seeman jaya“என்னை முதல்வராக்குங்கள்! நான் ஈழம் பெற்றுத் தருகிறேன்!” என்று மோசடியான ஒரு கோரிக்கையை 2011 சட்டமன்றத் தேர்தலின் போது முன் வைத்தார் ஜெயலலிதா. அது மோசடி என்று தெரிந்திருந்தும் கூட பலர் ஏமாறுவதற்குத் தயாராக இருந்தனர்.

அன்று அவர்களுக்குத் தேவையாக இருந்தது ஈழமல்ல, 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் கொல்லப்பட்ட ஈழமக்களுக்கு ஆதரவாக ஏதேனும் ஒர் நல்லது நடந்துவிடாதா என்கிற ஏக்கத்திற்கான ஆறுதல்.

அதனால்தான், ஈழப்போர் உச்சத்திலிருந்த போது, “போரென்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் (சண்டையில கிழியாத சட்டையா) என்று அடாவடியாக பதில் கூறிய பார்ப்பன ஃபாஸிஸ்ட் ஜெயலலிதாவையே நம்பும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.

இதையே சாக்காக வைத்து கட்சி கட்டக் காத்திருந்த போலி தமிழ்த்தேசியவாதி சீமான் “இலை மலர்ந்தால் ஈழம் மலரு” மென்று நாகூசாமல் பொய்யுரைத்தார். இலை இரண்டு முறை மலர்ந்துவிட்டது. ஆனால் ஈழம் எங்கே எனக் கேட்டால் பதில் சொல்லுமளவிற்கு அவர் நாணயமானவருமில்லை.

ஒரு பெரும் சோகம் நடந்து முடிந்திருக்கிறது. அதைப் பயன்படுத்தி தங்கள் அரசியல் லாபத்தை தேடிக்கொண்ட இந்தக் கூட்டத்தை என்னவென்று சொல்வது? விபத்தில் உடல் சிதறிக்கிடப்பவர்களுக்கு மத்தியில் அவர்களைக் காப்பாற்றுவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அவர்கள் காதில் கழுத்தில் போட்டிருக்கும் நகைகளைப் பறிக்கும் திருட்டுக்கூட்டதிற்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

ஆட்சியமைத்த உடன் தனி ஈழம் அமைவது குறித்து சட்டசபையில் பேசினார் ஜெயலலிதா. ஆரம்பம் முதல் இறுதிவரை ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் எதிர்த்துவந்த அவரை ‘ஈழத்தாய்’ என தலையில் வைத்துக் கொண்டாடினார் சீமான்.

அத்தனையும் ஒரு நாடகம் போல் காட்சிகளாக நம் கண்முன் விரிகின்றன. இந்த மோசடிக்காரர்கள் தங்கள் அற்ப அரசிய நலனுக்காக ஈழமக்களின் துயரங்களைச் சொல்லி எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றி இருக்கின்றனர்.

தன்னை ஓர் நல்ல விலைக்கு விற்றுக்கொள்ள வேண்டும். அதற்காக ஏதாவது ஒன்றைச் சொல்லி கடைகட்ட வேண்டும் என்று அரசியல் களத்தில் நின்ற சீமானுக்கு ஈழப் பிரச்சனை வசதியாகிப் போனது. ஈழப்போரில் கொன்று குவிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் மீதான இளைஞர்களின் எழுச்சியை தனது அரசியல் தேவைக்காக மடைமாற்றம் செய்தார் அவர்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தேவபுருசனாக தமிழ்மக்களின் ஜீவரட்சகனாக போற்றும் வேலையைச் செய்தார்.

ஒரு தேவனிருந்தால் அங்கு சாத்தான் வேண்டுமல்லவா?. ஒரு ஹீரோ இருந்தால் அங்கு வில்லன் வேண்டுமல்லவா? இந்த நியதியின்படி இனத் துரோகி என்று முத்திரை குத்தப்பட்டார் கலைஞர்.

ஈழப் போர் இறுதி கட்டத்தில் இருந்த போது தமிழக முதலமைச்சராக இருந்த கலைஞர் பதவி விலகி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை என்பதே பொதுவான குற்றச்சாட்டு. அவர் பதவிவிலகுவதால் மட்டும் போர் நின்றுவிடுமா? அது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல, இங்குள்ள தமிழர்களுக்கும் ஏதாவது நன்மை தருமா என்றெல்லாம் பகுத்துப் பார்க்குமளவிற்கு அன்றைய சூழல் இல்லை.

ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி தி.மு.க.வை பதவிப்பறிப்பு செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருந்த பார்ப்பன அதிகார வர்க்கத்திற்கும், அவர்களின் அடிபொடிகளுக்கும் இந்தக் கோரிக்கை வசதியாக இருந்தது. ஆனால் கலைஞர் அதைச் செய்யாததால், அவரைத் துரோகியாக

பொதுப்புத்தியில் கட்டமைக்கும் வேலையைச் செய்தனர். அதில் சீமானுக்கும், இன்னபிற ஈழ ஆதரவாளர்களுக்கும் பெரிய பங்கு இருந்தது.

உண்மைக் குற்றவாளியான ராஜபக்சேவையோ இலங்கையின் அதிகார வர்கத்தையோ எதிர்த்து அரசியல் செய்வதற்கு திராணியற்ற இவர்கள்தான் தங்களது எளிய இலக்கான தி.மு.க.வையும் கலைஞரையும் இழித்தும் பழித்தும் பேசி அரசியல் பிழைப்பு நடத்துகின்றனர். இது எவ்வளவு மோசடியானது என்பதைக் கூட அறியாதபடி இளைஞர்கள் பலரை நம்பவைத்துத் தன்னோடு அணிதிரட்டி வைத்திருக்கிறார் சீமான்.

10 ஆண்டுகாலம் பலநூறு மேடைகள் ஆயிரக்கணக்கான காணொளிகள் என எல்லாவற்றிலும் பரப்புரை செய்ததின் விளைவு இன்று சில இளைஞர்கள் பிரபாகரனை “எங்கள் குலசாமி” என்று பதிவிடுவதைப் பார்க்கிறோம். தான் பூசாரியாக வேண்டும் என்பதற்காக பிரபாகரனை சாமியாக்கிய பெருமை சீமானையே சேரும்.

அரசியல் என்றால் என்ன? சித்தாந்தம் என்றால் என்ன? எது மக்களுக்கான அரசியல்? என்பதுபற்றிய எந்த அடிப்படைப் புரிதலுமற்று, நாயக வழிபாட்டையே இன்றும் அரசியலென்று கருதும் இழிநிலைக்கு இவரே காரணம்.

முன்பு திரையில் வசனம் பேசி நடிக்கும் நடிகர்கள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றினர். இன்று மக்களுக்கு ஒரு ரியாலிட்டி தேவைப்படுகிறது. திரைப் பிம்பத்தைப் பார்த்து ஏமாறுவதற்கு அவர்கள் தயாராக இல்லை. அதனால் ஓர் ஆயுதம் ஏந்திய ரியல் ஹீரோவாக பிரபாகரன் முன்நிறுத்தப்படுகிறார்.

தமிழக அரசியலிலும் தமிழக மக்களின் வாழ்விலும் எந்தப் பெரிய நன்மைகளையும் ஏற்படுத்திவிடாத, எந்தவித சித்தாந்த அடிப்படையும் அற்ற பிரபாகரனை ஒட்டுமொத்த தமிழினத்தின் ஒற்றை அடையாளமாக நிறுவுவதன் மூலம், தன்னை அவரது பிரதிநிதியாக, அடுத்த தலைவனாக முன்னிறுத்திக்கொள்ள முனைகிறார் சீமான்.

பிரபாகரனை நாயக வழிபாடு செய்வது என்பதில் சில பெரியாரிய குழுக்களும் ஒன்றுபடுகின்றனர். அதனால்தான் அவர்களுக்கு பெரியாரைத் தொடர்ந்து பெரியாரியக் கருத்துக்களை அரசு அதிகாரத்தோடு நடைமுறைப் படுத்திய அண்ணாவோ, கலைஞரோ கண்ணுக்குத் தெரிவதில்லை.

கைகளில் துப்பாக்கி ஏந்தி ராணுவ உடைதரித்து ஒர் ஆயுதப் போராளிக்கான தோற்றத்தில் இவர்கள் இல்லாமல், எல்லோரும் அணுகும்படி எளிய மனிதர்களாக இருந்தது இந்த விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு போதுமானதாக இல்லை.

எதிர்கருத்துக் கொண்டோரை அடக்கி ஒடுக்குகிற ஜெயலலிதாவின் பாசிசப் போக்கை கையிலெடுக்காமல் அமைதிகாத்ததன் விளைவு தமிழகத்திற்காகவும் தமிழினத்திற்காவும் தனது வாழ்நாளின் இறுதிவரை உழைத்த கலைஞரை, ஈழ மக்களின் நலனில் ஒரு தகப்பனைப்போல் பெரும் பொறுப்புணர்வோடு நடந்து கொண்ட கலைஞரை, சிறிதும் கூச்சமின்றி இனத்துரோகி என்று இவர்களால் எளிதில் குற்றம் சாட்ட முடிந்தது.

1990ல் ஈழம் சென்று திரும்பிவந்த இந்திய அமைதிப்படையை அன்று முதல்வராக இருந்த கலைஞர் வரவேற்கவில்லை. இதனைத் தொடர்ந்து கலைஞர் அரசு 1991 தொடக்கத்தில் கலைக்கப்பட்டது.

ராஜீவ் கொலையில் தி.மு.க.வும் அதன் தலைவர் கலைஞரும் எல்.டி.டி'க்கு ஆதரவாக இயங்கினர் என்று பழி சுமத்தப்பட்டது. அன்று ஏராளமான தி.க, மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த ஈழ ஆதரவாளர்களின் உடைமைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

இப்படி பல முறை ஈழமக்களுக்காக அவர்களின் நலனில் அக்கறை கொண்ட ஒரே காரணத்திற்காக வலிகளையும் வேதனையையும் சுமந்தவர் கலைஞர்.

ஈழத்தைக் காரணம் காட்டி கலைஞரின் அரசு கலைக்கப்பட்டபோது அதில் லாபமடைந்தவர்கள் பார்ப்பனியத்தின் சேவகர்களான எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா'வும் தான்.

இதன் உச்சகட்டமாகக் கடந்த 2011இல் ஈழப் படுகொலையை காரணம் காட்டி ஆட்சிக்கு வந்தார் ஜெயலலிதா. பத்தாண்டுகால அ.தி.மு.க. ஆட்சி ஈழத் தமிழர்களுக்கு எந்தவகையிலும் நன்மை பயப்பதாக இல்லை. மாறாக இங்குள்ள தமிழர்களின் வாழ்வை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டது.

6 ஆண்டுகள் ஜெ.வும் அவரது மரணத்திற்குப்பின் 4 ஆண்டுகள் அவரது அடிமைகளும் ஆண்டதன் விளைவு, மாநில உரிமைகள் அனைத்தையும் ஒன்றிய அரசிடம் அடகுவைத்துவிட்டு கெஞ்சிக் கூத்தாடும் நிலைக்கு இழுத்து வந்து நிறுத்திவிட்டது. இக்காலகட்டத்தில் பார்ப்பனிய முதலாளித்துவ கூட்டுச் சதிக்கு உறுதுணையாக, பொதுமக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் ஏராளம்.

ஈழத்தில் சிங்கள இனவாதத் தாக்குதல்கள் நடைபெற்ற போது அதற்கு எதிராக ஏதும் நம்மால் செய்ய இயலாத போதும், உணர்ச்சிவசப் படவும் அவர்ளுக்காக கண்ணீர் சிந்தவும் நாமிருந்தோம். ஆனால் அதன் தொடர்ச்சியாக கடந்த 10 ஆண்டுகளில் நாம் பட்ட துயரங்களுக்கு ஆறுதல் சொல்லக்கூட நமக்கு யாருமில்லை.

இந்நிலையில்தான் ஈழப்போரை காரணம்காட்டி தி.மு.க'வையும் தமிழக மக்களையும் வஞ்சித்த சீமான் மீது ஒரு தீராத கோபம் மேலெழுகிறது. எந்த ஆயுதத்தால் நம்மை வீழ்த்தினார்களோ அதே ஆயுத்ததை நாமெடுப்போம் என்கிற யுத்தியில் விடுதலைப்புலிகளையும் அவர்களது தலைவர் பிரபாகரனையும் தாக்குகின்றனர் சில திமுக ஆதரவாளர்கள்.

உருவ எள்ளல் செய்வது, தரம்தாழ்ந்த விமர்சனங்களை முன்வைப்பது எனத் தவறான முடிவுக்கு வருகின்றனர். இது நல்ல விளைவுகளைத் தருமென்று நம்பிக்கையில்லை. கடந்த 10 வருடங்களாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மனதில் கட்டி எழுப்பப்பட்டுள்ள கற்பனை பிம்பத்தை வெறும் அவச் சொற்களை எறிவதன் மூலம் உடைத்துவிட முடியாது.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைக்கொல்லுங் காழ்த்த விடத்து.

என்கிறார் வள்ளுவர். (குறள் 879)

இன்று ‘பர்னிச்சர்’ உடைக்கப் போகிறோமென்று அவதூறு பேசுவது பர்னிச்சரை உடைக்குமா அல்லது நமது கைகளைப் பதம் பார்க்குமா என்பதை தம்மை தி.மு.க. ஆதரவாளர்கள் என்று சொல்லிக்கொண்டு சங்கிகளைப்போல் இயங்கிக்கொண்டிருக்கும் அறிவுஜீவிகள் யோசிக்க வேண்டும்.

உண்மையில் இன்று நாம் செய்ய வேண்டியது என்ன? ஈழத் தமிழர்களுக்காகவும், இங்குள்ள தமிழர்களுக்காகவும், தி.மு.க.வும், கலைஞரும் செய்துள்ள அரும்பணிகளை, வெகுசன மக்களிடம் கொண்டுசெல்வது, சிங்கள இனவெறி அரசால் வஞ்சிக்கப் பட்ட ஈழமக்களுக்கு சர்வதேச சமூகதில் நீதி கிடைப்பதற்கான பணிகளைச் செய்வது, சுய லாபத்திற்காக பிரபாகரனை தெய்வமாகக் கட்டமைத்து, தி.மு.க.வையும் கலைஞரையும் வசைபாடும் சீமானுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் உரிய விதத்தில் பதிலடிகொடுப்பது. இவைதான். மாறாக தம்பிகளுக்கு பதிலளிக்கிறோமென்று ஆதரவு சக்திகளையும் சேர்த்து வசைபாடுவது எந்த விதத்திலும் பயனளிக்காது.

- சுமன் கவி

Pin It