நிறம், இனம், பால், பிறப்பு, மொழி போன்றவைகளை முன்னரே தீர்மானித்து எவரும் இப்புவியில் பிறப்பதில்லை. அதுபோலவே, தான் ஒரு திருநங்கையாகப் பிறக்க வேண்டும் என எவரும் விரும்பி, பிறப்பதில்லை. எப்படி பெண், ஆண் பிறப்போ அதுபோலத்தான் ‘திருநங்கை’ பிறப்பும். அதற்கு எவரும் எவ்விதத்திலும் பொறுப்பாக முடியாது. சமூகத்தில் ஒரு பெண் கேலிக்குள்ளாக்கப்படும் போது சிலரேனும் உடனே தட்டிக் கேட்கும் நிலை காணப்படும் சூழலில் திருநங்கைகள் பொது இடங்களில் வைத்து பாலியல் சீண்டல்களுக்கே உள்ளாக்கப்பட்டாலும் எவரும் அதை பொருட்படுத்துவதில்லை. அது ஒரு சாதாரண நிகழ்வாகவே பெரும்பாலும் பார்க்கப்படுகிறது.

ஒரு குறிப்பிட்ட நாளில் திடீரென ஒரு ஆணோ, பெண்ணோ திருநங்கையாக உருமாற்றம் அடைந்து விடுவதில்லை. உடல்ரீதியாக ஆணாக, பெண்ணாக இருந்துகொண்டு மனரீதியாக, உணர்வுரீதியாக எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்பவர்களே திருநங்கைகள். தங்கள் பருவவயதை அடையும்போது இதர ஆண், பெண்ணிடமிருந்து தான் வேறுபட்டுள்ளோம் என்றும், எதிர்பாலினத்திற்குரிய உணர்ச்சிகளைக் கொண்டுள்ளோம் என்றும் உணர்கிறார்கள். ஆணின்/பெண்ணின் உடலில் சிறைபடுத்தப்பட்டு பெண்ணாக/ஆணாக உணர்பவர்கள் திருநங்கைகள் என்று பொதுவாக கூறப்படுகிறது. ஆனால் திருநங்கைகள் சிலரும், பிறரும் இது திருநங்கை என்பதற்கான சரியான விளக்கமல்ல என்று கூறுகின்றனர். திருநங்கைகள் பெரும்பாலும் ஆணாகவே பிறப்பதன் காரணமாக அவர்களுக்கு இயற்கையாகவே கருப்பை கிடையாது. அதன் காரணமாய் அவர்களால் மறு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.

பெரும்பாலான திருநங்கைகள் ஆணாகப்பிறந்து பெண்ணாக உணர்பவர்களே. குடும்ப உறுப்பினர்களால் கண்டறியப்பட்டு, திருநங்கையாகப் பிறந்துவிட்ட ஒரே காரணத்திற்காக பல்வேறு சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றப்படுகின்றனர் அல்லது தாங்கள் எதிர்பாலின உணர்ச்சிகளை உணர்வதை அறிந்தவுடன் வீட்டில் சொல்ல பயந்து வீட்டைவிட்டு வெளியேறுகின்றனர். இதன்காரணமாக திருநங்கைகள் அனைவராலும் தான் பிறந்த குடும்பத்துடனும், உள்ளூரிலும் வாழ இயலாமல் வெளியூருக்குச் சென்று வாழ வேண்டிய நிர்பந்தச் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். புனே, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களுர், கோழிக்கோடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு நகரங்களுக்குச் சென்று அங்குள்ள திருநங்கைகளுடன் சேர்ந்து வசித்து வருகின்றனர்.

 பொதுத்தளங்களில் தொழில் மறுப்பு, உழைப்பு மறுப்பு காரணமாக பிச்சையெடுத்தல், பாலியல் தொழிலில் ஈடுபடல், உணவுவிடுதிகள், திருமண நிகழ்வுகளில் நடனமாடுதல் போன்ற தொழில்களில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தி வருவதனுடன் அதன் மூலமான வருவாயினைக் கொண்டு ஆணாக தொடர்ந்து வாழ்ந்திட விருப்பமில்லாமல் “தாயம்மா” எனும் சடங்கின் வாயிலாகவும், அங்கீகாரம் இல்லாத பாலின மாற்று அறுவை சிகிச்சை மூலமாகவும் பெண்ணாக மாறி தங்கள் விருப்பம் போல வாழத் துவங்குகின்றனர். திருநங்கைகள் பலர் ஒன்றிணைந்து “ஜமாத்” என்ற பெயரில் பெரும் குழுவாக நாடு முழுவதும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆண், பெண்ணாக உருமாற்றம் அடைவது இந்தியப் புராணங்களில் தொடர்ந்து வரும் நிகழ்வுகளில் ஒன்றாகும். நாரதர் ஒரு குளத்தில் குளித்துவிட்டு கரையேறும் போது பெண்ணாக மாறினார் என்றும், கானகத்தில் உள்ள ஒரு விருட்சக மரத்தின் நிழலில் உறங்கி எழுந்த இளவரசன் பெண்ணாக மாறிவிட்டான் என்றும், மகாபாரதக் கதைகளில் கூறப்பட்டுள்ளது. கிருஷ்ணர் மோகினி வடிவம் கொண்டது ஐயப்பன் கதையிலும் இடம்பெற்றுள்ளது. அர்ச்சுனன் கிருஷ்ணருடன் ஒரு முறையாவது பாலுறவு கொள்ளவேண்டும் எனும் நோக்கில் 'அர்ச்சுனி' என்ற பெயரில் உருமாற்றம் கொண்டான் என்கிறது பத்மபுராணம். பீஷ்மரை யுத்தத்தில் கொள்ளும் 'சிகண்டி' என்பவர் ஒரு திருநங்கைதான். அதுபோலவே வனவாசத்தில் அர்ச்சுனன் 'பிருகன்னளை' என்ற பெயரில் திருநங்கையாக வாழ்ந்ததாகவே கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் பெரும்பகுதியில் ஆட்சிபுரிந்த கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான அலாவுதீன் கில்ஜி (1296–1316)-ன் ஆட்சிக்காலத்தில் டில்லியில் முக்கியப்பதவிகள் வகித்த அனைவரும் திருநங்கைகளே. கில்ஜியின் அந்தப்புரத்துப் பெண்களாக இருந்தவர்களில் பெரும்பாலனோர் திருநங்கைகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். அடிமையாக இருந்து பின்னர் அலாவுதின் கில்ஜியால் 1000 தினார் விலைக்கு வாங்கப்பட்டு பின்னாளில் அவரது படைத்தளபதியான மாலிக்கபூர், அடிமைவம்சத்தை நிறுவிய பால்பனின் ஆட்சியில் முதல்வராகப் பொறுப்பு வகித்த இமாதுதீன் ரேயான், கில்ஜி வம்சத்தைச் சேர்ந்த அரசரான குதுப்தீன் முபாரக்கின் பிரியத்திற்குரிய அடிமையும், ஆட்சியில் முக்கிய பொறுப்பும் வகித்த குஷ்ருகான், சுல்தான் பெரோஸ் துக்ளக்கிற்கு பின்னர் ஆட்சிக்கு வந்த சுல்த்தான் முகமது ஆட்சியில் முக்கியப்பொறுப்பு வகித்த கருப்பினத்தைச் சேர்ந்த க்வாஜா ஜெகான் மாலிக் சர்வார் என்பவரும் திருநங்கையே என்பதும் வரலாற்றின் வாயிலாக அறியவருகிறது.

 பாலியல் சிறுபான்மையினரான திருநங்கைகள் குறித்து கிறித்தவர்களின் புனித நூலான வேதாகமத்தில் 'அன்னகர்' என்றும் குறிப்பிடப்படுகின்றனர். இசுலாம் சமூகத்தில் பிறந்து பின்னர் வரலாற்றில் வெற்றியாளர்களாய் திகழ்ந்த மாலிக்காபூர், குஸ்ருகான், ஜலாவுதீன்கான் போன்றோர் திருநங்கைகளே. முகலாயர் வம்சத்தினரின் ஆட்சிக்காலத்தில் (1526-1665) அந்தப்புர காவலர்களாக திருநங்கைகளே நியமிக்கப்பட்டுள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான 'சீவகசிந்தாமணி'யிலும் வாத்ஸ்யான‌ரின் 'காமசூத்திரத்திலும்' திருநங்கைகள் தொடர்பான செய்திகள் இடம்பெற்றுள்ளன.

புராணக்கதையான மகாபாரதத்தில் யுத்தம் துவங்கியபோது பாண்டவர்கள் தங்களின் வெற்றிக்காக ஒரு சுத்தவீரனை பலி கொடுக்க வேண்டி அர்ச்சுனனுக்கும், நாகவம்சத்தைச் சேர்ந்த உலுபி என்ற பெண்ணுக்கும் பிறந்த திருநங்கையைத் தேர்வு செய்தபோது அவர் தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பாக இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவித்துவிட விரும்பியபோது, அவர் திருநங்கை என்பதால் அவருக்கு எவரும் பெண் கொடுக்க முன்வராத சூழலில் கிருஷ்ணர் பெண் உருவம் எடுத்து அவரை மணக்கிறார். மறுநாள் திருநங்கை களப்பலி கொடுக்கப்பட்டதும் பெண் உருவிலிருந்த கிருஷ்ணர் தாலி அறுக்கிறார் என்ற புராணக் கதையின் நிகழ்வுதான் அரவாணத் திருவிழாவின் மையமாகும்.

“மொழி, இனம், நிறம், பிறப்பு, பால், சமயம், சாதி, போன்றவைகளின் அடிப்படையில் எவ்வித பாகுபடுத்தலும் கூடாது” என தனிச்சரத்தை இந்திய அரசியலைப்புச் சட்டம் இயற்றப்பட்டு அது கடந்த 62 ஆண்டுகள் பூர்த்தியான பிறகும் இன்றளவும் முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்பதற்கு நம் கண்முன்னர் நிற்கும் காட்சியே, சமூகத்தில் திருநங்கைகள் குறித்த ஒதுக்கலாகும். பாலின உணர்ச்சியானது ஆணிலிருந்து பெண்ணுக்கு எவ்வாறு வேறுபடுகிறதோ அதே போலவே திருநங்கைகளுடைய பாலின உணர்ச்சி வேறுபட்டது. இதன் காரணமாக திருநங்கைகள் ஆண்/பெண்ணைவிட குறைவானவர்கள் என்று எவரும் கருதி விடமுடியாது.

இந்திய தண்டனை சட்டம் பிரிவு 377 திருநங்கைகளுடனான மற்றும் திருநங்கைகளுக்கு இடையேயான புணர்ச்சியானது இயற்கைக்கு முரணான புணர்ச்சியாக, தண்டனைக்குரிய குற்றமாகவும் காண்கிறது. இதற்கு முரணாக டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய சிறப்பு வாய்ந்த தீர்ப்பு தற்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மத்திய அரசும் அதற்கு ஆதரவான கருத்தை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் திருமணம், சொத்துரிமை, தத்தெடுப்பு ஆகிய உரிமைகள் குறித்து திருநங்கைகள் சிந்தித்துப் பார்க்கவே இயலாத நிலையே தொடர்கிறது.

குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கடவுச் சீட்டு, வங்கிக் கணக்கு போன்ற எந்த உரிமையும் நடைமுறை வாழ்வில் திருநங்கைளுக்கு அவ்வளவு எளிதாக சாத்தியமாவதில்லை. தன் சகமனிதனைப் போல எந்த உரிமையையும் முழுமையாக அனுபவிக்க இயலாத துர்பாக்கிய நிலையே நீடித்து வருகிறது. விலங்குகளுக்குக் கூட இங்கே அளித்து வரும் காப்பீட்டுத் திட்டங்கள் திருநங்கைகளுக்கு வழங்கப்படுதற்கு எண்ணற்றத் தடைகள் உள்ளன.
 
திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக சட்ட, சமூக ரீதியாக அங்கீகரித்தல், அயல்நாடுகளில் பாலின மாற்று அறுவைசிகிச்சைக்கு வாய்ப்புகள் உள்ளதுபோல இங்கும் வாய்ப்புகள், தொழில் நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்படல், பெயர், மதம் மாற்றுவதற்கு சட்டப்படியான அங்கீகாரம் இருப்பது போல பாலினம் மாற்றுவதற்கும் சட்ட அங்கீகாரம் அளித்தல், கல்வி, வேலைவாய்ப்புகளில் திருநங்கைகளுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுதல் என்பது போன்ற திருநங்கைகள் மேம்பாடு தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்தலின் மூலம் திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

-இ.இ.இராபர்ட் சந்திரகுமார்

Pin It