26 ரூபாயில் ஒரு நாள் வாழ்வது சாத்தியமா?

தேசிய திட்டக் குழு கூறுவது மாதிரி, இந்தியாவின் கிராமப் பகுதிகளில் ஒரு நாளைக்கு வெறும் ரூ. 26 ரூபாயில் நிஜமாகவே வாழ்க்கை நடத்துவது சாத்தியமா? இரண்டு இளைஞர்கள் செய்த பரிசோதனையின் முடிவுகள் என்ன சொல்கின்றன?
 
matt_and_tushar_450கடந்த ஆண்டின் இறுதியில், ஒரு சராசரி ஏழை இந்தியனின் வருமானத்தைக் கொண்டு ஒரு மாதம் முழுவதும் வாழ முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்க இரண்டு இளைஞர்கள் முடிவு செய்தனர். அவர்களில் ஒருவரான துஷார், ஹரியானாவைச் சேர்ந்த காவல்துறை அதிகாரியின் மகன், அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் படித்த அவர், அமெரிக்காவிலும் பின்னர் சிங்கப்பூரிலும் மூன்று ஆண்டுகளுக்கு முதலீட்டு வங்கியாளராக பணியாற்றியுள்ளார். மற்றொருவரான மேட், தனது பெற்றோர்களுடன் பதின் வயதுகளில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். எம்.ஐ.டி. நிறுவனத்தில் படித்தவர். இரண்டு பேரும் வெவ்வேறு புள்ளிகளில் இந்தியாவுக்குத் திரும்புவது என்று முடிவு செய்தனர். பெங்களூரு வந்த அவர்கள் இருவரும் யு.ஐ.டி எனப்படும் ஆதார் அடையாள அட்டை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தனர். இருவரும் ஒரே ஃபிளாட்டில் தங்க ஆரம்பித்து, நெருங்கிய நண்பர்கள் ஆகியுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் மேற்கண்ட எண்ணம் திடீரென ஒரு நாள் தோன்றியுள்ளது. இந்த நாட்டுக்கு ஏதோ ஒரு வகையில் பயனுடையவர்களாக இருப்போம் என்ற நம்பிக்கையில்தான் இருவரும் நாடு திரும்பினார்கள். ஆனால் இந்த நாட்டின் மக்களைக் குறித்து அவர்களுக்கு மிகக் குறைவாகவே தெரிந்திருந்தது. ஒரு நாள் மாலையில், "சராசரி இந்தியனைப் பற்றி புரிந்துகொள்ள நாம் முயற்சிப்போம். அவனது சராசரி வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து பார்ப்போம்" என்று துஷார் யோசனை கூறியுள்ளார். இந்த எண்ணம் அவரது நண்பர் மேட்டுக்கு உடனடியாக பிடித்துப் போய்விட்டது. தங்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றப் போகும் பயணத்தை அவர்கள் தொடங்கினார்கள்.

இந்த புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்கு, ஒரு சராசரி இந்தியனின் சராசரி வருமானம் என்ன என்று தெரிந்துகொள்ள அவர்கள் முடிவெடுத்தனர். இந்தியாவின் தேசிய சராசரி மாத வருமானம் ரூ. 4,500 அல்லது ஒரு நாளைக்கு 150. சர்வதேச அளவில் மக்கள் தங்களது வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை வீட்டு வாடகைக்கு செலவிடுகிறார்கள். இதன் காரணமாக வாடகையை கழித்துவிட்டு, ரூ. 100இல் ஒரு நாளை வாழ்ந்து பார்ப்பது என்று அவர்கள் தீர்மானித்தார்கள். இப்படி வாழ்வது அவர்களது வாழ்க்கையை வறுமையில் தள்ளிவிடாது, சராசரி வாழ்க்கையைத் தரும் என்பதை முடிவில் உணர்ந்து கொண்டார்கள். ஆனால் 75 சதவீத இந்தியர்கள் இந்த சராசரி வருமானத்தைவிடக் குறைவான பணத்தில்தான் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்காக அந்த இரண்டு இளைஞர்களும் தங்கள் வீட்டு வேலைக்காரப் பெண்ணின் சிறிய வீட்டுக்கு குடிபெயர்ந்தனர். இந்த நடவடிக்கை அந்தப் பெண்ணை குழப்பத்துக்கு ஆளாக்கியது. ஒரு நாளில் பெரும்பாலான நேரத்தை உணவு பெறத் திட்டமிடுவது, அதற்கான வேலைகளைச் செய்வதிலேயே அவர்களுக்குக் கழிந்தது. வெளியே சென்று சாப்பிடுவது என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ரோட்டுக்கடைகளில் கிடைத்த உணவு வகைகள்கூட கூட அதிக விலை கொண்டவையாகவே இருந்தன. பால், தயிர்தான் இருப்பதிலேயே அதிக விலையுடையதாக இருந்தது. அதன் காரணமாக அவற்றை மிகக் குறைவாகவே பயன்படுத்த ஆரம்பித்தனர். இறைச்சி என்பதற்கு வாய்ப்பே இல்லை, பிரெட் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நிலைமையும் அதுதான். வெண்ணெய், நெய்க்கும் வாய்ப்பு கிடையாது. கொஞ்சம் ரீஃபைன்ட் எண்ணெய் மட்டும் பயன்படுத்த வாய்ப்பு உண்டு. இருவருமே சாப்பிட்டின் மீது பிரியமும், சமைப்பதில் ஆர்வமும் கொண்டவர்கள். சோயா உருண்டைகள்தான் அவர்கள் கண்டுபிடித்த அதிசய உணவு. புரதம் மிகுந்ததாகவும், வாங்கக் கூடிய உணவாகவும் அது இருந்தது. அதிலேயே பல உணவு வகைகளை உருவாக்கக் கற்றுக் கொண்டனர். அதற்குப் பிறகு விலை மலிவாக இருந்தது பார்லே ஜி பிஸ்கட்டுகள்தான். அதில் 25 பைசாவுக்கு 27 கலோரிகள் கிடைத்தன. ஒவ்வொரு நாள் உணவையும் நிறைவு செய்வதற்கு ஒரு வித்தியாசமான கடைசி உணவு வகையை அவர்கள் கண்டுபிடித்தனர். வாழைப் பழத்தை வறுத்து, பிஸ்கட்டின் மேல் வைத்து உண்பதுதான், அந்த புதிய உணவு வகை. அவர்களுக்கு அதுவே ஒவ்வொரு நாளும் மிகப் பெரிய விருந்தாக இருந்தது.

கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை

ரூ. 100இல் வாழ்க்கை நடத்துவது என்பது அவர்களது வாழ்க்கையின் எல்லையை குறுக்கியது. அவர்களால் ஒரு நாளைக்கு ஐந்து கி.மீ.க்கு மேல் பேருந்தில் பயணம் செய்வதற்கு கஷ்டமாக இருந்தது. அந்தத் தொலைவைத் தாண்டி போக வேண்டும் என்றால், அவர்கள் நடந்தே சென்றாக வேண்டும். ஒரு நாளில் ஐந்து அல்லது ஆறு மணி நேரத்துக்குத்தான் மின்சாரத்தை பயன்படுத்த முடியும். இதன் காரணமாக விளக்குகளையும், மின்விசிறியையும் அவர்கள் குறைவாகவே பயன்படுத்தினார்கள். இதற்கிடையே செல்ஃபோன்களையும் கணினிகளையும் இயக்க அவர்களுக்கு மின்சாரம் தேவைப்பட்டது. ஒரு லைஃப்பாய் சோப்பை இரண்டாக வெட்டி பயன்படுத்த ஆரம்பித்தார்கள். தங்களால் வாங்கக் கூடிய பொருள்கள் கிடைக்கும் கடைகளைத் தேடி அவர்கள் அலைந்தனர். சினிமா பார்க்க அவர்களால் செலவு செய்ய முடியாது. எந்த நோயும் தங்களைத் தாக்கிவிடாது என்ற நம்பிக்கையில் காலத்தை கடத்திக் கொண்டிருந்தனர்.

ஆனால், இதற்கெல்லாம் மேலாக மிகப் பெரிய சவால் காத்துக் கொண்டிருந்தது. ரூ. 32இல் ஒரு நாள் வாழ்க்கையை ஓட்டுவது சாத்தியமா? நகரத்தில் ஒரு நாளைக்கு ரூ. 32க்கு மேலே சம்பாதிப்பவர்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வரமாட்டார்கள் என்று உச்ச நீதிமன்றத்தில் தேசிய திட்டக் குழு தெரிவித்திருந்தது. அதிகாரப்பூர்வ வறுமைக் கோடு என்று கருதப்படும் சர்ச்சைக்குரிய இந்த அளவில், கிராமத்துக்கான வரையறையோ இன்னும் குறைவாக இருந்தது. கிராமத்தில் ஒரு நாளைக்கு ரூ. 26க்குக் கீழ் ஒருவர் சம்பாதித்தால் மட்டுமே ஏழை என்று அது வரையறுத்திருந்தது.

பயங்கர அனுபவம்

இந்த புதிய பரிசோதனைக்காக மேட்டின் பாரம்பரிய கிராமமான கேரளத்தில் உள்ள கருகாச்சல் என்ற ஊருக்குச் சென்று ரூ. 26 ரூபாயில் ஒரு நாளை கடத்த அவர்கள் தீர்மானித்தனர். அங்கு புழுங்கல் அரிசி, கிழங்கு, வாழைப் பழம், பாலற்ற தேநீர் குடித்தனர். ஆனால் அவர்கள் வரையறுத்துக் கொண்ட வறுமைக் கோட்டு நிதி அளவான ரூ. 18இல் மேற்கண்ட சரிவிகித உணவை வாங்குவது சாத்தியமற்றதாக இருந்தது. உணவு பற்றி நாள் முழுவதும் யோசிக்க வேண்டி இருந்தது. துணி துவைக்க சோப்பு வாங்குவதற்காக பஸ்ஸில் பயணம் செய்வதை விட்டுவிட்டு, நீண்ட தூரம் நடந்து சென்று சேமித்த காசில் வாங்கினர். மொபைல், இணையம் போன்ற தகவல்தொடர்பு வசதிகளை அவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அவர்களது உடல்நலம் சரியில்லாமல் போனால், அது மிகப் பெரிய ஆபத்தாக முடிந்துவிடும். அதிகாரப்பூர்வ வறுமைக்கோட்டு சம்பாத்தியத்தில் வாழ்வது என்பது அந்த இரண்டு 26 வயது இளைஞர்களுக்கும் பயங்கரமான அனுபவமாகவே இருந்தது.

இருந்தபோதும், கடந்த தீபாவளி நேரத்தில் அவர்களது பரிசோதனை முடிந்தபோது, இது தொடர்பாக தங்கள் நண்பர்களுக்கு அவர்கள் எழுதினார்கள்: "எங்கள் வழக்கமான வாழ்க்கை திரும்பக் கிடைத்துவிட்டதால் மகிழ்ச்சியடைகிறோம் என்று நாங்கள் சொல்வோம் என்று எதிர்பார்ப்பீர்கள். இரண்டு இரவுகளுக்கு முன் நாங்கள் சாப்பிட்ட பண்டிகை விருந்து தந்த திருப்திக்காக, எங்கள் பரிசோதனை காலம் முழுவதும் காத்திருந்தோம் என்று நாங்கள் சொல்வோம் என்று எதிர்பார்ப்பீர்கள். நாங்கள் சாப்பிட்ட விருந்துகளிலேயே சிறந்த விருந்து அது என்பது ரொம்பவே உண்மைதான். காரணம், எங்களை விருந்துக்கு அழைத்தவர்களின் அன்பு அதில் பெருமளவு கலந்திருந்தது. ஆனால் அன்றைக்கு ஒவ்வொரு வாய் உணவையும் நாங்கள் சாப்பிட்டபோது, இந்த நாட்டின் 40 கோடி பேருக்கு இதுபோன்ற உணவுகூட மிகப் பெரிய கனவாகவே இருக்கும் என்ற அப்பட்டமான உண்மை எங்கள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது. நாங்கள் சௌகரியமான வாழ்க்கைக்குத் திரும்பிவிட முடியும். ஆனால் அவர்கள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கான இந்த அன்றாடப் போராட்டத்தில் நிற்பார்கள் - இந்த வாழ்க்கை வழங்கும் வாய்ப்புகள் மிகக் கடினமானவை, முற்றிலும் முரண்பட்டவை. இந்த வாழ்க்கையில் சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் மிக மிகக் குறுகியது. ஆனால் பட்டினி என்பதற்கான அர்த்தமே அதிகம்...

பதிலற்ற கேள்விகள்

இப்போது பெரும்பாலான பொருள்கள் வாங்குவதற்கு பணத்தை செலவு செய்யும்போது, அது எங்களைத் தொந்தரவு செய்து, இதெல்லாம் அதிகப்படியான விஷயங்கள் என்று தோன்றச் செய்கிறது. கூந்தலுக்குத் தடவும் பொருளும், பிராண்டட் ஆஃப்டர் ஷேவும் தேவையானவைதானா? வாரயிறுதிகள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்றால் பணக்கார ரெஸ்டாரண்ட்களில் சாப்பிடுவது அவசியமா? ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், நம்மைச் சுற்றியுள்ள இத்தனை சொகுசு வசதிகளுக்கும் நாம் தகுதியானவர்கள் தானா? நம்மைச் சுற்றி இத்தனை சொகுசு வசதிகளையும் ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்நிலையில் நாம் பிறந்தது அப்பட்டமான அதிர்ஷ்டமா? நாம் அத்தியாவசியம் என்று கருதும் பெரும்பாலான இந்த பொருள்கள் அல்லது மிக முக்கியமாக சுய வளர்ச்சிக்கான கருவிகளான கல்வி அல்லது சுய பாதுகாப்பான சுகாதாரம் போன்றவை, சரி பாதி மக்களுக்குக் கிடைக்கவில்லையே, அதைப் பெறுவதற்கான தகுதி அவர்களுக்கு எந்த வகையில் குறைந்துவிட்டது?

இந்தக் கேள்விகளுக்கு எங்களுக்கு விடை தெரியாது. ஆனால் இப்போது எங்களுக்கு குற்றவுணர்வு இருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியும். மறுபக்கம் மிகக் கடினமான நெருக்கடிக்குள் தங்கள் வாழ்க்கையை தள்ளிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் காட்டும் அன்பும், தாராள உள்ளமும் அந்த குற்றவுணர்வை பல மடங்கு அதிகரிக்கிறது. எங்கள் வாழ்க்கை முழுக்க அவர்களை வழிபோக்கர்கள் போல நாங்கள் நடத்தியிருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை அந்த வகையில் நிச்சயமாக நடத்தவில்லை என்பது ரொம்பவே உண்மை.

அப்படியானால் இந்த இரண்டு நண்பர்களும் வறுமையுடனான தங்களது குறுகிய கால எதிர்கொள்ளலில் இருந்து என்ன கற்றுக் கொண்டிருக்கிறார்கள்? இந்தப் பட்டினி கோபத்தை உண்டாக்குகிறது. அனைவரும் தேவையான அளவு ஊட்டச்சத்து பெறுவதை உத்தரவாதப்படுத்தும் ஒரு உணவுச் சட்டம் தேவை. ஏனென்றால் மிகவும் சராசரி கனவுகள்கூட நிஜமாவதற்கு வறுமை அனுமதிப்பதில்லை. இதற்கெல்லாம் மேலாக மேட்டின் வார்த்தைகளில் கூறுவது என்றால், இந்த புரிதல் உணர்வு நமது ஜனநாயகத்துக்கு மிக மிக அவசியம்.

கூடுதல் விவரங்களுக்கு: RS100ADAY.COM

தமிழில்: ஆதி வள்ளியப்பன்
 
(தி இந்து இதழில் ஹர்ஷ் மந்தர் எழுதும் Barefoot - The other side of life தொடர் பத்தியில் பிப்ரவரி 12ந் தேதி வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.)

Pin It