர்னோ கிராபி, எல்லாம் கங்கைக்கரையிலேயே சொல்லியாகிவிட்டது! அதைத்தான் வெள்ளைக்காரன் திருடிக்கொண்டுபோய் இப்போது படமாக எடுத்துத் தள்ளுகிறான். இந்தியன் மேட் காமசூத்திராவும், செளந்திரலகரியும் இருக்கும் போது நம் ஏன் அந்நியப் படங்களை பார்க்க வேண்டும், அதுதான் தடை செய்தோம் என்றார்கள். ஆனால் பாவம்! இந்தத் தடையைக்கூட ஒரு வாரத்துக்கு மேல் நீட்டிக்க அவர்களால் முடியவில்லை.

porn 270857 ஆபாச இணையதளங்களுக்குத் தடை விதித்தவுடன் பிரச்சினை முடிந்தது என பாஜக நினைத்திருக்கலாம் ஆனால் ஏற்கெனவே காங்கிரசும், பாஜகயும் உலகமயமாக்கல் என்ற விபச்சாரியுடன் கூடிக்குலாவி நிறைய போர்னோ குழந்தைகளைப் பெற்று விட்டதால் இப்போது அவை எல்லாம் அழ ஆரம்பித்து இருக்கின்றன. இந்த ‘நடுநிசி நாய்களை’ கட்டுப்படுத்துவது என்பது இந்த கட்டமைப்பிற்கு முடியாத காரியமாக உள்ளது. அந்நிய மூலதனம் உள்ளே வரும்போது அது அனைத்து ஆபாசங்களையும் எடுத்துக்கொண்டே உள்ளே வருகின்றது. உலகம் பூராவும் இருந்து அந்நிய மூலதனம் இந்தியாவிற்குள் பாயும்போது அதனுடன் சேர்ந்தே பாய்கின்றது அதன் ஆபாசங்களும், பாலியல் வக்கிரங்களும். ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்றை தனியாக நாம் அழைத்துவர முடியாது.

ஆபாச இணையதளங்களைப் பயன்படுத்துபவர்களின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளதாம். மோடி இப்படியே அந்நிய மூலதனத்துக்காக உலகம் பூராவும் சுற்றி வந்துகொண்டே இருந்தாரேயென்றால் சீக்கிரம் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும். இந்தியாவில் நடைபெறும் பல பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு இந்த போர்னோ கிராபி தளங்களே முக்கிய ஆதாரமாக உள்ளது. அதுவும் இந்தியாவில் உலகமயமாக்கல் புகுத்தப்பட்ட 1990ல் இருந்தே பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. 1971ல் இருந்து 1991 வரை மொத்தம் 115414 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளன. 1992 முதல் 2001 வரை 154664 வழக்குகளும் 2002 முதல் 2011 வரை 198139 வழக்குகளும் பதிவாகி உள்ளன. சுதந்திரத்திற்குப் பின்பு பதிவான பாலியல் வன்முறை வழக்குகளில் 97.5 சதவீத வழக்குகள் 1991 முதல் 2011 வரை நடந்துள்ளன. எனவே அந்நிய மூலதனத்திற்கு கதவுகளைத் திறந்துவிடும்போது அதன் வழியாக அதன் அனைத்து அசிங்கங்களும் வரத்தான் செய்யும்.

அதுமட்டும் அல்லாமல் இது போன்ற போர்னோ கிராபி படங்களை வயதுவித்தியாசம் இல்லாமல் இன்று அனைவரும் பார்க்கும் சூழ்நிலை ஏற்பட்டு இருக்கின்றது. இதைப் பார்ப்பவர்கள் வெறும் பார்வையாளர்களாக மட்டுமே இருப்பார்கள் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. போர்னோ கிராபியால் தூண்டப்பட்ட மனங்கள் அதை நிஜத்தில் செய்துபார்க்க முயற்சிக்கின்றது. வாய்ப்புகள் இல்லாதபோது வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ள அனைத்து வழிகளையும் நாடுகின்றது. இதனால் பாலியல் நோய்கள் ஏற்படுவதோடு அல்லாமல் பாலியல் வன்முறைகளும் அரங்கேற்றப்படுகின்றன.

இயல்பாக நடக்கும் பாலியல் உறவுகளை போர்னோ கிராபி இயல்புக்கு மீறிய அதீதமான ஒன்றாக காட்சிப்படுத்துகின்றது. தன்னால் ஏன் அவர்களைப்போல நீண்ட நேரம் உறவு வைத்துக்கொள்ள முடியவில்லை, தன் மனைவி ஏன் அதைப்போல தன்னிடம் நடந்துகொள்ள மறுக்கின்றாள் என்பது போன்ற நிலைக்கு போர்னோ கிராபி ஒருவனைத் தள்ளுகின்றது. இந்த இடத்தைத் தான் சிவராஜ் சித்தவைத்திய சாலைகளும், நாராயண ரெட்டிகளும் பிடித்துக் கொள்கின்றார்கள். அதிலும் நாரயண ரெட்டி போன்றவர்கள் போர்னோ கிராபிகளைப் பார்ப்பது இயல்பான மனித நடவடிக்கை என்று சொல்லும் நிலைக்குச் சென்றிருக்கின்றார்கள். அடுத்தவன் உறவு வைத்துக்கொள்வதைப் பார்த்து ரசிப்பது இயல்பான மனித நடவடிக்கையாம்! வெட்கக்கேடு!

இந்திய நீதிமன்றங்களில் நடக்கும் பல குடும்ப வழக்குகள் இது சம்மந்தமாகவே உள்ளது. கணவன் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்வதாக சொல்லி பல பெண்கள் விவாகரத்து கேட்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். போர்னோ கிராபி பார்க்கும் ஆண்கள் தங்களுடைய மனைவிகளை அதுபோலவே நடக்கச்சொல்லி கட்டாயப்படுத்துகின்றார்கள். இது ஒட்டுமொத்த குடும்ப உறவுகளையே சிதைக்கும் சூழ்நிலையை உருவாக்கி இருக்கின்றது. மேலும் பெண்ணின் உடலை ஒரு நுகர்வுக்குரிய பண்டமாக போர்னோ கிராபி முன்நிறுத்துகின்றது. போர்னோ கிராபிகளின் உலகில் பெண்கள் கவர்ச்சிப் பண்டமாக விற்பனை செய்யப்படுகின்றார்கள்.

ஒரு காலத்தில் ஊருக்கு ஒதுக்குபுறமாக திரையரங்கங்களில் தலையில் முக்காடு போட்டுக்கொண்டு இது போன்ற ‘பலான’ படங்களைப் பார்க்கப்போன சமூகம் இப்போது நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் தன்னுடைய உள்ளங்கையில் வைத்துப் பார்க்கின்றது. அப்படியொரு சூழ்நிலையை உலகமயமாக்கல் ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றது. பெண்கள் மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கவேண்டும் என்றால், அழிந்துகொண்டிருக்கும் குடும்ப உறவுகளைக் காப்பாற்ற வேண்டும் என்றால், போர்னோ கிராபிகளை தளங்களைத் தடுப்பதைத் தவிர வேறு வழியில்லை. போர்னோகிராபி பார்ப்பதால் தாங்கள் எழுர்ச்சி அடைகின்றோம் என்று சொல்வதெல்லாம் மிக அபத்தமானதாகும். வக்கிரத்தின் மூலம் உணர்ச்சிகளைப் பெறுவது என்பது இயற்கையை மீறிய செயல்பாடாகும். இதை எல்லாம் தனி மனித சுதந்திரம் என்று சொல்லலாம் ஆனால் எப்பொழுதும் தனிமனித சுதந்திரம் என்பது வரம்புக்குட்பட்டதே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் இது போன்ற தளங்களை பாஜக எப்படி தடை செய்யும்!. தடை செய்தால் அவர்களது எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்தில் எப்படி சும்மா உட்கார்ந்துகொண்டு இருப்பார்கள்? நித்தியும், ஆசாரம் பாபுவும் கோபித்துக்கொள்ள மாட்டார்களா? ஜெயேந்திரன் தன்னுடைய ஆன்மீக ஆராய்ச்சியை இந்த வயதான காலத்தில் எப்படி நடத்துவார்? குறிப்பாக அந்நிய முதலீட்டாளர்களின் மனம் வருத்தப்படாதா? அதனால் மோடி அவர்களே நாம் வழக்கமாக செய்வது போல அதை உள்ளிழுத்துக் கொள்ளலாம். போர்னோ என்பது இந்து மதத்தின் ஒரு பகுதி என அறிவித்துவிடலாம். இது எல்லாம் உங்களுக்கு சொல்லியா தெரிய வேண்டும்?

- செ.கார்கி

Pin It