இந்த 21 ம் நூற்றாண்டிலும், ஓர் ஒடுக்கப்படும் இனத்தின் போராட்டம் எப்படி முடிக்கப்படக் கூடாதோ அப்படி ஈழப் போராட்டம் 2009ல் முடிக்கப்பட்டது. எல்லாவித மனித உரிமை மீறல்களையும் தன் விருப்பபடி செய்து முடித்தது இலங்கை. சர்வதேச சதிவலையும், சொந்த இன காட்டிக்கொடுப்புகளும் சேர்ந்து ஈழ மக்களை பிணங்களாகவும், எஞ்சிய மக்களை கைதிகளாகவும் மாற்றியது. 'எஞ்சிய மக்களும், தம் இனவெறியை தீர்த்துக்கொள்ள கிடைத்த பலி ஆடுகள்; அவர்களுக்கு உரிமைகள் என எதுவும் இல்லை' என வெற்றி மமதையில் இராணுவ ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறது இலங்கை.

போர் முடிந்து 4 ஆண்டுகள் ஆன பின்னும் அந்த மக்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கின்ற மாதிரி தெரியவில்லை. அவர்களுக்கு பாதுகாப்போ, நம்பிக்கையோ அளிக்கக்கூடிய விஷயங்கள் எதுவுமில்லை. சர்வதேசம் ஒரு பக்கம் ஒப்புக்கு கேள்வி கேட்டுக்கொண்டு மறுபக்கம் இலங்கைக்கு பாராட்டு பத்திரம் வசித்துக்கொண்டு இருக்கிறது.
 
இன அழிப்பின் பங்காளியான இந்தியாவிலும் எந்த மாற்றமும் ஏற்பட்டு விடவில்லை. எந்த அதிகார வர்க்கம் இன அழிப்புக்கு துணை போனதோ, வழியமைத்துக் கொடுத்ததோ, அதே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும்தான் பதவியில் இன்றும் இருக்கின்றனர்.

'ஒன்னரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். பாலகர்களையும், பெண்களையும் போர் முடிந்த பின்னும் கொன்று போட்டிருக்கிறது சிங்களம். எல்லாவிதமான அடக்குமுறைகளையும் கொண்ட ஒரு கொடுங்கோலாட்சியை இலங்கை நடத்திக் கொண்டு இருக்கிறது' என்று எத்தனை ஆதாரங்களைக் காட்டினாலும் இந்திய அதிகாரவர்க்கம் எந்தவித உறுத்தலுமின்றி 'இலங்கை நமது நட்பு நாடு' என்கிறது.

2009ல் போர்ப்பகுதிகளில் 4,30,000 மக்கள் இருந்ததை '80,000 மக்கள் மட்டுமே போர்ப்பகுதிகளில் இருக்கின்றனர்' என ராஜபட்சே சொன்னதை, அப்படியே இந்திய அரசின் குரலாக திருப்பிச் சொல்லி, இன அழிப்புக்கு துணைபோன அப்போதைய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இப்போது குடியரசுத் தலைவராகி எந்த வித கூச்சமும் இல்லாமல் இலங்கையின் இன அழிப்புக்கு இத்தனை ஆதாரங்கள் கிடைத்தபின்னும் இலங்கையில் வளர்ச்சிப்பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன என பாராட்டுப் பத்திரம் வாசிக்கிறார்.

வெளியுறவுத்துறை செயலர் சிவசங்கரமேனன் இலங்கையில் இருந்துகொண்டு, 'இலங்கை மீது பொருளாதாரத் தடை' கோரும் தமிழக சட்டமன்ற தீர்மானத்தைப் பற்றி கவலைபடத் தேவையில்லை என திமிராக தமிழகத்தை அவமானப்படுத்திப் பேசுகிறார்.

students_eelam_640

நாளொரு நாடகமும், பொழுதொரு அறிக்கையுமாக தமிழர்களை குழப்பி தன் குடும்பத்திற்காக ஈழத்தை பலிகொடுத்த கருணாநிதிதான் இன்றும் டெசோ நாடகத்தை பரபரப்பாக நடத்துகிறார்.

2009ல் மத்திய, மாநில அரசுகள் தங்கள் சொந்த நலனுக்காக ஈழமக்களை பலியெடுக்கின்றன. முத்துகுமரன்கள் நம்பிக்கையற்று தீக்குளிக்கின்றனர். நாம்தான் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி, அரசியலில் தமது உச்சபட்ச போராட்ட குணத்தை காட்டவேண்டிய நேரமிது என ஜெயலலிதா உணராமல், 'போர் நடந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள்' என்ற உலகமகா தத்துவத்தை சொல்லிவிட்டு கொடநாட்டுக்கு ஓய்வெடுக்கச் சென்று விட்டார். ஒருவேளை அன்று கருணாநிதி, ஜெயா மாதிரி எதிர்க்கட்சியாக இருந்திருந்தால், தனது அரசியல் லாபங்களுக்காக எத்தனை அறைகூவல் விடுத்திருப்பார்; எத்தனை நாடங்கங்கள் நடத்தியிருப்பார்! ஆனால் ஜெயலலிதா அவையெல்லாம் தேவை இல்லை அடுத்த தேர்தலில் எப்படியும் மக்கள் தனக்கு வாக்களித்து விடுவார்கள் என கொடநாட்டில் தூங்கச் சென்று விட்டார்.

பின்பு 2011ல் போர் முடிந்த பின்பு ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து வந்தவரைப் போல, இலங்கையில் இனப் படுகொலைகள் நடந்து விட்டது, இலங்கை தண்டிக்கப்பட வேண்டும் என தேர்தல் அறிக்கை வெளியிட்டார்.

இது என்ன புதுக்கதை எப்போதும் ஈழத்துக்கு எதிராகத்தானே ஜெயலலிதா பேசுவார், செயல்படுவார், இப்போது திடீரென ஆதரவாக பேசுகிறார், எதற்கும் இருக்கட்டும் என ஜெயாவிற்கு 'ஈழத்தாய்' பட்டத்தை கொடுத்து விட்டார்கள்.

அவரும் வெற்றி பெற்றவுடன் ஏதோ காங்கிரசு தலைமையிலான அரசுக்கு குடைச்சல் கொடுக்க தனக்கு கிடைத்த வாய்ப்பு இது என 'இலங்கை தண்டிக்கபடவேண்டும், இலங்கைமீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்' என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதோடு. மத்திய அரசுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டால் போதும் என நினைக்கிறார். ஒன்னரை லட்சம் மக்கள் கொல்லப்பட்டு, எஞ்சிய மக்களும் இன்னமும் சித்திரவதைகளை அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். அந்த இனத்தில் தான்தான் அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் என உணர்ந்து ஆக்கப்பூர்வமாக செயல்படுவதாகத் தெரியவில்லை. ஆகா போர் முடிந்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்பும் தமிழருக்ககான எந்த நம்பிக்கையும் இல்லாமல் காலம் கடந்து கொண்டு இருக்கிறது.

மற்ற ஈழ ஆதரவுக் கட்சிகளும், இயக்கங்களுமாவது ஒன்று சேர்ந்து ஏதாவது நம்பிக்கையளிப்பதாக ஏதாவது செய்வார்களா என்று பார்த்தால் தனித்தனியாக போராடி எதுவும் நடந்தபாடில்லை, குறைந்தபட்சம் இலங்கை துணைத் தூதரகத்தை கூட இங்கிருந்து வெளியேற்ற முடியவில்லை. ஆளுக்கொருநாள் முற்றுகை போராட்டம் என பிரிந்து நின்று சொதப்புகிறார்கள். innocent of muslim படத்திற்கு எதிராக இஸ்லாமிய நண்பர்கள் ஒரே தினத்தில் அமெரிக்க துணை தூதரகம் முன் திரண்டு நின்று ஒரு நெருக்கடியைத் தந்ததுபோல் கூட நம்மால் நெருக்கடி கொடுக்க முடியவில்லை.

இவ்வளவு இழப்புகளுக்கு பின்னும் கருணாநிதியும், ஜெயாவும் அதே அளவு அதிகார மையங்களாக இருக்கிறார்கள். எதேச்சதிகாரமாய் செய்தியை மறைத்த அதே ஊடங்கங்கள் தான் இன்று நமக்கானவர்கள்போல் புலம்புகின்றனர். ஏதாவது நம்பிக்கை
தரும் பெருநிகழ்வு நடைபெறதா? என ஏங்கிய நேரத்தில் தான் லயோலா கல்லுரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடங்கினார்கள்.
 
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, இலங்கை மீது பொருளாதாரத் தடை, தனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு என தெளிவான கோரிக்கைகளுடன் மாணவர்கள் போராட்டத்தைத் தொடங்கினார்கள். முத்துகுமார் மரணத்தைத் தொடர்ந்து எழுந்த, எழுச்சியையே தமிழகம் முழுவதும் பரவாமல் பார்த்துக் கொண்டவர்கள் இப்போது விடுவார்களா என்ன?
 
மூன்றாம் நாள் திருமாவளவன், சுபவீ, டிகேஎஸ் இளங்கோவன், ஜெகத்கஸ்பர் என வரிசயாக வந்து சென்றனர். பின்னர்தான் மாணவர்களுக்கு விடயம் புரிந்தது. டெசோ தீர்மானத்தை ஆதரித்து லயோலா கல்லுரி மாணவர்கள் போராட்டம் என்ற செய்தி ஊடகங்களில் பரவியது.

போராட்டப் பந்தலில் உடன் இருந்த தோழர்கள் ‘அவர்களை ஏன் உள்ளே விட்டீர்கள், இது டெசோ ஆதரவு மாநாடா?’ என கேட்க, தெளிவாய் இருந்தார்கள் மாணவர்கள். 'இது எந்த அமைப்பையோ, கட்சியையோ சார்ந்த உண்ணாவிரதம் அல்ல, மாணவர்கள் முன்னெடுக்கும் போராட்டம்' என அறிவித்தனர். இடையில் காங்கிரசு தங்கபாலுவும் ஆதரவு தெரிவிக்க வந்து திருப்பி அனுப்பப்பட்டது தனிக்கதை.

 அன்று இரவே ஜெயாவின் காவல்துறை அராஜகமாக உள்நுழைந்து மாணவர்களையும், உடன் இருந்த தோழர்களையும் கைது செய்தது.

ஆனாலும் திங்கள் காலை தமிழகம் முழுவதிலும் உண்ணாவிரதம், பேரணி என மாநிலத்திலுள்ள அனைத்து கல்லூரிகளுக்கும் போராட்டம் பரவியது. கருணாநிதியின் சூழ்ச்சியையும், ஜெயாவின் அடக்குமுறையும் தாண்டி மாணவர்களின் போராட்டம் மாநிலம் முழுவதிலும் பரவியது.

வழக்கம் போல சட்டக்கல்லூரி, கலைக் கல்லூரி மாணவர்கள் மட்டுமே பங்குபெறும் போராட்டமாக இது இல்லாமல் மருத்துவம், பொறியியல், இசைக்கல்லூரி, ஐஐடி என அனைத்து தரப்பு மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர்.

மாநிலமெங்கும் பரவிய போராட்டத்தை அடக்க வழிதேடிய ஜெயா, அன்று 2009ல் கருணாநிதி செய்த மாதிரி கல்லூரிகளை மூடி, விடுதிகளை விட்டு வெளியேற்றி, போராடும் மாணவர்களை தெருவில் தூக்கி போட்டிருக்கிறார். மாணவர்களை கலைத்தால் போராட்டத்தை முடக்கிவிடலாம் என்ற கருணாநிதியின் அதே உத்தியை பயன்படுத்துகிறார். ஆனால் அதன் பின்பும் மாணவர்களின் போராட்டம் தொடர்வதும், பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பங்கு பெறுவதும் அரசு எதிர்பார்க்காதது.

2009ல் கற்ற பாடத்திலிருந்தும், கூடங்கூளம் போன்ற தொடர் போராட்டங்களைக் கண்டும் மாணவர்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். யாரையும் முன்னிலைப்படுத்தாமல், தங்களுக்குள் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்திக் கொண்டு, தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு என்று மாநிலம் முழுக்க ஒருங்கிணைந்து செயல்படுகிறார்கள். உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி எனத் தொடங்கியவர்கள் அரசுகளின் அலட்சியத்தைக் கண்டு முற்றுகை, பேரணி என அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறார்கள்.

கொஞ்ச காலம் போராடிப் பார்த்துவிட்டு விட்டு விடுவார்கள் என்று மத்திய, மாநில அரசுகள் எந்தவித பேச்சுவார்த்தையும் போராடும் மாணவர்களுடன் நடத்தாமல் இழுத்தடிக்கின்றன. ஆனால் இவ்வளவு பெரிய எழுச்சி ஏற்பட்டு, அது எந்தவித வெற்றியும் பெறாமல் முடியக் கூடாது. அது மாணவர்களும் பொதுமக்களும் இணைந்து நடத்தும் அடுத்த கட்ட போராட்டங்களில்தான் உள்ளது.

இந்தியா சுயவிருப்புடன் எந்த காலத்திலும் ஈழத் தமிழருக்கு உதவாது. இனஅழிப்புப் போரில் அது இலங்கையின் பங்காளி. தன்னால் இயன்ற அளவு இலங்கையைக் காக்கவே விரும்பும். அதையும் தாண்டி தொடர்போராட்டங்களின் மூலம் உண்மையை மற்ற மாநிலங்களுக்கும், உலகுக்கும் எடுத்துச் செல்லவேண்டும். இந்தியாவை அம்பலப்படுத்தி இலங்கையிடம் இருந்து அந்நியப்படுத்துவதன் மூலமே ஈழத் தமிழருக்கான விடுதலையை முன்னெடுக்க முடியும்.
 
- வெ.தனஞ்செயன்

Pin It