‘சேனல் 4’ அம்பலப்படுத்துகிறது

இலங்கை அரசின் இனப் படுகொலைகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வரும் லண்டன் தொலைக்காட்சி ‘சேனல்-4’. அந்தத் தொலைக்காட்சி மற்றொரு அதிர்ச்சியான தகவலை ஆவணங்களுடன் கடந்த சனிக்கிழமை ஏப்.16 ஒளிபரப்பியுள்ளது. ஈழத்தின் இறுதி கட்டப் போரில் ஒரு லட்சம் அப்பாவித் தமிழர்கள் என்ன ஆனார்கள் என்பதை இலங்கை அரசு மூடி மறைத்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளது.

வன்னிப் பகுதியில் அரசு மக்கள் தொகை பதிவேட்டில் 2008 ஆம் ஆண்டு நடுவில் 4,30,000 பேர் இருந்தனர். அரசு பதிவேடுகள் இந்த புள்ளி விவரத்தைத் தந்துள்ளன. இறுதி கட்டப் போரில் வன்னிப் பகுதியை இராணுவம் சுற்றி வளைத்தபோது அங்கிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்களாக அய்.நா. ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்கு 2,90,000 பேர் மட்டுமே!

அண்மையில் வன்னிப் பகுதிக்கு நேரில் சென்று சேனல்-4 செய்தியாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர். வன்னிப் பகுதிக்குள்ளிருந்த 40 சதவீத மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 60 சதவீத மக்களே முகாமுக்கு வந்துள்ளனர். போர் நடந்தபோது அய்.நா.வின் அதிகாரபூர்வ பேச்சாளராக இருந்த கோர்டன் வெய்ஸ் அப்போதே, போரில் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிர்ச்சி தரக் கூடியதாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

இப்போது அய்.நா. குழுவின் அறிக்கை வெளிவந்தவுடன், வெய்ஸ் ஆஸ்திரேலியா வானொலிக்கு அளித்த பேட்டியில் இந்த அறிக்கையை அய்.நா. புறக்கணித்து விட முடியாது. இலங்கையின் போர்க் குற்றத்தை மறைக்க முயன்ற அய்.நா. உறுப்பு நாடுகள் இப்போது கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன.

இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் சர்வதேச விசாரணைகள் நடைபெறாமல் தடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் ஈடுபட்டன. அடுத்து, மேலும் விரிவான, உறுதியான மறுக்க முடியாத ஆவணங்களைக் கொண்ட அறிக்கையை தயார் செய்ய வேண்டும்.

நிச்சயமாக இலங்கை அரசு இதற்கு ஒத்துழைக்காது. ஆனால், இலங்கை அரசே நடத்தும் விசாரணைகள் பயன் தராது. எனவே சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளார். வெய்ஸ் இப்போது பதவி ஓய்வு பெற்று விட்டார்

Pin It