கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

School studentsதேசியக் கல்விக் கொள்கை – 2020

இந்தியா ஒரு தேசமன்று. புவியியல் நோக்கில் அது ஒரு துணைக்கண்டம். அரசியல் நோக்கில் பல தேசங்களை உள்ளடக்கிய ஓர் அரசுக் கட்டமைப்பு. ஆகவே இந்தியா முழுமைக்கும் ஒரே கல்விக் கொள்கை என்பதே குமுக அறிவியலுக்கும் குடியாட்சியத்துக்கும் மக்கள் நலனுக்கும் புறம்பானது. பெரும்பாலும் மொழிவழி மாநிலமாக அமைந்துள்ள ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு தேசியக் கல்விக் கொள்கைதான் இயல்பான தேவை. இந்தியா முழுமைக்குமான தேசியக் கல்விக் கொள்கை என்பதே திணிப்புதான். வெறும் மொழித் திணிப்பு மட்டுமன்று, இது ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை ஒரு தேசமாக வரையறுக்காமல் அரசமாநிலங்களின் ஒன்றியமாகவே (UNION OF STATES) வரையறுக்கிறது. மொழிவழி மாநிலங்கள் என்பன வரலாற்று நோக்கில் தேசங்களைக் குறிக்கும். இந்தியாவின் கூட்டுப் பண்பாடு (composite culture) என்பதான ஒன்றை அரசமைப்புச் சட்டமே சொல்லிச் செல்கிறது. ஓரளவு இந்தப் புரிதலுடன் அரசமைப்புச் சட்டம் வரையப்பட்ட போது கல்வி என்பது மாநில அதிகாரப் பட்டியலில்தான் சேர்க்கப்பட்டது.

அரசமைப்புச் சட்டத்தில் கல்வி

ஆனால் அப்போதே கல்வியின் சில கூறுகள் பல்வேறு பெயர்களில் ஒன்றியப் பட்டியலில் இடம்பெற்றன. சான்றாக, ஒன்றியப் பட்டியலில் இனம் 25 கடல்சார் கல்வியையும் இனம் 29 வான்பயணவியல் கல்வியையும் குறிப்பிடுகின்றன. இனம் 63 நடுவண் பல்கலைக்கழகங்களையும் தேசிய முகன்மை வாய்ந்ததென்று நாடாளுமன்றச் சட்டத்தால் அறிவிக்கப்படும் படியான வேறு எந்தக் கல்விக் கழகத்தையும் குறிப்பிடுகிறது, கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெறும் போது தேசிய முகன்மை வாய்ந்த கல்விக் கழகங்களை மட்டும் மாநில அரசுகள் கையில் ஒப்படைக்க முடியாதா?

இதே போலத்தான் ஒன்றியப் பட்டியலில் இனம் 64 முழுமையாகவோ பகுதியாகவோ இந்திய அரசின் நிதி கொண்டு நடத்தப்பெற்று, தேசிய முகன்மை வாய்ந்தவை என்று நாடாளுமன்றச் சட்டத்தால் அறிவிக்கப் பெறும் கல்விக் கழகங்களை இந்திய அரசின் அதிகாரத்துக்கு உட்படுத்துகிறது. இனம் 65 தொழில்முறை, தொழிற்பயிற்சி, தொழில்நுட்ப நிறுவனங்களை ஒன்றிய அதிகாரத்திற்கு உட்படுத்துகிறது. இனம் 70 ஒன்றிய அரசுப் பணிகள் தொடர்பானது. இந்தப் பணிகளுக்கான கல்வி, பயிற்சி, தேர்வு ஆகியவற்றில் மாநில அரசுகளுக்குப் பங்கில்லை.

இனம் 66 உயர் கல்வி ஆராய்ச்சிக் கழகங்களிலும் அறிவியல் தொழில்நுட்பக் கழகங்களிலும் தகைமை (தரம்) ஒருங்கிணைப்புக்கும் தகைமைத் தீர்வுக்குமான அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்குகிறது.

இவ்வாறு இந்திய அரசமைப்பு தொடக்கத்திலேயே கல்வித் துறையில் சில தலைக்கூறுகளை ஒன்றிய அரசின் கையில் ஒப்படைத்து மாநில அதிகாரத்தை வெட்டிக் குறுக்கிடக் காண்கிறோம். நடைமுறையளவில் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி), இந்திய மேலாண்மைக் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) போன்றவை முழுக்க முழுக்க இந்திய அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டவை. மாநில அரசுகளுக்கு இவற்றில் எள்முனையளவு அதிகாரமும் கிடையாது.

இவை நீங்கலாகக் கல்வி என்பது மாநிலப் பட்டியலில் இடம் பெற்றது. (இப்போது பொதுப்பட்டியல் என்கிற இசைவுப் பட்டியலில் இனம் 25). இந்த இனம் ”தொழில்நுட்பக் கல்வி, மருத்துவக் கல்வி, பல்கலைக் கழகங்கள் உட்படக் கல்வி” என்று சொல்கிறது. ஆனால் ஒன்றியப் பட்டியலின் 63, 64, 65, 66 இனங்களுக்கு உட்பட்டுத்தான்! இவ்வாறு மாநிலத்தின் கல்வியதிகாரத்துக்குக் கட்டுத்தளையிடப்படுகிறது. கல்வித் துறையில் மாநில அதிகாரத்துக்கு வெளிப்படையாகக் கட்டுத்தளையிடாத ஒன்றே ஒன்று வேளாண் கல்வி மட்டும்தான் (மாநிலப் பட்டியலில் இனம் 14).

நெருக்கடி நிலைக் காலம்

ஆகவே தொடக்கத்திலிருந்தே இந்திய அரசமைப்பில் கல்வி மாநில அரசின் தனிமுழு அதிகாரமாக இடம்பெறவில்லை என்பதே உண்மை. இருப்பினும் மாநில அதிகாரப் பட்டியலில் கல்வி இடம் பெற்றதைக் கோட்பாட்டளவில் ஒரு வெற்றியெனவே கருத வேண்டும். மாநிலம் மொழிவழிப்பட்டதாக உள்ள வரை தேசிய இனத்தைக் குறிக்கும் என்பதால் மாநிலத்துக்குக் கல்வியதிகாரம் என்பது அந்தந்தத் தேசிய இனத்தின் பண்பாட்டு இறைமைக்குரிய அறிந்தேற்பாகும். தேசிய இனங்களின் அடிமைமுறியான அரசமைப்பில் இவ்வாறான குடியாட்சியக் கூறுகள் இடம் பெற்றிருப்பது மையத்தில் அதிகாரக் குவிப்பை நாடிய இந்திய ஆளும் வகுப்புகளுக்கு ஏற்புடையதாக இல்லை. தலைமையமைச்சர் இந்திரா காந்தியின் பாசிச மனத்துக்கும் உவப்பாக இல்லை. நெருக்கடி நிலைக் காலம் அவருக்கான வாய்ப்பை வழங்கிற்று.

1975-77 நெருக்கடிநிலைக் காலத்தில் அரசமைப்புச் சட்டத்துக்கான 42ஆம் திருத்தத்தைக் கொண்டு இந்திய அரசமைப்பின் குடியாட்சியக் கூறுகள் ஒவ்வொன்றின் மீதும் இந்திரா கொடுந்தாக்குதல் தொடுத்தார். இந்த ஒரு திருத்தத்தால் இந்திய அரசமைப்பு போய் ‘இந்திரா அரசமைப்பு’ வந்து விட்டதாகச் சொல்லப்பட்டது. அந்த 42ஆம் திருத்தத்தைக் கொண்டுதான் கல்வி அதிகாரம் மாநிலப் பட்டியலிலிருந்து பொதுப் பட்டியல் என்கிற இசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

1977ஆம் ஆண்டு இந்திராவின் தேர்தல் தோல்விக்குப் பின் ஆட்சிக்கு வந்த மொரார்ஜி தேசாய் அரசு 42ஆம் திருத்தத்தின் வேறுசில கூறுகளை நீக்கிய போதும் கல்வியை மாநில அதிகாரப் பட்டியலுக்கு மீட்டுக் கொடுத்தார்களா என்றால் இல்லை. அடுத்து வந்த 40க்கு மேற்பட்ட ஆண்டுகளில் எந்த ஆட்சியும் இதற்கான முயற்சி கூட செய்யவில்லை. மாநில சுயாட்சிக் கொள்கை பேசும் கட்சிகள் இந்த ஆட்சிகளில் தொடர்ந்து இடம் பெற்றனவே தவிர யாரும் இதற்கான கோரிக்கை கூட எழுப்பவில்லை. மருத்துவக் கல்விக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) திணிக்கப்பட்டுத் தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய பிறகுதான், இதன் குறியீடாக அனிதா தற்கொலை நிகழ்ந்த பிறகுதான் கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலில் சேர்க்கும் கோரிக்கையே உயிர்பெற்றது.

இசைவுப் பட்டியலில் கல்வி அதிகாரம்

இசைவுப் பட்டியல் என்பதும் இறுதிநோக்கில் ஒன்றியப் பட்டியலே என்பது இப்போது மோதி அரசால் செயலளவில் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது. ஏனென்றால் மாநில அரசுதான் இந்திய அரசின் இசைவு பெற வேண்டுமே தவிர இந்திய அரசு மாநில அரசுகளின் இசைவுபெறத் தேவையில்லை என்பதே மெய்ந்நடப்பாக உள்ளது. இந்த அடிப்படையில்தான் இந்திய அரசு எந்த மாநில அரசின் இசைவும் பெறாமலே ஒரு புதிய கல்விக் கொள்கையை வகுத்து அறிவித்துள்ளது. அதுதான் தேசியக் கல்விக் கொள்கை – 2020.

கல்வி ஒன்றியப் பட்டியலில் இருந்தால் எப்படியோ அதே போலத்தான் இசைவுப் பட்டியலில் இருக்கும் போதும் இந்திய அரசு செயல்பட்டுள்ளது. இந்தக் கொள்கை செயல்வடிவம் பெற்றால் மாநில அரசுகளுக்குக் கல்வித் துறையில் எவ்வித அதிகாரமும் மிஞ்சாது. இந்திய அரசுக்கு ஏவல் செய்வதே மாநிலங்களின் கடன் என்றாகி விடும்.

தேசியக் கல்விக் கொள்கை - 2020

இந்தக் கொள்கையறிக்கையின் நல்லது கெட்டதெல்லாம் ஒருபுறமிருக்க இந்தியா முழுமைக்கும் ஒரே தேசியக் கல்விக் கொள்கை என்ற கருத்தையே நாம் மறுதலிக்க வேண்டும். நமக்குத் தேவை ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான தேசியக் கல்விக் கொள்கைகள்தாமே தவிர இந்தியாவுக்கான ஒற்றைத் தேசியக் கல்விக் கொள்கை அன்று.

ஒவ்வொரு துறையிலும் அதிகாரப் பரவலாக்கம் ஒரு குடியாட்சியக் கோரிக்கையாக வலியுறுத்தப்படும் காலத்தில், இந்தியத் தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஆனது அதிகாரத்தை அனைத்து வகையிலும் மையப்படுத்தும் முயற்சியாக உள்ளது. சான்றாகக் கல்வி தொடர்பான அனைத்து அறுதி அதிகாரத்தையும் இந்தக் கல்விக் கொள்கை ’ராஷ்ட்ரிய சிக்‌ஷா அபியான்’ (தேசியக் கல்விப் பேரவை) என்ற மைய அமைப்பின் கையில் குவிக்கிறது. இந்த அமைப்பின் தலைவராக நடுவண் அரசின் கல்வி அமைச்சர் பொறுப்பு வகிப்பார். பல்கலைக்கழக நல்கைக் குழு போன்ற கல்வித் துறை சார்ந்த மற்ற அமைப்புகள் கலைக்கப்பட்டு விடும், அல்லது அவற்றின் அதிகாரப் பல் ஒவ்வொன்றும் பிடுங்கப்பட்டு விடும். தேர்வுகளையும் கூட மையப்படுத்தும் வகையில் தேசியத் தேர்வு முகமை (NATIONAL TESTING AGENCY) அமைக்க வேண்டும் என்பது இந்தக் கல்விக் கொள்கையின் திட்டங்களில் ஒன்று.

பொறியியல், மருத்துவம், மேலாண்மை ஆகிய உயர்கல்விக்கு மட்டுமல்ல. இளங்கலைப் பட்டப் படிப்புக்கும் கூட நாடுதழுவியப் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்கிறது இந்தக் கல்விக் கொள்கை.

நீட் கொடுமை

நீட் முதலான தேர்வுகள் வெறும் நுழைவுத் தேர்வுகள் அல்ல. அவை ஒருங்கே தகுதியையும் நுழைவையும் தீர்மானிக்கும் படியானவை. இதன் பொருள் என்ன? தமிழ்நாட்டில் ஒரு நேரம் நடந்து கொண்டிருந்தவை போன்ற நுழைவுத் தேர்வுகளில் பள்ளியிறுதி மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்படும். நீட் முதலானவற்றில் அந்த மதிப்பெண்களுக்கு மதிப்பே இருக்காது. பழைய ஏற்பாட்டில் 12 ஆண்டுகள் அல்லது இந்தக் கல்விக் கொள்கை சொல்லும் 11 ஆண்டுகள் படித்த படிப்பும், அதன் வழி பெற்ற மதிப்பெண்களும் பட்டப் படிப்பில் நுழைவதற்குப் பயன்பட மாட்டா. ஒரே ஒரு தேர்வில் பெறப்படும் மதிப்பெண் மட்டுமே மாணவரின் உயர்கல்விக்கு சாவா வாழ்வா என்பதைத் தீர்மானிக்கும்.

பள்ளிக் கல்வி பல்வேறு திறப்பட்டதாய் இருக்க நீட் முதலான தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அனைத்து மாணவர்களுக்கும் ஒன்றே என்பது எவ்வளவு பெரிய அநீதி? அதிலும் இந்தியா முழுமைக்கும் ஒரே நீட் என்பது காலங்காலமாகக் கல்வியுரிமை மறுக்கப்பட்ட குமுகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களை வழிமறித்து வெளியேற்றவே பயன்படும்.

சமூக வகையிலும் கல்வி வகையிலும் பிற்பட்ட வகுப்புகள் இருப்பதை இந்திய அரசமைப்பு (உறுப்பு 15) ஏற்றுக் கொள்கிறது. இந்தக் கல்விக் கொள்கை ஏற்றுக் கொள்கிறதா? ஏற்றுக் கொள்கிறது என்றால் நீட் போன்ற வடிப்பான்களை அனைத்தளாவியன ஆக்குவது இந்தப் பிற்பட்ட வகுப்பு மாணவர்களின் நலனில் எவ்வாறு தாக்கங்கொள்ளும் என்பதை இந்த அறிக்கை கணக்கில் கொண்டதற்கான அகச் சான்று ஏதுமில்லை. சமூக நீதி, சமத்துவம் என்று ஒப்புக்குச் சொல்லிக் கொள்ளும் இந்தக் கல்விக் கொள்கையின் திட்டங்கள் சமூக நீதியையும் சமத்துவத்தையும் ஆழக் குழி தோண்டிப் புதைக்க முற்படுகின்றன என்பதே மெய்.

மாநில உரிமைகள் என்ற மங்கல வழக்கில் மறைந்துள்ள தேசிய இன உரிமைகளுக்கும் சமூக நீதிக்குமான இடையுறவுக்கும் எதிர்மறைச் சான்றாக இந்தக் கல்விக் கொள்கை அமைந்துள்ளது. மாநில உரிமைகள் தாக்குறும் போதெல்லாம் சமூக நீதி தாக்குறுகின்றது. சமூக நீதி தாக்குறும் போதெல்லாம் மாநில உரிமைகள் தாக்குறுகின்றன.

கல்வி மொழிச் சிக்கல்

எந்தவொரு கல்விக் கொள்கையிலும் கல்வி மொழி பற்றிய நிலைப்பாட்டுக்கு இன்றியமையாப் பங்குண்டு. இதுதான் எமது கல்வி மொழிக் கொள்கை என்று தெளிவாகப் பறைசாற்றாத ஒரு கல்விக் கொள்கை எப்படிக் கல்விக் கொள்கையாக இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சமச்சீர் கல்வியிலும் ஒரு தெளிவான கல்வி மொழிக் கொள்கை இல்லை என்பதுதான் மிகப் பெரிய ஊனம்! ஆங்கிலவழிக் கல்வி, தமிழ்வழிக் கல்வி இரண்டையும் வைத்துக் கொண்டு இரண்டுக்குமிடையே சமச்சீர்மை எப்படி வாழும்? தமிழ்நாட்டில் தமிழ் படிக்காமலே பள்ளிக் கல்வியும் அதற்கு மேல் பட்டப் படிப்பும் முடிக்க இயலும் என்ற அவலநிலையை மாற்றிப் பள்ளிக் கல்வியளவில் – மாநிலப் பள்ளிக் கல்வி வாரியத்துக்கு உட்பட்ட வரை மட்டும் – தமிழைக் கட்டாயப் பயில்மொழி ஆக்கியது மட்டும்தான் சமச்சீர் கல்வியின் ஒரே ஒரு சமச் சீர்மையாக அமைந்தது. இந்தச் சமச்சீர்மையையும் கூட தமிழ்நாட்டில் இயங்கும் நடுவண் பள்ளிகளுக்கும் மைய வாரியப் பள்ளிகளுக்கும் விரிவாக்கும் அரசியல் மனத்திட்பம் தமிழக அரசுக்கு இல்லாது போயிற்று.

தரம் எனப்படும் கல்வித் தகைமைக்கும் பயிற்றுமொழிக்குமான உறவைப் புரிந்து உள்வாங்கிக் கொள்ளாத கல்விக் கொள்கையால் கல்வித் துறையில் எந்த முன்னேற்றமும் காண முடியாது.

கல்வி மொழி என்பதென்ன? முதலாவதாக அது பயிற்று மொழியைக் குறிக்கும். பொதுவாக அது தாய்மொழியாகத்தான் இருக்க வேண்டும். தாய்மொழி என்பது ஒவ்வொரு தேசிய இனத்தின் குமுகத் தாய்மொழியும் ஆகும். அதாவது தேசிய மொழி!

தென் ஆப்பிரிக்கா, இசுரேல்

விதிவிலக்கான சில வரலாற்று சூழல்களில் தாய்மொழிக்கு மாறாக வேற்றுமொழி ஒன்று பொதுமொழியாக அமையும் போது அதையே கல்வி மொழியாகவும் கொள்ள நேரிடலாம். தென் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்கள் இனஒதுக்கலை எதிர்த்து ஒரு தேசமாக ஒன்றுபடும் வரலாற்றுத் தேவை நெருக்கியதால் இரவல் மொழியான ஆங்கிலத்தையே பொதுமொழியாக்கிக் கொண்டார்கள். அதுவே அவர்களின் போராட்ட அணித் திரட்சிக்கான ஊடகமும் கல்விமொழியும் ஆயிற்று. தென்னாப்பிரிக்க வரலாற்றில் ஆகப்பெரிய மொழிப் போராட்டமான சொவெட்டோ எழுச்சி ஆப்பிரிக்க மாணவர்கள் மீது ஒரு பிரிவு வெள்ளையரின் மொழியான ஆப்பிரிக்கான்ஸ் மொழித் திணிப்பை எதிர்த்து நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இசுரேலிய யூதர்கள் வெவ்வேறு மொழிகொண்ட வெவ்வேறு தேசங்களிலிருந்து வந்தவர்கள் என்றாலும் தமது யூதத் தேசியத்துக்கான பொதுமொழியாக எபிரேயத்தை (Hebrew) மீட்டு வளர்த்துள்ளார்கள். அவர்கள் ஆட்சி மொழியாகவும் கல்வி மொழியாகவும் எபிரேயத்தைக் கொண்டிருப்பினும் மக்கள் தொகையில் 15 விழுக்காடான அரேபியர்களுக்கு அரேபிய மொழியிலேயே கல்வி பெறும் உரிமை உள்ளது. இசுரேலின் இந்திய நண்பர்களுக்கு இது தெரியுமா?

கல்வி மொழியைப் பொறுத்த வரை தாய்மொழியே கல்வி மொழியாக இருக்க வேண்டும், அதாவது அதுவே அனைத்து நிலைகளிலும் பயிற்று மொழியாகவும், முதல் பயில்மொழியாகவும் இருக்க வேண்டும் பயிற்றுமொழி வேறாகவும் முதல் பயில்மொழி வேறாகவும் இருக்க முடியாது. முதல் பயில்மொழி, இரண்டாம் பயில்மொழி என்பது வெறும் வரிசை எண் தொடர்பான சிக்கலன்று. அது பயில்முறையிலான வேறுபாட்டைக் குறிக்கும். முதல் பயில்மொழியை இயற்கை முறையிலும் இரண்டாம் பயில்மொழியை மொழிமாற்ற முறையிலும் கற்பதுதான் மொழிக் கல்வியின் அறிவியல்.

தாய்மொழிக் கல்வியின் வலிமை

இந்திய அரசமைப்புச் சட்டம் ஆட்சி மொழி (அலுவல் மொழி), நீதிமன்ற மொழி, சட்ட மொழி பற்றியெல்லாம் பேசிய போதிலும் குறிப்பாகக் கல்விமொழி பற்றி எதுவும் சொல்லவில்லை. இந்திய அரசோ மாநில அரசுகளோ தமக்கென்று ஒரு கல்வி மொழிக் கொள்கையை இது வரை அறிவித்ததும் இல்லை.

அனைத்து வகையிலும் அயல் மொழியின் இடத்தில் தாய் மொழியைக் கல்வி மொழியாகக் கொள்வது சமூக நீதிக்கான பெரும்பாய்ச்சலாக அமையும். அதாவது பார்ப்பன-பனியா-பெருமுதலாளிய ஆளும் வகுப்புகள் முனைந்து கடைப்பிடிக்கும் சமூக அநீதிக்குப் பெரும் அறைகூவலாகி விடும். இந்தியாவில் அயலாட்சியால் நேரிட்ட ஆகப்பெரும் தீங்கு நாம் நமது தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்ததுதான் என்று ’தேசத் தந்தை’யே கூறியிருப்பினும் இந்த முக்கால் நூற்றாண்டுக்கும் மேலான காலத்தில் தாய்மொழிக் கல்வி தொடர்பான உறுதிப்பாடு இல்லாமல் போனதற்குப் பின்னால் இருப்பது ஆளும் வகுப்புகளின் ஊன்றிய தன்னலன்தானே தவிர வெறும் கருத்துத் தெளிவின்மையன்று. தாய்மொழிக் கல்வியா அல்லவா? என்பது வெறும் கருத்துப் போராட்டமன்று, அது வகுப்புப் போராட்டத்தின் (வர்க்கப் போராட்டத்தின்) ஒரு வெளிப்பாடே ஆகும். தாய்மொழிக் கல்வி இல்லாமல் இட ஒதுக்கீட்டைக் கொண்டே சமூக நீதியை அடையும் முயற்சி ஒற்றைக் காலால் நொண்டியடிப்பதே ஆகும்.

சரி. தாய்மொழிக் கல்வி பற்றி தேசியக் கல்விக் கொள்கை -- 2020 என்ன சொல்கிறது? இஸ்ரோ என்னும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான கல்விக் குழுவினர் சென்ற ஆண்டு விரிவான அறிக்கை தந்த போதே அதில் தாய்மொழிக் கல்வியின் தேவை குறித்துப் பேசியிருந்தனர்: ஆங்கிலக் கல்விதான் அறிவுக்கு வழி என்று எண்ணியிருந்தோம், ஆனால் பல நாடுகளும் தாய்மொழிக் கல்வியால் முன்னேறியிருக்கக் கண்டோம் என்று குறிப்பிட்டிருந்தனர். நல்ல கருத்து! சரியான கருத்து! ஆனால் இதனைச் செயலாக்கம் செய்ய வேண்டுமே, அதற்கு வழி சொன்னார்களா?

முதலாவதாக இவர்கள் உண்மையான கல்வியாளர்களாக இருப்பின் தாய்மொழிக் கல்விதான் முன்னேற்றத்துக்கு வழி என்பது ஏற்கெனவே இவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். பல நாடுகளையும் பார்த்துப் புதிய கண்டுபிடிப்பாக ”யுரேகா!” என்று கூவாத குறையாக இந்த உண்மையை அறிக்கையிட வேண்டிய தேவையே ஏற்பட்டிருக்காது. போகட்டும் இப்போதாவது தெரிந்து கொண்டார்களே என்று நிம்மதி அடையலாம்.

இயன்றவிடத்து, கூடுமான வரை நஞ்சு

ஆனால் இந்திய அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற்றுள்ள இந்தக் கொள்கையறிக்கை என்ன சொல்கிறது? பயிற்றுமொழியைப் பொறுத்து ஐந்தாம் வகுப்பு வரை ”கூடுமான வரை” தாய்மொழியைப் பயன்படுத்த விருப்பம் தெரிவிக்கிறது. ஏன் ஐந்தாம் வகுப்பு வரை? ஏன் ஆறாம் வகுப்பில் கூடாது? பள்ளியிறுதி வரை, கல்லூரி இறுதி வரை, ஏன் எல்லா நிலைகளிலும் தாய்மொழியே பயிற்றுமொழியாக இருக்கக் கூடாது? ஐந்தாம் வகுப்பு வரை என்று தேசியக் கல்விக் கொள்கை இடுவதும் கூட பிச்சைதான், இது கட்டளையில்லை, கட்டாயமில்லை. Wherever possible என்பதைத் தமிழில் இயன்றவிடத்து எனலாம். அல்லது கூடுமான வரை எனலாம். ஒரு குடம் பாலில் ஒரு துளி நஞ்சு போன்றதே wherever possible என்னும் இந்த இரு சொற்கள்.

இப்போது ஆங்கிலத்தைப் பயிற்றுமொழியாகக் கொண்டு நடத்தப்படும் எந்தக் கல்வி நிறுவனமாவது அல்லது எந்தக் கல்வி வாரியமாவது இனிமேல் தாய்மொழியைப் பயிற்றுமொழியாக ஏற்றுக் கொள்வதற்கு இந்தக் கல்விக் கொள்கையால் வழிபிறக்குமா? கேந்திரிய வித்யாலயா எனப்படும் நடுவணரசுப் பள்ளிகள், சிபிஎஸ்இ எனப்படும் மையக் கல்வி வாரியப் பள்ளிகள், ஐஎஸ்சி எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் படிப்புகள், மாநில வாரியத்துக்குட்பட்ட தனியார் பள்ளிகள், திமுக, அஇஅதிமுக ஆட்சியாளர்கள் நிகழ்த்திய ஆங்கிலத் திணிப்பால் சகட்டுமேனிக்குச் சீரழிக்கப்பட்ட தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகள்… இவற்றில் எந்தப் பள்ளிகள் தேசியக் கல்விக் கொள்கையின் ’விருப்பத்தை’ மதித்துத் தாய்மொழியைப் பயிற்றுமொழியாக்க முன்வரப் போகின்றன? எதுவும் இல்லை.

இந்திய மொழிகளின் அழிவு பற்றி இந்தக் கல்விக் கொள்கை ஒரு கட்டத்தில் பேசுகிறது (22.5). வரிவடிவமற்ற மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்ற 22 மொழிகளும் கூட இடர்ப்பாடுகளை சந்திக்கின்றன (22.6). தாய்மொழியே கல்வி மொழியாக இல்லாமற் போனால் அது மெல்ல மெல்லக் காணாமற்போகும்தான். தமிழே இந்த ஆபத்தைத்தான் எதிர்நோக்கியுள்ளது. ஆனால் தாய்மொழியைக் கல்வி மொழியாக வலியுறுத்தாத ஒரு கல்விக் கொள்கை மொழிகளின் அழிவு பற்றி வருந்துவதால் என்ன பயன்?

இந்தக் கல்விக் கொள்கை தாய்மொழிக் கல்விக்கு வழி செய்கிறது என்பதெல்லாம் வெறும் பசப்பு! இந்தக் கல்விக் கொள்கை மெய்யாகவே தாய்மொழிக் கல்விக்கு அறுதியாகவும் உறுதியாகவும் வழி செய்யுமானால், மற்ற எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அந்த ஒன்றைத் தயங்காமல் போற்றலாம். ஆனால் இந்தக் கல்விக் கொள்கையும் சரி, இந்தக் கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ள இந்திய அரசும் சரி, இந்தக் கல்விக் கொள்கையை எதிர்ப்பதாகச் சொல்லும் தமிழக அரசும் சரி தாய்மொழிக் கல்வியில் கொள்கை உறுதிப்பாடில்லாதவை, சரியாகச் சொன்னால் தாய்மொழிக் கல்வியை வீழ்த்தும் உறுதி கொண்டவை என்பதே மெய்.

அண்மைய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் மாநகராட்சி உள்ளிட்ட அரசுப் பள்ளிகளிலேயே மழலைநிலை தொடங்கி ஆங்கிலவழிதான் கோலோச்சுகிறது.

இந்தி எதிர்ப்பின் பெயரால் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதாகச் சொல்லும் தமிழக அரசு தமிழ்நாட்டிலுள்ள நடுவண் பள்ளிகளிலும் சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இந்திக் கல்விக்கு ஒருபோதும் எதிர்ப்புத் தெரிவித்ததில்லை என்பது மட்டுமல்ல, மாநில வாரியத்துக்குட்பட்ட தனியார் பள்ளிகளில் இந்தி கட்டாயமாகக் கற்றுத் தரப்படுவதையும் ஏற்றுக்கொண்டுதான் உள்ளது.

இந்தத் தேசியக் கல்விக் கொள்கையின் வழியாக மென்மேலும் உறுதி செய்யப்படும் அதிகார மையப்பாடு தாய்மொழிக் கல்வியை அறவே ஒழித்துக்கட்டி விடும். ஏற்கெனவே தாய்மொழி மறுப்புக் கொள்கை அனைவர்க்கும் கல்வி என்ற குறிக்கோளை மறுப்பதற்கே பயன்பட்டு வருகிறது.

ஆங்கிலத் திணிப்பு

பயிற்றுமொழி பற்றிய உறுதியின்மையோடு சேர்ந்து வருவது இரண்டாம் பயில்மொழி பற்றிய குழப்பம். இப்போதே தேர்ந்தெடுக்கும் வாய்ப்பில்லாத இரண்டாம் பயில்மொழியாக ஆங்கிலம் திணிக்கப்படுகிறது. இரண்டாம் பயில்மொழி ஒன்றின் தேவையை நாம் மறுக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்துக்கு மாற்றாக வேறு அயல்மொழி ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லாததால் இது ஆங்கிலத் திணிப்பாகிறது. எந்த வகுப்பு வரை தாய்மொழி மட்டும் பயில வேண்டும், எந்த வகுப்பிலிருந்து இரண்டாம் பயில்மொழியாக ஆங்கிலம் அல்லது வேறு அயல்மொழியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வரையறை ஏதும் இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெறவில்லை. இந்தியாவில் ஆங்கிலத் திணிப்பால் ஏற்பட்டுள்ள கல்வி மறுப்பையும் சமூக நீதி மறுப்பையும் ஆங்கில மேதாவிகளான கஸ்தூரிரங்கன் வகையறா உணர்ந்ததாகவே தெரியவில்லை.

பயிற்றுமொழியாகவும் ஒற்றை இரண்டாம் பயில்மொழியாகவும் ஆங்கிலம் திணிக்கப்படுவது போதாதென்று மூன்றாம் பயில்மொழியாக ”இந்தி அல்லது பிற மொழி” என்று சொல்லிக் கொண்டே செயலளவில் இந்தியைத் திணிப்பதற்கு இந்த அறிக்கை வழிசெய்கிறது. இந்தியையும் செம்மொழிகளில் ஒன்று என்ற பெயரில் சமற்கிருதத்தையும் கல்விமுறைக்குள் மெல்ல நுழைக்கும் தந்திரம் காணப்படுகிறது. இது அனைவர்க்கும் கல்வி என்ற குறிக்கோளை மென்மேலும் விலக்கி நிறுத்தி எட்டாக் கனி ஆக்குவதாகத்தான் முடியும் என்பதற்குப் பெரிய விளக்கம் தேவையில்லை.

மொழிக் கல்வியும் அறிவுக் கல்வியும்

அறிவுக் கல்விக்கும் மொழிக் கல்விக்குமான உறவைப் புரிந்து கொள்வதில் தேசியக் கல்விக் கொள்கை-2020 பெரிதும் குழம்பிப் போயுள்ளது. கூடுதலான மொழிகள் தெரிந்தால் கூடுதல் அறிவாளி என்ற கொச்சையான சமன்பாடு இந்தக் கொள்கை வகுத்த பெருமக்களை ஆட்டிப் படைப்பது போல் தெரிகிறது (பத்தி 4.11). கல்விக்கூடங்களை அறிவுத் துறைகளில் தேர்ச்சி தரும் நிலையங்கள் என்ற நிலையிலிருந்து பன்மொழிப் பயிற்சிக் கூடங்களாக மாற்றத் துடிக்கின்றனர்.

நம் மாணவர்களில் பன்மொழிக் கல்வி வேட்கை கொண்ட சிலருக்கு அதற்கான கல்வி பெறும் வாய்ப்பும் கட்டமைப்பு வசதியும் இருக்க வேண்டும்தான். ஆனால் அதற்காகப் பொதுநிலைக் கல்வி நிறுவனங்கள் அனைத்தையும் பன்மொழிப் பயிற்சி நிறுவனங்களாக மாற்ற நினைப்பது தனிமனித வளர்ச்சிக்கோ குமுக வளர்ச்சிக்கோ பயன்படாது.

குழந்தைப் பருவத்திலேயே பல மொழிகளையும் கற்கும் திறன் உண்டு என்பது இந்தப் பன்மொழிக் கல்வி ஆசைக்குச் சொல்லப்படும் விளக்கம். திறன் உண்டா இல்லையா என்பதன்று, தேவை உண்டா என்பதே வினா. பொதுவான தேவை இல்லை என்பதுதான் சமூக நீதி போற்றும் கல்வியாளர்தம் முடிவு.

மூன்றாம் வகுப்பிலும் ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் தேர்வு நடத்த வேண்டும் என்கிறது தேசியக் கல்விக் கொள்கை - 2020 அறிக்கை. பலரும் சொல்வது போல் பொதுநிலைத் தேர்வு (public examination) என்று அறிக்கை குறிப்பிடவில்லை. பள்ளித் தேர்வு என்றுதான் சொல்கிறது. (அறிக்கை, பத்தி 4.40). இதற்கு மாறாக 10, 12ஆம் வகுப்புகளில் இப்போதிருப்பது போல் வாரியத் தேர்வுகள் (Board Examinations) நடத்தப்படும் என்று சொல்வதன் மூலம் 3, 5, 8ஆம் வகுப்புத் தேர்வுகளும் 10. 12ஆம் வகுப்புத் தேர்வுகளும் வேறுபடுத்திக் காட்டப்படுகின்றன. ஆனால் 3, 5, 8ஆம் வகுப்புத் தேர்வுகளை உரிய ஆணையம் (appropriate authority) நடத்தும் என்று சொல்வதன் பொருள் என்ன? இந்தத் தேர்வுகளில் தடைப்படுத்தல் (detention) இருக்குமா? என்பதும் தெளிவாக்கப்படவில்லை. இப்போதிருக்கும் முறைதான் தொடரும் என்று புரிந்து கொள்வதானால் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட நடைமுறைகளை இந்தத் தேசியக் கல்விக் கொள்கை – 2020 ஏற்றுக் கொள்கிறதா? இந்தக் கல்விக் கொள்கையின் ஒட்டுமொத்தப் பகைப்புலத்தில் வைத்துப் பார்க்கும் போது 3, 5, 8ஆம் வகுப்புத் தேர்வுகளும் முதல் தலைமுறையாகக் கல்வி நிழலில் ஒதுங்கும் சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களை வடிகட்டியோ வடிகட்டாமலே அச்சப்படுத்தியோ இடைநிற்க ஊக்கப்படுத்தும் விளைவையே கொண்டிருக்கும் என்று அஞ்சுவதற்கு இடமுண்டு.

தேர்வென் செய்யும்?

பள்ளிக் கல்வி முடிந்து 11ஆம் வகுப்பில் வாரியத் தேர்வில் பெறுகிற வெற்றி – இந்தத் தேசியக் கல்விக் கொள்கையின் படி - பல்கலைக்கழக நுழைவுக்கான தகுதியாக (eligibility) மதிக்கப்படாது. பழைய 11ஆம் வகுப்புச் சான்றிதழில் (SSLC – Secondary School Leave Certificate) பல்கலைக் கழகப் புதுமுகப் படிப்புக்கு (Pre-University Course) இடைக்காலத் தேர்வு பெற்றதாகச் சான்றளிப்பார்கள். மேனிலைக் கல்வி (+2) வந்த பிறகும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் கல்லூரிக் கல்வியில் நுழைவதற்கான தகுதியை வழங்கும். இடைக்காலத்தில் மருத்துவப் படிப்புக்கு நுழைவுத் தேர்வு வைக்கப்பட்ட போதும் +2 மதிப்பெண்களும் சேர்த்தே கணக்கிடப்பட்டன.

வேறுவேறு வாரியங்களில் வேறுவேறு கல்வித் திட்டங்களில் அல்லது வேறுவேறு பாடத் திட்டங்களில் பள்ளிக் கல்வி முடித்த மாணவர்களுக்கு ஒரே அடிப்படையில் கேள்வித்தாள் கொடுத்து நுழைவுத் தேர்வு நடத்துவது பெரும் அநீதி அல்லவா? இதை நாம் கற்பனையாகச் சொல்லவில்லை. நீட் (NEET) என்ற பெயரே இது வெறும் நுழைவுத் தேர்வு அன்று என்பதை உணர்த்தும். National Eligibility and Entrance Test தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு என்பதில் ’தேசிய’ என்பது இது நாடு முழுமைக்குமானது என்பதைக் குறிக்கும். அதாவது மாநில வேறுபாடுகளோ கல்வி வாரிய வேறுபாடுகளோ ஒரு பொருட்டே அன்று. ’தகுதி’ என்பதன் பொருள் பள்ளிப் படிப்பை நிறைவு செய்ததால் பெற்ற தகுதிக்கு மதிப்பில்லை, இனிதான் இந்தத் தேர்வின் வழியாகத் தகுதி பெற வேண்டும். இந்தத் தகுதிக்கு மேல் கூடுதல் மதிப்பெண் பெறும் போட்டியில்தான் ’நுழைவு’ பெற வேண்டும்.

வர்ண தர்மமும் வர்க்க தர்மமும்

இந்தக் கொடிய ’நீட்’தான் அனிதாவின் கனவுகளையும் உயிரையும் மாய்த்த கயிறு என்பதை எப்படி மறப்போம்? இப்போது நீட் எல்லாவற்றுக்கும் வர வேண்டும் என்பது இந்தத் தேசியக் கல்விக் கொள்கையின் திட்டம். மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர முடியா விட்டாலும் இளங்கலைப் படிப்பிலாவது பட்டம் பெறும் வாய்ப்பையும் சிதைத்து வெளியேற்றுவதுதான் இதன் கொடிய விளைவாக இருக்கும். படாத பாடுபட்டுப் பல்கலைக்கழகப் படிப்பில் சேர்ந்த பிறகும் நான்காண்டுப் பட்டப் படிப்பில் எப்போது வேண்டுமானாலும் வெளியேறிச் செல்லும் வழியைத் திறந்து வைக்கிறது இந்தக் கொள்கை. இடைநிற்றலைப் பல்வேறு நிலைகளிலும் ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இடைநிற்றலை ஒழிப்பதற்கு வழி தேடுவதற்கு மாறாக இடைநிற்றலை முறைப்படுத்தி இடைநிற்போரை கூலிப் பட்டாளத்தில் கொண்டுசேர்க்கும் நோக்கமும் காணப்படுகிறது.

வெவ்வேறு பேரிலான நவோதயா பள்ளிகளை வலுவாக்கும் முன்மொழிவு ஏராளமான அரசுப் பள்ளிகளும் உள்ளாட்சிப் பள்ளிகளும் மூடப்பட்டு ஏராளமான எளிய குழந்தைகளுக்குக் கல்வி மறுக்கப்படுவதில்தான் போய் முடியும்.

மழலை நிலையிலிருந்தே தொழிற்கல்வி, 13 வயதிலிருந்தே தொழிற்பயிற்சி என்பதை இந்த நோக்கத்துடன் இணைத்தே பார்க்க வேண்டியுள்ளது. இதனை நேர்ப் பொருளில் குலக்கல்வி என்று சொல்ல முடியா விட்டாலும் சாதியம் கோலோச்சும் வரை அப்படி ஒரு விளைவு இருக்கவே செய்யும். உள்ளூர்த் தொழில்கள் என்ற குறிப்பில் தச்சு வேலை, மண்பாண்டம் செய்தல், பாத்திர வேலை, தோட்ட வேலை என்ற வரிசையில் சலவைத் தொழிலையும் முடிதிருத்தத்தையும் துப்புரவுப் பணியையும் இடுகாட்டுப் பணியையும் சேர்க்காமல் விட்டதால் மொத்ததில் குலக்கல்வி முறைக்குத் தரும் ஊக்கத்தை மறைத்து விட முடியாது.

வர்ணாசிரம மீட்சியில் ஆர்எஸ்எஸ்-க்கும் அம்பானி அதானிகளுக்கும் நுட்பமான வேறுபாடு இருக்கவே செய்யும். இந்துத்துவச் சார்பையும் ஒட்டுறவு முதலியத்தின் தேவைகளையும் – அல்லது வர்ண தர்மத்தையும் வர்க்க தர்மத்தையும் - இணக்கப்படுத்தும் வழிமுறை இந்தக் கல்விக் கொள்கையின் சாரமாக அமையும். காங்கிரசாட்சியில் கொண்டுவரப்பட்ட நவோதயா கல்வியின் சாரமும் இதுவே. அதையே இப்போது மேலும் பரவலாக்க முயல்கின்றனர்.

இந்த ஏற்பாடு முழுவதும் வரலாற்று வழியில் கல்வியுரிமை மறுக்கப்பட்ட மக்களின் மெல்லத் திறந்த எண்ணும் எழுத்துமான அறிவுக்கண்களை அவிப்பதாகவே அமையும். இது சமூகநீதிக்குத் தீராக் கேடு செய்வதோடு, ஏராளமான பிஞ்சுக் கைகளை உழைப்பங்காடியில் அள்ளி வீசி, சேம உழைப்புப் பட்டாளத்தின் அணிகளைப் பெருகச் செய்து, உழைப்புத் திறனின் விலையை வீழ்த்தித் தொழிலாளர் உரிமைகளுக்கு வேட்டு வைத்து விடும்.

பள்ளிக் கூடங்கள் கற்றலில் இனிமை கூட்டிப் பல்துறை அறிவு புகட்டும் கல்விச் சோலைகளாக இருக்க விடாமல் சர்க்கஸ் விலங்குப் பயிற்சிக் கூடங்களைப் போல் நீட் பயிற்சி மையங்களாக மாற்றப்படுவதற்கே இந்தக் கல்விக் கொள்கை வழிகோலும். பயிற்சி மையங்களை ஒழிப்பதாகச் சொல்லிக் கொண்டே எல்லாக் கல்விக் கூடங்களையும் பயிற்சி மையங்களாக மாற்றி விடும்.

கல்வியை அடிப்படை உரிமை என்று அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்த பின்னும் கல்வி பெறுவது மக்கள் உரிமை, கல்வி கொடுப்பது அரசின் கடமை என்ற குறிக்கோளை அடைய விடாமல் செய்து கொண்டிருக்கும் கல்வி-வணிகமயத்துக்குத் தீர்வு காணும் முயற்சி கூட இந்தத் தேசியக் கல்விக் கொள்கையில் காணப்படவில்லை. சொல்லப் போனால் அது இந்த வணிகமயத்தைப் பல்கிப் பெருகச் செய்யவே வழிகோலுகிறது. மென்மேலும் தனியார் கல்லூரிகளைப் பல்கலைக்கழக இணைப்பிலிருந்து பிரித்துத் தன்னாட்சிக் கல்லூரிகளாகக் கட்டவிழ்த்து விடுவதும் கல்வித் துறையில் ஈட்ட வெறியுடன் வணிகமயம் மண்டிப் பெருகவே வழிசெய்யும்.

கல்விக் கொள்ளையா? மக்கள் சேவையா?

அனைவர்க்கும் கல்வி என்ற உயரிய குறிக்கோளை அடைய அருகாமைப் பள்ளிகள் அல்லது அண்டைப் புறப்பள்ளிகள் (Neighbourhood Schools) என்ற கருத்தைச் சமூக நீதிக் கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். இந்தக் கல்விக் கொள்கையோ இதற்கு நேர் எதிர்த் திசையில் திட்டமிடுகிறது. முழுவிரிவான பள்ளி வளாகங்களைத் தோற்றுவிப்பது என்ற திட்டம் ஏழை எளிய மாணவர்களுக்கும் ஊர்ப்புற மாணவர்களுக்கும் எட்டாத் தொலைவில் கல்வியை வைத்து விடும். இப்போதிருக்கும் தனியார் கல்வி நிறுவனங்களின் நடைமுறையை வைத்துப் பார்த்தால் மேட்டுக்குடியினருக்கு மட்டுமே கல்வி கட்டுப்படியாகும் என்ற நிலையைத் தோற்றுவித்து விடும்.

அரசுப் பள்ளிகளைத் தகைமையற்றவையாகக் கருதும் மனப்போக்கு அவற்றைத் தனியார் பள்ளிகளுக்குக் கீழ்ப்பட்டவையாக்கி விடும் (7.10). ஏனைய துறைகளில் போலவே கல்வித் துறையிலும் பொதுத் துறையை முடக்கித் தனியார் துறையை வளப்படுத்துவதே இதனால் கண்ட பலனாய் இருக்கும். இது மாணவர் நலனுக்கும் மக்கள் நலனுக்கும் புறம்பானது மட்டுமன்று, ஆசிரியர்களைக் கொத்தடிமைகளாக்கி விடும்படியானது.

ஆசிரியர்களுக்குப் பதவியுயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றுக்கு அவர்கள் பணி செய்த காலத்தைக் கணக்கில் கொள்ளாமல் அவர்களின் செயல்பாடு பற்றிய மதிப்பீட்டையே அடிப்படையாகக் கொள்வது (பத்தி 5.20) ஆசிரியர்களை ஆட்சியாளர்களின் தயவில் நிறுத்தி விடும். அடிமைகளைப் பழக்கும் அடிமைகளாகவே ஆசிரியர்களை மாற்றும் முயற்சி இது

மாணவர்களைக் கசக்கி ஆசிரியர்களைப் பிழிந்து பெற்றோரை ஒட்டக் கறக்கும் கல்வியின் பெயரிலான கொள்ளை நிறுவனங்களைப் பற்றிய இந்தக் கல்விக் கொள்கையின் பார்வை என்ன தெரியுமா? இவை செய்யும் வேலைக்குப் பெயர் “philanthropy”! பரோபகாரம்! லோகோபகாரம்! மக்கள்சேவை! அரசும் இந்தக் கல்விச் சேவைக் கழகங்களும் சேர்ந்து இந்தக் கல்விக் கொள்கையைச் செயலாக்கப் போகின்றார்களாம்! கல்வியைப் பரவலாக்குவது, சமூக நீதியையும் சமத்துவத்தையும் மெய்ப்படச் செய்வது இவைதாம் இந்தக் கல்விக் கொள்கையின் ஊடாக அடைய விரும்பும் இலக்குகள் என்றால் முதலில் கல்வித் துறையை இந்தப் பகற்கொள்ளையர்களின் பிடியிலிருந்து மீட்க வேண்டும். இந்த எண்ணமே இல்லையென்றால், பகற் கொள்ளையர்களுக்குப் மலர்ப் பாதை அமைப்பதே இந்தக் கல்விக் கொள்கையின் மெய்ந்நோக்கம் என்று குற்றஞ்சாட்டுகிறோம்.

இந்திய மரபும் சமற்கிருதப் பெருமையும்

கல்விக்கு அறிவியல் நோக்கு போலவே அறவியல் நோக்கும் வேண்டும் என்பது குமுக நலன் நாடும் கல்வியாளர்கள் எப்போதும் வலியுறுத்தி வருவது. இந்தத் தேசியக் கல்விக் கொள்கை - 2020 அறிவியல் நோக்கும் அறவியல் நோக்கும் அற்றது என்பதற்கு அது விதந்தோதும் இந்திய மரபும் சமற்கிருத நாட்டமுமே போதிய சான்றுகளாக உள்ளன. இந்தியாவில் எந்தவொரு கல்விக் கொள்கையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெரும்பான்மை மக்களைக் கல்வியுரிமை அற்றவர்களாக்கிய பார்ப்பனியப் பண்பாட்டைக் கணக்கில் கொண்டு அதிலிருந்து மீண்டு வருவதற்கு வழிகாட்ட வேண்டும். மாறாக இந்தத் தேசியக் கல்விக் கொள்கை இந்திய மரபு என்றும் பாரதப் பெருமை என்றும் அதே பார்ப்பனியத்தைக் கொண்டாடுகிறது. அந்தப் பார்ப்பனியத்தின் ஊர்தியாக வட மொழியை அரியணையேற்ற ஆயிரம் வழி தேடுகிறது. சாதிய எதிர்ப்பில்லாமல் சமூக நீதி சமத்துவம் என்பதெல்லாம் வெறும் பசப்பு!

இந்தியாவில் உயர் கல்வித் துறையில் கடந்த காலத்தில் இடஒதுக்கீட்டின் வகிபாகம் என்ன? இட ஒதுக்கீட்டு முறையை உறுதிப்படுத்தவும் விரிவாக்கவும் இந்தக் கல்விக் கொள்கையின் பரிந்துரை என்ன? இந்த வினாக்களை முன்னிறுத்தி விடை தேடும் முயற்சியே இல்லை. இது சமூகநீதியை மௌனத்தால் கொல்லும் திட்டம் என்றே கருத வேண்டியுள்ளது.

சமற்கிருதம் ஒற்றுமைக்கான மொழி என்றும், முதன்மைச் செம்மொழி என்றும் போற்றப்படுவதும், எட்டாம் வகுப்பிலிருந்து சமற்கிருதம் படிப்பதற்கு மாநில அரசுகள் சிறப்பு நிதியளிக்கச் சொல்வதும், கல்விச் செயற்பாட்டாளர்கள், தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் சிந்தனைப் பரப்புநர்களை முறைசார் கல்விக் கழகங்களுக்குள் நுழைய விடும் திட்டமும், அற நிறுவனங்களுடன் அரசுக் கூட்டாண்மை என்ற பெயரில் இந்துத்துவ நிறுவனங்களைக் கல்வியமைப்புக்குள் கலக்கும் ஆர்வமும் தேசியக் கல்விக் கொள்கை - 2020 என்ற இவ்வறிக்கையின் இந்துத்துவச் சார்புக்குச் சான்றுகள் ஆகும். சமற்கிருதத்தின் வாயிலாகவே சமற்கிருதம் கற்பிக்கும் முன்மொழிவு (பத்தி 4.17) கல்வித் துறையில் பார்ப்பனர்களின் முதனிலையை உறுதியாக நிலைநிறுத்தவும் பார்ப்பனரல்லாதாரைக் கல்வியில் ஊக்கமிழந்து வெளியேறச் செய்யவுமே வழிசெய்யும். பள்ளிப் படிப்பில் ஈராண்டு காலம் இந்தியாவின் செம்மொழிகளில் ஒன்றைப் பயிலும் வாய்ப்பு வழங்கும் திட்டமும் (4.19) சமற்கிருதக் கல்விக்கு இன்னுமொரு கொல்லைப்புற வழியே ஆகும். ஒரு கட்டத்தில் ’சர்வம் சமற்கிருத மயம்’ என்ற நிலைக்கு இந்தக் கல்விக் கொள்கை வந்து விடுகிறது (பத்தி 22.15).

சமற்கிருத்தின் பல்துறை படர்ந்த அறிவமைப்பு குறித்துப் பேசித் திளைக்கும் தேசியக் கல்விக் கொள்கையின் படைப்பாளர்கள் தமிழையும் ஒரு செம்மொழியாகக் குறிப்பிடுவதோடு சரி. செத்த மொழிக்கு இவ்வளவு சிறப்பு இருக்கக் கூடும் என்றால் செம்மொழிகளுக்கெல்லாம் செம்மொழியாகிய சீரிளமைத் திறம் குன்றாத் தமிழுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கக் கூடும் என்று இவர்கள் எண்ணிப்பார்க்கவே இல்லை. இவர்களுக்குத் தொல்காப்பியமோ திருக்குறளோ எதுவும் தெரியவில்லை. தெரிந்த யாரையும் இந்தக் குழுவில் அமர்த்தவும் இல்லை.

வரலாற்று ஆய்வாளர்களுக்கோ இலக்கியத் திறனாய்வாளர்களுக்கோ சமற்கிருதக் கல்வி தேவைப்பட்டால் அதில் ஒரு பிழையும் இல்லை. அதற்கான தனி ஏற்பாடுகள் இருக்கவே இருக்கின்றன. ஆனால் இதற்காகப் பொதுநிலையில் அனைத்து மாணவர்களையும் சமற்கிருதம் கற்கத் தூண்டுவது வீண் வேலை. இது இலத்தீன், கிரேக்கம் போன்ற மற்ற மொழிகளுக்கும் பொருந்தும். அவை அயல் மொழிகள், சமற்கிருதம் நம் மொழி என்று சொல்ல முற்படும் போதுதான் சொல்கிறவர்களின் சமூகச் சார்பு என்ன என்ற கேள்வி எழுகிறது.

தேசியக் கல்விக் கொள்கை - 2020 ஆவணத்தை ஒரு முறை படித்துப் பார்த்தாலே போதும், இந்தக் கொள்கையை வரைந்தவர்கள் வட மொழிப் பைத்தியங்கள் என்ற எண்ணமே மிஞ்சும். பல வழிகளிலும் இவர்கள் இந்திய மொழிகளுக்கெல்லாம் சமற்கிருதமே மூலம் என்று தந்திரமாக நிறுவ முயல்கிறார்கள்.

சமற்கிருதத்தில் என்ன இருக்கிறதோ இல்லையோ இந்துத்துவத்தின் சாரமான பார்ப்பனியம் இருக்கிறது. கல்வி மூட நம்பிக்கைகளை வளர்ப்பதாக இருக்கக் கூடாது என்று ஒப்புக்குக் கூட ஒரு குறிப்பும் இல்லாத இந்தக் கல்விக் கொள்கை வளர்க்க விரும்பும் விழுமியங்களில் ஒன்றாக ’நிஷ்காம கர்மா’ வலியுறுத்தப்படுகிறது. வர்ணாசிரமத்துக்கு பகவத் கீதை தரும் நியாய விளக்கம் இது.

இந்நிலையில் இந்தத் தேசியக் கல்விக் கொள்கை அறிவியல் உணர்வு பற்றிப் பேசுவது (4.20) நகைப்புக்குரியது. அதே மூச்சில் ’இந்திய அறிவு’ பற்றியும் பேசுகிறது. இந்திய மரபின் ஒரு கூறாகக் கூட வருண தர்மத்தையும் அது அறிவுக்குச் செய்த கேட்டையும் இந்தக் கல்விக் கொள்கை அறிந்தேற்கவில்லையே? ஏகலைவனிடம் கட்டை விரல் கேட்ட துரோணரும், கர்ணனுக்கு சாவம் விட்ட பரசுராமனும், சம்பூகனை வெட்டிச் சாய்த்த இராமனும் இந்திய மரபின் தொன்மங்கள்தாமே?

இந்தக் கல்விக் கொள்கையின் படைப்பாளர்கள் பத்தோடு பதினொன்றாகத் திருவள்ளுவரின் பெயரையும் சொல்லி வைக்கிறார்களே தவிர திருக்குறளின் கல்விக் கொள்கையை ஏறெடுத்தும் பார்த்ததற்கான அடையாளமே இல்லை. இவர்களுக்குப் பிடித்தமான ’ஞானகுரு’ சூழ்ச்சிக்கார சாணக்கியர்தாம் என்பதிலிருந்தே இவர்களின் உள்ளக்கிடக்கையை நாம் உய்த்தறியலாம்.

அரசமைப்புச் சட்ட விழுமியங்கள் என்று குறிப்பிடும் போது இந்தக் கல்விக் கொள்கை நெருக்கடிநிலைக் காலத்தில் நுழைக்கப்பட்ட பகுதி IV-A அடிப்படைக் கடமைகளை (குடிமக்களுக்குத்தான், அரசுக்கில்லை) வலியுறுத்துவதும், பகுதி III அடிப்படை உரிமைகளைக் கவனமாகத் தவிர்ப்பதும் இந்தக் கல்விக் கொள்கையின் பிரம்மாக்களைக் காட்டிக் கொடுப்பதாகும். மாணவர்களைப் பார்த்து “உங்களுக்கு உரிமைகள் உண்டு, அவற்றுக்காகப் போராடும் தெளிவு வேண்டும்” என்று சொல்லும் திறம் இல்லாத கல்விக் கொள்கை அடிமைகளைத்தான் வளர்க்கும். ஆளும் வகுப்புக்கு அடிமைகள்தாம் தேவைப்படுகின்றார்கள்!

பார்ப்பனியக் கல்விக் குழு

கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவினர் மெத்தப் படித்தவர்கள் என்று எடுத்துக்காட்டி அவர்களது கல்விக் கொள்கையில் குற்றம் காணலாமா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது, மெத்தப் படித்தவர்கள், சரி! கல்வியாளர்களாகக் கூட இருக்கலாம்! ஆனால் சமூக நீதிக் கல்வியாளர்களா? இவர்களது உலகக் கண்ணோட்டம் என்ன? இவர்களில் பெரும்பாலார் ஏதோ ஒரு வகையில் ஆர்எஸ்எஸ் தொடர்புடையவர்கள் என்பது இது வரை மறுக்கப்படவில்லை. பெரும்பாலும் பார்ப்பனியச் சிந்தனையில் ஊறியவர்கள் ஆக்கியுள்ள கல்விக் கொள்கையே இது என்பதற்கு அகச் சான்றுகளும் புறச் சான்றுகளும் உள்ளன.

      இந்த அறிக்கையில் பற்றார்ந்த விருப்பங்களை வெளியிடும் பல சொல்வீச்சுகள் இருப்பினும் அவை கவைக்குதவாதவை என்பதோடு, இதன் உண்மையான நச்சு நோக்கங்களுக்கு உருமறைப்பும் ஆகும். நாட்டின் மொத்தப் பொருளாக்கத்தில் 6 விழுக்காட்டைக் கல்வித் துறைக்குச் செலவிடும் நிலையை நோக்கி விரைந்து முன்னேறுவது போன்ற கவர்ச்சியான சொல்வீச்சுகளால் ஒருபயனும் விளையப் போவதில்லை. முன்பு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சொன்னது, இப்போது தேசிய சனநாயகக் கூட்டணி சொல்கிறது, அவ்வளவுதான்! சொல்லிக் கொண்டே இருப்பார்கள்! ஒருபோதும் செய்ய மாட்டார்கள்! வேண்டுமானால் இதைச் சொல்லி ஒரு சிறப்பு வரி விதித்தாலும் விதிப்பார்கள்!

பண்பாட்டுப் படையெடுப்பு

வறுமையை ஒழிக்க முடியாதவர்கள், பசி பட்டினியை விரட்ட முடியாதவர்கள், நோய்மையை வென்று நலவாழ்வு தர முடியாதவர்கள், அறியாமையை வீழ்த்தி அனைவர்க்கும் தகைமையான கல்வியை மட்டும் வழங்கப் போகின்றார்கள், அதற்கான மந்திரக் கோலே இந்தத் தேசியக் கல்விக் கொள்கை 2020 என்று நம்புவதற்கு நாம் ஏமாளிகள் அல்லோம்!

இந்தப் பிற்போக்குக் கல்விக் கொள்கையை எதிர்த்து முறியடிப்பதோடு நாம் நமக்கான முற்போக்குக் கல்விக் கொள்கையை வகுத்து நிறைவேற்றவும் பாடுபட வேண்டும்.

உடனடியாகச் செய்ய வேண்டியது இதுதான்: தேசியக் கல்விக் கொள்கை - 2020 தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக் கூடாது. மும்மொழிக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி சொல்கிறார். நல்லது. 80களின் பிற்பகுதியில் நவோதயாவை நுழைய விடாமல் தடுத்தது தமிழ்நாடு. இப்போது மும்மொழிக் கொள்கையை மட்டுமல்ல தேசியக் கல்விக் கொள்கை – 2020இன் எந்தப் பகுதியையும் நுழைய விடக் கூடாது. இதில் தமிழக அரசு உறுதியாக நிலையெடுக்க வேண்டும். நாம் இவ்வாறு இக்கொள்கையைத் தடுப்பதில் வெற்றி பெற்றால் இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கும். இல்லையேல் மற்ற மாநிலங்களைக் காட்டி இந்த அழிவுக் கொள்கையை நம் தலையில் கட்டி விடுவார்கள். கல்வி இப்போதும் இசைவுப் பட்டியலில்தான் உள்ளது, மாநில அரசின் இசைவில்லாமல் எந்தக் கல்விக் கொள்கையும் தமிழ்நாட்டில் கால் வைக்க முடியாது என்று தமிழக அரசு வாதுரைக்கலாம்.

நாம் நம் மொழி காக்கவும் சமூக நீதி காக்கவும் தமிழ்நாட்டுக்குக் கல்வி இறைமை கோருவோம்!

இது ஏதோ அரசியல் கட்சிகளின் பதவிச் சண்டைக்கான கருப்பொருள் என்று கருதி விட வேண்டாம். இது இந்திய அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான போராட்டம் என்று புரிந்து கொள்ள வேண்டும். மோதியின் ’பாரதம்’ நம் தமிழ்த் தேசத்தின் மீது நடத்த முற்பட்டுள்ள இந்தப் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடித்தாக வேண்டும்.

- தியாகு