maggi ban

 நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸில் காரீயமும், மோனோசோடியம் குளூட்டமேட் என்ற ரசாயன உப்பும் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக இருப்பது கண்டறிப்பட்டுள்ளதால் அதை பல்வேறு மாநிலங்கள் தற்காலிகமாக தடை செய்துள்ளன. தமிழ்நாட்டில் மேகி நூடுல்ஸுடன் சேர்த்து வய் வய் எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸின் செலக்ட் இன்ஸ்டன்டு நூடுல்ஸ், ஸ்மித் அண்டு ஜான்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ் போன்றவற்றையும் தற்காலிகமாக தடை செய்திருக்கின்றது ‘மக்களின் முதல்வர்’ அரசு. சதவீத கணக்கில் ஊழலை அனுமதிக்கும் ஜனநாயகம் சதவீத கணக்கில் ரசாயனங்களையும் அனுமதித்திருக்கின்றது. அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை கலந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்களைக் கொல்லலாம். ஆனால் வரையறுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரசாயனங்களைக் கலந்து ஓரேயடியாக மக்களைக் கொல்லும் அதிகாரம் முதலாளிகளுக்குக் கிடையாது. ஏனென்றால் இது ஜனநாயக அரசு. இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருக்காது. சட்டம் தன் கடமையைச் செய்யும்!.

  ஏற்கெனவே நெஸ்லே தயாரிப்புகளில் குதிரை மாமிசம் கலப்பதாக 2013-ல் புகார் எழுந்தது. அதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டது. ஆனால் பழியைத் தூக்கி அதற்கு பொருட்களைத் தயாரித்துக் கொடுக்கும் துணை நிறுவனங்கள் மீது போட்டது. அப்போது எந்தவிதமான சட்ட நடவடிக்கையும் அந்த நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இது போன்ற கலப்பட பொருட்களை ஏதோ ஒரு சில நிறுவனங்கள் தங்களது இலாப வெறிக்காக தயாரிப்பதாகவும் மற்றவை நாணயமாக செயல்படுவதாகவும் நாம் நினைத்துக்கொள்ளக் கூடாது. 2013-2014 ஆண்டில் நாடு முழுவதும் ஏறக்குறைய 72,200 உணவு மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதில் 13,571 மாதிரிகளில் கலப்படம் செய்யப்பட்டது உறுதி செய்யபட்டது. இதில் இருந்தே இதன் தீவிரத்தன்மையை உணர்ந்துகொள்ளலாம்.

 பெரும்பாலான நிறுவனங்கள் இது போன்ற மனிதத்தன்மையற்ற செயல்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்கின்றன. முதலாளிகளைப் பொருத்தவரை அவர்கள் உற்பத்தி செய்து தரும் பொருட்களை நுகரும் நுகர்வு அடிமைகள் நாம். தரத்தைப் பற்றியெல்லாம் கேள்வி கேட்பது அடிமைகளுக்கு அழகல்ல. அவன் எந்தக் கருமத்தைக் கொடுத்தாலும் வாங்கித் தின்ன வேண்டும்.இதுதான் முதலாளித்துவம் சொல்லும் செய்தி. இதைத்தான் மார்க்ஸ் சரியாகச் சொன்னார் மனிதர்களுக்கேற்ற பொருட்களை உற்பத்தி செய்வது போய் முதலாளித்துவம் பொருட்களுக்கேற்ற மனிதர்களை உற்பத்தி செய்கின்றது என்று.

 நூடுல்ஸ் போன்ற துரித உணவு வகைகள் இன்று சாமானிய மக்கள் கூட உண்ணும் உணவாக மாறியிருக்கின்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் ஊடகங்கள். பெரும்முதலாளிகள் தரும் எச்சில் காசில் வயிறு வளர்க்கும் இந்தக் கும்பல், காசு கொடுத்தால் சிட்டுக்குருவி லேகியத்தைக்கூட விளம்பரம் செய்கின்றன. இன்று மேகி நூடுல்ஸ் விளம்பரத்தில் நடித்ததற்காக அமிதாப்பச்சன், மாதுரி தீட்ஷித், பிரீத்தி ஜிந்தா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மேகி விளம்பரத்தை வெளியிட்ட ஊடகங்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முதலாளித்துவ அமைப்பு முறையில் யானைகளைத் தப்பவைக்க எறும்புகள் பலிகடா ஆக்கப்படுகின்றன. எந்த மேகி விளம்பரத்தை வெளியிட்டு ஊடகங்கள் அன்று கல்லா கட்டியதோ அதே ஊடகங்கள் இன்று மேகி மீது எடுக்கப்படட நடவடிக்கையையும் விவாதப் பொருளாக்கி கல்லா கட்டுகின்றன. இதற்குப் பெயர்தான் ஊடக தர்மம்!

 இது போன்ற செய்திகள் எப்படி நமக்குப் புதியதல்லவோ அதேபோல அரசின் நடவடிக்கைகளும் புதிதல்ல. 2010-ம் ஆண்டு சென்னை மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தின் தலைவரும், மீனா ஹெல்த்கேர் நிறுவனத்தின் உரிமையாளருமான மீனாட்சிசுந்தரம் காலாவதியான மருந்துகளை விற்றதாக கைது செய்யப்பட்டார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது இதுவரை தெரியவில்லை. சென்ற ஆண்டு ஆவின் பாலில் தண்ணீர் கலந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கொள்ளை அடித்த அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்தியநாதன் அம்மா ஆசியில் ஜாமீனில் வெளியே வந்து சுதந்திரமாக சுற்றுகிறான். ஆளும் வர்க்கங்கள் எப்போதுமே இது போன்ற குற்ற கும்பல்களுடன் தங்களுடைய தொடர்பைப் பேணிப் பாதுகாத்தே வந்திருக்கின்றன. தங்களை எப்போதுமே ஆளும் வர்க்கமாக வைத்துக் கொள்வதற்கும், தங்களுடைய அரசியல் எதிரிகளை பழிவாங்கவும், தேர்தல் சமயத்தில் பெரும்நிதியை அவர்களிடம் கொடையாகப் பெறவும் இது போன்ற கும்பல்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். பின்னர் உண்மை வெளியே கசிந்துவிட்டால் உபதெய்வங்களை பலிகடா ஆக்கிவிட்டு மூலதெய்வங்கள் தங்களை காப்பாற்றிக் கொள்கின்றன.

 தரமற்ற பொருட்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பறிமுதல் செய்ய வேண்டிய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கையூட்டு வாங்கிக்கொண்டு அவற்றை அனுமதிக்கும் மக்கள் விரோதிகளாக மாறி நெடுநாட்கள் ஆகிவிட்டது. இவர்களுக்குத் தெரியாமல் எந்த ஒரு கலப்படப் பொருளும் கடைகளில் விற்கமுடியாது. ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை ஏதாவது ரோட்டோரக் கடைகளில் ரெய்டு என்ற பெயரில் பொருட்களை பறிமுதல் செய்து பத்திரிக்கைகளுக்கு போஸ் கொடுப்பதையே வாடிக்கையாக கொண்டிருக்கும் இந்தப் பேர்வழிகள் வேலைக்கு சேர்ந்த கொஞ்ச ஆண்டுகளிலேயே பெரிய கோடீஸ்வரர்களாக மாறிவிடுகிறார்கள்.

 தரமற்ற உணவுப் பொருள்களால் கல்லீரல், இரைப்பை, மண்ணீரல், சிறுகுடல், பெருங்குடல், நுரையீரல், இதயம், நரம்பு மண்டலம் போன்றவை பாதிக்கப்படுகின்றன மேலும் பக்கவாதம், மூளை செயலிழப்பு போன்றவை கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் சொல்கின்றார்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் முதலாளிகளுக்கும் கவலை இல்லை அவர்களை அண்டிப்பிழைக்கும் அரசுக்கும் கவலை இல்லை. எவன் எக்கேடு கெட்டுப் போனால் நமக்கென்ன நாம் கோடிகளில் கொழிக்க வேண்டும் அவ்வளவு தான். நாம் காலையில் குடிக்கும் தேனீரில் ஆரம்பிக்கும் கலப்படம் இரவில் படுக்கும்வரை ஒரு நிழல்போல நம்மைத் தொடர்கின்றது. ஒரு சில உதரணங்களைப் பார்த்தோம் என்றால் அதன் பயங்கரம் நமக்குப் புரியும்.

 மஞ்சள் மற்றும் துவரம் பருப்பில் மஞ்சள் நிறம் வருவதற்காக மெட்டானில் என்ற வேதிப்பொருள் சேர்க்கப்படுகின்றது, சர்க்கரையில் சுண்ணாம்புத்தூள் சேர்க்கப்படுகின்றது, கொத்தமல்லித்தூளில் குதிரைச்சாணம் கலக்கப்படுகின்றது. அதேபோல கருப்பு வெல்லத்தை வெள்ளையாக மாற்ற ஹைட்ரோ குளோரிக் அமிலம்(HCL) பயன்படுத்தப்படுகின்றது, பாக்குத்தூளில் மரத்தூள் சேர்க்கப்படுகின்றது. நாம் கடையில் வாங்கும் பெரும்பாலான பழங்கள் கால்சியம் கார்பைடு மூலம் பழுக்க வைக்கப்பட்டவை. பாலில் சோப்புத்தூள், காஸ்டிக்சோடா போன்றவை கலக்கப்படுகின்றன. ஆப்பிள் பழங்களின் மேல்பகுதிகளில் பளபளப்புத் தன்மைக்காக மெழுகு தடவப்படுகின்றது. அதுமட்டுமல்ல அரசால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளில் செங்கல்லும், சவடுமண்ணும் கலப்படம் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 அப்படி என்றால் கலப்படம் இல்லாத உணவுப் பொருள்களை நாம் எப்படி வாங்கி பயன்படுத்துவது என்று நீங்கள் கேட்பது புரிகின்றது. அதற்கான பதில் வாய்ப்பே இல்லை என்பதுதான். நம்மைப் போன்ற சாமானிய மக்களால் அவ்வளவு எளிதாக உணவு கலப்படத்தை கண்டறிய முடியாது. வாங்கும் ஏதாவது ஒரு உணவுப் பொருளில் கலப்படம் இருந்தால் அதை கண்டுபிடிக்க முயற்சி செய்து பார்க்கலாம் ஆனால் வாங்கும் அத்தனை உணவுப் பொருள்களிலும் கலப்படம் இருந்தால் என்ன செய்ய முடியும். தின்று விட்டு சாகவேண்டியது தான்! கலப்படம் இல்லாத உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்குவதை உத்திரவாதம் செய்ய வேண்டிய பொறுப்பு அரசையே சார்ந்தது. ஆனால் அரசுதான் அதைச் செய்யாதே! கோக்கோ கோலாவில் அளவுக்கதிகமாக பூச்சிக் கொல்லி மருந்து கலக்கப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்ட உடன் பொங்கியெழுந்த மக்கள் நல அரசு உடனடியாக தடைசெய்தது கோக்கோ கோலாவை, நாடாளுமன்றத்தில் மட்டும்! இதுதான் இவர்களின் யோக்கியதை.

 தமிழ்நாட்டில் பான்மசாலா மற்றும் குட்கா விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை விற்காத கடை ஒன்றாவது தமிழ்நாட்டில் உண்டா? ஊழல் பணத்தில் கோடிகளில் புரளும் அதிகார வர்க்க அயோக்கியர்கள் மக்களைக் காப்பாற்றுவார்கள் என்று இன்னும் நாம் நம்பிக்கொண்டுதான் இருக்க வேண்டுமா? இவர்களின் ஓரே குறிக்கோள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பணம் ஈட்டுவது மட்டுமே, நீங்கள் சரியாக கப்பத்தைக் கட்டிவிட்டால் உயிர்காக்கும் மருந்தில் கூட கலப்படம் செய்து விற்கலாம்! கொல்லலாம்! இதற்குப் பெயர்தான் ஜனநாயகம்.செத்த பிணத்தைக்கூட தோண்டியெடுத்து அதன் உறுப்புகளை திருடும் சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். இங்கே மனித உணர்ச்சி என்பதெல்லாம் பழங்கதை.

 இந்த அரசு அமைப்பும் அதை இயக்கும் முதலாளித்துவமும் மேல் இருந்து கீழ் வரை மக்களை மனித உணர்ச்சியற்ற பிண்டங்களாக மாற்றி வைத்துள்ளது. முதலாளிகள் எப்படி தங்கள் இலாப வெறிக்காக கலப்படம் செய்கின்றார்களோ அதே போல சாமானிய மக்களும் கலப்படம் செய்ய பழகிவிட்டார்கள். பாலில், தேனில், டீத்தூளில் என்று சொல்லிக்கொண்டே போகலாம். நாம் கலப்படத்தை ஒழிக்கவேண்டும் என்றால் அதை அனுமதிக்கும் அரசு அமைப்பை ஒழிக்க வேண்டும். கலப்படத்தை ஒழித்தல் என்பது லாபநட்ட கணக்குப் பார்க்காத பொதுவுடமை சமூகத்தில் மட்டுமே சாத்தியம். முதலாளித்துவ உலகத்தில்… நீங்கள் தான் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்களே!

- செ.கார்கி

Pin It