உலகமயமாக்கம், தாராளமயமாக்கம், தனியார்மயமாக்கம் என்று பல பெயர்களில் வர்ணிக்கப்படும் மாற்றங்கள், நலிந்த ஏழை மக்களுடைய வாழ்க்கையின் மீது கொடூரமான தாக்குதல்களையும், பாதிப்புகளையும் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. மேலும், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஆழமாக ஏற்படுத்தும் அடிப்படையில், இந்த உலகளாவிய மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

women 560உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு ஆகிய அமைப்புகளின் பொருளாதார பலமும், ஆதிக்கமும் கடந்த இருபதாண்டு காலமாக வல்லரசு நாடுகளின் நலனைப் பாதுகாப்பதற்காகவும், காலனி நாடுகளாக இருந்து விடுதலை பெற்ற நாடுகளையும், மூன்றாம் உலக நாடுகளையும் சுரண்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன‌.

பறிபோகும் வேளாண் வேலைகள்

உலகமயமாக்கம் மூலம் அந்நியச் செலாவணியை ஈட்ட வேண்டும் என்பதற்காக, ஏற்றுமதியை ஊக்கப்படுத்தும் வளர்ச்சிப் பாதை பின்பற்றப்படுகிறது. இதையொட்டிப் பல பகுதிகளில் உணவுப் பயிர் சாகுபடி குறைந்து, மாற்றாக பணப்பயிர் சாகுபடி வளருகிறது. பழங்கள், காய்கறிகள், அழகுமிக்க ஆடம்பரப் பூக்கள் என்று புதிய வேளாண் சாகுபடி முறை புகுத்தப்படுகிறது. இதனால் ஏழை மக்களின் உணவுப் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும், உணவுப் பயிர் சாகுபடியின் போது கிடைக்கும் வேலையில் ஐந்தில் ஒரு பங்கு கூட பணப்பயிர் சாகுபடி செய்யும் போது கிடைப்பதில்லை. எனவே, பெண்களுக்கான வேலை வாய்ப்பு வேளாண்மையில் குறைந்து வருகிறது. உலகச் சந்தையின் தேவைக்கேற்றவாறு நமது உழவர்கள் பயிரிட வேண்டும் என்ற கட்டாயம் உருவாக்கப்படுவதன் மூலம், உலகச் சந்தையில் நாம் உற்பத்தி செய்து விற்கும் விளைபொருட்களுக்கான தேவை திடீரென்று குறையலாம் அல்லது கூடலாம். தேவை குறைந்து, விலையும் குறையும்போது பயிர் செய்த சிறு உழவர்கள், நடுத்தர உழவர்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

தொடரும் உழவர்களின் தற்கொலைகள்

வீரிய பருத்தி விதைகளைப் பயன்படுத்தி பயிர் செய்து, உரம், பூச்சி மருந்து, விதைகள் ஆகியவற்றை வாங்கியதற்கான கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் அதே பூச்சி மருந்தைக் குடித்து உழவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயரங்கள் தொடர்கதையாவது ஒருபுறம், மறுபுறம் கணவர் தற்கொலை செய்து கொண்டு இறந்த பின்பு கடன் சுமையையும், குடும்பச் சுமையையும் தாங்கி வாழ வேண்டிய கொடுமைக்குப் பெண்கள் உள்ளாக்கப்படுகிறார்கள்.

பாதிக்கப்படும் சமூக வாழ்வு

நெல் வேளாண்மையில் பெண்கள் ஈடுபட்ட பகுதிகளில் அவர்களது சமூக, பொருளாதார நிலையும் அவர்களது உழைப்புக்குக் கிடைத்த தகுதியும் சற்று அதிகமாக இருந்தது. வேளாண்மையில் பெண்கள் செய்யும் வேலைக்கான தேவை எங்கு அதிகமாக உள்ளதோ, அங்கு பெண் சிசுக் கொலை போன்ற பெண்ணினத்திற்கு எதிரான கொடுமைகள் அதிகமில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வேளாண்மைத் துறையில் பெண்களுக்கான வேலை வாய்ப்புகளும், அவர்களுக்கான பொறுப்புகளும் குறையும்போது அவர்களது சமூக வாழ்வும் பாதிக்கப்படுகிறது.

மானியத்தில் வெட்டு

உலகச் சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உழவர் குடும்பங்கள் பலிகடா ஆக்கப்படுவதும், அதே வேளையில் தனியார் மயமாக்கக் கொள்கைகளினால் அரசுகள் வேளாண்மைக்கு வழங்கும் மானியத்தையும், நீர்ப்பாசனத்திற்காக பொதுப்பணித்துறை மூலமாக மேற்கொள்ளும் செலவுகளையும், மின்சாரத்திற்கான மானியத்தையும் வெட்டிக் குறைப்பதால் உழவர்கள் பாதிக்கப்படுவதும் வெளிப்படையான உண்மையாகும்.

ஒப்பந்த முறையில் சுரண்டல்

இந்தியாவில் 90 விழுக்காடு பெண்கள், அமைப்பு சாராத்துறைகளில் பணி செய்கின்றனர். ஏற்றுமதி வாய்ப்புகளைப் பயன்படுத்தி உலக சந்தைக்காக உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் வேலைகளைத் தொழிலாளர்கள் அவரவர் வீட்டில் செய்யும்படியான ஒப்பந்த முறையில் விடுகின்றன. ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் மட்டுமல்ல, முறை சார்ந்த துறையில் உள்ள பல நிறுவனங்கள் தொழிலாளர்கள் பாதுகாப்புச் சட்டங்களை மீறுவதற்கும் இந்த ஒப்பந்த முறையைக் கையாளுகின்றன. இதில் அதிக அளவில் பாதிக்கப்படுவது பெண் தொழிலாளர்கள் தான்.

பாரம்பரியத் தொழில்களில் வேலை பறிபோகும் கொடுமை

அமைப்பாக்கப்பட்ட துறைகளில் உழைக்கும் பெண்கள் மிகக்குறைந்த விழுக்காடே உள்ளனர். அரசுப் பள்ளிகளில் ஆசிரியைகளாக, ஊட்டச்சத்து, சத்துணவு, தாய் சேய் நல மையம் ஆகியவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. மிகவும் குறைந்த ஊதியத்திற்கு உழைக்கின்றனர். அரசுத் துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறைக்கப்படுவதாலும், அரசுத்துறைகள் தனியார் மயமாக்கப்படுவதாலும் இவர்கள் எப்போதும் வேலையிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் உள்ளது. உலகமயமாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதால் முந்திரி, கயிறு, கதர், பீடி, கைத்தறி, மீன்பிடிப்பு, தோல் பதனிடும் தொழில், தோல்பொருள் உற்பத்தி போன்ற பாரம்பரியத் தொழில்கள் மிகுந்த நெருக்கடியில் உள்ளன. இத்தொழில்களில் பெண்கள் அதிக எண்ணிக்கையில் வேலை செய்கின்றனர். தற்போது வேலையின்றி பாதிக்கப்பட்டு உள்ளனர். பட்டுத் தொழிலில் இறக்குமதி கொள்கைத் தாராளமயமாக்கப்பட்ட பிறகு வெளிநாட்டிலிருந்து எந்தவிதமான தங்கு தடையின்றி, பட்டு நமது நாட்டிற்குள் நுழைந்து விட்டது. பட்டு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த பெண்கள் வேலை வாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாலைகள், விசைத் தறிகள், கைத்தறிகள் போன்ற தொழில்களில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைந்ததாலும், சுதந்திர வணிகத்தாலும் நவீன இயந்திர மயமாக்கத்தினாலும், இவற்றில் ஈடுபட்டு வந்த பெருவாரியான பெண்களின் வேலை பாதிக்கப்பட்டுள்ளது. உலகமயமாக்கத்தினால் இந்தியாவின் குடிசை மற்றும் சிறு தொழில்கள், பாரம்பரியத் தொழில்கள் நலிவடைந்து சீரழிந்து வரும் வேளையில் இதில் ஈடுபட்டு வரும் பெண்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது.

இயந்திரமயமாக்கப்பட்ட நவீன விசைப் படகுகளையும், உயர் தொழில் நுட்பத்தையும் மீன்பிடித் தொழிலில் பல தனியார் முதலாளிகள் பயன்படுத்துவதால், ஏழை மீனவர்களின் மீன்பிடிப்புத் தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கயிறு தயாரிக்கும் தொழிலில் பெண்கள் செய்யும் வேலைகள் இயந்திரமயமாக்கப்பட்டதால், பெண்களுக்கு வேலை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

குறைந்த கூலிக்கு உழைப்பைச் சுரண்டுதல்

பன்னாட்டு நிறுவனங்கள் ஏழை மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் தங்களின் தொழிற்சாலைகளை அமைப்பதற்கு முக்கிய காரணம் உலகச் சந்தையில் விற்கப்படும் இந்தப் பொருட்களின் விலை குறைவாக இருந்தால்தான் போட்டிப் போட்டு விற்க முடியும். மூன்றாம் உலக நாடுகளில்தான் தொழிலாளர்களுக்கான ஊதியத்தைக் குறைத்தும், தொழிலாளர்களின் பாதுகாப்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமலும் உற்பத்திச் செலவை குறைக்க முடியும். உலகச் சந்தையில் ஏற்படும் சரிவுகளாலும், மாற்றங்களாலும் இந்தத் தொழிற்சாலைகள் எப்போது வேண்டுமானலும் மூடலாம். பணி நிலைப்பு கிடையாது. பணிப்பாதுகாப்பும் இல்லை. பெண்கள் அமைதியாகப் பணியாற்றுவார்கள், எந்த வகையான தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபடமாட்டார்கள். கேள்விகள் கேட்காமல் அடிபணிந்து விசுவாசமான ஊழியர்களாக இருப்பார்கள் என்பதால், பன்னாட்டு நிறுவனங்கள் அதிகமாக பெண்களைப் பணிக்கு அமர்த்துகின்றன. இதுபோன்ற நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு...

 குறைந்த பட்ச ஊதியம் கிடையாது
 பாதுகாப்பான, நலவாழ்வான பணிச்சூழல் கிடையாது
 பேறுகால விடுப்பு இல்லை
 முறையான ஊக்கத் தொகை (போனஸ்) இல்லை
 தொழிற்சங்கம் அமைப்பதற்கான உரிமை இல்லை
 பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கும், நிறுவனங்களின் முதலாளிகள் மற்றும் அதிகாரிகளின் பாலியல் சுரண்டலுக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.
 மிகை நேரப்பணி செய்ய வேண்டும்
 கட்டாயக் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்படும் கொடுமை

ஏற்றுமதி உற்பத்தி வளாகங்களில் பணி புரியும் பெண்கள் திருமணமாகாமல் இருக்க வேண்டும். திருமணமாகிவிட்டால் வேலையிலிருந்து விரட்டப்படுவார்கள். திருமணமான பெண்களுக்குக் காட்டய கர்ப்ப ஆய்வு செய்து கர்ப்பம் இல்லாவிட்டால் மட்டுமே வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். தங்கள் பணியைப் பாதுகாத்துக் கொள்ள அடிக்கடி கருச்சிதைவு செய்து கொண்டு உடல்நிலை பாதிக்கப்ப‌டுகின்றனர். தொடர்ந்து ஓய்வில்லாமல் உழைப்பதாலும், வீட்டுப் பணிகளைச் செய்வதாலும் மன, உடல் அடிப்படையில் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்,

பாதுகாப்பற்ற வேலை வாய்ப்புகள்

உலகமயமாக்கல் பெண்களின் வேலை வாய்ப்பு ஓரளவு அதிகரிப்பதாகப் புள்ளி விவரங்கள் வழங்கப்பட்டாலும் அவர்களுக்கு கிடைக்கும் வேலையின் தன்மை மற்றும் நிபந்தனைகள் எந்த பாதுகாப்பையும் உத்தரவாதத்தையும் ஏற்படுத்த‌வில்லை. தற்காலிக முறை, ஒப்பந்த முறை, முறைசாராத்துறை வேலை, வீட்டிலிருந்தே செய்யும் வேலைகள் போன்றவையே பெண்களுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. எனவே, உலகமயமாக்கல் பெண்களுக்கு வேலை வாய்ப்புக்களையும், வேலை பாதுகாப்பையும், வாழ்க்கை மேம்பாட்டையும் ஏற்படுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

வேண்டாம் சாவின் வணிகர்கள்

மனிதநேயமற்ற கட்டமைப்பு, சீரமைப்புகள் பெண்களின் முதுகையே முதலில் ஒடிக்கின்றன. இந்த அப்பட்டமான அசமத்துவம் உலகின் பெண்களே நீங்கள் ஒன்றுபடுங்கள், போராடுங்கள் இல்லையெனில் வாழ்க்கையை இழந்து விடுவீர்கள் என எச்சரிக்கிறது. பெண்கள், “வேண்டாம் சாவின் வணிகர்கள், வேண்டும் வாழ்க்கையின் பாதுகாவலர்கள்” என்று குரல் எழுப்ப வேண்டும்.

- பி.தயாளன்

Pin It