கோயமுத்தூர் ஜில்லா சட்டசபைத் தேர்தலுக்கு மூன்று ஸ்தானங் களுக்கு நான்கு கனவான்கள் நிற்கிறார்கள். மூன்று கனவான்கள்தான் வெற்றி பெறக்கூடும். இதில் தோல்வியடைவது யார் என்கிற விஷயத்தில் உண்மை யை ஒழிக்காமல் வெளியிட வேண்டுமானால், இது சமயம் உள்ள நிலைமை யின்படி, ஸ்ரீமான் சங்கராண்டாம்பாளையம் பட்டக்காரர் வேணாவுடையாக் கவுண்டர் அவர்களாவது அல்லது ஊ.ஏ. வெங்கிட்டரமணய்யங்கார் அவர்க ளாவது தோல்வியடைய நேரிடுமென்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது. இவர்களுள் ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடைய நேரிட்டால் இச்சில்லா வாசிகள் பெரும்பான்மையாக உள்ளதும் பொறுப்பும் அந்தஸ்துமுள்ளதுமான வேளாள சமூகத்திற்கு தங்களது சமூக நலத்தை நாடும் யோக்கியதை இல்லையென்றுதான் சொல்ல வேண்டி வருமென்று சொல்லவே பயப்படுகிறோம். ஆனால் அச்சமூகத்திய தலைவரும் பிரதிநிதி யுமான ஸ்ரீமான் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் தோல்வியடை வதில் ஆச்சரியமொன்றுமில்லை என்றும் சொல்லுவோம். ஏனெனில் சென்ற தேர்த லிலும் இதே மாதிரி அதாவது கொங்குவேளாள சமூகத்திற்கே இரண்டு கண்கள் என்று சொல்லத்தகுந்த மாதிரியில் இச்சில்லாவில் இரண்டு வகைப் பெரியார்கள் உண்டு. அவர்கள் கனம் தங்கிய ஊத்துக்குளி ஜமீன்தார் போன்ற ஜமீன்தார்களும் கனம் பழயகோட்டைப் பட்டக்காரர் முதலிய பட்டக்கார கனவான்களுமேயாவார்கள்.
அடுத்தாப்போல் அச்சமூக பிரமுகர்களிலும் பிரமுகராயிருப்பவர்கள் ஸ்ரீமான் ஏ.ஊ. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள். இப்பேர்ப்பட்ட தலைவர்களையும், பெரியார்களையும், பிரமுகர்களையும், நமது கொங்கு வேளாள சமூகம் உடைத்தாயிருப்பதற்கு மிகுதியும் பெருமையும் பாராட்டிக் கொள்ள வேண்டியிருப்பதோடு அப்பெருமைகள் சிறப்புற்று விளங்க ஒவ்வொருவரும் உழைக்க வேண்டும். அப்படியிருக்க சென்ற 3 வருஷத்திற்கு முன்னிட்ட சட்டசபைத் தேர்தலில் ஊத்துக்குளி ஜமீன்தார வர்களைத் தோல்வியடையச் செய்து விட்டார்கள். அது மாத்திரமல்லாமல் ஸ்ரீமான் வெள்ளியங் கிரிக்கவுண்டர் அவர்களையும் தோல்விக்கு மிக சமீபத்தில் நிற்கும்படி செய்து விட்டார்கள். அது சமயம் ஒத்துழையாமையிலீடுபட்டிருந்த சிலரும் ஸ்ரீமான் கவுண்டர் அவர்களுக்கு தோல்வி ஏற்படுமோ என அஞ்சி தங்களது கொள்கை களையும் விட்டு கவுண்டருக்காகப் பிரசாரம் செய்து மூன்றாவதாராக வெற்றி பெறச் செய்ததும் நாம் அறிவோம். அதோடு வேளாள சமூகத்தாரல்லாத வரும் வேளாளர்களை சரிசமமாகக் கூட நடத்தாமல் இழிவாய் நடத்துகிற வரும் வேளாள இரத்தத்தை உறிஞ்சியே வாழ வேண்டிய சமூகத்தாராகிய ஸ்ரீமான் ஊ.ஏ. வெங்கிட்ட ரமணய்யங்கார் அவர்கள் எல்லோரையும்விட அதிகமான ஓட்டுப் பெறும் படியாகவும் செய்த நமது கொங்கு வேளாள சமூகத்தில் இவ் வருஷமும் அவர்களுடைய தலைவரான பட்டக்காரக் கவுண்டர் தோல்வியுற்றால் ஆச்சாரியப்படுவதற்கில்லை என்று சொன் னோம். அல்லாமலும், ஸ்ரீமான்கள் ஜமீன்தாரும் தோல்வியுற்று வெள்ளியங் கிரி கவுண்டரும் குறைந்த ஓட்டுப் பெறவும் அநுமதித்து சும்மாயிருந்து விட்ட பட்டக்காரக் கவுண்டர் தோல்வியுறுவது கருமபலன் என்று கூட கருமபலனில் நம்பிக்கை உள்ளவர்கள் கண்டிப்பாய் ஒப்புக் கொள்ளு வார்கள்.
ஆனால், நாம் ஓட்டு செய்வதாயிருந்தால் முதலாவது ஸ்ரீமான் பட்டக்கார வேணாவுடையாக் கவுண்டருக்கும், இரண்டாவது முதலியாருக் கும், மூன்றாவதாக செட்டியாருக்கும்தான் போடுவோமே ஒழிய எந்தக் காரணத்தைக் கொண்டும் அய்யங்காருக்குப் போடவே மாட்டோம். இதற்குக் காரணம் சொல்லுவதற்கு முன் ஒரு விஷயத்தை எல்லோரும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டியது. அதாவது தற்கால அமைப்பின் படி சட்டசபைக்குப் போவதன் மூலம் அரசியல் சம்பந்தமாய் எவ்வித காரியமும் செய்ய முடியாது.
1. கந்தாயம், வரி, வட்டம் முதலியதுகளைக் குறைத்துக்கொள்ள முடியவே முடியாது.
2. வசூல் செய்த கந்தாயங்களையும் வரிகளையும் நம்மிஷ்டம் போல் சிலவு செய்யவும் சர்க்கார் இஷ்டம் போல் சிலவு செய்வதைத் தடுக்கவும் முடியாது.
3. வேளாள சமூகத்தையே அழிப்பதற்காதாரமான வியாஜ்ஜியம், விவகாரம், கோர்ட்டு முதலிய விஷயங்களில் குடியானவர்களுக்கனுகூலமான எவ்வித சீர்திருத்தங்கள் கூட செய்ய முடியாது. எங்காவது செய்யக்கூடிய வழிகள் இருந்தாலும் அதனாலேயே பிழைக்கப் பிறந்த நமது பார்ப்பனர்கள் கொஞ்சமும் இடம் கொடுக்கவுமாட்டார்கள்.
4. கள், சாராய உற்பத்தியையோ விற்பனையையோ குறைக்கமுடியவே முடியாது. ஏனெனில், குடியானவர்கள் குடிப்பதற்காக கொடுக்கும்பணத்திலிருந்துதான் பார்ப்பனர்கள் படிக்கவேண்டும். குடியானவர்கள் குடித்துக் கெடும் பணத்திலிருந்து தான் பார்ப்பனர்கள் பிழைக்க வேண்டும். அந்த மாதிரி நிலையில் சர்க்காரார் குடி தத்துவத்தை வைத்திருக்கிறார்கள். இம்மாதிரியே பொது ஜனங்களுக்கோ குறிப்பாய் வேளாள சமூகத்திற்கோசட்டசபை மூலம்ஒரு காரியமும் செய்துகொள்ள முடியாது.
மற்றபடி எதனால் கவுண்டரவர்களுக்கு முதலில் ஓட்டு போடு வோமென்றால் சட்டசபை மெம்பர் என்பது ஒரு பதவி, பெருமை, கீர்த்தி முதலியதுகளுக்குஉபயோகமானது. இம்மாதிரி பதவி, கீர்த்தி, பெருமை முதலியதுகள் அடைய பாத்தியமுள்ளவர்கள் இந்நாட்டு பெரும்பான்மை யும் முக்கியமுமான வகுப்பாகிய வேளாள சமூகத்தினரானதினாலும் சென்ற ஆறு வருஷமாய் அதிலிருந்து பெருமை அடையாத புதியவராயிருக்கிற தினாலும் ஒரு பெருமையை ஒருவரே அட்டை போல் ஒட்டிக் கொண்டு சாகளவும் வேறொருவருக்கு விடாமல் அனுபவிப்பதைவிட ஆளுக்கொரு தரம் அனுபவிக்கலாம் என்கிற முறைப்படியும் கவுண்டருக் குத்தான் ஓட்டு செய்ய வேண்டும். இந்தத் தத்துவத்தை உத்தேசித்தே ஸ்ரீமான் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களும் புதிதாய் ஒருவருக்கு இப் பதவியை அளிக்க வேண்டு மென்ற எண்ணங்கொண்டே தனக்குக் கண்டிப் பாய் சட்ட சபை மெம்பர் ஆகி விடும் என்கிற உறுதியிருந்தும் புதிதாக ஒருவருக்கு கொடுக்க வேண்டுமென்று கண்ணியமாய் விலகிக் கொண்டார். ஆனாலும் பட்டக்காரக் கவுண்டர் அவர்கள் நின்றிருந்தாலும் தானும் நின்றிருந்தால் அதில் தப்பு ஒன்றும் சொல்ல முடியாது. ஆனால் ஸ்ரீமான் வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்கள் தாங்கள் சமூகத்தாரின் குலாபிமானத்தைச் சென்ற தேர்தலில் கண்டு கொண்ட அனுபவத்திலிருந்து ஒரு கவுண்டருக்காவது நமது வேளாள சகோதரர்கள் போடுவார்களோ போட மாட்டார்களோ என்பது உறுதி இல்லாதிருக்கும்போது இருவர் நின்றால் நாளை எல்லோரும் இதனாலேயே போய் விட்டது என்று சொல்லுவார்கள் என்று பயந்து கொண் டும் எப்படியாவது நமது வகுப்பார் ஒருவராவது கஷ்டமில்லாமல் வரட்டு மென்கிற பெரு நோக்கத்துடன் விலகிக் கொண்டார். அதற்காக வாவது பட்டக்காரக் கவுண்டருக்கு ஒவ்வொருவரும் முதலாவதாக ஓட்டுப் போடக் கடமைப் பட்டிருக்கிறார்கள்.
ஸ்ரீமான் சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியாரவர்களுக்கும் இதுபோன்ற காரணம்தான். அதாவது, இதற்குமுன் இப்பதவியிலிருந்தவரல்ல. சென்ற தடவை இந்த ஸ்தானத்திற்கு நின்று ஏராளமான செலவு செய்து தோல்வி யுற்றவர். ஜில்லா பொதுமக்கள் பலரால் நல்லவர் என்று கொண்டாடப் பட்டவர். மற்றும் பல நல்ல சுபாவங்களுமுடையவர். அடுத்தபடியாக ஸ்ரீமான் டி.எ.ராம லிங்க செட்டியார் அவர்கள் இதற்கு முன் இரண்டு தடவை அப்பதவி வகித் தவராயிருந்தாலும் குடியான சமூகத்திலாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்தி லாவது வேறு யாரும் இன்னொரு அபேக்ஷக ராக நிற்கவுமில்லை. அல்லா மலும் பார்ப்பனரல்லாத சமூகத்தவர் பெரும் பான்மையான ஜனங்கள் எதிர் பார்க்கப்படுகிறதான பணமும் படிப்பும் உள்ளவர். பல நல்ல சுபாவங் களுமுள்ளவர். இப்பதவி அனுபவிக்க ஆசைப்படத்தகுந்த யோக்கிய தையுமுடையவர். இந்தக் காரணங்களோடு மற்றொன்று என்னவென்றால் மக்கள் யாவரும் கடவுள் முன்னிலையில் சமம் என்றும் பிறவியில் மக்களுக் குள் உயர்வு தாழ்வைக் கற்பித்து ஒருவரை ஒருவர் இழிவுபடுத்துவது தப்பு என்கிறதுமான கொள்கைகளை இம்மூவரும் உடையவர்கள். தற்காலம் நமது பிரதிநிதியாக சட்டசபைக்குப் போக இந்த ஒரு யோக்கியதையேதான் நம்மைப் பொறுத்தவரையில் முக்கியமானது என்று எண்ணுவதால்தான் நாம் ஓட்டுப் போடுவதாயி ருந்தால் இதுசமயம் இம்மூவருக்கேதான் ஓட்டுச் செய்வோம் என்று சொல்ல நேரிட்டது. அல்லாமலும் ஸ்ரீமான் சி.வி.வெங் கிட்டரமணய்யங்காருக்கு ஏன் போடக்கூடாது என்பதற்கும் சில காரணங்கள் சொல்லாவிட்டால் பொதுஜனங்கள் திருப்தியடைய மாட்டார்கள் என்றே எண்ணுவதால் அதையும் சொல்லுகிறோம்.
ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்கார் சட்டசபைக்கு போவதற்குச் சொல்லும் அரசியல் காரணங்களை நாம் ஒப்புக் கொள்வதில்லை, அவரு டைய கட்சியான சுயராஜ்யக் கட்சி என்பதை நாம் ஒரு புரட்டுக் கட்சி என்றும் கட்சியின் பேரால் சட்டசபையை விட்டு வெளியில் வந்தவர் மறுபடி கட்சி உத்திரவு இல்லாமல் உள்ளே போனவர். அது பார்ப்பனரல்லாதாரைத் தாழ்த்த வும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தவும் ஏற்பட்ட பார்ப்பனக் கட்சி என்பதே நமதபிப்பிராயம். தன்னை ஒரு சமயம் காங்கிரசுக்காரர் என்று சொல்லிக் கொள்ளக்கூடும் என்றால், காங்கிரஸ் கட்டளை சட்டசபைக்குப் போகக்கூடாது என்று இருந்த காலத்தில் அதைமீறி சட்டசபைக்குப் போனவர்; காங்கிரசுக் கட்டளைப்படி அநேக தேசபக்தர்கள் கள்ளுக்கடை மறியல் செய்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஜெயிலுக்குப் போய்க் கொண்டிருந்த காலத்தில் தனது ஆயிரக்கணக்கான தென்னை மரங்களில் முட்டி கட்டி கள்ளுற்பத்தி செய்து பதினாயிரக்கணக்கான ரூபாய் சம்பாதித் துக் கொண்டிருந்தவர்.
ஒத்துழையாமைக்காக இந்தியாவில் முப்பதாயிரம் பேர் ஜெயிலுக்குப் போயிருக்கும் போது இவர் சட்டசபையில் மெத்தை போட்ட நாற்காலியில் உட்கார்ந்து காற்று வாங்கிக்கொண்டு அரசாங்கத் தாரோடு ஒத்துப் பாடிக் கொண்டு வந்தவர்; தன்னை ஒரு ஒத்துழையாதான் என்று சொல்லிக் கொள்ளுவாரா என்றால் அரசாங்கத் தயவில் ஜில்லா போர்டு மெம்பரும், கல்விச் சங்கத் தலைவர் பதவியும் அரசாங்க நியமன மாய்ப் பெற்றவர்; ஒரு சமயம் நிர்மாணத் திட்ட மாகிய கதர், தீண்டாமை, மதுவிலக்கு இதுகளுக்கு அநுகூலமாய் இருப்பவர் என்று சொல்லிக் கொள்ளுவாரேயானால், யந்திர நெசவு மில்லை வைத்து தினம் ஒன்றுக்கு பதினாயிரக்கணக்கான கெஜம் துணிகளை தனது யந்திரத்தின் மூலம் உற்பத்தி செய்து தினம் பதினாயிரக் கணக்கான நெசவுக்காரர் தொழிலைக் கெடுத்து அவர்கள் வயிற்றில் மண்ணைப் போட்டுக் கொண்டு இருப்பவர்; எப்படி தன்னை கதரில் நம்பிக் கை உள்ளவர், கதருக்கு ஆதரவு அளிப்பவர் என்று சொல்லிக்கொள்ள முடியும்? எலெக்ஷன் தீரும்வரை பொது ஜனங்களை ஏய்ப்பதற்காக கதர் கட்டிக் கொண்டிருந்தால் போதுமா? தீண்டாமையில் கவலை உள்ளவர் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளு வாரானால் முதலாவது தேவஸ்தான மசோதாவை ஆnக்ஷபித்திருக்க முடியுமா?
அவரைப்போல் கல்வியும் செல்வமும் அவரைவிட அழகும் குணமும் உள்ள குடியானவர்களையே சூத்திரர் என்றும், தான் சாப்பிடு வதைப் பார்க்கக் கூடாது என்றும், தொட்டு விட்டால் தீட்டாய்ப் போய் விட்டது என்றும் சொல்லுபவர் ‘சக்கிலிப் பரையர்’ என்று சொல்லும் சகோதரர்களாகியவர் களை கிட்டவரவொட்டுவாரா? மதுவிலக்கைப் பற்றியோவென்றால், முன்னமேயே பேசிப்பேசி தீர்ந்து போய் விட்டது. ஒரு சமயம் தேர்தலுக்காக ஏதாவது முட்டி இறக்கியிருப்பாரேயானால் சட்டசபை தீர்ந்தவுடன் பத்தி லேயே மறுபடியும் இறக்கின முட்டிகள் ஒன்றுக்குப் பத்தாய் மரம் ஏறப் போகிறது. இவ்வளவும் தவிர தன்னை நமது சகோதர வகுப்பார் என்று சொல்லிக்கொள்ளுவா ரேயானால் எப்படி இவர்கள் வகுப்பு நமக்கு சகோதர வகுப்பாகும். நாம் நமது நாட்டி லுள்ள எந்த வகுப்பாரோடு சேர்ந்து அவ் வகுப்பாரில் கலந்து கொள்ள வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். உதாரணமாக, நாம் ஐரோப்பாவுக்குப் போய் சிலகாலம் இருந்து விட்டு வந்தால் ஐரோப்பியராய் விடலாம். ஐரோப்பிய சம்பந்தம் வைத்துக் கொண்டால் சட்டைக் காரராய் விடலாம். மகமதுவைப் பின்பற்றி தலையை மொட்டை அடித்து லுங்கி கட்டி அல்லாவை வணங்கினால் மகம்மதியராய் விடலாம். ஏசுவைப் பின் பற்றி கழுத்தில் சிலுவைப் போட்டுக் கொண்டால் கிறிஸ்து வராகி விடலாம். இவ்வளவு பெயரையும் நாம் சகோதரர் என்று கூப்பிடலாம். அவர்கள் நம்மை சகோதரர் என்று கூப்பிடலாம். ஆனால் நாம் என்ன செய்தால் பிராமணனாகலாம்? பூமியில் பிறந்து விட்டால் சாகும் வரை அவன் வேறு, நாம் வேறு; எந்த விதத்திலும் ஒன்றாக முடியாத பார்ப்பனீயம் என்னும் பெரிய தடை மத்தியில் இருக்கிறது.
ஆதலால், இந்நிலையில் நமக்கும் பார்ப்பனருக்கும் எவ்வித சம்பந் தமோ ஒற்றுமையோ ஒருவர் நன்மையில் மற்றவருக்கு கவலையோ இருக்கிற தென்பதெல்லாம் புரட்டேயொழிய உண்மையல்ல. ஆதலால், ஓட்டுப்போட இஷ்டமுள்ள இச்சில்லா பார்ப்பனரல்லாத ஓட்டர்களும் குறிப்பாய் வேளாள ஓட்டர்களும் தங்கள் தங்கள் ஓட்டுக்களைக் கண்டிப் பாய் முன்கூறிய வரிசைப்படி பார்ப்பனரல்லாத மூவருக்கே போடும்படி வேண்டிக் கொள்ளு கிறோம். எந்த விதத்திலாவது பார்ப்பன ஓட்டர்கள் ஒருவராவது பார்ப்பனரை விட்டு பார்ப்பனரல்லாதாருக்கு ஓட்டுக் கொடுப் பார்கள் என்று நம்பவே வேண்டியதில்லை. பெரும்பான்மையான பார்ப்பன மக்கள் ஸ்ரீமான் அய்யங்காருக்கு தனி வோட்டுகளே போடுவார்கள். சிலர் மீதி ஓட்டுகளை ஸ்ரீமான் செட்டியாருக்கும் முதலியாருக்குமாவது செய்வார்களே ஒழிய ஸ்ரீமான் கவுண்டருக்குக் கண்டிப்பாய் செய்ய மாட்டார்கள். ஏனெனில் தோல்வி அடைவது ஸ்ரீமான் கவுண்டரா அய்யங் காரா என்பதாகவே இருப்பதால்தான். ஆதலால் அய்யங்காருக்கு போடப்பட்ட ஒவ்வொரு ஓட்டுக்களும் பட்டக்காரக் கவுண்டரைத் தோற்கடிக்கத்தக்கது என்று மறுபடியும் சொல்லுகிறோம்.
(குடி அரசு - தலையங்கம் - 24.10.1926)