ambetkar periyarஅண்ணல் அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது போல் பாசாங்கு காட்டும் இந்துத்துவவாதிகள் என்பதே சரியானதாக இருக்கும்.

தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும்  தீவிர ஜாதி ஒழிப்புப் போராளிகள், மத எதிர்ப்பாளர்கள், கடவுள் மறுப்பாளர்கள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள். அனைத்திற்கும் மேலாகக் கடுமையாகப் பார்ப்பனியத்தை எதிர்த்தவர்கள்.

 இப்படி அனைத்து நிலையிலும் இந்துத்துவவாதிகளுக்கு எதிராக இருந்த இருவரில், ஒருவரை மட்டும் ஏற்றுக்கொண்டு மற்றொருவரை எதிர்ப்பது என்பதில் இருக்கும் ஆபத்தான அரசியலை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதற்குப் பின்னணியில் இருக்கும் அரசியல் என்பது ஓட்டு அரசியல் தான்.

அண்ணல் அம்பேத்கர் என்னும் அனைவருக்குமான ஒரு தலைவரை, தலித் மக்களுக்கு மட்டுமான தலைவராகப் பிம்பப்படுத்தி, தங்களுக்கான தலைவர்தான் அம்பேத்கர் என்று நம்பும் தலித் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கும், அம்மக்களிடம் இவர்களும் நமக்கானவர்கள்தான் என்ற

பொய் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும், திட்டமிட்டு அம்பேத்கரை ஏற்றுக்கொள்வது போல் போலி அரசியல் செய்கின்றனர்.

இந்த ஆபத்தினைப் புரிந்துகொள்ள மறுக்கும் வட இந்தியாவில் சில தலித் அமைப்பின் கட்சித் தலைவர்களும் இந்துத்துவவாதிகளின் இந்த வாக்கு வங்கி அரசியலுக்குத் துணை போவதும் பெரிய ஆபத்தே. "கெடு வாய்ப்பாக இந்துவாகப் பிறந்துவிட்டேன், ஒருபோதும் இந்துவாகச் சாகமாட்டேன்" என்று சொன்ன ஒரு தலைவரை இந்து இராஜ்ஜியம் அமைக்க விரும்பும் பாசிசவாதிகள் எப்படிக் கொண்டாட முடியும்?

 அவர் சிலைக்கு மாலை அணிவிக்கும், அவர் பிறந்தநாளைக் கொண்டாடும், இதே இந்துத்துவவாதிகள் அம்பேத்கர் சிலைகள் உடைபடும்போது வீதிக்கு வந்து போராடியிருக்கிறார்களா? ஒருபுறம் அம்பேத்கரை ஏற்றுக்கொள்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் அவர் எழுதிய அரசியலமைப்புச் சட்டத்தையே மாற்றி அந்த இடத்தில், மக்களை ஜாதியாகப் பிரிக்கும் மனுதர்மத்தை வைக்கத் துடிப்பதுதான் இவர்களின் அரசியல். பொதுவாகவே எதிர்த்து அழிக்க முடியாதவற்றை, அணைத்து அழிப்பதே இந்துத்துவவாதிகளின் செயல்.

இந்து மதக் கடவுளை வணங்க மாட்டேன், பார்ப்பனீய மதம்தான் இந்து மதம், இரண்டுக்கும் வேறுபாடு ஒன்றுமில்லை, பார்ப்பனர்கள் செய்யும் சடங்குகள் எதிலும் நான் ஈடுபட மாட்டேன் என்று சொல்லி புத்தத்தைத் தழுவிய அண்ணல் அம்பேத்கரை, இந்துத்துவ அம்பேத்கராகக் கட்டமைக்க முயற்சிப்பது என்பது அவர்களின் சூழ்ச்சி அரசியல்.

பார்ப்பனீய எதிர்ப்பில் பிற்படுத்தப்பட்ட-தாழ்த்தப்பட்ட மக்களின் ஒற்றுமை அவசியம் என்று சொன்ன தலைவரை ‘தலித் மக்களுக்கு மட்டுமான தலைவராகக்’ கட்டமைத்து, பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரித்தாலும் சூழ்ச்சி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் இந்துத்துவ அமைப்புகள், கட்சிகளின் வாக்கு வங்கி அரசியலை மக்கள் புரிந்து கொண்டு, தந்தை பெரியாரும் அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

- மதிவதனி

                                                       ***

கேள்வியே தவறு. அவர்கள் எந்தக் காலத்திலும் டாக்டர் அம்பேத்கரை ‘ஏற்றுக்' கொண்டது இல்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியாது.  Acceptance (ஏற்றுக் கொள்வது) என்பது வேறு; தன்வயப்படுத்துவது (Appropriation) என்பது வேறு. ஆதாயங்களுக்காக ‘என் ரத்தத்தின் ரத்தமே' என்று மற்றவரைத் தன்னோடு இணைத்துக் கொள்ளலாமே தவிர அவருடைய ரத்தத்தைத் தனக்குள் ஏற்றிக்கொள்ளமுடியாது. Cross react ஆகிவிடும். உயிர் போய்விடும்.

பார்ப்பனீயத்தின் பண்பாட்டு வடிவம் (cultural form) இந்து மதம். இந்து மதத்தின் அரசியல் வடிவம் (political form) இந்திய தேசியம் (nationalism). இந்தியாவின் ஒருமித்த சமூக வாழ்விற்கு (coexistence) எதிராக இருப்பவை மேற்சொன்ன பார்ப்பனீயம் - இந்துமதம் - இந்திய தேசியம் என்பதை ஆழமாக உணர்ந்து அவைகளை வேரோடு அழித்தொழிப்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டவர்கள் மூவர். மகாத்மா பூலே, டாக்டர் அம்பேத்கர், அய்யா பெரியார். 

உங்கள் கேள்வியில் விட்டுப்போன செய்தி, அவர்கள் பெரியாரை மட்டுமன்று, பூலேவையும் தன்வயப்படுத்த முயற்சிப்பதில்லை. அதற்கான எளிமையான, எல்லோருக்கும் தெரிந்த விடை, பெரியாரையோ பூலேவையோ தன் வயப்படுத்தவில்லை என்பதற்காக அவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை.

ஆனால் டாக்டர் அம்பேத்கரைத் தன்வயப்படுத்துவதனால் கிடைக்கும் ஆதாயங்கள் பல. 1. ஓட்டு; 2. Demographic majority - க்காக தலித்துகளை இந்துக்களாக இணைத்துக் கொள்வது; 3. ‘So called' அறிவுத் தளத்தில் பெரியாரை டாக்டர் அம்பேத்கருக்கு எதிராக நிறுத்துவது.

இந்த விடையை விவாதிப்பது அன்று நம்முடைய நோக்கம்; கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய கேள்வி: டாக்டர் அம்பேத்கரைத் தன்வயப்படுத்திக் கொள்ளும் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது? அதற்கான space அவர்களுக்கு யார் கொடுத்தது?

டாக்டர் அம்பேத்கரை எந்த அளவிற்கு நாம் உள்வாங்கி இருக்கிறோம்? அவரைப் பற்றிய இரண்டு செய்திகளை மட்டுமே நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். 1. தலித்துகளின் தலைவர் 2. அரசியல் சட்டம் எழுதியவர்.

அரசியல் சட்டம் எழுதியதை விட்டுவிடுவோம், அவர் தலித்துகளின் தலைவர் மட்டும்தானா ? டாக்டர் அம்பேத்கர் என்ற ஆகப்பெரும் ஆளுமையின் பல பரிமாணங்களில் ஒன்றுதான் அவர் தலித்துகளுக்காகப் போராடினார் என்பது. அவருடைய ஒற்றை இலக்கு ஜாதியை அழித்து ஒழிப்பது, அதற்கு மூலமாக இருக்கும் இந்து மதத்தை அழித்து ஒழிப்பது.

டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களாக நூல் வடிவில் நமக்கு கிடைத்திருப்பவை மொத்தம் 56. அதில் சனாதன இந்து மதத்திற்கு எதிராகவும், அதன் வேரான பார்ப்பனீயத்திற்கு எதிராகவும் அவர் எழுதிய நூல்கள் 37. அந்த 37 - இல் சூத்திரர்களுக்காக மட்டும் எழுதிய நூல்கள் ஒன்பது.

தீண்டத்தகாத மக்களுக்காக அவர் எழுதிய நூல்கள் வெறும் 6.  ஆப்பிரிக்க - அமெரிக்க எழுத்தாளர் Isabel Wilkerson தன்னுடைய Caste என்னும் நூலில் டாக்டர் அம்பேத்கரை இப்படி அறிமுகப்படுத்துகிறார், The Father of the Anti-caste movement in India.  Dalit movement  என்று எழுதவில்லை.

எந்தப் பார்ப்பனீயத்தை ஒழித்துக் கட்டுவதற்காகத் (annihilate) தன் வாழ்நாள் முழுக்கப் போராடினாரோ அதே டாக்டர் அம்பேத்கரை அவரைப் பற்றிய நமது அறிவுப் போதாமையின் காரணமாகத்தான் அதே பார்ப்பனீயம் தன்வயப்படுத்தப் பார்க்கிறது. வெளிப்படையாகச் சொன்னால், நாம் ஒரு Ambedkar illiterates.

தந்தை பெரியாரின் மதம், ஜாதி ஒழிப்பு தொடர்பான உரையாடல்கள் வெகுமக்கள் மொழியில் அமைந்தவை. தவிர திராவிட இயக்கங்களும் அவைகளை மக்களிடம் கொண்டு சேர்த்திருக்கின்றன. அதே தளத்தில் இயங்கிய டாக்டர் அம்பேத்கர் தன்னுடைய உரையாடல்களைக் கல்விப்புலம் சார்ந்த academic மொழியில் செய்தார்.

அவைகளை உள்வாங்கிக் கொள்ள சற்று மெனக்கெடல் வேண்டும். கவனம் வேண்டும். அந்த கவனமும் மெனக்கடலும் நம்மிடையே இல்லாத காரணத்தினால்தான் டாக்டர் அம்பேத்கரைச் சிறு மேற்கொள்களோடும் அடைமொழிகளோடும் சுருக்கிக் கொண்டோம். அந்தக் கோடிட்ட இடத்தைத்தான் இந்துத்துவவாதிகள் நிரப்பிக் கொள்கிறார்கள்.

இது ஒன்றும் நமக்குப் புதிதன்று. அன்று

புத்தரை புரிந்து கொள்ளத் தவறினோம். அவரை ஒன்பதாவது அவதாரமாக்கினார்கள். இன்று டாக்டர் அம்பேத்கரைப் புரிந்து கொள்ளத் தவறுவோமேயானால், இருக்கவே இருக்கிறது பத்தாவது அவதாரம். அவர்களுக்கு என்ன காசா? பணமா? வெட்கமா? மானமா?

மருத்துவர் தாயப்பன்