பழ.நெடுமாறன் 27.06.2012 அன்று ‘தினமணி’ ஏட்டில் ‘கருணாநிதியின் கபட நாடகம்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்கு 2012 சூலை 16 ‘கருஞ்சட்டைத் தமிழர்’ இதழில் பதிலளித்துள்ளார் சுப.வீரபாண்டியன். அவர் இவ்வாறு தமது மறுப்பைத் தொடங்குகிறார்.

nedumaran_300"ஆட்சியும் அதிகாரமும், மத்திய அரசின் செல்வாக்கும் இருந்த காலத்தில் எல்லாம், ஈழத்தமிழர்களுக்காகத் தனது சுட்டு விரலைக் கூட அசைக்க அவர் (கலைஞர்) தயாராக இருந்ததில்லை என்பதுதான் வரலாற்று உண்மை" - பழ. நெடுமாறன், "கருணாநிதியின் கபட நாடகம்" கட்டுரை - தினமணி – 27.06.2012.

"தி.மு.க. ஆட்சிக் காலத்தில்தான் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி எல்லா வசதிகளும் செஞ்சு கொடுத்தா. விடுதலைப் புலிகள் இங்கே பெட்ரோல் பங்க் நடத்துனா. கோயம்புத்தூரில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கிற தொழிற்சாலை வெச்சிருந்தா. எல்.டி.டி.ஈ.க்கு யூனிஃபார்ம் தைச்சுக் கொடுத்தா. இதைப்பத்தி எல்லாம் எனக்கு ரிப்போர்ட் வந்தது. நான்தான் சந்திரசேகர்கிட்ட எடுத்துச் சொல்லி, 'கருணாநிதி தீவிரவாதிகளுக்கு சப்போர்ட்ட பண்றா, அவா அரசைக் கலைச்சிடுவோம்னு' சொன்னேன்." - சுப்பிரமணியன் சுவாமி, 'விகடன் மேடை' - வாசகர் கேள்விகள் பகுதி, 04.07.2012

மேற்காணும் இரு கூற்றுகளும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறானவையாக உள்ளன. ஈழ மக்களுக்காகத் தன் சுட்டு விரலைக் கூடக் கலைஞர் அசைக்கவில்லை என்கிறார் ஒருவர். தன் ஆட்சி அதிகாரம் முழுவதையும் அவர்களுக்காக அவர் பயன்படுத்தினார் என்கிறார் மற்றொருவர்.

இவை இரண்டும் எதிரெதிர்க் கருத்துகளாக இருந்தாலும், கருத்துகளை வெளியிட்டுள்ள இருவருக்கும் நோக்கம் ஒன்றுதான். கலைஞரைத் தாக்கி அழிக்க வேண்டும் என்பது மட்டுமே இருவரின் விருப்பமும் ஆகும். எதிரெதிர்த் திசைகளில் நின்று கலைஞரைத் தாக்கும் இருமுனைத் தாக்குதல் இது.

ஒருவர் ஈழ விடுதலையை முழுமையாக ஆதரிப்பவர். மற்றவர் ஈழ விடுதலையை முழுமையாக எதிர்ப்பவர். ஆனால் அவர்கள் இருவரும் ஒருவரோடொருவர், மோதிக்கொள்ள மாட்டார்கள். இருவரும் இணைந்து கலைஞருடன் மட்டுமே மோதுவார்கள். இது வெகுநாள்களாக நடந்துகொண்டிருக்கும் குள்ளநரித்தந்திரம்.

இவ்வாறு கருஞ்சட்டைத் தமிழர்க் கட்டுரையில் சுப்பிரமணியன் சாமியைக் கொண்டு போய் நெடுமாறனுடன் ஒப்பிட்டு மனங்குளிர்கிறார் சுபவீ. குள்ளநரித் தந்திரம் செய்பவராக நெடுமாறனைக் கடுமையாகச் சாடுகிறார்.

கலைஞரோடு இவ்வளவு நெருங்கிப் பழகிய பிறகுமா இப்படிக் கூறுவது? சுப்பிரமணியன் சாமி அல்லவா கலைஞரிடம் நரித் தந்திரம் பயில வேண்டும்? சூழ்ச்சியிலும் சந்தர்ப்பவாதத்திலும் கலைஞரை மிஞ்ச எவரும் உண்டா என்ன?

கலைஞர் பற்றி ஈழப் பகைவர் சுப்பிரமணிய சாமி கருத்தை நம்மையும் நம்பச் சொல்கிறார் சுபவீ. நல்லது! ஜெயலலிதாவின் விடுதலைப் புலி ஆதரவு குறித்து அவரது மனங்கவர்க் கலைஞரே வெகு காலம் சொல்லி வந்த கருத்தை சுபவீ நம்ப மறுப்பாரா என்ன?

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு அளித்ததால்தான் திமுக ஆட்சியைத் தாம் கலைத்ததாக ஆனந்த விகடன் இதழில் சுப்பிரமணியன் சாமி பீற்றிக் கொண்டதைக் கருஞ்சட்டைத் தமிழரில் எடுத்துப் போட்டுக் கொள்கிறார் சுபவீ. இது மட்டுமல்ல, சுபவீ முதலான கலைஞர் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்காகத்தான் அவர் தமது ஆட்சியையே 1991இல் இழந்ததாக ஒரு கதையைச் சொல்லி வருகிறார்கள். ராஜீவ் காந்தி, சந்திரசேகர், சுப்பிரமணியசாமி, ஜெயலலிதா, சோ கும்பல் விடுதலைப் புலிகளுக்குக் கருணாநிதி ஆதரவளிப்பதாகக் கூறி திமுக ஆட்சியைக் கலைப்பதற்குத் திட்டமிட்டு வந்தபோது "ஆம்! விடுதலைப் புலிகளை ஆதரிப்பது என் வரலாற்றுக் கடமை" என்று கலைஞர் என்ன வீர வசனமா பேசினார்? இல்லை, இல்லை. மாறாக சுபோத் கான்ட் சகாய் என்னும் அன்றைய உள்துறை அமைச்சரைச் சந்தித்து "நான் என்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்ததே இல்லை" என்று பதவிப் பிச்சை கேட்டு மன்றாடினார். அது மட்டுமல்ல, "உண்மையான விடுதலைப் புலி ஆதரவாளர் நானில்லை, ஜெயலலிதாதான்" எனக் கூறியதுடன் அதற்குரிய சான்றுகளையும் வழங்கினார். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ‘ஃபிரண்ட்லைன்’ இதழுக்கு ஜெயலலிதா அளித்த நேர்காணல் ஒன்றைக் கையில் வைத்துக் கொண்டு "என்னை விட ஜெயலலிதாதான் உண்மையான புலி ஆதரவாளர்" என்னும் சான்றிதழைப் பல முறை ஜெயலலிதாவுக்கு வழங்கி வந்தவர்தான் கலைஞர். கலைஞரே சொல்லியாகி விட்டது என்று ஜெயலலிதாவைத் தலைவராக ஏற்பாரா சுபவீ?

அது போகட்டும். சென்ற ஆண்டு 2011 சட்டமன்றத் தேர்தல் தோல்வி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை நேர்காணல் செய்தது ‘பாலிமர்’ தொலைக்காட்சி. 12.06.2011 அன்று நடந்த நேர்காணலில் அவரிடம் கேட்கப்பட்ட ஒரு வினாவுக்கு அவர் அளித்த விடையைப் பாருங்கள்.

நேர்காண்பவர்: ஒட்டுமொத்தத் தமிழர்களுக்கும் குரல் கொடுப்பவர் கலைஞர் எனத் தமிழகம் நம்பியிருந்த காலத்தில், ஈழத் தமிழர்களுக்கு எதிராக இவ்வளவு பெரிய யுத்தம் நடந்து லட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்ட பின்னுங்கூட அரசியல் வித்தகர் எனச் சொல்லக்கூடிய கலைஞர் தனது பதவி சுகத்துக்காக அவர்களுக்கு உதவ முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து உங்கள் பதில் என்ன?

திருமாவளவன்: அது மறுக்க முடியாத ஒரு வாதம். அதை நான் மறுத்தால் நான் திமுகவுக்கு வக்காலத்து வாங்குவது போல் தோன்றும். ஒட்டுமொத்தத்துல ஒரு சூழ்நிலைக் கைதியா அவரும் அவருடைய கட்சி சிக்கியிருக்கு. அவர்கள் எப்படிச் சூழ்நிலைக் கைதியா மாட்டியிருந்தார்கள் என்பதற்கு இப்போது ஸ்பெக்ட்ரம் தொடர்பான கைதுகள் சான்றாக உள்ளன. இவ்வகைக் கைதுகள் நடக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். இதை எதிர்பார்த்து இருந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் அப்படி ஒரு முடிவு எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கலாம். நீங்கள் சொன்ன கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.

இப்போது நடந்து முடிந்துள்ள டெசோ மாநாட்டில் கலைஞருக்கு ஜால்ரா தட்டிய திருமாவே, கலைஞர் பதவி சுகத்துக்காகத்தான் ஈழத்துக்குத் துரோகம் செய்ததாகக் கூறிய கருத்து இது. இதையாவது சுபவீ ஏற்பாரா?

கலைஞருக்கு சுப்பிரமணியன் சாமி தந்த சான்றிதழை ஏற்பதா? ஜெயலலிதாவுக்குக் கலைஞர் கொடுத்த சான்றிதழை ஏற்பதா? கலைஞருக்குத் திருமாவளவன் அளித்த சான்றிதழை ஏற்பதா? என்று சுபவீதான் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

ஐயர் ஒருவர் கலைஞருக்குத் தந்த நற்சான்றிதழ் குறித்தே புல்லரித்துப் போகும் சுபவீ அண்மையில் ஐயருக்கும் மேலான தெளிந்த ஐயங்கார் ஒருவர் கலைஞருக்கு அளித்த சான்றிதழைக் கட்டாயம் ஏற்பார் என்றே நம்பலாம்.

‘இந்து’ ஏட்டின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் 12.08.2012 அன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ‘அக்னிப் பரீட்சை’ என்னும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது நடந்த உரையாடலின் ஒரு பகுதியைப் பார்ப்போம்.

karunanidhi_200நேர்காண்பவர்: கலைஞரின் டெசோ மாநாடு எதைச் சாதிக்கும் என நினைக்கிறீர்கள்?

ராம்: கலைஞர் நியாயமான கோரிக்கைகளை ஆதரித்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஈழந்தான் இறுதித் தீர்வு எனச் சொல்பவர்களுக்கு எதிர்காலமே கிடையாது. கலைஞர் இதனை இரண்டு விதமாகப் பேசியுள்ளார். சிதம்பரம் வந்து பேசிச் சென்றவுடன் மாற்றம் வந்துள்ளதா எனத் தெரியவில்லை. ஆனால் கலைஞர் பற்றி ஒன்றை நான் சொல்கிறேன். அவர் முதலமைச்சராக இருக்கும்போது அவரது பேச்சு எவ்வளவு வலிமையாக இருந்தாலும், உணர்வுப்பூர்வமாக இருந்தாலும், அவரது நடைமுறை என்பது ரொம்ப நிதானமானது. அதே போன்றுதான் இப்போது இருக்கும் அரசும். நடைமுறையில் அவர்கள் மிகவும் நிதானமானவர்கள் (In practice they are very sober). நான் ஒரு முறை ராஜபட்சேவை நேர்காணல் செய்தபோது அவர் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரையுமே பாராட்டினார். நேரில் பேச இருவரையும் அழைப்பதாகவும் தெரிவித்தார். அந்தளவுக்கு இவ்விரு அரசுகளுமே நடைமுறையில் மிகப் பொறுப்புணர்வுடன் நடந்து கொண்டுள்ளன. நான் உண்மையாகச் சொல்கிறேன். அவர்கள் மத்திய அரசுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வந்துள்ளனர். அவர்கள் இங்கிருக்கும் சூழலைப் பார்த்துச் சில அறிக்கைகளை விடுகிறார்கள். அவ்வித அறிக்கைகளுடன் எனக்கு உடன்பாடில்லை என்றாலும் நடைமுறை என்று வந்தால் அவர்கள் மிகவும் பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனுமே நடந்து கொண்டுள்ளனர். இது உண்மை. இது ஒரு முரண்புதிர் (பேரடாக்ஸ்) கருத்தாகக் கூட இருக்கலாம். கலைஞர் என்றும் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்ததே இல்லை.

நேர்காண்பவர்: அப்படியானால் பேசுவது ஒன்று, செயல்படுவது ஒன்று எனக் கூறுகிறார்களா?

ராம்: தமிழர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டுள்ளனரே எனக் கேள்வி கேட்கும் போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசி விடுகிறார்கள். ஆனால் நடைமுறை என்று வரும் போது நிதானமாகவே நடந்து கொள்கிறார்கள். இதனை அவர் (ராஜபட்சே) நன்கு புரிந்து கொண்டார். இவர்களை இப்படிக் கையாண்டதுதான் அவருடைய வெற்றிக்கும் காரணம். இந்தியாவுடைய அழுத்தத்தை அவர் எப்படிச் சமாளிக்கப் போகிறார் என்ற பிரச்சினை இருந்தது. அதனை இவர்கள் (கலைஞரும் ஜெயலலிதாவும்) நன்கு ரிசால்வ் செய்து (தீர்த்து) கொடுத்தார்கள். அதற்குக் காரணம் இவர்கள் இங்கு நிதானமாக நடந்து கொண்டதே. மத்திய அரசும் இதனை நன்கு புரிந்து வைத்திருந்தது. இலங்கைப் போரின் கடைசிக் கட்டத்தில் இந்தியா கடைப்பிடித்தது நல்ல கொள்கை என்றே கருதுகிறேன். மத்திய அரசு, மாநில அரசு இரண்டுமே இந்தப் பிரச்சினையில் நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்.

கலைஞர் குறித்த சாமி ஐயரின் கருத்தையே சுபவீ ரசிப்பார் என்றால், ராம் ஐயங்காரின் கருத்தை "பேஷ், ரொம்ப நல்லாருக்கு" என்று பாராட்ட மாட்டாரா என்ன? கலைஞரின் நடிப்புக்கு ராஜபட்சேவே சான்றிதழ் அளித்த பிறகு மேல்முறையீடு உண்டா என்ன?

"கருணாநிதி வேட்டி கட்டிய ஜெயலலிதா; ஜெயலலிதா சேலை கட்டிய கருணாநிதி" எனத் தமிழ்த் தேசியர்கள் நீண்ட நாளாகக் கூறி வரும் கருத்துக்கு இனப் பகைவர்கள் ராமும் ராஜபட்சேவுமே இறுதிச் சான்றளித்து விட்டார்கள்.

ஈழத் தமிழர்களின் சிக்கலில்... ஜெயலலிதாவுக்குப் பல காலம் விடுதலைப்புலி ஆதரவாளர்ப் பட்டம் வழங்கி வந்தவர் கலைஞர்! இப்போது அந்தக் கலைஞருக்குப் பாராட்டுரை வாசிக்கிறார் ராஜபட்சே! கலைஞர் நிதானமாகச் செயல்பட்டதாகத் தட்டிக் கொடுக்கிறார் ராம்! கலைஞரின் நிதானத்துக்குப் பதவி சுகமே காரணம் எனப் போட்டுடைக்கிறார் திருமாவளவன்!

இப்போது சொல்லுங்கள், யாருக்கு ஆதரவு யாரோ?

(தமிழ்த் தேசம் (செப்டம்பர்-அக்டோபர் 2012) திங்களேட்டில் வெளியான கட்டுரை)

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It