dalit attack

கடந்த 11ஆம் தேதி 4 இளைஞர்களை இரும்புச் சங்கிலியால் கட்டிவைத்து, இரும்புக் கம்பிகளால் தாக்கிய ஈவு இரக்கமற்ற கொடூரக் காட்சியை ஊடகங்களின் வாயிலாக நாடே பார்த்தது.

கொடூரம் நடந்த மாநிலம், பிரதமர் மோடியின் குஜராத். தாக்கப்பட்டவர்கள் தலித் இளைஞர்கள். தாக்கியவர்கள், ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான கோ ரக்ஷன் சமிதி. தாக்குதலுக்கான காரணம், இறந்துபோன மாட்டின் தோலை அவர்கள் வைத்திருந்தனர் என்பதுதான்.

குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள மொட்டா சமதியாலா என்னும் சிற்றூரில்தான் இந்த மாபெரும் வன்முறை நடந்துள்ளது. பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில், திமிர் பிடித்த இந்துத்துவ வெறியர்கள் இந்தக் காட்சியை அரங்கேற்றி உள்ளனர். கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது காவல்துறை. தங்களின் ‘வீர தீரப் பிரதாபத்தை’ அவர்கள் படமாக எடுத்து, சமூக வலைத்தளங்களில் வேறு வெளியிட்டுள்ளனர்.

ஆனால் இந்த முறை, குஜராத்தில் வாழும் தலித் மக்கள் அஞ்சி ஒடுங்கவில்லை. ஆவேசமாகக் கிளர்ந்தெழுந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் திரண்டு தங்கள் போர்க்குணத்தைக் காட்டியுள்ளனர். அவர்களின் போராட்டம் ஒரு புதிய முறையில், புதிய வீரியத்தோடு புறப்பட்டுள்ளது.

பசுவைப் பாதுகாப்பதாகக் கூறும் பார்ப்பனர்கள், ஒரு நாளாவது மாடுகளைக் குளிப்பாட்டி இருக்கின்றனரா? மாட்டுக்குப் புல் அறுத்துப் போட்டதுண்டா? தடவிக் கொடுத்துத் தண்ணீர் காட்டியிருப்பார்களா? உழைக்கும் மக்களே அனைத்தையும் செய்கின்றனர். அந்த மாடுகள் இறந்த பின்னும் தலித் மக்களே அவற்றை எரிக்கின்றனர். ஆனால் தாங்கள்தான் பசுக்களைக் காப்பாற்றுகிறோம் என்கிறது பார்ப்பனக் கும்பல்.

இப்போது செத்த மாடுகளுடன் தெருக்களில் இறங்கியுள்ளனர் தலித் மக்கள். இறந்துபோன மாடுகளை லாரிகளில் கொண்டுவந்து சுரேந்தர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொட்டியுள்ளனர். கோன்டல் துணை ஆட்சியர் அலுவலகம் மாட்டு எலும்புகளால் நிரம்பி வழிகிறது. இறந்த மாட்டுத் தலைகளுடன் மக்கள் ஊர்வலம் வருவதைத் திவ்ய பாஸ்கர் என்னும் குஜராத்தி இதழ் வெளியிட்டுள்ளது.

இனிமேல் இறந்த மாடுகளை நீங்களே அப்புறப் படுத்திக் கொள்ளுங்கள் என்கின்றனர் போர்க்கோலம் கொண்டுள்ள அம்மக்கள்.

உழைக்கும் மக்களின் வலிமை என்ன என்பதைஉனர வேண்டிய கட்டாயம் சங் பரிவாரங்களுக்கு வந்திருக்கிறது. நாறிக் கொண்டிருக்கிறது குஜராத்!

Pin It