தமிழ்த் தேசியம் பேசுகிறவர்களில் ஒரு பகுதியினர் இன்னும் பண்பாடு என்றால் என்பதைப் பற்றி கற்றுக் கொள்ளவே இல்லை என்பது என் கட்டுரைக்கு (தமிழ்த் தேசியவாதிகளின் துரோகம்) வந்துள்ள எதிர்வினைகளில் இருந்து தெரிகிறது. அங்குலிமாலாவின் கட்டுரைக்கு வந்த சில எதிர்வினைகள் பண்பாடற்றவையாக இருக்கிறது என்று இக்கட்டுரையாளர் எழுதினால் அதற்கும் அதே நபர்கள் அதே மாதிரி 'பண்பாடற்ற மொழி நடையில்' எதிர்வினையாற்றுகிறார்கள். அதை கண்மணி என்பவர் நியாயப்படுத்தவும் முயற்சிக்கின்றார். நல்லது, சேற்றின் மீது கல்லெறிந்தால் என்ன நடக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியிருக்கின்றது. 

 கட்டுரையை முழுவதும் படிக்காமலேயே, எழுதியவர் பெயர் என்னவென்று தெரியாமலேயே எதிர்வினையாற்றுகின்ற மேதாவிகள் சிலரும் (எடுத்துக்காட்டாக, மனோகரன் என்பவர்) இருக்கின்றனர். ஜெயராம் விருதுகள் உடைந்து விட்டது என்று அசோகன் முத்துசாமியாகிய நான் எழுதவில்லை. யார் எழுதியது என்று அவரே ஒழுங்காகப் படித்து தெரிந்து கொள்ளட்டும். அதே போல் ஜெயராமின் அந்தக் குறிப்பிட்ட பேச்சு பண்பாடுள்ள எவருக்கும் தேனாக இனிக்காது. அது போல்தான் எந்த ஒரு தனிநபரும் மற்றவர்களைப் பற்றி தரக்குறைவாகப் பேசுவதும். இந்தத் தனிநபர்களும் அவர்களால் தரக்குறைவாகப் பேசப்படுகிறவர்களும் எந்த வெவ்வேறு மொழி பேசுகிறவர்களாகவும் இருக்கலாம். இது அனைவருக்கும் பொருந்தும். உளறல்கள் இனிக்குமா என்ன? 

 போகட்டும்.

 முதலாவதாக, சுயமரியாதை உள்ள எவரும் பிறரைப் பற்றி மரியாதைக் குறைவாகப் பேச மாட்டார்கள். அதாவது பிறரை மரியாதைக் குறைவாகப் பேசுகிறவர்கள் கண்ணாடி முன் நின்று கொண்டு பேசுகிறார்கள். பெரியார் தன்னை விட வயதில் குறைந்தவர்களையும் பன்மை விகுதியில்தான் அழைப்பார் என்பதை அறிக. 

 இரண்டாவதாக, கருத்துக்குக் கருத்து ரீதியாகப் பதில் சொல்ல முடியாதவர்கள்தான் அவதூறுகளையும், இழிசொற்களையும் அள்ளி வீசுவார்கள். சீமானின் தம்பிகள் இதை நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும். மானமும் அறிவும் மனிதருக்கு அழகு. 

 இனி விஷயத்திற்கு வருவோம்.  

 திரை நட்சத்திரங்களின் பேச்சுக்களை எல்லாம் வேத வாக்காக எடுத்துக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது; வேத வாக்காக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மக்களை மூளைச்சலவை செய்ய ஊடக முதலாளிகள் (தமிழ், தெலுங்கு, கன்னட, மலையாள, இந்தி, மராத்தி, ஆங்கில, மற்றிதர அனைத்து மொழிகளின்) இருக்கின்றனர்; அதே போல் திரை நட்சத்திரங்களின் உளறல்களை எல்லாம் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்ள ஒரு கூட்டமும் இருக்கின்றது. ஆனால் குடிமக்களின் வாழ்க்கையைக் கேள்விக்குள்ளாக்கும், இளைஞர்களின் எதிர்காலத்தை இருளச் செய்யும் அரசாங்கத்தின் செயல்களை எல்லாம் இவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.  

 அது என்ன மானம் என்றாலே பெண்கள் நினைவிற்கு வந்து விடுகிறார்கள், இந்த இனவாதிகளுக்கு, சாதிவாதிகளுக்கு, மதவாதிகளுக்கு? இதுவே பாசிச ரத்தத்தூய்மை சிந்தனையின் வெளிப்பாடுதான். அதுவும் எப்படி ஒரு விபரீதமான நிலைமையை கற்பனை செய்கிறார்கள் பாருங்கள்: 'என் வீட்டுப் பெண்ணை எவனாவது சாலையில் போகும்போது அசிங்கப்படுத்துவான். அதைப் பார்த்துவிட்டு ஒன்றும் பேசாமல் கூலி உயர்வுப் போராட்டத்திற்குச் சென்று உண்ணாவிரதம் இரு என்று போதிக்கிறாரா?' என்று கேள்வி எழுப்பியிருக்கிறார், சீமானின் தம்பி.

 ஒரு விபரீத நிலைமையைக் கற்பனை செய்து கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் கடன் பட்ட நெசவாளர்கள் சிலர் அனுபவித்துக் கொண்டிருக்கும் கொடூரமான நடப்பு யதார்த்த நிலை பற்றி நாம் சுட்டிக் காட்டியிருந்ததற்கு அவர் பதில் எதுவும் சொல்லவில்லை. கொடுக்க வேண்டிய கூலியைக் கொடுக்காமல், கடன் வலையில் சிக்க வைத்துதான் முதலாளிகள் அயோக்கியத்தனம் செய்து கொண்டிருக்கின்றார்கள். அத்தகைய முதலாளிகளுக்கு எதிராக பெண்களின் மானத்தைக் காக்க முன்வரவில்லை இவர்கள். ஜெயராம் உளறியதில்தான் எல்லாம் கெட்டுப் போய்விட்டது என்று இவர்கள் அராஜகம் செய்வதில் அர்த்தம் எதுவும் இருக்கின்றதா? அதை நம்பத்தான் முடியுமா?  மானத்துடன் வாழ்வதற்காகத்தான் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்கிறார்கள், இளைஞர்கள் வேலை கேட்கிறார்கள். 

 தலித் மக்களுக்காக ஏன் போராடவில்லை என்று கேள்வி எழுப்பினால், நீங்கள் எத்தனை போராட்டம் நடத்தியிருக்கிறீர்கள் என்பதைச் சொன்னால்தானே நாங்கள் போராட்டம் நடத்தியிருப்பதைப் பற்றிச் சொல்ல முடியும் என்கின்ற கண்மணியின் வாதம் வேடிக்கையாக இருக்கின்றது. யார் யாரைப் பார்த்து இது போன்ற கேள்விகள் எழுப்பினாலும், கேள்விக்கு உள்ளாகிறவர்கள் போராட்டம் நடத்தியிருந்தால் அதைப் பட்டியலிடுவார்கள்; பின்னர், கேள்வி கேட்டவரைப் பார்த்து நீங்கள் என்ன செய்திருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்புவார்கள். இவர்களிடம் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லையாதலால் கேள்வியைத் திருப்பி வைக்கிறார்கள். நாங்கள் உத்தப்புரத்தில் போராடியிருக்கின்றோம்; கோவை பெரியார் நகரில் போராடியிருக்கின்றோம்; பாப்பாபட்டி, கீரிப்பட்டியில் போராடியிருக்கின்றோம்; தமிழகம் முழுவதும் இப்போது ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பது நாங்கள்தான். இப்போராட்டங்களில் சிலவற்றில் வெற்றியும் பெற்றிருக்கின்றோம். எங்கள் லட்சியத்தில் நாங்கள் இன்னும் வெற்றி பெறவில்லை. வெற்றி தோல்விகள் ஒரு போராட்டத்தின் அல்லது கோரிக்கையின் நியாய அநியாயத்தைத் தீர்மானித்துவிடாது. எண்ணத்தில் நியாயம் இருப்பின் போராட்டம் என்றேனும் ஒரு நாள் நிச்சயம் வெல்லும். இது எல்லோருக்கும் பொருந்தும். 

 விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணத்திலிருந்து இஸ்லாமியர்களை விரட்டி விட்டது குறித்து எண்ணிக்கை அடிப்படையில் கேள்வி எழுப்பியிருக்கிறார், ஈஸ்வரன் (ஆங்கிலம்). எண்ணிக்கையில் எவ்வளவு வித்தியாசம் இருந்தாலும் அந்தச் செயல் கண்டிக்கத்தககது என்பதில் எந்த வேறுபாடும் இருக்கப் போவதில்லை. அந்தச் செயல் 'மரியாதைக்குரியது அல்ல' என்றும், அதே நேரத்தில் அப்படி விரட்டியடித்தது சரிதான் என்கின்ற மாதிரி ஒரு செய்தியையும் அவர் கூறியிருக்கிறார். முஸ்லிம் தீவிரவாதிகளால் (இப்போது சிறையில் இருக்கும் இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகாதான் அவர்களைத் தூண்டிவிட்டார்) இலங்கையின் கிழக்குப் பகுதியில் 'இளைஞர்கள்' தாக்கப்பட்டார்கள் என்றும், அவர்களிடமிருந்து காடுகள் வழியே யாழ்ப்பாணத்திற்குத் தப்பி வந்த இளைஞர்கள் முஸ்லிம்களை உங்களுடன் வைத்துக் கொண்டிருந்தால் வடக்கிற்கும் இதே கதிதான் ஏற்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள் என்றும், அதனால் முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இலங்கை பாதுகாப்புப் படைகள் எப்போதுமே தங்களது உளவுப் பிரிவில் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம்களை பணிக்கமர்த்தினார்கள் என்றும், அது பெரும் நாசத்தை விளைவித்தது என்றும் கூறுகிறார். மொத்தத்தில் முஸ்லிம்களை விடுதலைப் புலிகள் விரட்டியடித்ததை நியாயப்படுத்தியிருக்கின்றார். பின்னர் நாம் சொல்ல என்ன  இருக்கின்றது? 

 இவ்விஷயத்தில் சில கேள்விகள் விவாதிக்கப்பட வேண்டியிருக்கின்றது. இலங்கையில் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையில் ஏன் முரண்பாடு ஏற்பட்டது? இந்தக் கேள்வியிலேயே சிக்கல் இருக்கின்றது. தமிழ் என்பது ஒரு மதமா என்ன? அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றுகிறவர்கள்தான் தமிழர்களா என்ன? தமிழர்கள் என்றால் அனைத்து மதங்களையும் பின்பற்றுகிறவர்கள் என்பதை ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா? அதை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பண்பாட்டு விழுமியங்கள் அதற்கேற்ற வகையில் மாற வேண்டுமா இல்லையா? உதாரணமாக, விதவை மறுமணம் என்பது கிறித்துவத்திலோ, இஸ்லாமிலோ சாதாரண, சகஜமான விஷயம்; இந்து மதத்திலும் அப்படி இல்லை; தமிழ்ப் பண்பாடு என்று சிலர் கூறுவதிலும் அப்படி இல்லை; இன்னும் சொல்லப்போனால், கணவரை இழந்த பெண்கள் உடன்கட்டை ஏறுவது, தலை மழித்தல், வெள்ளைப் புடவை உடுத்துதல் ஆகிய கொடுமைகள் தமிழகத்திலிருந்துதான் ஏற்றுமதியாகின என்று முனைவர் கோ.கேசவன் தன்னுடைய 'சாதியம்' எனும் நூலில் அறிஞர்கள் பலர் கூறுவதாக மேற்கோள் காட்டுகின்றார். 

 மேலும், சாதி இல்லை என்றால் இந்து மதம் இல்லை. அப்படி எனில் சாதி ஒழிப்பு மக்களின் நிகழ்ச்சி நிரலில் முக்கிய இடத்தைப் பிடிக்க வேண்டுமா இல்லையா? பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை ஒழித்து விட்டால் போதுமா, இந்து மதம் ஒழிந்து விடுமா? பார்ப்பனரின் ஆதிக்க இடத்தைப் பிடிப்பதற்காக பார்ப்பனரல்லாத மேல்சாதிகள் சமூகநீதிப் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா, இல்லையா? நரவேட்டை நரேந்திர மோடி பார்ப்பனரல்ல; பால் தாக்கரே பார்ப்பனரல்ல; உமாபாரதி பார்ப்பனரல்ல;    

 தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் தமிழர்கள் எத்தனை விழுக்காடு வாழ்கின்றார்கள் தெரியுமா என்று கேட்கிறார், கண்மணி. நமக்குத் தெரியாது என்று அவரே பதிலும் கூறிக் கொள்கிறார். ஆனால், அந்தத் தகவலை அவரும் கொடுக்கவில்லை; அல்லது கொடுக்க முன்வரவில்லை. சென்னை என்றில்லை மும்பை, பெங்களூரு, ஹைத்ராபாத், திருவனந்தபுரம் என்று எல்லாப் பெருநகரங்களிலும் பிற மொழிகள் பேசும் மக்கள் கணிசமாகவே வாழ்கிறார்கள். உதாரணத்திற்கு பெங்களூருவில் சுமார் 32% தமிழர்கள் வசிக்கின்றனர்; மற்ற மொழி பேசும் மக்கள் போக அங்கு கன்னடர்கள் வெறும் 35%தான். மும்பையில் வெறும் 34%தான் மராத்தியர்கள் என்று சமீபத்திய புள்ளிவிவரம் ஒன்று கூறுகின்றது. உள்நாட்டுக்குள் அன்றாடம் நடந்து கொண்டிருக்கும் புலப்பெயர்வின் விளைவு. 

 சொந்த மண்ணில் ஒரு தேசிய இனம் பிறிதொரு தேசிய இனத்தின் வேலையாளாக வாழ்வது என்ன நியாயம் என்கின்ற கேள்வியில் அவரது கருத்துக்கள் எந்த வர்க்கத்திற்குச் சாதகமானவை என்கிற உண்மை இருக்கின்றது. அதாவது, தமிழன் தமிழனிடம் மட்டும்தான் வேலைக்காரனாக இருக்க வேண்டும் அல்லது தமிழனைத் தமிழன் மட்டும்தான் சுரண்ட வேண்டும் என்கிறார். இது யாருக்கு லாபம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. 'தமிழ்' (பார்ப்பனர், முதலியார், செட்டியார், கவுண்டர், பிள்ளைமார் போன்ற இன்னபிற) முதலாளிகளுக்கு மட்டுமில்லை, பன்னாட்டு முதலாளிகளுக்கும் அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டுள்ளவர்களுக்கும். பாருங்கள், பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக ஒரு வார்த்தையாவது வெளிப்பட்டிருக்கின்றதா? போராடினோம் என்கிற பொய்யையும் காணோம், ஒரு பேச்சுக்காகப் போராடுவோம் என்று கூறவும் காணோம். ஏன்? 

 இதன்றி, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்திருக்கும் தமிழர்கள் மற்ற மொழி பேசுகிற முதலாளிகளால் சுரண்டப்படுவது பற்றி இவர்களுக்கு அக்கறையுமில்லை. 

 மேலும், தமிழன் என்றால் யார் என்று வரையறுக்கவும் வேண்டும். தமிழ் பேசுகிறவர்கள் எல்லோரும் தமிழரா? அல்லது தமிழ்ப் பெற்றோர்களுக்கு பிறந்தவர்கள் மட்டும் தமிழரா? அதிலும் தமிழ்நாட்டில் பிறந்தவர்கள் அல்லது வாழ்கின்றவர்கள் மட்டும்தான் தமிழர்களா? தமிழ்ப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர்கள் மட்டுமே தமிழர்கள் என்பவர்கள்தான் பெரியாரை தெலுங்கு பேசும் கன்னடர் என்கிறார்கள்; அதாவது, அவர் தமிழரில்லையாம். பாசிச ரத்தத்தூய்மைக் கோட்பாட்டின் வெளிப்பாடு.   

 மொழி வெறியர்கள் (பற்றுக்கும் வெறிக்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கின்றது) எல்லா இடங்களிலும் ஒரே மாதிரிதான் இருக்கின்றார்கள். பால் தாக்கரே பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகப் போராடியதில்லை; கன்னட இனவெறியர்கள் போராடியதில்லை; இப்போது தெலுங்கானாப் போராட்டம் நடத்துகின்றவர்களும் (இது மொழி வெறியர்கள் போராட்டம் அல்ல. நக்சல்பாரி இயக்கங்களும், தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்கின்ற சிபிஐ-யையும் தவிர வேறு யாரும்) போராடியதில்லை. ஏன்?

 வர்க்கப் பார்வை கொண்டவர்கள் எல்லோரும் சர்வதேசியம் பேசுவதில்லை; எல்லோரும் ஒன்று என்றும் பேசுவதில்லை. சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுண்டிருக்கின்றது என்பதுதான் எங்கள் நிலை. அது எந்த மொழி, மத, இன சமுதாயமாக இருந்தாலும் சரி. வர்க்க முரண்பாடுகள் தீர்க்கப்படாத எந்த சமுதாயத்தையும் எங்களால் ஒருங்கிணைந்த சமுதாயமாகக் காணமுடியவில்லை. ஆனால், மதவாதிகள், இனவாதிகள், மொழி வழி இனவாதிகள், சாதிவாதிகள் வர்க்க முரண்பாடுகளை மறைக்கவே விரும்புகிறார்கள் அல்லது முயல்கிறார்கள். 

 இந்த நாட்டில் சாதி வேறுபாடே இல்லை என்பவர் தெரிந்தோ தெரியாமலோ சாதியத்திற்கு ஆதரவானவராக இருக்கின்றார்; மத வேறுபாடே இல்லை (அனைவரும் இந்துக்கள்தான் என்கின்ற இந்துத்துவவாதிகள் போல) என்பவர் தெரிந்தோ தெரியாமலோ மதவெறி ஆதரவாளர்களாக இருக்கின்றார்; இந்த நாட்டில் மொழி அடிப்படையிலான பாரபட்சம் இல்லை என்கின்றவர் மொழி அடிப்படையிலான பாரபட்சத்தின் ஆதரவாளராக இருக்கின்றார்; இந்த நாட்டில் வர்க்க வேறுபாடே இல்லை என்கின்றவர் வர்க்கச் சுரண்டலுக்கு ஆதரவாளராகவே இருக்கின்றார். வேறு விதமாக இருக்க முடியாது. 

 இந்த முரண்பாடுகளில் எது முதன்மையானது என்பது இப்போது நம்முன் உள்ள கேள்வி. அதாவது, எந்த முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்றால் பொதுவாக மக்களின் துயரங்கள் தொடர்வது மட்டுமின்றி, அதிகரிக்கும் என்பது நம் முன் உள்ள கேள்வி. இதன் பொருள், மற்ற முரண்பாடுகளோ அல்லது பாரபட்சங்களோ இல்லை என்பதல்ல. எல்லாவும் இருக்கின்றன; எல்லாவற்றிற்கும் எதிராகத்தான் போராட வேண்டும்; அதில் முதன்மையானது வர்க்க முரண்பாடு என்பதுதான். வர்க்க முரண்பாடுகளையும் எதிர்த்துப் போராடாமல் மற்ற முரண்பாடுகளை அல்லது பாரபட்சங்களை மட்டும் எதிர்த்துப் போராடுகின்றவர்கள் எல்லோரும் போகாத ஊருக்கு வழி தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அதாவது மக்கள் நலம் என்கின்ற ஊர்.

- அசோகன் முத்துசாமி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It