'கடவுளின் சொந்ததேசம்' என்று தனக்குத் தானே கிரீடம் சூட்டி பெருமிதம் கொள்கிறது நமக்கு அருகேயுள்ள ஒரு குறுகிய நிலப்பரப்பான கேரளா. உண்மையிலேயே அந்த 'கிரீடத்துக்கு' அந்தப் பிரதேசம் தகுதியானதுதானா...? அண்மைக்கால நிகழ்வுகள் மூன்றை மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு சிறிய ஆய்வு!

முதலாவதாக...

"ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு அறிக்கையை வீசி எறியுங்கள். முல்லைப் பெரியாறு அணையின் வலுவைப் பற்றி முடிவு கூற நீதிபதிகள் ஒன்றும் பொறியியல் வல்லுனர்கள் அல்ல. பொறியியல் அறிவைப் பொறுத்தவரை அவர்கள் தற்குறிகள்தாம். அவர்கள் கருத்தை நாம் ஏற்கவேண்டியதில்லை. பன்னாட்டு வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகே, உச்சநீதிமன்றம் இறுதி முடிவெடுக்கவேண்டும். அதுவரை அணையில் 136 அடி அளவே தண்ணீர் தேக்கப்படவேண்டும்..."

- இப்படி கொதித்து கொந்தளித்திருப்பவர் அச்சுதானந்தனோ, பிரேமச்சந்திரனோ அல்லது பி.ஜெ.ஜோசப்போ... அல்ல. மலையாள மொழி வெறியைத் தூண்டி குளிர்காய்கிற கும்பலைச் சேர்ந்தவர்கள் இப்படி பேசியிருந்தால் கூட, நாம் அதுகுறித்து அதிகம் கவலைப்பட்டிருக்கப் போவதில்லை. அவர்களிடம் இருந்து இதைத் தவிர வேறு எதுவும் நாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், இந்த 'நெருப்புத் துண்டங்கள்' உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருடையது (தி இந்து, கொச்சி, மே 5, 2012) எனும்போது, நம்புவதற்கு கடினமாகவே இருக்கும்.

நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மலையாள எல்லைகளையும் தாண்டி, மதிக்கப்படக் கூடிய ஒரு மனிதர். மனித உரிமை மீறல்களுக்கு எதிரான அவரது செயல்பாடுகள், நடவடிக்கைகள் காரணமாக தமிழகத்திலும் கூட அவர் ஆராதிக்கப்படுகிறார். உச்சநீதிமன்ற நீதிபதியாக அவரது செயல்பாடுகள் திருப்திகரமானவை. அப்படி இருந்தும், கடைசியில் மொழி வெறி என்கிற குறுகிய வட்டத்திற்குள் சிறைபட்டு சிக்கிக் கொள்வது பேரவலம்.

'முல்லைப் பெரியாறு அணையின் வலுவைப் பற்றி முடிவு கூற நீதிபதிகள் ஒன்றும் பொறியியல் வல்லுனர்கள் அல்ல. பொறியியல் அறிவைப் பொறுத்த வரை அவர்கள் தற்குறிகள்தான்' என்கிறார் கிருஷ்ணய்யர். குடைக் கம்பியால் குத்திப் பார்த்த அச்சுதானந்தன் அண்ட் கோவை விட அவர்கள் நிரம்ப அறிவு பெற்றவர்கள் என்பதை கிருஷ்ணய்யர் மறுக்க மாட்டார். தவிர, அணையைப் பரிசோதிக்க வந்திருந்த நீதிபதிகள் சுத்தியல், மண்வெட்டி கொண்டு கொத்திப் பார்த்து, இப்படி ஒரு முடிவுக்கு வந்திருக்க மாட்டார்கள் என்பதும் கிருஷ்ணய்யருக்குத் தெரிந்திருக்கும்.

முல்லைப் பெரியாறு அணையின் வலுவை பரிசோதனை செய்வதற்காக உச்சநீதிமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்ட ஐவர் குழு நியமிக்கப்பட்டது. இதன் தலைவர் ஏ.எஸ்.ஆனந்த், தமிழக பிரதிநிதி ஏ.ஆர்.லட்சுமணன், கேரள பிரதிநிதி கே.டி.தாமஸ் ஆகிய மூன்று பேர் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகள். ஏனைய இருவர், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் சி.டி.தத்தே, மத்திய நீர்வள ஆணையத்தின் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் டி.கே.மேத்தா இருவரும் இந்தத் துறையில் ஜாம்பவான்கள்.

இவர்கள் தவிர, நாட்டின் அனைத்து தொழில்நுட்ப முக்கியப் புள்ளிகளும் பெரியாறு அணை பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டார்கள். ஏ.கே.அந்தோணி ஒத்துழைப்பில் ராணுவப் பிரிவு கூட உள்ளே நீச்சலடித்துச் சென்று, அதிர்வலைகள் செலுத்தி ஆய்வு செய்தது. அதிநவீன கருவிகள் அத்தனையும் கொண்டு வரப்பட்டன. அணையை அடிக்கு ஒரு முறை துளையிட்டு ஆய்வு செய்தார்கள். இந்தப் பொறியாளர்கள் கொடுத்த ஆய்வறிக்கையைத்தான் நீதிபதிகள் இறுதி செய்து ஒப்படைத்திருக்கிறார்களே தவிர, அவர்களே தட்டிப் பார்த்து, கொத்திப் பார்த்து முடிவெடுத்து விடவில்லை. இதுவும், கிருஷ்ணய்யருக்கு தெரிந்திருக்கும்.

'பன்னாட்டு வல்லுனர்களைக் கொண்டு ஆய்வு செய்த பிறகே இறுதி முடிவெடுக்கவேண்டும்' என்கிறார் மரியாதைக்குரிய கிருஷ்ணய்யர். ஆக, இந்தியாவில் இருக்கிறவர்கள் எல்லாம் முட்டாள்கள் என்பது அவரது கருத்து. இந்திய பொறியியல் வல்லுனர்கள் சங்கம்தான் அவருக்கு பதில் சொல்லவேண்டும். சரி, ஒரு வாதத்துக்கு அப்படியே வைத்துக் கொண்டாலும், ஐவர் குழு நியமிக்கப்பட்ட போதே, இந்தக் கருத்தை கிருஷ்ணய்யர் வலியுறுத்தியிருக்கலாமே! 'நம்மூர் குழு வேலைக்கு ஆகாது. சர்வதேச நிபுணர்கள் தேவை' என்று அப்போதே சீறிப் பாய்ந்திருந்தால், இவ்வளவு கால விரயம், பண விரயம் ஏற்பட்டிருக்காதே. கதையை முதலில் இருந்து ஆரம்பிக்கவேண்டிய அவசியம் இராதே. வழக்கை சீக்கிரமாக முடிக்க சிபாரிசு செய்யவேண்டிய நீதிபதியே, இழுத்தடிக்கிற வேலையைப் பார்ப்பது ஏன்? கிருஷ்ணய்யருக்கு இதுவும் தெரியாத விஷயமல்ல.

எல்லாம் தெரிந்திருந்தும், அப்புறம் ஏன்... திடீர் கூச்சல், குழப்பம்? அங்குதான் இருக்கிறது வினை. மொழி, இன வாதத்திற்குள் மாட்சிமைக்குரியவர்களும் சிக்கிக் கொண்டதால் ஏற்படக்கூடிய வினை.

 * * *

இரண்டாவதாக...

கோட்டயம், குஞ்ஞிக்குழி பகுதியில் வசிக்கிறார் கே.டி.தாமஸ். இவரும் உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிதான். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஏ.எஸ்.ஆனந்த் தலைமையில் ஐவர் குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தபோது, கேரள அரசு சார்பில் அந்தக் குழுவில் நியமிக்கப்பட்ட பிரதிநிதி இவர். முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா, இல்லையா என இந்த ஐவர் குழு, உலகின் தலைசிறந்த பொறியாளர்கள், அதிநவீனக் கருவிகள் துணையுடன் ஆய்வு நடத்தியது. அனைவருமே எதிர்பார்த்த ஆய்வு அது. ஆனால், தமிழகம் தரப்பில் அந்த ஆய்வுகள் அதிக சலனத்தை ஏற்படுத்தவில்லை. காரணம், உண்மை இன்னதுதான் என்று தெரிந்த பிறகு, அது குறித்தான கவலைகள் எதற்கு?

சூரியன் கிழக்கில்தான் உதிக்கிறதா என ஆய்வு செய்து அறிவிப்பதற்காக ஒரு குழு நியமிக்கப்படுகிறது. அந்தக் குழு தினமும் காலை, மாலை வேளைகளில் வானத்தை வெறும் கண்களாலும், தொலைநோக்கிகள் வாயிலாகவும் பார்த்து ஆய்வு செய்கிறது. அந்த ஆய்வின் முடிவு எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் என்பதால், அதுகுறித்து நாம் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால், மேற்கில்தான் உதிக்கிறது என்று திரும்பத் திரும்ப ஒரு தரப்பு பொய் வாதங்களை அவிழ்த்து விடுகிறது. அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல், கிழக்கில் உதிக்கிறது என்று தீர்ப்பு வந்தால் நாங்கள் அதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்றும் தடாலடியாகத் தாக்குகிறது. காரணம், அப்படித்தான் தீர்ப்பு வரும் என அந்தத் தரப்புக்கும் தெரியும். ஆனாலும், பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்ற வீம்பு நிலை.

ஏறக்குறைய அதேநிலைதான் முல்லைப் பெரியாறிலும். ஆய்வு நடக்கும் போதே, அணை நூறு மடங்கு உறுதியாகவும், 152 அடிக்கு முழுமையாக தண்ணீர் தேக்கினாலும் கவலையில்லை; அப்படி ஒரு தருணத்தில் பூகம்பம் தாக்கினாலும் அணை அசையாது என்று ஐவர் குழுவுக்கு தெரிகிறது (அதுதான் இறுதி அறிக்கையாகவும் வெளியாகியிருக்கிறது) ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் கேரள அரசு அடுத்தடுத்துக் கொடுத்த டார்ச்சர் தாங்கமாட்டாமல், அந்த மாநிலப் பிரதிநிதியான கே.டி.தாமஸ், குழு தலைவர் ஏ.எஸ்.ஆனந்த்தை வற்புறுத்தி புதிய அணை கட்டுவதற்கான அனுமதியைப் போராடி பெறுகிறார்.
 
இதை அவரே பகிரங்கமாக அறிவிக்கவும் செய்திருக்கிறார். "முல்லைப்பெரியாறு அணை குறித்த நீதிபதிகள் குழுவின் அறிக்கையை அரசியலாக்கி, பொதுமக்கள் மத்தியில் உணர்ச்சிகளைத் தூண்டிவிட நடக்கும் முயற்சி துரதிர்ஷ்டவசமானது. அணை பாதுகாப்பானது என்பதை நான் ஏற்கிறேன். அணை கட்டுமானப் பொறியியல் வல்லுனர்களால் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இதை நான் ஒப்புக் கொண்டேன். எனவே, நான் பலமான அதிருப்தியை தெரிவிக்கவில்லை. அதே சமயம் மாற்றுத் திட்டமாக புதிய அணை கட்ட கேரளாவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி குழுவில் உள்ள மெஜாரிட்டி உறுப்பினர்களை சம்மதிக்க வைத்தவன் நான்தான். எனவே கேரளாவுக்கு நான் துரோகம் இழைத்தேன் என்பதில் உண்மை இல்லை..." என்று அவர் சத்தியம் செய்தும் பலனில்லை.

அந்த மாநிலத்தின் பொறுப்பான அமைச்சர் பி.ஜெ.ஜோசப், 'கே.டி.தாமஸ் கேரளாவுக்கு துரோகம் செய்து விட்டார்' என்று நெருப்பை வாரி இறைக்கிறார். கே.டி.தாமஸ் வீட்டை நோக்கி தினமும் ஒரு கும்பல் செல்கிறது. கற்களை வீசி எறிகிறது. பீர்மேடு தொகுதி எம்எல்ஏ பிஜிமோள் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஏலப்பாறையில் இருந்து நீதிபதியின் வீட்டுக்கே நீதி கேட்டு நெடும்பயணம் சென்று தர்ணா போராட்டங்கள் நடத்துகிறார். முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் இவர் காட்டிய நாடகங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஐவர் குழு அணையை ஆய்வு செய்ய வருகிற போது, நீதிபதிகள் குழு தவிர வேறு யாருக்கும் அனுமதியில்லை. பத்திரிகை நிருபர்களுக்குக் கூட அனுமதி கிடையாது. ஆனாலும், அடித்துப் பிடித்து, அத்துமீறி நீதிபதிகள் குழுவோடு சேர்ந்து இவரும் அணைப்பகுதிக்குள் பிரவேசித்து விடுவார். ஒவ்வொரு முறையும் இது நடந்தது. பெண் எம்எல்ஏவாயிற்றே... வந்த இடத்தில் வீண் வம்பெதற்கு என நினைத்தார்களோ! என்னவோ... நீதிபதிகள் குழு வாய் திறக்க முடியாமல், தலையில் அடித்தபடியே அத்தனையையும் சகித்துக் கொண்டது. உண்மையில், ஐவர் குழுவில் கே.டி.தாமசிற்குப் பதில் இவரை கேரள அரசு அனுப்பியிருக்குமானால், ஏ.எஸ்.ஆனந்த் குழு ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்து விட்டு ஓட்டம் பிடித்திருக்கும்.

தொடர் கண்டனங்களால், மனமுடைந்து போயிருக்கும் கே.டி.தாமஸ், நீதிபதியாக தனது செயல்பாடுகள் மூலம் மனித உரிமைப் போராளிகளின் கவனம் ஈர்த்தவர். ராஜிவ்காந்தி கொலைவழக்கில் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளில் இவரும் ஒருவர். மற்ற இருவர் வாத்வா, முகமது கயத்ரி. அந்த மூன்று நபர் பெஞ்ச்சின் தலைமை நீதிபதியும் இவரே. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத்தண்டனையை, குறிப்பாக நளினிக்கு தூக்குத்தண்டனையை மிகக் கடுமையாக எதிர்த்தவர் இவர். ஆனால், மற்ற இரு நீதிபதிகளின் ஒருமித்த கருத்தால், இவரது நிராகரிப்பு எடுபடவில்லை. ராஜிவ் கொலைவழக்கில் தூக்குத்தண்டனைக்கு எதிரான தனது எதிர்ப்பை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடமும் பதிவு செய்திருக்கிறார். 'ராஜிவ் கொலைவழக்கை விசாரித்த நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகித்தது, எனக்குக் கிடைத்த ஒரு கெட்ட வாய்ப்பு' என குறிப்பிடுகிறார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் குறித்து, பணி ஓய்வுக்குப் பிறகு ‘ஏசியன் ஏஜ்’ நாளிதழில் எழுதிய கட்டுரையில் அவர் மனம் திறந்திருக்கிறார். "வரலாற்றிலே 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஜெருசலம் நகரில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறேன். குற்றம் சாட்டப்பட்டவர் நிரபராதி என்று தெரிந்தும், நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்தார். காரணம், அங்கே கூடியிருந்த கூட்டம், குற்றம் சாட்டப்பட்டவர் மீது பகையும், வெறுப்பும் கொண்டிருந்தது! அந்த நீதிபதியின் பெயரை நான் சொல்லத் தேவையில்லை. உங்களுக்கே தெரியும், அந்த நீதிபதி - பிலாத்தோஸ்! மரணத் தண்டனை விதிக்கப்பட்ட கைதி - ஏசு." என்று முடித்திருந்தார்.

ராஜிவ் கொலை வழக்கு தீர்ப்பில் மட்டுமல்ல... முல்லைப் பெரியாறு விஷயத்திலும் கே.டி.தாமசின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கக்கூடும்.

 * * *

மூன்றாவதாக...

செயற்கைக்கோளில் இருந்து எடுக்கப்பட்ட பூகோளத்தின் புகைப்படத்தில், ஒரு சிறிய பரப்பு, இருளடைந்து காணப்படுகிறது என்றால், சந்தேகமே வேண்டாம்... நிச்சயமாக அதுதான் தமிழகம். இருக்கிறதா, இல்லையா என்பதில் கடவுளுக்கு அடுத்தபடியாக, அதிகக் குழப்பங்களையும், விவாதங்களையும் ஏற்படுத்துவது இப்போதைக்கு மின்சாரம் மட்டுமே. அந்தளவுக்கு தமிழகத்தை மின்வெட்டுக் கொடுமை பாடாய்படுத்துகிறது. ஊரகப்பகுதிகளில் ஒரு நாளைக்கு 12 மணிநேரத்துக்கும் அதிகமாக மின்தடை ஏற்படுகிறது. அதுவும் குறிப்பாக, இரவுநேரங்களில் ஏற்படும் மின்தடையால் தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள், உறக்கம் தொலைக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள்... என இரவுத்தூக்கம் கெட்டு, மறுநாளில் உடல்நலமும் கெடுபவர்கள் எண்ணிக்கை மிக அதிகம்.

'தமிழகத்தில் மாரடைப்பால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும், மனநல பாதிப்புக்கு ஆட்படுகிறவர்கள் எண்ணிக்கையும் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது' என ஆய்வறிக்கை ஒன்று மிரட்டுகிறது. காரணம், மின்தடை. ஏற்கனவே கொசுத்தொல்லை. இதில் மின்தடையும் சேர்ந்து கொண்டால் இரவில் எப்படி தூங்கமுடியும்? தூக்கம் கெடும் போது, அடுத்தநாள் பல பேருக்கு எரிச்சலுடன்தான் விடிகிறது. சரியான தூக்கமின்மையால், வேலைகளில் முழுக்கவனம் செலுத்த முடிவதில்லை. வேலையில் தவறுகள் செய்வது, காரணமின்றி அடுத்தவர்களுடன், குடும்பத்தினருடன் எரிச்சல் படுவது... என்று தனக்குத்தானே டென்ஷன் ஏற்றிக் கொள்வதால், இதய நோய்களும், மனநோய்களும் எளிதில் தொற்றிக் கொள்ள களம் உருவாகி விடுகிறது.

தமிழகத்தின் சிக்கலை, தமிழக மக்களின் பரிதாப நிலையை மத்திய அரசு கண்டுகொள்வதே இல்லை. தமிழகத்தை இந்தியாவின் ஒரு பகுதி என்று நினைக்கிறார்களா என்று தெரியவில்லை. பாகிஸ்தானுக்கு மின்சாரம் வழங்க கையெழுத்துப் போடுகிறார் பிரதமர். வேறு வழியே இன்றி, தமிழக அரசு கூடங்குளத்துக்கு சம்மதம் தெரிவித்திருக்கிறது. மின் பிரச்சினையை சமாளிக்கும் நோக்கத்தில், கூடங்குளம் மின்சாரத்தை முழுவதுமாக தமிழகத்துக்குத் தரவேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார் தமிழக முதல்வர். இந்த இடத்தில்தான், சம்பந்தமே இல்லாமல் ஆஜராகிறது கேரளம். "கூடங்குளம் மின்சாரத்தில், ஐநூறு மெகாவாட் கேரளத்துக்கு தரவேண்டும். கூடங்குளம் மின்சாரத்தை கேட்டுப் பெறும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. எங்களுக்கான பங்கை மத்திய அரசு கண்டிப்பாக வழங்கவேண்டும்," என்று பிரச்னை கிளப்புகிறார் முதல்வர் உம்மன்சாண்டி.

கேரளத்திலும் மின் பற்றாக்குறையாம். தினமும் அரைமணிநேரம் மின் வெட்டு அமல்படுத்தவேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறதாம். அதனால்தான் உம்மன்சாண்டி கண்களில் கண்ணீர் வடிகிறது. ஒரு நாள்பொழுதின் பெரும்பங்கு நேரம் மின்சாரம் இல்லாமல் தமிழக மக்கள் செத்துக் கொண்டிருக்கையில், அரைமணிநேர பற்றாக்குறையை (அதுவும் உண்மையோ, வழக்கம் போல அவிழ்த்து விடுகிற மற்றுமொரு கட்டுக்கதையோ!) காரணம் காட்டி, கூடங்குளத்தில் பிரச்னை செய்கிறார்கள் என்றால்... கேரள அரசியல்வாதிகளின் வக்கிர குணத்தை முழுமையாக அறிந்து கொள்ளமுடிகிறது.

  * * *

இறுதியாக...

'கடவுளின் சொந்ததேசம்' என்று அறியப்படுகிற பகுதியைச் சேர்ந்த அரசியல்வாதிகள், அறிவுஜீவிகள் நடந்து கொள்கிற விதங்களைப் பார்க்கிற போது, உண்மையாகவே அருவெறுப்பாக இருக்கிறது. உண்மையை ஏற்றுக் கொண்டார் என்பதற்காக ஒரு நீதிபதி கல்லடி படுகிறார். உலகம் போற்றும் உத்தமர் என்று பெயரெடுத்த மற்றொரு நீதிபதி, நியாயத்தின் முகத்தில் அமிலம் வார்க்கிறார். பக்கத்தில், மக்கள் மடிந்து விழுகிற நேரத்திலும் கூட, எனது பங்கை எடுத்து வை என அழிச்சாட்டியம் செய்கிறார் மாநில முதல்வர். நடப்பதெல்லாம் பார்க்கிறபோது... நீதிக்கும், நீதிபதிகளுக்குமான மரியாதை கேரளத்தில் எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

கேரளத்துடன் ஒப்பிடுகையில் நீதியையும், நேர்மையையும், கண்ணியத்தையும் கட்டிக் காக்கிற விஷயத்தில் தமிழகமும், தமிழர்களும் எவ்வளவோ உயரத்தில் இருக்கிறார்கள். தமிழ்த்தாயின் இளைய புதல்வர்களான மலையாள சகோதரர்களின் செயல்பாடுகளை எண்ணும்போது ஆத்திரம் அல்ல.... பரிதாபமே மிஞ்சுகிறது. சகல மனித பண்பாடுகளையும் காலில் போட்டு நசுக்குகிற செயலை துணிச்சலாகவே செய்து கொண்டிருக்கும் ஒரு நிலப்பரப்பு, தன்னை 'கடவுளின் சொந்த தேசம்' என்று இன்னமும் பெயரிட்டு பெருமை கொள்வதில் எந்த நியாயமும் இல்லை. அவ்வாறு கிரீடம் சூட்டிக் கொள்பவர்களைப் பார்த்து இப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது...

"தாங்கள் செய்வது இன்னதென்று தெரியாமல் செய்து கொண்டிருக்கிறார்கள். பிதாவே இவர்களை மன்னியும்...!"

- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It