சென்னை இலயோலா கல்லூரி B.Ed அரங்கில் அக்டோபர் 22, 2011 சனிக்கிழமை மாலை 05.30 ம‌ணிக்கு ந‌டைபெற்ற‌ 'முதுகுளத்தூர் கலவரம் (1957) முதல் பரமக்குடி படுகொலை (2011) வரை' க‌ருத்த‌ர‌ங்கில் நிக‌ழ்த்த‌ப்ப‌ட்ட‌ உரைக‌ளின் தொகுப்பு: 

வழக்கறிஞர் விஜயேந்திரன் :

இது போன்ற NGO நடத்தும் கூட்டத்தில் பங்கேற்பதில் எனக்கு உடன்பாடு இல்லை (இவர் உரைக்குப் பிறகு செந்தில் சேவ் தமிழ்சு NGO அல்ல என மறுப்பு தெரிவித்தார்). பொதுவாக நகர மக்களிடையே சாதி ஒழிந்துவிட்டது போன்ற கருத்து போக்கு உள்ளது. இது உண்மையல்ல. இன்னும் ‘சேரிகள்’ மாறவில்லை. தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் மூலமாக தேவதாசி முறை படிப்படியாக ஒழிக்ககப்பட்டது. ஏனெனில், அது பழக்கம் மற்றும் உடல் ரீதியாக தொடர்புடையது. ஆனால், சாதியை சட்டம் மூலமாக ஒழிக்கப்பட முடியாது. ஏனெனில், சாதி ஒவ்வொருவரின் இரத்ததிலும் உணர்விலும் கலந்து உள்ளது. நான் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், நீதிமன்றங்களில் புழங்கும் சாதி ஆதிக்கத்தினைக் கண்கூடாக அனுபவித்து கொண்டு இருக்கிறேன். ஆதிக்க சாதியினரால் பாதிப்புக்குள்ளான தாழ்த்தப்பட்ட சாதியினர் தொடுத்த வழக்கை விசாரிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நீதிபதி தன்னைத் தன் சாதியின் பிரதிநிதியாக இருந்து தீர்ப்பு வழங்குகிறார். இவ்வாறு நீதி மறுக்கப்பட்ட தலித் மக்கள் என்ன செய்ய முடியும்? வன்கொடுமைக்கு ஆளாகும் தலித் மக்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்படுகிறது. ஆனால், உண்மையில் இந்த நிதி அவர்களுக்குப் போய் சேர்வதில்லை. மாறாக, இலவசத் திட்டங்களுக்கு மடை மாற்றப்படுகிறது.
 
தோழர் ஜோன்சன்:

savetamils_meeting_350கிராமங்களில் 15 வருடங்களுக்கு முன்னால் இருந்த சாதிய பழக்கவழக்கங்கள் இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகின்றன. அப்படியானால், எல்லோரும் படித்துவிட்டால் இதெல்லாம் சரியாகி விடுமா என்றால், இல்லை. நன்றாக படித்து உயர் மட்டத்தில் இருப்பவர்களே, பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கொண்டாடி முகப்புத்தகத்தில் (Facebook) எழுதியதை உங்களில் பலபேர் கேள்விப்பட்டிருக்கலாம்.

தீண்டாமை ஒழிப்பையே இன்னும் முழுமையாக செய்துமுடிக்கவில்லை. 2000 வருடங்களுக்கு மேலாக ஓடிக்கொண்டிருக்கும் சாதி என்கிற வண்டியை கட்டி இழுத்து சரியான பாதைக்குக் கொண்டு வருவது தானாக நடந்துவிடுவது இல்லை. நாம் ஒவ்வொருவரும், சாதிய மனப்பான்மையோடும் சாதிய ஆதிக்கத்துடனும் நடந்துகொள்ளும் நமது நண்பர்கள் உறவினர்களைத் தொடர்ந்து கண்டிப்பதன் மூலமும் சுட்டிக்காட்டுவதன் மூலமே இந்த மாற்றம் சாத்தியமாகும். படித்தவர்களின் மனதிலும் இன்னமும் இருக்கின்ற சாதிய மனோநிலையைச் சுட்டிக்காட்டும் விதமாகவே சேவ்-தமிழ்சு இந்த கூட்டத்தை நடத்துகிறது.
 
தோழர் இளம்பரிதி:

ilamparithi_360தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கூட சாதியத்தை மனிதன் சுமந்தபடியேதான் உள்ளான். இந்தப் பரமக்குடி படுகொலைகளை தொடந்து FaceBook-ல் நடைபெற்ற விவாதங்களில் கூட சாதிப் பெருமையை பேசியபடியும், இந்த படுகொலைகளை ஆதரித்து கருத்து தெரிவிக்கிறனர். எனவே சாதி சமூகத்திலிருந்து நீங்க உளவியல் ரீதியான மாற்றம் வர வேண்டும். நாம் சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றி பரமக்குடி படுகொலைகளுக்குப் பிறகுதான் பேசுகிறோம். அவ்வாறில்லாமல் எல்லா காலங்களிலும் தொடர்ந்து பேச வேண்டும். எல்லாக் கட்சிகளிலும் முக்கியப் பதவிகளில் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களே அமர்ந்து கொள்கின்றனர். எனவே அவர்கள் இது போன்ற சாதீயப் பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்கின்றனர். தமிழ் தேசியம் பேசுபவர்களும், முற்போக்கு என்று சொல்லிக் கொள்பவர்களும் சாதிப் பிரச்சினைகளை பற்றி பேச வேண்டும். சில முற்போக்கு இயக்கங்களில் கூட சாதி ஆதிக்கம் மேலோங்கியுள்ளது.

அடித்தட்டு சாதி மக்களுக்காக போராடுபவர்கள் ஆதிக்க சாதியில் இருந்தும் வரவேண்டும். அவ்வாறு வந்தால் அவர்களோடு இணைந்து போராட நாங்கள் தயாராக உள்ளோம்.
 
பெரியார் தி.க. விடுதலை ராஜேந்திரன்:

இந்திய அரசே தன் அடிப்படையில் சாதியத்தை கட்டிக்காக்கும் அரசாக உள்ளது. ஏனெனில் இந்த அரசை வழி நடத்துபவர்கள் மேல் சாதிக்காரர்களே. எனவே இந்த அரசே மேல் சாதி மனப்பான்மையுடன்தான் நடந்து கொள்கிறது.

viduthalai_rajendran_360தேசிய இனங்களுக்கிடையே சாதியம் இருக்கும் வரை அவர்கள் தங்களுக்குள் ஒரு இனமாக ஒன்றுபட மாட்டார்கள். தேசிய இன விடுதலை பற்றி சிந்திக்க மாட்டார்கள். எனவே இந்தியா சாதியத்தையும், மதத்தையும் சுதந்திரம் கிடைத்து இத்தனை ஆண்டுகள் கடந்தும் கட்டிக் காக்கிறது.

இதற்காகவே இந்தியாவில் “பழக்க வழக்க சட்டம்” என்ற சட்ட விதிகள் 13, 19, 25, 26, 372(1) ஆகியவை உள்ளன. இந்த விதிகள் மதப்பழக்க வழக்கங்கள் மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் இன்றும் தொடர அனுமதிக்கின்றது. இது சட்டப்படி மதமும், சாதியும் உயிர்ப்புடன் இருக்க உதவுகிறது.

சமூகத்தில் சாதியத்தின் படிநிலையானது கூம்பு விளையாட்டை ஒத்துள்ளது. இதில் கீழ்மட்டத்திலுள்ளவர்கள் பெரும்பான்மையாக உள்ளவர்கள். இவர்கள் தங்களது தோள்களை மற்றவர்களுக்கு நிற்பதற்கு தருகின்றனர். அவர்களின் தோள் மேல், அடுத்த சாதி நின்றபடியே, தமது தோள்களையும் தம்மை விட உயர்ந்த சாதி நிற்க அனுமதிக்கின்றது. இப்படி செல்லும் இந்த கூம்பு வடிவ விளையாட்டில் உச்சத்தில் பார்ப்பனியம் நின்று கொண்டிருக்கிறது. அவர்கள் கையில்தான் ஆட்சியும், அதிகாரமும் உள்ளது.

இதில் ஒவ்வொரு சாதியையும் தாம் இன்னொரு சாதியை விட மேல் என்ற எண்ணத்தை கைவிடாதவரை மாற்றம் நிகழப் போவது இல்லை. இவ்வளவு அறிவியல் வளர்ந்து விட்ட இந்த காலத்திலும் கிராமத்தில் ஒவ்வொரு சாதிக்கும் ஒரு தெரு தேவைப்படுகிறது. சாதியை மீறி காதல் திருமணம் செய்து கொள்பவர்கள் நகரத்திற்கு வர வேண்டியுள்ளது.
 
தென் மாவட்டங்களில் தொடர்ந்து சாதிநிலை இறுக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதனால்தான் அங்கு படுகொலைகளும், துப்பாக்கிச் சூடுகளும் தொடர்ந்தபடியே உள்ளன.

இராணுவத்தில் பணியாற்றிய இமானுவேல் சேகரன் அவர்கள் தன் சொந்த ஊருக்கு திரும்பிய பொழுது தனது இன மக்களுக்கு நடக்கும் கொடுமைகளைப் பார்த்து அவற்றை போக்க கிராமந்தோறும் சென்று "சாதிய ஒழிப்பு இயக்கம்" நடத்தினார். அருப்புக் கோட்டை சட்டமன்ற தனித்தொகுதி தேர்தலில் முத்துராமலிங்க தேவர் அவர்கள் நிறுத்திய வேட்பாளருக்கு எதிராக இமானுவேல் அவர்கள் ஒரு தலித் வேட்பாளரை நிறுத்தினார். இமானுவேல் அவர்கள் நிறுத்திய வேட்பாளர் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து நடந்த கலவரத்தை அடக்க சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

1957 செப்டம்பர் 10-ல் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில் தேவர் வந்தபோது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். இமானுவேல் எழுந்து நிற்கவில்லை. மேலும் தேவருடன் தமது இன மக்களுக்காக சரி நிகர் சமானமாக இமானுவேல் அவர்கள் வாதாடினார். அதற்கு மறுநாளே இமானுவேல் சேகரன் கொல்லப்பட்டார். அப்போது அவருக்கு வயது 33.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் இமானுவேல் சேகரனின் நினைவு நாளில் படுகொலைகள் நடந்தபடியேதான் உள்ளன. இந்த வருடம் துப்பாக்கி சூடு வரை நடந்துள்ளதால் அது நமக்கு தெரிகிறது.

இது குறிப்பிட்ட இரு சாதிக்கு இடையில் மட்டும் நடைபெறவில்லை. பல்வேறு காலங்களில் பல்வேறு சாதிகளுக்கிடையே நடைபெறுகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட சாதிக்கு எதிராக மட்டும் போராடாமல், மொத்தமாக சாதிக்கும், தீண்டாமைக்கும், பார்ப்பனியத்திற்கும், மதத்திற்கும் எதிராக நாம் போராட வேண்டும்.
 
தோழர் வ. கீதா:

சாதிய கட்டமைப்பு நீடித்து நிலைப்பது இந்திய அரசிற்கு மிக அவசிய தேவையாக உள்ளது. அறிஞர் கோசாம்பி, சாதி என்பது வரலாற்றுக்கு எதிரானது என்றார். வரலாற்றில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தாலும் சாதி அமைப்பு தன் மேல் கீழ் அமைப்புக்கு ஏற்றவாறு உட்செலுத்திக்கொண்டு வலுப்பெறுகின்றது. தொடர்ந்து சாதி எதிர்ப்பு மரபு என்பது இருப்பதினாலே தான் ஆளும் வர்க்கம் சாதியைக் கட்டிக் காப்பதில் கவனம் செலுத்துகிறது. இந்திய அரசிற்கு ஏன் தேவை? தன்னை ஒரு ஜனநாயக அரசாக அறிவித்துள்ளதால், பல சமயங்களில் சாதி முரண்களை சமாளிப்பது என்பது உடனடி தேவையாக உள்ளது. ஆனாலும் கூட, தொடர் மக்கள் போராட்டங்களினால் சாதி இறுக்கம் தளர்ந்து கொண்டு வருகின்றது. மறுபக்கம் சாதி கட்டிக் காக்கும் போக்கும் வலுத்து கொண்டு வருகிறது. இதற்கு அரசு துணை செய்கிறது. தமிழகத்தில் பெரியாரின் திராவிட இயக்கமும் இடதுசாரி இயக்கமும் தான் சாதி எதிர்ப்பு போரட்டத்தில் முக்கிய பங்கு ஆற்றின.

va_geetha_360தமிழ்த் தேசிய அடையாளம் என்பது ஒரு பொது அடையாளத்தின் தேடல் தான். இத்தேடல், அயோத்திதாசர் காலம் முதல் உள்ளது.1950 -60களில் தி.மு.க பொது அடையாளத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்தது. தலித் மக்கள் தங்களின் பிறப்பு இழிவு நீங்க இப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றின. ஆனால், தலித் மக்களின் தியாகங்கள் இருட்டடிப்பு செய்யப்பட்டது. தலித்கள் ஏமாற்றப்பட்டனர். இவ்வாறான தமிழ்த் தேசியம் என்பது போலியானது.

தமிழ்த் தேசியம் பேசுவோர், வேறொரு மண்ணில் தமிழர்களுக்கு நடக்கும் அவலங்களைக் கொண்டு பொங்கி எழுகிறார்கள். தமிழர்களின் வீரம் பற்றி பறைசாற்றுகின்றார்கள். ஆனால், இங்கு நடக்கும் அவலங்களை கண்டும் காணாது உள்ளனர். வரலாற்று ரீதியாக நாம் அத்தமிழர்களுக்கு குரல் கொடுக்க வேண்டியது நம் கடமை. அதை மறுப்பதற்கில்லை.

1960களில் தொடங்கி ஒவ்வொறு பத்தாண்டுகளிலும் தலித் மக்கள் மீது மிக கொடூரத் தாக்குதல் நடந்து வருகிறது. அப்போதெல்லாம் நம் தமிழ் வீரம் என்னாயிற்று? முதுகுளத்தூர் கலவரம் நடந்தவுடன் பெரியார் தனித்த குரலில் முத்துராமலிங்கத் தேவரைக் கைது செய்ய முழங்கினார். காமராசரும் பெரியாருடன் கைக்கோர்த்தார். அதே சமயம், சாதியை ஒழிக்க இந்திய அரசமைப்பு சட்டத்தை எரிக்கும் போராட்டத்தைத் தொடங்கினார். காமராசர் அதிர்ச்சியுற்றார். முதுகுளத்தூர் கலவரத்தின் அபாயத்தையும் அதற்கான மூல காரணம் சாதி என்பதையும் அறிந்தவர் பெரியார்.

சாதியைக் க‌ட‌ந்து ஒரு பொது அடையாளத்தை நோக்கிய‌ தேவை இருந்த‌போதே த‌மிழ் ம‌ற்றும் த‌மிழ்த்தேசிய‌ம் முன்வைக்க‌ப்ப‌டுகிற‌து. இந்த‌ பொது அடையாளத்திற்கான‌ எல்லைவித‌ பிர‌ச்சார‌ங்க‌ளையும் முன்னெடுத்த‌வ‌ர்க‌ள் த‌லித் ம‌க்க‌ள். ஆனால் வ‌ர‌லாற்றில் தொட‌ர்ச்சியாக‌ அவ‌ர்க‌ள் செய்து வ‌ந்த பல தியாக‌ங்க‌ளும் போராட்ட‌ங்க‌ளும் திட்ட‌மிட்டே ம‌றைக்க‌ப்ப‌ட்டு வ‌ருகின்ற‌ன‌.

திருச்சியைச் சேர்ந்த கிறித்துவ பாதிரியார், வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ஆய்வு செய்துள்ளார். பெரும்பாலான சாதிய வன்கொடுமைகளுக்கு காரணங்களாக முதல் தகவல் அறிக்கையில் பாலியல் ரீதியாக வசை பாடுவது என்று சொல்லப்பட்டுள்ளது. தலித் மக்கள் எவ்வாறெல்லாம் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர் என்பது இவ்வாய்வில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இது, சாதிக்கும் பாலியலுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை உணர்த்துவதாகும். ஒரு தலித் பெண்ணை கீழ்தர குழந்தையைப் பெற்றெடுக்கும் பிறவியாக வசைப் பாடப்படுகிறது.

சாதிக் கட்டமைப்பைத் தக்கவைப்பது அகமண முறை தான். ஒரு பெண் தன் சாதியினரை மட்டும் மணமுடித்து தன் சாதிக்கு ‘பெருமை’ தேடி தந்தால் மட்டும் தான் அவள் ‘நல்ல’ பெண் என்றழைக்கபடுகிறாள்.

சாதிக்கு எதிராக‌ ஒவ்வொரு த‌லைமுறையும் புதிதாக‌ போராட்ட‌ங்க‌ளை முன்னெடுக்க‌ வேண்டியுள்ள‌து. சாதிக் கொடுமைக‌ள் நிக‌ழும் பொழுது ம‌ட்டுமே நாம் ந‌ம்முடைய‌ குர‌ல்க‌ளை எழுப்புகிறோம். அத‌ன் பின் மீண்டும் ஒரு நீண்ட‌ மௌன‌ம். இந்த‌ மௌன‌த்தை உடைக்க‌ வேண்டும்.

Pin It