தமிழக வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் உள்ளதாக கருதப்பட்ட மூன்று வனப்பகுதிளான கள‌க்காடு முண்டந்துறை, பொள்ளாட்சி ஆனைமலை, முதுமலை வனப்பகுதி ஆகியவை புலிகள் சரணாலயமாக கடந்த 2007 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப் பகுதிகள் நேரிடையாக வனச் சரகரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது,

tigers_600

வனத்துறையின் அனுமதியுடனேயே அனைத்து நடவடிக்கைகளும் இங்கு அனுமதிக்கப்பட்டது. இப் பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்றவேண்டும் என வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது.

இந்த வனத்துறையின் நடவடிக்கைக்கு வெகுசன ஊடகங்களில் இயற்கை, சுற்றுச்சூழல், வன உயிர்ச் சுழல் என பல்வேறு பெயர்கள் வழங்கப்பட்டது. தமிழகம் போல இந்தியாவின் பல பகுதிகளில் அமைக்கப்பட்ட புலிகள் காப்பகத்திற்கு கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் பல முதலாளிய நிறுவனங்கள் நிதி வழங்கியது, NDTV போன்ற ஊடகங்கள் அதனை இயக்கமாக மாற்றிக்காட்டியது. வழக்கம் போல நடிகர், நடிகையர் இதில் பங்குகொண்டனர். நமது பொதுப் புத்தியில் புலிகள் மீது கருணை பிறப்பிக்கும் கருத்தரிப்பு நிகழ்ந்தேறியது.

மறுபுறம் வனத்திலிருந்து பழங்குடி மக்களை வெளியேற்றும் நிகழ்வு துவங்கியது. ஒரு புறம் வன்முறை; மறுபுறம் ஒரு ஏக்கருக்கு பத்து லட்சம் வரை தருகின்றோம் வனப்பகுதிகளிருந்து வெளியேறுங்கள் என ஆசைவார்த்தைகள் கூறப்பட்டது. மேலும் மறைமுகமாக பழங்குடிகளின் நிலங்களுக்கு பட்டா மறுப்பு, வனத்துறை தடை, பள்ளி உள்ளிட்ட வசதிகள், சாலைகள் கட்ட மறுப்பு என வனத்துறையின் தடைகள் தொடர்ந்தன. மாநில அரசுகள் அதிகாரம் இங்கு செயலிழந்து போனதாகவே வனப்பகுதி மக்கள் கருதினர்.

வனத்துறையின் அதிகாரம் ஒரு பக்கம் பெருகியது. பல சட்டங்கள் வனத்துறையினரை வனப்பகுதி முடியரசர்கள் போல மாற்றியது. மக்களைக் கைது செய்யும் அதிகாரம், எல்லாவற்றையும் தடை செய்யும் அதிகாரம், தன்னால் கைது செய்யப்பட்டவனே தன்னை நிரபராதியென நிரூபித்துக்கொள்ளும் அளவு அதிகாரம் வனத்துறை வசம் குவிந்தது. ஆனால் வனப்பகுதிகளின் எண்ணிக்கை சுருங்கியது. வன மாப்பியாக்கள் பெருகினர். வனப்பகுதிகளில் சுரங்கம் தோண்ட அனுமதி, மரம் வெட்ட அனுமதி என முரண்பாடு அதிகரித்தது. பழங்குடிகள் தங்களின் வாழ்வுரிமைக்காக போராடத் துவங்கினர். வனப்பகுதிகளில் செங்கொடிகள் உயர்ந்து பறக்கத்துவங்கின. அரச அரச வன்முறை கோரத்தாண்டவம் ஆடும் நிலை உருவானது.

மக்கள் போராட்டத்தின் பலனாய் 2006 ஆண்டு வன உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. பழங்குடிகள் கைகளில் வனம் இருக்கும் போதே வனம் வாழும் என இந்திய பாராளுமன்றம் ஒப்புக்கொண்டது. வனத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் வனப்பகுதி மக்களின், அவர்களின் கிராமசபை ஒப்புதல் தேவை என சட்டம் கூறியது. பழங்குடி மற்றும் வனப்பகுதி மக்களுக்கு நில உடமையை அங்கீகரித்தது. ஆனால் இந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் பல முட்டுக்கட்டைகள் வழக்குகள் வடிவிலும், வனத்துறை அதிகார வர்க்கத்திடமிருந்தும் வந்தது. வனத்துறை தனது அதிகாரம் மக்களிடம் சேர்வதை விரும்பவில்லை; இச்சட்டத்தினை அலட்சியம் செய்யத் துவங்கியது.

இதற்கிடையே தமிழகத்தில் மேற்கு மலை தொடர்ச்சியில் புதிதாக சத்தியமங்கலம், மேகமலை பகுதிகளை புலிகள் சரணாலயம் என அரசு அறிவிக்கும் முயற்சி நடந்து வருகின்றது. சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளும் இதனை எதிர்த்து தீர்மான‌ம் நிறைவேற்றின; போராடத் துவங்கியுள்ளன.

இது ஒரு புறமிருக்க கடந்த 2012 ஜூலை 24 உச்ச நீதிமன்றம், புலிகள் பாதுகாப்பு ஆணையம் தாக்கல் செய்த வழக்கில் புலிகள் வனப்பகுதியில் சுற்றுலாவை தடை செய்தது. மேலும் புலிகள் சரணாலயப்பகுதிகளில் மையப்பகுதியைச் சுற்றியுள்ள தாங்குதளப்பகுதியான buffer zone என்ற பகுதியினை அமைக்காத தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் 3 வார காலத்துக்குள் அமைக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் ரூ 50000 அபராதம் என உத்திரவிட்டது.

இந்த வனத்தாங்குதளப்பகுதியை உருவாக்குவதற்கு முன் அப்பகுதி மக்களின் ஒப்புதல், கிராம சபை மற்றும் அறிவியல் பூர்வமான ஆய்வு அவசியம். மூன்று வார காலம் அதற்குப் போதாது என அரசு கேட்பதற்கு பதில் அவசர அவசரமாக வனத்தின் புலிகள் சரணாலயப் பகுதிகளைச் சுற்றி இந்த பகுதிகளை மூன்று இடங்களில் அறிவித்து விட்டது. இந்த தாங்குதளப்பகுதியான (buffer zone) பகுதியில் எதைச் செய்யலாம், எதைச் செய்யக்கூடாது என இன்று வரை அரசு எந்த சட்ட வரையறையும் விதிக்கவில்லை. முழுக்க வனத்துறை அதிகார வர்க்கம் தன்னிச்சையாக எடுக்கும் முடிவுக்கு மக்கள் கட்டுப்படவேண்டும்.

1) ஆனைமலை புலிகள் சரணாலயத்தின் வடக்கு, கிழக்கு எல்லைகள் மற்றும் மன்னவனூர், பூம்பாறை, பழனி மலை, கொடைக்கானல் மலையில் சில வருவாய் பட்டா பகுதி சேர்த்து மொத்தம் 521 சதுர கிலோ மீட்டர் பகுதியும் தாங்கு தளப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயப்பகுதி என அறிவிக்கப்பட்ட 958 சதுர கிலோ மீட்டருடன் சேர்ந்து மொத்தம் 1479 சதுர கிலோ மீட்டர் பொள்ளாட்சி வனக்காப்பாளர் கட்டுப்பாட்டில் வந்து விட்டது.

2) முதுமலை வனப்பகுதியில் தென் மற்றும் கிழக்கு பகுதி, நீலகிரி வடக்கு, கூடலூர் பகுதி(சிங்காரா,செங்கூர் பகுதி), நீலகிரி தென் பகுதியான தெங்குமராட்டா பகுதி என 367 சதுர கிலோ மீட்டர் பகுதி வனத் தாங்குதள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயம் 321 சதுர கிலோமீட்டர் ஆகும். இந்த தாங்குதளப்பகுதியுடன் சேர்த்து 688 சதுர கீமீ வனக்காப்பாளரின் கட்டுபாட்டில் வந்துவிட்டது.

3) களக்காடு முண்டந்துறை பகுதியில் கன்னியாகுமரி வனவிலங்கு பூங்கா பகுதி குற்றாலம் பகுதிகள் சேர்ந்து 706 சதுர கீமீ பகுதி தாங்குதளப்பகுதியாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புலிகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்ட பகுதி 895 சதுர கீமீ ஆக மொத்தம் 1601 சதுர கீமீ பகுதி வனத்துறையின் முழு கட்டுப்பாட்டில் வந்துவிட்டது.

மேற்கண்ட பகுதிகளில் பல பஞ்சாயத்துகள் வருகின்றது. இப் பஞ்சாயத்துக்களில் அரசு எந்த கருத்து கேட்பும் நடத்தவில்லை. மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்குக் கூட வனத்துறை எஜமானர்களின் தயவுக்காக இனி எதிர்நோக்கவேண்டும். ஆனால் மக்கள் மற்றும் கிராம சபை ஒப்புதல், அறிஞர்களின் அறிவியல் பூர்வ ஆய்வு என பல செய்து இப் பகுதிகளை வன தாங்குதளப்பகுதியாக அறிவித்ததாக அரசு ஆணை கூறுகின்றது. G O ms 199,200.201 forest and environment13 august 2012

புலிகளுக்காக கரிசனப்படும் அதிகார மையம் பழங்குடி மற்றும் வனம் சார்ந்துவாழும் மக்களைப் பற்றி எந்த அக்கறையும் காட்டவிலை. இந்தப் போக்கு வன உரிமைச்சட்டத்தில் கூறியுள்ள அடிப்படைக் கருத்தான வனத்தினை பழங்குடிகளே ஆளும் நிலையினை உருவாக்குவதற்கு (forest stewardship) எதிரானது. அரசியல் கட்சிகளுக்கு இது பற்றிய பார்வை சிறிது கூட இல்லை என்றே சொல்லலாம். பழங்குடி மக்கள் புலிகளுக்கு எதிரானவர்கள் இல்லை. காலம் காலமாய் வன விலங்குகளுடன் இரண்டறக் கலந்து வாழ்பவர்கள். வனப்பகுதி மக்களை வனத்திலிருந்து அப்புறப்படுத்தவே அதிகார மையங்களுக்கு புலி சாக்கு தேவைப்படுகின்றது. உண்மையில் நேர் எதிராய் நிறுத்தப்படும் புலியும் பாவம், பழங்குடி மக்களும் பாவம். புலிகள் அருகி வரும் உயிரினம் (endanger species) என அங்கலாய்க்கும் அரசாங்க அதிகார வர்க்கம் பழங்குடிகளும் அவர்களின் சமூகமும் இந்தப் பட்டியலில் உள்ளதை ஏனோ அறிய முயலாதவர்கள் போல நடிக்கின்றனர். இந்த அநீதிக்கு எதிராய் அணிதிரள்வோம்.

- ச.பாலமுருகன், மாநிலச்செயலர், மக்கள் சிவில் உரிமைக்கழகம்

Pin It