ஷெட்யூல்டு பிரிவினருக்கான தேசிய ஆணையம் என்ற அமைப்பு - ஷெட்யூல்டு பிரிவினருக்கு விரைந்து நீதி வழங்கவும், அவர்களின் அரசியல் சட்ட உரிமைகளை உறுதி செய்யவும், உருவாக்கப்பட்ட அமைப்பு. அப்படி ஷெட்யூல்டு பிரிவினரைப் பாதுகாக்க அமைக்கப்பட்ட அமைப்பின் அதிகாரிகளே சாதிப் பாகுபாடு கண்ணோட்டத்தோடு செயல்படுகிறார்கள். ஷெட்யூல்டு மக்களிடமிருந்து வந்த ஏராளமான புகார்கள் இந்த ஆணையத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் மலைபோல் குவிந்து கிடக்கின்றன.

அரியானா மாநிலம் கர்னல் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் பிபிபூர். இந்த ஊரில் வாழும் தலித் மக்கள் தாங்கள் வழிபடும் முனிவர் ரவிதாசுக்கு கோயில் ஒன்றைக் கட்டினர். கோயில் கட்டப்பட்ட இடம், கிராமப் பள்ளிக்கூடத்துக்கு சொந்தமானது என்று கூறி பார்ப்பனரும், ஆதிக்க சாதியினரும், கோயிலை இடித்துத் தரை மட்டமாக்கிவிட்டனர். அதே பள்ளிக்கு சொந்தமான இடத்தில் பார்ப்பனர்கள் மூன்று கோயில்களை கட்டியுள்ளனர். ஆனால், அவை இடிக்கப்படவில்லை.

வித்யா சுப்ரமணியம் என்ற செய்தியாளர் இந்த கிராமத்துக்கு நேரில் சென்று செய்திகளைத் திரட்டி, ‘இந்து’ நாளேட்டில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார். நிலமில்லாத தலித் மக்கள் நாங்கள் வேறு எங்கே கோயில் கட்டுவது என்று கேட்கிறார்கள். தங்களது இயற்கைக் கடன்களை கழிக்க பார்ப்பன உயர்சாதியினர் நிலங்களைத்தான் தாழ்த்தப்பட்ட பெண்களும், ஆண்களும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. ஆனால் - அப்படி இயற்கைக் கடன் கழிக்க வந்தவர்களை அடிப்பதும், அவமதிப்பதும், ஆடையை அவிழ்த்து நிர்வாணமாக ஓட விடுவதும் - சாதி வெறியர்களின் வழக்கமாகிவிட்டது. அதேபோல் - பார்ப்பனர்கள் கட்டியுள்ள மூன்று கோயில்களுக்குள்ளும் தலித் மக்களை பார்ப்பனர்கள் அனுமதிப்பதில்லை.

தங்கள் மீது தீண்டாமையை திணித்து, வன்முறையை ஏவி, மானபங்கம் செய்து, இழிவுபடுத்தும் பார்ப்பனர்கள், உயர்சாதியினர் பற்றி அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, காவல் நிலையத்தில் பல புகார்கள் தரப்பட்டுள்ளன. ஆனால், காவல் நிலையம் எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. பெயர் குறிப்பிட்ட குற்றவாளிகளைகூட யாரென்றே அடையாளம் தெரியவில்லையென்று காவல்துறையினர் கூறுகிறார்கள். ஷெட்யூல்டு பிரிவினரின் தேசிய ஆணையத்துக்கும் புகார்கள் தரப்பட்டன. ஆனால், ஆணையத்தில் செயல்படும் பார்ப்பன உயர்சாதி அதிகாரிகள், எல்லாவற்றையும் மூடி மறைப்பதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்.

பார்ப்பனர்கள் தங்களை சமூகப் புறக்கணிப்பு செய்து, தொடர்ந்து இடையூறுகளை உருவாக்கி வருவதாக காவல் துறைக்கு தலித் பெண்கள் தந்த புகாரை காவல்நிலையமே ஏற்க மறுத்துவிட்டது. ஷெட்யூல்டு மக்களுக்கான தேசிய ஆணையம் - தலித் மக்கள், பள்ளிக்கூட இடத்தில் கோயில் கட்டியது சட்ட விரோதம் என்று கூறுகிறதே தவிர, அதே இடத்தில் பார்ப்பனர்கள் கட்டியுள்ள மூன்று கோயில்களைப் பற்றி வந்த புகார்களைப் பதிவு செய்யாமலே இருந்து வருகிறது. ‘பொதுவிடங்களில் தலித் கோயில் கட்டுவதை யாரால் அனுமதிக்க முடியும்?’ என்ற கேள்வியையே மீண்டும் மீண்டும் ஆணைய அதிகாரிகள் தம்மிடம் கேட்டார்கள் என்று எழுதுகிறார், அந்த செய்தியாளர்.

ஷெட்யூல்டு மக்களின் உரிமைகளுக்காக ஏராளமான சட்டங்கள், சட்டப் புத்தகங்களை நிரப்பிக் கொண்டிருக்கின்றன அதை அமுல்படுத்தக்கூடிய இடத்தில் பார்ப்பனர்களும், ஆதிக்க சாதியினருமே இருப்பதால், எந்த சட்டமும் செயல்பட மறுக்கிறது. நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதைதான்.

உ.பி.யில் மாயாவதி என்ற தலித் பெண் முதலமைச்சராக உள்ளார். அவரது ஆட்சியில் பார்ப்பனர்களே கொடிகட்டிப் பறக்கிறார்கள். பெரியார் சிலைகளை வைக்க பார்ப்பனர் எதிர்ப்பு தெரிவித்ததால், மாநிலத்தில் எந்த இடத்திலும் பெரியார் சிலைகளை வைக்கக் கூடாது என்று தடை விதித்து விட்டார் மாயாவதி. பெருமைக்குரிய தலைவர்கள் என்று மாநில அரசின் பட்டியலில் இருந்த பெரியார் பெயரை நீக்கச் சொல்லிவிட்டார். இராமாயணத்தை விமர்சித்து எழுதிய நூலுக்கும் தடை போட்டுவிட்டார். தலித் மக்களுக்காவது பாதுகாப்பு இருக்கிறதா என்று கேட்டால், அது பற்றி வரும் செய்தியும் அதிர்ச்சியாகவே உள்ளது.

உ.பி.யில் மதுரா மாவட்டம் கரோலி கிராமத்தில நடந்துள்ள ஒரு சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. கிராமத்தில் - ஒரு உயர்சாதி வீதியில் 6 வயது தலித் பெண் நடந்து சென்றாள் என்பதற்காக அந்தப் பெண்ணை அதே வீதியைச் சார்ந்த ஒரு உயர்சாதி இளைஞன் எரியும் நெருப்பில் தூக்கி வீசியிருக்கிறான். ஊரில் குப்பைகளைக் கொட்டி எரிக்கப்படும் தீ அது. பலத்த காயத்துடன் சிறுமி உயிருக்கு போராடுகிறாள். எட்டவா மாவட்டத்தில் 10 ரூபாய் கடன் தரவேண்டும என்பதற்காக ஒரு ஆதிக்கசாதி கடைக்காரர் தலித் இளைஞன் மீது தீ வைத்து சாகடித்திருக்கிறான். 10 ரூபாயைவிட மதிப்பிழந்து விட்டானா ஒரு தலித் இளைஞன்?

தமிழ்நாட்டில் வேண்டுமானால் நிலைமை அவ்வளவு மோசமில்லை என்று சொல்லிக் கொள்ளலாமே தவிர, இன்னமும் தீண்டாமையின் கொடுமைகள் பல்வேறு வடிவங்களில் உயிர்த் துடிப்புடன் இருந்து வருகிறது.

மதுரை மாவட்டம் உத்தப்புரம் கிராமத்தில் தலித் மக்கள் வாழும் பகுதியில் 15 அடி உயரத்தில் 600 அடி நீளத்தில் ஆதிக்க சாதியினர் தடுப்புச் சுவரை எழுப்பி, தாங்கள் வாழும் பகுதிக்குள் நுழையாமல் 18 ஆண்டுகளாக தலித் மக்களை தடுத்து வைத்துள்ள கொடுமை இப்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது.

1989 ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தில் ஏழு பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து ஆதிக்க சாதியினர் இந்த சுவரை எழுப்பினார்களாம். ‘எங்கள் கோயில் திருவிழாவின்போது பட்டாசு வெடிக்க - ஆதிக்க சாதியினர் தடை போட்டு வருகிறார்கள். இதைவிட கொடுமை, எங்கள் பகுதியில் ஒரு பேருந்து நிழல்குடை அமைக்கக்கூட அனுமதிக்க மறுக்கிறார்கள்’ காரணம், நிழல்குடை அமைத்து விட்டால், அங்கே தலித் மக்கள் உட்கார்ந்து விடுவார்கள் என்பதுதான் என்கிறார், சங்கரலிங்கம் என்ற அந்த கிராமத்தைச் சார்ந்த தலித் (55).

கோயிலில் வழிபட தலித் மக்கள் அனுமதிக்கப்படாததையொட்டி 1989 இல் நடந்த கலவரத்தில் தலித் மக்கள் கிராமத்தை விட்டே வெளியேறியிருந்த காலத்தில் இந்த தடைச் சுவரை ஆதிக்க சாதிகள் கட்டியுள்ளனர். கலவரம் வரக் கூடாது என்ற நோக்கத்தில்தான், இந்தத் தடுப்புச் சுவர் எழுப்பப்பட்டது என்கிறார், மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ்.எஸ். ஜவகர். இந்த மாவட்ட ஆட்சித் தலைவர் ‘தலித்’ ஆக இருந்தாலும், எப்போதும் பக்திப் பழமாக இந்துத்துவாவாதியாக தன்னை அடையாளம் காட்டிக் கொள்பவர். கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜெயேந்திரர் - நாகை மாவட்டம் வந்தபோது அவரது காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றவர்.

அந்தப் படம் நாளேடுகளிலும் வெளி வந்தது. தடுப்பு சுவரை எடுக்க மாட்டார்களாம். சுவரின் உயரத்தை இறக்கலாமா? அல்லது சுவருக்குள்ளே ஏதேனும் பாதை அமைக்கலாமா என்பது பற்றி, இரு தரப்பினரும் கூடிப் பேச அமைதிக் குழு அமைக்கப் போகிறதாம் அரசு நிர்வாகம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவு தலைவர் சம்பத், ‘சுவரை உடைப்போம்’ என்று அறிவித்துள்ளார். சுவர்கள் உடைக்கப்பட்டு சுக்குநூறாக்கப்பட வேண்டும். மனிதனாகப் பிறக்க மனிதனாக வாழ விரும்பும் எவன் ஒருவனும் இத்தகைய சுவற்றை அனுமதிக்கவே மாட்டான்.

Pin It