மே 18 திங்கள் அன்று முற்பகல் பேருந்தில் சென்னையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த நேரம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப் பின் தலைவர் பிரபாகரன் குறித்த அதிர்ச்சிச் செய்தி தமிழீழ உணர்வாளர்கள், தமிழீழ விடுதலை ஆதரவாளர் களது நெஞ்சங்களை உலுக்க, மாற்றி மாற்றி தொலைபேசி அழைப்புகள். தமிழகத்திலிருந்து மட்டுமல்ல. மலேசியா, சவூதி என வெளிநாடுகளி லிருந்தும். எல்லாரது குரலும் எழுப்பிய ஒரே கேள்வி “என்ன தோழர், என்ன ஐயா செய்தி உண்மையா” என்பதுதான். இவர்களில் பலபேர் நமக்கு இதற்கு முன் தொடர்பு இல்லாதவர்கள், புதியவர்கள். இவர்கள் யார், இவர்களுக்கு எண் எப்படிக் கிடைத்தது என்று கேட்டால், எல்லாரும் மண் மொழி வாசகர்கள். மண்மொழியில் தொடர்ந்து ஈழச்சிக்கல் குறித்து எழுதி வந்ததால், நமக்கு எப்படியும் உண்மை தெரிந் திருக்கும் என்கிற நம்பிக் கையில் அவர்கள் கேட் டிருக்கிறார்கள்.

ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளை நம்புவதா இல்லையா என்பது குழப்பமாக இருந்தாலும், தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் சொல்ல, போராளிகளோடு நெருக்க மான தொடர்புடைய வேறு யாரையும் கேட்டு உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை. கேட்டு உறுதி செய்து என்ன ஆகப் போகிறது. இதுவரை நேர்ந்த எண் ணற்ற இழப்பு களும், பறிபோன மனித உயிர்களும் மீண்டும் வந்து விடவா போகிறது. நம்முடைய பொறுப்பற்ற கையா லாகாத்தனத்தால், மெத்தனத்தால் கண்ணெதிரில் இப்படி ஒரு பேரழிவை நடத்த அனுமதித்தாயிற்று. இனிமேல் புலிகள் அமைப்பின் தலைவர்கள் இருந்து என்ன, இல்லா விட்டால் தான் என்ன? அப்படியே இருப்பதாக வைத்துக் கொண்டாலும், மீண்டும் தங்கள் சக்தியைத் திரட்டிக் கொண்டு இப்படி ஒரு பலமிக்க இயக் கமாக உருப்பெற்று போராட இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என்கிற அலுப்பு, சோகம், விரக்தி, யாரையும் எதையும் கேட்டுக் கொள்ளத் தோன்ற வில்லை.

ஆனால் எதையும் வெளிப் படுத்திக்கொள்ளாமல் எல்லாருக்கும் சொன்ன பதில் “எதையும் உறுதிப் படுத்திக் கொள்ள முடியவில்லை தோழர். ஆனால் செய்தி எதுவானாலும் தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அடுத்து என்ன என்பதைச் சிந்தித்து திட்டமிட்டு செயல்பட வேண்டியது தான்” என்பதே. பேசிய எல்லாருடைய எண்ணத் திலும் ஒரு கருத்து பொதுவாக வெளிப் பட்டது. அதாவது தமிழ் நாட்டில் இத்தனைத் தலைவர்கள் இருந்தும், தமிழகத்தில் அனைத்துப் பிரிவு மக் களது உணர்வும் ஈழப் போராட்டத் துக்கு ஆதரவாக இருந்தும் அதை ஒருங்கிணைத்து அதற்கு ஒரு வடிவம் கொடுத்து ஒரு எழுச்சிமிகு போராட் டங்கள் நடத்தி, தில்லி அரசுக்கு ஒரு நெருக்கடி கொடுத்து அதைப் பணிய வைக்காமல் விட்டு விட்டார்களே, ஈழத்தில் போர் நிறுத்தம் செய்ய வைத்து அப்பாவித் தமிழர்களைக் காப்பாற்ற முனையாமல், பல்லாயிரக் கணக் கானத் தமிழர்கள் சாகவும், போராளிகள் கொல்லப்படவும் எல்லாரும் இப்படி அம்போ என்று விட்டு விட்டார்களே என்கிற ஆதங்கமே வெளிப்பட்டது. கிட்டத்தட்ட உணர்வுள்ள தமிழர்கள் எல்லோரின் ஆதங்கமும் இதுதான்.

எனவே, நடந்துள்ளதாக வெளி வந்திருக்கும் தகவல்களை ஆய்வு செய்து இவற்றுள் நாம் செய்தது என்ன, செய்யத் தவறியது என்ன என்பதை உணர்ந்து அதிலிருந்து பாடம், படிப்பினைகள் பெற்று, இனிவரும் காலங்களிலாவது நாம் விழிப்போடும், முனைப்போடும் செயலாற்ற வேண்டும் என்பதற்காக சில கருத்துகள். ஈழத்தில் போராளிகள் மற்றும் பொது மக்கள் மீதான சிங்கள இனவெறி இராணுவத்தின் தாக்குதல் உக்கிரமடைந்து, போராளி களின் இயங்கும் பரப்பு சுருங்கி வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக் கும் தருணத்திலும் நாம் விழிப்படையவில்லை. போராளிகளைக் காக்க, இலங்கை அரசு போர் நிறுத் தம் செய்ய நாம் உரியவாறு முயற்சிக்கவில்லை. மாறாக புலிகளின் போர்ப் பெருமை பற்றி பேசிக் கொண்டிருந் தோம்.

முதன் முதலாக கிளிநொச்சியை இழந்தபோது அந்த இழப்பின் விளை வுகளை உணராமல், உணர்த்தாமல், இராணுவத்தை முன்னேற விட்டு தாக்கி அழிக்கும் உத்தியில் புலிகள் பின்வாங்கி யிருக்கிறார்கள். கிளி நொச்சியை மீண்டும் கைப்பற்றுவார்கள் என்றோம். புலிகளின் இயங்கு பரப்பு 20 கி.மீ., 15 கி.மீ என சுருங்கிவந்த தருணத்திலும், புலிகள் இறுதி யுத்தம் நடத்தி இராணுவத்துக்கு பேரிழப்பை ஏற்படுத்துவார்கள் என்றோம். பொதுவாக 25 ஆண்டுகளில் தமிழீழ ஆதரவுப் போராட்ட நடவடிக் கைளில் ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், மாநாடுகளில் நாம் புலிகளின் போர்ப் பெருமைகள், வீர சாகசங் களைப் பேசியும், பிரபாகரன் பேரைச் சொல்லியும் பார்வையாளர்கள் மத்தி யில் கைத்தட்டல் பெறுவதைத் தான் முதன்மையாகக் கொண்டிருந்தோமே தவிர, வேறு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

சாதாரண காலங்களில் தான் இப்படிப் பேசினோம் என்றால் நெருக்கடியான தருணங்களிலும் இதையே செய்தோம். இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதம் தருகிறது என்றால் அதைத் தடுத்து நிறுத்துவதில் முனைப்புக் காட்டுவதை விடவும், ஆயுதம் கொடுக்கிறாயா, கொடு. அதையெல்லாம் எங்கள் போராளிகள் கைப்பற்றி சிங்கள இராணுவத்துக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று வீரம் பேசினோம். இதே போல ஒவ்வொரு சந்தர்ப் பத்திலும், ஏதோ ஒரு சராசரி திரைப்பட ரசிகன் போல, தன்னால் இயலாத காரியங்களை கதாநாயகன் செய்கிறான் என்பதில் அகமகிழ்ந்து ஆதவாரித்து கை தட்டி குதூகலிக்கும் ரசிகன் போல புலிகளின் போர்ச் சாகசங்களை, பெரு மைகளைப் பேசி கைதட்டி மகிழ்ந் தோம். அதாவது உள்ளூர் நதிநீர்ப் பிரச் சனைகளில் உருப்படியாக எந்தப் போராட்டமும் நடத்தி அவ்வுரிமை களை மீட்க முயலாமல், வாரந்தோறும் சிங்கள கப்பற் படையால் சுட்டுக் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வரும் தமிழக மீனவர்களைக் காப்பாற்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள் ளாமல் புலிகள் வீரத்தைப் பாராட்டிப் பேசி மகிழ்ந்து கொண் டிருந்தோம்.

போராளிகள் கடும் நெருக்கடிக் குள்ளான தருணங்களிலும் அவர்களை காக்க முயலாமல், புலிகளை யாராலும் வெல்லமுடியாது, அவர்களை கிட்டே நெருங்க முடியாது, அவர்களுக்கு எது வும் நேர்ந்தால் தமிழகம் கொந்தளிக்கும், போர்க்களமாகும், ரத்த ஆறு ஓடும் என்றெல்லாம் வீர வசனம் பேசிக் கொண்டிருக்கிறோமே தவிர வேறு ஆக்கப்பூர்வமாய் எதுவும் செய்யவில்லை. மாறாக எதையும் நடக்கவிட்டு நடந்து போன அச்செயலை வார்த்தை களால் வருணித்துக் கொண்டிருந் தோம். நாள்தோறும் அறிக்கைகள் விட்டோம். ஈழச் சிக்கலுக்கு இதோ நாங்களும் குரல் கொடுத்தோம் என்று கணக்கு காட்ட ஒப்புக்கு மாரடித்தோம்.

இப்படியெல்லாம் குறிப்பிடுவதால் எந்த அமைப்பையும், எந்த தலைவரையும் குறை சொல்வதாக யாரும் எடுத்துக் கொள்ளக்கூடாது. ஒவ்வொருவரும் நம் நெஞ்சில் கை வைத்து யோசித்துப் பார்த்து நேர்மை யாக பதில் சொல்வோம். ஈழத் தமிழர் களுக்கு இதுவரை நாம் நடத்திய போராட்டங்களைத் தாண்டி நாம் வேறு எதுவுமே செய்திருக்க முடியாதா? தமிழகத்தையே அசைவற்று நிலை குலையச் செய்து தில்லி நிலைபாட்டில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா, மன்மோகன் சிங்கோ, சோனியாவோ ஈழத்தில் போர் நிறுத் தம் செய்யாமல் தமிழகத்தில் காலடி வைக்க முடியாது என்கிற ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்க முடி யாதா? முடியும். ஆனால் நாம் செய்ய வில்லை.

சரி போனதெல்லாம் போகட் டும். போராளிகளின் இறுதிக் கட்டங் களிலாவது அவர்களைக் காப்பாற்ற நாம் உருப்படியாக ஏதாவது முயற்சிகள் மேற்கொண்டோமா என்றால் அதுவும் இல்லை. உறுதி செய்யப்படாத தகவல்களாய் ஊடகங்கள் வழி வெளிப்படும் செய்திகள் சொல்வது இதுதான். புலிகள் அமைப்பினர் கடைசி வரை சில தமிழ் நாட்டுத் தலைவர்களின் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். நெருக்கடி முற்றி      மூன்றாவது தரப்பின் மத்தியத்துடன் சரணடையும் முயற்சிக்கு வழி காணு மாறு கோரியுள்ளனர். ஆனால் இங் குள்ள தலைவர்கள் ‘சரணடைவது’ என்கிற நிலைக்குப் போக வேண்டாம். போர் நிறுத்தம் என்பதாக அறிவி யுங்கள். இன்னும் இரண்டொரு நாளில் நிலைமை இங்கு மாறிவிடும், தேர்தல் முடிவுகள் வந்தால் காங்கிரஸ் வீழ்ச்சி யுறும், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி யில் அமரும். ஈழச்சிக்கலுக்கு விரை விலேயே தீர்வு கிட்டும் என்று நம்பிக் கையூட்டி இருக்கிறார்கள். ஆனால் முடிவுகள் வேறுவிதமாக வந்து விட்டன.

இந்த நிலையில் போராளிகள் மீதான தாக்குதல் என்கிற பெயரால் அப்பாவி மக்கள் அநியாயமாகக் கொல்லப்படுவதைத் தவிர்க்க வேனும் ஒரு பகுதி சரணடைவது என்கிற முடிவில் நடேசன் அதற்கான முயற்சி களை மேற்கொண்டிருக்கிறார். இலண் டனிலிருந்து வெளி வரும் ‘தி சண்டே டைம்ஸ்’ என்னும் நாளேட்டின் மூத்த பத்திரிகையாளர் மேரி கால்வின் என்கிற பத்திரிகையாளரைத் தொடர்பு கொண்டு அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தலையீட்டுடன் தமிழ் மக்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்து கொண்டால் தாங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவதாகத் தெரிவித்தி ருக்கிறார்கள். இத்தகவல் மேரி கால்வின் மூலம் ஐ.நா.வின் சிறப்புத்தூதர் விஜய நம்பியாருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நம்பி யார் இலங்கை அரசைத் தொடர்பு கொள்ள அது, மூன்றாவது நபர் மூல மாக சமாதானத்துக்கெல்லாம் ஒப்புக் கொள்ள முடியாது. புலிகள் நேரடியாக இலங்கை இராணுவத் திடம் சரண டைய வேண்டியதுதான் என்று வலி யுறுத்தியுள்ளது.

இது நடேசனுக்குத் தெரிவிக்கப் பட, சரி என நடேசனும் அதற்கு சம்மதித்திருக்கிறார். இதை எப்படி நடை முறைப்படுத்துவது என்று கேட்க, விஜய் நம்பியார், தான் இலங்கை அதிபர் ராஜ பக்ஷேவிடம் இதுபற்றி தெரிவித்து விட்டதாகவும் அவர்கள் வெள்ளைக் கொடியை உயர்த்திப் பிடித்தபடி வந்து சரணடைய வேண்டி யதுதான் என்றும் சொல்லியிருக்கிறார். சரி அப்படியானால் அந்த சரணடைவை கண்காணிக்க நீங்கள் நேரில் போக வேண்டாமா என்று கேட்டதற்கு தேவையில்லை. ராஜபக்ஷே, வடக்குப் பகுதி ராணுவ அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ஆகவே அவர்கள் தாரள மாய்ப் போய்ச் சரணடையலாம் என்றிருக்கிறார்.

இதன்படி நிராயுதபாணியாய் வெள்ளைக் கொடிப் பிடித்து சரண டையப் போன நடேசன், அவரது சிங்கள மனைவி விஜிதா, புலித்தேவன் ஆகிய மூவரையும் அவருடன் வந்த வர்கள் சிலரையும் சிங்கள இராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. ஆனால், இவர்களைத் தாங்கள் சுடவில்லை. இவர்கள் இப்படி சரண டையவதை விரும்பாத புலிகள் அமைப்பைப் சேர்ந்தவர்களிலேயே சிலர்தான் இவர்களைச் சுட்டுக் கொன்று விட்டனர் என ராணுவம் கூறுவதாகவும் சொல்லப்படுகிறது. இச்சம்பவத்திற்கு முன்னதாகவே நெருக்கடி முற்ற புலிகள் அமைப்பின் தலைவர்கள் இயக்கத் தையும் மக்களையும் காக்க அடுத்து என்ன செய்வது என்பது பற்றி கூடிக் கலந்தாய்வு செய் திருக்கிறார்கள்.

இதன்படி அமைப்பின் ஒரு பகுதி ஒரு புறத்தில் அடையாளப்பூர்வமாக சரணடைவது, இன்னொரு புறத்தில் ஊடறுப்பு யுத்தம் நடத்தி ஒரு பகுதி தப்பிப்பது, இன்னொரு பகுதி களத்தில் நின்று போரிடுவது என்று முடி வெடுத்திருக்கிறார்கள். பிரபாகரன் தலைமையில் சிலர் தப்பிச் செல்ல வேண்டும் என வலி யுறுத்த பிரபாகரன் அதற்கு மறுத்து விட்டதாகவும், தான் கடைசி வரை களத்தில் நின்று போராடப் போவ தாகவும் உறுதிபடத் தெரிவிக்க, தலை மையின் முக்கியத்துவம் கருதி அனை வரும் அவர் தப்பிக்கவேண்டும் என வலியுறுத்தவே அதற்குப் பிறகே அவர் சம்மதித்தார் எனப்படுகிறது.

ஆனாலும், ஊரார் பிள்ளைகளை யெல்லாம் பயிற்சி கொடுத்து களத்தில் பலி கொடுக்கும் பிரபாகரன் தன் பிள்ளையை மட்டும் களத்திலிறக்காமல் இருக்கிறார் என்கிற அவச்சொல்லை நீக்க மகன் சார்லஸ் களத்தில் நின்று போராட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியதாகவும் அதை மற்றவர்கள் ஏற்ற பிறகே அவர் தப்பிச் செல்ல சம்மதித்தார் என்றும் சொல்லப்படுகிறது. ஆக, ஒரு பகுதி சரணடைதல், ஒரு பகுதி ஊடறுப்பு யுத்தம் நடத்தி தப்பித்தல், ஒரு பகுதி கடைசிவரை போராடுதல் என முடிவெடுத்து அதன் படி செயல்படுத்தியதில் சரணடையும் அணியில்தான் நடேசன், விஜிதா, புலித்தேவன் கொல்லப்பட்டுள்ளனர்.

ஊடறுப்பு யுத்த அணி நந்திக்கடல் பகுதியில் இருந்த சிங்கள இராணுவத் தின் 53ஆவது படைப் பிரிவை பானு தலைமையில் கடும் தாக்குதல் நடத்தி, ஊடறுப்பு வழிகளை ஏற்படுத்த இவர் கள் பொட்டு அம்மான், சூசை, ஜெயம் ஆகியோர் தலைமையில் மூன்று அணியாக பிரிந்து உள்நுழைந்து தப்பிக்க முயன்றுள்ளனர். இதில் முதல் அணியை உடைத்து முன்னேறிய புலிகளை, பின்னால் இரண்டாம் அணியாக நிறுத்தப் பட்டிருந்த இலங்கை இராணுவத்தின் தரைப்படை யந்திரத் துப்பாக்கிகள் சரமாரியாகத் தாக்கத் தொடங்கி யுள்ளன. இப்படி ஒரு தாக்குதலை எதிர்பார்க்காத புலிகள் நூற்றுக் கணக் கில் மாண்டுள்ளனர். பலர் சயனைடு அருந்தி இறந்துள்ளனர். முற்றிலும் எதிர்பாராத இத்தாக்குதலில் புலி களுக்கு மாபெரும் இழப்பு ஏற்பட் டுள்ளது.

இத்துடன், இறுதி வரை நின்று போராடும் பிரிவிலிருந்த சார்லஸ் அந்தோணியின் அணியும் போர் மரபை மீறிய ஆயுதங்களால் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இப்படிப்பட்ட இழப்புகளுக்கு மத்தியில் சூசை தலைமையில் சென்ற அணி மட்டும் வன்னிப்பகுதிக்கு தப்பிச் சென்று விட்டதாகவும், அவர்களிடமிருந்து முள்ளி வாய்க்கால் பகுதிக்கு “உடைத்துக் கொண்டு போய் விட் டோம்” என்று தகவல் வந்ததாகவும் இதுவே அவர்களிடமிருந்து வந்த கடைசி தகவல் எனவும் இந்த அணியில் தான் பிரபாகரன் அவரது மனைவி மதிவதனி, மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் ஆகியோர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட எல்லா ஊடகங் களுமே இத்தகவலை முழுமையா கவோ, பகுதியாகவோ, ஏறத்தாழ இதற்கு நெருக்கமாகவோ உறுதிப் படுத்துகின்றன. எனில், இதன் அடுத்த கட்டம், அடுத்த நிலைதான் சர்ச்சைக்குரியதாக கேள்விக்குள்ளாக்கப்பட்டு வருகிறது. ஊடறுப்புப் போரின் தொடக்க நிலையில் வெற்றி பெற்ற சூசை அணி சிங்கள ராணுவத்தின் பின்னணிப் படைப்பிரிவில் தாக்கப்பட்டுக் கொல் லப்பட்டு விட்டதாகவும், இதில் பிரபாகரன் மாண்டுவிட்டார் என ஒரு செய்தியும், இல்லை இது சிங்கள ராணுவம் பரப்பும் பொய்ச்செய்தி, பிரபாகரன் பத்திரமாகத் தப்பிச் சென்று நலமாக இருக்கிறார். பாதுகாப்பு கருதி தன் இருப்பை வெளியிடாமல் உள்ளார். உரிய நேரத்தில் தன் இருப்பை வெளிப் படுத்துவார் என்கிற ஒரு செய்தியும் நிலவி வருகிறது.

இந்த இரண்டு கூற்றினதும் தகவல்கள் சார்ந்து அதன் நம்பகத் தன்மை பற்றிய சில செய்திகளைத் தர்க்கப் பூர்வமாக ஆராய்வோம். முதலாவதாக, பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று இலங்கை ராணுவம் அறிவிப்பது பற்றிய கேள்விகள். 18ஆம் நாள் பிரபாகரன் கொல்லப் பட்டார் என்று சிங்கள ராணுவம் அறிவிக்கிறது. 19ஆம் நாள் நந்திக் கடல் பகுதியில் அவரது உடல் கண்டெடுக்கப் பட்டதாகக் கூறி உடலை தொலைக் காட்சி ஊடங்களுக்கு காட்டுகிறது. பிரபாகரன் எப்படி இறந்தார் என்றால் தெளிவான பதில் இல்லை. இவர் தப்பிச் செல்ல முயலும் போது சுடப்பட்டார் எனவும், தற்கொலை செய்து கொண்டார் எனவும், போர்க் களத்தில் மாண்டு போனார் எனவும் விதம் விதமாகக் கூறுகிறது.

தவிரவும் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் பிரபாகரன் இல்லை எனவும், அது நவீனத் தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி எனவும் இத்துடன் மரபணு சோதனை என்பதும் மோசடி எனவும், ஏறக்குறைய எல்லா வல்லுநர்களுமே கருத்து தெரிவிக்கின்றனர். இதுவன்றி, அவரது தோற்றம், அடையாள அட்டை கழுத்தில் சயனைட்டு குப்பியின்மை ஆகியவை பற்றியும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் வைத்து நோக்க, ஊடகத்தில் காட்டப்படும் படம் பிரபாகரன் இல்லை என்பது அனைவரதும் ஏகோபித்த முடிவாக இருக்கிறது. இது இப்படியிருக்க பிரபாகரன் மரணிக்கவில்லை என்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால் பிரபாகரன் இருப்பு குறித்து மெய்ப்பிக்க அவர்களிடம் எந்த சான்றுகளும் இல்லை. பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்பதற்கு அவர்கள் தரப்பில் உள்ள சான்று ஊடகத்தில் காட்டப் படுபவர் பிரபாகரன் இல்லை என்பதுதான்.

சரி, நூற்றுக்கு நூறு விழுக்காடு அது பிரபாகரன் இல்லை என்பதானாலேயே பிரபாகரன் உயிரோடு இருக் கிறார் என்று ஆகிவிடுமா. நிச்சயம் ஆகாது. ஏன் சிங்கள ராணுவமே ஏதாவதொரு வகையில் பிரபாகரனை தீர்த்துக்கட்டி விட்டு, அது தீர்த்துக் கட்டிய விதம் வெளியுலகத்துக்குத் தெரிந்தால் பெரும் எதிர்ப்பு கிளம்பலாம் என அஞ்சி பிரபாகரன் இறப்பை நம்பவைப்பதற்கு இப்படி ஒரு போலியை உருவாக்கி காட்டியிருக்கலாம் அல்லவா. அதேவேளை பிரபாகரன் இறந்தது உண்மையானால் இலங்கை அதிபர் ராஜபக்ஷே ஏன் அதை இலங்கை நாடாளுமன்றத்தில் உறுதி செய்ய வில்லை என்றும் கேள்வி யெழுகிறது.

ஒருவேளை இப்படி இருக் கலாமோ என நினைக்க வாய்ப்புண்டு. சிங்கள ராணுவம் சமீப நாட்களில் நடத்திய குரூரத் தாக்குதலில், போர் மரபை மீறிய உத்திகளிலும், பயன்படுத்தக்கூடாத ஆயுதங்களையும் பயன்படுத்தியும் தமிழ் மக்களை அழித்தது. அவற்றுள் முக்கியமானவை கொத்து குண்டுகளும், வேதியியல் குண்டுகளும். இப்படிப்பட்ட தாக்குதல் எதற்காவது ஆளாகி பிரபாகரன் கூட்டத்தோடு கூட்டமாக உடல் கருகியோ அல்லது சிதறுண்டோ போய்விட அதைக் காட்டி, தன்னை அம்பலப்படுத்திக் கொள்ள விரும்பாத சிங்கள அரசு முதலில் பிரபாகரன் மரணம் என்று மட்டும் அறிவித்திருக்கலாம். அடுத்த நாள் அவரது மரணத்தை உறுதிப்படுத்த போலியுடல் ஒன்றை உருவாக்கிக் காட்டியிருக்கலாம். ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி அனைவரும் கேள்வி யெழுப்ப அந்த முயற்சிகளைக் கைவிட்டிருக் கலாம். முதல் நாள் சிதறுண்டு கிடந்த உடல் கூட பிரபாகரனுடையதுதானா என்பது கூட உறுதிப்படுத்திக் கொள்ள முடியாததாக சந்தேகத்திற்குட்பட்டிருக்கலாம். அதனால் இன்னமும் குழப்பம் நீடிக்கலாம்.

சரி, இது இப்படியே இருக் கட்டும். பிரபாகரன் பத்திரமாக உயி ரோடுதான் உள்ளார் என்பதன் உறுதிப்பாடு குறித்து எழும் கேள்விகள். பிரபாகரன் உயிரோடு இருப்பதானால், சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும் அவர் ஏன் தன் இருப்பைத் தெரிவிக்கவில்லை. பாதுகாப்பு ஒரு பிரச்சனை என்று வாதிடுவதானாலும், இருப்பிடத்தைச் சொல்லாமல் ஏதாவது வழியில் ஒரு அறிக்கை மூலம் தன் இருப்பை வெளியிட்டிருக்கலாமே, ஏன் வெளியிடவில்லை என்கிற கேள்வி எழுகிறது. இருந்தும், தமிழகத் தலைவர்களில் ஒரு சிலர் பிரபாகரன் நலமாக உயிரோடுதான் இருக்கிறார் என்று அறிவித்து வருவது நம்பிக்கையூட்டுவதாய் இருந்தாலும் தங்களது இயலாமையை மறைக்கவா என்கிற கேள்வி யையும் சிலர் எழுப்புகின்றனர்.

தவிர, பிரபாகரனுக்கு உலகப் போராளித் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றில் அதிகமும் அவரைக் கவர்ந்தது நேத்தாஜியின் வாழ்க்கை தான் என்று சொல்வார்கள். ஒருவேளை பிரபாகரனே தனக்கு ஏதாவது நேர்ந்தால் எதையும் வெளிப்படுத்திக் கொள்ள வேண்டாம். எல்லாம் புதி ராகவே இருக்கட்டும். நான் எங்கோ இருக்கிறேன் என்பது தான் போராளிகளுக்கு நம்பிக்கையும் தெம்பும் ஊட்டுவதாக இருக்கும். ஆகவே நேதாஜி பாணியில் உயிரோடு இருக்கிறேன் என்றே சொல்லி வையுங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கலாம். ஆக இது தெளிவடையாத குழப் பமாக இருந்தாலும் மறைந்தார் என் பதற்கான வாய்ப்புகள் 95 விழுக்காடும், இருக்கலாம் என்பதற்கான வாய்ப்பு 5 விழுக்காடும் மட்டுமே நிலவும் இந்த சூழலில் 5 விழுக்காட்டு நம்பிக்கையில் மட்டுமே நாம் பிரபாகரன் இருப்பை எதிர்பார்க்கலாம்.

இது ஒருபுறம் இருக்க இது சார்ந்த முக்கியான ஒன்று. இன்று பிரபாகரன் இருக்கிறாரா இல்லையா என்பது பிரச்சினையல்ல. அது சார்ந்த விவாதங்களில் நாம் இறங்குவதோ, அதிலேயே நாம் நம்மை மூழ்கடித்துக் கொள்வதோ நமது இலக்கும் அல்ல. உயிர் என்று பார்த்தால் பிரபாகரன் உயிர்தான் உயிர், மற்றதெல்லாம் உயிரில்லை என்று பொருளல்ல. புலிகள் அமைப்பின் தீரமிகு போராளிகள் புலித்தேவன், பேபி, சூசை, ஜெயம் பிரபாகரனின் வீரமகன் சார்லஸ் உள்ளிட்டு எண்ணற்ற போராளிகள் இப்போரில் உயிர் நீத்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இழப்பு என்றால் இவை எல்லாமும் மாபெரும் இழப்பு தான். பிரபாகரன் உயிரைப்பற்றி கவலைப் படுகிறோம். அக்கறைப்படு கிறோம் என்றால் இந்த எல்லா உயிர் களைப் பற்றியும் தான் கவலைப் படவேண்டும். அக்கறைப்பட வேண்டும்.

ஆகவே பிரபாகரனை மட்டும் மையப்படுத்தி அதுபற்றியே பேசிக் கொண்டு அதுபற்றிய ஆராய்ச்சிகளி லேயே மூழ்குவதை விடுத்து வேறு நோக்கில் நாம் சிந்திக்க வேண்டும். துருப்பிடித்த வெறும் ஒரு கைத் துப்பாக்கியில் தொடங்கிய விடுதலைப் புலிகளின் போராளி இயக்கம் தரைப் படை, நீர்ப்படை, வான்படை என முப்படையும் கொண்டு வலிமை மிக்க மரபு சார் ராணுவமாக மாறி ஒரு பதி னைந்து ஆண்டுகளுக்குமேல் ஆட் சியை, தமிழீழப் பகுதியில் சிவில் நிர் வாகத்தை நடத்தி தற்போது பேரழிவு களுக்கும் பின்டைவுகளுக்கும் ஆளாகி யுள்ளது.

அரும்பாடுபட்டு பயிற்சியெடுத்த மாவீரர்கள், இவர்கள் கட்டுவித்த போர்ப் படகுகள், வாங்கித் திரட்டிய ஆயுதங்கள் உருவாக்கிய விமானங்கள், என எண்ணற்ற உயிரிழப்புகளையும் பொருளிழப்பை யும் அது அதற்கான உடல் உழைப்புகளையும் இழந் துள்ளவர்கள் இப்போராட்டத்தால் தங்கள் உரிமைப் போராட்ட நோக்கில் கிஞ்சித்தாவது முன்னேற்றம் பெற்றார் களா என்றால் எதுவும் இல்லை என்பதை விடவும் ஏற்கெனவே இருந்த நிலைக்கும் மிகவும் கீழாக இப் போதைக்கு ஏற்கெனவே இருந்த நிலை மீண்டாலே போதும் என்கிற அளவுக்கு தாழ்நிலைக்கு உள்ளாகியிருக்கிறார் களே என்பதை நினைக்கத்தான் மிகுந்த வேதனையாக இருக்கிறது.

எனவே இந்த நிலையில் இருப் பவர்களை காக்கவும் அவர்கள் இழந்த உரிமைகளை மீட்கவும், நாம் முழு மையாகத் துணை நிற்க வேண்டும். இத்துடன் நாம் செய்ய வேண்டுவ தெல்லாம் எந்த இலட்சியத்தற்காக அவர்கள் போராடினார்களோ எந்த லட்சயத்திற்காக அவர்கள் உயிரிழந் தார்களோ, சொல்லொணாத் துயரங் களையும் சோகங்களையும் தாங்கி சகித் திருந்தார்களோ அந்த லட்சியத்திற்காக நாம் நம் மாலானதைச் செய்ய வேண்டும். அந்த லட்சியம் வெல்ல நாமும் பாடுபட வேண்டும் என்பது தான். 

இருப்பின் நம்பகத்தன்மை 

பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார், நலமாகத்தான் இருக்கிறார் என்று தமிழகத் தலைவர்கள் ஒரு சிலர் கூறி வரும் நிலையில், பிரபாகரன் உயிரோடு பிடிக்கப்பட்டு கடுமையான சித்திரவதைகளுக்கும் கேவலங்களுக்கும் உள்ளாக்கப்பட்டு, கோரமான முறையில் கோடாலியால் மண்டை பிளக்கப்பட்டு கொல்லப் பட்டதாக இலங்கை இராணுவத் தரப்பிலிருந்து செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன. “மனித உரிமைகளுக்கான பல்கழைக் கழக ஆசிரியர்கள்” என்னும் அமைப்பு தெரிவித்த செய்திகளாக 11-06-09 தினமணி நாளேட்டில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அடுத்து ஜூலை 1 தேதியிட்ட ஜூனியர் விகடனும் இச்செய்தியை உறுதி செய்துள்ளது. அதாவது மயக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வேதியல் குண்டுகளை வீசி, படையினரை மயக்கமடையச் செய்து, பலரை களத்திலேயே சுட்டுக் கொன்று முக்கியமான படைத் தலைவர்களை மட்டும் அவர்கள் கழுத்தில் தொங்கிய சயனைடு குப்பியை அகற்றி ராணுவ முகாமுக்குக் கொண்டு சென்று சித்திரவதை செய்தும் இழிவு படுத்தியும் சாகடித்துள்ளதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன.

இச்செய்தி உண்மையாக இருக்குமானால், ஒரு தேசிய இன விடுதலைப் போராளியின் இறுதித் தருணங்கள் இப்படியா அமைய வேண்டும் என நெஞ்சு கொதிக்கிறது. மனம் பதைக்கிறது. ஒரு இனத்தின் விடுதலைக்காக தன் குடும்பத்தையே முற்றாக அர்ப்பணித்த அந்த மாவீரனுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு நாம் எப்போது பழி தீர்ப்பது, எப்படி பழி தீர்ப்பது என்பது ஆறா வேதனையாக மனதைக் கலக்குகிறது. 

பிரபாகரனின் குடும்பம் 

பிழைப்புவாத நாற்காலி அரசியலில் வாரிசுகள் வரிந்து கட்டிக்கொண்டு ஆதிக்கம் செலுத்துவதும், தியாக அர்ப்பணிப்பு அரசியலில் சந்ததிகள் யாரும் கண்டு கொள்ளாமல் விடுவதுமே பொதுப் போக்காக இருந்து வரும் நிலையில் மொத்த உறுப்பினர்களுமே போராட்ட அரசியலில் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பம் பிரபாகரனின் குடும்பம். பிரபாகரனின் துணைவியார் மதிவதனி, கடைசிவரை கணவரோடே உடனிருந்து அவரது போராட்ட நடவடிக்கைகளுக்குத் துணை நின்றார். மூத்த மகன் சார்லஸ் அந்தோணி, வானூர்தி தொழில்நுட்ப வல்லுநரும், புலிகளின் விமானப் படையைக் கட்டமைத்தவருமான இவர், இறுதிப் போரில் களத்தில் நின்றார். மகள் துவாரகா, இளைய மகன் பாலச்சந்திரன் இவர்களும் போராடும் தந்தையோடு கடைசிவரை களத்தில் இருந்துள்ளனர். இவர்கள் அனைவருமே போரில் கொல்லப்பட்டு விட்டதாக ஒரு தகவலும், மனைவி மதிவதனியை மட்டும் வற்புறுத்தி ஏற்கெனவே வெளியேற்றி விட்டதால் அவர் மட்டும் வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக இருக்கிறார் என பிரிதொரு தகவலும் நிலவி வருகிறது. இன்னும் சிலர் இளைய மகன் பாலச்சந்திரன், மகள் துவாரகா இருவரும் கூட உயிருடன் பாதுகாப்பாகவே உள்ளனர் என்றும் கூறுகின்றனர்.

எந்த செய்தியுமே உறுதி செய்யப்படாத வரை, மாற்றி மாற்றிக் கேட்டு குழம்பிக் கொண்டிருக்கும் நிலையே தற்போது நீடித்து வருகிறது. இத்துடன் பிரபாகரனின் தந்தை 76 வயதுடைய திருவேங்கடம் வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி வேலுப்பிள்ளை ஆகியோர் இருவரும் வவுனியா அகதிகள் முகாமில் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 

நாடு கடந்த அரசு 

விடுதலைப் புலிகள் அமைப்பினர் தங்களது விடுதலை போருக்கு ஆயுதங்கள் வாங்கவும், போராட்ட மற்றும் நிர்வாகச் செலவினங்களுக்கும் கிட்டதட்ட ஒரு அரசு போல செயல்பட்டு வந்த தங்கள் கட்டமைப்பின் செலவுகளைச் சமாளிக்கவும் உலகம் முழுவதும் புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் செய்துவரும் உதவிக்கு அப்பால், உலக அளவில் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டி வந்துள்ளனர். இந்த நிர்வாகத்தையெல்லாம் தற்போது யார் கண்காணித்துக் கட்டிக் காப்பது என்பது புலிகள் அமைப்புக்குள் கேள்வியாய் இருக்க, இதுநாள் வரை புலிகள் அமைப்புக்கு உதவி வந்தவர்களையும், உதவி கிடைத்த வழி முறைகளையும் பற்றிய ஆய்வில் இலங்கை அரசு இறங்கி அதை முற்றாகத் தடை செய்யவும், அந்தந்த நாடுகளில் வாழும் புலிகள் அமைப்பின் உதவியாளர்களை அனைத்து தேசக் காவல் மூலம் கைது செய்யவும், நடவடிக்கை எடுக்கமுயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் புலிகள் அமைப்பினர் ‘நாடு கடந்த அரசு’ ஒன்றை அமைத்து போராட்டத்தைத் தொடர இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். புலிகள் வலுவோடு இருந்தபோதே இதைச் செய்திருந்தால் இதற்கு ஓர் அர்த்தம் இருந்திருக்க முடியும். தற்போது எல்லா வகையிலும் மிகப் பலவீனமாகவும், பின்னடைவாகவும் உள்ள நிலையில், இதை எங்கு நிறுவுவார்கள், யார் ஆதரவு தருவார்கள், எப்படி அதை நிர்வகிப்பார்கள் என்பதெல்லாம் கேள்வியாக இருக்கிறது. சீனாவின் பிடியிலிருந்து மீள திபெத் இந்திய மண்ணில் தர்மசாலாவில் ‘நாடு கடந்த திபெத் அரசை’ நிறுவியுள்ளது என்றால் அதற்கு முழுக்க முழுக்க இந்தியா ஆதரவு. அதனால் அது செயல்பட முடிகிறது. அதுபோல தமிழீழத்துக்கு யார் உதவுவார்கள், யார் இடம் தருவார்கள் என்பது தெரியவில்லை, இதைப் பொறுத்தே இந்த நாடு கடந்த அரசின் செயல்பாடு இருக்கும் என்று தெரிகிறது. 

போராளி அமைப்பின் வீழ்ச்சி குறித்த மதிப்பீடுகள் 

புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்கும், தோல்விக்கும் முழுக்க முழுக்க இந்திய அரசும், இலங்கை அரசுக்கான அதன் ராணுவ உதவியும்தான் காரணம் என்பதும் இந்த உதவியினால்தான் இலங்கை வரலாற்றில் எந்த அதிபரும் எட்டிப்பார்க்க இயலாத கிளிநொச்சியை ராஜபக்ஷே வந்து பார்க்க முடிந்தது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. இதற்கு அப்பால் புலிகளின் வீழ்ச்சிக்கு அரசியல் நோக்கர்கள் வேறு இரண்டு காரணங்களையும் குறிப்பிடுகின்றனர். புலிகள் கொரில்லா போர் முறையைக் கைவிட்டு நிலையான ராணுவமாகத் தங்களை மாற்றிக் கொண்டது, ராணுவ ரீதியில் தோல்விக்கு வழி வகுத்தது என்கின்றனர். இந்திய இராணுவம்n அமைதிக் காப்புப் படை என்கிற பெயரில் இலங்கை சென்றபோது, புலிகள் கொரில்லா போர் முறையில் இருந்தார்கள். இதனாலேயே வலிமை மிகு இந்திய இராணுவத்தை அவர்களால் திணறடிக்க முடிந்தது. ஆனால் தற்போது போர் முறை மாறியது அவர்களுக்கு பின்னடைவு என்கிறார்கள்.

அடுத்து, கடந்த 2005 நவம்பரில் இலங்கை அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் பிரபாகரன் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகச் செயல்பட்டதன் விளைவு மகிந்த ராஜபக்ஷே அதிபராக வழிவகுத்தது. ராஜபக்ஷே வந்ததால்தான் இந்தக் கடும் நடவடிக்கை. அல்லாது ரணில் வந்திருந்தால் இப்படி நேர்ந்திருக்காது என்பது மற்றொன்று. இதில் முதல் கருத்து, இது போர் உத்தி சார்ந்த செய்தி என்பதால் இதன்மீது நாம் கருத்து சொல்ல முடியாது. ஆனால் இரண்டாவது கருத்தைப் பொறுத்தமட்டில், இலங்கை அரசியல் என்பதே சிங்கள இனவாத அரசியல்தான் என்பதால் யார் பொறுப்புக்கு வந்திருந்தாலும் இதுதான் நேர்ந்திருக்கும் என்று தோன்றுகிறது. நோக்கர்களால் நம்பப்படும் ரணில் விக்ரமசிங்கே சார்ந்த ஐக்கிய தேசியக் கட்சி தற்போது என்ன சொல்கிறது, ‘ஈழம் என்ற எண்ணமே ஈழத் தமிழர்களிடமிருந்து நீக்கப்பட வேண்டும். யாருக்கும் அந்த எண்ணமே தோன்றாதவாறு அனைவரும் இலங்கை என்றே சொல்லும் நிலையை ஏற்படுத்த வேண்டும்’ என்கிறது. அதாவது தமிழ்நாட்டில் யாரும் தமிழன் என்று சொல்லக் கூடாது, எல்லோரும் இந்தியன் என்றே குறிப்பிடவேண்டும் என்பது போன்றதுதான் இது. எந்த சிங்களன் ஆட்சிக்கு வந்து தான் ஈழத் தமிழருக்கு என்ன கிட்டிவிடப் போகிறது. தமிழீழம் அமையாமல் ஈழத் தமிழருக்கு வாழ்வேது என்கிற நிலையில் இக்கருத்து ஏற்புடையதாக இல்லை. 

ஈழச் சிக்கலில் மலையாள ஆதிக்கம் 

ஈழத்தமிழர்கள் படுகொலைக்கும், இன்னல்களுக்கும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கையே அடிப்படைக் காரணம் என்ற போதிலும், இக்கொள்கையை செயலாக்குவதில் இனம் சார்ந்த உணர்வுகளும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இச்சிக்கலில் தமிழ் அதிகாரிகள் ஒருவர் கூட இல்லாமல் அனைவருமே மலையாளிகளாக இருப்பதும் இக்கொடுமையின் தீவிரத்திற்கு ஒரு காரணம். இந்திய அரசின் பாதுகாப்பு அமைச்சராக ஏற்கெனவே பொறுப்பு வகித்த ஏ.கே. அந்தோணி ஓர் மலையாளி. இத்துடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், வெளியுறவுச் செயலாளர் சிவசங்கர மேனன் ஆகிய இருவருமே மலையாளிகள் என்பது தெரிந்த செய்தி.

இவர்கள் அன்றி, இலங்கைக்கான ஐ.நா.வின் சிறப்புத் தூதராக இருக்கும் விஜய் நம்பியார் எனப்படுபவரும் ஒரு மலையாளி, அதோடு மட்டுமல்ல, இலங்கை அரசிடம் ஊதியம் பெற்றுக் கொண்டு, சிங்கள ராணுவத்துக்கு ஆலோசகராக இருக்கும் சதீஷ் நம்பியார் என்பவர் இவரது சகோதரராம். இப்படியிருக்க, அங்கே தமிழர், தமிழர் உரிமை, தமிழர் நலம், வாழ்வு பற்றி யாருக்கு எந்த சிந்தனை எழும். அவரவர் பிழைப்புவாதமே மேலோங்கி இருக்கும். ஆக ஈழச் சிக்கலில் தமிழர் படும் இன்னல்களுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகிறது. இத்துடன், ஈழச் சிக்கலில்தான் மலையாளிகள் ஆதிக்கம் என்றால், இந்திய அரசிலும் மலையாளிகள் ஆதிக்கம் தான் என்று ஜூ.வி. 14-06-09 இதழ் கடைசி பக்கத்தில் ஒரு மாபெரும் பட்டியலே வெளியிட்டுள்ளது.

மலையாளிகளிடம் ஒரு குணம் உண்டு. ஒரு மலையாளி ஒரு இடத்தில், ஒரு துறையில் கால் பதித்தால், தன் இனத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் அங்கு கொண்டு வந்து நிரப்பி விடுவது என்று. ஆனால் தமிழனுக்கு அந்த குணம் கிடையாது. தமிழன் ஒரு இடத்துக்கு பொறுப்புக்கு போனால் இன்னொரு தமிழன் தனக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக எவனையும் உள்ளேவிட மாட்டான். இப்படிப்பட்ட குணம் தமிழனுக்கு இருப்பதனால் தான் தமிழ் நாட்டிலேயே திருச்சி பெல், ஆவடி கனரக தொழிற்சாலைகள், தமிழக போக்குவரத்து, புதுவை அரசு நிர்வாகம் முதலான பல துறைகளில் மலையாள ஆதிக்கம் அல்லது செல்வாக்கு நீடிக்கிறது.

இப்படி, தில்லியில் முக்கியப் பொறுப்புகளில் கால் பதிக்கும் மலையாளிகள்தான், தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்களைக் கொண்டு வந்து நிரப்பி விடுகிறார்கள். இப்போதும் காத்திருப்புப் பட்டியலில் இடம் பெற்றிருப்போர் பெரும்பாலும் மலையாளிகள் எனவும், பதவிக்காலம் முடிய இருக்கும் வெளியுறவுத் துறைச் செயலாளர் சிவசங்கர மேனனுக்குப் பதில் புதிதாக பதவி ஏற்கப் போகிறவரும் ஒரு மலையாள பெண் அதிகாரிதான் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படியே போனால், இந்திய தேசியம் என்பது நாளைக்கு மலையாள தேசியமாகி விடும் போலிருக்கிறது. 

நமது கடமை 

ஈழச்சிக்கல் சார்ந்த செய்திகளை வெளியிடும் இணைய தளங்கள், போராளிகள் குறித்தும், பிரபாகரன் குறித்தும் மாறுபட்ட செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இதில் எதை நம்புவது, எதை நம்பாமல் விடுவது என்பது பலருக்கும் கேள்வியாக இருக்கிறது. இந்நிலையில் நாம் செய்ய வேண்டுவது, இச்செய்திகளின் நம்பகத் தன்மை பற்றிய ஆய்வுகளில் இறங்கி நம் நேரத்தை, உணர்வுகளை பாதிப்புக் குள்ளாக்கிக் கொள்ளாமல், இதைக் கடந்து முன்னேறும் திசையை நோக்கி நாம் கவனம் செலுத்த வேண்டும். இப்படி நோக்க நம் முன்னுள்ள கடமைகள் முக்கியமாக மூன்று. ஒன்று இன்று ஈழத்தில் அகதிகள் முகாமில், விலங்குகளிலும் கேவலமாக அவல நிலையில் உயிர் பிழைத்து வரும் ஈழத் தமிழர்கள், தங்கள் சொந்த இல்லங்களையும், நிலங்களையும் அடைந்து மறுவாழ்வு தொடங்க, மீண்டும் அவர்கள் இயல்பு வாழ்வு வாழ , நாம் உறுதியோடு குரல் கொடுக்கவேண்டும்.

அடுத்து, உலகின் வேறு எந்த விடுதலைப் போராட்ட இயக்கத்தை விடவும் பலமிக்க, உறுதி மிக்க புலிகள் அமைப்பு இன்று, வேறு எந்த விடுதலை இயக்கமும் சந்தித்திராத பின்னடைவு களுக்கும், இழப்புகளுக்கும் ஆளாகியுள்ளது. இந்நிலையில் இந்த இயக்கத்தை மேலும் பலவீனப் படுத்தவும் இயக்கத்திற்குள் பிளவை ஏற்படுத்தவும் இலங்கை அரசுடன், சர்வதேச ஆதிக்க சக்திகளும் திட்டமிட்ட சதி வேலைகளில் ஈடுபட்டுள்ளன. நாம், இந்த சதித் திட்டத்தை உணர்ந்து இதை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி, போராளி அமைப்பின் ஒற்றுமையை வலுவைப் பாதுகாக்கவும் நாம் நம்மாலியன்றதைச் செய்ய வேண்டும்.

இத்துடன், ஈழப் போராட்டத்தின் இழப்பில், பின்னடைவுகளில் நாம் மனம் சோராத, இருக்கும் மக்களைக் காக்க, அவர்களது உரிமைகளை மீட்க, அவர்கள் நடத்தும் போராட்டங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்க, இதற்கான நம் உரிமைகளை மீட்க, பாதுகாக்க, நாம் உறுதியோடு தொடர்ந்து போராட வேண்டும். இதில் சலித்துப் போன பழைய போராட்ட முறைகளிலேயே, சும்மா சம்பிரதாயமான போராட்டங்களாக நடத்திக் கொண்டிராமல், புதிய புதிய போராட்ட வடிவங்களை, ஆட்சி யாளர்களுக்கு ஆதிக்கங்களுக்கு நெருக்கடி கொடுக்கும் போராட்ட வடிவங்களைத் தேர்ந்தெடுத்து புதிய உத்வேகத்துடனும், போராட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும் புதிய வழிகளில் போராட வேண்டும். 

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் 

ஈழச் சிக்கல் தீவிரமடைந்த தேர்தலுக்கு முந்தைய நாள்களில் உருவாக்கப்பட்ட இ.த.பா.இ. வின் பணிகள் தொடரப்பட வேண்டும். தேர்தலுக்கு முந்தைய அந்த இயக்கம் அதே கட்டமைப்பில் தற்போது இல்லை என்ற போதிலும், அதை மறு சீரமைப்பு செய்ய வேண்டும். முதலாவதாக, தேர்தல் சூழல்களினால் இதிலிருந்து விலகிப் போனவர்களை மீண்டும் இதில் ஒருங்கிணைக்க முயலவேண்டும். இத்துடன் புதிய சக்திகளை இதில் சேர்க்கப் பார்க்க வேண்டும். எக்காரணம் பற்றியாவது இவை இயலாத பட்சத்தில் இருக்கிற சக்திகளையாவது மீண்டும் ஒன்றுகூட்டி இயக்கத்தை உறுதிப்படுத்த வேண்டும். இப்படி உறுதிப்படுத்தி ஈழ மக்களைப் பாதுகாக்கத் தொடர் போராட்டங்கள் நடத்த வேண்டும்.

அதாவது எந்த சூழலிலும் எந்த நெருக்கடியிலும் தமிழீழம் என்கிற தணல் அணையாது, பாதுகாத்து அதை முன்னெடுத்துச் செல்லவும் , இப்படி முன்னெடுத்துச் செல்வதுதான் தமிழ்த் தேச எழுச்சிக்கும் உரமாகவும் ஊட்டமாகவும் அமையும் என்பதை உணர்ந்தும் அதற்குப் பாடுபட வேண்டும். திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். 

தமிழீழ மக்களின் எதிர்காலம் 

தமிழீழ மக்களும் தமிழீழ விடுதலைப் போராட்டமும் 25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மிகவும் பின்னடைவான, மோசமான நிலையே தற்போது ஏற்பட்டுள்ளது. தமிழீழ மக்கள் மேலும் இழிவாக நாலாந்தரக் குடிமக்களாக நடத்தப்படும் நிலையே இன்று அவர்களுக்கு நேர்ந்துள்ளது. இப்போதே, போரினால் தங்கள் இருப்பிடத்தை, வீட்டை விட்டு வந்தவர்கள், வீடுகளில் சிங்களவர் குடியேற்றப்பட்டு வருவதாகவும் நிலத்தை விட்டு வந்தவர்களெல்லாம், தங்கள் சொந்த இடத்தை அடையாளம் காண முடியாதவாறு நிரவி யந்திரங்களால் சமப்படுத்தப் பட்டு விட்டதாகவும், செய்திகள் வெளி வருகின்றன.

ஆக, தமிழர் தாயகம், தமிழீழம் என்கிற ஒன்று இல்லாமலாக்குவதே, அங்கும் சிங்களப் பெரும்பான்மையை உருவாக்குவதே இலங்கை அரசின் நோக்கமாக இருப்பது தெரிய வருகிறது. இந்நிலையில் ஈழமக்கள் கடும் இன்னல்களையும், இடுக்கண்களையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் இதை எதிர்த்த அம்மக்களின் உள்ளக்குமுறல் தொடரும் என்பதும் கண்கூடு. அதாவது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில், போராளிகளும், மக்களும்தான் பின்னடைவுக்கு ஆளாகியிருக்கிறார்களே தவிர, தமிழீழக் கோரிக்கையோ, அதற்கான புறக் காரணங்களோ பின்னடையவில்லை. மாறாக அது முன்னைக் காட்டிலும் வெகு தீவிரமாக எழும். எழுவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது என்பதே இதன் பொருள்.

தமிழீழப் போராளிகள் தங்களுக்கு பின்னடைவு ஏற்பட்டு வருவதை உணர்ந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும் போராட்டத்தைத் தொடரவும், ஏற்கெனவே பல குழுக்களாகப் பிரிந்து வன்னி வனப்பகுதிக்குத் தப்பிச் சென்றுள்ளதாகவும், இவர்கள் கொரில்லாத் தாக்குதல் வழி இப் போராட்டத்தைத் தொடர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. சமீபத்தில் யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சி பகுதியிலும் சிங்கள ஆயுதக் கிடங்கின்மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதை உறுதிப்படுத்துகிறது.

ஆகவே, இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டுவதெல்லாம் பிரபாகரன் இருக்கிறாரா, இல்லையா என்று பட்டிமன்றம் நடத்தாமல், அவர் இருந்தால் நல்லது - இல்லாவிட்டாலும் வேறு வழியில்லை என்கிற அளவில் மனதைத் தேற்றி இந்தப் போராட்டத்தைத் தொடர்வதற்கான அல்லது தொடரும் போராட்டத்தை ஆதரிப்பதற்கான வழி வகைகளைப் பற்றி நாம் யோசிக்கவேண்டும். எனவே, கடந்த கால அனுபவங்களி லிருந்து நாம் பாடம் கற்று சும்மா “தமிழீழம் மலர்ந்தே தீரும்” புலிகள் வென்றே தீருவார்கள்” என்று வெத்துவேட்டு பட்டாசு வசனமெல்லாம் பேசி கைத்தட்டல் வாங்கிக் கொண்டோ, கைத்தட்டி மகிழ்ந்து கொண்டோ இருக்கும் போக்கைக் கைவிட்டு போராட்டத்தின் உண்மையான நிலை என்ன என்பதை மக்களுக்குச் சொல்லி தமிழக மக்களது உணர்வைத் தட்டி எழுப்பவேண்டும்.

தமிழீழ விடுதலைக்காக தமிழக மக்களிடையே தட்டி எழுப்பப்படும் உணர்வு வெறும் தமிழீழ விடுதலைக்கானது மட்டுமல்ல, மாறாக தமிழ்த்தேச எழுச்சிக்கும் விடுதலைக்கும் கூட இதுவே அடிப்படை என்பதை உணர்த்தி தமிழக மக்கள் நலன் காக்கவும் தமிழக உரிமை காக்கவும் அவர்களைக் களம் காணப் பயிற்றுவிக்கவேண்டும். அதற்கு நிலவும் சூழலை நல்ல தொரு வாய்ப்பாக நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். 

போராளிகள் அமைப்பைப் பிளவுபடுத்த முயற்சி 

பிரபாகரன் உயிரோடு பிடிபட்டார், சித்திரவதைகளுக்கும், இழிவுகளுக்கும் உள்ளாக்கப்பட்டார் என்கிற செய்திகள் வரும்போது, ஒரு தேசிய இன விடுதலைப் போராட்ட இயக்கம், அதன் முன்னோடித் தலைவர்கள் இந்த அளவுக்கு எச்சரிக்கையில்லாமல் இருந்து எதிரியிடம் மாட்டுவார்களா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே இறுதி உண்மைகள் வரும்வரை, நாம் எதையும் நினைத்து குழம்பிக் கொள்ளவேண்டாம் என்றே தோன்றுகிறது.

புலிகள் இயக்கத்தையும் அதன் முன்னணித் தலைவர்களையும் தாற்காலிகமாக வீழ்த்திவிட்டதில் ஆதிக்கச் சக்திகள், தற்போது எஞ்சி இருக்கிற இயக்கத்தையும், அதன் தலைவர்களையும் பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இதில் அனைத்து தேச உளவு அமைப்புகளை விடவும், இந்திய ‘ரா’ உளவுத்துறையின் பங்கு அதிகமிருப்பதாக பேசப்படுகிறது. பிரபாகரன் உயிரோடு உள்ளாரா, இல்லையா என்பதில், இயக்கத்தின் நிதிநிலையை யார் நிர்வகிப்பது என்பதில், பிரபாகரனுக்குப் பிறகு எந்தப் பாதையைப் பின்பற்றுவது, எப்படிப்பட்ட அரசியல் தீர்வை ஏற்பது என்பதில் எதிரும் புதிருமான கருத்துகளை வைத்து புலிகள் அமைப்புக்குள் பிளவை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். இப்படிப்பட்ட முயற்சிகள் பற்றியும் நாம் மக்களிடையே விழிப்பூட்ட வேண்டும். போராளிகள் ஒற்றுமை காத்து இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல நாம் நம்மாலான பங்களிப்பைச் செய்ய வேண்டும். 

உண்மையை உணர்த்துவா? உசுப்பேற்றுவதா? 

போராளிகள் இவ்வளவு இழப்புக்கும் பின்னடைவுக்கும் ஆளான பின்னும், அப்பாவி மக்கள் பல்லாயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டு, இன்னமும் வதைமுகாம்களில் வாடி வதங்க, அம்மக்களுக்கு விடிவு கிட்டாத நிலையிலும், நம்முடைய தலைவர்கள் சிலர் இன்னமும் ‘புலிகள் வென்றே தீருவார்கள்’ ‘தமிழீழம் மலர்ந்தே தீரும்’ என்று மக்களை வெற்று உசுப்பேற்றிக் கொண்டிருக்க, மக்களும் வெகு உற்சாகமாக இதற்கு கைதட்டி மகிழ்ந்து கொண்டிருக்கும் கொடுமை நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றில்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் தமிழீழம் மலர்ந்தே தீரும் என்பது உண்மைதான். ஆனால் தற்போது ஏற்பட்டிருக்கிற நெருக்கடியிலிருந்து மீண்டு, தேறி, இயக்கம் மீண்டும் தன்னை பலப்படுத்திக் கொண்டு போராடி, அதில் வெற்றி பெற்றால்தானே தமிழீழம். அதற்கு இன்னும் எவ்வளவு காலம் பிடிக்கும், எவ்வளவு உழைப்பு, அர்ப்பணிப்பு தேவைப்படும். அதைப் பற்றியெல்லாம் பேசாமல், சும்மா இப்படி வெத்துவேட்டு பட்டாசு வசனங்கள் பேசிக் கொண்டிருப்பதால் என்ன பயன்?

இழப்பைக் கண்டு மக்கள் சோர்ந்து போகாமல், அவர்களுக்குத் தெம்பூட்டும் நம்பிக்கையூட்டும் வகையில் தலைவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்பது சரிதான். ஆனால், உண்மை நிலையைச் சொல்லி மக்களது ஆவேசத்தைத் தூண்டி, அவர்களை எழுச்சி கொள்ள வைத்து, அதன் மூலம் அவர்களைப் போராட வைப்பதற்கு பதில், இந்த மாதிரி வெற்று உசுப்பேற்றல்களால் ஒரு பலனும் விளையாது. மக்களை உற்சாகப் படுத்துவது என்பது வேறு. உசுப்பேற்றுவது என்பது வேறு. இத்தனை காலமும் தான் இத்தலைவர்கள் மக்களை உசுப்பேற்றி, வெறும் பார்வையாளர்களாக கைதட்டி ரசிக்க வைத்து வந்தார்கள். போகட்டும், நெருக்கடியான இந்தத் தருணத்திலாவது, மக்களுக்கு உண்மையைச் சொல்லி உரிய வழியைக் காட்ட வேண்டாமா, தக்கவாறு மக்களை சக்தியைத் திரட்டி வழி நடத்த வேண்டாமா...

தயவு செய்து, இத்தலைவர்கள் கூட்டங்களுக்கு வரும்முன் எதைச் பேசி கைதட்டல் வாங்கலாம் என்று சிந்திப்பதைக் கைவிட்டு, நாம் ஏற்றுக் கொண்டுள்ள இலட்சியத்தை விளக்கி மக்கள் ஆதரவை மேலும் எவ்வாறு திரட்டலாம், அவர்களை எவ்வாறு விழிப்பூட்டலாம், அணி திரட்டலாம் என்கிற நோக்கில் அதற்கான செய்திகளைத் தகவல்களைச் சிந்தித்து திரட்டி அதை மக்களுக்குச் சொன்னால் போதும். அதுவே மக்களுக்கும், இயக்கத்திற்கும் இத்தலைவர்கள் ஆற்றவேண்டிய கடமையும்.

Pin It