மனிதன் சாவை நாடும் மனநிலையும் சூழலும் தனித்துவம் வாய்ந்தவை. ‘உலகின் முக்கியப் பிரச்சினையே தற்கொலைதான்’ என்றார் ஆல்பர்ட் காம்யூ. ஒரு மனிதன், தன்னுடைய சாவை விழைந்து ஏற்பதற்குத் தனிப்பட்ட மனநிலை மட்டுமின்றி, அவன் வாழும் சமூகத்தின் நிர்ப்பந்தமும் முக்கியக் காரணமாகின்றது. அதாவது, ஒரு மனிதன் தன்னுடைய சாவை நாடிச் செல்வது தனிமனிதப் பிரச்சினையன்று; சமூகப் பிரச்சினை. சங்க இலக்கியத்தின் சில இடங்களில் அக்கால மகளிர் தங்களுடைய சாவை விரும்பி ஏற்றுக்கொள்ளும் விதமான நிகழ்வுகளைக் காணமுடிகிறது. சடங்கு வயப்பட்ட இந்நிகழ்வுகளின் பின்னணியில் உள்ள சமூக அசைவியக்கத்தை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

மனிதன் சமூக உறவுகளால் கட்டப்பட்டவன். சமூக இயக்கத்தின் அடித்தளமாய் விளங்குவது பொருளாதாரம். மேல்கட்டுமானம் சார்ந்த சமூக உறவுகள் அனைத்தும் அடித்தளமான பொருளாதாரத்தாலேயே நிர்ணயிக்கப்படுபவை. ‘வரலாற்றின் வழிவந்த ஒவ்வொரு சகாப்தத்திலும், அப்போது ஓங்கிய நடப்பிலுள்ள பொருளாதார உற்பத்தி, பரிவர்த்தனை முறையும் இதிலிருந்து இன்றியமையாதவாறு பெறப்படும் சமூக அமைப்பு முறையும்தான் அந்தச் சகாப்தத்தின் அரசியல், அறிவுத்துறை வரலாற்றின் அடிநிலையாகின்றது. இந்த அடிநிலையிலிருந்து மட்டுமே அந்த அரசியல், அறிவுத்துறை வரலாற்றினை விளக்க முடியும் என்பர்.’ (பிரடெரிக் ஏங்கெல்ஸ், கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை (1888 ஆம் ஆண்டு ஆங்கிலப் பதிப்பின் முகவுரை), முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1975, பக்.20.)

ஆதிகாலத் தாய்மைச் சமூகத்தில் பெண் மனிதவளத்தைப் பெருக்கும் ஜீவாதார சக்தியாக மதிக்கப்பெற்றாள். ஆணாதிக்கச் சாயல்கள் ஏதும் படியாத அச்சமூகத்தினை தொடர்ந்து, பின்னர் வந்த உடைமைச் சமூகத்தின் தோற்றம் பெண் வகித்து வந்த சமூகப் பாத்திரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. மனிதவள உற்பத்தி என்பது பெண்ணை மட்டுமே சார்ந்ததன்று எனும் உண்மை ஆணாதிக்கச் சமூகத்தை உருவாக்கியது. அதாவது, பெண் மையம் தகர்க்கப்பட்டு ஆண் மையச் சமூகம் தோற்றம் பெற்றது. இதனையே ‘தாயுரிமை தூக்கியெறியப் பட்டது பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வி’ என்பார் ஏங்கெல்ஸ் (பிரடெரிக் ஏங்கெல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம், அயல்மொழிப் பதிப்பகம், மாஸ்கோ, பக்.129.).

நிலவுடைமைச் சமூகத்தின் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, குடும்பப் பொருளாதாரம் முழுக்க முழுக்க ஆணை குடும்பத் தலைவனை மையமிட்டதாக கட்டமைப்புச் செய்யப்பட்டது. அதாவது, சமூக இயக்கத்தின் அடித்தளமான பொருளாதாரத்திற்கு ஆணையே சார்ந்து நிற்க வேண்டிய நிலைக்குப் பெண் உள்ளாக்கப்பட்டாள். அவள் தனித்து நின்று பொருளாதார பலத்தை அடைந்து விடாமலிருக்கும் படியான சமூகச் சட்டகம் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது. இச்சட்டகத்தை உடைத்து அவள் வெளியேறி விடாதபடி வெளியேற விரும்பியும் விடாதபடி சமூகக் கருத்தமைவுகள் உருவாக்கம் பெற்றன. ஆண் மையச் சமூகம் தன் வெற்றியை ஈட்டியது; பெண் அடிமையானாள்.

ஆண் தன்னுடைய உழைப்பின் மூலம் பெற்ற உற்பத்திப் பொருட்களையும் உடைமைகளையும் தனக்குப் பிறந்த மக்களுக்கே உரிமைப்படுத்தும் நோக்குடன் ‘ஒருத்திக்கு ஒருவன்’ (ஒருவனுக்கு ஒருத்தி அல்ல.!) எனும் கற்புக் கோட்பாட்டை உருவாக்கினான். இதன் வளர்ச்சிப் போக்கில் பெண்ணும் ஓர் உடைமைப் பொருள் ஆனாள்.

சங்க இலக்கியங்களின் வழி அறியலாகும் சங்க காலத் தமிழ்ச் சமூகம் நிலம் சார்ந்த உடைமைச் சமூகம். சங்க இலக்கிய மரபுகளனைத்தும் நிலம் சார்ந்து உருவாக்கம் பெற்றவை. அதாவது குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கள் சார்ந்த உற்பத்தி உறவுகளே சங்கச் சமூகத்தை இயக்கியவை. ‘மாடுகளை உடைமையாக்கி வைத்து வளர்த்த முல்லை நாகரிகத்திலேதான் மேய்ச்சலுக்கு மாடுகளைக் கொண்டு சென்று திரும்பும் கணவனுக்காகக் காத்து இருக்கும் மனைவியையும் கற்பு ஒழுக்கத்தின் ஆரம்பத்தையும் காணலாம்.’ (சி.தில்லைநாதன், இலக்கியமும் சமுதாயமும், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1937, பக்.9.) சங்க இலக்கியங்களில் மரபுகளின் ஆதிக்கம் பெருமளவு காணப்பட்ட போதிலும், இடையிடையே சிற்சில வாழ்வியற் தகவல்களும் தென்படவே செய்கின்றன. சங்க கால மகளிர் நிலையைத் தெரிவிக்கும் ஆனந்தப் பையுள், உவகை கலுழ்ச்சி, தாபத நிலை, முதுபாலை போன்ற புறப்பொருட் துறைகளில் அமைந்த சில பாடல்கள் சங்க இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன.

சங்க காலத்தில் கற்பு எனும் கருத்தாக்கம் ஆண் மையச் சமூகத்திற்கு இணக்கமான பெண் உளவியலைக் கட்டமைப்பதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. கணவனின் மறைவுக்குப் பின், தன்னுடைய கற்பொழுக்கத்தை வெளிப்படுத்துவதற்கு ஏதுவாக மூன்று வகைக் கற்பு நிலைகள் மனைவியுடைய தேர்வுக்கு முன்வைக்கப் பட்டன. தலைக்கற்பு எனப்படும் உடனுயிர் மாய்தல், இடைக்கற்பு எனப்படும் உடன்கட்டை ஏறுதல், கடைக்கற்பு எனப்படும் கைம்மை நோன்பிருத்தல் ஆகிய இம்மூன்று கற்பு நிலைகளும் ஓர் ஆணின் இறப்பையொட்டி அவனுடைய மனைவி(யர்) தேர்ந்தெடுக்கும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே வடிவமைக்கப் பட்டுள்ளன. கணவன் உயிரோடிருக்கும் போது மனைவி பேணும் கற்பொழுக்கத்தை விட அவன் இறந்த பிறகு அவள் மேற்கொள்ளும் கற்பொழுக்க நிலைப்பாட்டிற்கே அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.

சங்க கால நிலவுடைமைச் சமூகத்தில் பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அவள் ஆணை மட்டுமே குடும்பத் தலைவனை மட்டுமே சார்ந்து நிற்கும் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை அறியமுடிகிறது. அவள் பொருளாதாரத்தில் தற்சார்பு அடைந்துவிடாதபடி பண்பாட்டு மரபுக் கூறுகள் ஆணாதிக்கச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டன. இவ்வாதிக்க மரபுகளின் தாக்கம் தொடர்ந்து பெண் உளவியலில் செலுத்தப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒவ்வொரு பெண்ணும் தான் ஆணுக்கு அடிமை என்று நம்பவைக்கப்பட்டாள்.

சங்க காலச் சமூகத்தில் குடும்பம் எனும் அமைப்பு பொருளாதார அடிப்படையில் ஆணை குடுப்பத் தலைவனை மையமாகக் கொண்டது. அதாவது, பெண்ணின் குடும்பத் தலைவியின் பொருளாதாரம் ஆணைச் சார்ந்து அமையுமேயன்றி, தனித்து முயன்று பொருள் தேடும் உரிமை அவளுக்கு முற்றாக மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலை கணவன் இறந்த பிறகு மனைவியின் பொருளாதார நிலையைக் கேள்விக்குள்ளாக்குகிறது. ‘பொருளிலார்க்கு இவ்வுலகம் இல்லை’ எனும் தருக்க விதிப்படி, கணவனை இழந்த பெண்ணுக்குச் சாவு எனும் தீர்வு முன்வைக்கப்படுகிறது.

குடும்பப் பொருளாதாரம் ஆணை மட்டுமே சார்ந்தது என்பதையே ‘வினையே ஆடவர்க்கு உயிர்’ எனும் சங்க இலக்கியத் தொடர் சுட்டுகிறது. ‘மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர்’ எனும் தொடர், கணவனின் மறைவுக்குப் பின்னர் மனைவி உயிரற்றவள் அல்லது உயிர் வாழத் தகுதியற்றவள் எனும் கருத்தை முன்வைத்து, சாவை நோக்கி அப்பெண்ணின் மனப்பாங்கைச் செலுத்துகிறது. இங்கு ‘மனையுறை’ என்னும் சொற்பதம் வீட்டைத் தாண்டிச் சென்று பொருளாதாரத் தற்சார்பு அடைவது கற்புடை மகளிருக்கு அழகல்ல எனும் கருத்தைச் சுமந்து நிற்கிறது.

இத்தகைய தொடர்ச்சியான வலியுறுத்தல்கள் மூலம் தமக்கு விதிக்கப்பட்ட கற்புநெறிகளின்படி உயிர்வாழ்வது அல்லது உயிர்நீப்பதே தங்கள் தலையாய அறம் என்று மகளிர் நம்பவைக்கப்பட்டனர். அதிலும் உயர்குடி மகளிரின் கற்பு சார்ந்த நிலைப்பாடு சமூகத்தால் பெரிதும் கவனிக்கப்பட்டதால் அவர்கள் தலைக்கற்பு எனும் உயரிய நெறியைத் தேர்ந்தெடுத்து உயிர் விடுவதையே தம் பிறவிக்குரிய கடமையாகவும் பெருமையாகவும் கருதினர் (அ) கருத வைக்கப்பட்டனர்.

ஆணாதிக்கச் சமூகம் வரையறுத்த கற்பு அறங்களைப் போற்றிப் பேணி, அவற்றின் வழி தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி முடிப்பதே பெண்ணுக்குப் பெருமையளிக்கும் செயல் என்று அக்காலப் பெண்கள் நம்ப வைக்கப்பட்டனர். தொடர்ச்சியான இந்த சமூக அசைவியக்கத்தின் மூலம், கணவன் இறந்தவுடன் தங்கள் உயிரைப் போக்கிக் கொள்ளும் மனத்துணிவு பெண்களுடைய மனத்தில் உருவாக்கப்பட்டது.        

சங்க இலக்கியங்களில் மரபுகளின் ஆதிக்கம் பெருமளவு காணப்பட்ட போதிலும், இடையிடையே சிற்சில வாழ்வியற் தகவல்களும் தென்படவே செய்கின்றன. சங்க காலப் பெண்களின் நிலையைத் தெரிவிக்கும் ஆனந்தப்பையுள், உவகைக் கலுழ்ச்சி, தாபதநிலை, முதுபாலை போன்ற புறப்பொருட் துறைகளில் அமைந்த சில பாடல்கள் புறநானூற்றில் காணக் கிடைக்கின்றன.

சங்க கால மகளிர் வாழ்வில் கற்புநெறி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டாலும், கணவன் இறந்தவுடன் மனைவி தேர்ந்தெடுக்கும் வாழ்வு முறை அல்லது வாழ்வை இழக்கும் முறையை அடிப்படையாகக் கொண்டே அவளுடைய கற்பொழுக்கம் அடையாளம் காணப்பட்டது. அதனைக் கொண்டே அவளின் கற்பு நெறி சோதிக்கப்பட்டது. அவ்வகையில் கணவனை இழந்த பெண்ணின் தேர்வுக்காக மூன்று வகையான கற்பு நெறிகள் சமூகத்தால் முன்வைக்கப்பட்டன.

1. தலைக்கற்பு கணவன் இறந்தவுடனேயே தன்னுடலில் உயிர் தங்காது உடனுயிர் மாய்தல்

2. இடைக்கற்பு கணவன் இறந்ததும் ‘சான்றோர்’ முன்னிலையில் அவனுடைய ஈமத்தீயில் விழுந்து உயிர் விடுதல். அதாவது உடன்கட்டையேறி உயிர் விடுதல்

3. கடைக்கற்பு கணவன் மறைவுக்குப் பின்னர் உலகியல் இன்பங்களைத் துறந்து கைம்மை நோன்பு நோற்றல்.

இம்மூவகைக் கற்பு நெறிகளில் முதல்நிலைக் கற்பான உடனுயிர் மாய்தல் எனும் தலைக்கற்பு நெறி, கணவன் இறந்தவுடன் ஒரு கணம் கூட உயிர்வாழ்வது மனைவியின் கற்பு வாழ்வுக்கு இழுக்கு எனும் கருத்தை மையமாகக் கொண்டுள்ளது. இக்கற்பு நெறி உயர்குடி மகளிரின் மனதைப் பெரிதும் ஆட்கொண்டிருந்ததை அறியமுடிகிறது.

சங்க இலக்கியங்களில் உடன்கட்டை ஏறுதல் மற்றும் கைம்மை நோன்பு நோற்றல் குறித்த செய்திகள் பல இடங்களில் காணப்படுகின்றன. ஆனால் உடனுயிர் மாய்தல் குறித்த செய்திகள் அரிதாகவே காணக்கிடைக்கின்றன. போர்க்களத்தில் இறந்துபட்ட சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன் மற்றும் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளி ஆகிய மன்னர்களின் மனைவியர், தத்தம் கணவர்களின் மார்பில் வீழ்ந்து உயிர் மாண்டதாகப் புறநானூற்றில் ஒரு பாடலில் கூறப்படுகிறது.

‘உடன்வீழ்ந் தன்றால் அமரே பெண்டிரும்

பாசடகு மிசையார் பனிநீர் மூழ்கார்

மார்பகம் பொருந்தி யாங்கமைந் தனரே’ (கழாத் தலையார், புறநானூறு-62.)

இப்பாடலின் வழியாக, தலைவன் இறந்தவுடன் உயர்குடி மகளிர் தன்னுயிரைப் பேணுதல் தகாது எனும் அறம் நுட்பமாகப் போதிக்கப்படுகிறது.

அக இலக்கியமான குறுந்தொகையில் உள்ள ஒரு பாடலில் தலைவனைப் பிரியும் நிலை நேருமாயின் அடுத்த கணமே தன்னுயிர் தன்னை விட்டுப் பிரிந்துவிட வேண்டும் என்று விரும்பும் ஒரு தலைவியின் உளநிலை சித்திரிக்கப்படுகிறது.

‘உடனுயிர் போகுக தில்ல கடனறிந்து

இருவேம் ஆகிய உலகத்து

ஒருவேம் ஆகிய புன்மைநாம் உயற்கே’ (சிறைக்குடி ஆந்தையார், குறுந்தொகை-57.)

இப்பாடல் தவிர, தோழி கூற்றாக அமைந்த மற்றொரு குறுந்தொகைப் பாடலில் ஆண் குரங்கு இறந்துபட்டதும் கைம்மைத் துன்பத்துக்கு ஆளாக விரும்பாத பெண் குரங்கு ஒன்று உயர்ந்த மலையில் இருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்வதாகக் குறிப்பிடப்படுகிறது.

‘கருங்கட் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

கைம்மை உய்யாக் காமர் மந்தி

கல்லா வன்பறழ் கிளைமுதல் சேர்த்தி

ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துஉயிர் செகுக்கும்’ (கடுந்தோட் கரவீரன், குறுந்தொகை-69.)

எனும் அப்பாடலில் விலங்குகளின் செயல்பாடுகள் குறித்த கற்பிதங்களின் வழியாகவும் தலைவியர்க்குத் தன்னுயிர் நீக்கும் அறம் போதிக்கப்பட்டதையே இப்பாடல் உணர்த்துகிறது.

கணவன் மறைவுக்குப் பின்னர் சாவைத் தழுவுதல் எனும் நிலைப்பாட்டை மனைவி தேர்ந்தெடுப்பதில் கடைக்கற்பு எனப்படும் கைம்மை நோன்பு நோற்றலுக்கும் முக்கியப் பங்கு இருந்துள்ளது. கணவன் மறைவுக்குப் பின்னும் உயிர்வாழும் பெண்ணுக்குத் தலை மழிக்கப்படும்; அழகு ஆபரணங்கள் பறிக்கப்படும்; சுவையான உணவுகள் மறுக்கப்படும்; பிற உலகியல் இன்பங்கள் அனைத்திலிருந்தும் அவள் விலக்கி வைக்கப்படுவாள். இந்த இழிந்த வாழ்க்கையின் மேல் கொண்ட அச்சமும் வெறுப்பும் அப்பெண்ணை இறப்பு நோக்கித் தோண்டின.

கணவன் இறந்ததும் தீயில் வீழ்ந்து உயிர்விடும் இந்த இடைக்கற்பு நிலை பற்றிச் சில புறநானூற்றுப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. இப்பாடல்களில் கைம்மை நோன்பிருக்கும் கடைக்கற்பு இழிவானதாகச் சுட்டப்படுகிறது. பூதப்பாண்டியன் மனைவி பெருங்கோப்பெண்டு தன் கணவனின் ஈமத்தீயில் விழுந்து உயிர்விடும் முன்பாக, அங்குக் கூடியிருந்த சான்றோரை நோக்கிக் கைம்மை நோன்பிருந்து உயிர்வாழ்வதன் இழிவை விளக்கியுரைப்பதாகப் புறநானூற்றுப் பாடல் (246) ஒன்று கூறுகிறது. அவள் தீப்பாய்ந்து உயிர்விட்ட போது, அக்காட்சியை நேரில் கண்டவராகிய மதுரைப் பேரலவாயர் சொல்லியதாகவும் ஒரு பாடல் (247) புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. வேணாட்டுத் தலைவனான ஆய் அண்டிரன் இறந்தவுடன் அவனுடைய உரிமை மகளிர் (மனைவியர்) உடன்கட்டையேறி இறந்ததாகக் குட்டுவன் கீரனார் பாடலில் (குட்டுவன் கீரனார் பாடிய அப்பாடலில் கோடேந்தல்குற் குறுந்தொடி மகளிரொடு ஆய் அண்டிரன் தேவருலகத்தையடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அவ்வுரிமை மகளிர் உடன்கட்டையேறி உயிர்விட்டனரா அல்லது உடனுயிர் மாய்ந்து இறந்தனரா என்று தெளிவாக அறிய முடியவில்லை. ஆய் அண்டிரனின் உடம்பு எரிபடும் ஈமத்தீயில் விழுந்து அவர்கள் உயிர் நீத்ததாக அவ்வை சு.துரைசாமிப்பிள்ளை தன் உரையில் குறிப்பிடுகிறார். புறநானூறு (இரண்டாம் தொகுதி), கழக வெளியீடு, திருநெல்வேலி, 1972, பக்.89.) குறிப்பு காணப்படுகிறது.

இப்பாடற் செய்திகள் யாவும், கணவனின் மறைவுக்குப் பின்னர் மனைவி தன்னுடைய சீரிய கற்பு நெறியை உயிர் விடுதல் மூலம் உலகிற்குப் பறைசாற்றிச் செ(õ)ல்வதே தலையாய அறம் என நிறுவப்பட்டிருந்த நிலையைத் தெரிவிக்கின்றன. தன்னுடைய இறப்பை மனம் விழைந்து ஏற்றுக் கொள்ளுதல் எனும் நிலை நோக்கிப் பெண்ணின் உளவியலைச் செலுத்துவதிலும், உயிர் நீக்கும் வினைக்கு அவளைத் தயார் படுத்துவதிலும் பண்பாடு சார்ந்த சில கூறுகளும் பங்காற்றியுள்ளன. அவற்றுள் முக்கியமானவை கைம்மை நோன்பும் மறுமை நம்பிக்கையும்.

கணவனின் இறப்புக்குப் பின்னர் மனைவி கைம்மை நோன்பிருக்கும் நிலை மூன்றாம் நிலை கற்பாகக் குறிப்பிடப்படுகிறது. முதலிரு கற்பு நிலைகளும் மகளிருக்கு உயிர் விடுதல் எனும் தீர்வைப் பரிந்துரை செய்யும் நிலையில். இம்மூன்றாம் நிலைக் கற்பு அவளுக்கு உயிர் வாழ்தல் எனும் தீர்வைப் பரிந்துரை செய்கிறது. ஆனால் உயிர் விடுதல் எனும் முதலிரண்டு கற்பு நெறி நோக்கி கணவனை இழந்த பெண்ணின் மனதைச் செலுத்துவதில் இம்மூன்றாம் நிலைக் கற்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.

சங்க இலக்கியங்களில் கைம்மை நோன்பு குறித்தச் செய்திகள் பல பாடல்களில் இடம் பெற்றுள்ளன. புறநானூற்றில் 125, 143, 224, 237, 242, 246, 248, 249, 250, 253, 261, 272, 280, 326, 353 ஆகிய பாடல்களிலும், நற்றிணையில் 272, 353 ஆகிய பாடல்களிலும் கணவனை இழந்த கைம்பெண்கள் பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. இப்பாடற் செய்திகளின் வழியாக கைம்மை நோன்பிருக்கும் மகளிரின் இழிநிலை அறியப்படுகிறது. கணவனை இழந்த பெண்களை ஆளில் பெண்டிர் (நற்றிணை353), கழிகல மகளிர் (புறம்280), படிவ மகளிர் (நற்றிணை246), வயவற் பெண்டிர் (புறம்246), பருத்திப் பெண்டிர் (புறம்125), தொடிகழி மகளிர் (புறம்238) எனப் பல பெயர்களில் சங்க இலக்கியங்ள் சுட்டுகின்றன.

சங்க காலத்தில் கைம்பெண்கள் இழிவான நிலையிலேயே சமூகத்தில் வைக்கப்பட்டிருந்ததை அறிய முடிகிறது. கைம்பெண்களின் நிலை ‘கைம்பெண்கள் நெய்யுண்பதில்லை; தண்ணீர்ச் சோற்றைப் பிழிந்து எடுத்துக் கொண்டு, அதனுடன் அரைத்த எள்ளையும், புளியையுங் கூட்டி வெந்த வேளைக் கீரையுடன் அவர்கள் உண்ணுவர்’ என்று குறிப்பிடுகிறார் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு: மக்களும் பண்பாடும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2004, பக்.141.) கணவனை இழந்த மகளிர் மட்டுமின்றி, கணவனைப் பிரிந்த மகளிரும் தங்களுடைய பிரிவையே எண்ணியபடி துயரில் ஆழ்ந்திருக்கும் படி வலியுறுத்தப்பட்டதை,

‘அஞ்செஞ் சீறடி யணிசிலம் பொழிய

மென்றுகி லல்குன் மேகலை நீங்கக்

கொங்கை முன்றிற் குங்கும மெழுதாள்

மங்கல வணியிற் பிறிதணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினள்’ (இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், சிலப்பதிகார மூலமும், அந்திமாலை சிறப்புச் செய்காதை 4751, அரும்பதவுரையும் அடியார்க்கு நல்லாருரையும், உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம், 1978, பக்.125.) எனும் சிலப்பதிகார வரிகளின் மூலம் உணர முடிகிறது.

கணவன் மறைவுக்குப் பின்னர் மனைவி தன்னுடைய அல்லது குடும்பத்தினுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் வேலைக்குச் செல்வதையோ அல்லது வேறு ஆடவரைச் சார்ந்திருப்பதையோ ஆண் மையச் சமூகம் விரும்ப வில்லை. பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரம் என்பது சமூகத்தின் ஆண் மையத்தை தகர்த்து விடும் என்பதால் அது மறைமுகமாகச் சில பண்பாட்டுக் கூறுகளின் மூலம் தடுக்கப்பட்டது. கணவனை இழந்த பெண்ணின் தோற்றப் பொலிவைக் குலைக்கும் நோக்கிலான பண்பாட்டுக் கூறுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

பிற விலங்குகளைப் போலல்லாமல் மனிதனுக்கு மட்டுமே அழகு குறித்த பிரக்ஞை உண்டு. இப்பிரக்ஞை உடைமைச் சமூகத் தோற்றத்துக்குப் பின்னர்த் தோன்றியது. பெண்ணின் அழகு என்பது ஆண் மையச் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது. இதில் பெண்ணுடலுக்கு மென்மை எனும் பண்பு பெரிதும் வலியுறுத்தப் படுகிறது. பெண் குறித்த இலக்கிய வர்ணனைகளில் சிறிய இடை என்பது முக்கியப் பங்கு வகிப்பது இதனால்தான். அனிச்சம் பூவின் காம்பைக் களையாமல் தலையில் சூடியதால் அதன் சுமையைத் தாங்க முடியாமல் முறிந்து போகும் அளவுக்கு மென்மையான இடைதான் பெண்ணுக்கு அழகு என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார். (‘உண்டி சிறுத்தல் பெண்டிர்க்கு அழகு’ என்பது போன்ற சொல்லாடல்கள் உருவானதும் இந்தப் பின்னணியில்தான்.) பெண்ணுக்கும் ஆணுக்குமான சமூகப் போராட்டத்தில் பெண்ணை வெல்வதற்கு இத்தகைய கருத்துக் கட்டமைப்புகள் ஆணுக்குத் தேவையாயிருந்தன. உடலளவில் போட்டியாளரின் வலிமையைக் குன்றச் செய்வதன் மூலம் அவரை எளிதில் வென்று தன்னுடைய ஆளுகைக்கு உட்படுத்தும் ஆண் மையச் சமூகத்தின் முயற்சிகளுக்கு அழகு குறித்த கற்பிதங்கள் உறுதுணையாயிருந்தன.

அழகு எனும் பெயரில் உருவாக்கப்பட்ட கற்பிதங்களின் மூலம் பெண்ணின் உடல் வலிமையை குன்றச் செய்வதுடன் நின்று விடவில்லை. அவளை இன்னும் பலவீனப்படுத்தும் நோக்கில் சில கருத்தாக்கங்கள் முன்வைக்கப் பட்டன. பெண்ணுடைய அழகு என்பது இயற்கையான தோற்றம் மற்றும் உடலமைப்போடு முழுமை பெற்று விடுவதில்லை என்று கூறப்பட்டதுடன், அது முழுமை பெறத் தேவையான மேலும் சில கூறுகள் முன்வைக்கப்பட்டன. நீண்ட கூந்தல் வளர்த்தல், கூந்தலில் வாசமிக்க மலரணிதல், உடலுக்கு மஞ்சள் பூசுதல், கைவளை, காதணி போன்ற அணிகலன்கள் அணிதல், ஓசை எழுப்பும் காற்சிலம்பு அணிதல் போன்றவை அழகு என்ற பெயரில் பெண்களுக்குக் கட்டாயமாக்கப்பட்டன.

இடையில் மேகலை எனும் அணிகலன் அணிந்தனர். இது 32 கோவை முத்துக்கள் சேர்ந்த அழகிய வேலைப்பாடமைந்த அணிகலன் என்று குறிப்பிடப்படுகிறது. தலையில் செந்திரு அல்லது தெய்வ உத்தி எனப்பட்ட அணிகலனை அணிந்தனர். இதனை நச்சினார்க்கினியர் ‘சீதேவி’ என்று குறிப்பிடுகிறார். மணமான பெண்கள் தாலி, தோடு, வளையல் போன்றவற்றை அணிந்தனர். இவையின்றி பெண்ணழகு முழுமையடையாது என்று பெண்கள் நம்ப வைக்கப்பட்டதுடன் இவை எதுவுமின்றி அவர்கள் வெளியில் செல்லவே நாணுமாறு செய்யப்பட்டனர். சங்க இலக்கியங்களில் இத்தகைய அழகு சார்ந்த வர்ணிப்புக் கூறுகளைப் பல இடங்களில் காண முடிகிறது. ஆண்பெண் இடையிலான இயல்பான எதிர்பாலின ஈர்ப்பு இங்கு சில வரையறைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்குறிப்பிட்ட அழகு படுத்தல்களின்றி ஓர் ஆணின் மனதை ஈர்க்க முடியாது என்று தொடர்ச்சியாக வலியுறுத்தப்படுவதன் மூலம் பெண்கள் இந்த ஒப்பனைகளை முழு மனதுடன் ஏற்கச் செய்யப்பட்டனர்.

சங்க காலப் பெண்கள் தங்கள் தோற்றத்துக்குப் பொலிவூட்டும் வகையில் வித விதமான ஆடை, அணிகலன்களை அணிந்ததாகச் சங்க இலக்கியங்களின் வழி அறியமுடிகிறது. பஞ்சு, பட்டு, விலங்குகளின் மயிர் போன்றவற்றாலான அழகான ஆடைகளை அணிந்தனர். பலவிதமான கைவளைகள், மோசை எனும் மரகதக் கடைசெறி, பொன்னாலான சங்கிலிகள், பொன் ஞாண், காதணிகள், இடையில் மேகலை போன்றவற்றைப் பெண்கள் விரும்பி அணிந்ததாகத் தெரிகிறது.

ஆடை, அணிகலன்கள் தவிர தங்கள் உடலை அழகுபடுத்துவதிலும் பெண்கள் பெரிதும் ஈடுபாடு கொண்டிருந்தனர். சந்தனத்தால் மார்பில் தொய்யில் எழுதுதல், உடலுக்கு மஞ்சள் பூசுதல், கருத்து நீண்ட கூந்தலை கொண்டை, குழல், பனிச்சை, சுருள், முடி என ஐந்து வகையாகக் கோலம் செய்தல் (இது ஐம்பால் என்று அழைக்கப்பட்டது), பலவகையான மலர்களைச் சூடுதல், கண்களுக்கு மைதீட்டுதல் போன்ற பலவித அழகுபடுத்தல்கள் பெண்கள் வாழ்வில் ஒன்று கலந்திருந்தன.

ஒருத்திக்கு ஒருவன் எனும் கற்புக் கோட்பாடு வலியுறுத்தப்பட்டச் சமூகத்தில் இவ்விதமான அழகுபடுத்தல்கள் எல்லாம் கணவன் எனும் ஆணை நோக்கியதாகவும் அவனது ரசனை, விருப்பம் போன்றவற்றை நிறைவு செய்வதற்கானதாகவும் புனையப்பட்டன. இதனால் கணவனுடைய மறைவுக்குப் பின்னர் பெண்ணுக்கு இவற்றுக்கான தேவை மறைந்து விடுகிறது. அவளால் பேணி வளர்க்கப்பட்ட கூந்தல் மழிக்கப்படுகிறது. அழகான வண்ணமயமான ஆடைகள் மறுக்கப்படுகின்றன. கைவளை உள்ளிட்ட அணிகலன்கள் நீக்கப்படுகின்றன. மொத்தத்தில் சமூகத்தால் வரையறை செய்யப்பட்ட அழகுக்கூறுகள் ஏதுமில்லாமல், சமூக வெளியில் நடமாடவே தயங்கும் அழகற்ற உருவமாக அப்பெண் நிறுத்தப்படுகிறாள்.

'முலைபொலி யாக முருப்ப நூறி

மெய்ம்மறந்து பட்ட வøயால் பூசல்

ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர

ஆவிரறல் கடுக்கு மம்மென்

குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே' (கல்லாடனார், புறநானூறு-25)

எனும் புறநானூற்றுப் பாடல் வரிகளில் கணவனை இழந்த பெண்ணின் கூந்தல் களையப்பட்ட செய்தி காணப்படுகிறது. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுடைய பகை வேந்தர் இருவர் அவனால் இறந்துபட, அவர் தம் கைம்மை மகளிரின் கூந்தல் மழிக்கப்பட்டதை இப்பாடல் கூறுகிறது. இதற்கு உரை எழுதும் அவ்வை துரைசாமிப்பிள்ளை 'கணவனையிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்து கொள்ளும் வழக்கும் பண்டைத் தமிழ் வழக்காதல் துணியப்படும்' என்கிறார் (புறநானூறு, உரை: அவ்வை துரைசாமிப் பிள்ளை, கழக வெளியீடு, சென்னை, 1967, பக்.75.).

'கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி

அல்லி யுணவின் மனைவியோ டினியே' (தாயங்கண்ணியார், புறநானூறு-250).

'கொய்ம்மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய

கழிகல மகடூஉப் போல' (ஆளூர் மூலங்கியார், புறநானூறு-128)

எனும் பாடல் வரிகளிலும் கைம்பெண்களின் கூந்தல் களையப்பட்ட செய்தி காணப்படுகிறது.

கணவனை இழந்த பெண்ணின் அணிகலன்கள் களையப்பட்டதைப் பல சங்கப் பாடற்செய்திகள் உணர்த்துகின்றன.

‘ஊழினுருப்பு வெருக்கிய மகளிர்

வாழைப் பூவின் வளைமுறி சிதற’14

எனும் பாடலில் கணவனை இழந்த பெண்ணின் கையில் உள்ள வளையல்கள் நீக்கப்படுவது இடம் பெறுகிறது. அணிகலன்கள் களையப்பட்ட மகளிர் ‘கழிகல மகளிர்’ (அணிகலன்கள் நீக்கப்பட்ட மகளிர்) என்று குறிப்பிடப்பட்டுள்ளனர்.

‘மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்

தொன்றுதா முடுத்த வம்பகைத் தெரியற்

சிறுவெள் ளாம்ப லல்லி யுண்ணும்

கழிகல மகளிர் போல

வழிநினைந் திருத்த லதனினு மரிதே’ (பெருஞ்சித்தரனார், புறநானூறு-237)

எனும் பாடல் வரிகளில் இது புலப்படுகிறது. கணவனை இழந்த பெண்ணின் கூந்தல் மழிக்கப்பட்ட செய்திகள் புறநானூற்றின் 25, 261, 280, 250 ஆகிய பாடல்களில் இடம் பெறுகின்றன. இவற்றின் பின்னணியில் உள்ள ஆணாதிக்கச் சமூகத்தின் அசைவியக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கணவனுடைய மறைவுக்குப் பின்னர் மனைவியின் அழகு தேவைப்படாது போவது மட்டுமின்றி சமூகத்தால் விரும்பப்படாத ஒன்றாகவும் மாறுகிறது. அப்பெண் வேறு ஆடவர் மீது விருப்பம் கொண்டு விடாமலிருக்கவும் சில முன்தயாரிப்புகள் சமூகத்தால் செய்யப்பட்டன. கணவனை இழந்த பெண் தன்னுடைய இன்ப நாட்டங்களையும் பாலுணர்ச்சிகளையும் கட்டுப்படுத்திக் கொண்டு வாழும் விதமான சில புலனொடுக்கக் குறிப்புகள் பண்பாடு என்ற பெயரில் அவளுக்கு கட்டாயமாக்கப்பட்டன. பாயில் படுப்பதைத் தவிர்த்து, வெறுந்தரையிலோ அல்லது பறற்கற்கள் மீதோ படுத்துறங்குதல் போன்றவை கணவனை இழந்த பெண்களுக்கு கட்டுப்பாடுகளாக விதிக்கப்பட்டன.

வேறு ஆடவர் அப்பெண் மீது ஈடுபாடு கொண்டு விடாமலிருப்பதற்காக முன்னர்க் கூறப்பட்ட அணிகலன்களைக் களைதல், தோற்றப் பொலிவைக் குலைத்தல் போன்ற பண்பாட்டுக் கூறுகள் பெண் மீது திணிக்கப்பட்டன. இக்கூறுகளுக்குப் பொருளாதாரப் பின்னணியும் உண்டு. நிலவுடைமைச் சமூகத்தில் குடும்பத்தின் பொருளாதாரம் ஆணை மையமிட்டதாகவே கட்டமைக்கப்பட்டிருந்தது. பெண்ணுக்கான பொருளாதாரச் சுதந்திரம் முற்றாக மறுக்கப்பட்டு, அவள் தன்னுடைய கணவனைச் சார்ந்தே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டாள்.

எனவே கணவன் இறந்த பின்னர் ‘மனையுறை’ மகளிர் உயிர் வாழத் தகுதியற்றவர்களாகின்றனர். அவர்கள் மனையினுள்ளே உறைந்து வாழ வேண்டியவர்களாகின்றனர். கணவன் இறந்த பிறகும் கூட அவள் வீட்டைத் தாண்டி வெளியே செல்வதை சமூகம் ஏற்கவில்லை. எனவே பெண்ணுடைய அழகை முழுமைப்படுத்துவதாகக் கற்பிதம் செய்யப்பட்ட அனைத்துக் கூறுகளும் அவளிடமிருந்து பறிக்கப்பட்டன. நீண்ட கூந்தல், அணிகலன்கள் போன்றவற்றை இழந்து அவள் வீட்டை விட்டு வெளியே செல்லவே நாணுமாறு செய்யப்பட்டாள்.

ஆணாதிக்கச் சமூகம் இத்துடன் நிற்கவில்லை. கணவனை இழந்த பெண் எதிரில் வருவதோ, பொதுக்காரியங்களில் கலந்து கொள்வதோ தகாத செயல்கள் என்பதான நம்பிக்கைகள் உருவாக்கப்பட்டன. உளவியல் ரீதியாக அவள் சமூகத்திலிருந்து அன்னியப்படுத்தப்பட்டாள். இவற்றால் இத்தகைய பெண்கள் வீட்டிற்குள் தாங்களாகவே அடைபட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டனர். (வீட்டினுள்ளும் கூட விருந்தினரை எதிர்கொள்ளுதல் கணவனைப் பிரிந்த / இழந்த பெண்களுக்கு மறுக்கப்பட்டது. அதாவது வீட்டுக்கு வெளியில் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளும் அவள் சமூக உறவுகளிலிருந்து விலக்கப் படுகிறாள்.) இதன் மூலம் அவர்கள் பொருளாதார பலமும் சுதந்திரமும் அடைவது தடுக்கப்படுகிறது.

வீட்டைத் தாண்டி வெளியே சென்று வேலை பார்த்து தன்னுடைய, குடும்பத்தினுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழலும் அழிக்கப்பட்டு விடுகிறது. வீட்டிற்குள்ளேயே இருந்து தன்னுடைய பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் விதமான தொழில்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டன. கணவனை இழந்த சங்ககாலப் பெண்கள் பருத்தி நூல் நெய்யும் தொழிலில் ஈடுபட்டதால் அவர்கள் ‘பருத்திப் பெண்டிர்’ ('பருத்திப் பெண்டின் பனுவ லன்ன', புறம்: 125) என்று குறிக்கப்படுகின்றனர். தோற்றப் பொலிவைக் குலைப்பதன் மூலமாக தன்மீது ஈடுபாடு கொள்ளும் வேறு ஆடவர் மூலம் தன்னுடைய பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதும், அவள் வேறு திருமணம் செய்து கொள்வதற்கான வாய்ப்புகளும் முற்றாக மறுக்கப்பட்டு விடுகின்றன.

சங்க கால மக்கள் இறப்புக்குப் பின்னரும் வாழ்வு தொடர்வதாக அதாவது மறுமைக் கோட்பாட்டினை நம்பினர். அன்றைய தமிழர்கள் இறப்பை வாழ்க்கையின் முடிப்பாகக் கருதவில்லை. இறப்பு என்பது அடுத்த உலகத்தின் பயணம் என்று நம்பினர் என்கிறார் க.ப.அறவாணன் (தமிழ் இலக்கியச் சமூகவியல், தமிழ்க் கோட்டம், புதுச்சேரி, 1992, பக்.71). மகளிர்க்குக் கற்புநெறியை வலியுறுத்துவதில் மறுமைக் கோட்பாட்டிற்கும் முக்கியப் பங்கு இருந்துள்ளது.

கணவன் இறந்த பின்னர் மகளிர் மேற்கொள்ளும் கற்பு நெறி சார்ந்த செயல்பாடுகளை வைத்தே அவளுடைய மறுமை வாழ்வு அமையும் என்பதான கருத்துகள் பரவலாக்கப்பட்டிருந்தன. கைம்மை நோன்பிருக்கும் நிலையை விரும்பாது விலக்கி, கணவன் இறந்ததும் உடனுயிர்விட்டோ, உடன்கட்டையேறி உயிர்விட்டோ தன் கற்பு நெறியைப் பேணும் மகளிர் தேவருலகத்தை அடைவர் என்று உளவியல்பூர்வமாகத் தூண்டப்பட்டனர். கணவன் இறந்தவுடன் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் பெண் தேவருலகத்தை அடைந்து இன்பமடைவாள் என்ற நம்பிக்கையும் சங்க காலத்தில் பரவலாக்கப்பட்டிருந்தது.

கணவனை இழந்ததும் உயிர்விடாது, கைம்மை நோன்பு நோற்றுக் கடைக்கற்பு நெறி பேணும் பெண்களுக்கும் மறுபிறப்பில் பலன்கள் உண்டு. அப்பெண்கள் மறுபிறப்பில் மீண்டும் தத்தம் கணவரையே அடைந்து இன்புற்று வாழ்வர் என்று கூறப்பட்டது. ‘அன்பரோடு உடனுறை வாழ்க்கைக்கு நோற்று உடம்படுவர்’ என்று மணிமேகலை இதனைச் சுட்டுகிறது. இம்மை மட்டுமின்றி மறுமையிலும் தத்தம் கணவருடனேயே உடனுறைந்து வாழ விரும்பினர் சங்க கால மகளிர்.

‘இம்மை மாறி மறுமை யாயினும்

நீயா கியரென் கணவனை

யானா கியர்நின் நெஞ்சுநேர் பவளே’ (அம்மூவனார், குறுந்தொகை-49.)

எனும் குறுந்தொகைப் பாடலில் தலைவியின் இந்த மனநிலை வெளிப்படுகிறது. இந்த உளநிலையைக் கற்பு நெறி உருவாக்கத்திற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு கணவன் இறந்ததும் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் இறப்பு விழைவு மனநிலையை பெண்களிடம் உருவாக்கியது ஆணாதிக்கச் சமூகம்.

தாய்மைச் சமூகம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து பெண் உடைமைப் பொருளானாள். நிலைவுடைமைச் சமூகத்தில் ஆணாதிக்கம் வலுப்பெற்று பெண் அடிமையானாள். பெண்ணின் பொருளாதாரச் சுதந்திரத்தை முடக்கும் நோக்குடன் கற்பு நெறியைக் கட்டமைப்புச் செய்து வலுப்படுத்தியது ஆண் மையச் சமூகம்.

சங்க காலச் சமூகத்தில் பெண்களின் கற்பொழுக்கம் ஆணின் இறப்பையொட்டியே வெளிப்படும் விதமாகக் கருத்தாக்கம் செய்யப்படுவது கணவனுக்குப் பின்னர் மனைவியின் வாழ்வியற் சுதந்திரத்தை முடக்கும் நோக்குடையது. இதனடிப்படையில் உடனுயிர் மாயும் தலைக்கற்பும், உடன்கட்டையேறி உயிர்விடும் இடைக்கற்பும் பெண்ணுக்குப் புகழ் சேர்க்கும் உயர்ந்த நெறிகளாக வலியுறுத்தப்பட்டன. இக்கருத்தாக்கங்களின் வாயிலாக கணவன் இறந்ததும் மனைவி தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் சாவு விழைவு மனநிலை சமூகத்தால் தூண்டப்பட்டது.

பொதுவாக, பெண் மீதான அடக்குமுறைகள் அனைத்தும் ஆணாதிக்கச் சமூகத்தின் அசைவியக்கத்தினால் பண்பாட்டுக் கூறுகளாகப் படிமப்படுத்தப் படுகின்றன. பொற்காலமாகப் போற்றப் படும் சங்க காலமும் இதற்கு விதிவிலக்கல்ல. சங்க இலக்கியங்களில் காணலாகும் சில குறிப்புகளை நுணுகி ஆராயும் போது இது தெளிவாகப் புலப்படுகிறது.

பெண்ணுடலுக்கான அழகு எது என்பதை முடிவு செய்வதுடன் அதற்கான அணிகலன்களையும் ஆணாதிக்கச் சமூகமே வடிவமைத்துப் பெண்களை ஏற்கச் செய்கிறது. அவ்வாறு வடிவமைக்கப்பட்ட பெண்ணழகு என்பது ஒரே ஓர் ஆணை அதாவது கணவனை மட்டுமே தன் அடிப்படை நோக்கமாகக் கொண்டது எனும் கருத்தியலும் பெண் உளவியலில் பதிவு செய்யப்பட்டது. பெண்ணுடலின் அழகுக்கான தேவை முடிந்த பின் கணவன் இறந்த பின் அவ்வழகு அழிக்கப் பட்டது; கூந்தல் மழிக்கப்பட்டது; அணிகலன்கள் களையப்பட்டன. அவள் சமூக உறவுகளிலிருந்து விலக்கப்பட்டு வீட்டிற்குள்ளாகவும் தனக்குள்ளாகவும் ஒடுக்கப்பட்டாள்.

Pin It