‘சில்லரை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு’ என்கிற பேச்சு பெரிய அளவு இப்போது அடிபட்டுக்கொண்டிருக்கிறது. சில்லரை வணிகர்களே இப்போதுதான் மெல்ல விழித்துப்பார்த்து ‘இது கூடாது’ என்று குய்யோ முறையோ என்று கூக்குரல் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். காப்பிக்கடையும், டீக்கடையும், ரொட்டியும், பன்னும், ரஸ்க்கும், பீப் பக்கோடாவும் சமோசாவும் விற்பதற்கு அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கே.எப்.சியும், மேக் டோனால்டும், காபி டேயும், டோமினோசும், போர் அ போனும் போட்டி போட்டுக்கொண்டு வந்து இறங்கிவிட்டார்கள். ‘அவங்க ஒரு பக்கம் விக்கட்டும் நம்ம ஒரு பக்கம் விற்போம்’ என்ற வழக்கமான வந்தாரை வாழ வைக்கும் மனநிலையில் நமது கடைக்காரர்கள் சற்று ஒதுங்கி இடம் விட்டு நிற்கிறார்கள். வரப்போகிற ஆபத்தை இவர்கள் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

திடீரென்று நம்முடைய சுகாதாரத் துறைக்கு ‘மக்கள் சுகாதாரமில்லாத உணவை உண்கிறார்கள் அதனைத் தடுக்க வேண்டும்’ என்று அக்கரை அதிகம் வந்துவிட்டது. ரோட்டுக்கடைகளில் சோதனை செய்து ‘எண்ணெய் சரியில்லை, மாவு சரியில்லை’ என்று உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழிக்கிறார்கள். ‘இனிமேல் யாரும் எதுவும் விற்கக் கூடாது. விற்றால் மேக் டோனால்டு மற்றும் கே. எப். சி மாதிரி சுகாதாரத்தோடுதான் விற்கவேண்டும்’ என்று சட்டம் போடுவதற்கும் அல்லது ஏற்கெனவே இருக்கிற சுகாதார விதிகளைத் தூசி தட்டி கடைக்காரர்களை விரட்டி அடிப்பதற்கும் வெகுநாட்கள் ஆகப்போவதில்லை. இந்தியக் கைத்தறி நெசவாளர்கள் நெய்தால் தானே இந்தியர்கள் அந்தத் துணியை வாங்குவார்கள் என்று ‘நேர்மையான தொழிற்போட்டியாக’ இந்தியக் நெசவாளர்களின் கட்டைவிரல்களை வெட்டிய கல்நெஞ்சக்காரர்களின் பேரப் பிள்ளைகள் சுகாதார விதிகளைக் காட்டி உள்ளுர் காப்பிக் கடை மற்றும் போண்டாக்கடைக்காரர்களை விரட்டி அடிக்க வந்துசேர்ந்துவிட்டார்கள்.

இந்தியாவில் வந்து பெட்டிக்கடை திறந்தே ஆகவேண்டும் என்று அமெரிக்க மற்றும் ஐரோப்பிய வணிகர்கள் துடிக்கிறார்கள். அதற்குமேலே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பெட்டிக்கடைக்காரர்கள் வந்து கடைதிறந்தால்தான் நமது மக்களுக்குத் தரமான பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் என்று ‘பட்டத்து இளவரசர்’ ராகுல் காந்தி உட்பட ‘இந்தியனாக இரு இந்தியப் பொருளை வாங்கு’ என்று கூவிக் கூவி இந்திய தேசியம் வளர்த்த காங்கிரசுக்காரர்களும், இந்திய மக்களை இந்துக்களாக கணக்கு காட்டுவது மட்டுமே இந்திய தேசியம் மற்றபடி ‘யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் செய்து கொள்ளட்டும்’ என்று பாரதிய சனதாக்காரர்களும் ஒரே குரலில் கூவுகின்றார்கள். அவர்களுக்குள் எந்தவிதமான வேறுபாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்திய நெசவாளர்களில் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என்று அந்நியப் பொருட்களைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்திய காந்தியின் சமாதியில் கால் பதித்துவிட்டு இந்தக் கடைக்காரர்கள் இங்கே சந்தைக்குச் சண்டைபோடக் கிளம்பிவிட்டார்கள். நியாயமான போட்டி இருக்கும், மக்கள் யாருடைய பொருள் தரமானதாக மலிவானதாக இருக்கிறது என்று தெரிந்து வாங்கிக்கொள்ளட்டும் என்று நாம் நினைத்தால் நம்மை கேணையர்களாக்கி மொட்டையடித்து மிளகாய் தடவுகிறார்கள். நமது கடைகளில் குளிர்ந்த தண்ணீர் கேட்பவனுக்கு கொடுப்பதற்கு குளிர்சாதனப் பெட்டிக்கு மின்சாரம் இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கிறோம். அந்நியர்களின் கடைகளுக்கு தடையில்லாத இருபத்து நான்குமணிநேர மின்சாரம் மான்ய விலையில் வழங்குவதற்கு ஒப்பந்தம் போட்டு ஆளைக் கொண்டுவந்து இறக்கியிருக்கிறார்கள்.

இடத்துக்கு வரி, கட்டடத்துக்கு வரி, தண்ணிக்கு வரி, கழிவு நீர்க் குழாய்க்கு வரி மற்றும் வருமானத்திற்கு வரி என்று எத்தனையோ விதவிதமான வரிகளைக் கட்டிக்கொண்டு உள்ளுர்க்காரர்கள் நாம் வியாபாரம் செய்வதற்குத் தயாராக இருக்கிறோம். நம்மோடு ‘நியாயமான போட்டியை’  உருவாக்கி வியாபாரம் செய்ய வந்தவர்களுக்கு பத்துவருடங்களுக்கு எத்தகைய வரியும் கிடையாதாம், அவர்கள் சம்பாதிக்கிற பணத்திற்கும் எந்த வரியும் கட்டாமல் அவர்களுடைய நாட்டிற்கே அதனை எடுத்துக்கொண்டு போய்விடுவதற்கு முழு உத்திரவாதம் வாங்கிக்கொண்டு கடையைத் திறங்கள் என்று கெஞ்சிக் கூத்தாடிக் கொண்டு கமிஷனுக்காகக் காத்துக்கிடக்கிறார்கள் கதர் சட்டை முதற்கொண்டு காக்கி டவுசர் ஈடான எல்லா கட்சிக்காரர்களும் அவர்களது வாரிசுகளும்.

நமது ஊரில் இல்லாத பொருட்களைத்தான் மற்ற ஊர்களில் இருந்து வாங்கிக்கொள்வது உலக வழக்கம். உள்ளுர் தண்ணீரை பாட்டிலில் அடைத்து கொள்ளை லாபத்திற்கு விற்பனை செய்வதற்கு உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கு மானிய விலையில் நிலம், மின்சாரம், வரிகளில் இருந்து விலக்கெல்லாம் தருவதற்குப் பெயர் என்ன? உள்ளுர்க்காரர்கள் ஐந்து ரூபாய்க்கும் பத்து ரூபாய்க்கும் காப்பி பலகார வியாபாரம் செய்துகொண்டிருக்கும் இடத்தில் உலகளாவிய வணிக நிறுவனங்களுக்கு மானியத்தில் நிலமும், நீரும், மின்சாரமும், வரிவிலக்கும் கொடுத்து குறைந்த விலையாக இருபத்தைந்து ரூபாய்க்கு பன்னும் ஐம்பது ரூபாய்க்கு காப்பியும் டீயும் விற்கும் கடை நடத்த அழைத்து வருவதற்கு நோக்கம் என்ன? மன்னர்களுக்கு மானியம் கொடுத்து வியாபாரம் செய்ய வந்த பிரெஞ்சுக்காரர்களும் போர்த்துக்கீசியர்களும் இங்கிலாந்துக்காரர்களும் இந்திய மண்ணில் சண்டையிட்ட காட்சிகள் நம் கண்களைவிட்டு இன்னும் மறையவில்லை. அரசியல்வாதிகளுக்கு கமிசன் கொடுத்து அணுமின் நிலையக் கடை திறக்க வந்த ரஷ்யாக்காரர்களும் அமெரிக்காக்காரர்களும் நமது மண்ணில் மோதுவதற்குத் தயாராகி முண்டாசு தட்டுகிறார்கள்.

ஒட்டுமொத்த தேச வருமானத்தை நாட்டின் வளத்திற்கான குறியீடாகக் கொள்வது சரியானதல்ல என்று நமது நாட்டு அமர்த்தியாசென் அவர்கள் நாடெல்லாம் போய்ப் பேசிவருகிறார். மக்களின் வளர்ச்சிக்கான குறியீடுகள் என்று மக்களுக்கு உணவு கிடைக்கிறதா, தண்ணீர் கிடைக்கிறதா, கல்வி கிடைக்கிறதா, மருத்துவம் கிடைக்கிறதா என்றெல்லாம் பார்த்துத்தான் நாட்டின் வளர்ச்சி பற்றி பேச வேண்டும் என்று அவர் சொல்வதைக் கேட்டு உலகம் அவரைப் பாராட்டி நோபல் பரிசு வழங்கியிருக்கிறது. நமது அரசியல்வாதிகளோ கமிசன் கிடைக்கிறதா என்கிற ஒற்றைத் திட்டத்திலேயே கண்ணாக இருந்து உணவு, தண்ணீர், கல்வி மருத்துவம் எல்லாவற்றையும் பன்னாட்டு நிறுவனங்களில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு விட்டுவிட்டு போராடும் மக்களை அவதூறு பேசி அசிங்கப்பட்டு நிற்கிறார்கள்.

காப்பீட்டுத் துறையில் நேரடி அந்நிய முதலீடு கூடாது என்று காப்பீட்டுத் துறைக்காரர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள், கல்வியில் நேரடி அந்நிய முதலீடு கூடாது என்று கல்வியாளர்கள் குரல் எழுப்பிக்கொண்டிருக்கிறார்கள், சட்டத்துறையில் நேரடி அந்நிய முதலீடு கூடாது என்று வழக்குரைஞர்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள், பத்திரிக்கைத் துறையில் நேரடி அந்நிய முதலீடு கூடாது என்று பத்திரிக்கையாளர்கள் முனங்கிக்கொண்டிருக்கிறார்கள். அரசின் திட்டங்கள் எல்லாம் அரசியல்வாதிகள் பைகளை நிரப்பிக்கொள்வதற்கும், அதிகாரிகள் சுரண்டிக் கொழுப்பதற்கும்தான் என்பதை எல்லோரும் ஒரே நேரத்தில் புரிந்துகொண்டு போராடிவிடக்கூடாது என்பதற்காக மதம், சாதி, வேறு என்னென்ன கழிசடை வழிகளில் எல்லாம் பிரிவினைகளை உண்டு பண்ண முடியுமோ அத்தனையையும் உண்டுபண்ண அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கூட்டுச் சதி செயல்படுவதை நாம் உணர முடிகிறது.

வரலாறு கொடுங்கோலர்கள் வீழ்ந்ததையும், பிரிவினைக்காரர்கள் தோற்றதையும், சாதாரண மக்கள் மிகப்பெரிய காரியங்களைச் சாதித்ததையும் நமக்குச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. அந்த வரலாற்றின் ஓட்டத்திலே நீதி நிச்சயம் ஒரு நாள் வெல்லும். நீதி வெல்லுவதற்காக நீங்களும் நானும் நமது பங்களிப்பை ஆற்றுவோம்.

- யூஜின் முத்து (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It