1987-இல், 7 தொழிலாளர்களைக் கொண்டு செயல்பட்ட டயமண்ட் இஞ்சினீரிங் நிறுவனம் இன்று எஃகு கட்டுருவாக்கும் துறையில் இந்தியாவில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்திருக்கிறது. தற்போது இதில் பணிபுரியும் 1200-க்கும் மேற்பட்ட நிரந்தரத் தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தை இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறார்கள்.

diamond enginerring 450இந்தத் தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி, இந்த நிறுவனம் இன்று 200 ஏக்கர் பரப்பளவில் 5 தொழிலகங்களைக் கொண்டதாகவும், மாதத்திற்கு 5000 டன்களும் அதிகமான அளவில் உற்பத்தித் திறன் கொண்டதாகவும் வளர்த்திருக்கிறது. ஆனால் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் பணிநிலைமைகள் மிகவும் மோசமானதாகவும், உரிமைகள் இல்லாத நிலையிலும் இருக்கிறது.

தொழிலாளர்கள் டயமண்ட் இஞ்சினீரிங் தொழிலாளர் சங்கத்தை (செங்கை அண்ணா மாவட்ட சனநாயகத் தொழிலாளர் சங்கம்) அமைத்த காரணத்திற்காகவும், பிற உரிமைகளைக் கோரிய காரணத்திற்காகவும் ஆலை நிர்வாகம், சூன் மாதத்தில் சட்டங்களுக்குப் புறம்பாக 345 நிரந்தரத் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்திருக்கிறது.

அது மட்டுமின்றி காவல் துறையின் மூலம் போராடி வரும் 27 தொழிலாளர்களைச் சிறையிலடைத்து அவர்கள் மீது பொய் வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்தத் தாக்குதல்களை எதிர்த்து தொழிற் சங்கம், தொழிலாளர் துறையிடம் முறையிட்டது. தொழிலாளர் துறை கூட்டிய பேச்சு வார்த்தைக்கு நிர்வாகம் வராத காரணத்தால், தொழிலாளர் துறை சமரச முறிவை அறிவித்தது. இதைத் தொடர்ந்து தொழிலாளர்கள் உயர் நீதி மன்றத்தில் வழக்கைப் பதிவு செய்துள்ளனர்.

பழிவாங்குவதற்காக வேலை நீக்கம் செய்யப்பட்ட 345 தொழிலாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்றும், 27 தொழிலாளர்கள் மீது காவல் துறை போட்டுள்ள பொய் வழக்குகளைப் பின்வாங்க வேண்டுமென்றும் கோரி காலவரையற்ற தொடர் பட்டினிப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் ஏற்பாடு செய்தனர். ஆனால் இந்த அமைதி வழிப் போராட்டத்திற்கு கூட காவல் துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து தொழிலாளர்கள் உயர் நீதி மன்றத்தின் மூலம் அனுமதி பெற்றனர்.

மாம்பாக்கம் சமத்துவபுரத்தில் நவம்பர் 12 அன்று துவங்கி நடைபெற்ற காலவரையற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தோடு பங்கேற்றனர். தொடர்ந்து நீடித்த கடுமையான மழை வெள்ளத்திலும் பட்டினியால் பலர் மயங்கி விழுந்து மருத்துமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் காவல் துறையின் நெருக்கடிகளையும், நிர்வாகத்தின் தாக்குதல்களையும் மீறி, தொழிலாளர்கள் போர்க் குணத்தோடு இந்தப் போராட்டத்தை நடத்தினர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும், இந்தப் போராட்டத்தையும் நிர்வாகம் உதாசீனப்படுத்தியது. நிர்வாகத்தையும், காவல் துறையின் நெருக்குதல்களையும் எதிர்த்து தொழிலாளர்கள் நவம்பர் 15 ஆம் தேதியன்று சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். நிர்வாகத்தோடு பேசி, தொழிலாளர்களுடைய பிரச்சனைகளைத் தீர்ப்பதாக அரசு அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென ஏஐசிசிடியு-வின் தலைவர்களில் ஒருவரான தோழர் இரணியப்பன் கூறினார். 

தொழிலாளர்களுடைய நியாயமான எல்லா கோரிக்கைகளையும் நிர்வாகம் உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்றும், தொழிலாளர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள எல்லா பொய் வழக்குகளையும் நிபந்தனையின்றி நீக்க வேண்டுமென்றும், தொழிலாளர் ஒற்றுமை இயக்கம் வலியுறுத்துகிறது.

 

Pin It