கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அறிவியலுக்கு எதிராக பிரதமர் மோடியிலிருந்து அவரது அமைச்சர்கள் சகாக்கள் வரை உளறிக் கொட்டிய நகைச்சுவை வெடிகள் நாட்டுக்கே தலைகுனிவை ஏற்படுத்தின. அறிவியலாளர்கள் அதிர்ந்து போனார்கள். அரசு அமைப்பான ‘சயின்ஸ் காங்கிரஸ்’ மாநாட் டிலேயே பேசப்பட்ட இந்த உளறல்களைக் கண்டு ஆத்திரமடைந்த நோபல் பரிசு பெற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த விஞ்ஞானி வெங்கட்ராமன் இராமகிருஷ்ணன், இனி இத்தகைய மாநாட்டில் பங்கேற்கவே போவதில்லை. சயின்ஸ் காங்கிரசில் சர்க்கஸ் காட்டுகிறார்கள் என்று கூறினார்.

1) பம்பாயில் கூடிய ‘அறிவியல் காங்கிரஸ்’ மாநாட்டில் பேசிய மோடி வேத காலத்திலே பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நம்மிடமிருந்தது. அதற்கு சான்று விநாயகன். மனித உடலோடு யானைத் தலையை ஒட்ட வைத்து நடந்த சிகிச்சை அது என்றார். உலகம் முழுதும் பல பத்திரிகைகள் மோடியை கேலி செய்து கட்டுரைகளையும் கார்ட்டூன்களையும் வெளியிட்டன.

2) வேத காலத்திலே கண்டம் விட்டு கண்டம் பாயும் போர் விமானங்கள் நம்மிடம் இருந்தன. இராவணன் 38 விமானத் தளங்களை வைத்திருந்தான். கவுரவர்கள் சோதனைக் குழாய் குழந்தைகளாக பிறந்தவர்கள் என்று விஞ்ஞான காங்கிரஸ் மாநாட்டில் ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தார்கள்.

3) சத்யபால் சிங் என்ற மத்திய அமைச்சர், டார்வின் தத்துவம் பொய்; குரங்கிலிருந்து மனிதன் வந்தான் என்றால் மனிதன் குரங்காகியிருக்கிறானா? என்று கேட்டார். சிம்பன்சிக்கும் மனிதருக்கும் ஒரே மூதாதையர் என்ற அறிவியல் கோட்பாட்டை இப்படி அபத்தமாகப் புரிந்து கொண்டு தனது அறியாமையை வெளிப்படுத்தினார், அந்த அமைச்சர். கல்லூரி, பள்ளிப் பாட நூல்களில் டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை நீக்க வேண்டும் என்றார் அவர். அமைச்சரின் கருத்தை இந்தியாவின் பல அறிவியல் அமைப்புகள் கண்டித்து அறிக்கை வெளியிட்டன.

4) அமைச்சர்கள் என்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி அறிவியலுக்கு எதிராகப் பேசியதோடு அமைச்சர்கள் சாமியார்களோடு நெருங்கி அவர்களை குருவாக்கிக் கொண்டார்கள். அறிவியல் ஆய்வுக்கான நிதி ஒதுக்கீடுகளும் கணிசமாக குறைக்கப்பட்டன.

5) பசுவின் மூத்திரம் - பசுவின் சாணம் - அது தரும் பால் - அதிலிருந்து எடுக்கப்படும் தயிர், வெண்ணெய் ஆகிய பஞ்சகவ்யங்களில் அடங்கி யுள்ள நோய் தீர்க்கும் மூலப் பொருள்களை ஆய்வு செய்ய இந்திய அரசு 14 உறுப்பினர்களைக் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்தக் கமிட்டிக்கு தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷவர்த்தன் தலைவர். இதில் ஆர்.எஸ்.எஸ். விசுவஇந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்தவர்களும் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டனர். இது குறித்து இந்திய தொழில்நுட்ப நிறுவனமான ‘அய்அய்டி’ யிடம் ஆய்வுக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு பணிக்கப்பட்டது. இதற்காக அமைச்சகத்திலிருந்து ரூ.5000 கோடி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது.

6) ஒய். சுதர்சனராவ் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், உரிய கல்வித் தகுதி ஏதும் இல்லாத நிலையில் இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். இலங்கைக்கும் தமிழ்நாட்டுக்கு மிடையே இராமன் கட்டிய பாலம் என்று கூறப்படும் பாலம், மனிதர்களால் கட்டப்பட்டதா அல்லது இயற்கையாகவே தோன்றியதா என்பது குறித்து தொல்லியல் ஆய்வு நடத்தப் போவதாக அறிவித்தார். அறிவியலாளர்கள் இந்த அறிவிப்பை எள்ளி நகையாடினர்.

7) வேதத்திலே கூறப்படும் சரஸ்வதி நதி காணாமல் போய்விடவில்லை என்றும் இந்தியாவில் ஏதோ ஒரு பகுதிக்குள் அது ஓடிக் கொண்டிருக் கிறது என்பதற்கு அறிவியல் சான்றுகள் இருக்கின்றன என்றும் நீர்வளத்துறை அமைச்சரான உமாபாரதி கூறியதோடு இது குறித்து ஆய்வுக்கான திட்டம் ஒன்றை உருவாக்கி அதைத் தனது அமைச்சக இணையதளத்திலும் வெளியிட்டார்.

8) இராமாயணத்தில் அனுமான் சஞ்சீவி மலையையே பெயர்த்து இலங்கைக்கு தூக்கிச் சென்றான் என்ற கதை வருகிறது. அந்த சஞ்சீவி மலையில் இருந்த மூலிகைதான் இராமனின் தம்பி இலட்சுமணனின் நோயைக் குணமாக்கியதாக வால்மீகி இராமாயணம் கூறுகிறது. உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க. ஆட்சியின் இந்திய மருத்துவத்துறை அமைச்சகம், அனுமான் தூக்கி வந்த மலையிலிருந்த மூலிகையை ஆராய்ச்சி செய்ய ஆயுர்வேத மருத்துவ நிபுணர் குழு ஒன்றை அமைத்து, 2016 ஆகஸ்ட்டில் முதல் கட்டமாக இந்த ஆராய்ச்சிக்கு ரூ.25 கோடி நிதியும் ஒதுக்கியது. 2008இல் பாபா ராம்தேவ் நடத்தும் ‘பதஞ்சலி’ வணிக நிறுவனம் அந்த மூலிகையைத் தாம் கண்டுபிடித்து விட்டதாக அறிவித்து அதை வேறு எவரும் பயன்படுத்தக் கூடாது என்று ‘பேடண்ட்’ உரிமை கேட்டது.

9) அறிவியலுக்கு எதிரான ‘வாஸ்து சாஸ்திரத்தை’ கோரக்பூர் அய்.அய்.டி.யில் கட்டிடக் கலைப் பாடத்தில் ஒரு பாடப் பிரிவாக்கப்பட்டது. அதே நிறுவனத்தில் வானியல் மேல்பட்டப் படிப்பில் நவக்கிரக சுழற்சி பற்றிய பாடங்கள் சேர்க்கப் பட்டன.

10) போலி அறிவியலை அறிவியலாக்கும் முயற்சிகளில் ஈடுபட்ட மோடி ஆட்சியில் பகுத்தறிவாளர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். மூடநம்பிக்கையை எதிர்த்து பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த டாக்டர் தபோல்கர் 2013 ஆகஸ்ட் 20ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டார்.

11) மூடநம்பிக்கைகளை எதிர்த்த கோவிந்த் பன்சாரே 2015 பிப். 20இல் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது மனைவி தாக்குதலுக்கு உள்ளானார்.

12) கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், தீவிர மூடநம்பிக்கை எதிர்ப்பாளருமான எம்.எம். கல்புர்கி, அவரது வீட்டிற்குள்ளேயே 2015 ஆகஸ்ட் 30ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் எழுதிய நூல் மற்றும் அவரது பகுத்தறிவுப் பேச்சுகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், இராம்சேனா போன்ற மதவெறி அமைப்புகள் தொடர்ந்து அவரை மிரட்டி வந்தன.

13) பத்திரிகையாளரும் பகுத்தறிவாளரும் இந்துத்துவா எதிர்ப்பாளருமான கவுரி லங்கேஷ் பெங்களூரில் அவரது இல்லத்தில் 2017 செப்டம்பர் 5ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.

14) கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த மதவெறிப் படுகொலைகளை உலக நாடுகளிலிருந்து வெளி வரும் ஏடுகள் கண்டித்து எழுதின. “இந்துத்துவா மதக் கொள்கை இந்தியாவில் தீவிரம் பெற்று வருகிறது. இந்திய ஜனநாயகம் கேள்விக்குள்ளாகி வருகிறது” என்று உலகப் புகழ் பெற்ற ‘ஏசியா டைம்ஸ்’ பத்திரிகை 2015 அக்டோபரில் கண்டனம் தெரிவித்தது.

இந்தப் படுகொலைகளைச் செய்தவர்கள் ‘சனாதன் சன்ஸ்தா’ என்ற பார்ப்பன பயங்கரவாத அமைப்பைச் சார்ந்தவர்கள் என்று புலன் விசாரணையில் கண்டறியப்பட்டது. ஆனாலும் ‘பயங்கரவாதம்’ பற்றி பேசி வரும் மோடி, அந்த அமைப்பை தடை செய்யவில்லை.

15) பகவத்கீதை குறித்து விமர்சனம் செய்ததற்காக விஞ்ஞானியும் பகுத்தறிவாளருமான கே.எஸ். பகவானுக்கு கொலை மிரட்டல் கடிதங்கள் வந்தன. மூடநம்பிக்கைக்கு எதிராக அறிவியல் பிரச்சாரம் செய்த நரேந்திர நாயக் மீது கொலை முயற்சி நடந்தது. அவர் தப்பி விட்டார்.

இந்தப் பட்டியல் நீளும்.