ஆழம் இதழில் வெளிவந்த, திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியனின் நேர்காணல்
கால் நூற்றாண்டாக முடங்கிக் கிடந்த டெசோவை மீண்டும் எழுப்பியதற்கு என்ன காரணம்?
ஈழப்போராட்டம் இதுவரை மூன்று கட்டங்களைச் சந்தித்திருக்கிறது. முதல் கட்டம், தந்தை செல்வா போன்றோர் முன்னின்று நடத்திய அறவழிப் போராட்டம். அதன் தொடர்ச்சியாக, விடுதலைப் புலிகள் உள்ளிட்ட போராளி இயக்கங்கள் நடத்திய ஆயுதப் போராட்டம் என்பது இரண்டாவது கட்டம். ஐ.நா. அவையின் மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மூலம் தமிழீழக் கோரிக்கைக்கு சர்வதேச கவனம் கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, ஈழத் தமிழர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, ஈழப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று உலக நாடுகளை வலியுறுத்தும் கட்டத்துக்கு இப்போது வந்திருக்கிறோம். இது ஈழப்போராட்டத்தின் மூன்றாவது கட்டம்.
முதல் இரண்டு கட்டங்களில் தமிழீழம் என்பது இலங்கையின் சிக்கலாக மட்டும் பார்க்கப்பட்டது. தற்போது அது சர்வதேச சிக்கல் என்று உணரப்பட்டு உள்ளது. சர்வதேச சிக்கல் என்று ஏன் சொல்கிறேன் என்றால், இறுதி யுத்தம் என்பது வெறும் சிங்களப் படைக்கும் புலிகளுக்கும் நடந்த யுத்தமல்ல. அப்படி நடந்திருந்தால், ஈழத்தில் என்றைக்கோ புலிக்கொடி பறந்திருக்கும். ஆனால், இந்தியா, சீனா, பாகிஸ்தான், இந்தோனேஷியா, இலங்கை ஆகிய ஐந்து நாடுகள் புலிகளை எதிர்த்து நடத்திய யுத்தம் அது. ஆனால், ஈழப் பிரச்சினையில் பல நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தலையிட்டுவிட்டதால், அதற்கான தீர்வும் சர்வதேச அளவிலேயே தீர்க்கப்பட வேண்டும். அதற்கான பணிகளைச் செய்வதற்காகவே டெசோ மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
டெசோவின் கழுத்தை நெரித்துக் கொன்றவரே கருணாநிதிதான் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகிறாரே வைகோ?
கலைஞர்தான் டெசோவின் கழுத்தை நெரித்தார் என்று வைகோ நம்புவாரானால், அப்போது திமுகவில் இருந்த அவர் என்ன செய்து கொண்டிருந்தார்? இதை வெறும் கட்சிக் கட்டுப்பாடு என்று பார்க்க முடியாது.
ஈழத்தமிழர்கள் மீது அளவற்ற பற்றுதல் வைத்திருப்பவர் என்றால் அவர் அப்போதே கட்சிக் கட்டுப்பாட்டை எல்லாம் உடைத்துக் கொண்டு வெளியே வந்திருக்க வேண்டும். டெசோவின் கழுத்தை நெரித்துக் கொன்றது குற்றம் என்றால், நெரிக்கும் போது பார்த்துக் கொண்டிருப்பதும் குற்றம்தான். ஆனால் அப்படி எதுவும் அப்போது டெசோவுக்கு நடந்துவிடவில்லை என்பதுதான் உண்மை.
அன்று காங்கிரசுடன் கூட்டணி வைக்க டெசோவைக் கலைத்தார். தற்போது காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக டெசோவைப் புதுப்பித்திருக்கிறார் என்ற பழ. நெடுமாறனின் குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?
ஈ.வெ.கி. சம்பத் காலத்தில் இருந்து கலைஞர் எதிர்ப்பையே தன்னுடைய அரசியலாக வைத்திருப்பவர் பழ. நெடுமாறன். உண்மையில், டெசோ அமைப்பு கலைக்கப்பட்டது 1987இல். அதன் பிறகு சட்டமன்றம், நாடாளுமன்றத்துக்கு நடந்த ஆறு தேர்தல்களில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உருவாகவே இல்லை. 1996இல் கூட த.மா.காவுடன்தான் கூட்டணி. 2004இல்தான் திமுக-காங்கிரஸ் கூட்டணி உருவானது.
காங்கிரசுடன் கூட்டணி வைப்பதற்காக 17 ஆண்டுகளுக்கு முன்னரே டெசோவைக் கலைத்து விட்டார் கலைஞர் என்று பழ. நெடுமாறன் சொன்னால், அதற்கு என்ன பதில் சொல்வது? தற்போதுள்ள சூழலில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து பிரிந்து வரவேண்டும் என்று கலைஞர் நினைத்தால், அதற்காகப் பெரிய காரணம் தேடவேண்டிய அவசியமில்லை. ஒரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகவே டெசோவை உருவாக்குகிறார் கலைஞர் என்கிறார் நெடுமாறன். இன்னொரு பக்கம், வருகின்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் காங்கிரசின் பிரணாப் முகர்ஜியை ஆதரிப்பது இனத் துரோகம் என்கிறார்.
கவனமாகப் பார்த்தால், நெடுமாறனின் இந்த இரண்டு கருத்துகளும் சுயமுரண் உடையவை.
ஈழத்தமிழர் பிரச்சினைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் பழ. நெடுறாறன், வைகோ, ராமதாஸ் போன்றவர்களை டெசோவில் சேர்க்கும் திட்டம் இருக்கிறதா?
கலைஞர் மேற்கொள்கிற ஒரு காரியத்தை பழ. நெடுமாறனும், வைகோவும் ஒருநாளும் ஆதரிக்க மாட்டார்கள். அது எவ்வளவுதான் நியாயமானதாக இருந்தாலும் கூட. நியாயமாகப் பார்த்தால், தமிழீழத்துக்காகக் கலைஞர் டெசோவை மீண்டும் தொடங்குகிறார் என்றதும் முதல் ஆதரவு அறிக்கை அவர்களிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆக, தங்கள் கையில் இருக்கும் கடைசிச் சரக்கையும் கலைஞர் எடுத்துக்கொண்டு செல்கிறாரே என்ற வருத்தம் அவர்களுக்கு இருக்கிறதோ, என்னவோ தெரியவில்லை.
ஒரு தலைமையின் கீழ் இயங்குவதற்கு மற்றவர்களுக்குத் தயக்கம் இருக்கலாம். என் பார்வையில், ஈழத்தை ஆதரிக்கும் எல்லாத் தலைவர்களும் ஒரே மேடையில் நின்று, ஒன்றாகக் கைகளை உயர்த்திக் கொண்டு நின்றால்தான் ஒற்றுமை என்று பொருளில்லை. தனித்தனி மேடைகளில் ஒரே கோரிக்கை வந்தாலே போதுமானது.
ஆனால், திமுகவோடு எப்போதும் அணுக்கமாக இருக்கும் திருமாவளவனையும் டெசோவில் இணைத்துக் கொள்ளவில்லையே?
டெசோவில் முதல் கூட்டம் மட்டுமே நடந்துள்ளது. மாநாடு நடக்கவிருக்கிறது. மேலும் சில அறிவிப்புகள் வரக்கூடும். டெசோவில் சேர்க்கப்படாதது குறித்து திருமாவளவனும் அதிருப்தி வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் இருக்கும் ஈழ ஆதரவாளர்களில் திருமாவளவன் முக்கியமானவர். அவர் இல்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்களிடம் எல்லாம் ஈழத்தமிழர் பிரச்சினை சென்று சேர்ந்திருக்காது என்பது உண்மை. ஆகவே, விரையில் நல்ல செய்திகள் வரும். (அண்மையில், தொல். திருமாவளவன் அவர்கள் டெசோவில் உறுப்பினராக இணைக்கப்பட்டுள்ளார்)
விடுதலைப் புலிகள் தற்போது களத்தில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழீழம் கோரவில்லை, எனில், டெசோ யாருக்காக தமிழீழம் கோருகிறது?
இன்று இலங்கையில் இயங்கிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேரடியாகத் தமிழீழம் தேவை என்று முழங்கினால், இயங்கிக் கொண்டிருக்கும் இயக்கம் கூட முடக்கப்படும். ஆனால் அங்கே அந்த அமைப்பு இயங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆகவே, இப்போது தமிழீழம் தேவை என்று அந்தக் கூட்டமைப்பு முழங்குவதை நாங்களும் விரும்பவில்லை. அதே சமயம், ஈழத் தமிழர்களின் உள்மனத்தில் என்ன இருக்கிறது என்பது நமக்கும் தெரியும்...ராஜபட்சேவுக்கும் தெரியும். தமிழீழம் வேண்டாம் என்றா அவர்கள் சொல்கிறார்கள்? அதற்காக அவர்கள் வெளிப்படையாகக் கேட்கும் கட்டத்துக்கு வரும்வரை நாம் காத்திருக்க வேண்டியதில்லை. இலங்கைக்கு வெளியே இருந்துகொண்டு, நாமும், புலம்பெயர்ந்த தமிழர்களும் குரலெழுப்பலாம். காலம் கனிந்து வரும்போது ஈழத்தமிழர்களும் நம்மோடு சேர்ந்து குரல் கொடுப்பார்கள்.
இறுதி யுத்தத்தின் போது மெளனம் காத்துவிட்டு இப்போது டெசோவைத் தொடங்கியிருப்பது முரண் அல்லவா?
ஈழப்பிரச்சினைக்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி விவாதித்தவர் கலைஞர். இலங்கையைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேச விரும்பியபோது, அதற்கு ஏற்பாடு செய்து கொடுத்தவர் கலைஞர். சம்பந்தம், தேவசேனாபதி, சுரேஷ் பிரேமசந்தினர், செல்வம் அடைக்கலநாதன், பொன்னம்பலம் உள்ளிட்ட ஐந்து பேரை கலைஞரின் ஏற்பாட்டோடு பிரதமரிடம் அழைத்துச் சென்றவன் நான்.
ஒருநாள் அதிகாலை கொளத்தூர் மணி அவர்கள் என்னைத் தொலைபேசியில் அழைத்து, ‘இது’ குறித்து முதலமைச்சர் ஓர் அறிக்கை வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்று ‘அவர்’ விரும்புவதாக ஒரு செய்தி வந்துள்ளது. உடனே நீங்கள் முதல்வரைப் பார்க்க முடியுமா என்று கேட்டார். அதன்படியே செய்தியைக் கலைஞரின் கவனத்துக்குக் கொண்டு சென்றேன். முதல்வர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இப்படி பல காரியங்கள். ஆனாலும் வேண்டுமென்றே அனைத்தையும் மறைக்கிறார்கள்.
கலைஞர் நினைத்திருந்தால் ஈழத்தமிழர் அழித்தொழிப்பைத் தடுத்து நிறுத்தி இருக்கலாம் என்னும் வாதம் உண்மையா?
ஈழப் பிரச்சினையில் கவனம் செலுத்துவதைக் காட்டிலும் கலைஞரின் செயல்களை விமர்சிப்பதில் அதிகம் கவனம் செலுத்துபவர்களின் விமர்சனம் இது. கலைஞர் நினைத்திருந்தால் ஈழப்போரை நிறுத்தியிருக்கலாம் என்று சொல்வது உலக அரசியலை உள்வாங்கிக் கொள்ளாதவர்களின் கருத்து. மாநில முதலமைச்சராக கலைஞர் இடத்திலே வேறு யார் இருந்திருந்தாலும் அதைத் செய்திருக்க முடியாது.
ஐந்து பெரிய நாடுகள் சேர்ந்து எடுத்திருக்கும் முடிவை ஒரு மாநில முதலமைச்சர் மாற்றியிருக்க முடியும் என்று சொல்வது இயல்புக்கு மாறானது.
டெசோ மூலம் தமிழீழக் கோரிக்கை மீண்டும் எழும்புவது இலங்கை அரசை ஈழத்தமிழர்களுக்கு எதிராகத் தூண்டிவிடாதா?
முள்வேலிக்குள் முடங்கியிருக்கும் தமிழர்கள் இப்போதும் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆகவே, டெசோ தமிழீழம் கேட்பதாலேயே ஈழத்தமிழர்கள் மீது அடக்கு முறை ஏவப்படும் என்று சொல்வதை ஏற்க முடியாது. ஈழப்பிரச்சினையை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்போகிறோம் என்று டெசோ சொல்லும் சமயத்தில் ஈழத்தமிழர்கள் தாக்கப்பட்டால், அது இலங்கைக்கு எதிரான சாட்சியாகத்தான் போகுமே தவிர வேறல்ல. ஆகவே, டெசோவின் உருவாக்கம் தமிழீழ மக்களுக்கு அரணே தவிர ஆபத்து அன்று.
டெசோவின் மூலம் ஈழப் பிரச்சினையைத் தம்வசப்படுத்திக் கொண்டு, பழ. நெடுமாறன், வைகோ போன்றோரின் பங்களிப்பை இருட்டடிப்பு செய்ய முயல்கிறது திமுக என்ற குற்றச்சாட்டு பற்றி?
ஈழத்தமிழர்களுக்காக வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் ஏதேனும் செய்திருந்தால் அதை யாராலும் இருட்டடிப்பு செய்ய முடியாது. தவிரவும், நெடுமாறனும், வைகோவும் கலைஞருடைய போட்டியாளர்கள் அல்ல. அவர்களை இருட்டடிப்பு செய்து வளரவேண்டிய நிலையில் கலைஞர் இல்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு திமுகவுக்கும் புலிகளுக்கும் இடையே ஒரு நல்லுறவை சிலரால் ஏற்படுத்தியிருக்க முடியும். அப்படி ஏற்படுத்தியிருந்தால் அது புலிகளுக்கும் ஈழத்தமிழர்களுக்கும் உதவியாக இருந்திருக்கும். ஆனால் அப்படிச் செய்வது விடுதலைப் புலிகள் அல்லது ஈழத்தமிழர்களுக்கும் உதவுகிறதோ இல்லையோ, கலைஞருக்கு உதவிவிடக்கூடாது என்று நெடுமாறன், வைகோ போன்றவர்கள் கவலைப்பட்டு விட்டார்கள். அதன் காரணமாகச் சின்னஞ்சிறு அமைப்புகளின் கையிலேயே ஈழப்பிரச்சினை தங்கிவிட்டது. விளைவு, ஈழப்பிரச்சினை மிகப்பெரிய மக்கள் பிரச்சினையாக கடைசி வரை மாறாமல் முடங்கிவிட்டது. 2009 இறுதி யுத்தத்தில் ஈழத் தமிழர்கள் அழிக்கப்பட்டபோது இங்கே தமிழர்கள் என்ன செய்தார்கள்? தமிழகம் கொந்தளித்ததா? அப்படியொரு தன்னெழுச்சி ஏன் கடைசிவரை வரவில்லை? ஒரே காரணம்தான். ஈழப்பிரச்சினையை திமுக போன்ற மக்கள் சக்தி பெற்ற இயக்கத்திடம் ஒப்படைக்காமல் சிலர் தங்கள் கைகளிலேயே பிடித்துவைத்துக் கொண்டிருந்ததுதான். இதை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.
தமிழீழக் கோரிக்கைக்காகத் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவை டெசோ கோருமா?
தமிழீழத்துக்கு எதிராக வெளிப்படையாகவே பல முறை கருத்துக் கூறியவர் ஜெயலலிதா. ஒரே ஒரு தேர்தல் நேரத்தில் மட்டும், நான் ஆட்சிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி தமிழீழத்தைப் பிரித்துக் கொடுப்பேன் என்று சொன்னார். மாநில முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இங்கே ராணுவம் இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும், ஜெயலலிதா உள்பட. என் பார்வையில் அவருடைய நிலைப்பாடுகள் இரண்டு வகையானவை. ஒன்று, தமிழீழத்துக்கு எதிராக இருப்பது. இரண்டாவது, நடைமுறை சாத்தியமற்ற, நம்பத்தகாத கருத்தைச் சொல்வது. இப்படிப்பட்ட ஒருவரைச் சார்ந்து ஓர் இயக்கம் இருக்க முடியாது.
மக்களைச் சார்ந்தும் உலக நாடுகளைச் சார்ந்தும்தான் இயங்க முடியும். அதே சமயம், தனித்தமிழீழத்தை ஆதரிக்கிறேன் என்று ஜெயலலிதா பகிரங்கமாகச் சொன்னால், அதை இருகரம் நீட்டி வரவேற்கத் தயாராக இருக்கிறது டெசோ.
ஈழத்தையும் புலிகளையும் ஆதரிக்கும் புதிய தலைமுறைத் தலைவர்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
ஈழத்துக்காகப் பல மேடைகளில் பல குரல்கள் எழுப்பப்படுவதை வரவேற்கிறேன். அதேசமயம் இன்னொரு கவலையும் இருக்கிறது. பழ. நெடுமாறனோடு தலைவர் பிரபாகரன் ஆயிரம் முறை பேசியிருப்பார்.
வைகோவுடனும் பலமுறை பேசியிருப்பார். ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்ட சிலர், கூட்டத்துக்குக் கூட்டம், ‘அண்ணன் என்னோடு பேசினார்’ என்று சொல்கிறார்கள். இன்றைக்கு வந்திருக்கிற சில திரைப்படத் தம்பிகள் ஈழத்தை விளம்பரப் பொருளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட தம்பிகளை எல்லாம் புலம்பெயர் ஈழத் தமிழர்கள் கூடுதலாக நம்புகிறார்களே என்ற கவலை எனக்கு இருக்கவே செய்கிறது. ஆனாலும் அடுத்த மழையில் சாயம் வெளுக்கும் என்று நம்புகிறேன்.
இந்தியாவின் மிகப்பெரிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட் மூவருமே தனித்தமிழ் ஈழத்தை ஆதரிக்காத நிலையில், ஈழப் பிரச்சினையை இந்தியாவை விட்டு வெளியே எப்படி எடுத்துச் செல்லப் போகிறது டெசோ?
மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேசியக் கட்சிகள் தம்மை நிலைநிறுத்திக் கொள்வது சாத்தியமில்லை. திக, திமுக, மதிமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட முக்கியக் கட்சிகள் அனைவருமே ஈழத்தை ஆதரிப்பவர்கள். தேமுதிகவும் ஈழத்தை எதிர்க்கவில்லை. ஆக, பிரச்சினை அதிமுகவிடம்தான் இருக்கிறது. அதைக் களைய வேண்டுமானால், அதிமுகவுக்கு அணுக்கமாக இருப்பவர்கள் அதிமுகவைத் தமிழீழம் நோக்கித் திருப்ப வேண்டும். அனைவரும் ஒருமித்த குரலில் குரல் கொடுத்து, மத்திய அரசுக்குத் தேவையான அழுத்தத்தைக் கொடுத்தால், தமிழீழக் கோரிக்கையைப் பொது வாக்கெடுப்பு என்ற அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்று விடலாம்.