ஜனநாயகத்தை சீர்குலைத்து வருணாசிரம தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்திய நாட்டை இந்துத்துவா தேசமாக மாற்றிட வேண்டும் என்ற பாசிச நோக்கத்தோடு பல நூறு வருடங்களாக முயற்சி செய்து வருகிறது சங்பரிவார கும்பல்.

இந்திய இராணுவத்திலும், நீதி துறையிலும் இந்துத்துவா சிந்தனைகளைப் புகுத்தி அதில் ஓரளவு வெற்றியும் பெற்றுள்ள இந்த பாசிச கும்பல், சமீப காலங்களாக தமிழ்நாட்டிலும் வேர் விட துடித்துக் கொண்டிருக்கிறது!

கன்னியாகுமரியில் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டை நடத்தி முடித்த கையோடு கடந்த 2ம் தேதி நாகர்கோவிலில் இந்து வழக்கறிஞர்கள் கூட்டம் என்ற பெயரில் அரங்கக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர் இந்துத்துவாவினர். இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் வேதாந்தமும், ஜனதா கட்சியின் தலைவரும் ராஜீவ் கொலையில் ஜெயின் கமிஷனால் குற்றம்சாட்டப்பட்டவருமான சுப்பிரமணிய சுவாமியும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் பெரும்பாலானோர் வழக்கறிஞர்கள் என்ற செய்தி சமூக ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்து வழக்கறிஞர்கள் பாஜகவுடன் கை கோர்த்துக் கொண்டு மத வெறியை தூண்டினால் இதை முன் மாதிரியாகக் கொண்டு மற்ற மதத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் அவரவர் சார்ந்திருக்கும் மதத்தின் பெயரால் ஒன்று கூடி எதிர் நடவடிக்கைகளில் இறங்கினால் அமைதியான தமிழகத்தில் அபயாகரமான நிலைதான் உருவாகும்.

வழக்கறிஞர்கள் என்பவர்களும் மக்கள் பிரதிநிதிகளைப் போன்றவர்கள்தான். மத, இன, மொழிக்கு அப்பாற்பட்டவர்களாக வழக்கறிஞர்கள் இருக்க வேண்டும். மதவெறி அமைப்புகளில் அவர்கள் பங்கெடுப்பது ஆரோக்கியமான விஷயமாக இருக்காது.

இந்தியாவில் நீதித்துறையிலும், இராணுவத் துறையிலும் ஊடுறுவிய காவி பயங்கரவாத கும்பல் வழக்கறிஞர்கள் இடையேயும் மதவெறியை தூண்டி தனது பணியை சத்தமில்லாமல் நடத்தத் துவங்கியுள்ளதற்கான அறிகுறிதான் இது.

இந்தியத் திருநாட்டை வழி நடத்திய முக்கியத் தலைவர்களாகட்டும், இந்திய விடுதலைக்காக போராடியவர்களாகட்டும் இவர்களில் அதிகமானோர் வழக்கறிஞர்கள் ஆவார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி பெறுவதற்காக போராடக்கூடிய வழக்கறிஞர்கள் காவிக் கும்பலின் மதவெறி வலையில் சிக்குவது இந்திய ஜனநாயகத்திற்கு எதிராக ஒலிக்கும் அபாய சங்காகும்.

Pin It