பவுத்த மதவாதம் இலங்கை அரசுக்குச் சொந்தம். இந்து மதவாதம் மோடி அரசுக்குச் சொந்தம். இதை உறுதி செய்வது போல அமைந்திருக்கிறது `இந்தியக் குடியுரிமைச் (திருத்த) சட்டம்  2019'.

குஜராத் கலவரம், கோத்ரா இரயில் எரிப்பு இவைகளால் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள் முஸ்லிம்கள். அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலும், அது இராமன் பிறந்த இடம் என்று சொல்வதிலும் இஸ்லாமிய எதிர்ப்பு இருக்கிறது.

muslim woman refugeeஇந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கை நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.     1915 ஆம் ஆண்டு அமிர்தசரசில் மதன்மோகன் மாளவியா, லாலா லஜபதிராய் ஆகியோர் தலைமையில் உருவான அமைப்பு ‘அகில பாரதிய இந்து மகா சபா'. 1920 ஆம் ஆண்டு இதன் தலைவராக வந்த வினாயக் தாமோதர் சாவர்க்கார் என்பவரால் கொள்கையாக வடிவமைக்கப்பட்டதுதான் ‘இந்து தேசியம்'. இதற்குள் இருப்பது இந்துராஷ்டிரம், பார்ப்பனியம்.  இந்த சபாவில் இருந்து உருவானது ஆர்.எஸ்.எஸ் என்ற   ‘ராஷ்ட்ரியசுயம் சேவக் சங்க்' . 1925 செப்டம்பர் 27 ஆம் நாள்  இவ்வமைப்பை உருவாக்கியவர் கேசவ் பாலிராம் ஹெட்கேவர்.

 1940 முதல் 1973 வரை இதற்குத் தலைவராக இருந்த மகாதேவ் சதாசிவ கோல்வால்கர், இந்து மகாசபாவின் அதே இந்து தேசியத்தை ஆர்.எஸ்.எஸ்-இன் அடிப்படைக் கொள்கையாக்கினார். ஆர்.எஸ்.எஸ்-இன் இன்றைய அரசியல் பிரிவான பாரதிய ஜனதா கட்சியை முன்னிறுத்தி, மோடி என்ற நிழல் பிரதமரை வைத்து இன்று இந்தியாவை ஆட்சி செய்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்நிலையில் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே நாடு, அது இந்து ராஜ்யம், இந்து தேசியம் என்ற கோட்பாட்டைத் தோலுரித்துக் காட்டுவதாக அமித் ஷா மூலம் வந்திருக்கிறது ‘இந்தியக் குடியுரிமைச் (திருத்த) சட்டம் 2019.   இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய முஸ்லிம் நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இந்துக்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், பவுத்தர்கள், சமணர்கள் உள்ளிட்டோர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். ஆனால்  முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படுகிறது, வழங்கப்பட மாட்டாது.

மதச்சார்பற்ற சமத்துவம் இப்படித் தகர்க்கப்படுவதால்,  எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இச்சட்ட முன்வடிவை எதிர்த்தன. 1955 ஜூலை 19ஆம் நாள் இயற்றப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின்படி, இந்தியாவில் 11 ஆண்டுகள் தங்கி இருந்தால் அவர்களுக்குக் குடியுரிமை கிடைக்கும். இந்தச் சட்டம் திருத்தப்பட்ட போது 11 ஆண்டுகள் 6 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டன. கவனிக்க வேண்டிய செய்தி, இங்கே மதம் நுழைக்கப்படவில்லை.

1971 இல் நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போர், பங்களாதேஷ் விடுதலைப் போராட்டங்களினால், அந்த நாடுகளில் இருந்து பல இலட்சம் பேர்கள் அகதிகளாக இந்திய வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மேற்கு வங்கத்தில் குடியேறினார்கள்.

1971 மார்ச் 24ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்னால் இந்தியாவில் வசித்து வந்த அகதிகள் ‘தேசியக் குடிமக்கள் பதிவேட்டில்' சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு வாக்குரிமை உள்ளிட்ட பிற உரிமைகளும் கொடுக்கப்பட்டன. இங்கும் மதம் நுழைக்கப்படவில்லை. ஆனால், நாடாளுமன்ற இரு அவைகளிலும் வைக்கப்பட்ட, 2019 குடியுரிமைச் சட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக, நேரடியாக மதம் பாய்ச்சப்பட்டு விட்டது. இந்தியாவின் மதச்சார்பற்ற, சமத்துவம், பன்முகத் தன்மை ஆகிய கோட்பாடுகளுக்கு எதிராக இந்தக் குடியுரிமைச் சட்டம் இடியாக இறங்கி விட்டது.

இது ஒருபுறம் இருக்க, பவுத்த சிங்களப் பேரினவாதத்தால் அகதிகள் ஆக்கப்பட்டு தமிழகம் (இந்தியா) வந்துள்ள ஈழத் தமிழ் அகதிகள் குறித்து இந்தக் குடியுரிமைச் சட்ட முன்வடிவு எதுவும் சொல்லவில்லை.

தமிழ்நாட்டில் 24 மாவட்டங்களில், 107 அகதி முகாம்களில் 30 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள 59,714 ஈழத் தமிழர்களில் 98 விழுக்காடு இந்துக்கள். இவர்களின் நிலை என்ன? இவர்களுக்குக் குடியுரிமை உண்டா? இல்லையா?

அஸ்ஸாம், திரிபுரா, மேகாலயா, மேற்கு வங்கம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் இச்சட்டத்திற்கு எதிராக மக்கள் போராடுகிறார்கள். அங்கே சமூக ஊடகங்கள் துண்டிக்கப்பட்டதாகச் செய்திகள் சொல்கின்றன. பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்பு தோன்றத் தொடங்கி விட்டது என்றும் செய்திகள் வருகின்றன.

இந்தக் குடியுரிமைச் சட்டம் நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேறி விட்டது.  

இத்திருத்தச் சட்டம் இன்று முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறது. நாளை தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களின் நிலையும் இப்படித்தான் ஆகும்.

Pin It