முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இன அழிப்பு நடவடிக்கைகளில், முன்னெப்போதும் இல்லாத மனிதப் பேரழிவு ஈழத்தில் தற்பொழுது நிகழ்த்தப்பட்டுள்ளது. கடந்த நான்கு மாதங்களுக்குள் சுமார் நாற்பதாயிரம் தமிழர்கள், முழுக்க முழுக்க விமான குண்டு வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களுக்கும், துப்பாக்கிச் சூடுகளுக்கும் குறி வைத்து அழிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் வாழ்கின்ற சம காலத்தில், கண்ணெதிரே நடக்கின்ற இனப்படுகொலை எனும் பேரவலத்தைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியவில்லை! எந்த நியாய விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல், உலகின் எல்லா மனித உரிமைச் சட்டங்களையும் புறக்கணித்து, வல்லரசு அல்லாத ஒரு நாட்டால் இவ்வளவு தன்னிச்சையாக செயல்பட முடியுமெனில் – இத்தருணத்தில் பல கேள்விகளை நாம் முன் வைக்க வேண்டியிருக்கிறது.

இலங்கை அரசின் இனப்படுகொலை வெறியாட்டத்திற்கு ஆதரவாக சீனா, ரஷ்யா போன்ற வல்லரசுகள் மற்றும் இந்தியா போன்ற ‘ஜனநாயக நாடு'கள் துணை நிற்பதும்; சீனாவும் ரஷ்யாவும் ஆதரிக்கும் ஒரே காரணத்திற்காக அமெரிக்கா அதை எதிர்ப்பதும், அமெரிக்கா எதிர்ப்பதாலேயே புரட்சி நாடான கியூபா, இலங்கை அரசை ஆதரிப்பதும், இனப்படுகொலை என்பது அசிங்கமான சர்வதேச வியாபாரம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

உலகப் புகழ் பெற்ற மனித உரிமையாளரும் சர்வதேச சட்ட நிபுணருமான பேராசிரியர் பிரான்சிஸ் பாய்ல், மார்ச் 2009 இல் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்கள் மிகவும் கவனத்திற்குரியவை : ‘‘இன்றளவில் 3,50,000 தமிழர்களை வன்னிப் பகுதியில் 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவிற்குள் அடைத்து, திட்டமிட்டு ஈவு இரக்கமற்ற முறையில் பீரங்கி குண்டுகளையும், ராக்கெட் போர் விமானங்களையும், பீரங்கிப் படைகளையும், பிற கொடூர ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொன்று குவிக்கும் செயல்களை இலங்கை அரசு நடத்தி வருகிறது. இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபய ராஜபக்சே, இந்த 3,50,000 மக்களும் பாதுகாப்பு வளையத்துக்குள் இருப்பதாக அறிவித்துள்ளது, பன்னாட்டு மனிதஉரிமை சட்டங்களின் அடிப்படைக் கூறுகளை மீறுவதாக உள்ளது. அப்பகுதியிலுள்ள மருத்துவர்களையும் பிற மருத்துவப் பணியாளர்களையும் அச்சுறுத்தி, அவ்விடத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர். இலங்கை அரசின் பாதுகாப்புச் செயலர், கொல்லப்பட வேண்டிய தமிழ்ப் பொது மக்களின் பட்டியலை தயார் செய்து வைத்திருக்கிறார். உலக நாடுகள் உடனடியாக இதைத் தடுக்க முன்வராவிட்டால் – செப்ரெனிகா, சாட்ரா மற்றும் ஷாட்டிலா, ருவாண்டா மற்றும் கொசேõவாவில் நடைபெற்ற இனப்படுகொலைகளைப் போல ஓர் அவல நிலை ஏற்படுவதைத் தடுக்க முடியாது.''

Eelam
(பாதுகாப்பு வலையத்திற்குள் சிதைக்கப்பட்ட மக்களின் வாழ்விடங்களைக் காட்டும் இந்தப் படத்தை, லண்டனிலிருந்து வெளிவரும் ‘த டைம்ஸ்' இதழ் எலிகாப்டரில் இருந்து மே 23 அன்று எடுத்துள்ளது. சிக்குண்ட மக்கள் மணல் மூட்டைகள், சாக்குப் பைகள், தலையணை உறைகள் மற்றுமுள்ள வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களைக் கொண்டு ஏவுகணை, பீரங்கித் தாக்குதல்களிலிருந்து காத்துக் கொள்வதற்கான தற்காலிகப் பதுங்குக் குழிகளை எவ்வாறு அமைத்திருந்தனர் என்பதை விளக்குகிறது. எரிபொருள் அல்லது ராணுவக் கருவிகள் இல்லாதிருப்பது, முகாம் மற்றும் அதிலுள்ள வசதிகளில் உள்ள தற்காலிகத் தன்மையின் மூலம் அது பொதுமக்களின் வாழ்விடமே என்பது தெளிவாகிறது.)

‘‘இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே அல்ல. அது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்'' என இலங்கை அரசு கூறும் பொய்யை, இந்தியா முன்மொழிய அத்தனை உலக நாடுகளும் அதை வழிமொழிகின்றன. அய்.நா. தரப்பிலிருந்து இதுவரையிலும் இலங்கை வெறியாட்டத்திற்கு வலுவான கண்டனம் நம் காதுகளை எட்டவில்லை. உரிமைகளை மீட்கத் துடிக்கும் போராளிக் குழுக்கள் – பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படுவதும், பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்று அரசுகள் அந்த இனத்தின் குடிமக்களைக் கொன்று குவிப்பதும் இந்தியா உட்பட உலகெங்கும் நடந்தேறுகிறது. வெகு அண்மையில் கூட, மிக மோசமான எடுத்துக்காட்டுகளை நாம் சுட்டிக்காட்ட முடியும். இனப்படுகொலைகளையும் பயங்கரவாதத்திற்கு எதிரான போரையும் பிரித்துப் பார்க்க இயலாமல் நாடகமாடுகிறவர்கள் அதிகரிக்கிற நிலையில், இவ்விரண்டிற்குமான வேற்றுமையை அழுத்தமாக விளக்கியாக வேண்டிய தேவை அதிகரிக்கிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நிகழ்ந்த பல்வேறு ஒழுங்காற்றுத் திட்டமிடல்களில் 1948ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று அய்க்கிய நாடுகள் அவையின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட இன அழிப்பு (தடுப்பு) ஒப்பந்தமும் ஒன்று. இதில் அமெரிக்கா, இந்தியா, இங்கிலாந்து, இலங்கை உட்பட 140 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. 1951 சனவரி 12 அன்று நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 2, இன அழிப்பு எது என்பதை இவ்வாறு வரையறுக்கிறது:

‘‘இனப்படுகொலை என்பது ஒரு தேசிய இன அல்லது மதக் குழுவை முற்றிலுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கோடு, குழுவின் உறுப்பினர்களைக் கொல்வது, குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ சேதம் விளைவிப்பது, குழுவின் மீது முன் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் உடல் சார்ந்தவற்றிற்கு முழுவதுமாகவோ அல்லது பகுதியாகவோ அழிவை ஏற்படுத்த முனைவது, குழுவினரிடையே பிறப்பு நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கோடு செயல்படுவது, ஒரு குழுவின் குழந்தைகளை கட்டாயப்படுத்தி இன்னொரு குழுவுக்கு மாற்றுவது'' – இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டால், அது இனப்படுகொலை நடவடிக்கை என்று குறிப்பிடுகிறது அந்த ஒப்பந்தம்.

இனப்படுகொலையை நிகழ்த்துவதும், இனப்படுகொலைக்கு ரகசியமாகத் திட்டமிடுவதும், இனப்படுகொலையை நிகழ்த்துவதற்கு நேரடியாகவோ, ரகசியமாகவோ தூண்டுவதும், இனப்படுகொலை நிகழ்த்த முனைவதும், இனப்படுகொலைக்கு உடந்தையாக இருப்பதும் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என அதே ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 3 குறிப்பிடுகிறது.

கொத்துக் கொத்தாகக் கொலை செய்யப்படும் மனித உயிர்களைப் பார்த்தவுடன் யாருமே சொல்ல முடியும், இலங்கையில் நடப்பது இனப்படுகொலைதான் என்று. இதற்கு அதிகபட்சமாக தேவைப்படுவது ஆறறிவு மட்டுமே. ஆனால், அய்.நா.வின் இனப்படுகொலை வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்தியும், இலங்கையை கொலைக்களமாக அங்கீகரிக்க இன்னும் அதற்கு ஆய்வுகள் தேவைப்படுகின்றன! சட்டப்பிரிவு 2 இல் வகுக்கப்பட்டுள்ள அத்தனை அநீதிகளையும் இலங்கை அரசு அன்றாடம் நிகழ்த்துகிறது. மருத்துவமனைகளையும் பொது மக்களையும் இலக்கு வைத்து இலங்கை அரசு தாக்குதல் நடத்துவது போர்க்குற்றமெனில், அதற்கு ரகசியமாகவும் நேரடியாகவும் ஆதரவு அளிக்கும் உலக நாடுகள் அனைத்தும் குற்றவாளிகள் பட்டியலில் முதன்மை இடம் பெறுகின்றன. இனப்படுகொலைக்கு எதிரான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளே, இன்று முதன்மைக் குற்றவாளிகளாக இலங்கை அரசோடு கைகோத்திருப்பது கொடுமையிலும் கொடுமை.

1948 இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளில் இலங்கையும் இருக்கிறது. விதிமுறைகளுக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படும் இலங்கை அரசின் மீது நடவடிக்கை எடுக்க அய்.நா.வுக்கு முழு உரிமை உண்டு. ஈழ மக்களை காக்க வேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா என்றோ தவறவிட்ட நிலையிலும் விதி 1இன் படி, தமிழ் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த சட்டப்பூர்வமான உரிமையும் கடமையும் இந்தியாவுக்கு இருக்கிறது. மேலும் 1949 இல் தோற்றுவிக்கப்பட்ட நான்கு ஜெனிவா ஒப்பந்தங்களின் அடிப்படையில், இந்தியா அந்த ஒப்பந்தங்களை மதிக்கவும், எல்லா சூழ்நிலைகளிலும் அவை மதிக்கப்படுவதை உறுதி செய்யவும் வேண்டும். இதன் பொருள், ஈழத் தமிழர்களை காக்கும் கடமை இந்தியாவுக்கு உண்டு என்பதே.

தமிழர்களோடு கொண்டுள்ள தொப்புள் கொடி உறவு என்ற பந்தமும் இந்தியாவின் துரித நடவடிக்கைக்கு வலு சேர்க்க வேண்டும். ஆனால் ஒரு நாடகத்தை வேடிக்கை பார்ப்பது போல, பச்சைத் துரோகியாக இந்தியா தமிழர்கள் அழிக்கப்படுவதை வேடிக்கை பார்க்கிறது.

வல்லரசு நாடுகளின் இனப்படுகொலைக் கொள்கையானது, நாட்டுக்கு நாடு மாறுபட்டிருப்பதே உலகின் பல்வேறு பகுதிகளிலும் இனப்படுகொலை தொடர்வதற்கான முக்கியக் காரணம். இன்று இலங்கை அரசின் வெறியாட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா போன்ற நாடுகள் – ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் நடத்திய இனப்பேரழிவை இவ்வுலகம் அவ்வளவு எளிதில் மறக்கவோ, மன்னிக்கவோ இயலாது. இலங்கையில் இன அழிப்பிற்கு எதிரான இவற்றின் நிலைப்பாட்டை இந்தப் பின்னணியில்தான் அணுக வேண்டியிருக்கிறது. இந்த நாடுகள் தங்களின் போட்டி நாடுகளின் கொள்கைகளுக்கு எதிரான நிலைப்பாட்டை நிறுவுவதற்காக, எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை ஈழப் பிரச்சனையில் கண் கூடாக நாம் பார்த்து வருகிறோம்.

பிரிட்டனின் வெளியுறவுத் துறை செயலர் டேவிட் மிலிபேண்ட், கடந்த பிப்ரவரி 24 அன்று இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஈழப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தின்போது, ‘‘இலங்கையில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைகளை காவு கொடுத்து பயங்கரவாதப் பிரச்சனைக்குத் தீர்வு காண இயலாது'' என்று கூறியுள்ளார். இந்த வார்த்தைகளில் உண்மை இருந்தும் அதை சொல்லும் நாட்டிடம் நேர்மை இல்லாததால், அந்த உண்மை வலு விழந்து போகிறது. சரி, உலகின் எந்த விதிமுறைகளுக்கும் கட்டுப்படாமல் ஒரு நாடு தன்னிச்சையாக செயல்பட முடியுமா? இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை அய்.நா. கொண்டு வந்தாலும் அதை தங்களின் ‘வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நாடுகள் தடுத்து நிறுத்த முடியும் என்று கூறப்படுகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கூட டேவிட் மிலிபேண்ட் இதே கருத்தை வெளியிட்டார்.

‘‘1950இல் உருவாக்கப்பட்ட ‘அமைதிக்காக ஒன்றுபடுவோம்' தீர்மானத்தின்படி, எந்த ஒரு நிரந்தர உறுப்பினர் நாடோ / நாடுகளோ அய்.நா. பாதுகாப்பு அவையில் தங்கள் ‘வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி, உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் தொடர்புடைய எந்த தீர்மானத்தைத் தடுத்தாலும், அதை அய்.நா. பொதுமன்றத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காணலாம். பாலஸ்தீன இன அழிப்புகளின் போது அய்.நா., குறிப்பிட்ட இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், பல்வேறு தருணங்களில் நடவடிக்கை எடுத்திருக்கிறது. இன்று ‘வீட்டோ' அதிகாரத்தை கையிலெடுத்து அச்சுறுத்தும் நாடுகளான சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் அய்.நா. பொது அவை தக்க பதிலடி கொடுக்க முடியும்'' என்று வாதிடுகிறார், பேராசிரியர் பாய்ல். ஆனால் இக்கருத்துக்கு இந்தியா உட்பட எந்த நாடுமே செவி சாய்க்கவில்லை.

எதற்கெடுத்தாலும் அமெரிக்காவை அண்ணாந்து பார்க்கும் நிலையில் தன் முழங்கால்களை பலவீனப்படுத்தி வைத்திருக்கும் உலகச் சமூகம், இலங்கைப் பிரச்சனையிலும் அமெரிக்காவை எதிர்பார்க்கிறது. அதிலும் இன அழிப்பின் முக்கிய கர்த்தாக்களாக குற்றம் சாட்டப்படும் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சேவும், ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் அமெரிக்கக் குடிமகன்கள் எனும்போது வேறு என்ன நீதியை நாம் எதிர்பார்த்துவிட முடியும்? அமெரிக்க இன அழிப்பு எதிர்ப்பு ஒப்பந்தங்களை மீறியதற்காக நியாயப்படி இவ்விருவரும் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டும். வசதிக்கேற்ப கொள்கைகளை வளைத்துக் கொள்ளும் அமெரிக்காவிடம் அப்படியொரு நிலையை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.

மே மாதத்தில் அய்.நா. அவையின் அதிகாரப்பூர்வமற்ற கூட்டத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஓர் தகவலை வெளியிட்டது. அதில், ‘ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்குப் பொது மக்கள் கொல்லப்படுவது குறித்து அய்.நா. அவை ஆழ்ந்த கவலை கொள்கிறது' என்று குறிப்பிட்டிருந்தது. இனப்படுகொலையில் ‘ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு' என்று ஏதாவது இருக்கிறதா என்ன? இன அழிப்பு வெறிக்கு ஒரே ஒரு உயிர் பலியானாலும், அது பேரழிவின் ஆபத்தான தொடக்கம் என்பதை அமெரிக்காவிற்கு யாராவது புரிய வைக்க வேண்டும்.

சர்வதேச மனித உரிமைச் சட்டங்களின்படி, ராணுவத் தாக்குதலில் பொது மக்களை இலக்காக வைப்பது கூடவே கூடாத ஒன்று. இலங்கையில் முழுக்க முழுக்க பொது மக்களே குறி வைத்து தாக்கப்படுகிற நிலையில், வன்னியில் மே 16 அன்று நடந்த ‘கடற்கரை படுகொலை'யில் ஒரே நேரத்தில் 2,000 தமிழர்கள் கொல்லப்பட்டது ஏற்றுக் கொள்ள முடியாத அளவு என்று ஒபாமா நிர்வாகம் கருதியது போலும். இதை எப்படி நாம் புரிந்து கொள்வது? இலங்கை அரசு விடுதலைப் புலிகளை அழிக்க நடத்தும் போரில், ஒரே நேரத்தில் இரண்டாயிரத்திற்கும் சற்றுக் குறைவான அளவு படுகொலை நடந்தால், அது ஏற்றுக் கொள்ளக் கூடிய அளவு என்றா?

‘டெலிகிராப்' நாளேட்டில் 8.3.09 அன்று, விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலிருக்கும் இரண்டு லட்சம் தமிழர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற அமெரிக்கா தலைமையில் நடத்தப் போகும் படையெடுப்பிற்கு, இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனை ஒபாமா நிர்வாகம் கேட்கப் போகிறது, என்று ஒரு செய்தி வெளியானது. இலங்கையில் போர் நிலைமைகளை அவதானித்துச் சொல்ல ஆட்கள் இருப்பதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எந்நேரமும் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும் அடுத்த நாளே உறுதியான செய்திகள் வந்தன. ஆனால், இவை எதுவுமே நடக்கவில்லை. இலங்கையில் போரை முன்னின்று நடத்தும் அமெரிக்க குடிமகன் கோத்தபய ராஜபக்சேவை குறைந்தபட்சம் எச்சரிக்கக் கூட அமெரிக்காவால் முடியவில்லை.

இலங்கையில் நடப்பது இனப்படுகொலை என்பதை உறுதி செய்யப் போதுமான ஆதாரங்கள் இருப்பதைப் போலவே, கட்டுக்கடங்காத போர்க் குற்றங்களும் அங்கு நடந்தேறுவதை உறுதிப்படுத்துகிறார் பேராசிரியர் பாய்ல். ஜெனிவா ஒப்பந்தத்தின் சட்டப்பிரிவு 54, சாதாரண பொதுமக்களுக்கு வாழ்வாதாரமான இன்றியமையாத பொருட்களுக்குப் பாதுகாப்பு அளிக்கத் தவறுவது, போர்த் தந்திரமாக மக்களை உணவின்றி பட்டினியால் சாக விடுவது, மக்களின் அன்றாட வாழ்வுக்குத் தேவையான பொருட்களை விளைவிக்கும் விவசாய நிலங்கள், பயிர்கள், கால்நடைகள், குடிநீர் நிலைகள், நீர்ப்பாசன நிலைகள் போன்றவற்றை மறுப்பது, அழிப்பது, அப்புறப்படுத்துவது, பயனற்றுப் போகச் செய்வது, மக்களை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து இடம் பெறச் செய்வது ஆகியவை போர்க் குற்றங்களாகும்.

இலங்கையை குற்றவாளிக் கூண்டில் ஏற்ற இத்தனை காரணங்கள் இருந்தும், அய்.நா. அவை அமைதி காப்பது, சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அய்.நா. மீது கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றிலும் தகர்ப்பதாக இருக்கிறது. அய்.நா. அவையின் பிரிவு 15இன்படி, பாதுகாப்புக் குழு உறுப்பினர்களின் கருத்துக்கள் பற்றி கவலைப்படாமல், இனப்படுகொலை நிகழ்த்தும் நாடுகள் மீது அய்.நா. நடவடிக்கைகள் எடுக்க வழி இருக்கிறது. உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் உண்டாக்கும் எதன் மீதும் நடவடிக்கை எடுக்க அய்.நா. அவைக்கு உரிமை இருக்கிறது. ஆனால், இலங்கை நடத்தும் இனப்பேரழிவை நம்புவதற்கு, இன்னும் உறுதியான ஆதாரங்கள் அய்.நா. அவைக்கு தேவைப்படுகிறது. அய்.நா. அவைக்கு இருக்கும் இந்த சட்டப்பூர்வமான பொறுப்புகளை வைத்துதான் அய்.நா. அவையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் அவசர காலக் கூட்டத்தைத் கூட்டுவார் என எதிர்பார்க்கப்பட்டது. போர்க்கால நிலைமையை பார்வையிட அவர் வந்து சேர்ந்த போது, சிதறி குவிந்திருந்த பிணங்களை புல்டோசர் கொண்டு மொத்தமாக அள்ளி எரித்து சாம்பலாக்கியிருந்தது இலங்கை அரசு. பான் கி மூன் பார்வையிட்ட நேரத்தில் பிணங்களற்ற சுடுகாடாக காட்சியளித்தது ஈழம்.

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை என நம்ப வைக்கப்பட்டது. அதன் பின்னர், பான் கி மூன் தரப்பிலிருந்து சிறு முன்னேற்றமும் இல்லை. அய்.நா. அதிகாரிகளால் வேண்டுமென்றே நிகழ்த்தப்படும் கால தாமதங்களும், மெதுவான நகர்வுகளும்தான் இனப்படுகொலைகள் நடப்பதைத் தீவிரப்படுத்துவதாகக் குற்றம் சாட்டுகிறார் பாய்ல். பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்களின் மகுடிக்கு வளைந்து நெளிந்து ஆடுவதை அய்.நா. அதிகாரிகள் கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள்.

ஆக, கண்கூடாக, கண்ணெதிரே நடக்கிற இனப் பேரழிவை, இத்தனை சட்டதிட்டங்கள் இருந்தும் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளும், அய்.நா. அவையும் தங்களின் சுய லாபங்களுக்காக காக்கின்ற அமைதியும் மறைமுகமான, நேரடியான ஊக்கமும் இலங்கை அரசின் ரத்த வெறியை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன. உரிமைகள் மறுக்கப்பட்ட இனத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக, இவ்வுலகின் இரக்கத்தைப் பெற முடியாமல் கும்பல் கும்பலாக செத்து மடிகிறார்கள் ஈழத் தமிழர்கள். 1995 ஆம் ஆண்டு சப்ரெனிகாவில் நடந்தேறிய போஸ்னிய முஸ்லிம்கள் படுகொலையைக் கண்டு கிளர்ந்தெழுந்த உலகம், அதை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, இனப்படுகொலை என்று அறிவிக்கச் செய்தது. எட்டாயிரம் முஸ்லிம்கள் கொல்லப்பட்டதற்கு கிளர்ந்தெழுந்த அறிவுஜீவிகள் உலகம், இன்று ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டிருந்தும் எதிர்வினையாற்றாமல் வாய் மூடி கிடக்கிறது.

இன்று உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்து இலங்கை ராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களுக்கு உணவும் மருந்தும் அளித்து உதவ வேண்டிய செஞ்சிலுவை சங்கத்திற்கு அனுமதி அளிக்க இலங்கை அரசு மறுத்துவிட்டது. பாதுகாப்பு வலையத்திலிருந்து தப்பித்து வந்தவர்களின் நிலை ஹிட்லரின் நாஜி முகாம்களிலிருந்து தப்பி வந்தவர்களின் நிலையை ஒத்திருப்பதாக பாய்ல் கூறுகிறார். படுகொலைக்கான ஆதாரங்களை உலகின் பார்வையிலிருந்து இலங்கை அரசு அழித்தாலும் அமெரிக்காவின் உளவு செயற்கைக் கோள்களில் அவை துல்லியமாகப் பதிவாகியிருக்கும். ஆனால் அதனால் என்ன பயன்? மனசாட்சியால் மட்டுமே உணர முடிகிற கொடுமை இது. அது இல்லாமல் போனதால்தான் களத்திற்கு நேரடியாக சென்று பார்த்தும் இனப்படுகொலையா, இல்லையா என விவாதம் செய்து நாடகமாடுகின்றன உலக நாடுகள். ஓர் இனம் அழிக்கப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் பார்த்து ஒன்றுமே செய்யாமல் அருவருப்பாக அமைதி காக்கின்றன.

இனப்படுகொலை வரலாற்றிலேயே இது உச்சபட்சமானது என்ற நிலையிலும் தடுக்க முடியாத அவலம், இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவர் மனதிலும் அச்சத்தை விதைக்கின்றன. ஈராக்கில் நடந்தது, இலங்கையில் நடக்கிறது. இந்த சங்கிலி எங்கு வேண்டுமானாலும் நீட்டிக்கப்படும். அரசுகள் நடத்தும் அதிகாரப் போரில் உரிமைகளைக் கோரும் பொது மக்களின் உயிர்கள் பணயம் வைப்பதைத் தடுத்து நிறுத்த வேண்டியது உலக பொது மக்களின் கடமை. ஆனால் உலக மக்களின் கடைசி நம்பிக்கை உணர்வுக்கும் சாவுமணியாக இனப்படுகொலைக்கு இலங்கை அரசை தண்டிக்க வேண்டும் என்று அய்.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தோல்வியடைந்துள்ளது. மேற்குல நாடுகள் ஆதரவில் எழுப்பப்பட்ட தீர்மானம் முதன் முறையாக பிற நாடுகளின் முயற்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

Francis Boyleஉண்மையில் இலங்கையின் வெற்றி, மனித உரிமைகளுக்கு ஒரு சவாலை ஏற்படுத்தியிருக்கும் கேவலமான முடிவு. முந்தைய ஊழல் மலிந்த, செயல் திறனற்ற அய்.நா. மனித உரிமை ஆணையத்திற்கு மாற்றாக 2006ஆம்ஆண்டு 47 உறுப்பு நாடுகளைக் கொண்டு உருவான இந்த புதிய அமைப்பு, தன் முதல் சோதனையில் படுதோல்வியை தழுவியுள்ளது. இந்த தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் பல ஆசிய – இஸ்லாமிய நாடுகளின் நோக்கம், தங்கள் நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் மீது அய்.நா. அவையின் விசாரணைகள் வருவதைத் தடுப்பதே. அதிலும் அரசியல் காரணங்களுக்காக இலங்கையில் நடப்பது அதன் உள்நாட்டு விவகாரம் என்று இஸ்ரேல் கூறியது மிகப்பெரிய கொடுமை.

அந்தத் தீர்ப்புக்குப் பிறகும் அய்.நா. அவையின் மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, இலங்கை படுகொலைகள் குறித்து இன்னும் விசாரணை தேவை என்று கூறியிருப்பது, உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதையே காட்டுகிறது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் மற்றும் படுகொலைகள் உலகம் நினைத்திருந்ததைவிட கொடூரமானது என்று இப்போது வரும் தகவல்கள் பறை சாற்றுகின்றன. இவ்வாண்டின் முதல் நான்கு மாதங்களில் 7,000 தமிழர்கள் கொல்லப்பட்டதாக வந்த செய்தி தவறு என்றும், இப்போது தெரியவரும் தகவல்களின்படி குறைந்தது 20,000 தமிழர்களாவது அந்த நான்கு மாதங்களில் கொல்லப்பட்டிருப்பார்கள் என்றும் ‘த டைம்ஸ்' இதழ் கூறுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் இலங்கை ராணுவ குண்டு வீச்சிலேயே கொல்லப்பட்டதாக நடுநிலை உலக பார்வையாளர்கள் நம்புகின்றனர்.

இங்கிலாந்தின் ‘டைம்ஸ்' நாளிதழ் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் சப்öரனிகா, டர்பர் போன்றே ஈழத்திலும் வெளிப்படையான இனப்படுகொலை நடந்திருப்பதை அறிய முடிகிறது. விடுதலைப்புலிகளை அழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்களில் இலங்கை அரசு நடந்து கொண்ட விதம், எதிரெழுச்சிகளை அடக்க புதிய பல கொடுமையான தந்திரங்களை உலக நாடுகளுக்கு கற்றுத் தந்திருக்கிறது. இனி உரிமை கேட்டுப் போராடும் ஒடுக்கப்பட்ட மக்களை சாட்சியின்றி கொல்லும் புதுப்புது வித்தைகளை இலங்கை அரசு கண்டுபிடித்து தந்திருக்கிறது.

தன் கழுத்தில் அணிந்திருக்கும் சிவப்பு அங்கியைக் கொண்டு, மாய வித்தையைப் போல பிணங்களை மறைத்த ராஜபக்சே, உலகளவில் இதுவரை கொடும் சர்வாதிகாரிகளாக அறியப்பட்ட அத்தனை பிம்பங்களையும் உடைத்து, சர்வாதிகாரிகளின் தலைவனாக மகுடம் சூட்டிக் கொண்டுள்ளான். வரலாறு அவன் பெயரை அவன் தேடித் தேடி அழித்த உயிர்கள் எரிக்கப்பட்ட சாம்பலைக் கொண்டே எழுதும்.

பிரான்சிஸ் அந்தோணி பாய்ல் அமெரிக்காவின் இலினாயி பல்கலைக்கழகத்தின் சட்டக் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சர்வதேச சட்டங்களிலும் மனித உரிமை சட்டங்களிலும் உலகளாவிய புகழ் பெற்றவர். போஸ்னிய முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலையை எதிர்த்து வழக்காடி, சர்வதேச நீதிமன்றத்தில் யுகோஸ்லாவியாவுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்றவர். இலங்கையில் நடைபெறுவது உள்நாட்டுப் போரல்ல; மிகக் கொடிய இனப்படுகொலையே என்பதை ஆதாரப்பூர்வமாக உலக அரங்கில் இடையறாமல் வாதிட்டு வருகிறார்.

Pin It