1 . அம்மாவின் படுகொலைகள்

‘வாட்எவர் அம்மா டன் ஈஸ் கரெக்ட்’, என்று மதுசூதனன் சொன்னார். அவர் அதிமுகவின் அவைத்தலைவர். இந்தப் பேட்டி ஹெட்லைன் டுடே தொலைக்காட்சியில் வந்திருந்தது. "கொள்ளையர்கள் என்று சொல்லப்படுபவர்களைக் கொன்றது சரிதான்.  இல்லையென்றால் ரவுடிகளுக்குப் பயம் போய்விடும்’, என்றும் மதுசூதனன் உரத்த குரலில் சொல்லிவிட்டு அப்புறம்தான் ‘வாட்எவர் அம்மா டன் ஈஸ் கரெக்ட்’, என்று பேட்டியை முடித்தார்.

jayalalitha_363வேளச்சேரியில் போலீஸ் செய்த படுகொலைகளுக்கு யார் பொறுப்பு என்பதில் இனி யாருக்கேனும் சந்தேகம் இருக்க முடியுமா?

ஒருவேளை மதுசூதனன், 'அம்மாதான் உத்தரவிட்டார்' என்ற பொருளில் சொல்லவில்லை என்று மறுக்கலாம். ஆனால், தமிழகத்தின் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் அணையின் மதகைத் திறப்பதற்குக் கூட அம்மாவின் உத்தரவு தேவைப்படும் நாட்டில், ஒரு பிரளயத்தை உருவாக்கும் படுகொலைகளைக் காவல்துறையினர் தாமே செய்தார்கள் என்று நம்புவது சாத்தியமில்லை.

எனவே, அம்மா செய்த படுகொலைகள் என்றுதான் நாம் இந்த ‘என்கவுண்டரை’க் குறிப்பிட வேண்டியிருக்கிறது. அதற்கும் மேலாக, காவல்துறையைத் தன் பொறுப்பில் வைத்திருக்கும் உள்துறை அமைச்சர் வேலையையும் பார்க்கும் முதலமைச்சர் இன்றி காவல்துறையின் செயல்பாடுகளுக்கு வேறு யார் பொறுப்பு?

இரவு 10 மணிக்குத் துவங்கி ஏறக்குறைய 1 மணிக்கு விவகாரம் முடிவுக்கு வந்தது என்றால் இடையில் யாரின் உத்தரவுக்கு காவல்துறையினர் காத்திருந்தனர்? 5 பேரை பிடிப்பதற்காக அந்த வீட்டின் முன்னே 3 மணி நேரம் தவமிருந்து அப்புறம் மாயாவி போல உடைபடாத கதவை உடைத்துக்கொண்டு சென்றார்களா? (அல்லது உடைந்த கதவு உடைபடாத கதவாயிற்றா?)

காவல்துறையினர் யாரின் உத்தரவின் பேரிலோ அந்த 5 பேரையும் சுட்டுக்கொன்றிருக்கின்றனர். அதற்கு அனைத்து வகையிலும் அம்மாவின் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

படுகொலைகள் அம்மாவுக்கு ஒன்றும் புதிதல்ல. பரமக்குடியின் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தைக் கொலைத் திருவிழாவாக காவல்துறை மாற்றியபோது அம்மா என்ன சொன்னார்? போலீஸ்காரர்கள் தற்காப்புக்காகச் சுட்டார்களாம். அங்கே கூடியிருந்த தலித் மக்கள் சமூக விரோதிகளாம். அவர்களை அப்படியே விட்டுவிட முடியாதாம்..

ஓர் அரசியல் கோரிக்கை எழுப்பிய மக்களை, சட்டமன்றத்தில் நின்று சமூக விரோதிகள் என்று சொல்லவும், அவர்களைச் சுட்டு, பல மணி நேரம் வேட்டையாடிய காவல்துறையை நியாயப்படுத்தவும் வேண்டுமானால் எந்தளவிற்கு அதிகார மமதை இருக்க வேண்டும்?

அதே மமதைதான் இன்று வேளச்சேரியில் வேட்டையாடுவதற்குப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது.

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அதாவது இங்கே சட்டத்தின் ஆட்சி நடக்கிறதாம்!

வங்கிக் கொள்ளைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்பது போலீசாரின் குற்றத் தடுப்புத் திறன் சார்ந்த விஷயம்.  மிகவும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு வீட்டிற்குக் காவல் நிற்கும் கூர்கா போல ஊருக்குக் காவல் இருப்பதுதான் காவல்துறையின் முதல் மற்றும் அடிப்படை வேலை.

புலனாய்வு செய்வது; சந்தேகத்திற்குரியவர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவது; குற்றம் சாட்டப்பட்டவரின் மீதான குற்றச்சாட்டை நிரூபணம் செய்வதுதான் காவல்துறையின் இரண்டாவது முக்கிய வேலை. நீதிமன்றம் குற்றச்சாட்டு தவறானது என்று தீர்மானித்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலையும் செய்யலாம், செய்திருக்கிறது.

குற்றவாளி என்று சந்தேகித்த உடனேயே தண்டனை அளித்துத்தான் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால், பெங்களூரு நீதிமன்ற விசாரணை எதற்கு? 

வேளச்சேரி நிகழ்வு தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை என்பதைக் காட்டுகிறது. சட்டத்தின் ஆட்சியை அம்மா மதிப்பதில்லை என்பது நமக்கு நன்கு தெரியும். மக்கள் நலப்பணியாளர்களுக்கு வேலையளிக்க வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தினாரா என்ன? சமச்சீர்க் கல்விக்கான தமிழக அரசின் சட்டத்தை, தமிழக முதல்வர் என்ற பொறுப்பிலிருந்து, தயக்கமின்றி நடைமுறைப்படுத்தினாரா?

எனவே, வேளச்சேரிப் படுகொலைகளுக்குப் பொறுப்பேற்று ஜெ மன்னிப்பு கேட்கவேண்டும் அல்லது பதவி விலக வேண்டும், குறைந்தபட்சம் விளக்கமளிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் எழுப்பலாம். ஆனால், எனக்குத் தெரிந்து எந்த அரசியல் கட்சியும் வாய்திறக்கவில்லை.

அம்மா இங்கே தும்மினால் அங்கே தாவிக்குதித்து பேட்டியளிக்கும் கருணாநிதி, இதுவரை மௌனம் காக்கும் மர்மம் என்ன? அவரின் ஆட்சியிலும் ‘என்கவுண்டர்’ பட்டியல் நீண்டது என்பதுதானோ?

2. வேளச்சேரி படுகொலைகளும் புலம் பெயரும் தொழிலாளர் பிரச்சனையும்

இப்பிரச்சனையில் பேச வேண்டிய மற்றொரு விவகாரமும் இருக்கிறது. சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் ஒருவர் (வினய் பிரசாத்) சென்னையில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளி என்றும் அவருக்கும் குற்றங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவரின் மனைவி சொல்கிறார். ஒருவேளை அது உண்மையானால், அவரின் உயிரை மீட்டுத்தருவதற்கு யார் இருக்கிறார்கள்?

பீகார் முதலமைச்சர் தனது மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவரை விசாரணைக்கு அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார் என்று ஹெட்லைன் டுடே செய்தி சொல்கிறது. சென்னைப் படுகொலைகள் பீகாரின் பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதே அவரின் இந்தக் கடுமையான நடவடிக்கைக்குக் காரணம்.

பீகாரில் இருந்து பல லட்சக்கணக்கானவர்கள் வெளிமாநிலங்களில் பணிபுரிகின்றனர். பீகாரிலிருந்து வெளியேறி வெளிமாநிலங்களில் பிழைப்பு நடத்துபவர்களைக் கொள்ளைக்காரர்களாகச் சித்தரித்து பீகாரின் மரியாதையைக் கெடுக்க முயற்சி நடக்கிறது என்று பீகாரின் ஆர்ஜெடி தலைவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்தேகம் சரியானதுதான் என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி நிரூபிக்கிறது. வடநாட்டவன் என்று சந்தேகப்பட்டு ஆந்திராவைச் சேர்ந்த - ஏதோ ஒரு துன்பத்தில் மனமுழன்றுகொண்டிருந்த அல்லது  மனநிலை சரியில்லாத -ஒருவரை ஒரு கூட்டம் அடித்துத் துவைத்திருக்கிறது. காவல்துறை அதனைக் கண்டும் காணாமல் விலகிச்சென்றிருக்கிறது. அடித்துத் துவைத்த காட்சியைக் கண்டுகொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அடி உதைக்கு ஆதரவாக நின்று கொண்டிருந்திருக்கின்றனர். சந்தோஷக் கூச்சல் இட்டுள்ளனர்.

இச்சம்பவம் பற்றி காவல்துறை என்ன சொல்கிறது என்று கேளுங்கள்: ‘என்கவுண்டர் சம்பவத்திற்குப் பின்பு பீகார்காரர்கள் அனைவரும் கொள்ளைக்காரர்கள் என்று மக்கள் நினைக்கின்றனர். அவன் வட இந்தியக்காரன் என்று தப்பாகக் கருதி அடித்துவிட்டனர்’ 

இதுதான் ஆபத்தே! வடநாட்டவர்கள் எல்லாம் பீகாரிகள், பீகாரிகள் எல்லாம் கொள்ளைக்காரர்கள் என்று மக்களை நம்பவைத்துவிட்டன அரசும், ஊடகங்களும்! பீகாரி என்றால் அடிக்கலாம் என்றும் காவல்துறையின் மேற்படி கூற்று சொல்லாமல் சொல்கிறது. அப்பாவியை அடித்தவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அடுத்த ஆபத்து ஜூனியர் விகடனில் வெளியானது. வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களை பதிவு செய்வது, கண்காணிப்பது என்பது பற்றி அந்தக் கட்டுரை பேசுகிறது. இது என்ன அறிவீனம்? பஞ்சம் பிழைக்க வருபவர்களில்தான் குற்றவாளிகள் இருக்கிறார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?

டெல்லியில் ஓடும் காரில் சிறுமி ஒருத்தியை வன்புணர்ச்சி செய்திருக்கின்றனர் ஐந்து பேர். அவர்கள் அனைவரும் ‘அறிவாளி’கள் அல்லது படித்தவர்கள். கார் வைத்துக்கொள்ளும் அளவுக்குப் பணக்காரர்கள். இந்த சம்பவத்தை வைத்துக்கொண்டு படித்தவர்களையெல்லாம் கணக்கெடுங்கள், கார் வைத்திருப்பவர்களையெல்லாம் குற்றவாளிகளாக பட்டியலிடுங்கள் என்று நான் கோரினால், என்னைப் பைத்தியக்காரன் என்று சொல்லமாட்டீர்கள்?

migrant_workers_620

ஆனால், தமிழகத்தின் மனசாட்சியான ஜூவி பஞ்சம் பிழைக்க வந்தவர்களைப் பட்டியலிட்டு கண்காணிக்க வேண்டும் என்கிறது!

புலம்பெயர்பவர்களைப் பட்டியலிடுவது என்றெல்லாம் நாம் பேசுவது, பிரச்சனையை நாம் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. சில புள்ளிவிவரங்களைப் பார்ப்போம்..

பிழைப்புக்காக இந்தியாவில்  புலம் பெயர்பவர்களில் 60 சதம் தங்களுடைய சொந்த மாவட்டத்திற்குள் இடம் பெயர்கிறார்கள். 20 சதம் மாநிலத்திற்குள் இடம் பெயர்கிறார்கள். மீதமுள்ள 20 சதம் பேர் மாநிலம் விட்டு மாநிலம் செல்கிறார்கள்.

புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை

1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி…. 167 மில்லியன்

1981 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி…. 213 மில்லியன்

1991 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி…. 232 மில்லியன்

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு படி…. 315 மில்லியன்

இவ்வாறு ஒவ்வொரு பத்தாண்டுக்கும் புலம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தற்போது மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்பவர்கள் எண்ணிக்கை மட்டுமே 80 மில்லியனைத் தொட்டுவிட்டது என்று கணக்கிடப்படுகிறது.

80 மில்லியன் என்பது ஏறக்குறைய தமிழ்நாட்டின் மக்கள் தொகை! இந்தியாவின் வற்றாத ஜீவநதிகள் வற்றிவிட, மனிதர்கள் நதிகளைப் போல குறுக்கே நெடுக்கே ஆண்டு முழுவதும் பிழைப்புக்காக வற்றாத ஜீவ நதியாக அலைந்துகொண்டிருக்கிறார்கள். இவர்களில் 40 மில்லியன் பேர் கட்டுமானத் தொழிலாளர்கள் என்று ஆரம்பித்து 7 மில்லியன் பேர் பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்று புள்ளிவிவரம் நீள்கிறது.  இதையெல்லாம் படிக்கும் உங்களுக்கு, ‘வாழிய பாரதம் வாழிய பாரத மணித்திரு நாடு’ என்று பாடுவதற்கு வாய் வருமா?

இப்படி புலம் பெயர்ந்து சென்று கொடுமைக்கு ஆளாகும் தொழிலாளர்களில் தமிழர்களும் இருக்கிறார்கள், பீகாரிகளும் இருக்கிறார்கள். அனேகமாக இந்தியாவின் எந்த மாநிலமும் இந்தப் பட்டியலில் இருந்து தப்பிக்க முடியாது.

'திருடினவங்களை சும்மா விடலாமா?' என்று கேட்கும் மக்கள், பீகாரிலிருந்தும், ஒரிசாவிலிருந்தும் வரும் கூலித் தொழிலாளர்களை வெறும் 40 ரூபாய்க்கு வேலைக்கமர்த்தி, 12 மணி நேரம் கடுமையாக வேலை வாங்கி, சுரண்டுவது குறித்து என்றாவது கண்டித்ததுண்டா?

புள்ளிவிவரங்களைத் தள்ளி வைத்துவிட்டு சில நடப்புகளைப் பார்ப்போம்.

தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குப் புலம்பெயர்கிறார்கள். ஒரிசா, ஆந்திரா, குஜராத் என்று சிறுவர்களை அழைத்துப் போகிறார்கள். அந்த சிறார்களுக்கு ஆண்டு சம்பளம் எவ்வளவு தெரியுமா? 20 முதல் 30 ஆயிரம். வேலை நேரம் என்ன தெரியுமா? 16 மணி நேரத்திற்கு மேல்.. தூங்கி வழிந்தால் என்ன தண்டனை தெரியுமா? கொதிக்கும் எண்ணைய் கரண்டியால் பிள்ளைகள் அடிவாங்கும்… அந்த வேதனையை.. வலியை உணர்ந்திருக்கிறீர்களா?

கொல்கத்தாவில் இருந்து திரும்பிக்கொண்டிருக்கும்போது விசாகப்பட்டினத்தில் ஒரு தமிழ் சிறுவன் ரயிலேறினான். 16 வயது இருக்கும். மீன் பதனிடும் தொழிலில் வேலை செய்கிறான். அவன் கையில் பணம் தாராளமாகப் புழங்கியது. அவனுடன் வேலை செய்யும் பெண்கள் பற்றி பாலியல் கோணத்தில் உரக்கப் பேசினான். ஒரு குற்றவாளி உருவாகிக்கொண்டிருக்கிறான் என்று எனக்குத் தோன்றியது.

அவனை குற்றவாளியாக உருவாக்கியது யார்? அவன் 12 வயதிலேயே வேலைக்குப் போக என்ன காரணம்? அவனின், அவன் பெற்றோர்களின் வாழ்க்கையைப் பிடுங்கிக் கொண்டது யார்?

புலம்பெயர்ந்து பயணப்படுவது இன்றைய உலகமய சூழலில் தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுகின்றன. பசுமைப் புரட்சி விவசாயத்தை ஒழித்தது. வெள்ளைப் புரட்சி பால் பண்ணைகளை வளர்த்தது. இப்போது கிராமங்களில் பால் பாக்கெட் கிடைக்கும் முன்னேற்றம் வாய்த்திருக்க, கேரளாவுக்கு அடிமாடுகள் பயணப்படுகின்றன. நீலப்புரட்சியோ அன்னிய கப்பல்களை இந்தியக் கடலுக்கு அழைத்து வந்தது.

உங்களுக்குத் தமிழகத்தைப் பற்றி தமிழர்களைப் பற்றி ரொம்பவும் கவலையா? பின்வரும் அரசுப் புள்ளிவிவரத்தைப் பரிசீலனை செய்யுங்கள்..

தமிழகத்தின் விவசாய நிலம் சுருங்கிவருகிறது… 1993-94க்கும் 2005-2006க்கும் இடையில் தமிழகத்தின் விதைக்கப்பட்ட பரப்பு 6 லட்சத்து 57 ஆயிரத்து 161 ஹெக்டர்கள் குறைந்துவிட்டது. தமிழகத்தில் 1993-94ல் 154.81 லட்சம்பேர் விவசாயத்தில் ஈடுபட்டுவந்தனர். 2004-2005ல் அந்த எண்ணிகை 127. 42 லட்சமாகக் குறைந்துவிட்டது.

இந்திய அளவிலும் இதுதான் நிலை. 1983ல் இந்திய உழைக்கும் மக்களில் 68.45 சதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டு வந்தனர். 2004-2005ல் அவர்களின் எண்ணிக்கை 56.67 சதமாக ஏறக்குறைய 12 சதம் குறைந்துவிட்டது. ஒரு ஏக்கர் நிலத்தில் பத்து பேருக்கு வேலை கிடைக்கும் என்று ஒரு பழைய கணக்கு உண்டு. அப்படியானால், தமிழ்நாட்டில் குறைந்த விவசாய பரப்பால் எத்தனை லட்சம் பேர் வேலையிழந்திருப்பார்கள்?

கிராமத்தில் வேலையிழந்துவிட்ட இந்த ‘காட்டான்கள்’ அனுபவிக்கும் துன்பங்கள் உங்களுக்குத் தெரியுமா? சோற்றுக்கு ஒரு பானை, குழம்புக்கு ஒரு சட்டி, இரண்டு தட்டுகள், மண்ணெண்ணெய் திரி ஸ்டவ் கொண்ட மூட்டையுடன் நீங்கள் திருப்பூர் பேருந்து நிலையத்தில் அமர்ந்திருந்தது உண்டா? உங்கள் மனைவியின், பிள்ளையின் முகத்தைத் தவிர்ப்பதற்கு அந்தப் பக்கம் திரும்பிக்கொண்டதுண்டா?

பெங்களூரில் 15 நாள் கட்டுமான வேலை செய்துவிட்டு, குடும்பத்தைப் பார்க்கலாம் என்று நள்ளிரவு ஊருக்கு வந்தவனை போலீஸ் சந்தேகக் கேசில் உள்ளே தள்ளிய கதைகள் உங்களுக்குத் தெரியுமா? அடையாள அட்டை கேட்டு அறைவிட்டதைப் பார்த்திருக்கிறீர்களா?

இப்போது தேவை பட்டியலிடுவதல்ல, பரிவுடன் அணுகுவது.

புலம் பெயர்ந்து செல்லும் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்க, கூலியை, வேலையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பது.

அதற்கென ஒரு சட்டமும் இந்தியாவில் இருக்கிறது. இந்தியாதான் உலகத்திலேயே அதிக சட்டங்கள் உள்ள நாடாம்… அதுபோல செயல்படாத சட்டங்களின் எண்ணிக்கையும் இந்தியாவில்தான் அதிகமாம்.

இந்தியாவில் மாநிலங்களிடையே புலம் பெயரும் தொழிலாளர் (வேலை மற்றும் வேலை நிலைமையை ஒழுங்குபடுத்தும்) சட்டம் 1979  என்று ஒன்று இருக்கிறது.

அப்படியொன்று இருக்கிறது என்பது நமது அரசியல்வாதிகளுக்கும் தலைவர்களுக்கும் தெரியும் என்று கூட நான் நம்பத் தயாரில்லை. இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பிரச்சனையாக இருக்கிறது என்றும் அதனைச் சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்றும் 1991ல் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் சொன்னது.

என்ன ஆயிற்று என்று கேட்கிறீர்களா? என்ன ஆகியிருக்கும் என்று தெரியாதா என்ன? ஒன்றும் ஆகவில்லை.

இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்த ஒரே தொழிற்சங்கம் AICCTU மட்டும்தான். சென்னையில் உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அமைப்பாக்கவும் அது முயற்சி எடுத்தது. டெல்லியின் JNUவில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சட்டக் கூலி தர வேண்டும் என்று JNUவின் AISA அமைப்பு போராடி வென்றது.

mathi_cartoon_420இவற்றைத் தவிர வேறு எந்த குறிப்பிடத்தக்க அரசியல் முயற்சிகளையும் காண முடியவில்லை. CPI-CPM கட்சிகள் கூட இந்த விஷயத்தில் எதுவும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை.

இதுபோன்ற தொழிலாளர்களுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்துவது பற்றி கவலையேபடாத அரசியல்வாதிகள், சட்டம் இருப்பது பற்றி தெரிந்திருக்காத அரசியல்வாதிகள், மெத்தப் படித்தாக எண்ணிக்கொள்ளும் அறிவாளிகள் சட்டத்தின் ஆட்சி பற்றி பேசுவது கேலிக்கூத்தன்றி வேறல்ல.

‘வங்கிய கொள்ளையடிச்சா என்கவுண்டர்.. கொள்ளையடிச்சு வங்கியில போட்டா தப்பு இல்ல’ என்ற இன்றைய தினமணி (மதியின்) கார்ட்டூன் ஆயிரம் வரிக் கட்டுரையின் வேலையைப் பார்க்கிறது.

வயிற்றுப்பிழைப்புக்கு வ்ழியின்றி, பிறந்த இடத்தைவிட்டு புலம்பெயரும் தொழிலாளர்கள் மொழி தெரியாத ஊரில் படும் வேதனைகளும், அனுபவிக்கும் கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அது அரபு நாடுகளுக்கு கூலித் தொழிலாளியாக செல்லும் தமிழனாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டுக்கு கட்டட வேலைக்கு வரும் பீகாரியாக இருந்தாலும் சரி, துயரங்கள் ஒன்றுதான். சாதியால் ஒடுக்கப்பட்டவர்களாகவும், பெரும் முதலாளிகளால் சுரண்டப்படுபவர்களாகவும் இருக்கிற இந்த எளிய மக்களை காவல் துறையும், ஊடகங்களும் குற்றப்பரம்பரையினராக சித்தரிக்க முயல்கின்றன.

மக்களின் வாழ்க்கையைக் கொள்ளையடிப்பது தொடரும் வரை, கொள்ளையர்கள் உருவாவதும் தொடரும். சட்டபூர்வக் கொள்ளையரைக் காக்க மமதைகொண்ட அரசியல்வாதிகள் என்கவுண்டர்கள் செய்து கொண்டிருப்பார்கள். ஒரு சமயம் அது பரமக்குடியாக இருக்கும்… இன்னொரு சமயம் வேளச்சேரியாக இருக்கும்.

சிரமறுப்பது வேர்ந்தர்க்குப் பொழுதுபோக்கும் சிறிய காதை-எங்கட்கோ உயிரின் வாதை என்றான் பாரதிதாசன்.

சிரமறுத்த அனைத்து வேந்தர்களும் சின்னாபின்னம் ஆனதைத்தான் வரலாறு சொல்கிறது.

- சி.மதிவாணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It