தமிழ்நாட்டு மானவர்கள் போராட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டியது. இந்தப் போராட்டத்தை நிறுத்த முயற்சிக்கும் தமிழ்நாடு -இந்திய அரசுகள் மற்றும் ஏனைய சக்திகள் அனைத்தையும் நாம் வன்மையாக கண்டிக்கிறோம். மாணவர்கள் மீதான போலீஸ் அராஜகம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். மாணவர்கள் போராட்டம் தொடர வேண்டும்.

திராவிட கட்சிகளுக்கு மறுப்பு

முத்துக்குமார் சாவை ஒட்டி எழுந்த மாணவர் போராட்டத்தை திட்டமிட்டு ஒடுக்கியதில் தி.மு.க அரசுக்கு முக்கிய பங்குண்டு. ராஜீவ் கொலையைக் காரனமாகக் காட்டி, ஈழத் தமிழர்களின் பல்வேறு உரிமைகளைப் பறித்த வரலாறு அ.தி.மு.க விற்கு உண்டு. இந்த அரசுகளுக்கு வாக்கு வங்கியைக் காப்பாற்றிக் கொண்டு தமது சுரண்டலை அதிகரிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் கிடையாது. இந்த பிற்போக்குத் 'திராவிட கட்சி' அரசியலையும் சேர்த்து அரச கட்சிகளின் ஆதிக்கத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவராமல் ஈழத்து மக்களுக்கோ அல்லது தமிழ்நாட்டு மக்களுக்கோ எந்த விடிவுமில்லை.

ஈழத்து அகதிகள் தமிழ்நாட்டில் மிக மோசமான முகாம்களில் தொடர்ந்து துன்பப்பட்டுக் கொண்டிருப்பதற்கு இந்த அரசாங்கங்களே காரணம். மீனவர்கள் கொலை செய்யப்படுவது பற்றியோ அல்லது தமிழ்நாட்டு வியாபாரிகள் ராஜபக்ச அரசின் ஆசியுடன் வடக்கு கிழக்கை சுரண்டல் குத்தகைக்கு எடுக்க முற்படுவதைப் பற்றியோ எந்த உருப்படியான நடவடிக்கைகளும் இவர்களால் எடுக்கப்படப் போவதில்லை. பாராளுமண்றத்தில் வெற்றுப்பேச்சு –டெசோ மாநாடு என்று எம்மைப் 'பேய்க்காட்டிப்' பிழைப்பு நடத்த விரும்பும் இக்கட்சிகளுக்கு நாம் திட்டவட்டமான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.

students_eelam_640_copy

இது மட்டுமின்றி தமிழ்நாட்டில் ஏராளமான மக்கள் கடும் வறுமையிற் தவிக்கிறார்கள். தலித்துகள், பெண்கள், குழந்தைகள் தினமும் கொடுமைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள் -கொல்லப்படுகிறார்கள். தொழிற்சாலைகள் மற்றும் ஏனைய வேலையிடங்களில் பணி புரிபவர்கள் வறுத்தெடுக்கப்படுகிறார்கள். குறைந்தபட்ச ஊதியம் என்ற வரையறை கிடையாததால் மிகச் சொற்ப பணத்துக்காக கிழமையில் ஆறு நாட்கள் வேலை செய்யப் பணிக்கப்பட்டு முறித்தெடுக்கப்படுகிறார்கள். கிடைக்கும் ஒரு நாள் ஓய்விற்கூட இளையோர் இளைப்பாற முடியாத வகையில் பொலிஸ் அராஜகம் தலைவிரித்தாடுகிறது. உட்கார்ந்து பேச வசதியான பார்க்குகளோ சமூக சேவை இடங்கள் என்றோ எந்த வசதிகளும் கிடையாது. தேநீர்க் கடையில் நின்றபடி பேசக்கூட முடியாது. கடும் வெய்யிலில் உடலையும் உயிரையும் உருக்கித் திரியும் மக்களுக்கு இளைப்பாறி நிற்க உருப்படியான பஸ் ஸ்டான்டுகள்கூட கிடையாது. இவை அனைத்தும் மக்களின் அரசியல் நடவடிக்கைகளை முடக்கி ஆட்சி செய்ய உதவி செய்கிறது. இதனால் இவற்றை மாற்றும் சுலோகங்களையும் மாண‌வர்கள் முன்னெடுக்க வேண்டும். மக்கள் படுகேவலமான வாழ்க்கை வாழ பணிக்கப்பட்டள்ளார்கள். அவர்கள் தமது சொந்த முயற்சியால் பல்வேறு தியாகங்களைச் செய்து பணத்தைச் சேமித்தால் மட்டுமே தமது வாழ்க்கைத் தரத்தை முன்னெடுத்துக் கொள்ள முடியும் என்று பணிக்கப்பட்டிருக்கிறார்கள்.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்றுவதில் எந்த அக்கறையுமற்றவை இந்த திராவிட அரசுகள். இவர்கள் மத்திய அரசைக் குற்றம்சாட்டி மக்களிடம் இருந்து தப்பிவிட முயற்சிக்கிறார்கள். ஆம் மத்திய அரசு மிக மோசமான பொருளாதார-சமூக கொள்கைகளைக் கடைப்பிடிப்பதையும், காஸ்மீர் முதற்கொண்டு பல்வேறு தேசிய சமூகங்களின் உரிமைகளை ஒடுக்கி வைத்திருப்பதையும் நாம் அறிவோம். மத்திய அரசுக்கெதிரான எதிர்ப்பையும் நாம் கட்டவேண்டும். ஆனால் அதற்காக மத்திய அரசினைக் குற்றம் சாட்டி ஆளும் கட்சிகள் தப்பிப் போய்விடுவதை நாம் அனுமதித்துவிட முடியாது. இந்த கட்சிகள் தமது சொந்த லாப நலன்களைத் தாண்டி இயங்கப் போவதில்லை. இந்த ஆளும் கட்சிகளின் வாக்கு வங்கிக்கான போட்டிக்குள் நாம் நமது குரலை நசுங்கிச் சாக விட்டுவிடமுடியாது.

எமது கோரிக்கைகள் என்ன?

நாம் என்ன கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் என்ற கேள்வி இன்று விவாதத்திற்கு வருவது நல்ல விடயமே. ஈழத்து மக்களைப் பொருத்தவரை சுயநிர்ணய கோரிக்கையைத் தலையாய கோரிக்கையாக முன்வைத்த நீண்ட போராட்ட பாரம்பரியமுண்டு. அதனால் சுயநிர்ணய கோரிக்கைக்கான போராட்டம் அவர்தம் அனைத்து போராட்டங்களின் திட்டமிடலின் பின்னணியில் இயங்குகிறது. இன்று போராட்ட அரசியலை முன்வைக்கும் பல்வேறு அமைப்புக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், ஏனைய ஒடுக்கப்படும் மக்கள் என்று பரந்துபட்ட போராட்டச் சக்திகளின் கவன‌த்தை இக்கோரிக்கை ஈர்ந்துள்ளது. ஆனால் சுயநிர்ணய கோரிக்கைக்கான போராட்டம் ஒரு நீண்ட போராட்டம். இதை ஏற்றுக்கொள்ளும் அதே வேளை, பல இடைநிலை கோரிக்கைகளையும் நாம் முன்வைக்க வேண்டியுள்ளது.

வடக்கு கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேற வேண்டும். தடுப்பு முகாம்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். நில உரிமைகள் பறிக்கப்படுவதும் வலிந்து குடியேற்றங்கள் நிகழ்வதும் நிறுத்தப்படவேண்டும். பேச்சுரிமை உட்பட அனைத்து சனநாயக உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். இலங்கை அரசை இராணுவ மயப்படுத்துவது - இராணுவ உதவிகள் அவர்களுக்கு வழங்குவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை நாம் முன்வைக்கிறோம்.

இது தவிர சர்வதேச போர்க் குற்ற விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையும் இன்று முதன்மைப்பட்டு வருகிறது. இருப்பினும் இக்கோரிக்கை பற்றிய சரியான தெளிவு நமக்குத் தேவையாக இருக்கிறது.

சர்வதேச போர்க்குற்ற விசாரணை

சர்வதேச சமூகம் என்று நாம் சொல்லும் பொழுது அந்தச் சொல்லை நாம் எந்த அர்த்தத்தில் பாவிக்கிறோம் என்பதை முதலில் நாம் அவதானிக்க வேண்டியுள்ளது. உண்மையில் இருவகை சர்வதேச சமூகங்கள் உண்டு. ஒன்று சர்வதேச அரசாங்கங்கள் மற்றும் அரசு சார் சிறுபான்மை ஆளும் வர்க்கம். மற்றையது மக்கள் - குறிப்பாக ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள். உலகின் அனைத்து நாடுகளிலும் இந்த இருவேறு சக்திகள் இயங்குகின்றன. சமீபத்தில் அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட்டிலும் மற்றும் ஏனைய வேலையிடங்களிலும் ஆக்கிரமிப்பு இயக்கம் முன்வைத்த முக்கிய சுலோகங்களில் பின்னணியில் இருப்பதும் இந்த அறிதலே. ஒரு வீத அதிகாரத்துக்கு எதிராக 99 வீத மக்கள் என்று உலக யதார்த்த முரண்நிலையை இந்த சுலோகம் படம்பிடித்துக் காட்டியது. ஆக நாம் எந்த சர்வதேசம் நோக்கி எமது போராட்டத்தை இணைக்க விரும்புகிறோம் என்ற கேள்வியின் அடிப்படையில் நாம் இச்சொல்லைப் பாவிக்க வேண்டிய தேவையுள்ளது.

அடுத்ததாக போர்க்குற்ற விசாரணையைச் செய்வது யார் என்ற கேள்வி. ஈழத்தில் நடந்த படுகொலைக்கு இலங்கை அரசு மட்டும் காரணமல்ல என்பதை அனைவரும் அறிவர். இந்தியா, சீனா, மேற்கத்தேய அரசுகள் என்று பல்வேறு அரசுகள் இதன் பின்னணியில் உள்ளதையும் - ஜக்கிய நாடுகள் சபை படுகொலையை யாருக்கும் தெரியாமல் புதைக்க முயன்றதையும் அனைவரும் அறிவர். அப்படியிருக்க இவர்களிடம் நீதியை எதிர்பார்க்கச் சொல்லி எம்மை வற்புறுத்துவதில் என்ன நியாயமிருக்கிறது? குற்றம் செய்தவரிடமே நீதியை வழங்கும்படி அந்த குற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் கெஞ்சி மண்டாடுவதில் என்ன பலன்? ஆசிய அரசுகள் ஈழத்து மக்களுக்கு தீர்வை வழங்கப் போவதில்லை என்பதை தமிழ்நாட்டு மாணவர்கள் தமது நீண்ட அனுபங்கள் ஊடாக அறிவர். தேசிய இனங்களைக் கடுமையாக ஒடுக்கிக்கொண்டிருக்கும் இந்திய அரசு ஒருபோதும் ஈழமக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கப் போவதில்லை. அமெரிக்காவுடன் பிராந்திய ஆளுமைப் போட்டியில் மும்முரமாயிருக்கும் சீன அரசு இலங்கை அரசைப் பாதுகாப்பதில் கவன‌மாயிருக்கிறது.

சீனாவுடன் முண்டிக்கொண்டு நிற்கும் மேற்கத்தேய அரசுகளிடம் நாம் ஏதாவது எதிர்பாக்க முடியுமா? மேற்கத்தேய அரசுகள் தமது கொள்கையை –நோக்கைத் தெட்டத் தெளிவாக வைத்துள்ளன. இலங்கை அரசு முன்னெடுக்கும் விசாரணையைத் தாண்டி அவர்கள் நகரப் போவதில்லை. அவர்கள் சில சனநாயக உரிமைகள் - மற்றும் இலங்கையின் இறையாண்மையை கேள்விக்குட்படுத்தாத சில 'சிறுபான்மையர்' உரிமைகள் - மற்றும் ஆட்சி மாற்றம் - என்ற குறுகிய நோக்கங்கள் தாண்டிப் பயணிக்கப் போவதில்லை. நாம் எவ்வளவு முக்கி முறிந்தாலும் அவர்கள் தமது வியாபார நலன்களை விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இது ஒரு 'மாறாத' விதியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

இதைத் தெரிந்து கொண்டு அவர்களைச் சார்ந்து எமது போராட்டத் திட்டமிடல்களை வகுத்துக் கொள்ளும் 'தெரிந்த பிழையை' நாம் விடக்கூடாது. ஆமாம். எமக்கு சனநாயக உரிமைகள் வேண்டும். இலங்கையில் ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மக்கள் நலன்சார் எந்த சிறு நகர்வுகளும் வரவேற்கப்பட வேண்டியதே. இலங்கைப் படுகொலை அரசுக்கெதிரான சிறு 'கண்டிப்புகளைக்கூட' நாம் வரவேற்கிறோம்! ஆனால் இச்சிறு உரிமைகளை எம்மிடம் விற்று அதற்குப் பதிலாக எமது போராட்டத்தையும் பல அடிப்படை உரிமைகளையும் விட்டுக் கொடுத்துவிடும்படி கோருவதற்கு நாம் உடன்பட முடியாது. அவர்கள் கிண்டும் இந்தப் படுகுழியில் நாமாக விழ நாம் தயாரில்லை. போராட்ட மறுப்பு என்பது இன்று ஆளும் வர்க்கங்களின் கதையாடல்களில் தலையாய பங்கு வகிப்பதை நாம் அவதானிக்க வேண்டும். அவர்கள் எமக்கு 'வாரி வழங்குவதாக' ஆசைகாட்டும் சிறுசிறு சனநாயக உரிமைகள் எமது அடிப்படை உரிமைகள். இவர்கள் யார் அதை 'வழங்குவதற்கு'?

அதைக்கூட வழங்க மறுக்கும் இலங்கை அரசின் மேல் நாம் காரப்படும் அதே வேளை - இவ்வுரிமைகளை ஆசைகாட்டி அரசியல் செய்வதை சாதனையாக படங்காட்டும் மேற்கத்தேய அரசுகளின் போலிச் சனநாயக மூஞ்சிகள் மேல் நாம் காறித் துப்ப வேண்டியுள்ளது. என்னே கேவலம் இது. படுகொலை செய்யப்பட்டு விழுந்து கிடக்கும் சமூகம் என்பதால் அவர்கள் எடுத்த எடுப்புக்கு ஆடுவோம் -அடங்கிப்போய்க் கிடப்போம் என்று எதிர்பார்க்கிறார்கள். இதைத் திட்டவட்டமாக மறுத்து மேலும் அரசியற்பட்ட போராட்டத்தை நாம் முன்வைக்க வேண்டும். வீழ வீழ எழுவோம் என்பது வெற்றுப் பேச்சல்ல. அவர்கள் செய்த படுகொலை இன்று ஈழத்து மக்களை தமிழ் நாட்டு மக்களுடன் மேலும் நெருக்கியுள்ளது. போராட்டம் அரசியல் மயப்பட்டுள்ளது – சர்வதேச மயப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சி சார்ந்த இறுமாப்புடன்தான் நாம் எமது அரசியற் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்.

இந்த அடிப்படையில் இருந்துதான் நாம் அமெரிக்க – ஜ.நா அறிக்கைகளில் பூரிப்படைய மறுக்கிறோம். இந்த தெனாவட்டுடன்தான் நாம் இங்கிலாந்து அரசு தனது காமென்வெல்த் திருவிழாவை இலங்கையில் நடத்துவதை எதிர்க்கிறோம். ஆக எமது கோரிக்கைகள் இந்த அரசுகளை நோக்கிய கெஞ்சல்கள், பிச்சைகள் அல்ல. மாறாக இறுமாப்புடன் அவ்வுரிமைகளை அடைந்தே தீர்வதற்கான எமது நடவடிக்கை. ஏனெனில் எமக்குத் தெரியும்- உரிமைகள் 'வழங்கப்படுவதில்லை' –அந்த வரலாறு உலகில் இல்லை. மாறாக அவை ஏதோ ஒரு போராட்டத்தின் மூலம் வென்றெடுக்கப்படுபவையே.

students_eelam_643

குற்றத்தை விசாரிக்க பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இலங்கையளாவிய விசாரணையாக அனைத்துச் சமூகங்களில் இருந்தும் விசாரிப்பை நடத்தும் குழுவுக்கான பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்ப‌டலாம். குற்ற விசாரணையை மேற்பார்வையிட உலகளவில் பெரும் அனுபவங்கள் நிறைந்த மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொழிற் சங்கங்கள் பங்கு பற்றலாம். ஏன் அரசப் பிரதிநிதிகளும் பார்வையாளர்களாக பங்குபற்றலாம். மக்கள் மத்தியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்களால் ஆன குற்ற விசாரணைக் குழு- உலகளாவிய மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மேற்பார்வையில் குற்ற விசாரணையை நடத்த வேண்டும் என்று நாம் கோருவதன் பின்னணி இதுதான். இதன்மூலம்தான் இலங்கை அரசினதும் அவர்தம் ஆதரவு அரசுகளினதும் செல்வாக்கு இல்லாமல் நியாயமான விசாரணையை நிகழ்த்த முடியும்.

ஆனால் இது உடனடிச் சாத்தியம் என்று நாம் கூறிவிடவில்லை. தவிர இது டப்பிளினில் நடந்த விசாரணை போன்ற 'மக்கள் நியாயமன்று' போன்றதுமல்ல என்பதையும் கவனிக்க. மக்கள் திரட்சியின் அடிப்படையில் நியாயமான விசாரணையை நிகழ்த்தி அதன் முடிவுகளை – தீர்மானங்களை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட மக்கள் குற்ற விசாரணை மன்றை உருவாக்குவது பற்றியே நாம் பேசுகிறோம்.

"இது நடக்கிற காரியமா? உலகில் எப்பகுதியில் இது நடந்திருக்கிறது? வெறும் கனவிது" என்று அரசுசார் சக்திகள் எமது கோரிக்கைகளைக் கிண்டல் செய்வர் – அதைச் சுற்றிப் பகிடிகள் கட்டுவர் என்பதும் எமக்குத் தெரியும். சுயநிர்ணயக் கோரிக்கை மட்டுமின்றி பல அடிப்படை சனநாயக கோரிக்கைகளைக்கூட நாம் இன்று 'வெற்றுக் கனவுகளாகவே' முன்வைக்கிறோம். இந்தக் கனவை நனவாக்குவது பற்றியதே நமது போராட்டப் பயண‌ம். அதிகாரங்களை நம்பி எமது கனவுகளை விற்பதல்ல எமது நோக்கம். மாறாக அதை நனவாக்கும் போராட்டத்தைப் பலப்படுத்துவதே எமது நோக்கம்.

இன்றைய இலங்கை அரசை ஒரு முற்றுப் புள்ளிக்கு கொண்டு வராமல் எமது எந்தக் கோரிக்கைகளும் அங்குலம்கூட நகரப் போவதில்லை என்பது எமது பொதறிவு. அந்த அறிவில் ஓங்கிக் குத்தி எமக்கு உரிமைகளை வென்றெடுத்துத் தரப்போவதாக பாசாங்கு காட்ட வேண்டாம். தற்போதய அரசு மாறி புதிய அரசு ஆட்சிக்கு வந்தாலும்கூட நமது பல கோரிக்கைகள் திருப்திப்படுத்தப்படப் போவதில்லை. ஆம்- இந்த கொடுங்கோலர் ஆட்சி மாற வேண்டியதுதான். ஆனால் ஆட்சி மாறுதல் மட்டுமல்ல நாம் கோரும் தீர்வு. அதனால் மக்கள் திரட்சியும் போராட்டம் பலப்படுத்தப்படுவதுமே எமது கோரிக்கைகளின் பின்னணியாக இருக்கிறது.

மக்கள் திரட்சியின் அடிப்படையில் இருந்து எமது கோரிக்கைகள் வைக்கப்படுகின்றன. இலங்கையில் - இந்தியாவில் மட்டுமின்றி சர்வதேச அளவில் ஒடுக்கப்படும் மக்களின் ஒன்றிணைந்த திரட்சியின் பக்கம் நின்று நாம் எமது கோரிக்கைகளின் பலம் பற்றிப் பேசுகிறோம். இந்தப் பலம் திரண்டால் எமது கோரிக்கைகளை எவ்வகையிலும் தட்டிக் கழித்துவிட்டுப் போய்விட முடியாது. மக்கள் திரட்சிக்கு முன்னால் அதிகாரங்களின் பலம் சுருங்கி விடுவதை வரலாறு முழுக்க நாம் பார்க்கலாம்.

மக்கள் திரட்சியாவது மண்ணாங்கட்டியாவது இந்த யுகத்தில் நடக்கும் காரியம் பற்றிப் பேசவேண்டும் என்பவர்களுக்கு துனிசியா, எகிப்த் என்று உலகெங்கும் நிகழும் மக்கள் திரட்சி சமகால வரலாற்றைப் பதிலாக வைக்கிறோம்.

மக்கள் திரட்சி என்பது வரலாற்றில் அடிக்கடி நிகழும் ஒன்றல்ல. ஆனால் அது நிகழும் ஒவ்வொரு கட்டத்திலும் பல உரிமைகள் வென்றெடுக்கப்படுகிறது – சமூகங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன. பல பிற்போக்கு அரசியற் சக்திகள் பின்வாங்க வைக்கப்படுகின்றன. எமது கோரிக்கைகளை நிறைவேற்றும் அத்திரட்டலுக்காக நாம் எத்தனை ஆண்டுகளும் காத்திருக்கத் தயார். ஆனால் அதைத் துரிதப்படுத்த தினமும் பாடுபடுவோம். இது தவிர போராளிகளுக்கு வேறு வழி உண்டா? அரசாங்கங்களுடன் சேர்ந்து எமது உரிமைகளை வியாபாரம் செய்வதை விட இந்தப் போராட்ட வழியை நாம் பெரிதாக நினைக்கிறோம்.

புதிய மாற்றைக் கட்டுவோம்.

"நாம் உங்களுக்கு வழங்கும் தேர்வுகளுக்குள்ளால் உங்கள் அரசியல் நடவடிக்கைகளை வடிவமைத்துக் கொள்ளுங்கள். இது தவிர வேறு மாற்று உங்களுக்கில்லை" என்று புலம்பும் அரசியற் கட்சிகளின் பிரச்சாரங்களை நாம் மறுக்க வேண்டும். அவர்கள் தரும் தேர்வுகளுக்கு அப்பாலான மாற்றைக் கட்ட நாம் முன்வர வேண்டும். ஏதோ ஒரு திராவிடக் கட்சிக்கு வாக்களிப்பதைத் தாண்டிய எந்த அரசியல் நடவடிக்கையும் நமக்கு சாத்தியமில்லை என்பது அவர்கள் எமக்குச் சொல்லும் கட்டுக்கதை. இந்த முட்டாள்த் தனத்திற்குப் பதிலாக தென்னாப்பிரிக்காவை முன்னுதாரனமாக வைக்கலாம். கடும் துவேசத்துக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த ஏ.என்.சி கட்சி இன்று அதிகாரத்தோடு சங்கமித்து கறுப்பின மக்களை ஒடுக்குகிறது – படுகொலை செய்கிறது. இதை மறுத்து தமக்கான புதிய அரசியற் கட்சியொன்றை உருவாக்க தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்ட பல சுரங்கத் தொழிலாளர்கள் முன்வந்துள்ளார்கள். சுரங்கத் தொழில் தென்னாப்பிரிக்க பொருளாதாரத்தின் அடிப்படையாக இருப்பதையும் நாம் அறிவோம். இவ்வாறு புதிய மாற்றைக் கட்டுவது என்ற உரையாடல் உலகெங்கும் இன்று தலையெடுக்கத் தொடங்கியுள்ளது. நாமும் அவ்வழியைப் பின்பற்றவேண்டும்.

தமிழ் நாட்டு மாணவர்கள் போராட்டம் ஈழத்து மக்கள் உரிமைகள் சார்ந்தது மட்டுமல்ல; அவர்தம் போராடும் உரிமை – தமிழ் நாட்டில் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் சார்ந்ததும்கூட. அண்மையில் நிகழ்ந்த பொது வேலை நிறுத்தத்தில் நூறு மில்லியனுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கேற்றதை நாமறிவோம். அவர்களையும் இணைத்த போராட்ட பரவலாக்கம் நோக்கி நாம் சிந்திக்க வேண்டும். பல்வேறு போராட்டங்களை ஒன்றிணைக்கும் திட்டமிடல் நோக்கி நாம் நகர வேண்டும். மாணவர்களின் ஒற்றுமையை உடைத்து ஏதாவது ஒரு வகையில் போராட்டங்களை முடக்க நினைப்பது அரசின் நோக்காக இருக்கிறது. நாம் ஒன்றுபட்டு – சனநாயக முறை உரையாடலுக்கூடாக அமைப்பு மயப்பட முன்வருவது, புதிய மாற்றைக் கட்டுவதற்கான முதற்படியாக இருக்கும்.

- சேனன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It