மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. சமகால சமூக அரசியல் சூழலில் பெரியார், அம்பேத்கர் மற்றும் இடதுசாரிகள் பிரச்சினைகளை அணுகுவதிலும், மக்கள்  திரளைக்   கட்டமைப்பதிலும் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்களை சுயவிமர்சனங் களோடு முன் வைக்கிறது இந்தப் பேட்டி. இந்திய தத்துவ மரபில் இலக்கியங்களில் புதைந்துள்ள முற்போக்கு கருத்துகளை ஆயுதமாகப் பயன்படுத்த வேண்டும். அந்தப் பார்வையில் விவாதங்களுக்கும் விமர்சனங் களுக்குமான அவசியத்தை வலியுறுத்துகிறார். திராவிடர் விடுதலைக் கழகம் சேலத்தில் நடத்திய வேத மரபு மறுப்பு மாநாடு, இந்த திசை வழியில் மேற்கொண்ட முன்முயற்சியாகும். உரத்த சிந்தனைகளுக்கு வழி திறந்து விடும் இந்த பேட்டியை அதன் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

இந்தியத் தத்துவங்களுக்கு ஒரு சமகாலத் தன்மை உள்ளதா? அதாவது நமது சமகாலப் போராட்டங் களுக்கு இந்தியத் தத்துவங்களைப் பயன்படுத்த முடியுமா? அவ்வாறான இயல்பு இந்தியத் தத்துவங்களுக்கு உண்டா?

எந்தத் தத்துவத்திற்கும் இயல்பிலேயே சமகாலத் தன்மை அதிகம். உள்ளது என்றெல்லாம் கூறிவிட முடியாது. பேராசிரியர் ஆ.சிவசுப்பிரமணியம் ஓரிடத்தில், “வரலாற்றுத் தகவல்கள் தாமாகப் பேசாது. அவற்றை நாம் தான் பேச வைக்க வேண்டும்” என்று எழுதிச் செல்வார். தானாகவே எல்லா வரலாற்று மெய்மைகளும் பேசிவிடாது. இதுநாள் வரையிலும் இந்தியத் தத்துவங்களை வலதுசாரிகள் பக்கமாக நாம் பேசவிட்டுள்ளோம் என்பதுதான் உண்மை. வேதாந்த, வைதீகத் தளங்களிலேயே அதிகமாக இந்தியத் தத்துவங்களைப் பேச விட்டுள்ளோம். இதற்குக் காரணம் நம்முடைய பலவீனங்கள், இந்தியத் தத்துவங்கள் குறித்து நாம் ஈடுபாடும் காட்டவில்லை; முன்கூட்டியே முன் முடிவுகள் செய்துகொண்டு, அவற்றில் ஒன்றும் தேறாது என்றும், கழித்துத் தள்ள வேண்டியவை என்றும் அவசரமாகப் போய்விட்டோமோ என்ற உணர்வு எனக்குத் தோன்றுகிறது. இன்றைக்கு  வரைக்கும் இந்துத்துவா வெற்றி பெற்றிருப்பதற்கு இதுதான் காரணம்.

இந்தியத் தத்துவங்கள் குறித்து நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. ஓராள், இரண்டாள் செய்ய வேண்டிய வேலை இல்லை; நூற்றுக்கணக்கான ஆட்கள் செய்ய வேண்டிய வேலை. இந்த வேலைகளைக் கொண்டு தான், அவற்றுக்குச் சமகாலத் தன்மையைக் கொண்டுவர முடியும்.

உட்டோபியாக்கள் (கனவு காணும் சிந்தனை) ஐரோப்பாவில் மட்டும் உருவாக்கப்படவில்லை. இங்கும் கனவுத் தேசங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஜீவா அதைக் கம்பனில் கண்டுள்ளார். ரவிதாஸின் பேகம்புறா, குரு கோவிந்தரின் கால்சா ராஜ் இவை போல ஒவ்வொரு இந்திய மொழிகளிலும் ஏராளமான கனவுகள் கிடக்கின்றன. இவற்றை நாம் கையிலெடுக்கும்போது, அவை ஆயுதங்களாக, எதிர்ப்பின் அடையாளங்களாக மாற முடியும். இந்த நாட்டில் சனாதன வடிவங்கள் நிறைய கிடப்பதைப் போன்று, எதிர்ப்பின் வடிவங்கள் நிறைய இருக்கின்றன- அவற்றை நாம் கண்டறிய வேண்டும். இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், தலித்துகள், பெண்ணியவாதிகள், பழங்குடிகள் ஆகிய அனைவரும் ஒன்றுபட்டு உழைத்து எதிர்ப்பின் வடிவங்களைக் கண்டறிந்து முன்னிலைப்படுத்த வேண்டும்.

இப்போது “ஜனசக்தி” ஏட்டில் இலத்தின் அமெரிக்காவைப் பற்றி தொடர்க் கட்டுரை எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்காக இலத்தின் அமெரிக்கப் பழங்குடிகள் இலக்கியங்களைப் படித்தபோது, ஒவ்வொரு பழங்குடி இலக்கியங்களிலும் ஏக்கங்கள், போராட்ட வடிவங்கள், மாற்று குறித்த சிந்தனைத் தேடல் முதலான ஏராளமான விசயங்களைக் காண முடிகின்றது. இந்திய மக்களிலும் மிக அதிகமானோர் பழங்குடிகள் தாம். மிகக் குறைவானவர்களே மேட்டுக் குடிகள் இந்தப் பழங்குடி மக்களின் கனவுகளைத் தோண்டி எடுத்தோமென்றால், இன்றைக்குப் போராடுவதற்கான ஆயுதங்களாக மாறவும்கூடும். இதில் இன்னொரு முக்கியமான விசயம் ஒன்று உண்டு.

இடதுசாரிகளாகிய நாம் அரசியலில் நுழைந்தபோது, அரசியல் என்பதைதான் மிகப் பெரிய தளமாக நாம் அடையாளம் கண்டுகொண்டோம். அரசியல் என்பது நம்மைப் பொறுத்தவரையில், அரசு குறித்த அரசியல், காலனியம் குறித்த அரசியல், இந்திய அரசாங்கம் குறித்த அரசியல், லெனின்கூட சொன்னார் அல்லவா, “அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் முக்கியமான விசயம்” என்று. இதை முன்வைத்துதான் நாம் வேலை செய்தோம். ஆனால், அதிகாரத்தைக் கைப்பற்றுவது என்பதைவிட, ஒரு நாட்டின் பண்பாடுகளை அறிவது, உள்வாங்குவது, அவற்றுக்குள் ஊடாடிச் செல்வது, அவற்றில் சமகாலத் தன்மைகளைக் கண்டறிவது, கனவு நிலங்களைக் கண்டறிவது, நடைமுறைக்கான நிலங்களாக மாற்றுவது - அதாவது உட்டோபியாவை (கற்பனைக் கனவுகளை) மெய்யானதாக மாற்றுவது போன்ற தேவைகள் எல்லாம் இங்கு இருக்கின்றன.

பண்பாட்டு அரசியலில் இந்துத்துவவாதிகளும், திராவிட இயக்கவாதிகளும் நம்மை இடதுசாரிகள் முந்திச் சென்று விட்டார்கள். நாம் பல நல்ல வேலைகளைச் செய்துள்ளோம். ஆனால் பரவலாகச் செய்யவில்லை. வெகுசன தளத்திலும் செய்யவில்லை. சில சமயங்களில் அறிவாளிகளாக மட்டுமிருந்து, தத்துவ அறிவாளிகளாக, அரசியல்  அறிவாளிகளாக, வரலாற்று அறிவாளிகளாக மட்டுமிருந்து செய்துள்ளோம். வெகுசனத் தளத்தில் கவனக் குறைவாக இருந்துள்ளோம். உதாரணமாக, வெகுசன சினிமாக்கள் என்றாலே நமக்கொரு அலட்சிய பாவம். எங்கள் காலத்தில் எல்லாம் அப்படித்தான் நிலைமை இருந்தது. இப்போது நிலைமை கொஞ்சம் பரவா யில்லை. நம் தலைவர்கள் வெகுசன சினிமாக்களைப் பற்றிப் பேசுவது விதிவிலக்குகளாக நடந்தனவே தவிர, பொதுவாகப் பேசவில்லை என்றே சொல்லி விடலாம். வெகுசன மக்களுக்காகத்தான் நாம் போராடியுள்ளோம். நம் கட்சி (இடதுசாரி இயக்கம்) வெகுசனக் கட்சியாக ஆக வேண்டும் என்பது நம் இலட்சியம். ஆனால் நம்மை அறியாமலேயே, வெகுசனத் தளத்தைத் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளோம். ஆகவே, வெகுசனத் தளத்தைக் கவன மெடுத்தல், வெகுசனமயமாக்கல்  போன்றவற்றைக் கவனம் எடுத்துக் கொண்டால், இந்தியத் தத்துவங்களைச் சமகாலப்படுத்தும் பிரச்சினையில் பல புதிய புள்ளிகளை வெளிக்கொணர முடியும்.

இந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் புரிந்துகொள்ள முடியுமா? எப்படி புரிந்து கொள்வது? இந்தியத் தத்துவ மரபுகளில் பொருள் முதல்வாத மரபுகளின் தொடர்ச்சியாக இன்றைய இந்திய மார்க்சியர்கள் உள்ளனர் என்று சட்டோபாத்தியாயா ‘இந்திய நாத்திகம்’ நூலின் முன்னுரையில் கூறுவார். அப்படி ஒரு தொடர்ச்சியை வேர்களை வலியுறுத்த முடியுமா?

இந்தியத் தத்துவ மரபுகளுக்குள் வைத்து பெரியார், அம்பேத்கர் ஆகியோரைப் புரிந்துகொள்ள முடியுமா என்பதற்கு இரண்டு விதமாகப் பதில் சொல்லலாம்.

அம்பேத்கர் ரொம்ப வலுவாக பௌத்தத்தைக் கையிலெடுத்தார். தேவைப்பட்ட இடங்களில், அதில் சில முக்கியமான திருத்தங்களைக்கூட செய்தார். பௌத்தத்தைக் கொஞ்சம் புரட்சித்தன்மை கொண்டதாக மாற்றினார். சமூக மய்யப்படுத்தினார். அதனால் அம்பேத்கருக்கு இந்திய மரபுகளுக்குள் வேர்கள் கிடையாது என்று சொல்ல முடியாது. ஏனென்றால், தனது வேர்களை வேகமாகவும், அழுத்தமாகவும், தொடர்ச்சியாகவும் பௌத்தத் திற்குள் அம்பேத்கர் தேடியுள்ளார். அவர் பௌத்தத்தை முன் வைத்து மார்க்சியத்தை எதிர்கொள்ளவும் முயற்சி செய்தார் என்று சொல்ல முடியும். ஆகவே அம்பேத்கருக்கு இந்திய மரபுகளுக்குள் வேர் வலுவாகத்தான் இருக்கின்றது.

இதற்கு இணையாக இங்கு அயோத்திதாச பண்டிதர் வேலை செய்தார் என்பதையும் பார்க்க முடியும். அம்பேத்கருக்கு முந்தியவர் அயோத்திதாசர். அவரும் பௌத்தத்திற்குச் சென்றுசேரும் ஒரு நிலை இருந்தது. ஆகவே, தலித் இயக்கம் இந்த மரபு சார்ந்த வேரை நன்கு தேடியுள்ளது என்று தோன்றுகிறது.

வேகமாக, மேலோட்டமாகப் பார்க்கும்போது, பெரியாரைப் பொறுத்தமட்டில், அவருக்கு மூன்று விதமான வேர்கள் காணப்படுகின்றன. ஒன்று சாருவாகம் - உலகாயதம். இதைப் பற்றி, பிரகிருதிவாதம் அல்லது மெட்டிரியலிசம் என்று தலைப்பிட்டு அவரே பேசியுள்ளார். மற்றொன்று நியாய-வைசேடிகத்தை ஓரளவு சொல்லலாம். இதனுடன் பௌத்தக் கூறுகளையும் இணைத்து ஏற்றுக் கொண்டுள்ளார். இதைப் பற்றி இப்போது வெளியாகியுள்ள, ‘இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும்’ என்ற எனது நூலில், ‘பெரியாரும் பௌத்தமும்’ என்ற கட்டுரையில், அவரது அனாத்மாவாதம், துக்கம், துக்க நிவாரணம் போன்ற கருத்தாக்கங்கள் குறித்து எழுதியுள்ளேன். பெரியாரிடமும் சாருவாகம்-உலகாயதம், நியாய வைசேடிகம், பௌத்தம் ஆகிய வேர்கள் இருக்கின்றன. ஆனால் இந்த வேர்களை எல்லாம் அவர் ரொம்ப சிலாகிக்கவில்லை. அம்பேத்கர்கூட தன் வேர்கள் குறித்து அவ்வப்போது சிலாகித்துப் பேசியுள்ளார். ஆனால் பெரியார் அந்த மாதிரி சிலாகித்துப் பேசுவதற்காக அந்தத் தத்துவ நூல்களை மெனக்கெட்டுப் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபடவில்லை. அவரது கேள்வி ஞானம், சில அறிஞர்களுடனான உரையாடல், தேர்ந்தெடுத்த நூல்களைப் படிப்பது ஆகியவையே அவருக்குப் போதுமானதாக இருந்தது. திருக்குறளில் பெரியார் நுழைந்து பார்த்துள்ளார். திருக்குறளின் கருத்துகளை ஏற்றுக் கொண்டு உள்ளார். விமர்சனங்களையும் வைத்துள்ளார்.

சமூக வரலாற்று வெளிகளில் தீவிரமான உரையாடல்களுக்கு ஒருவர் முயலும்போதே, மரபு சார்ந்த வேர்கள் அவருக்குக் கிடைத்துவிடும். மரபார்ந்த வேர்கள் என்பது, கண்ணை மூடிக் கொண்டு ஒன்றை ஏற்றுக் கொள்வது என்பதல்ல. வேர் என்பது விமர்சன ரீதியானதாகவும் இருக்க முடியும். நிராகரிப்பதாக இருக்கக் கூடாது. நிராகரிப்பு வேறு. விமர்சனம் என்பது வேறு. நிராகரிப்பதை வேர் என்று சொல்ல முடியாது. அப்படிப் பார்க்கும்போது பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

இன்னொரு கோணத்திலிருந்து இந்திய மரபுகளில் பெரியார், அம்பேத்கருக்கு வலுவான வேர்கள் உண்டு என்று சொல்ல முடியும். அது என்னவென்றால், அவர்கள் பேசிய பிரச்சினைகளின் சமூகவியல் பரிமாணம், சாதி, வருணம், பார்ப்பனியம், இவர்கள் காலத்தில் முன் வைக்கப்பட்ட இந்துமதம் என்னும் அடையாளம், அந்த இந்துமதத்தை வைத்து ஒரு தேசியத்தை உருவாக்கும் அரசியல் ஆகிய பிரச்சினைகளின் மூலமாகவும் அந்த வேர் கிடைக்கின்றது. அதாவது, எந்தப் பிரச்சினையை எடுத்துப் பேசுகிறார்கள், எந்தப் பிரச்சினையை முன்னிலைப்படுத்துகின்றார்கள் என்பது மூலமாகவே, அந்த மரபின் உரையாடல்களில் ஓர் இடம் கிடைத்து விடுகின்றது.

இந்த அளவுக்கு மார்க்சியர்களுக்கு அந்த வேர்களில் வலு இல்லை. நமக்கு உலகாயத-சாருவாக வேர் உண்டு என்று தேவிபிரசாத் சொல்கிறார். ஆனால் அந்தத் தத்துவச் சொல்லாடல்களில் நமக்கு ஒரு தொடர்ச்சி இல்லை. நாம் (இடதுசாரிகள்) சாதி, வருணம், பார்ப்பனியம், இந்துமதம் பற்றியெல்லாம் அதிகமாகப் பேசவில்லை. மார்க்சியர்களைப் பொறுத்தமட்டில், இதில்தான் பிரச்சினை ஏற்படுகின்றது. செவ்வியல் மார்க்சிய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், மார்க்சியர் சமூகரீதியாக சாதியைவிட, வர்க்கத்தை முன்னிலைப்படுத்தி விட்டார்கள். நடைமுறைத் தளத்தில் சாதியை எல்லாம் தொட்டு இருக்கின்றார்கள். இல்லையென்று சொல்ல முடியாது. விவசாய இயக்கத்தை நடத்தியபோது, சாதிப் பிரச்சினையைத் தொட்டுச் சென்றுள்ளார்கள். நிலச்சுவான்தாரின் சாதி என்ன? கூலி விவசாயிகளின் சாதி என்ன? என்று தெரியாமல் அங்கு படுகொலைகள் நடக்காது. ஆனால் அம்பேத்கர் போல ஏராளமாகக் கருத்தாக்கத் தளங்களில் நுழைந்து நாம் விவாதிக்கவில்லை.

ஆகவே அம்பேத்கருக்கும், பெரியா ருக்கும் மரபில் இடம் இல்லை என்று சொல்ல முடியாது. மரபில் இடம் வேண்டுமானால், வேதாந்தத்தைப் பேசினால்தான் உண்டு. சமஸ்கிருதத்தை ஏற்றுக் கொண்டால்தான் உண்டு என்ற வாதம் மிகமிக மொன்னையானது. இது இவர்களிடத்து கிடையாது. ஏன் புத்தரிடமும் அந்த ஏற்பு இல்லை தானே. கபீரிடம் கடுமையான பார்ப்பனிய, சனதான, மூடநம்பிக்கை எதிர்ப்பு உண்டு.

ஆகவே பெரியார், அம்பேத்கர் தொட்ட பிரச்சினைகளுக்குச் சமூக ரீதியான ஒரு வரலாறு இருக்கின்றது. இந்தப் பிரச்சினைகள் நேற்று, இன்று ஆரம்பித்தவை அல்ல; அவை இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் ஆரம்பித்தவை. அந்தப் பிரச்சினை களைப் பேசிய அம்பேத்கர், பெரியார் ஆகியோரும் அந்த மரபுகளுள் நின்றும், தாண்டியும்அந்தப் பிரச் சினைகளை எதிர்த்து, வெவ்வேறு தளங்களில் நின்று பேசுகிறார்கள்.

(தொடரும்)

Pin It