மோடி இந்தியப் பிரதமராக பொறுப்பேற்று இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதை இந்திய சரித்திரத்தில் ஏதோ பொற்காலம் போல புகழ்ந்து பேசிக்     கொண்டிருக்கும் காவிக்கட்சியினர் அதை தக்க வைத்துக் கொள்வதற்காக என்னென்ன தில்லுமுல்லுகளில் ஈடுபட முடியுமோ அதில் எல்லாம் சளைக்காமல் ஈடுபடுகின்றனர். பங்குச் சந்தை குறியீட்டு எண் உயர்ந்துவிட்டது; அதனால் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துவிட்டது என்றும், டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா - இப்படி பல இந்தியாக்களை வைத்து இத்தனை நாளும் மோடி இந்திய மக்களுக்கு காட்டிக் கொண்டிருந்த குறளி வித்தையை உலக வங்கி வெளியிட்ட அறிக்கை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கின்றது.

 modi ambani tataபொருளாதாரத்தில் வளர்ந்துவரும் நாடுகள் பட்டியலில் இருந்த இந்தியாவை உலக வங்கி ஏழை நாடுகள் பட்டியலில் இணைத்துள்ளது. இதற்கு உலக வங்கி கூறும் காரணம் கடந்த இரண்டாண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது மிகவும் கீழ்மட்டத்திற்குச் சென்றுவிட்டதாக அது தெரிவித்துள்ளது. தொழிற்துறை வளர்ச்சியில் பின்னடைவு, ஏற்றுமதி இறக்குமதி சரிவு, அந்திய செலவாணி கையிருப்பு பற்றாக்குறை போன்றவற்றால் இந்தியாவை ஏழை நாடுகள் பட்டியலில் சேர்த்துவிட்டதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியைப் பொருத்தும் அந்த நாடுகளை வளர்ச்சியடைந்த நாடுகள், வளரும் நாடுகள், நடுத்தர வளர்ச்சியடைந்த நாடுகள், நடுத்தர ஏழை நாடுகள், ஏழை நாடுகள் என்று உலக வங்கி வரிசைப்படுத்துகின்றது. இதில் ஏழை நாடுகள் என்று பட்டியல் இடுவதை உலக வங்கி நிறுத்திவிட்டது. அதற்குப் பதிலாக நடுத்தர ஏழை நாடுகள், தனிநபர் வருவாய் குறைந்த நாடுகள் என இரண்டுவகையாக பட்டியலிடுகின்றது. இந்தியா கடந்த 50 ஆண்டுகளாக வளரும் நாடுகள் பட்டியலில் தான் இருந்து வந்தது. ஆனால் மோடி பதவியேற்ற இந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் நாசம் செய்து விட்டார். இதனால் உலக வங்கி வேறு வழியில்லாமல் இந்தியாவை மீண்டும் ஏழை நாடுகள் பட்டியலில் சேர்த்துள்ளது.  இந்தியப் பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக மோடி எவ்வளவு தூரம் பயணம் செய்தாரோ அவ்வளவு தூரம் இந்திய மக்களின் வாழ்நிலையை மோடி நாசம் செய்துள்ளார்.

 மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் எப்படி  இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி  மிக மோசமாக இருந்ததோ, அதைவிட பல மடங்கு இப்போது மோசமாகி உள்ளது. ஆனால் பல்வேறு தில்லுமுல்லுகளை செய்து இந்தியா வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றத்தை மோடி ஏற்படுத்தி உள்ளார். மோடி என்னதான் பம்மாத்து செய்து இந்திய மக்களை ஏமாற்றினாலும் அவ்வப்போது வரும் தகவல்கள் அவரை அம்பலப்படுத்தாமல் விடுவது இல்லை.

 மோடியின் பொருளாதாரக் கொள்கைகளால் யாரும் பயனடையவில்லை என்று நாம் சொல்லிவிட முடியாது. நிச்சயம் அடைந்திருக்கின்றார்கள். அவர்கள் யார் என்பதுதான் மோடியின் வர்க்க சார்பை தெரிந்துகொள்வதற்கு நமக்கு உதவும். நியூ வோல்ட் வெல்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்  உலகின் 10 பணக்காரர்கள் வாழும் நாடுகளில் பட்டியலில் இந்தியா 7வது இடத்தைப் பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தனிநபர் வருமானத்தைக் கணக்கிட்ட போது  இந்திய மக்கள் இன்னும் ஏழையாகவே உள்ளதாக அது தெரிவித்துள்ளது. தனது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக ஒரு சராசரி இந்திய குடிமகன் மிகக்கடுமையாக போராட வேண்டிய நிலையே உள்ளதாக அந்த அறிக்கை சொல்கின்றது. அதே போன்று இன்னொரு அறிக்கை இந்தியா உலகின் பணக்கார நாடுகளின் பட்டியலில் 5 வது இடத்தைப் பிடித்துள்ளதாகவும் கூறுகின்றது.

  தொடர்ச்சியாக உலக பணக்கார நாடுகளில் பட்டியலில் இந்தியா இடம்பிடித்து வருவதும் பல இந்திய தொழிலதிபர்கள் உலக கோடீஸ்வரர்களாக போர்ப்ஸ் உள்பட பல பத்திரிக்கைகளால் அடையாளப்படுத்தப்படுவதும் தொடந்து நடந்துகொண்டுள்ளது. ஆனால் இதைப் பார்த்து ஒரு சாதாரண இந்தியன் எப்படி மகிழ்ச்சி அடைய முடியும்?  இந்தியாவின் வளங்கள் அனைத்தையும் விரல்விட்டு எண்ணத்தக்க சில பேர் தொடர்ச்சியாக கொள்ளையிடுவதையும், அரசு அதுபோன்ற கொள்ளைக் கும்பலுக்கு லட்சக்கணக்கான கோடி மானியமாகக் கொடுப்பது மட்டும் இன்றி வங்கிகளில் இருந்து ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாகக் கொடுத்து அவர்களை மேலும் மேலும் இந்திய மக்களை கொள்ளையடிக்க அனுமதிப்பதையும் அந்த ஏழை இந்திய மக்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்? அவர்களுக்காக இந்த மோடி அரசு என்ன செய்துள்ளது?

  ஐக்கிய நாடுகளின் அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கைப்படி இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. 2011 ஆம் ஆண்டு 3.5 சதவீதமாக இருந்த அது 2012 ஆம் ஆண்டு 3.6 சதவீதமாகவும், 2013 ஆம் ஆண்டு 3.7 சதவீதமாகவும், 2014 ஆம் ஆண்டு 3.8 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. ஆனால் மோடி போகும் இடங்களில் எல்லாம் ஏழைகள் பலன் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக கூசாமல் பேசிக்கொண்டு இருக்கின்றார். ஏழைகளின் மீது மோடிக்கு உள்ள அக்கறையை நாம் பார்த்தோம் என்றால் அவரின் உண்மையான முகத்தை நாம் தெரிந்துகொள்ளலாம்.

 தேசிய வரைவு சுகாதாரக் கொள்கையில் சுகாதாரத்துக்கான முதலீடு குறைந்த பட்சம் 2.5 சதவீதமாவது  இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்ப்பட்டிருக்கின்றது. ஆனால் மோடி அரசு 1.5 சதவீதம் கூட சுகாதாரத்துக்கென்று ஒதுக்குவது கிடையாது. மேலும் இந்திய மக்களுக்குச் சுகாதாரமான குடிநீர் கூட கொடுக்கத் துப்பில்லாத நிலையிலேயே மோடி அரசு உள்ளது. ‘வாட்டர் எய்டு’ எனப்படும் சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை படி இந்தியாவில் 7.58 கோடிபேர் அதிக விலை கொடுத்து சுத்தமான குடிநீரை வாங்கும் நிலையில் உள்ளனர்.  ஏழை இந்திய மக்கள் சுத்தமான நீர் கிடைக்காமல் தினமும் 50 லிட்டர் நீரை 48 ரூபய் செலவு செய்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதற்காக அவர்கள் தங்களது வருவாயில் 20 சதவிதத்தை செலவு செய்கின்றனர். ஆனால் பிரிட்டனில் 50 லிட்டர் நீருக்காக ரூ6.76 மட்டுமே செலவாகின்றது.

  மோசமான தண்ணீரைக் குடிப்பதால் இந்தியாவில் 3.15 லட்சம் குழந்தைகள் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 1.4 லட்சம் குழந்தைகள் இறக்கின்றார்கள். இதுதான் மோடி அரசின் ஏழைகளின் மீதுள்ள கரிசனத்தின் உண்மை முகம். குடிப்பதற்கும் சுகாதாரமான தண்ணீர் இல்லை, குண்டி கழுவவும் தண்ணீர் இல்லை இந்த லட்சணத்தில் தூய்மை இந்தியா அது இது என்று பிதற்றிக் கொண்டு திரிகின்றார்கள்.

  மோடியின் ஆட்சியில் இந்தியாவுக்குக் கிடைத்த மற்றொரு பெருமை சர்வதேச அளவில் நவீன அடிமைகள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு முதலிடம் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வாக்ப்ரீ பவுண்டேசன் என்ற மனித உரிமை அமைப்பு இந்தத் தகவலை தெரிவித்துள்ளது. அதன் படி 1.83 கோடி பேருடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. மோடி தொடர்ந்து இதே பாதையில் சென்றார் என்றால் பாலியல் தொழிலில் ஈடுபவர்கள், பிச்சை எடுப்பவர்கள் போன்ற நவீன அடிமைகள் தொடர்ந்து அதிகரித்து இந்தியாவுக்கு தொடர்ந்து முதலிடம் கிடைக்கும் என நாம் எதிர்ப்பார்க்கலாம்.

 மோடி பதவியேற்ற இந்த இரண்டாண்டுகளில் இப்படி இந்தியாவின் பெருமையை பலவகைகளிலும் உலகறியச் செய்துள்ளார். கடுமையான வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகள் தற்கொலை, சுகாதார சீர்கேட்டால் அப்பாவி ஏழை இந்திய மக்கள் பலியாதல், ரூபாய் மதிப்பு சரிவு, பல தொழிற்சாலைகள் இழுத்து மூடப்படுதல், இந்திய நிறுவனங்களை அன்னிய நிறுவனங்கள் கைப்பற்றுவது அதிகரித்தல், தொழிலாளர் நலச் சட்டங்கள் அப்பட்டமாக மீறப்படுதல், பொதுத்துறை நிறுவங்களின் பங்குகளை தனியாருக்கு விற்றல் என்று தொடர்ச்சியாக இந்தியாவின் பெருமையை மோடி உலகளவில் எடுத்துச் சென்றுள்ளார். மோடி விமானத்தில் உயர பறக்க பறக்க ஒவ்வொரு இந்தியனின் வாழ்க்கைத் தரமும் அதல பாதாளத்திற்குச் சென்று கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை.

  ஆனால் உலக வங்கி என்ன, வேறு யார் என்ன சொன்னாலும் அதற்காகவெல்லாம் மோடி கவலைப்படப் போவது கிடையாது. அவருக்கு எல்லாவற்றையும் மாற்றத் தெரியும். பொருளாதார வளர்ச்சியே இல்லை என்றாலும் இந்தியா பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருப்பதாக அவரால் தன்னுடைய கைக்கூலிகளை வைத்து பொய்யான அறிக்கைகளை உருவாக்க முடியும். ஆட்டுக்கறியையே மாட்டுக்கறியாக மாற்றத் தெரிந்த மோடிக்கு இதெல்லாம் எம்மாத்திரம்!.

- செ.கார்கி