முன்னுரை:

கவிதைகளை இயற்றுவதும் அதனைப் பாடல்களாகப் பாடுவதுமாக வாழ்ந்தவர் புரட்சிக்கவி பாரதி. கி.பி பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா, விஜயா, சூரியோதயம், பாலபாரதா, கர்மயோகி போன்ற இதழ்களை புதுச்சேரியில் நடத்தி கட்டுரைகள், கருத்துப்படங்கள், தலையங்கங்கள், விளம்பரங்கள் போன்றவற்றை இதழ்களின் வழியே எடுத்துரைத்த பாரதி அவற்றை மக்களுக்கு விடுதலை உணர்வை ஊட்டும் கருவியாகவும் பயன்படுத்தியுள்ளார். பிரிட்டிஷ் அரசினைத் தாக்க உதவிய இதழ்களுள் ஒன்றான 1910ல் புதுச்சேரியில் வெளியான விஜயா இதழின் அமைப்பினையும் அவற்றின் தன்மையினையும் விளக்கும் அறிமுக ஆய்வுக்கட்டுரையாக இக்கட்டுரை அமைகின்றது. இக்கட்டுரைக்குப் புதுச்சேரியில் உள்ள பாரதி ஆவணக்காப்பகத்தில் தற்போது கிடைக்கப்பெற்றுள்ள 13.01.1910ஆம் தேதி வெளியிட்ட இதழும், 1910 பிப்ரவரி மாதம் வெளியிட்ட 20 இதழ்களும் இவ் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஏனைய பிற இதழ்கள் கிடைக்கப் பெறவில்லை.

விஜயா இதழ் அமைப்பு:

விஜயா இதழ் 26 செ.மீ அகலமும் 38.செ.மீ நீளமும் நான்கு பக்கங்களையும் கொண்டு தினமும் மாலையில் வெளியானது. முகப்பின மேற்பகுதியில் 'விஜயா’ என்று தமிழில் பெரிய எழுத்துக்களிலும் அதன் கீழ் ஆங்கிலத்தில் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவற்றின் கீழ் ‘தினமும் மாலையில் பிரசுரிக்கப்படும்’ என்ற செய்தி காணப்படுகின்றது. விஜயா என்ற எழுத்துக்களின் மேல் அரைவட்டமாக மேலிருந்து கீழ்நோக்கி பிரெஞ்சு நாட்டின் தத்துவமான ஸவதந்திரம், ஸமத்துவம், ஸகோதரத்துவம் என்று தமிழிழும் அதற்கு இணையான பிரெஞ்சு மொழியிலும் LIBERATE - EGALITE - FRATERNITE என்றவாறு அமைந்து காணப்படுகின்றது. வலது பக்க மூலையில் சந்தா விபரமும் அதற்கு எதிர்ப்புறம் சந்தாவின் முறைக்கு எற்ப இதழ்களை அனுப்பும் விபரமும் காணப்படுகின்றது. அதனைத் தொடர்ந்தே தமிழில் ரிஜிஸ்டர் நெ. எம். அஉஎ எனவும் வலதுபக்க மூலையில் ஆங்கிலத்தில் Registered No . M 827 எனவும் அச்சிடப்பெற்றுள்ளது.

இரண்டு கோடுகளை அடுத்து இடதுபுறமிருந்து வலதுபுறமாக புத்தகம் என்றும் (அந்த இதழ் எத்தனையாவது புத்தகம் என்பதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது) அதனைத் தொடர்ந்து புதுவை என்று வெளியிடப்படும் இடத்தின் பெயரையும் தமிழ் வருடம், தமிழ் மாதம், தமிழ்தேதி, கிழமை போன்றவையும் அதனைத் தொடர்ந்து ஆங்கில மாதம், ஆங்கில வருடம், ஆங்கில தேதியும் வலதுபக்க மூலையில் இலக்கம் எனவும் (அந்த இதழ் எத்தனையாவது இலக்கம் என்பதனைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளது) அச்சிடப்பட்டுள்ளது.

சந்தா விபரம்:

இதழின் வலதுபக்க ஓரத்தில் முகப்பு பக்கத்தில் உள்ளது சந்தா விபரம்

ரூ. அ. பை.

வருஷம் 1, $ 10 -0 -0

ஆறுமாதத்திற்கு $ 05 -0 -0

மூன்றுமாதத்திற்கு $ 02 12 -0

தனிப்பிரதி $ 00 00 06

இத்தகைய சந்தாவிளம்பரம் பார்வைக்குத் தெரியும்படியான அமைப்பில் கட்டத்திற்குள் அமைக்கப்பட்டுள்ளது. இது விஜயா இதழுக்கு மட்டுமே பொருந்தும். பாரதியின் ஏனைய இதழ்களான இந்தியா, சூரியோதயம் போன்ற இதழ்களில் சந்தா விபரம் மாறுபடுகின்றது.

இதழின் இடதுபக்க ஓரத்தில் வெளிநாட்டுக்கான குறிப்பு காணப்படுகின்றது.

அதன் விபரம் ‘வெளிநாடுகளுக்குச் சந்தா உள்நாட்டைப் போலவே பிரான்ஸ் காலனியல்லாத இதர நாடுகளுக்கு அவ்வவ் வாரத்துப் பத்திரிகைகளை வாரம் ஒரு முறையாகச் சேர்த்து அனுப்பப்படும்’ என்ற செய்தி கட்டத்திற்குள் அச்சடிக்கப் பட்டுள்ளது.

அச்சுக்கூடம்:

“ நமது இந்தியா விஜயா பத்திரிகைகளை அச்சடித்து வந்த ஸ்ரீசரஸ்வதி அச்சியந்திர சாலையானது அடுத்த வாரம் புதுவை வழுதாவூர் வீதி 10வது நெ.கிரகத்துக்கு மாற்றப்பட போகிறபடியால் இனிமேல் நமக்கெழுதும் கடிதம், மணியார்டர் முதலியவைகளை மேற்கண்ட விலாசத்திற்கே அனுப்பக் கோருகிறோம் -பத்திராதிபர்”1 (இந்தியா புதுவை 22.01.1910) புதுச்சேரியில் விஜயாவைத் தொடங்கும் முன்னரே இந்தியா இதழைத் தொடங்கிவிட்டார். அதன் காரணமாக விஜயா இதழுக்காக தனியொரு அச்சுக்கூடம் தேவையற்றதாக கருதப்பட்டு இந்தியா இயங்கி வந்த அச்சுக்கூடமே விஜயாவுக்குமானது. இதனால் மிகமுக்கியமான செய்திகள் இந்தியாவிலும் விஜயாவிலும் ஒரேமாதிரியான தன்மையில் வெளிவந்தன. சான்று “கொலையுண்ட காவலர் படம்”.2

விஜயா இதழ்பற்றிய விளம்பரம்:

சென்னையில் விஜயா இதழ் 1909 ஜூலையில் நின்றுவிட்டது. அதன்பின்னர் புதுவையில் வெளியான இந்தியா இதழில் விஜயா பற்றிய விளம்பரம் வெளிவந்துள்ளது “பிரதி தினமும் வெளியாகும். நமது பத்திரிகைக்கு முக்கிய நிருபர்கள் ஸ்ரீமான் சுப்ரமண்யபாரதி, ஸ்ரீமான் கா.வரதராஜன் முதலான இன்னும் அனேகர்கள். செப்டம்பர் 12 கிருஷ்ண ஜயந்தியன்று துவங்கி வெளியாகும்”3 என்ற விளம்பரம் காணப்படுகின்றது. (இந்தியா 04.09.1909)

இதனைப்போன்று விஜயா இதழுக்கான ஏஜெண்டுகள் தேவை என்பதற்கான விளம்பரம் ஒன்று இந்தியா இதழில் காணமுடிகின்றது. சான்றாக ‘விஜயா’ என்னும் தலைப்பில் “ஏஜெண்டுகள் வேண்டும்.மிக உதாரமான சன்மானங்கள் கொடுக்கப்படும். தினந்தோறும் புதுச்சேரியில் பிரசுரமாகும் தமிழ்ப்பத்திரிகை. தமிழ் ஜனங்கள், அறிவு, செல்வம், வல்வமை, ஸ்வதந்திரம் முதலிய நன்மைகள் அனைத்தும் பெற வழிகாட்டுகிறது. உலக வர்த்தமானங்களெல்லாம் அடங்கியது. விலை மிகவும் சொற்பம் வருஷத்திற்கு 10ரூபாய் தான். இப்பத்திரிகைக்குச் சந்தாக்கள் சேகரிப்பதையே தொழிலாகக் கொள்பவர்கள் வேறு எந்தத்தொழிலும் விரும்பாமல் கவுரவமான சம்பாத்யம் பெற இடம் உண்டு. 8 சந்தா சேகரித்துக் கொடுப்போருக்கு ஒரு வருஷப் பத்திரிகை இனாமாக அனுப்பப்படும். ஏஜெண்டுகள் சம்பளம் அல்லது கமிஷன் விஷயத்தைப் பின்வரும் விலாசத்திற்கு எழுதிக்கொள்க. மானேஜர் விஜயா பத்திரிகை சாலை, புதுச்சேரி.”4 (இந்தியா 07.09.1909)என்று காணப்படுகின்றது. இதே விளம்பரம் 02.10.1908 மற்றும் 09.10.1909 போன்ற நாள்களில் இந்தியா இதழில் வெளிவந்துள்ளன.

விஜயா இதழைப்பற்றி 1910ல் ஜனவரியில் வெளியான ‘வித்தியா’ இதழில் ‘விஜயா தமிழ் தினசரிப் பத்திரிகை’ ஹிந்து தர்மம், பாரதசரித்திரம், தொழில், கலைகள், சிற்பம், தற்கால நிலை, உலகவர்த்தமானங்கள் இவற்றால் பாரத நாட்டிற்கு விளையக்கூடிய பலாபலன்கள் இவையெல்லாம் இப்பத்திரிகையில் நாடோறும் விவரிக்கப்படும் விஷயங்களாகும். உயர்வு, சுதந்திரம் என்பவற்றை நோக்கங்களாகக் கொண்டு ராஜாங்க சட்டவரம்பு பிறழாமல் இப்பத்திரிகை நடத்தப்படுகின்றது. இதுவரை தமிழ்நாட்டில் இல்லாததோர் புதிய விசேஷம் இப்பத்திரிகையில் நாள்தோறும் சித்திரங்களும் பதிப்பிக்கப்படும். அடிக்கடி சித்திரத் தொகுதியால் அலங்கரிக்கப்பட்ட வியாசகங்கள் எழுதப்படும். ஸ்ரீமத் ஸ்ரீ சுப்பிரமணிய பாரதி முதலியவர்கள் விஷயதானம் செய்வார்கள்”5 (பாரதியாரின் விஜயா, சூரியோதயம், முனைவர் பா. இறையரசன், ப. 4).

விஜயா இதழின் போக்கு

“இந்தியா 23.03.1910 இதழில் விஜயா நாளிதழையும் வாரஇதழாக மாற்றப் போவதாகவும் பிரிட்டிஷ் இந்திய அரசியல் தொடர்பாக எதுவும் இனி எழுதப்போவதில்லை என்றும் அறிவித்துள்ளார் பாரதியார். இந்தியா அலுவலகத்திலிருந்து சென்னை ஆளுநருக்கு ‘அரசியல் கருத்துக்கள் இனி எழுதப்பட மாட்டா’ என்று உறுதிமொழி கொடுத்து மாதிரி இதழுடன் 19.03.1910, 05.04.1910, 14.04.1910, 30.04.1910 ஆகிய நாள்களில் மடல்கள் அனுப்பப் பெற்றுள்ளன.” (பாரதியாரின் விஜயா சூரியோதயம், முனைவர் பா.இறையரசன், ப.10)

பக்கம் 1:

முழுவதும் விளம்பரங்கள் அடங்கிய பத்திரிகையாக பக்கம் 1 காணப்படுகின்றது. இப்பக்கத்தில் பிற இதழ்களின் விளம்பரங்கள், நம் ஏஜெண்டுகள், வெண்பட்டு, இந்தியன் ப்ரின்டர்ஸ் ஏஜென்ஸி சென்னை, மதன கெம்பீர மாத்திரை முக்கிய விளம்பரம் போன்ற வகைமையில் இதழ் அமைப்பு காணப்படுகின்றன.

சான்றாக, ‘விவேகபோதினி’ என்ற தமிழ்ப் பத்திரிகையின் விளம்பரம் காணப்படுகிறது. “ஓர் அருமையான மாதாந்திரத் தமிழ்பத்திரிகை, இப்பத்திரிகையில் பிரசுரமாகும் விஷயங்களாவன 1.ஜாதிமதாசார ஸம்பந்தமானவை, 2. உலக ஒழுக்கங்கள், 3. கல்வியபிவிருத்திக்குரிய பாஷா விஷயங்கள், 4. வியவஹாயம், கைத்தொழில், வியாபாரம், 5. தக்கவர்களைக் கொண்டு எழுதப்பட்டு வரும் நாவல்களும் நாடகங்களும், 6.சிறுவர்க்கான நன்னெறிக் கதைகள், 7.ஸ்தீரிகளுக்கேற்ற நற்போதங்கள், 8. சாஸ்திரீகமான விசேஷ வர்த்தமானங்கள். நமது பத்திரிகைக்கு விஷயதானம் செய்வோர் மிகவும் பிரசித்தி பெற்றவர்களும், உலக அனுபவமுள்ளவர்களும் மிகவும் இனிய செந்தமிழ் நடையில், சிறுவர்கள் சிறுமியர்கள் கூட படிக்கக்கூடிய வண்ணம் எழுதப்படுகிறது.”(விஜயா.1910,பிப்.3) என்றும் இதன்கீழ் சந்தாவிபரம் குறித்த செய்தியும் அச்சிடப்பட்டுள்ளது.

இதனைப் போன்றே ‘லோகூலன்’ தமிழ்ப் பத்திரிக்கையின் விளம்பரமும் ‘ரங்கோன் ரஞ்சிதபோதினி’ என்ற மாதாந்திரப் பத்திரிகையின் விளம்பரமும் ‘விஜயலட்சுமி’ இது ஒரு சிறந்த தமிழ் நாவல் என்று நாவலின் விளம்பரமும் வெளியிடப்பட்டுள்ளன. (விஜயா. பிப்.5,2010)

பக்கம் 2:

தலையங்கம், செய்திப்படம், படத்தின் விளக்கம், தற்காலநிலை, சிற்பம் காணப்படுகின்றன. கருத்துப்படங்கள் போன்று படங்கள் இருப்பினும் இவற்றிற்கான விளக்கம் படத்தின் கீழே தரப்பட்;டுள்ளன. நான்கு பத்திரிக்கைகளாகப் பிரிக்கப்பட்டு முதல்; பத்தியில் ‘விஜயா’ என்ற இதழ்ப்பெயரும் தமிழ் மாதம், தமிழ் வருஷம், தமிழ்த்தேதி போன்றவை இடம்பெற்றுள்ளன. முதல் மூன்று பத்திகளில் தலையங்கமும் அதனைத் தொடர்ந்து மற்றொரு செய்திக்குறிப்பும் காணப்படுகின்றது. இந்தச்; செய்திக் குறிப்பினை சீனிவிசுவநாதன், ஆ.ரா. வேங்கடாசலபதி போன்றோர் துணைத் தலையங்கம் என்று குறிக்கின்றனர். இதழின் முகப்பில் பக்கஎண் தமிழில் உ(2) என்றும், இதழின் பெயரான விஜயா எனவும், கிழமையின் பெயரை வலது ஓரத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. இடது பக்கம் தலையங்கம் காணப்படுகிறது. சான்றாக “திருச்சிராப்பள்ளியில் ஒரு தொழிற்கலா சாலை” என்ற தலைப்பில் தலையங்கம் காணப்படுகின்றது.

இம்மாதிரியான கலாசாலை ஏற்படுத்துவது என்றால் சுலபமல்ல என்பது நாம் சொல்லாமலே விளங்கும். இதற்கு வேண்டிய பணத்திற்கு அளவேயில்லை. படிப்பவர்களிடமிருந்து சம்பளமாக ஏதாவது பணம் கிடைக்குமோ வென்று பார்த்தால் அதற்கு வழியேயில்லை. நம் தொழிலாளிகள் மகா ஏழ்மை நிலையிலிருக்கிறார்கள். அநேக நாட்களில் சாப்பாடுகூட இல்லாமல் ஒருவேளை அரைவயிற்றை நிரப்பிப் படுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் இக்கலா சாலையில் படிக்க வந்தால், தினம் சில்லறை வேலை செய்து சம்பாதிக்கும் அரைவயிற்றுக் கஞ்சிகூட கிடைக்கிறதில்லையென்று வருகிறதுகூட இல்லை. இப்படி இருக்கும்போது கலாசாலையின் சிலவுக்கு யார் கொடுப்பார்கள்? சர்க்கார் தான் கொடுக்க வேண்டும்” (விஜயா 8.2.1910) என்பதாக தலையங்கம் அமைந்துள்ளது.

திருச்சியில் கலாசாலை ஆரம்பிக்கப்பட்டதன் நன்மையினை மக்களுக்கு எடுத்துக்கூறுவதாகவும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக நம் இந்தியர்கள் புதிய தொழிற்சாலையை ஆரம்பித்தது. திருச்சி மட்டுமன்றி தென் இந்தியா முழுவதும் பயன்படத்தக்க வகையில் இதனை மக்களிடம் கொண்டு செல்ல முயன்றமை புலப்படுகின்றது. கல்விப்பயி;ற்சி, முஸ்லீம்களின் ஸபை, பாரத நாட்டின் சிற்பிகளின் சிறந்த திறமை, புதிய பத்திரிக்கைச் சட்டமசோதா மஹாராஷ்டிரத்தில் நடக்கும் நாடகங்கள், தேச நிர்வாஸமானவர்களின் விடுதலை, புதுப்பத்திரிகைச் சட்டம், ஐரோப்பியர்களும் இந்தியர்களுன் உடையும், தென்ஆப்பிரிக்காவுக்குப் போகும் கூலிகளைத் தடுத்தல் போன்றவை விஜயா இதழில் வெளிவந்த சில தலையங்கங்களாகும்.

பக்கம் 3:

இடது பக்க மூலையில் கிழமையின் பெயரும் அதனையடுத்து இதழின் பெயர், வலதுபக்க மூலையில் தமிழ்எண் ங (3) என்று அச்சடிக்கப்பட்டுள்ளது. இந்த மூன்றாம் பக்கம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து வெளிவரும் செய்திக்கோவையாக மாநிலச்செய்திகள், ராய்ட்டர் செய்தி நிறுவனச் செய்திகள் இடம்பெற்றுள்ளன. கல்கத்தா, பம்பாய், லாஹ_ர், பர்மா, பெங்களுர், கிணிகிரி(09.02.1910) போன்ற பகுதிகளில் நிருபர்கள் அளித்த செய்திகளும் ராய்ட்டர் நிறுவனம் வழங்கிய வெளிநாட்டுச் செய்திகளும் இடம்பெறுகின்றன. இவற்றுள் புதுச்சேரியின் செய்திகள் எந்த இதழிலும் வெளிவரவில்லை யென்பது குறிக்கத்தக்கது. தந்திகள்! தந்திகள்! தந்திகள்! தந்திகள் என்றவாறு தலைப்பிட்டு செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன. சான்றாக, கல்கத்தா எனும் தலைப்பின் கீழ் ஸ்ரீ ஞானேந்திர நாதமித்தர், பத்தாவது ஜாட் பட்டாளம், மாணிக்கத்தோலா வெடிகுண்டு அப்பீல் புனர்விசாரணை(விஜயா.03.02.1910) போன்றவை அச்சிடப்பட்டுள்ளன. பம்பாய் என்றதன் கீழ் ஒரு ஆங்கிலச் சிறுவன் சுடப்பட்டான், ஸர்ஜார்ஜ் கிளார்க்கின் வரவு (விஜயா.5.02.1910) போன்றவையும், லாஹ_ர் என்றதன் கீழ் பேட்டியிலா ராஜநிந்தனை வழக்கு, ஆகாஷ் இராஜ நிந்தனை வழக்கு, அம்பாலா வெடிகுண்டு (விஜயா.7.02.1910) போன்ற குற்றவியல் வழக்குகளும் இடம்பெற்றுள்ளன. ராய்ட்டர் செய்திகள் என்ற பகுதியில் பிரான்ஸில் வெள்ளம், ‘லூடியானா’ பாரசீகவர்த்தமானம், பிரெஞ்சு கப்பற்படை போன்ற உட்தலைப்புகளின் செய்திகள் காணப்படுகின்றன.இவற்றோடு சென்னை(விஜயா14.02.1910), தென்னிந்தியா(15.02.1910), பொது (விஜயா.19.02.1910)’ என்று தலைப்பிட்டு தமிழகச் செய்திகள் காணப்படுகின்றன.

இப்பக்கத்தில் ‘ஓர்கடிதம்’ எனும்; தலைப்பில் வாசகர் கடிதம் (விஜயா 15.02.1910) காணப்படுகின்றது. (காலாடி கும்பாபிஷேகம்) தருமம் எனும் மாதாந்திரத் தமிழ்ப்பத்திரிகை பற்றிய விளம்பரமும் காணப்படுகிறது.

பக்கம் 4:

விளம்பரக்களுக்கான பகுதியாக நான்காம் பக்கம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள், குடும்பத்தில் இல்லறம் சிறக்க மன்மத வீரிய புருஷாந்த கவர்ன காந்த இந்திரிய ஸதம்பன லேகியம், உடலில்; தோன்றும் பிரமேகம், வெள்ளை, கொறுக்கை, அரையாப்பு மேகம் முதலானவைகளையும் ஸ்திரீ புருஷகளின் ஜலத்துவாரங்களில் உண்டாகும் எரிச்சல் முதலான ஜாட்டியங்களையும் ஒரே தடவையில் குணமாக்கும் பொலைன்ஸ் மருந்தை வாங்குவோர் தேவை! எனும் விளம்பரங்களும் ஒவ்வொரு இதழ்களிலும் வந்துள்ளன. சான்றாக, 03.02.1910 அன்று வெளியான இதழில் மேலும் பாலபாரதாவின் ஆங்கில விளம்பரம், விதயாவிஹாரினி மாதாந்திர தமிழ்ப்பத்திரிகை விளம்பரம் நமது ஆபிஸில் கிடைக்கக் கூடிய புஸ்தகங்கள் என்ற தலைப்பி;ல் விஜயா பத்திரிகா சாலையில் விற்பனை செய்யப்படும். புத்தகங்களின் பெயரும் விலையும் அடங்கிய விளம்பரம் ‘கர்மயோகி’ எனும் மாதாந்திரப் பத்திரிகை பற்றிய விளம்பரம் போன்றவையும், இந்தியா ஆபிஸ் என்று தலைப்பை ஆங்கிலத்தில் அச்சடித்து அவற்றின் கீழ் ஆங்கில நூல்கள் அவற்றின் விலை போன்றவையும் அப்புத்தங்கள் கிடைக்கும் இடங்களையும் அச்சடித்துள்ளனர். இதுமட்டுமின்றி பனி, பனி என்றும், நம் சகோதர்களே! என்றும் காணப்படும் விளம்பரத்தில் கம்பளிப் போர்வைகள், கெட்டி சாய ஜமுக்காலா போன்ற விளம்பரங்கள் மாறாமல் ஒவ்வொரு இதழிலும் காணப்படுகின்றன. இவற்றில் வெளியிடப்படும் விளம்பரதாரர்கள் கல்கத்தா, பனாரஸ், சேலம், கூடலூர் பழையபட்டணம், சென்னை, ஸ்ரீகாசி. தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் விளம்பரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ளன. தினசரி மாலையில் வெளியிடப்படும் இதழ் என்பதால் பெரும்பாலும் முதல் இதழில் வெளிவந்த விளம்பரங்களே தொடர்ச்சியாக அடுத்தடுத்த இதழ்களிலும் வந்துள்ளன. சொற்ப நாள் தங்குவோம் என்ற விளம்பரம் 03.02.1910 – 05.02.1910 ஆகிய மூன்று நாள்கள் மட்டுமே வந்துள்ளது. பின்னர் அந்த இடத்தில் இந்தியன் ப்ரிண்டர்ஸ் ஏஜென்ஸி பிராட்வே மதராஸ் (சென்னை) என்ற விளம்பரம் தொடர்ச்சியாக வெளிவந்துள்ளது.

முடிவுரை

பிரிட்டிஷ் இந்தியர்களின் முற்றுகையால் புதுச்சேரியில் வந்து இதழ்களை நடத்திய பாரதியின் வாழ்வில் விஜயா இதழ் முக்கியமான ஒன்று. பிரெஞ்சுக்காரர்களின் மந்திரமான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதை பத்திரிகைத் தாங்கி வந்தது என்பதே அதற்கு சான்றாகும். அரசியல் சார்ந்த செய்திகளோடு மக்களுக்குத் தேவையான செய்திகளையும், வணிக ரீதியான செய்திகளையும் தாங்கி வந்துள்ளமை தலையங்கத்தினையும் அவற்றோடு வெளியான செய்திப் படங்களையும் ஒப்பிட்டு நோக்கும்போது விஜயா இதழ் வீரியமான தன்மையில் வெளிவந்துள்ளதை அறிய முடிகிறது.

சு.பா.பாலமுருகன்,
முனைவர் பட்ட ஆய்வாளர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
புதுவைப் பல்கலைக்கழகம்,
புதுச்சேரி – 605 014.

Pin It