(அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுரையின் தொடர்ச்சி...)

ஒரு குடியிருப்பு எப்படி அமைகிறது?

என் குடும்பம் பெரிதானபோது, சற்றே பெரிய வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை வந்தது. வேறொரு அடுக்குமாடியைத் தேடத் தொடங்கினேன். நன்கு வளர்ச்சி அடைந்த இடத்தில் வீடு வாங்கினால், அங்கே வீட்டின் மதிப்பு அதிகமாக உயராது. அப்படியேதான் இருக்கும்.

புதிதாகக் குடியிருப்புகள் உருவாகிக் கொண்டு இருக்கின்ற இடத்துக்குப் போனால், அந்த இடம் வளர்ச்சி அடைய அடைய, வீட்டின் மதிப்பும் வேகமாக உயர்ந்து கொண்டே போகும். ஆனால், குடிநீர், கழிவுநீர் வசதிகளைக் கவனிக்க வேண்டும். நிலப்பத்திரத்தைச் சோதிக்க வேண்டும்.

நிலத்தின் உரிமையாளர்கள் குறித்த விவரங்களை மிகக் கவனமாகப் பார்க்க வேண்டும். முதலில் வீடு வாங்கும்போது, கார் பார்க் எல்லாம் நமக்குத் தேவை இல்லை என்று கருதுவார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகள் கழித்துத்தான், அதன் தேவை புரியும்.

குடியிருப்புச் சட்டப்படி, 100 சதுர மீட்டருக்கு மேல் ஒரு வீடு இருந்தால், அதற்கு கார் நிறுத்தவும், 70 சதுர மீட்டருக்கு மேல் இருந்தால், இரண்டு உருளை வண்டி நிறுத்துவதற்கும், கட்டுமான நிறுவனம் இடம் ஒதுக்கித்தான் திட்டம் வகுக்க வேண்டும்.

இது தொடர்பாக நீதிமன்றங்களில் பல வழக்குகள் உள்ளன. கார் பார்க்கிங்குக்கு காசு வாங்கக்கூடாது என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததாக நினைவு.

கூடுதலாக ஒரு கார் நிறுத்தும் இடத்தை வாங்கி வைத்துக் கொண்டாலும் நல்லதே. அப்படிச் சிலர் தங்கள் கார் நிறுத்தும் இடங்களை வாடகைக்கு விடுகின்றார்கள். மாதம் 750 கிடைக்கின்றது. வாங்கும்போது அதன் விலை 75000 என்றால், வாடகைக்கு விடும்போது அதற்கு வங்கி வட்டி கிடைக்கின்றது.

அடுக்குமாடி வளாகங்களில் மாடி வீடுகளைத் தேர்வு செய்வது நல்லது. அங்கே காற்றில் தூசு குறைவாக இருக்கும். கீழே நடந்து செல்பவர்களுடைய பேச்சுச் சத்தம் இருக்காது. வளாகத்தைப் பெருக்கி சுத்தம் செய்யும்போது, அந்தத் தூசு மேலே எழும்பி வராது. மின்தூக்கி இருப்பதால், பிரச்சினை இருக்காது. மின் தடை ஏற்பட்டாலும், மின் தூக்கி செயல்படுகின்ற வகையில் அமைத்துக் கொள்ளலாம். எனவே, எவ்வளக்கெவ்வளவு, மேலே போகின்றீர்களோ, அந்த அளவுக்கு நல்லது.

போக்குவரத்து மிகுந்த பகுதியில் வீடு வாங்கக் கூடாது. கரிப்புகை, வண்டிச்சத்தம். தூங்கவே முடியாது. அதுவும் நெடுஞ்சாலைகளை ஒட்டி வீடு வாங்கினால் அவ்வளவுதான். வாழ்நாள் முழுவதும் வண்டிச்சத்தத்தைத்தான் கேட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மேலும், திருடர்களுக்கும் வசதி. திருடிய பொருள்களோடு வேகமாகத் தப்பித்துப் போய்விடுவார்கள்.

நான் எல்லாவற்றையும் யோசித்துத்தான் வீடு வாங்கினேன். என் வீட்டு பால்கனியில் அமர்ந்துகொண்டே, ஓபன் தியேட்டரில் படம் பார்க்கலாம். ஆனால், ஜெனரேட்டருக்கு அருகில் இருப்பதைக் கவனிக்க மறந்து விட்டேன். ஓடும்பொழுது ஒரே சத்தம். கழிவுநீர் சுத்திகரிப்பு கருவிகள் இருப்பதையும் கவனிக்க வேண்டும்.

இப்போதெல்லாம், ஒரு கட்டுமானம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போதே அதைப் பார்க்க வருகின்ற இடத்திலேயே நண்பர்கள் ஆகிவிடுகின்றார்கள். அந்தக் குடியிருப்பின் பெயரிலேயே, இணையதளத்தில் முகநூல் பக்கங்களைத் திறந்து, அது தொடர்பான கருத்துகளை உடனுக்குடன் பரிமாறிக் கொள்கின்றார்கள். கட்டுமான நிறுவனத்தார் உங்களிடம் என்ன பேசினார்? என்னிடம் என்ன பேசினார்? என்பதையெல்லாம் பரிமாறிக் கொள்கின்றார்கள். இந்த வசதி முன்பு கிடையாது.

வீட்டில் தொட்டில் போடுவதற்கு எந்த இடத்தில் கொக்கிகளை மாட்ட வேண்டும்? தொலைக்காட்சியை எந்த இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்? அதற்கு மின் இணைப்பு எப்படிச் செய்ய வேண்டும்? என்பதையெல்லாம் முதலிலேயே தெளிவாகத் தீர்மானித்துக்கொண்டு, கட்டுமானக்காரரிடம் அதைத் தெரிவித்து விட வேண்டும். கட்டிய பின்னர் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இருக்காது. இப்போது, ஹோம் தியேட்டர் போல புதிது புதிதாகப் பல வசதிகள் வருகின்றன. அதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ள வேண்டும். ஒட்டுமொத்தக் கட்டுமானத்தைப் பாதிக்காத வகையில், சிறுசிறு மாற்றங்களை நாம் செய்து கொள்ள வேண்டும்.

சில குடியிருப்புகளில், சில குடும்பங்கள் ஒன்றாகச் சேர்ந்து சுற்றுலா போகின்றார்கள். இதிலும், ஒத்த மனம் உடையவர்கள் ஒன்றாகி, ஒரு குழுமம் ஆகி விடுகின்றார்கள்.

எங்கள் வளாகத்தில் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்க அனுமதித்ததில், ஏழு இலட்சம் ரூபாய் வரை வருமானம் வந்தது. அதை நிறுத்த வேண்டும் என்றார்கள். காரணம், நடிகைகள் அரைகுறை ஆடை அணிகிறார்கள். அதைப் பார்த்து எங்கள் பிள்ளைகள் கெட்டுப் போகும் என்றார்கள். அதைத்தானே, அன்று முதல் இன்று வரை, சினிமாவிலும், தொலைக்காட்சியிலும் பார்க்கிறார்கள்?

சென்னையில் எத்தனையோ கோவில்கள் இருந்தாலும், குன்றத்தூர் கோவிலுக்கு, திருநீர்மலை கோவில்களுக்குத் தனி மதிப்பு. ஏனென்றால், அது நிறையப் படங்களில் வருகிறது.

சூட்டிங் நடப்பதால், நமது குடியிருப்பும் பிரபலம் ஆகிறது. பிரபலமான குடியிருப்பு என்பதால், பின்னாளில் விற்பனைக்கு வரும்போது விலை கூடும்.

ஆனால், படக்குழுவினர் 30, 40 பேர் வருவர். அவர்களை அனுமதிக்கும்போது, உள்ளே ஏதேனும் பொருள்கள் உடைந்தால், அதைச் சரி செய்து தர வேண்டும் என்று ஒப்பந்தம் போட்டுக் கொள்ள வேண்டும்.

ஒற்றுமை ஓங்கிட...

பலவிதமான பழக்கவழக்கங்கள் உள்ளவர்கள் ஒன்றாக ஒரே இடத்தில் வசிக்கத் தொடங்குகிறார்கள்.

அவர்களை ஒற்றுமைப்படுத்த என்ன வழி? கலை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள், சுற்றுலா ஆகிய நிகழ்ச்சிகள் இதற்குப் பொருத்தமானது. சங்கம் அதற்காகப் பணத்தை ஒதுக்கிச் செலவு செய்ய வேண்டும். பரிசு வழங்க வேண்டும். கூட்டு விருந்து ஏற்பாடு செய்ய வேண்டும். இசை நிகழ்ச்சி வைத்துக் கொள்ளலாம். அதன்மூலமாக, புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் என்ற பெயரில் வேறு இடங்களில் போய் குடித்துக் கும்மாளம் போடுவதைத் தவிர்க்கலாம். குடும்ப உறவுகளோடு கொண்டாடுவது போலவும் அமைந்து விடும்.

அடுக்குமாடி வளாகங்களில் நடத்துகின்ற ஆண்டுவிழாக்களின் மூலமாக, எல்லாக் குழந்தைகளையும் மேடையில் ஏற்றி, குழந்தைகளுக்கு மேடை பயத்தைப் போக்குகின்றோம். விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பழக்கி விடுகின்றோம்.

கூட்டுப்பொங்கல் வைக்கலாம். அதற்கு, பிற மாநிலத்தவரையும் கண்டிப்பாக அழைக்க வேண்டும். நாங்கள் எல்லா வீட்டிலும் போய் ஒரு கைப்பிடி அரிசி, வெல்லம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பொங்கல் வைத்தோம். பொங்கல் பானையைத் தூக்கிக்கொண்டு, காம்பவுண்டு முழுவதும் பெண்களைச் சுற்றி வரச் செய்தோம். குலவை போட வைத்தோம். கோலாகலமாகக் கொண்டாடினோம்.

கிராமங்களில் மட்டும்தான் தெருக்களில் பானை கட்டி உரி அடிக்க வேண்டுமா என்ன? எங்கள் குடியிருப்பிலேயே உரியடி நடத்தினோம்.

குடியரசு நாள், இந்திய விடுதலைத் திருநாளைக் கொண்டாடுகிறோம். அதற்காக, நிரந்தரமாக ஒரு இடத்தில் கொடிக்கம்பம் நட்டோம். இராணுவத்தில் பணி ஆற்றி ஒய்வு பெற்றவர்களை அழைத்து வந்து, கொடி ஏற்றுவோம். அவர்கள் இராணுவத்தில் பணி ஆற்றிய அனுபவங்களைக் கூறுவார்கள். குழந்தைகள் பட்டிமன்றம் நடத்தலாம்.

சங்கம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால் மட்டும் போதாது. குடியிருப்புவாசிகள் கண்டிப்பாகக் கலந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் பங்கு ஏற்கவில்லை என்றாலும்கூட, கொஞ்ச நேரமாவது பார்வையாளராக ஒரு நாற்காலியில் உட்கார்ந்து விட்டு வரவேண்டும். அதுதான், நிகழ்ச்சியின் வெற்றிக்கு வழிவகுக்கும்.

விழாக்களில் உணவு ஏற்பாடுகளுக்கு, தனியாக கூப்பன் விற்றுப் பணம் திரட்டுவோம். ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வது பெரும்பாடு. அது, ஒருவரது உழைப்பு மட்டும் அல்ல; கூட்டு முயற்சி. ஒரு குடும்பத் திருமணத்தை நடத்துவது போலத்தான், ஒரு காலனியில் நடைபெறுகின்ற ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்வதும். அதற்காக, பொறுப்பாளர்கள் தங்களது நேரத்தை ஒதுக்கி எப்படியெல்லாம் பாடுபடுகிறார்கள் என்பதை உணர வேண்டும்.

ஆங்கிலப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை எல்லாக் குடியிருப்புகளிலும் கொண்டாடுகின்றார்கள். அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு, நமது குடியிருப்புக்கு உதவக்கூடிய அதிகாரிகளை அழைத்து வர வேண்டும். பிறகு நாம் அவர்கள் அலுவலகத்துக்குப் போகும்போது நம்மை மகிழ்ச்சியாக வரவேற்பார்கள். அவர்கள் உதவியோடு பல பிரச்சினைகளைத் தீர்க்க முடியும்.

வாரச்சந்தை என்பது போல, விடுமுறை நாள்களில், அடுக்குமாடி வளாகங்களில் கடை விரிக்கின்றார்கள். பலவிதமான பொருள்களைக் கொண்டு வந்து வைக்கின்றார்கள். அப்படி அவர்கள் வரும்போது, பலர் ஒதுங்கிப் போகின்றார்கள். அவர்களிடம் பொருள் வாங்க வேண்டும் என்பதுகூட இல்லை; விசாரித்தாலே போதுமானது. நிறையப் பேர் விசாரித்தால், அடுத்தமுறை நிறையப் பொருள்களைக் கொண்டு வருவார்கள். அதன்மூலம், குடியிருப்புக்கு வெளியில் இருந்து வருமானம் கூடும். நமது பராமரிப்புச் செலவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். வெளியில் கடைக்குச் சென்று அலைவதையும் நிறுத்தலாம்.

தொலைக்காட்சிகள், பண்பலை வானொலிக்காரர்கள் வந்து, குழந்தைகளை வைத்து நிகழ்ச்சிகளை எடுக்கிறார்கள். அதுவும் வரவேற்கத்தக்கதே.

உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது?

குடியிருப்புகளில், சங்க அறிக்கைகளை, மின்தூக்கிகளுக்கு அருகில் ஒட்டி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் என்ன அறிவிப்பு என்பதைப் படித்துப பாருங்கள். அப்போதுதான் உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்று தெரியும். நீங்கள் பிபிசி தொலைக்காட்சியில் உலகச் செய்திகளைப் பார்ப்பவராகக் கூட இருக்கலாம். ஆனால், உங்களைச் சுற்றி என்ன நடக்கின்றது என்பதைப் பாருங்கள். இப்போது, குடியிருப்பு சங்க நடவடிக்கைகள் குறித்து, குறுஞ்செய்தி அனுப்புகின்றார்கள். அதைப் படித்துப் பாருங்கள்.

தனி வீடுகளில் குடியிருந்து விட்டு, ஒரு அடுக்குமாடிக் குடியிருப்புக்கு வருகின்றவர்கள் கேட்கின்ற முதல் கேள்வி: சங்கத்துக்கு நாங்கள் எதற்குப் பராமரிப்புத் தொகை தரவேண்டும்? என்பதுதான். சங்கம் உங்களுக்கு என்ன செய்கிறது? அதற்கான செலவுகள் என்ன? என்பதை விசாரித்துக்கொண்டு, பணம் தாருங்கள். உயர் குடியிருப்புகளில் 6000 ரூபாய் பராமரிப்புத் தொகை வாங்குகின்றார்கள். எங்கள் வளாகத்தில் 1800 ரூபாய் வாங்குகிறோம்.

ஒரு சங்கம் நன்றாக இயங்குகிறது என்றால், பராமரிப்புத் தொகையை எப்படிச் செலவழிக்கின்றார்கள் என்பதைப் பொருத்துத்தான் இருக்கின்றது. புதிய வசதிகளைச் செய்து தர வேண்டும். குடியிருப்புவாசிகள் தரக்கூடிய பராமரிப்புத் தொகையை விட இரண்டு மடங்கு வசதிகளைச் செய்து தர வேண்டும்.

தற்போது, குடிநீருக்காக மினரல் வாட்டர் கேன்கள் வாங்குகின்றார்கள். மெம்பரேனில் சுத்தம் செய்து வருகின்ற அதைவிடத் தூய்மையானது. கேன் வாங்கிக் செலவு செய்ய வேண்டாம். அதைவிட மிகச் சுத்தமாகத் தருகிறோமே? நம்பிக் குடிக்கலாம்.

மூன்று விதமாகச் சுத்தம் செய்கிறோம். கருப்பாக வருகின்ற தண்ணிரைப் பார்த்துப் பயந்து விடுகின்றார்கள். ஆழ்துளை போட்டு நீர் எடுக்கின்றோம். தண்ணீர் மண் நிறத்தில் இருக்கின்றது. குளிப்பதற்கோ, குடிப்பதற்கோ உகந்தது அல்ல. எனவேதான், கட்டுமான நிறுவனம், தண்ணீரை வடிகட்டித் தருகின்ற கருவிகளைப் பொருத்துகின்றார்கள்.

அதன்படி, முதலில் மண் நிறத்தை மாற்றுகிறார்கள். அடுத்து உப்பை நீக்குகிறார்கள். குளிப்பதற்குப் பயன்படுத்தலாம். அதற்குப் பிறகு, சவ்வூடு பரவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றார்கள். ஒரு வடிகட்டியில், 100 பார் அழுத்தத்துக்கும் மேலாக, நீரைப் பீய்ச்சி அடிப்பார்கள். அதில் கழிவுகள் நீங்கி சுத்தமான தண்ணீர் கிடைக்கும். ஆனால், இதில் ஒரு லிட்டர் சுத்தமான தண்ணீர் பெற, 20 லிட்டர் தண்ணீர் வீணாகும். செலவும் அதிகம்.

உப்பு, உலோகங்கள் இருப்பதால் அது வீண்தான். இப்படிக் கிடைக்கின்ற தண்ணீரைத்தான் குடிநீர்க்குழாய் வழியாக அனுப்புகின்றோம். எனவே, எந்த அச்சமும் இன்றி இதைக் குடிக்கலாம். இந்தத் தண்ணீரை, ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்கள் மட்டும்தான் கொடுக்கின்றோம். காலை 7 மணிக்கு மட்டுமதான் இந்தக் குழாயில் தண்ணீர் வரும்.

முதலில் பார்த்தது வர்டடர் ட்ரீட்மெண்ட் அடுத்தது ஆர்.ஓ ட்ரீட்மெண்ட். அடுத்தது, சீவேஜ் ட்ரீட்மெண்ட்.

குளிக்கின்ற தண்ணீரை எடுத்துக் கொண்டு போய் மறு சுழற்சி செய்கின்றோம். சமையல் அறைக் கழிவுத் தண்ணீர் எல்லாமே அதில் வரும். அதில் வரக்கூடிய திடக்கழிவுகளை அகற்ற வேண்டும். அரசு கழிவுநீர் அகற்றாத, குடிநீர் தராத இடங்களில்தான் இதைச் செய்கின்றோம். இவை தன்னாட்சி பெற்ற குடியிருப்புகள் என்றே சொல்லலாம். யாருடைய தயவும் தேவை இல்லை. இந்த நிலைமை எல்லாம் தற்காலிகம்தான். எதிர்காலத்தில், கண்டிப்பாக நிலத்தடி நீர் விசம் ஆகும். ஒரு ஐந்து அல்லது பத்து ஆண்டுகள் வரையிலும் ஆகலாம். கழிவுநீர் அகற்ற, குடிநீர் தராமல், வீடு கட்டுவதற்கு மட்டும் அனுமதி கொடுப்பதுதான் தவறு.

அடுக்குமாடி வளாகங்களில், சங்கப் பொறுப்பில் இருப்பவர்கள் செய்கின்ற நல்ல காரியங்களுக்கு யாரேனும் சிலர் எதிர்ப்புத் தெரிவித்தால், நல்லவர்களும் அங்கே வர வேண்டும். தீவிரவாதிகள் செய்கின்ற கொடுமையைவிட, நல்லவர்களின் அமைதிதான் அதைவிடக் கொடுமை. அதனால்தான், தீவிரவாதம் வளருகின்றது. நமக்கு என்ன என்று விலகக் கூடாது.

ஒரு குடியிருப்புச் சங்கத்தில் ஓராண்டு தலைவராக இருப்பவர் கணக்கு வழக்குகளைப் பராமரிக்கின்றார்; குடியிருப்புவாசிகள் இடையே கலந்து உரையாடுகின்றார். பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்றார். அவர்களுக்கு ஒரு பட்டமே தரலாம்.

(தொடரும்)

- அருணகிரி

Pin It