இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசால் தலித் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகபட்சமான சலுகை என்பதாக சாதி இந்து மந்தைப் புத்தியால் இங்கு அர்த்தம் கொள்ளப்படுகிறது. அரசியல்- பொருளாதாரம்- சமூக அந்தஸ்து- கல்வி நிலைகளில் காலாதிகாலமாக பின்னுக்குத் தள்ளப்பட்டு நலிந்துபோனவன் வளர்ச்சி பெறுவதற்கு ஒதுக்கப்பட்ட 'தனி' இடங்கள் (Reserved seats) மூலம் அரசியலிலும், இட ஒதுக்கீடு மற்றும் இதர சலுகைகள் மூலம் கல்வியிலும் அரசு வேலைகளிலும் வாய்ப்பளிப்பதற்கான ஏற்பாடுதான் இடஒதுக்கீடு சலுகை என்று புரிந்துகொள்ள சாதி இந்துக்களால் முடியவில்லை இன்றுவரை. ஏதோ உயர் சாதி இந்துக்களுக்கு உரிய இடங்கள் இடஒதுக்கீடு பெயரால் தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்களால் பறிக்கப்பட்டு விடுகின்றன; இதனால் அதிகபட்ச தகுதியும் திறனும் இருந்தும் உயர்சாதியினருக்கு கல்வி-வேலை வாய்ப்பு ஆகிய இவற்றில் இடம் கிடைக்காமல் போய்விடுகிறது என்பதாக இருக்கிறது இவர்களது புலம்பல்கள்.

இடஒதுக்கீடு மூலம் தகுதி-திறமை குறைவானவர்கள் வேலைவாய்ப்புகள் பெற்று அலுவல் பணிகளில் ஈடுபடுவதால் திறன்மிக்க நிர்வாகம் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்றெல்லாம் மனங்கூசாமல் பேசுகின்றனர் உயர் சாதியினர். உச்ச நீதிமன்றம்வரை கூட செல்கின்றனர். தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கான வரலாற்றுப் பின்னணி, இன்றைக்குள்ள சமூக யதார்த்த நிலை குறித்த அறிவு போதாமையால் சாமானிய மக்கள்தான் இப்படிப் பேசுகின்றனர் என்றால் உயர் சாதி அறிவுஜீவிகள் எனப்படுவோரும் அவர்களது ஆதரவு ஊடகங்களும் இதே ரீதியில் பேசி மக்களைக் குழப்புகின்றனர் என்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. இவர்களுக்கு முதலில் நாம் இங்கு 'இடஒதுக்கீடு' என்பது தலித்துகளுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள தனிச் சலுகையாக கருதக்கூடாது என்பதை சொல்லிக்கொள்வோம்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒட்டுமொத்த மக்கள் தொகையில் எஸ்சி-24.6 சதவீதம் என்றும் எஸ்டி-1.17 (மொத்தம் 25.77%) சதவீதம் என்றும் சொல்லப்படும் தலித் மக்களுக்கு 19 சதவீதம் மட்டுமே கல்வி-வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது என்பது ஒருபுறமிருக்க தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு சலுகையை பிசி பிரிவினர் 30%, எம்பிசி பிரிவினர் 20%, எஸ்சி/எஸ்டி பிரிவினர் 19% என்ற வகையில் பகிர்ந்துகொள்கிறார்கள் என்பதை சொல்லிக் கொள்வோம். மீதமுள்ள 31% சதவீதம் ஓசி/எஃப்சி எனப்படும் உயர்சாதிப் பிரிவினரால் அரவமில்லாமல் அனுபவிக்கப்படுகிறது. இவர்கள் மக்கள் தொகை அடிப்படையில் 30% சதவீதத்துக்கும் கீழ் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இங்கு மற்ற பிரிவினர் இடஒதுக்கீடு பெறுவதை யாரும் பெரிதாகப் பேசுவதில்லை. தலித் மக்கள் பெறும் இடஒதுக்கீடு சலுகை மட்டும் உயர்சாதி ஆதரவு ஊடகப் பேச்சுகளிலும் மக்கள் மத்தியிலும் பூதாகரமாகப் பேசப்படுகிறது. மக்கள் தொகையின் அடிப்படையிலான சமூக நீதி என்று பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக 6.77% இடங்களை தலித் மக்களுக்கு இடஒதுக்கீடாக வழங்க வேண்டும்.

கல்வி நிலையில் பின்னடைவு:

கல்வி நிலையங்களிலும் அரசு வேலைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு அறுபது ஆண்டுகள் தாண்டிய நிலையிலும் தலித் மக்கள் எதிர்பார்த்த வளர்ச்சியைக் கண்டடையவில்லை. வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு பெற்றதன் மூலம் மிகச் சிலர் ஓரளவு பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ளனர் எனலாம். ஆனால் கல்வி அறிவு வளர்ச்சி என்பதைப் பொருத்தமட்டில் தலித் அல்லாதவர்களுக்கும் தலித்துக்களுக்கும் இடையிலான பெரும் இடைவெளி அப்படியே இருந்துகொண்டுதான் உள்ளது. 2010-2011 கணக்கெடுப்பு விவரம் தாழ்த்தப்பட்ட மக்களுள் 33.1 சதவீதம், பழங்குடியின மக்களுள் 35.8 சதவீதம் பேர் கல்வி அறிவு அற்றவர்களாக இருக்கின்றனர் என அறிவித்துள்ளது. மற்றவர்களின் கல்வி அறிவற்ற நிலை என்பது வெறும் 17.4 சதவீதம் மட்டுமேயாம் என்பதுடன் நமது நிலைமையை ஒப்பீட்டுப் பார்க்கும்போது கல்வி வளர்ச்சியில் நமது இடத்தைப் புரிந்துகொள்ளலாம். இந்தாண்டு உயர் படிப்புகளுள் முக்கியமானதாகக் கருதப்படும் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்தோர் எம்பிசி- 6464, பிசி -12131, எஸ்சி- 6007, எஸ்டி -211, எஸ்சிஏ- 966 ஆவர். மருத்துவ படிப்புக்கு சாதி/பிரிவு அடிப்படையில் கட்‍ஆஃப்
மதிப்பெண் பெற்றோர் விவரம், ஒப்பீட்டுக்குக் காண்க:

மருத்துவப் படிப்புக்கான கட்‍ஆஃப் மதிப்பெண்கள்:

பிரிவு 199.5 199.25 199 198.75 198.5 195 187.5
               
BC 39 48 74 95 119 2646 6536
MBC 1 6 18 23 35 34 863 2917
SC 1 3 5 6 11 185 825
ST 0 0 0 0 0 0 17

எஸ்சிஏ பிரிவில் 198.25/ 1,198/2,197.50/2, 195.00/20, 187.5/100 என்ற அளவில் கட்‍ஆஃப் மதிப்பெண்கள் எஸ்சிஏ மாணவர்கள் பெற்றிருந்தனர். எஸ்டி பிரிவில் 197.5 கட்‍ஆஃப் மதிப்பெண்களை இரண்டு மாணவர்கள் பெற்றுள்ளனர்.

மக்கள் தொகை அடிப்படையில் எஸ்சி பிரிவினருக்கு மிக நெருக்கத்தில் இருப்பதும் 20 சதமானம் இட ஒடுக்கீடு பெறுவதுமான எம்பிசி பிரிவு மாணவர்கள் 6464 பேர் மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்திருக்க 19 சதமானம் இட ஒதுக்கீடு பெறும் எஸ்சி+எஸ்டி+எஸ்சிஏ பிரிவு மாணவர்கள் 7184 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆனால் எம்பிசி மாணவர்களில் 16 பேர் 199.5 கட்‍ஆஃப் பெறுகின்றனர். எஸ்சி+எஸ்டி+எஸ்சிஏ பிரிவினருள் ஒரே ஒரு மாணவர் மட்டுமே அந்த மதிப்பெண்ணைப் பெறுகிறார். இந்த வேறுபாடு 187.5 கட்‍ஆஃப் மதிப்பெண்ணில் 2917/ 942 ஆக மாறுகிறது. அதாவது எம்பிசி மாணவர்களைவிட 31.5 சதவீதம் எஸ்சி/எஸ்டி மாணவர்கள் பின் தங்கியுள்ளனர். எஸ்சி பிரிவினருடன் ஒப்பிடும்போது எஸ்டி மற்றும் எஸ்சிஏ பிரிவில் நிலைமை இன்னும் மோசம் என்பதை அட்டவணையைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம். இந்த வித்தியாசம் பொறியியல் மற்றும் மற்ற பிற படிப்புகளிலும் தொடரவே செய்யும் பட்சத்தில், தமிழகத்தில் இருக்கும் 2172 எம்பிபிஎஸ் இடங்கள் இடஒதுக்கீடு பின்பற்றாமல் கூடுதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு தகுதி அடிப்படையில் முன்னுரிமை என்று நிரப்பப்படுமானால் ஐம்பது எஸ்/எஸ்டி மாணவர்கள் கூட மருத்துவப் படிப்பில் சேர முடிந்திருக்காது. யதார்த்தத்தில் பெயரளவுக்கே சனநாயகம் வாழும் நாட்டில் சமநீதி-சம வாய்ப்பு என்பதெல்லாம் வாய் சொல்லில் வாள் சுழற்றும் கதையாகிவிடும்.

கல்வியில் இட ஒதுக்கீடு நடைமுறையில் இருப்பதால் இந்த ஆண்டு கிட்டத்தட்ட 412 எம்பிபிஎஸ் இடங்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மாணவ மாணவியருக்கு கிடைத்துள்ளன. சம வாய்ப்பு வழங்குதல் என்பதன் அடிப்படையில் தலித்துகளுக்கு ஒதுக்கப்படும் இடங்கள் தலித்துக்களைக் கொண்டு நிரப்பப்படும்போது உயர் சாதியினருடன் ஒப்பிடுகையில் சற்றுக் குறைவான கட்‍ஆஃப் மதிப்பெண் பெற்றிருக்கும் தலித் மாணவர்களுக்கும் எம்பிபிஎஸ் இடம் கிடைத்து விடுகிறது. இது இன்றளவும் தலித் சமூகம் கல்வியில் பின் தங்கியுள்ள நிலைமையைக் காட்டுகிறது. நிதர்சனத்தில் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் தேவை என நிர்ணயிக்கப் பட்டிருக்கும் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை விட 60-75 மதிப்பெண்கள் (35 சதவீதத்துக்கும் மேல்)கூடுதல் பெற்ற தலித் மாணவர்களுக்கே எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன என்பதால் இந்த நடைமுறையை தகுதி- திறமை குறைவானவர்களுக்கு அளிக்கப்படும் சலுகை என்று கருதுவதும் பேசுவதும் அறிவாகாது. எனவே உயர் சாதி மாணவர் ஒருவரை விட குறைந்த மதிப்பெண் கொண்டுள்ள தலித் மாணவனுக்கு உயர் கல்வியில் இடம் கிடைப்பதை தகுதித் திறமைக் குறைவுக்குக் கொடுக்கப்படும் சலுகை என்று பார்ப்பது தவறானது. கல்வியில் பின் தங்கியிருக்கும் தலித் சமூகத்துக்கு வழங்கப்படுவதற்கான வாய்ப்பு- ஏற்பாடு என்றே கருதப்பட வேண்டும். இந்த நிலை குறைபாடுகள் கொண்டது என்றால் இந்நிலை நீடிப்பதற்காக உண்மையில் வெட்கப்படவேண்டியது தலித் மக்களல்ல..ஜனநாயகம் கொடிகட்டிப் பறக்கிறது என்று சொல்லிக்கொள்ளும் இந்த தேசம்தான். இந்த ஏற்றத்தாழ்வும் சரி செய்யப்பட வேண்டும் என்பதுதான் நமது கோரிக்கையும். தலித் அல்லாதோர் சிலர் தாமும் இட ஒதுக்கீடு மூலம் கல்வி- வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இடம் பெறுகிறோம் என்பதை மறந்து தலித் மக்களின் இடஒதுக்கீடு மீது மட்டும் கொண்டுள்ள வன்மமான எண்ணத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மருத்துவம்-பொறியியல் உள்ளிட்ட உயர் படிப்புகளில் இவ்வாறு நாம் பின் தங்கியுள்ளோம் என்றால் அடிப்படைக் கல்வியிலும் தலித்துகளின் கல்வி நிலை மோசமாகவே உள்ளது. 2011 கணக்கீடுபடி தமிழ்நாடு எஸ்சி மக்களுள் கல்வி அறிவு பெற்றோர் 66.6 சதவீதம் ஆகும். பத்தாம் வகுப்புடன் பள்ளியில் இடை நின்றுபோவோர் எஸ்சி பிள்ளைகளுள் 2008 ஆண்டுபடி மாணவர்கள்-42.13 சதவீதம், மாணவிகள்-26.24 சதவீதம்; எஸ்டி பிள்ளைகளுள் மாணவர்கள்-72.83 சதவீதம், மாணவிகள்- 73.04 சதவீதம் ஆகும். இப்புள்ளி விவரப்படி பிற பிரிவினருடன் ஒப்பிடும்போது கண்ணுக்கு எட்டும் தூரத்தில் கூட தலித்துகள் இல்லை என்பதுவே நிதர்சனம். இந்த கணக்கெடுப்புகளை- ஒப்பீடுகளைப் பார்த்து பெருமூச்சு விடுவதிலோ மனப் புழுக்கம் கொள்வதிலோ பலனொன்றும் விளையப்போவதில்லை. தாழ்த்தப்பட்ட-பழங்குடியின மக்கள் தாம் கல்வி நிலையில் எந்த அளவுக்கு பின் தங்கி இருக்கிறோம் என்பதை அடையாளம் கண்டுகொள்வதும் அவசியம். 20 சதவீதம் இட ஒதுக்கீடு பெறும் எம்பிசி பிரிவினருள் வாதத்துக்கு 20 மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு 199.5 கட்‍ஆஃப் பெறுகின்றனர் என்றால் 19 சதவீத இட ஒதுக்கீடு பெறும் தலித் மாணவர்கள் 19 பேர்களாவது 199.5 கட்‍ஆஃப் பெறும் நிலை எப்போது வருமோ அப்போது தான் தலித் மக்கள் கல்வி நிலையில் வளர்ச்சி பெற்றுள்ளதாக அர்த்தமாகும். இப்போது எம்பிசி பிரிவில் 16 மாணவர்கள் 199.5 கட்‍ஆஃப் பெற்றால்/எஸ்சி-எஸ்டி பிரிவில் 1 மாணவர் மட்டிலுமே அம்மதிப்பெண்ணைப் பெறும் நிலை நிலவுகிறது. அதாவது 16:1 என்றிருக்கும் விகிதாச்சாரம் 16:16 என்ற இடம் நோக்கி நகர்த்தப்பட வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

"எந்தவொரு சமூகத்தினதும் பொருளாதார, சமூக, பண்பாட்டு வளர்ச்சிக்குக் கல்வி வளர்ச்சி என்பது முன் நிபந்தனையாக இருக்கிறது" என்கிறது டபிள்யூ.கார்னரின் குறிப்பு.         

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஒட்டுமொத்த நிலையை உயர்த்த கல்வியே சிறந்த கருவியென அம்பேத்கர் கருதினார். கல்வியை, குறிப்பாக மேல் நிலைக் கல்வியைப் பெறுவதன் வாயிலாக மட்டுமே சமூகப் பொருளாதார சமத்துவம் கைக்கூடும் என்றும் அம்பேத்கர் நம்பினார். அடித்தள மக்கள் கல்வியறிவு பெறுவதில் ஆர்வம் காட்டுவதுடன் மட்டும் அம்பேத்கர் நின்றுவிடவில்லை. கல்வியளிக்கும் பணிகளிலும் இவர்கள் பங்கெடுக்க வேண்டுமென்பதிலும் அதே அளவு ஆர்வத்தைக் காட்டினார். கல்வித் திட்டம் என்பது கல்விப் பணியில் இருப்பவர்களுடைய கொள்கைகள், நலன்கள், பண்புகள் ஆகியவற்றை எதிரொலித்தலே என்பது அவருடைய விவாதமாகும். 1927 ஆம் ஆண்டு பம்பாய் மாகாணச் சட்டமன்றத்தில் கல்விக்கான நிதி ஒடுக்கீடு குறித்து டாக்டர். அம்பேத்கர் பேசும்போது "கல்வி எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும்படி செய்ய வேண்டும். குறைந்த செலவில் தீண்டப்படாத மக்களுக்கு உயர் கல்வி கிடைக்கும் வகையில் கல்வித் துறையின் கொள்கை இருக்க வேண்டும். எனவே தீண்டப்படாத மக்களுக்குக் கல்வியில் தனிச்சலுகை தர வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

ஐந்தாண்டு திட்டங்களில் கல்வி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு செய்வது உள்ளிட்ட வேறுபல நடவடிக்கைகளும் கல்வி வளர்ச்சிக்காக மத்திய- மாநில அரசுகளால் எடுக்கப்படுகின்றன. பிற்படுத்தப்பட்ட-தலித் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் கல்விக் கட்டணம் செலுத்துவதில் விலக்கும் சலுகைகளும் பெறுகின்றனர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு என்று தனிப்பள்ளிகளும் விடுதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நோட்டுப் புத்தகங்கள், சீருடைகள், புத்தகங்கள் ஆகியவை இலவசமாக வழங்கப்படுகின்றன. உதவித் தொகைகளும் ஊக்கத் தொகைகளும் வழங்கப்படுகின்றன. இவ்வாறாக 1937களுக்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட- தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சிக்காக தனித் துறைகள் உருவாக்கப்பட்டு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டன. இலவசக் கல்வி, கட்டாயக் கல்வி என்று பரிணாமம் அடைந்து இன்று சமச்சீர்க் கல்வி என்ற போதனை முறையை வந்தடைந்துள்ளது நமது கல்விமுறை. இவ்வளவு இருந்தும் கல்வி நிலையில் தலித்துகள் பின் தங்கியே இருக்கின்றனர். ஏன்?

"தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சியானது தீண்டாமை உள்ளிட்ட பல்வேறு விதமான இடர்ப்பாடுகளின் காரணமாக மிகவும் மந்தமாகவே இருந்து வந்துள்ளது. பண்டைய காலங்களில் பள்ளிகள் கோவில்களுக்குள் இருந்த காரணத்தால் தீண்டப்படாதவர்களாக விலக்கி வைக்கப்பட்டிருந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அங்கே சென்று கல்வி பயில்வதற்கு முடியவில்லை"

இளையபெருமாள் கமிட்டி அறிக்கையில் இடம் பெற்றுள்ள இம்மேற்கோள் தலித் மக்களின் கல்விச் சூழல் பின்னடைவுக்கான வரலாற்றுப் பின்னணியை விளக்குவதை தலித் அல்லாதோரும் தலித் எதிர்கதையாடல்கள் நிகழ்த்துபவர்களும் புரிந்துகொள்ள முன் வரவேண்டும். ஆயிரங்காலத்து தலித் மக்கள் பிரச்சினைகள் முற்றுப்பெறுவதற்கு சில நூறாண்டுகள் தேவைப்படலாம். தலித்துகள் அவ்வளர்ச்சியை சீக்கிரத்தில் அடைவதற்கான தடைக் கற்களை அகற்றுவதற்கு முன்வரும் பெருந்தன்மை தலித் அல்லாதோர் மத்தியில் இல்லாமல் இருக்கலாம். அப்பாதையில் புதிய தடைக் கற்களை எழுப்பும் நயவஞ்சகர்களாகவாவது அவர்கள் மாறாமல் இருந்தால் நல்லது. இந்த மேற்சொன்ன கல்வி அசௌகரியங்களை ஏதோ தலித் மாணவர்கள் மட்டும் அனுபவிக்கின்றனர் என்பதாக தப்பர்த்தம் கொள்ளப்படுகிறது. "1937 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட அமைச்சரவைகளுக்குப் பிறகுதான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி நிலை உயர்வதற்கு வேகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன" என்கிற அன்றைய இளையபெருமாள் கமிட்டி அறிக்கையின்படி பிற்படுத்தப்பட்ட மக்களையும் உள்ளடக்கியே நாட்டின் கல்வித் திட்டங்கள் வரையப்பட்டுள்ளன என்பதினை அறிந்துகொள்ளலாம். விண்ணப்பப் படிவக் கட்டணங்கள் மற்றும் கல்விக் கட்டணங்களில் சிறு வேறுபாடு என்பது போன்ற சொற்பமான சலுகைகள் தவிர்த்து உயர் கல்விகளில் இடஒதுக்கீடு, ஸ்காலர்ஷிப் உட்பட அனைத்து கல்வி சலுகைகளையும் தலித் மாணவர்களைப் போலவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களும் பெற்று வருகின்றனர். ஆனால், இந்து சாதி சமுதாய மந்தையோ தலித்துகளுக்கு மட்டும் தனியாக இந்த அரசாங்கம் வாரி வாரி வழங்கி வருகிறது என்பது போல வயிறெரிந்து பொசுங்குகிறது.

பட்டங்களையும் பதவிகளையும் வாங்கிக் குவித்துக்கொண்டதுடன் நின்றுவிடாமல், தான் பெற்ற கல்வி அறிவை தம் மக்கள் அனைவரும் பெற்று முன்னேற்றம் காணவேண்டும் என்ற சிந்தனையோடு தமது தீவிர அரசியல் பணிக் சுமைகளினூடே கல்விப் பணிகளையும் தம் வாழ்நாள் முழுதும் செய்து வந்தவர் அம்பேத்கர். தலித் தலைமைகளும் இலக்கிய முன்னோடிகளும் அம்பேத்கரிடம் அரசியல் கற்றுக்கொள்ள காட்டும் ஆர்வத்தில் சரிபாதி அளவுக்குக் கூட அவரது கல்விப் பணிகளைக் பின்பற்றுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

தலித் அரசியல் கட்சிகள் கிராமங்கள்தோறும் கிளைகளை நிறுவி, கொடிக் கம்பங்களை நடுவது போல தலித் கல்வி மையங்கள், படிப்பு வட்டங்கள், நூலகங்கள் ஆகியவற்றையும் நிறுவ முன்வர வேண்டும். தலித் கல்வி மேம்பாட்டுக்கான அறக்கட்டளைகளைத் துவக்கி தேவையான நிதி ஆதாரங்களைத் திரட்டிக்கொள்வதன் மூலம் ஏழை தலித் மாணவர்களின் உயர் படிப்புகளுக்கு அந்நிதியைப் பயன்படுத்தலாம். அரசாங்கத்தின் தலித் மக்கள் கல்வி வளர்ச்சிக்கானத் திட்டங்களை தம் மக்களிடம் கொண்டு சேர்த்து அத்திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்கான விழிப்புணர்வை தலித் மாணவ-மாணவியர் மத்தியில் வளர்த்தெடுக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் 13 அரசு பொறியியல் கல்லூரிகள், 12 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 4 பல்கலைக்கழகத் துறை(University Departments /CEG, ACT, SAP, MIT Campuses)கள், 523 சுய நிதிக் கல்லூரிகள் என மொத்தம் 552 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த சுயநிதிக் கல்லூரிகளில் 19 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றுவதில் உள்ள குளறுபடிகள் களையப்படுவதற்கான போராட்டங்களும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் தலித் மாணவர்களுக்கு மறுக்கப்படும் கல்வி உதவித் தொகையைப் பெறுவதற்கான போராட்டங்களும் தலித் அரசியல் அமைப்புகளாலும் மாணவர்களாலும் நடத்தப்பட வேண்டும். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடம் பெறும் தலித் மாணவர்களிடம் அரசு நிர்ணயித்ததைவிட கூடுதல் கட்டணங்கள் நன்கொடை என்ற பெயரில் வசூலிக்கப்படும் அவலத்துக்கு எதிரான போராட்டங்கள் கட்டியெழுப்பப்பட்டு உயர் கல்வியில் வெளிப்படையாக நடைபெறும் பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டும். இதையெல்லாம் செய்யாமல் கல்வி நிலையில் நமது பின்னடைவு குறித்து ஒப்பாரி வைப்பதால் மட்டும் ஆகப்போவதொன்றுமில்லை.

கல்வியாளர்களின் ஆலோசனைகளைத் தொகுத்தெடுத்து அவற்றின் வழிகாட்டுதல்களுக்கேற்ப தலித் மக்களின் சுயசார்பான கல்வித் திட்டங்களை வடிவமைத்து செயல்படத் துவங்கும்போது பதினாறு கால் பாய்ச்சலில் தலித் சமூகம் முன்னேறுவது நிச்சயம். கல்வியைப் பொருத்தமட்டும் நமது உடனடி இலக்கு தலித் மக்களின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு கற்றறிந்த தலித் பிரிவினர் மத்தியில் சிறப்பு நடவடிக்கைகளைக் கோருவது மற்றும் கல்வி நிலையில் மற்ற சமூகத்தவருக்கு இணையாக தலித் சமூகத்தையும் வளர்த்தெடுக்க வேண்டுவது. கல்வி அறிவு ஒன்று மட்டுமே ஒருவனுக்கு தன்னைத் தான் உற்று நோக்க உதவும் மாபெரும் சாதனமாகும். கல்வியறிவு ஒருவனுக்கு அவனது இடத்தை வெளிச்சம் போட்டுக் காட்டும், வளர்ச்சிக்கான பாதையில் அவனை செலுத்தும், தனக்காகவும் தன் சமூகத்துக்காகவும் போராட அவனைத் தூண்டும்.

உதவிய இணயதளங்கள்/நூல்கள்:

1 www.tnhealth.org.com
2.www.nird.org/rural development statistics 2011
3 கற்றனைத் தூறும்-ரவிக்குமார் -உயிர்மை வெளியீடு
4.டாக்டர்.அம்பேதகர் ¨டா¢-அன்புச்செல்வம் - புலம் வெளியீடு
5.பாபாசாகேப் அம்பேத்கர் - ரகவேந்திரராவ் -சாகித்ய அகாடமி
6.தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2013-தகவல்கள்,அண்ணா பல்கலைக்கழகம்,சென்னை.

- வெ.வெங்கடாசலம், நெய்வேலி (செல்:94867 86841, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It