வேறுபட்ட பிரச்சினைகளில் வேறுபட்ட அரசியல் கட்சிகளாலும் குழுக்களாலும் அறிக்கைகள் வெளியிடப்படுவது மரபாக இருக்கிறது. அரசியல் தலைவர்களின் தனிப்பட்ட அறிக்கைகளுக்கும், கட்சிகளின் கொள்கை அறிக்கைளுக்கும் வித்தியாசம் இருக்கின்றது. இதிலிருந்தெல்லாம் மாறுபட்டது குறிப்பிட்ட மக்கள் பிரச்சினை சார்ந்து, அரசியல் கட்சிகள்-கொள்கைகள்-கருத்தியல்கள்-குழுக்கள் போன்றவற்றை ஊடறுத்து வெளியிடப்படும் அறிக்கைகள்.

இத்தகைய அறிக்கைகள் கடைப்பிடித்தே ஆகவேண்டிய இரு நிபந்தனைகள்: முதலாவதாக, இந்த அறிக்கையின் உருவாக்கம் என்பது வெளிப்படைத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, வேறுபட்ட பண்புகள் கொண்ட அனைவரதும் ஒப்புதல் பெற்றதாக இந்த அறிக்கையின் இறுதிவடிவம் இருக்க வேண்டும். தனிநபர்களும் ஒருங்கிணைப்புக்குழுவினரும் இதில் வகிக்கும் பாத்திரம் என்பது பொதுநோக்கில் ஏதுமற்றதாகக் கரைந்ததாக இருக்க வேண்டும்.

கூடன்குளம் தொடர்பாக கவிதா முரளிதரனால் எழுதப்பட்டு கவின் மலரால் முன்னெடுக்கப்பட்ட அறிக்கையானது இந்த இரண்டு பண்புகளையும் கொண்டிருக்கவில்லை.

வேறுபட்ட கருத்துக்கள் கொண்டவர்களின் ஒருங்கிணைபபுக் குழு என்பது உருவாக்கப்படவில்லை. இதற்கான காரணம் அனுபவமின்மையா அல்லது திட்டமிட்டபடியிலானதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. எவரெவருக்கு இந்த அறிக்கையின் முதல்வடிவம் திருத்தத்திற்காகவும் அபிப்பிராயத்துக்காகவும் அனுப்பப்பட்டது என்பதனை கவிதா முரளிதரனும் கவின்மலரும் ஆதாரங்களுடன் முன்வைக்க வேண்டும்.

சுற்றுச்சூழல், பழங்குடியின மக்கள், ஈழ மக்களின் மனித உரிமை, கூடன்குளம் சார்ந்த பிரச்சினைகளில் மிகப்பெரும் அரசியல் செயல்பட்டது என்பதனை எவரும் மறுக்கவியலாது. அ.மார்க்ஸ், லீனா மணிமேகலை, ஆதவன் தீட்சண்யா போன்றோர் இதில் என்னவிதமான நிலைபாடுகளை எடுத்தார்கள், இப்பிரச்சினைகளில் இவர்கள் எந்த அரசியல் கட்சிகளைச் சார்ந்திருக்கிறார்கள், அக்கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது எல்லோரும் அறிந்த ரகசியம்.

இவர்கள்தான் இந்த அறிக்கையின் இறுதிவடிவத்தில் பாதிப்புச் செலுத்தியிருப்பார்கள் என்றால், இவர்கள்தான் இந்த அறிக்கையைக் கடத்திச் செல்பவர்களாக இருந்திருப்பார்கள் என்றால் கவிதா முரளிதரனதும் கவின்மலரதும் நோக்கங்களின் அடிப்படைகளே இங்கு கேள்விக்கு உரியதாகிறது.

மாலதி மைத்ரிக்கான எதிர்வினையாக கவின்மலரது மின்னஞ்சலைப் பார்க்கிறபோது லீனா மணிமேகலை தனது அரசியலை வலியுறுத்த முயன்றிருக்கிறார் என்பதும் தெரிகிறது.

அணைகள் குறித்த பிரச்சினையை அறிக்கையில் சேர்க்க லீனா மணிமேகலை கோரியிருக்கிறார். அணைகள் குறித்த பிரச்சினை தமிழ்ச்சூழலில் முல்லைப் பெரியாறு பிரச்சினையோடு சம்பந்தப்பட்டது என்பது எவரும் அறியாதது அல்ல. அதனோடு ஆதவன் தீட்சண்யா சார்ந்திருக்கிற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் முல்லைப் பெரியாறு-கூடன்குளம் போன்றவற்றில் என்ன நிலைபாடு எடுத்திருக்கிறது என்பதும் அறியாததல்ல. இதனோடு எதிர்க்கருத்தாளர்களை வசைபாடுதலையும் ஓரங்கட்டுவதையுமே தனது கொள்கை நிலைபாடாகக் கொண்டிருக்கிற அ.மார்க்சின் குறுங்குழுவாதச் செயல்பாடுகளும் எவரும் அறியாதது இல்லை.

இச்சூழலில் மாலதி மைத்ரி போன்றோர் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்பதில் சந்தேகமில்லை.

கவின்மலர் அறிக்கை உருவாக்கம் தொடர்பாக வெளிப்படையாக இருப்பது மட்டுமே இதற்கான பதிலாக இருக்க முடியும்.

இந்த அறிக்கையில் கையொப்பமிட்டவர்களின் முதல் வடிவத்தை இலண்டன் குளோபல் தமிழ்நியூஸ் நெட்வொர்க் இணையத்தில் (http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/82896/language/ta-IN/article.aspx) பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. கடந்த இரு தசாப்தங்களில் நான் மேலே குறிப்பிட்ட நான்கு உரிமைப் பிரச்சினைகளில் முன்நின்று செயல்பட்டவர்களது பெயர்கள் அப்பட்டியலில் இல்லை. இது எவ்வாறு நேர்ந்தது என்பதனை தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பினேன். இரண்டு நாட்களுக்கு முன்பு, தீபச்செல்வன், பா.அ.ஜெயகரன், செயப்பிரகாசம், அருள் எழிலன், ஓவியர் புகழேந்தி, கீற்று ரமேஷ் போன்றவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டேன். தீபச்செல்வன், செயப்பிரகாசம் போன்றவர்கள் அறிக்கை தமக்கு கவின்மலரால் அனுப்பப்பட்டது என்றார்கள். புகழேந்தி, பா.அ.ஜெயகரன் போன்றவர்கள் முகப்புத்தகத்தில் பார்த்துத் தாமாகவே அதில் இணைத்துக் கொண்டதாகச் சொன்னார்கள். கீற்று ரமேஷ் தமக்கு அனுப்பப்படவில்லை என்றதோடு, இந்த அறிக்கை குறித்து அவர் ஏதும் அறிந்திருக்கவில்லை என்றும் சொன்னார்.

கீற்று ரமேசுக்கு இந்த அறிக்கை அனுப்பப்படவில்லை என்பதனைச் சாதாரணமாக என்னால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. கூடன்குளம் பிரச்சினை தொடர்பான அறிவார்ந்த விவாதக் கட்டுரைகளை வெளியிட்டவர் அவர்தான். முழு தமிழ் ஊடகங்களையும் ஒப்பிடும்போது கூடன்குளம் பிரச்சினைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டவர் அவரும் அவரது கீற்று இணையத்தளமும் என்பது வெளிப்படையான நிஜம். இதற்காக அவர் காவல்துறை விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார். அதனோடு இந்த அறிக்கையில் இடம்பெற வேண்டிய, கூடன்குளம் பிரச்சினையில் அதி ஈடுபாட்டுடன் போராடிக் கொண்டிருக்கிற எழுத்தாளர்கள், மனித உரிமையாளர்கள், செயல்பாட்டாளர்கள் போன்றவர்களுக்கும் இந்த அறிக்கை குறித்து எதுவும் தெரியவில்லை என்பதும், இந்த அறிக்கை அவர்களுக்கு அனுப்பப்படவில்லை என்பதுவும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படக் கூடியது இல்லை.

கவின்மலர் சொல்வது போல தம்மிடமிருந்த மின்னஞ்சல்களுக்கு மட்டுமே இதனை அனுப்பினேன் என்பது, ஒரு மிகமுக்கியமான வெகுமக்கள் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினையில் ஒரு கூட்டறிக்கை வெளியிட முனைகிறவரின் பதில் இல்லை. மிக மிக அகநிலைப்பட்ட ஒரு பதில் இது. தமக்குத் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தன்னால் இதனை அனுப்ப முடியும் என்பது போன்ற பதில் இது. இது அடிப்படையில் ஒரு கூட்டுச்செயல்பாட்டுக்கான மனநிலை இல்லை. மேலாக, கீற்று ரமேஷ் தொடர்பான அ.மார்க்ஸ், லீனா மணிமேகலை மற்றும் ஆதவன் தீட்சண்யா போன்றோரது எதிர்மனநிலை செயல்படுவதற்கான மனநிலை போன்று இது தோற்றம் தருவதும் தவிர்க்கவியலாதது. அறிக்கையில் இவர்களது பாதிப்பு உண்மையானால், அறிக்கையில் மிகப்பெரும் கூடன்குளம் செயல்பாட்டாளர்களது பெயர் தவிர்க்கப்பட்டமைக்கும் இவர்களது பாதிப்புதான் காரணம் எனக் கொள்ளவேண்டியிருக்கிறது.

கவின்மலர் இவை அனைத்தும் குறித்து வெளிப்படையாகப் பேசவேண்டும் என நினைக்கிறேன்.

இத்தனைக் கேள்விகளோடும் இந்த அறிக்கையில் கையெழுத்திடுவது எனவும், புகலிட நாடுகளில் இருக்கும் எனது நண்பர்களிடம் ஒப்புதல் பெறுவது எனவும் நான் தீர்மானித்ததற்கான காரணம், மாலதி மைத்ரி, அருள்எழிலன், பா.செயப்பிரகாசம், பா.அ.ஜெயகரன் என நான் மதிக்கிற பலரும் அறிக்கையில் கையொப்பமிட்டிருந்தார்கள் என்பது ஒன்று. சமகாலத்தில் வேறு சில நகர்வுகளும் இருந்தன. செயப்பிரகாசத்துடன் பேசியதனையடுத்து கவின்மலர் எனக்கு அறிக்கையை அனுப்பியிருந்தார். சமவேளையில், கீற்று ரமேசுக்கு கவின்மலர் அனுப்பிய அறிக்கையை அவர் எனக்கு ‘பார்வர்ட்’ செய்திருந்தார். விடுபட்டவர்களின் பெயரை இணைப்பதற்கான வாய்ப்பையும், திங்கள்கிழமைதான் (17.09.2012) பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெறுகிறது எனும் செய்தி கால அவகாசத்தையும் இந்த நகர்வுகள் தந்திருந்தன.

குறைந்தபட்ச அடிப்படையில் அறிக்கையில் சொல்லப்பட்ட விடயங்களில் முரண்பட ஏதுமில்லாததாலும், உடன்பாடு கொள்கிற அம்சங்களே அதிகம் இருந்ததாலும் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஒப்புதல்களைப் பெற்று கவின்மலருக்கும் செயப்பிரகாசத்திற்கும் அனுப்பினேன். பிரதானமாக தமிழகத்திலிருந்து, கோயமுத்தூரிலிருந்து நான் பெற்ற ஒப்புதலில் இருந்தவர்களின் பெயர்களில் எதுவும் முன்னைய அறிக்கையில் இருக்கவில்லை என்பதனையும் இங்கு நான் வலியுறுத்த விரும்புகிறேன்.

நான் அறிந்தவர்களை இந்த அறிக்கையில் ஒருங்கிணைத்ததற்கான எனக்கான தார்மீகக் காரணம் இதுதான்: அறிக்கையில் உடன்படும் அம்சங்கள் இருந்தன. அரசியல் ரீதியிலான விடுபடல்கள் இருந்தன என்றாலும் முரண்பட ஏதுமில்லை.

இரண்டு தேர்வுகளே என் முன் இருந்தன - இப்பிரச்சினையில், அறிக்கையின் உருவாக்கம் தொடர்பான அரசியல் பற்றி ஏதும் அறியாத நிலையில், பிரச்சினையின் தார்மீகப் பலத்திற்காகக் கையொப்பமிட்ட எழுத்தாளர்கள் கலைஞர்களுடன் என்னையும், என்னோடு கருத்து உடன்பாடு கொண்ட நண்பர்களையும் இணைப்பதன் வழி, இந்த அறிக்கையின் குறுங்குழுப் பண்பை பன்முகத்தன்மை வாய்ந்ததாக இருக்குமாறு ஆக்க விரும்பினேன். இன்னுமொரு பிரதான காரணம் - அரபுப் புரட்சியில் பங்குபற்றியேயிராத அடிப்படைவாதிகள் இன்று அப்புரட்சியைக் தமது நோக்கங்களுக்காகக் கடத்தியிருக்கிறார்கள், இந்நிலையில் கூடன்குளம் பிரச்சினையை ஈழ எதிர்ப்புக் குறுங்குழுவாதிகள் தமக்கானதாகக் கடத்திவிடக் கூடாது எனவும் மனதார விரும்பினேன். அது சாத்தியமாகியிருக்கிறது எனவே நம்புகிறேன்.

Pin It