இப்புவி மீதினிலே- வாழ்க்கை
இன்பமாய் ஏழைக்கு என்றுமில்லை
செப்பிடு மானிடனே- நித்தமும்
செத்துப்பி ழைப்பது உத்தமமோ!

கொஞ்சமாய் சிந்தனைசெய்!- உழைப்போர்க்குக்
கொல்கிற வறுமையை நல்கியதார்
பஞ்சமும் பட்டினியும்- இன்னமும்
பாடுப டுவோரைக் கூடுவதேன்

பாரினில் பாட்டாளியை- வறுமை
பாடாய்ப்ப டுத்துதல் கூடாதினி
ஏரினைப் பிடிப்பவரும்- கூடாது
ஏழ்மையில் இம்மண்ணில் ஆழ்ந்திட வே!

உண்ணஉ ணவுயில்லை- ஆனாலும்
ஊருக்குள் சாதிகள் நூறுவுண்டு
பண்ணைஇ சைத்திடடா!- தம்பி
பாழும் சாதியை வீழ்த்தவென்று

மதமொரு புறமிருந்தே- மண்ணில்
மக்களை மாட்டுது சிக்கலிலே
நிதமொரு காரணமே- சொல்லி
நிம்மதி குலைக்குது உண்மையிலே

அடிமைக ளாய்க்கிடந்து- ஆதியில்
அரசரைச் சுமந்தோம் சிரசுகளில்
மிடிமையி லேகிடந்து- வீட்டு
மிருகங்க ளாகவே இருந்துவந்தோம்

பண்ணையில் அடிமைகளாய்- பெரும்
பட்டினி யில்தினம் கெட்டழிந்தோம்
கண்களில் லாதவர்போல்- கல்வி
கற்றிடும் வழிவகை யற்றிருந்தோம்

ஆலையின் கொடும்பிடியில்- கிடந்து
அல்லிலும் பகலிலும் அல்லலுற்றோம்
தோலைம றைத்திடவே- நல்ல
துணிமணி இன்றியே அணியிழந்தோம்

மென்பொருள் மெல்லவந்து- எங்கள்
வேலையயைப் பறிக்கிற வேளையிலே
துன்புற நேர்கிறதே!- உலகில்
தொழிலாளி வர்க்கமும் அழிகிறதே!

பிரளயம் தோன்றுதுபார்!- இன்று
பெரும்புரட் சியுமே வருகுதுபார்!
குரலையும் உயர்த்துதம்பி!- செங்
கொடியினைக் கைகளில் பிடித்துக்கொண்டே!

- மனோந்திரா

Pin It