தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு நடவடிக்கை விபரம்; நிறைவேற்றிய தீர்மானங்கள்

இன்று (நவம்பர் 13, 1938) பிற்பகல் 1 மணிக்கு சென்னை பெத்தநாய்க்கன் பேட்டை கிருஷ்ணாங் குளத்தையடுத்த காசி விஸ்வநாதர் கோயில் முன் பிருந்து தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டு ஊர்வலம் புறப்பட்டது. மாநாட்டுத் தலைவர் திருவாட்டி-திரு வரங்க நீலாம்பிகை என்ற நீலக்கண்ணியம்மையார், தோழர்கள் தாமரைக்கண்ணியம்மையார், பண்டித நாராயணி அம்மையார், டாக்டர் தருமாம்பாள், மூவா லூர் இராமாமிர்தம் அம்மையார், பார்வதி அம்மையார், மலர் முகத்தம்மையார், கலைமகளம்மையார் முதலியோரும் தலைவர் தோழர் ஈ.வெ. ராமசாமி, தோழர் அ. பொன்னம்பலம், உள்ளிட்ட 5000-த்திற்கும் மேற்பட்டவர் ஊர்வலத்தில் கலந்துவந்தனர்.

மாநாட்டுத் தலைவர், திறப்பாளர், வரவேற்புக் கழகத் தலைவர்களைக் கோச்சில் வைத்து அழைத்துவரப் பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள் தமிழ்க் கொடிகளை ஏந்தி, ‘தமிழ் வாழ்க’, ‘தமிழ்நாடு தமிழருக்கே’, ‘இந்தி வீழ்க’, ‘தமிழ்ப் பெண்கள் வாழ்க’, ‘தமிழர் வாழ்க’ என்ற கோஷங்களிட்டு வந்தனர். தமிழ்ப் பெண்கள் தமிழ் வாழ்த்துகள் பாடி வந்தனர். ஊர்வலத்தில் பெண் கள் மட்டிலும் 2000 பேர்கட்கு மேலிருந்தனர். ஊர்வலம் குப்பையா தெரு, தங்கசாலைத் தெரு, ஆதியப்பன் நாயக்கன் தெரு, வால்டேக்ஸ் ரோடு ஆகியவைகளின் வழியாக வந்து சரியாக 2 மணிக்கு மாநாட்டுக் கொட்ட கையாகிய ஒற்றைவாடை நாடகக் கொட்டகைக்கு வந்து சேர்ந்தது.

ஊர்வலம் வரும் முன்பே கொட்டகையிலும், கொட்ட கைக்கு வெளியிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிரம்பியிருந்தனர். கொட்டகையில் ஒலிபெருக்கிக் கருவி அமைக்கப்பட்டிருந்தது. மாநாட்டில் பெண்கள் 5000 பேர்கட்கு மேல் வந்து கலந்து கொண்டனர். மாநாட்டுக் கொட்டகை வாழை மரங்களாலும், கொடி களாலும் வரவேற்பு வளைவுகளாலும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வெளியில் நிற்போர்க்கும் கேட்குமாறு ஒலிபெருக்கி அமைக்கப்பட்டிருந்ததால், பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியிலிருந்தே பேச்சு களைக் கேட்டனர்.

முதலில் தலைவர், திறப்பாளர் முதலியவர்களை வைத்து ஒரு ‘குரூப்’ போட்டோ எடுக்கப்பட்டது. பின்னர், மாநாட்டு வரவேற்புக் கழகத் தலைவரின் வேண்டுகோளுக் கிணங்கி, திருவாட்டி மீனாம்பாள் சிவராஜ் அவர்கள் மூவரசர் தமிழ்க்கொடியை ஏற்றி வைத்தார். அக்காலை திருவாட்டி மீனாம் பாள் பேசியதாவது :-

இம்மாபெரும் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாட்டில் என்னைக் கொடி உயர்த்தப் பணியளித்த வரவேற்புக் கழகத்தாருக்கு எனது நன்றி. நாம் இக்கொடியை எதற்காக ஏற்ற வேண்டும்? அக்காலத்து நம் தமிழ் மொழியையும், நாட்டையும் நம் தமிழரசர்கள் மூவரும் மிகத்திறம்பட வளர்த்து வந்தார்கள். காலப்போக்கில் தமிழர் தங்கள் கலையை மறந்தனர். அதனால் தான் இன்று இத்தகைய கீழான நிலைமையிலிருக்கின்றோம்.

பண்டைக் காலத்து எத்துணையோ பெண்கள் வீரமுடையவராகவும், சிறந்த கல்வியறிவுடையவர்களாகவும் விளங்கி வந்த னர். இன்றோ நம் நாட்டில் பெண் கல்வி மிகக் குறை வாக இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியும் கட்டாயப் பாடமாம். இதை நீங்கள் அவசியம் எதிர்த்துப் போராட வேண்டும். பெண்கள் தலையிட்ட காரியம் வெற்றி பெறுவது நிச்சயம் எனக் கூற விரும்புகிறேன்.

நமது உரிமைக்காகப் போரைத் தொடர்ந்து நடத்த வேண்டும். ஆண்கள் முயற்சிக்கு நாம் உறுதுணையா யிருந்து வெற்றி தேடவேண்டும். ஆண்மகனை உயர்த்தவோ தாழ்த்தவோ பெண்ணால் முடியும். எனவே ஆண்களும் பெண்களுக்குச் சமஉரிமை வழங்கிப் பெண்களை முன்னேற்ற வழிசெய்ய வேண்டும். நமது கலை, நாகரிகம் உயர்வடைய வேண்டும்.

தமிழ் நாடு தமிழருக்கென்றாகும்வரை உண்மையாகப் பாடுபட வேண்டும். இக்கொடியைப் போல் நம் நாடும் உயர்ந்து விளங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு மீண்டும் உங்கட்கு வந்தனந் தெரிவித்து இத்தமிழ்க் கொடியை உயர்த்தி வைக்கிறேன்.

திருவாட்டிகள் சி. கலைமகள் பட்டு, தாமரைக் கண்ணியம்மையார், பார்வதியம்மையார் முதலியவர் கள் தமிழ்ப் பாட்டுகள் பாடினர். பின்னர் திருவாட்டி பண்டிதை அ. நாராயணியம் மையார் மாநாட்டைத் திறந்து வைத்தார் (பிரசங்கம் பின்னர் வெளிவரும்).

பின்னர், திருவாட்டி - திருவரங்க நீலாம்பிகை அம்மையாரைத் தலைமை வகிக்குமாறு வரவேற்புக் கழகத் தலைவர் கேட்டுக் கொண்டார். அதை ஆதரித்து திருவாட்டிகள் மூவலூர் இராமாமிர்தம், மலர்முகத்தம் மையார், இராணியம்மாள் (தோழர் கண்ணுத்துரை யவர்களின் மனைவி) ஆகியோர் பேசினர்.

டாக்டர் எஸ். தருமாம்பாள், மாநாட்டுத் தலை வருக்கு ஒரு வரவேற்புப் பத்திரம் படித்துக் கொடுத்தார். அது வருமாறு :

தமிழ்ப் புலமைத் தனியரசமைப்பு மறைமலையடிகள் பயக்த மாசிலா மாணிக்கமே!

எங்கள்வே ண்டுகோட்டிற்கிணங்கி நானூறு கல் நடந்து இச்சென்னை நகர் போந்து இப்பேரவைக்குத் தலைமை தாங்கும்தங்களை உளம் ததும்பும் உவகையுடன் யாங்கள் வரவேற்கிறோம்.

தமிழ்ப்பாதுகாப்பிற்காகத் திடமுடன் உழைத்துச் சிறைபுகுந்த தமிழ்ப் புலவரான மறைத் திருநாவுக் கரசின் தமக்கையார் பேறு வாய்ந்த தமிழ்ப் பெரு மாட்டியே!

தமிழுக்குப் பண்டெல்லாம் பேரிடர்கள் பல விளைந்தன. அவ்வப்போது அதற்கேற்ற தமிழ் வீரர்களும், வீரப் பெண்மணிகளும் தோன்றி அவ்விடர்களைக் களைந்தமை ஆராய்ச்சி வல்லார் நன்கறிந்ததே. அமிழ்தினுமினிய நந்தமிழ் மொழிக்கு இன்று நேரிட்டிருக்கும் பேரிடர்களைக் களைந்து அது மேன்மேலும் சிறப்புற்றோங்கும் திருப்பணியில் ஈடுபட்டுத்  தலைமை தாங்கி நடத்தத் தங்களைக் காட்டிலும் சிறந்த ஒப்பற்ற தலைவியார் வேறெவருமில்லை என்பதை யாங்கள் எடுத்துக்கூறவும் வேண்டுமோ!

நூல் பல எழுதி நுண்பலம் தெரிந்த நங்கையர் திலகமே!

அரிதின் முயன்று தாங்கள் எழுதியுதவிய தனித் தமிழ்க் கட்டுரைகள், முப்பெண்மணிகள் வரலாறு, பட்டினத்தார் பாராட்டிய மூவர், ஐரோப்பிய அருண் மாதரிருவர் என்ற தமிழ் நூல்களை எளிய இனிய தமிழ்க் கட்டுரைகள் எழுதுவதற்கு மேல் வரிச்சட்ட மாய் விளங்குகின்றன என்பதைத் தமிழ் நாட்டார் நன்கறிந்துள்ளனர். இவையெல்லாவற்றினும் மேலா கத் தாங்கள் இருபதாண்டுகளாகப் பற்பல இடைஞ்சல் களுக்கிடையில் அரும்பாடுபட்டு எழுதித் தொகுத்த வடசொல் தமிழ் அகரவரிசை தமிழுக்குரிய ஆக்க வேலைக்கு அடிப்படையாய் அமைவதொன்றாகு மென்பதை எண்ணி, எண்ணி மகிழ்கின்றோம்.

ஆலமர செல்வற் கன்புபூண்டொழுகும் நீலக்கண்ணியாம் நித்திலச்சுடரே!

பொருள் வசதியும் காலம் சதியும், பெருஞ்செல்வர் உதவியும் இன்றித் தமிழ்நாட்டை கிளர்ந்தெழுந்துள்ள புத்துணர்ச்சியே பற்றுக்கோடாகவும் தமிழ்த் தொண் டாற்ற அணிவகுத்து முன்வந்துள்ள பெண்மணிகளே துணியாகவுங் கொண்டு இம்மாநாட்டதனைத் திறனேதும் மில்லா நாங்கள் கூட்டி வைத்துள்ளதில் எத்தனையோ குறையிருக்கலாம். அவற்றையெல்லாம் பொருட்படுத் தாது கண்ணோடி எங்களை நல்லாற்றின் உய்ந்துத் தமிழ்நாடு நலம் பெறச் செய்ய வேண்டியதற்கான பணியை ஏற்றருளுமாறு பன்முறையும் இறைஞ்சித் தங்களை இச்சென்னை மாநகரின் கண் இன்று கூடும் இப்பேரவைக்கு வரவேற்கிறோம். தங்கள் வரவு பெரு நலனும் பெரும் புகழும் அளிக்கும் நல்வரவாகுக! செம்மனச் செல்வியாம் தாங்கள் எல்லா நலங்களுஞ் சிறந்து ஆல்போல் தழைத்து, அறுகுபோல் வேரோடிச் சீரும் சிறப்புமெய்துமாறு தமிழ்த்தாய் இணையங் களை வாழ்த்தி வணங்குகின்றோம்.

வரவேற்புக் கழகத்தார், தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு.

தலைவர் தமது தலைமைப் பிரசங்கத்தை ஆற்றி னார் (அது நாளை வரும்). திருவாட்டி பார்வதியம் மையார் அவர்கள் ஈ.வெ.ரா. நாகம்மாள் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார் (சொற்பொழிவு பின்னர் வரும்).

தலைவரால் கொண்டு வரப்பட்டு பல பெண்மணி களால் ஆதரிக்கப்பட்டு, தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேறின. தீர்மானங்கள் வருமாறு :

நிறைவேறிய தீர்மானங்கள் :

1.            இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர் திருத்தத் தலைவர்கள் செய்ய விடலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ. ராமசாமி அவர்கள் செய்து வருவ தாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாக வும், சமமாகவும் நினைப்பதற்கு வேறொரு வருமில்லாமையாலும் அவர் பெயரைச் சொல்லிலும், எழுத்திலும் வழங்கும்போ தெல்லாம் ‘பெரியார்’ என்ற சிறப்புப் பெய ரையே வழங்குதல் வேண்டுமென இம்மா நாடு எல்லோரையும் கேட்டுக் கொள்கிறது.

2.            மணவினை காலத்தில் புரோகிதர்களையும் வீண் ஆடம்பரச் செலவுகளையும் விலக்கி விடவேண்டு மென இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

3.            மற்ற நாடுகளைப்போல் தமிழர்கள் ஒன்றுபட்டு ஒரு சமூகமாய் வாழ்வதற்கு இன்று பெருந் தடையாயிருப்பது சாதி வேற்றுமையாதலால், சாதிவேற்றுமைகளை ஒழிப்பதற்கு இன்றியமை யாத கலப்பு மணத்தை இம்மாநாடு ஆதரிக் கின்றது.

4.            தமிழ் மாகாணத்தில் எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் மொழியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்வது டன், பிற மொழிகள் தமிழ்மொழிக்கு விரோத மாகப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக வைக்கக் கூடாதெனத் தீர்மானிக்கிறது.

5.            சென்னையில் முதலாவது மாகாண நீதிபதியாக இருக்கும் தோழர் அபாஸ் அலி அவர்கள், காலஞ் சென்ற பா.வே. மாணிக்க நாயக்கரவர்கட்குத் தமிழ் தெரியாது; அவர் தெலுங்கர் என்று கூறிய தையும், நாடார் சமூகத்தைக் கேவலமான வார்த் தைகளால் கூறியதையும், தோழர் மு. இராகவை யங்கார், தொல்காப்பியம் 2000 ஆண்டுகட்கு முற்பட்டது என்று கூறியதை மறுத்து 50 ஆண்டு களுக்கு முற்பட்டதென்று கூறியதைக் கண்டிப்ப துடன், தமிழறிவும், நூலறிவும் இல்லாத ஒரு நீதிபதி தன்னளவுக்கு மீறிக் கோர்ட்டில் பேசி வருவதை அரசாங்கத்தாரும், ஹைக்கோர்ட்டா ரும் கவனித்து ஆவன செய்யும்படி இம்மாநாடு தீர்மானிக்கிறது.

6. சென்னை லார்டு எர்ஸ்கின் பிரபு அவர்கள் மது ரையில் காங்கிரஸ் மந்திரிகள் அரசாங்கத்தை நன்றாக நடத்தி வைக்கிறார்கள் என்று பேசிய தைப் பார்த்தால், தங்கள் காரியம் நடந்தால் போது மானதென்றும், பார்ப்பனரல்லாத தமிழர்கள் நிலை எப்படியானாலும் தங்களுக்குக் கவலை யில்லை என்பதைக் காட்டுகின்றதாகையால் கவர் னர் அவர்களின் அவ்வபிப்பிராயத்தை வன்மை யாகக் கண்டிக்கிறது.

7.            இந்திய மாதர் சங்கம் என்னும் பேரால் தங்கள் கமிட்டிக் கூட்டத்திலும் மகாநாட்டிலும், கட்டாய இந்தியை ஆதரித்துத் தீர்மானம் நிறைவேற்றி யிருப்பதைக் கண்டிக்கின்றது.

8.            இந்திய மாதர் சங்கம் என்பது சில பார்ப்பனப் பெண்களும், பார்ப்பன அன்புபெற்ற தாய்மொழி யறிவில்லாத சில பெண்களும் கூடிய கூட்ட மென்று கருதுகிறது.

9.            இம்மாகாணத்தில் எப்பகுதியிலாவது பெண்களைக் கூட்டிக் கட்டாய இந்தியை நிறைவேற்ற வீர மிருந்தால் இந்திய மாதர் சங்கத்தார் செய்து பார்க்கட்டுமென இம்மாநாடு அறைகூவி அழைக் கிறது.

10. இந்தியை எதிர்த்துச் சிறைசென்ற ஈழத்துச் சிவா னந்த அடிகள், அருணகிரி சுவாமிகள், சி.என். அண்ணாதுரை, எம்.ஏ. உள்ளிட்ட பெரியோர் களையும் தொண்டர்களையும் பாராட்டுகின்றது.

11. வகுப்புத்துவேஷக் குற்றம்சாட்டி 153 ஏ, 505 ஸி செக்ஷன்களின் கீழ் 18 மாதம் கடுங்காவல் தண் டனை அளித்த காங்கிரஸ் அரசாங்கத்தைக் கண்டிப்பதுடன், மகிழ்ச்சியுடன் தண்டனையை ஏற்றுச் சிறை சென்ற தோழர் பி. சாமிநாததனை இம்மாநாடு பாராட்டுகிறது.

12. தோழர்கள் சண்முகானந்த அடிகளும், சி.டி. நாயக மும் சிறை செல்வதை இம்மாநாடு பாராட்டுகிறது.

13. சென்னை நகர் தமிழ்நாடாதலானும் தமிழர்கள் முக்கால் பாகத்துக்குமேல்வாழ்ந்து வருவதாலும் இதுவரை முனிசிபாலிட்டியார் வீதிகளின் பெயரை ஆங்கிலத்திலும் தமிழிலும் விளம்பரப் பலகை களில் போட்டு வந்திருக்க, இப்போது புதிதாக தெருக்களுக்கு பெயர் போடுவதில் ஆங்கிலத்தில் மட்டும் போடப்பட்டு வீதிகளின் பெயர் தமிழில் போடாமலிருப்பதால் ஆங்கிலமறியாத மிகுதியான தமிழ் மக்கள் தெருப் பெயர் தெரியாமல் தொல் லைப்படுவதை நீக்கி தமிழிலும் வீதிகளின் பெயர் போட வேண்டுமென, சென்னை நகர சபை யாரையும் மற்ற தமிழ்நாட்டு நகர சபைகளையும் இம்மாநாடு கேட்டுக் கொள்கின்றது.

14. சென்னை இரயில் நிலையத்தில் பீச், போர்ட்டு, பார்க் என தமிழில் எழுதியுள்ளதை முறையே கடற்கரை, கோட்டை, தோட்டம் என தமிழில் எழுத வேண்டுமெனவும் அப்படியே இரயில் பயணச்சீட்டு (டிக்கெட்)களினும் எழுதவேண்டு மெனவும் இரயில்வே கம்பெனியாரையும், சென்னை அரசாங்கத்தாரையும் இம்மகாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

15. ஒரு அணா, நாலணா, நிக்கல் நாணயங்களின் மதிப்பைக் குறித்திருப்பதில் சுமார் மூன்று கோடிக்கு மேல் உள்ள தமிழ் மக்களுக்கு விளங்கும்படி யாகத் தமிழிலும் குறிப்பிட வேண்டுமென அரசாங் கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

16. சென்னை அரசாங்க இந்திய மருத்துவப் பள்ளி சித்த வகுப்பில் நடைபெறும் பாடங்கள் ஒவ்வொன் றும் ஆங்கிலத்திலேயே பெரும்பாகம் நடைபெற்று வருவதை நிறுத்தி எல்லாப் பாடங்களையும் தமிழி லேயே நடத்த வேண்டுமெனவும், சித்த வகுப்பில் சேரும் மாணவர்கள் பள்ளிக்கூடப் படிப்பை ஆங்கி லத்தில் படித்து முடித்திருக்க வேண்டும் என்று கட்டாயமிருப்பதை எடுத்து, தமிழில் ஓரளவு இலக்கிய அறிவுடைய மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் சென்னை அரசாங்கத் தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகின்றது.

17. இந்திய மருத்துவப் பள்ளியில் சித்த மருத்துவ வகுப்புக்கு வேண்டிய பாடங்களில் உடற்கூறு, உடல்தொழில், கெமிஸ்ட்ரி எனும் இரசாயன நூல், மெட்ரியா மெடிக்கா, பிள்ளை பெறு நூல் முதலியவை தமிழில் இருப்பதாலும் அதனை அச்சிட்டு மாணவர்கட்கும் மற்றவர்கட்கும் பயன் படும்படிச் செய்விக்க அரசாங்கத்தாரை இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

18. மேற்கண்ட பாடப் புத்தகங்களில் உடற்கூறு, கெமிஸ்ட்டரி, மெட்ரியா மெடிக்கல் முதலிய புத்த கங்கள் ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்குமுன் அச்சிடப்பட்டவைகளை அரசாங்கத்தாருக்கு அச்சிடக் கொடுக்க இசைந்துள்ள சென்னை தென் இந்திய வைத்தியச் சங்கம் நிறுவியவரும், அமைச்சரு மாகிய பண்டிட் எஸ்.எஸ். ஆனந்தம் அவர்கட்கு இம்மாநாடு நன்றி செலுத்துகிறது.

19. வியாபாரப் பத்திரிகைகளைப் போலல்லாமல், தமிழர் முன்னேற்றம் ஒன்றையே கருத்திற் கொண்டு பெரிய கஷ்ட நஷ்டங்களுக்கிடையே ஓயாது உண்மையாய் உழைத்துவரும் ‘விடு தலை’, ‘குடிஅரசு’, ‘நகரதூரன்’, ‘பகுத்தறிவு’, ‘ஜஸ்டிஸ்’, ‘சண்டே அப்சர்வர்’ முதலிய பத்திரிகைகளைத் தமிழ்ப் பெண்மணிகள் ஒவ்வொரு வரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டுமாய் இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

20. பத்திரிகைகளின் வாயிலாகப் பணம் சம்பாதிப்பது ஒன்றையே எண்ணி, தமிழர் இயக்கங்களைக் கேவலப்படுத்தி வெளிவரும் ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி’, ‘தமிழ்மணி’ முதலிய பத்திரிகை களைத் தமிழர்கள் இனி வாங்கக் கூடாதெனவும் இம்மாநாடு கேட்டுக் கொள்ளுகிறது.

21.          கணவனை இழந்த இளம் பெண்களின் துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு ஆதரிக்கிறது.

22.          தமிழநாட்டில் 100-க்கு 95 மக்கள் கண்ணி ருந்தும் குருடராய் தாய் மொழியில் கையெழுத் துப் போடத்தெரியாத நிலைமையில் இருக்கை யில், சென்னை முகன் மந்திரியார் அதற்காவன செய்யாமல் அதற்கு மாறாக இந்தியைக் கட்டாய மாகச் செய்திருப்பதையும் அதனைக் கண்டிக்குமுகத் தான் தமிழ்நாட்டுப் பெருமக்களும், அறிஞர்களும் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், மாபெருங் கூட்டங்கள் கூட்டி தெரிவித்தும் அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் பிடிவாதமாகயிருப்பதையும், இதைப்பற்றித் தங்களுக்குள்ள மனக்கொதிப்பைக் காட்டும் முறையில் அமைதியாக மறியல் செய்ப வரைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்து வதையும் இம்மாநாடு வன்மையாகக் கண்டிக் கிறது.

23.          தமிழ்மொழியைக் காப்பாற்றும் முறையில் இந்தி யைக் கண்டித்து மறியல் செய்து சிறை புகுந்த வீரர்களுக்கு இம்மாநாடு மனமார்ந்த நன்றி செலுத்துகிறது.

தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப் பெண்கள் நிலைமையை விரித்தும் தோழர் ஈ.வெ. ரா. ஒரு சொற்பொழிவாற்றினார் (அது பின்னர் வரும்).

பின்னர் தீர்மானங்களை ஆதரித்தும் பெண்கள் நடந்துகொள்ள வேண்டிய நிலைமையை விளக்கியும் தோழர்கள் மீனாம்பாள் சிவராஜ், பண்டிதை ஆர். கண்ணம்மாள், கலைமகளம்மையார், இராமாமிர் தத்தம்மையார், கமலாம்பாள், சிறுமி குஞ்சிதமணி, நீலாயதாட்சி, பண்டித திருஞானசம்பந்தம், ஆர். நாராயணி அம்மாள், மலர்முகத்தம்மையார், சாமி அருணகிரிநாதர், இராணி அம்மையார் (தோழர் அண்ணாதுரை மனைவி), தோழர் அண்ணாதுரை அன்னையார் ஆகியோர் பேசினர்.

தலைவர் முடிவுரைக்குப் பிறகு, தோழர் வ.பா. தாமரைக் கண்ணம்மையார் நன்றி கூறினார். தோழர் கள் பார்வதியம்மையார், தாமரைக் கண்ணம்மையார் வாழ்த்துப்பாடினர்.

இரவு 9 மணிக்கு தமிழ் வாழ்க! தமிழ்நாடு தமிழருக்கே! இந்தி வீழ்க! பெண்ணுலகு தழைக்க! என்ற பேரொலிகளிடையே மாநாடு இனிது முடிவுற்றது.

(“குடிஅரசு” 20-11-1938)

(தொடரும்)

Pin It