தமிழகம் முழுவதும் 6800 சாரயக் கடைகளையும் 4271 டாஸ்மாக் பார்களையும் அரசே நடத்தி வருவதுடன் 2013-2014 ஆண்டில் 21 ஆயிரத்து 641 கோடிரூபாய் வருமானம் ஈட்டி ஒரு சாராய சக்கரவர்த்தியாக தமிழக அரசு அமர்களப்படுத்தி வருகிறது. வேறு வார்த்தைகளில் சொன்னால் பிறக்கும் குழந்தைகளுக்கும் மாணவப் பருவத்திலேயே சாராயம் கொடுத்து தமிழ் சாதிப் பெண்கள் இளம் வயதில் தாலி அறுக்க காரணமாகிறது. சாராயத்தை ஒழிக்கும் படி ஆர்வலர்கள், அறிஞர்கள் கூறுவதை அஞ்ஞானம் என்று எடுத்தெறிந்து விட்டு தன்போக்கில் குடிமகன்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு வருகிறது. 3000 கோடி ரூபாய் கூடுதல் வருவாயை இலக்கு வைத்து சாராயத்தின் விலை அதிகரிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசாங்கம் ஆயத்தீர்வையை அதிகரித்திருப்பதை தமிழக அரசு காரணம் காட்டுகிறது. விலை அதிகரித்த போதிலும் விற்பனையில் தொய்வில்லை என்று தமிழ் நாடு வாணிப கழக (TASMAC) அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விலை உயர்த்தினால் விற்பனை குறையும்; அதன் காரணமாக மதுப் பிரியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தலாம் என்று யாராவது கருதினால் அது வற‌ட்டு வாதம்.

tasmacநடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் மதுவிலக்கு மற்றும் அமலாக்கத்துறை கோரிக்கை மீதான விவாதத்தின் போது, “தமிழக அரசு மதுவிற்பனை செய்வது தீமையிலும் ஒரு நன்மை” என அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார். வழிந்தோடச் செய்யும் சாராய நதிகளில் மூழ்கி மூர்ச்சையாகிக் கொண்டிருக்கும் மக்களை தமிழக அரசே மக்களை நையாண்டி செய்யும் பேச்சு இது. திருவள்ளுவர் காலம் முதல் மதுவிலக்கு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. மதுவை முழுமையாக ஒழிக்க முடியாது. மதுக்கடைகளை மூடினால், கள்ளச் சாராயம் விற்பனையாகி சமூக விரோதிகளின் கைக்கு பணம் சென்றுவிடும். அந்தப் பணத்தை மடை மாறி விடும் வகையில் தான் தமிழக அரசே (வேறு வழியில்லாமல் தலைவிதியே என்று) மதுக்கடைகளை நடத்திவருகிறது என்ற பொருளில், வேறு சொற்றொடர்களில் அமைச்சர் பேசியிருக்கிறார்.

சமூக விரோதச் செயல் சாராயம் விற்பதா? கள்ளச்சாராயம் விற்பதா என்று அமைச்சர் நத்தம் விஸ்வநாதனை வைத்து பட்டி மன்றம் நடத்தலாம் போல! சாராயம் விற்பவர்கள் சமூக விரோதிகளாக அன்றி நன்மக்களாக இருக்க முடியாது, அது அரசாக இருந்தாலும் சரிதான். “நீதான் ஒரு மிருகம், மதுவில் விழும் நேரம்” என்று அ.தி.மு.க வின் நிறுவனத் தலைவரும் முன்னால் முதல்வருமான எம்.ஜி.ஆர் பாடிய திரைப்பாடலை ஒரு முறை முதலமைச்சருக்கு யாராவது சட்டமன்றத்தில் பாடி நினைவூட்டலாம்.

“அத்தான் வீட்டுக்கு வந்த தம்பி, அக்கா நகைகளை களவாண்டு வைத்துக் கொண்டானாம்? ஏன் களவாண்டாய் என கேட்டதற்கு, திருடர்கள் யாரும் திருடிவிடக்கூடாது என்பதற்காக பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டேன்” என்றானாம்! அதுபோல, ஏன் சாராயம் விற்கிறீர்கள் என்று கேட்டால், கள்ளச்சாராய வியாபாரிகளை நோக்கி கைகாட்டுகிறது தமிழக அரசு.

கள்ளச்சாராயம் காய்ச்சுவது சட்டம் ஒழுங்குப் பிரச்சனை. அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம் போடலாம். சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை கையாளத்தான் காவல்துறைக்கு ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பணம் நிதியாக ஒதுக்கப்படுகிறது; நவீன உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், அரசு சாராயக்கடையை மூடினால் கள்ளச் சாராயம் பெருக்கெடுத்து ஓடும் என்று ஓர் அமைச்சர் சட்டமன்றத்தில் குறிப்பிடுவது, தமிழ் நாட்டு காவல் துறை சட்டம் ஒழுங்குப் பிரச்சனையைக் கையாள்வதில் தோல்வி கண்டிருப்பதை அரசே ஒப்புக்கொள்வது போல இருக்கிறது.

அரசு சாராயக் கடைகளை மூடினால் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிக்கும் என்கிறார் அமைச்சர். கள்ளச் சாராயம் இனியாரும் காய்ச்சி விற்க மாட்டோம் என்று அனைவரும் கற்பூரத்தை அனைத்து சத்தியம் செய்தாலும் தமிழக அரசு நம்பாது. சீ...சீ....உங்க பேச்சை நம்ப முடியாதுப்பா..... என்று சொல்லும் அரசு. அரசே சாராயம் காய்ச்சி விற்பதற்கு இப்போது சில பல கள்ளச் சாராய வியாபாரிகளும்; கள்ளச் சாராய சாவுகளும் தேவைப்படுகிறது. அரசு விற்பனை செய்யும் சாராயத்தை தயாரிப்பது அரசு பொதுத் துறை நிறுவனம் அல்ல; அது ஆளும் கட்சியினருக்கு சொந்தமானது. அந்த நிறுவனங்கள் தயாரிக்கும் மதுவை அரசு விலைக்கு வாங்கி விற்று ஆதாயம் அடைகிறது. இதன் மூலம் சாராயம் தயாரிக்கும் ஆளும் கட்சியினருக்கு சொந்தமான நிறுவனம் பல கோடி ரூபாய் ஈட்டுகிறது. டாஸ்மாக் என்பது தமிழ் நாடு வாணிபக் கழகம். தமிழ் நாடு வாணிபக் கழகத்தின் மூலம் கடை நடத்தி, ஆளும் கட்சியினர் சாராயம் விற்றுப் பிழைக்கின்றனர். இதற்கு கள்ளச்சாராய வியாபாரிகள் மீதும் குடிமகன்கள் மீதும் அரசு பழி போடுகிறது.

காவல்துறையில் மது விலக்கு துறை என்று ஒரு பிரிவு உள்ளது. அத்துறையில் சிறந்த பணி செய்வோருக்கு வருடம் தோறும் பரிசும், விருதும் வழங்கப்படுகிறது. அந்த விருது கள்ளச்சாராத்தை தடுக்கும் அதிகாரிகளுக்கு இப்போது வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசு மதுவைத் தடை செய்து, பின்னர் மக்கள் மத்தியில் சாராயத்தை கள்ளத்தனமாக தயாரித்து விற்பவர்களை கண்டுபிடித்து தடுக்கும் முகமாகவே மதுவிலக்கு அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது.

மக்களையும் மதுவையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் சொல்வது மக்களை அவமானப்படுத்திய செயலாகும். தமிழக அரசு மீது மானபங்க (defamation) வழக்கே தொடரலாம்.

1971 ல் தமிழக முதல்வராக கருணாநிதி வருவதற்கு முன்பு தமிழகத்தில் குடிகாரர்களின் எண்ணிக்கை மிக சொற்பமானதே. 1971ல் காமராஜர், ராஜாஜி, காயிதேமில்லத் போன்ற தலைவர்களின் வேண்டுதல்களையும் புறக்கணித்து விட்டு அன்று முதல்வராக இருந்த கருணாநிதி, அரசு சாராயக் கடைகளை திறந்தார். அன்று முதல் படிப்படியாக தமிழ் சமூகம் குடிகார சமூகமாக பரிணாமம் அடைந்து வந்துள்ளது. மதுவிலக்கை அமல் படுத்துவதில் எம்.ஜி.ஆர் கூட தோல்வி அடைந்தார். 1971 முதல் 2014 வரை, இடையில் சிலமாதங்கள் எம்.ஜி.ஆர் ஆட்சியில் மூடப்பட்டதை தவிர, தமிழகத்தில் சாராயம் பெரும் சாம்ராஜ்யம் கண்டுள்ளது. அன்று குடிக்காத நல் சமூகங்கள் கூட இன்று தப்பவில்லை. அன்று 20 சதவீதமாக இருந்த குடிகாரர்களின் எண்ணிக்கை இன்று 74.3 சதவீதமாக அதிகரித்து விட்டது. குடிகாரனின் குறைந்த பட்ச வயது 12 ஆக குறைந்திருக்கிறது. மதுரையில் ஒரு பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் உட்காரும் பெஞ்சை விற்று, “அரசு சாராயம்” வாங்கி குடித்தது பத்திரிக்கைகளில் வந்தது.

குடியினால் இளவயது மரணங்கள் அதிகரித்துள்ளன. பாலியல் பலாத்காரங்கள், குழந்தைகள் மீதான வன்முறை, பெண்கள் சீண்டப்படுதல் அனைத்துக்கும் அரசு விற்கும் சாராயமே காரணம் என்று ஓர் அறிக்கை கூறுகிறது. அரசுதான் மக்களிடம் காலையில் பணப் புழக்கத்தை கொடுக்கிறது. பின்னர் மாலையில் சாராயத்தைக் கொடுத்து அரசே பணத்தை பறித்துக் கொள்கிறது. இவ்வாறு தான் தமிழ் நாட்டில் பொருளாதார சுழற்சி நடைபெறுவதாக நாம் அடித்துச் சொல்லலாம். கள்ளச்சாராயத்தை ஒழிப்பது தான் அரசின் ஒரே நோக்கம், மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கிக் கொள்வது நோக்கமில்லை யென்றால், அரசே கட்டணமில்லா சாராயம் வழங்கலாமே? அமைச்சரின் அறிக்கை யார் காதில் பூசுற்ற?

தமிழக அரசு வழங்கும் அனைத்து நல திட்டங்களும் இந்த சாராயத் தொழிலில் இருந்து தான் பெறப்படுவதாக முந்தைய கருணாநிதி அரசு கூறியிருந்ததை நினைவில் கொள்ள வேண்டும். குடும்பத் தலைவனின் ஆரோக்கியத்தையும் ஆயுளையும் அழித்து விட்டு குடும்பப் பெண்களுக்கு இலவசப் பொருட்களை கொடுப்பது புத்திசாலித்தனமான அரசாக இருக்க முடியாது. இந்திய குடிமக்களை குடிமகன்களாக சீரழித்து விட்டு அவர்களிடம் இருந்து கறக்கப்பட்ட பணத்தில் இருந்து அரசு தரும் இலவசங்களை நல் உணர்ச்சியுள்ள மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

முதல்வரின் சமிக்கை இல்லாமல் அமைச்சர் அறிக்கை வாசிக்க முடியாது என்பதால் தமிழ் சாதிப் பெண்களின் குடும்ப வாழ்வை சிதைக்கும் சாராயத்தை நியாயப்படுத்தும் அறிக்கை தமிழக முதல்வரின் அறிக்கை என்பதே சரி!

Pin It