'பங்குத்தானி'யா? அது என்ன? வேறு ஒன்றும் இல்லை. உங்களுக்குப் புரியம்படியாக, 'Share Auto' என்றே சொல்லி விடுகிறேன். 'Auto' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, பொருத்தமான தமிழ்ச்சொல், 'தானி' என்பதை, யாழ்ப்பாணத் தமிழர்களிடம் இருந்து அறிந்து கொண்டேன். 'Auto' என்றால், தானே இயங்குவது; அதாவது, 'தானியங்கி'; சுருக்கமாக, 'தானி.' சரிதானே? எனவே, 'Share Auto' என்பது, 'பங்குத்தானி' ஆயிற்று. இதில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், வேறு ஏதேனும் பொருத்தமான சொல் இருந்தால் தெரிவியுங்கள்.

share_auto_390நான் கடந்த 17 ஆண்டுகளாக, சென்னையில் 'ஈருளை வண்டி' (இருசக்கர வாகனம்தான்) ஓட்டுவதால், தானிகளில் பயணித்தது குறைவுதான். ஒரு மாதத்துக்கு முன்பு ஓரிடத்தில் சறுக்கி விழுந்து முட்டியில் அடிபட்டதால், ஒரு வாரம் நடக்க முடியவில்லை. வீட்டில்தான் ஓய்வு. அதற்குப் பின்னர், பங்குத்தானிகளில் பயணிக்கத் தொடங்கினேன். ஒரு மாத காலப் பயணங்களில் கிடைத்த, சுவையான செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

தானிகளின் அட்டகாசம்

40 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு கருப்பு வெள்ளைத் திரைப்படத்தில் ஒரு காட்சி. படத்தின் பெயர் நினைவு இல்லை. நடிகை மனோரமா, தன் உறவினரைத் தேடி, கையில் மூட்டை முடிச்சுகளோடு சென்னைக்கு வந்து இறங்குவார். தொடர்வண்டி நிலையத்துக்கு முன்பாக ஒரு தானியில் ஏறி, முகவரியைத் தேடி அலைவார். கண்டுபிடிக்க முடியாது. ஒரு கட்டத்தில், தானி ஓட்டுநர், “இதற்கு மேல் தேட முடியாது; 40 ரூபாய் கொடு; நான் போகிறேன்” என்பார். அதிர்ச்சி அடைந்த மனோரமா, 'என்னது? நான் கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு வந்ததற்கே ரயில்ல 25 ரூபாதான் டிக்கெட்டு; நீ நாற்பது ரூபா கேட்கிறியே?' என்பார்.

அந்தக் காட்சி, தானிகளைப் பொறுத்தவரை இன்றைக்கும் மாறவில்லை. அன்று, 40 ரூபாய்; இன்று 300, 400 ஆகி இருக்கின்றது. இப்போது, சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில், மதுரைக்குக் கட்டணம் ரூ.300 என்றால், முகப்பேரில் இருந்து, எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்குக் கட்டணம் 300, மையத் தொடர்வண்டி நிலையத்துக்கு 350. கேட்கிறார்கள். மொழி தெரியாத வட இந்திய மார்வாடிக் குடும்பங்கள், கையில் பெட்டி படுக்கைகளோடு வந்து மாட்டிக்கொண்டால், அவ்வளவுதான். 500/1000 எனக் கறந்து விடுவார்கள்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் (2009), சென்னையில் தானிகளின் ஆதிக்கம்தான் மேலோங்கி இருந்தது. அவர்கள் வைத்ததுதான் சட்டம். அனைத்துப் போக்குவரத்துக் காவலர்களும் சகட்டுமேனிக்கு வாங்கித் தள்ளிய இலஞ்சப்பணம் எல்லாம், மனைவி, பிள்ளைகள் பெயரில் தானிகளாக மாறி, சாலைகளில் ஓடத் தொடங்கின. அதனால், தானிகளின் எண்ணிக்கை வகைதொகை இன்றிப் பெருகிக் கொண்டே இருந்தது. தானி ஓட்டுநர்கள், எந்தச் சட்டதிட்டங்களுக்கும் கட்டுப்பட்டது இல்லை. கட்டணத்தைப் பொறுத்தவரையில், அவர்கள் வாயில் வந்தபடி கேட்கின்ற தொகைதான். இல்லை என்றால், குறைத்துக் கேட்டால், வசைமாரிப் பொழிந்து விடுவார்கள். 'கயிதே, கஸ்மாலம், பேமானி, டோமர், உம் மூஞ்சில பீச்சாங்கையை வைக்க, சாலையில் நடந்து செல்கிற அப்பாவி குறுக்கே வந்துவிட்டால் அவரைப் பார்த்து, வூட்டுல சொல்லிட்டு வந்திட்டியா, என்பது போன்ற, ஆட்டோக்காரர்களின் மொழியை, நடிகர் விவேக் ஒரு படத்தில் எடுத்துக்காட்டுவார். படிக்காத ஓட்டுநர்களின் மொழி அது.

பங்குத்தானிகளின் வருகை

இந்தச் சூழ்நிலையில், ஒரு எளிய போக்குவரத்து மக்களுக்குப் பெருந்தேவையாக இருந்தது. அந்த இடத்தை, பங்குத்தானிகள் பிடித்துக் கொண்டன. திடீரென ஒருசில நாள்களில், ஏராளமான பங்குத்தானிகள், சென்னை நகர வீதிகளில் வலம் வரத் தொடங்கின. அதன் பின்னணியில், அப்போதைய ஆளுங்கட்சியினரின் பினாமிகள் இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இருப்பினும், பங்குத் தானிகளின் வருகையை மக்கள் வரவேற்றனர். பெரும்பாலும், Tata Magic வண்டிகள்தாம். முன் இருக்கையில் ஓட்டுநருக்கு அருகில் இருவர், உள்ளே மூன்று அல்லது நெருக்கியடித்துக் கொண்டு நான்கு பேர், பின்னால் இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளில் இருவர், என 12 முதல் 15 பேர் வரை பயணிக்கின்றார்கள்.

சென்னை மாநகரில், நடுத்தரக் குடும்பத்துப் பயணிகளுக்கு 'இருபத்து ஒன்றாம் நூற்றாண்டு அளித்த கொடை' என்றே சொல்ல வேண்டும். அது, தானிகளின் முற்றுரிமையை, ஏகபோகத்தைக் கட்டுப்படுத்தி இருக்கின்றது. தானி ஓட்டுநர்களின் அட்டகாசத்தை மட்டுப்படுத்தி இருக்கின்றது. குறைந்த கட்டணத்தில் வசதியான போக்குவரத்தாகவும் அமைகிறது. மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வாங்குகின்ற கட்டணத்தை விட, ஒன்றிரண்டு ரூபாய்கள்தான் அதிகம். நினைத்த இடத்தில் ஏறி, நினைத்த இடத்தில் இறங்கிக் கொள்ளலாம். முன்பெல்லாம், தானிகளைப் பார்க்கும்போதே அதிர்ச்சியாக இருக்கும். தானிகள் பக்கத்தில் வந்தாலே மக்கள் விலகிச் சென்ற நிலை மாறி, இப்போது, பேருந்து நிறுத்தத்தில் நீண்ட நேரம் காத்துக்கொண்டு இருக்கும்போது, தொலைவில் வருகின்ற பங்குத்தானிகளைப் பார்க்கும்போதே, மக்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.

share_auto_300வடமேற்குச் சென்னையில், நான் வசிக்கின்ற நொளம்பூரில் இருந்து, சென்னை மாநகருக்குள் வருவதற்கு, அம்பத்தூர் ஓ.டி. முகப்பேர் மேற்கு, கோல்டன் ஃபிளாட், அண்ணா நகர் மேற்கு ஆகிய இடங்களில் இருந்து, தியாகராய நகர், எல்.ஐ.சி. ஜெமினி ஆகிய இடங்களுக்கு, நுங்கம்பாக்கம் வழியாகச் செல்கின்ற வழியில் ஏராளமான பங்குத்தானிகள் ஓடுகின்றன. ஆனால், சென்னை எழும்பூர் தொடர்வண்டி நிலையத்துக்கு பங்குத்தானிகள் வருவதை, அங்கே உள்ள தானி ஓட்டுநர்கள் அனுமதிப்பது இல்லை. மிரட்டி, விரட்டி விடுகிறார்கள்.

இடையூறுகள்

பங்குத்தானிகளின் திடீர் வருகை, தானி ஓட்டுநர்களை அதிர்ச்சி அடையச் செய்து விட்டது. எனவே/ பங்குத்தானிகளைத் தடை செய்யக் கோரி, தானி ஓட்டுநர் தொழிற்சங்கத்தினர், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்களை நடத்தினார்கள். ஒன்றும் நடக்கவில்லை. தானி ஓட்டுநர்களுக்கு என்ன சட்டமோ, அதுதானே பங்குத்தானிக்கும்? தானி ஓட்டுநர்கள், என்றைக்காவது, அரசு விதித்த கட்டணங்களுக்கு ஆள்களை ஏற்றிச் சென்றது உண்டா? அவர்கள் யாருக்கும், எப்போதும் கட்டுப்பட்டதே கிடையாதே? இருப்பினும், போக்குவரத்துக் காவலர்கள், பங்குத்தானிகளின் இயக்கத்தை, இடையில் சில நாள்கள் நிறுத்தியும் வைத்தார்கள். ஆனால், நடுத்தர மக்களின் தேவை, போக்குவரத்து நெருக்கடியால், பங்குத்தானிகள் மீண்டும் ஓடத் தொடங்கி விட்டன. தங்கள் பாதுகாப்புக்காக, அன்றைய ஆளுங்கட்சியின் இருவண்ணத்தைப் பூசிக்கொண்டன. அல்லது, முதல்வர், துணை முதல்வர் படங்களைப் போட்டுக் கொண்டார்கள். தங்களுடைய அரசியல் பின்புலங்களைக் காட்டிக் கொண்டார்கள். அதனால், தானி ஓட்டுநர்களாலும், போக்குவரத்துக் காவலர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இப்போது, பங்குத்தானிகளுக்கான தொழிற்சங்கங்களும் உருவாகி வருகின்றன. அதிலும் போட்டி ஏற்பட்டு விட்டது. ஒருமுறை, நான் பயணித்த வண்டியில், முன்பக்கக் கண்ணாடியில், ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத்தின் அடையாளம் இருந்தது. வழியில் நான்கு பேர் நின்று வண்டியை மறித்து, 'உனக்கு ஒரு பிரச்சினை என்றால், அந்தச் சங்கத்துக்காரன் உன்னைப் பாதுகாக்க மாட்டான்; இனி நம்ம சங்கத்துக்கு மாறிக்கொள்' என்று அன்போடு, ஆம் அன்போடுதான், அந்த ஓட்டுநரிடம் கூறி, தங்கள் சங்கத்து அடையாள அட்டையை ஒட்டினார்கள்.

பங்குத்தானிகளுக்கு, ஒரு நாள் தண்டம் ரூ.100 என, போக்குவரத்து காவல்துறையினர் வரையறை வகுத்து விட்டனர். காலையில் முதலாவது பயணத்திலேயே பிடிபடுவதும் உண்டு. அப்போதெல்லாம் 'கையில காசு இல்ல சார்; அடுத்த ரவுண்டுல தாரேன்' என்பார் ஓட்டுநர். ஆனால், வழிநெடுகிலும், ஐந்து அல்லது ஆறு இடங்களில், போக்குவரத்துக் காவலர்களைக் கடந்து செல்ல வேண்டும். அதற்கு இடையில், எப்படியும் பொறி வைத்து, மடக்கிப் பிடித்து விடுவார்கள். எனவே, நாள்தோறும் தண்டம் கட்டிய சீட்டை, போக்குவரத்து காவலர்களின் கண்களில் படுமாறு, முன்புறம் உள்ள கண்ணாடியில் சொருகி வைக்கின்றார்கள். இப்படியாக, மாதம் ரூ 3000 வரையிலும், தண்டத் தொகையாகப் போகிறது. காவல்துறை அந்தப் பணத்தை அரசுக்குக் கட்டுகிறதா? அல்லது அந்தத்துறையே கையாள்கிறார்களா? என்பது தெரியவில்லை.

ஓட்டுநர்களோடு உரையாடியபோது..

பங்குத்தானி ஓட்டுநர்களோடு பேச்சுக் கொடுத்துப் பார்த்தேன். காலை 6 மணி முதல், ஒரு நாளைக்கு, நான்கு அல்லது ஐந்து முறை சுற்றுவார்களாம். இரவு 7 அல்லது 8 மணியோடு, அன்றைய பயணத்தை முடித்துக் கொண்டு வீட்டுக்குப் போய்விடுவார்களாம். நாளொன்றுக்கு, 1500 முதல், 2000, 3000 வரை கிடைக்கிறதாம். பங்குத்தானி ஓட்டுநர்கள் எல்லோருமே சொந்த வண்டி வைத்து இருக்கின்றார்கள் என்று சொல்ல முடியாது. வாடகை, பெட்ரோல் போக, ஒரு நாளைக்கு, 500, 1000, அதற்கு மேலும் மிஞ்சுமாம். திடீரென ஏதேனும் கருவி பழுதுபட்டால், அன்று கிடைக்கின்ற லாபம் அதில் போய்விடும்.

ஒருமுறை நான் பயணித்த வண்டியின் ஓட்டுநர், நுங்கம்பாக்கம் தொடர்வண்டி நிலையம் அருகே உள்ள விளக்கு நிறுத்தத்துக்கு (Signal) அருகில் வண்டியை நிறுத்தி, ஆள் ஏற்றினார்; சடேரென்று ஒரு சத்தம்; லத்திக்கம்பால் ஒரு அடி; ஓட்டுநருக்கு வலது புறம் இருந்த கண்ணாடி, சுக்கல் சுக்கலாக நொறுங்கிக் கீழே விழுந்தது. 'முன்னால போடா' என்ற ஆங்காரக் குரலைக் கேட்டுத்தான், அது போக்குவரத்துக் காவலரின் அதிரடி என்பது புரிந்தது. அந்த ஓட்டுநரோ, அன்று காலையில் இருந்து வண்டியை எடுக்க முடியாமல், பழுது பார்த்து, மாலையில்தான் எடுத்து வந்தார். வரவு எதுவும் இல்லை. அதற்குள், 200 ரூபாய் இழப்பு. அந்த வேதனையில், போக்குவரத்து காவலரை அவரது குடும்பத்தினரையும் சேர்த்து, மனம்போன போக்கில், வசைபாடிக்கொண்டே வந்தார். பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

சில ஓட்டுநர்கள் பணத்தை இடது கையில் சொருகி வைத்துக்கொண்டு முழுத் தொலைவுக்கும் வண்டி ஓட்டுகிறார்கள். சிலர், வட்டுக்கு உள்ளே ஒரு சிறிய பையைத் தொங்க விட்டு இருக்கின்றார்கள். இறங்கும்போது, 500 ரூபாயை நீட்டுபவர்களும் உண்டு. இரவானால், சில்லறை இருக்கும். சிலர் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை வாங்காமல் போகிறார்கள். ஒருசில வண்டிகளில்தான், கட்டணத்தை வாங்குவதற்கு, ஒரு சிறுவன் உதவியாளராக இருக்கின்றான். பெரும்பாலும் ஓட்டுநர் மட்டும்தான். சில வேளைகளில், பயணிகள் சொல்லாமல் கொள்ளாமல் இறங்கி ஓடிவிடுவதும் உண்டு.

சென்னை தரையடித் தொடர்வண்டிக்கான (மெட்ரோ) பணிகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதால், ஆங்காங்கு சாலைகளைக் குறுக்கி விட்டார்கள். காலை 7 மணி முதல் 11 மணிய வரையிலும், மாலை 5 மணி முதல், 8.30 மணி வரை, நுங்கம்பாக்கம், நெல்சன் மாணிக்கம் சாலையில், நுழைந்து, வெளியேறும்போது, இமயமலையில் ஏறி இறங்கியது போன்ற ஒரு பெருமித்தை, ஓட்டுநரின் முகத்தில் பார்க்கலாம். அதற்குப்பிறகு, அவர் சரேலென வட்டைப் பிடித்துப் பாய்ந்து செல்லுவார். தளையில் இருந்து கட்டுகளை அறுத்துக் கொண்டு பாய்கின்ற மாடுகளைப் போல, பந்தயங்களில் பாய்ந்து செல்லுகின்ற கார்களைப் போல இருக்கும் அந்தக் காட்சி.

ஒருநாள், எத்திராஜ் கல்லூரி அருகே வண்டிக்குள் ஏறிய ஒருவர், அந்த நெருக்கடியிலும், கையில் வைத்து இருந்த ஆங்கில நாவலை, தலைநிமிராமல் வாசித்துக் கொண்டே வந்தார். வழக்கம்போல நெல்சன் மாணிக்கம் சாலையில் வண்டி சிக்கிக்கொண்டது. அப்போதுதான், தலைநிமிர்ந்து பார்த்த அவருக்கு தன் கையில் காசு இல்லை என்பது நினைவுக்கு வந்தது.நெல்சன் மாணிக்கம் சாலையில், ஒரு ஏடிஎம் கருவியைப் பார்த்த உடன் ஓட்டுநரிடம் ஒன்றும் சொல்லாமல் திடீரென இறங்கிப் போய் விட்டார். சிறிது நேரம் கழித்துத் திரும்பிப் பார்த்த ஓட்டுநர், அவரைக் காணாமல் வசைபாடினார். வண்டி ஒவ்வொரு அடியாக முன்னேறிக் கொண்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து அந்தப் பயணி திரும்பி வந்து வண்டியில் ஏறிக்கொண்டார். அதற்குள் ஓட்டுநர் உதிர்த்த வசைமொழிகளைத் திரும்பப் பெற முடியாதே?

தானிகளைப் போலவே மூன்று உருளைகளுடன் பெரிய அளவிலான பங்குத்தானிகளும் இருக்கின்றன. அவையெல்லாம், ஒட்டுப் போட்டவைதான். ஒவ்வொரு உதிரிக் கருவிகளும், ஒவ்வொரு வண்டியில் இருந்து எடுத்துச் சேர்க்கப்பட்டு இருக்கும். அது எந்தத் தொழிற்கூடத்தில் கட்டப்படுகிறது என்பது தெரியவில்லை. சற்றே பெரிய வண்டியாக இருந்தால், அது அங்கும் இங்கும் தள்ளாடிக்கொண்டே செல்கிறது. ஆங்காங்கு வண்டியை நிறுத்தி ஆள்களை ஏற்ற வேண்டி இருப்பதால், யார் முந்திச் செல்வது என்பதில், பங்குத்தானி ஓட்டுநர்களுக்கு இடையே ஒரு பந்தயமே நடைபெறுகிறது.

டாடா மேஜிக் வண்டிகளில், பயணிகள் ஏறி, இறங்குவதற்காக, ஒரு நாளில், குறைந்தது 200 முறை கதவைத் திறந்து மூடுகிறார்கள். கதவுகள் விரைவில் பழுது அடைந்து விடுகின்றன. எனவே, முகப்பேர் பகுதியில் உள்ள மரங்களில், 'பங்குத்தானிகளின் கதவு பழுது பார்த்துத் தரப்படும்' என்ற விளம்பரங்கள் முளைத்துவிட்டன. அதேபோல, ஏராளமான பயணிகள் ஏறி இறங்குவதால், இருக்கைகளும் பழுது விரைவில் கிழிந்து விடுகின்றன. உடடினயாகப் புதிய இருக்கைகள் மாற்றுவதற்கு செலவு அதிகமாகும் என்பதால், சில வண்டிகளில் கிழிந்ததை மட்டும் தைத்து இருக்கின்றார்கள்.

பயணிகள்

பங்குத்தானிகளில் இடவசதி குறைவு என்றாலும், பயணிகள் நெருக்கியடித்துக் கொண்டு உட்கார்ந்து கொள்கிறார்கள். வசதிக்குறைவு குறித்து முணுமுணுப்பது இல்லை. ஆனால், அந்த நெருக்கடிக்குள்ளும் சிலர் அலைபேசியில் பேசிக்கொண்டே வருவார்கள். அதுதான் பெரிய தொல்லை. வடக்கு, வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்கள், 'அண்ணா, ஸ்டாப்' என்று சொல்லுவதே, ஒரு அழகு. அவர்கள் தமிழ் பேசுவதே, கொஞ்சுவது போல இருக்கும்.

தாய்லாந்து நாட்டின் தலைநகர் பாங்காக் நகரில், தானிகளை துக் துக் என்று அழைக்கின்றார்கள். சத்தம் அப்படி வருவதால் அதற்கு அந்தப் பெயர். லுடிரவரநெ இணையத்தில் அந்த வண்டிகளை பார்க்கலாம். பல வண்ணங்களைத் தீட்டி இருப்பார்கள். அதில் பயணித்தே தீர வேண்டும் என்ற உணர்வை, சுற்றுலாப் பயணிகளிடம் ஏற்படுத்தும். நானும் ஏறிச் சுற்றி இருக்கின்றேன். அதுபோல, சுற்றுலா பயணிகளுக்கு என்று, தானிகளுக்க ஒரு வெளிறிய மஞ்சள் வண்ணத்தைத் தேர்ந்து எடுத்தார்கள். பார்க்கவே சகிக்காது. புது வண்டியே, பழைய வண்டி போலத் தோற்றம் அளிக்கும்.

தானி ஓட்டுநர்கள், வெள்ளைக்காரர்களைக் கண்டால், ஐநூறு, ஆயிரம் எனவும், டாலரில் கட்டணம் பிடுங்குவதையும், நான் பார்த்து இருக்கின்றேன். கேட்டால், 'வெள்ளைக்காரன் நம்ம நாட்டில் இருந்து எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டு போனான்? அதையெல்லாம் இப்படித்தான் பிடுங்க வேண்டும்' என்றும் சிலர் விளக்கம் அளிப்பார்கள். வெள்ளை நிறத்தவர்கள் அனைவருமே, இங்கிலாந்துக்காரர்களாக என்ன? சொல்லப்போனால், இங்கிலாந்து என்பது, நமது ஆந்திரப் பிரதேச மாநிலத்தை விடச் சிறிய நாடுதான். ஐரோப்பா, அமெரிக்கக் கண்டங்களில் வாழுகின்ற சுமார் 200 கோடி மக்கள், வெள்ளைக்காரர்கள்தான்.

எனவே, அத்தகைய அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள், இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்ளும்போது, பங்குத்தானிகளில் பயணித்தால், அவர்களுக்கும் செலவுகள் குறையும். அவர்கள் தங்கள் நாட்டவரிடம் கூறுவார்கள். மேலும், சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கலாம். தமிழ்நாட்டின் பெயரும் கெட்டுப்போகாது. எனவே, பங்குத்தானிகளை முறைப்படுத்தி, அவற்றுக்கு எனத் என ஒரு வண்ணத்தைத் தேர்வு செய்து, வசதிகளையும் கூட்டுவதற்கு, அரசு முன்வரவேண்டும். சென்னை மாநகரத்தின் குறுகிய சாலைகளுக்கு உள்ளே பயணிப்பதற்கு, பங்குத்தானிகளே ஏற்றவை!

- அருணகிரி

Pin It