நகர்ந்து செல்கிற நாட்களைப் பதிவு செய்யும் பழக்கம், நம்மில் அனேகருக்கு இருக்கலாம். வெறும் டைரிக்குறிப்புகள் என்பதாக மட்டுமே அவை பார்க்கப்படுவதுண்டு. அதையும் தாண்டி, சரித்திரப் பதிவுகளாகும் சாத்தியங்கள் சமயத்தில் அவற்றுக்கு உண்டு. இன்று, நேற்றல்ல... மனித இனம் தோன்றிய காலம் தொட்டே, பதிவு செய்யும் பழக்கமும் துவங்கி விட்டது. காதை உரசிக் கொண்டு எதிரியின் அம்புகள் பாயும் தருணங்களில் கூட குதிரையின் முதுகிலமர்ந்து, நடக்கிற சரித்திரத்தை பதிவு செய்த மன்னர்களை வரலாறு நமக்கு அறிமுகம் செய்திருக்கிறது.

nilgiri_620

பதிவு செய்கிற பழக்கம் உண்டென்றாலும் கூட, அவற்றைப் பாதுகாக்கிற விழிப்புணர்வு ஏனோ நம்மிடம் போதிய அளவுக்கு இல்லை. பாரம்பரிய தொன்மைகளுக்கு சொந்தக்காரர்கள் நாமென்றாலும், அதற்கான ஆதாரங்களைக் கட்டிக் காக்கிற வேலையை செய்வதே இல்லை. கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள் சுண்ணாம்பு தடவும், வெற்றிலை எச்சில் உமிழும் இடமாக மாறியிருப்பது உதாரணம். சில நூறாண்டுகளுக்கு முந்தைய விஷயங்களைக் கூட, படு பத்திரமாய் மேற்கத்திய நாடுகள் பாதுகாப்பதைப் பார்க்கும்போது, பல்லாயிரம் ஆண்டுப்பழமை வாய்ந்த பொக்கிஷங்களை, அவற்றின் அருமை உணராது அலட்சியப்படுத்திக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்.

gandhirajan_360நாம் கடந்து செல்கிற பாதையில், சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தடம் பதித்துச் சென்ற முன்னோர்கள் பற்றிய ஆய்வுகள் மட்டுமே நமது வளமான பாரம்பரியத்தை உலகிற்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கின்றன. காடு, மலைகளில் நாட்கணக்கில் தங்கி, நமது கலாச்சார பொக்கிஷங்களைப் பதிவெடுத்து வந்து, இன்றைய தலைமுறைக்கு வெளிச்சம் போட்டுக் காட்டும் பணியை ஒரு தவமாகவே மேற்கொண்டு வருகிறார் உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்திராஜன் (44).

"எதிர்காலத்திற்குள் பயணம் செய்ய, கடந்தகாலம் குறித்த புரிதல் மிக அவசியம்!" - இது, வாழ்க்கைத் தத்துவம் மட்டுமல்ல; தொல்லியல்துறையின் அடிப்படையும் கூட என்கிறார் இவர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டியைச் சேர்ந்த காந்திராஜன் தற்போது பணிபுரிவது சென்னையில் உள்ள ஓவியக்கல்லூரியில். கலை, வரலாற்றுத்துறை விரிவுரையாளரான இவர், தமிழர்களின் ஓவிய மரபுகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் செய்து வருகிறார். விலங்குகள் சர்வ சுதந்திரமாய் சுற்றித் திரிகிற அடர்ந்த வனப்பகுதிகளுக்குள் தனது சகாக்களுடன் குறிப்பிட்ட காலஇடைவெளிக்கு ஒருமுறை நுழைவது இவரது வாடிக்கை. "மனித இனத்தின் கடந்தகால வாழ்க்கைப்பதிவுகள் அச்சுக்குலையாமல் இன்னமும் பொக்கிஷமாய் இருப்பது அங்கேதானே," என்கிறார்.

‘பழங்கான தமிழர்களின் ஓவிய மரபுகள் குறித்த ஆய்வுகளினால் என்ன பயன்?’ என்று அவரிடம் விசாரித்த போது....

"தொல்லியல் குறித்த ஆய்வுகளில் ஓவியங்களுக்கு தனி இடம் உண்டு. பண்டைகால தமிழர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள நமது இலக்கியங்கள் படித்தாலே போதும். ஆனால், எப்படி வாழ்ந்தார்கள் என்பதை உணர்வுப்பூர்வமாக அறிந்து கொள்ள, இதுபோன்ற ஆய்வுகள் அவசியம். தங்களது அன்றாட வாழ்க்கை நகர்வுகளை அவர்கள் ஓவியங்களாகவே பதிவு செய்து வைத்திருக்கிறார்கள். மன்னன் வேட்டைக்குப் போனான் என்பதை இலக்கியத்தில் படித்து தெரிந்து கொள்ளலாம். ஆனால், எப்படி வேட்டையாடினான் என்பதை, ஓவியங்களை வைத்தே உணரமுடியும். வேட்டைக்குச் சென்ற முறை, வேட்டையாடப்பட்ட மிருகங்கள் என எல்லாமே ஓவியமாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொள்ள இன்றைக்கு நமக்கு உதவியாக இருப்பவை, அவர்கள் வரைந்து, விட்டுச் சென்ற ஓவியங்களே," என்கிற காந்திராஜன், தனது ஆய்வுகள் குறித்து மேலும் பகிர்ந்த விஷயங்கள்...

"எங்களது பெரும்பாலான ஆய்வுகள் 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வேட்டை சமூக மக்கள் (கற்காலம் — பாலியோ லித்திக் பீரியட்) 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய புதிய கற்கால (நியோ லித்திக் பீரியட்) மனிதர்கள் மற்றும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால (மெகா லித்திக் பீரீயட்) என மூன்று காலகட்டங்களை மையப்படுத்தியே அமைகின்றன. இவை மூன்றுமே வரலாற்றுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்தவை. கற்காலம் என்பது, கற்களை ஆயுதமாகப் பயன்படுத்திய வேட்டை சமூகம் வாழ்ந்த காலம். வடதமிழகத்தில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் இவர்கள் குறித்த பதிவுகள் அதிகம் கிடைக்கின்றன.

krishnagiri_620

வேட்டையாடி திரிந்த மனிதன், விலங்குகளைப் பழக்கப்படுத்தி, அவர்களைப் பாதுகாக்க ஆரம்பித்தது புதிய கற்காலம். சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்தக் காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் இயற்கையாக உள்ள குகைகளில் வாழ்க்கையை நடத்தப் பழகினர். தவிர, மண் சுவர்களால் தங்கள் வாழ்விடங்களை உருவாக்கவும் செய்தனர்.
 
அதன்பிறகு மனிதர்களுக்கு விவசாயம் குறித்த அறிவு வளர்கிறது. அதுவே பெருங்கற்காலம். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த காலத்தில்தான் இரும்பின் பயன்பாடு கண்டறியப்படுகிறது. இந்த காலத்தில் மனிதன் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கத் துவங்கினான். தண்ணீர் தேங்கும் அல்லது செல்கிற இடங்களில் தங்கி, தானியங்கள் பயிரிட, அவற்றை சேமிக்கத் துவங்கினான். வானிலை குறித்த அறிவு, எந்தெந்த காலத்தில் எந்தெந்தப் பயிர்களை விவசாயம் செய்வது என்கிற அறிவு பெருங்கற்காலத்தில் மனிதனுக்குக் கிடைக்கிறது. மண்பாண்டங்கள் (கருப்பு, சிவப்பு வண்ணங்களில்) செய்கிற பழக்கமும் இந்தக் காலத்தில் ஏற்படுகிறது.

இந்த காலத்தில்தான் நிலம் என்பது மனிதனுக்குச் சொந்தமாகிறது. விளைவு...? இனக்குழுக்கள் உருவாகின்றன. அதன் தொடர்ச்சியாக ‘அரசு’ என்கிற அமைப்பு (குறுநில மன்னர்கள்!) உருவாகிறது. மொழியும், எழுத்தும் உருவானது இதன் பிறகே. மதுரையைச் சுற்றியுள்ள கொங்கர் புளியங்குளம், கல்லூத்து உள்ளிட்ட பல பகுதிகளில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமி எழுத்துக்களுக்கான ஆதாரங்கள் கிடைக்கின்றன," என்று கடலளவையும் விட பெரிதான கடந்தகாலத்தை சுருக்கமாக விளக்குகிறார் காந்திராஜன்.

"எங்களது ஆய்வுகள் பெரும்பாலும் தமிழகத்தையும், தமிழர்கள் வாழ்க்கை முறையையும் மையப்படுத்தியே இருக்கும். அந்த வகையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய பாறை ஓவியங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கரிக்கையூர் பகுதியில் எங்களுக்குக் கிடைத்தன. இங்கு வேட்டைக்காட்சிகள் குறித்த சித்திரங்கள் ஏராளமாக உள்ளன. தவிர, மனிதனும், மிருகமும் சண்டையிடும் காட்சிகள், மிருகங்கள் மோதிக் கொள்ளும் சித்திரங்களும் உள்ளன. ஒரு இனக்குழு உருவானதன் அடையாளமே வேட்டை. அந்த வேட்டைக்குச் செல்லும் குழு எடுத்துச் சென்ற ஆயுதங்கள், அவர்கள் தரித்திருந்த உடைகள், வேட்டையாடிய முறை, உத்திகள், வேட்டையில் கிடைத்த விலங்குகள் என அனைத்தையும் இந்த ஓவியங்கள் பதிவு செய்திருக்கின்றன.

இந்த ஓவியங்களைப் பார்க்கும் போது, பண்டைகால தமிழர்களின் உன்னதமான அறிவையும் நாம் உணர்ந்து கொள்ளமுடியும். விலங்குகளை அவர்கள் பழக்கப்படுத்திய விதம், குணங்களைக் கொண்டு விலங்குகளை அவர்கள் எவ்வாறு பிரித்து வைத்திருந்தார்கள் என்பதையும் இந்தச் சித்திரங்கள் உணர்த்துகின்றன. தவிர, அந்தக் காலத்து வாழ்வியல் நடைமுறைகள். உதாரணத்துக்கு கரிக்கையூர் ஓவியங்களில், அந்தக்காலத்து மக்களின் நம்பிக்கை சார்ந்த சில விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தங்களுக்கு உடல்நலம் குன்றுகிற சமயங்களில் அங்குள்ள ஒரு பாறையில், வரைந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். தலைவலி என்றால் தலையையும், காலில் அடி என்றால் காலையும் படமாக வரைந்து அதில் சில மாந்த்ரீக குறியீடுகளையும் செய்து வைத்திருப்பதைக் காணமுடிகிறது. சாமி குணப்படுத்தி விடுமாம்!

nilgiri_621

நீலகிரிக்கு அடுத்தபடியாக, இடுக்கி மாவட்டம், மறையூர் பகுதிகளிலும் இதுபோன்ற பதிவுகள் நிறையக் கிடைக்கின்றன. ஓவியங்களைப் பொருத்தவரை, உள்ளதை உள்ளபடி வரைதல் (ரியலிஸ்டிக்), இல்லாத ஒன்றை கற்பனையாக வரைதல் (அப்ஸ்ட்ராக்ட்) என இரு வகை இருந்திருக்கிறது. கற்களுடன் மண்ணைக் கலந்து பெரும்பாலும் சிவப்பு, வெள்ளை நிறங்களில் பாறை ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. மரக்கோந்து கலந்து வரையப்பட்டிருப்பதால், இந்த ஓவியங்கள் காலங்களைக் கடந்து இன்று நம்மை வந்தடைந்திருக்கின்றன.

வாழ்ந்து, மறைந்த நமது முன்னோர்களின் வாழ்வியல் நடைமுறையை, அவர்களது நம்பிக்கைகளை, போர்க்குணங்களை பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின், நாம் தெரிந்து கொள்ளமுடிகிறது என்றால்... அவர்கள் விட்டுச் சென்ற அந்த ஓவியங்களே காரணம். இன்றைக்கு நமக்குக் கிடைத்திருக்கிற ஓவியங்களை விட, காலம் சிதைத்துச் சென்ற பதிவுகளின் எண்ணிக்கை மிக அதிகம். காலத்தின் கைகளில் இருந்து அவற்றைக் காக்கிற மிகப்பெரிய பொறுப்பு நமக்கு இருக்கிறது," என்கிறார் காந்திராஜன்.

கவனிப்பாரற்றுக் கிடக்கிற பழங்காலக் கட்டடங்கள், கோட்டைகள், தூண்கள், கல்வெட்டுக்கள்.... நமக்கு மிக அருகாமையில் நிறைய இருக்கின்றன. அவை ஒவ்வொன்றுக்குள்ளும், வாழ்ந்து மறைந்த நமது முன்னோர்களின் கதை இருக்கிறது. அழிவில் இருந்து அவற்றைக் காக்கும் மனோபாவம் நமக்குத் தேவை; அரசுக்கும் தேவை. பழங்கால பதிவுகள் குறித்த விழிப்புணர்வை வருங்காலத் தலைமுறைக்கு ஏற்படுத்தவேண்டிய கடமை அரசுக்கு அதிகமாகவே இருக்கிறது!

— திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It