மாணவர்கள் தரும் தகவல்கள்

சென்னை பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவிலுள்ள செயிண்ட் மேரிஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவன் முஹம்மது இஸ்மாயில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது இந்தி வகுப்பு ஆசிரியை உமா மகேஸ்வரியை கொலை செய்த சம்பவம் சென்னையை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தியாவில் முதன் முறையாக இது போன்ற சம்பவம் நடைபெற்றிருப்பது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 9ம் தேதி நடந்த இந்த சம்பவம் குறித்து நமக்கு தகவல் கிடைத்ததும் செயிண்ட் மேரிஸ் பள்ளிக்கு விரைந்தோம். மீடியாக்களும், பொது மக்களும் திரண்டிருக்க... காவல்துறையினர் யாரையும் உள்ளே விடாமல் தங்களின் விசாரணையை மேற்கொண்டிருந்தனர்.

மீடியாக்கள் உள்ளே நுழைந்து விடாதவாறு பாதுகாப்பை பலப்படுத்தியிருந்த போலீஸ் இஸ்மாயிலுடன் படித்த சக மாணவர்களை பள்ளிக்குள் விசாரித்துக் கொண்டிருந்தனர். அந்த மாணவர்கள் விசா ரணை முடித்து விட்டு வந்தால் அவர்களிடம் பேட்டி எடுக்கலாம் என மீடியாக்கள் எதிர்பார்த்தபடி அங்கேயே காத்திருக்க... விசாரிக்கப்பட்ட மாணவர்களை சைலண்ட்டாக பின்பக்க வாசல் வழியாக எஸ்கேப் ஆக்கினர் காவல்துறையினர்.

போலிஸ் விசாரணைக்குப் பின் வெளியே வந்த பள்ளிக்கூட நிர்வாகியான ஃபாதர் போஸ்கோ,

“எங்கள் பள்ளியில் நடந்தி ருக்கும் இந்த துயரச் சம்பவம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலையுண்ட ஆசிரியை உமா மகேஸ்வரி மிகவும் நல்லவர். அவர் மாணவர்களுடன் கண்டிப்புடன் நடந்தாலும், அன்பாகவும் இருப்பவர் என்று மாணவர்கள் கூறுகின் றனர்.

மாணவர் இஸ்மாயில் சரியாகவே பள்ளிக்கு வரு பவர் என்றாலும் சரியாக படிக்க மாட்டார் என்ப தால் அவரது ரிப்போர்ட் கார்டில் இதனை ஆசிரியர் குறிப்பிட்டதால் அதன் விளைவாக இந்த விபரீதம் ஏற்பட்டிருக்கிறது.

ஆசிரியையின் மறைவை யொட்டி 12ம் தேதி திங்கள் கிழமைவரை பள்ளிக்கு விடுமுறை அளித்திருக்கிறோம். அன்றைய தினம் ஆசிரியை உமா மகேஸ்வ ரிக்கு துக்கம் அனுஷ்டிப் போம். இது துயரச் சம்ப வம்தான். மாண வர்கள், ஆசிரி யர்கள் மற்றும் பெற்றோர்களுக் கிடையே "கவுன் சிலிங்' நடத்த திட்டமிட்டுள்ளோம்...'' என பேலன்ட்ஸாக பேசினார்.

மீடியாக்கள் குழுமியிருந்ததை சமயோசிதமாக பயன்படுத்திக் கொண்ட தமிழ்நாடு உயர் நிலை - மேல்நிலை பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் அங்கேயே ஒரு மினி ஆர்ப்பாட்டத்தை நடத்தி முடித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய ஆசிரியர் கழகத்தின் தலைவரான முருகேசன், “தமிழக அரசு ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். இனி இது போன்ற துயரச் சம்பவங்கள் நிகழாதவாறு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்...'' என்றார்.

முன்னதாக, சம்பவம் குறித்து தகவல் அறிந்த எக்ஸ்பிளனேடு காவல்நிலைய ஆய்வாளர் செல்லப்பா தலைமையிலான போலீஸார் மாணவன் இஸ்மாயிலை கைது செய்து அவர் மீது கொலை வழக்கை பதிவு செய்தனர்.

போலீஸ் விசாரணையில், “எனக்கு இந்திப் பாடம் சரியாக வராது. இதனால் உமா டீச்சர் என்னை திட்டிக் கொண்டே இருப்பார். நான் சரியாக படிப்பதில்லை என ரிப்போர்ட் கார்டில் எழுதியதால் என் பெற்றோர் என்னைத் திட்டினார்கள். அந்தக் கோபத்தில் டீச்சரைக் கொல்லத் தீர்மானித்தேன். என் வீட்டருகே ஒரு கடையிலிருந்து கத்தி வாங்கிக் கொண்டு வந்தேன். அன்றைய தினம் வழக்கத்திற்கு மாறாக முன் கூட்டியே பள்ளிக்கு வந்து விட்டேன். அப்போது வகுப்பில் யாரும் இல்லாததால் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டீச்சரை கத்தியால் குத்தினேன்...'' என்று மாணவன் இஸ்மாயில் வாக்குமூலம் தந்ததாக சொல்கிறது போலீஸ்.

ஆனால், சம்பவம் நடந்தபோது இஸ்மாயிலுடன் சில மாணவர்கள் இருந்துள்ளனர் என்பதும், அவர்களிடம்தான் அன்று மாலை மீடியாக்களைகூட உள்ளே விடாமல் காவல்துறையினர் விசாரித்தனர் என்பதும், அந்த மாணவர்களை மீடியாக்களின் கண்களில் படாமல் பின்பக்க வாசல் வழியாக எஸ்கேப் செய்தனர் என்பதும், இஸ்மாயில் கொடுத்ததாக போலீஸ் கூறும் வாக்கு மூலத்திற்கு முரணாக உள்ளது.

ஆசிரியை உமா மகேஸ்வரியை பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் மாணவன் இஸ்மாயிலுக்கு இருந்திருந்தாலும் இது திட்டமிட்ட கொலை அல்ல என்பதற்கான முகாந்திரங்கள் இருக்கவே செய்கிறது.

முதலில் ஜியாமிட்ரிக்காக பயன்படுத்தும் காம்ப்பஸை எடுத்துதான் குத்தியிருக்கிறான் இஸ்மாயில். அதன் பின்னர்தான் கத்தியால் குத்தினான் என்று சம்பவத்தைப் பார்த்த மாணவர்கள் மத்தியிலிருந்து தகவல் வருகிறது.

இந்தச் சம்பவத்தில் போலீஸ் தரப்பு செய்திகளையே மீடியாக்கள் வெளிப்படுத்தி வரும் நிலையில், இஸ்மாயிலின் குடும்பத்தினர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய, சென்னை ஏழு கிணறு பகுதியில் இருக்கும் அவரது வீட்டிற்குச் சென்றோம்.

அப்பகுதிவாசிகள் இஸ்மாயிலின் வீட்டைக் காண்பிக்கவே தயக்கம் காட்டி ஒதுங்கிக் கொண்டனர். நாம் அங்கிருந்த ஆட்டோ டிரைவரை அணுக... இஸ்மாயிலின் வீட்டை நமக்கு துல்லியமாக அடையாளம் காட்டினார் அந்த ஆட்டோ டிரைவர்.

இடத்தை கண்டறிந்து இஸ்மாயிலின் குடும்பத்தை நாம் சந்தித்தோம். நம்மிடம் பேசவே பயந்தனர். “தயவு செய்து எதுவும் கேட்க வேண்டாம். நாங்கள் ரொம்பவே "டிஸ்ட்ரப்' ஆகியிருக்கோம். எங்களை மேலும் டென்ஷனாக்க வேண்டாம். ப்ளீஸ்...'' என்று கெஞ்சியபடியே நம்மிடம் பேச மறுத்தனர்.

பெரும் முயற்சிக்குப் பின் ஒருவழியாக இஸ்மாயிலின் உறவினர் ஒருவரிடம் பேசி னோம். பெயர் போட வேண் டாம் என்ற கண்டிஷனோடு பேச ஆரம்பித்த அவர், நம் கையிலி ருந்த கேமராவைப் பார்த்தபடி போட்டோவும் எடுக்க வேண் டாம் என்றவாறே பேசத் தொடங்கினார்.

“இஸ்மாயிலைப் பொறுத்த வரை ரொம்பவே சாஃப்ட் டைப். அதிர்ந்து பேச மாட்டான். பள் ளியை விட்டு வீட்டுக்கு வந்தால் போனில்கூட அவனது நண்பர்க ளுடன் பேச மாட்டான். நாங்கள் ஏதாவது கேட்டால்தான் பதில் தருவான்; அதுவும் அளவோடு.

இரண்டு வருடங்களுக்கு முன் அவனுக்கு "ஃபிக்ஸ்' நோய் வந் தது. டாக்டரிடம் காண்பித்த போது, மூளையில் சிறிய பாதிப்பு இருக்கிறது. அதனால் அவன் பதட்டம் அடையாதவாறு கவ னித்துக் கொள்ளுங்கள். ஸ்டேடி யம் போன்ற விளையாட்டு இடங்களுக்கு அழைத்துச் செல் லுங்கள். ரிலாக்ஸாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள் என அட்வைஸ் செய்தார். அவனை நல்லவிதமாகவே கவனித்து வந்தோம். பின்னர் இது ஒரு வருடத்தில் குணமாகி விட்டது.

இந்த தகவலை அவனது வகுப்பு ஆசிரியைகளிடமும் சொல்லியிருக்கிறோம். கடந்த மே மாதம்வரை வேறு ஆசிரியை தான் அவனுக்கு கிளாஸ் டீச்ச ராக இருந்திருக்கிறார்கள். ஜூன் மாதத்திலிருந்துதான் உமா மகேஸ்வரி பாடம் எடுத்திருக்கி றார். ஹிந்தி பாடத்திற்கும், சயின்ஸ் பாடத்திற்கும் உமா மகேஸ்வரிதான் ஆசிரியை.

சயின்ஸ் நன்றாகப் படித்தவ னுக்கு ஹிந்திப் பாடம் சரியாக வராததால் அப்பாடம் குறித்து அவனுக்கு டென்ஷன் இருந்திருக் கிறது. வகுப்பிலுள்ள மாணவர்க ளோடு சேர்க்காமல் அவனை தனியாகவே உட்கார வைத்துள் ளனர். ஆசிரியையின் டார்ச்சரும் இருந்திருக்கிறது. எதிர்பாராத விதமாக இந்த சம்பவம் நடந்து விட்டது. உமா மகேஸ்வரிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களின் நிலையை நினைத்து மிகவும் வருத்தமாக உள்ளது...'' என்று நிறுத்தியவரிடம்,

“உமா மகேஸ்வரி குடும்பத் தைச் சந்தித்துப் பேசினீர்களா?'' என்றோம்.

“இல்லை! நேற்றுதான் (10ம் தேதி) அவரை அடக்கம் செய்திருக்கிறார்கள். அவர்கள் துக்கத் தில் இருப்பார்கள். சில நாட்கள் கழித்து அவர்களைச் சந்தித்து ஆறுதல் சொல்லவிருக்கிறோம்...'' என்று சொன்ன அவரது கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது.

இஸ்மாயிலின் வகுப்புத் தோழர்கள் சிலரிடம் விசாரித்தோம். “உமா மகேஸ்வரி டீச்சர் ரொம்ப நல்லவங்க. நாங்க நல்லா படிக்கனும்னு ரொம்பவே அக்கறை எடுப்பாங்க. பாடத்துல கண்டிப்பா இருப்பாங்க. ஆனா அன்பாகவே பழகுவாங்க. பாடத்துல வீக்கான பசங்களுக்கு 8மணி வரைக்கும் டியூஷன் எடுப்பாங்க. அப்ப எங்களுக்குப் பசிச்சா அவங்க காசுலயே பரோட்டா வாங்கிக் கொடுப்பாங்க.

அதே மாதிரி இஸ்மாயிலும் நல்லவன்தான். யாரோடயும் சண்டை போட மாட்டான். அதிகமா பேசவும் மாட்டான். அவ னுக்கு பிரண்ட்ஸ் கூட கிடையாது. ரொம்ப நீட்டா இருப்பான் அவன். இப்படி செஞ்சாங்கிறதை எங்களால நம்பவே முடியல...'' என இரண்டு பேருக் குமே நற்சான்றிதழ்களை வழங் கும் அவர்கள்,

“எங்க மிஸ்ஸை இஸ்மாயில் குத்துனதைப் பார்த்த பி.ஜே. இருதய ராஜ் சாரே எங்ககிட்ட, "இஸ்மாயில் இப்படி பண்ணுனது நம்பவே முடியலைடா. அவனை திட்டக் கூட மனசு வர லைடா. டிரஸ் பண்றதுல என்னை ரோல் மாடலா ஃபாலோ பண்ண அவனா இப்படின்னு' சொன்னாரு...'' என கூடுதல் தகவலையும் தருகிறார்கள்.

எதிர்பாராதவிதமாக நடந்து விட்ட இந்த சம்பவம் ஆசிரியர் கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்மாயிலை சிறார் நீதி மன் றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ் பின்னர் அரசு சீர்திருத்தப் பள் ளிக்கு அவனை அனுப்பி வைத் துள்ளனர். சிறார் நீதிமன்றத்தில் இவ்வழக்கு தொடர்பான விசார ணையை எதிர்கொள்ளவிருக்கி றார் மாணவர் இஸ்மாயில்.

இந்த விசாரணையை பெருநகர குற்றவியல் நடுவர் மற்றும் இரண்டு சமூக ஆர்வலர்கள் அடங்கிய இளஞ்சிறார் நீதி முறை வாரியம் (ஒன்ஸ்ங்ய்ண்ப்ங் ஒன்ள்ற்ண்ஸ்ரீங் ஆர்ஹழ்க்) மேற்கொள்ளவிருக்கிறது. இவ்வாரியம் 4 மாத காலத்திற் குள் விசாரணையை முடித்துக் கொண்டு, தண்டனைக் காலம் குறித்து தீர்மானிக்கும் எனத் தெரிகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் உரிமைப் பேரவை, சிறார் குற்றவாளிகளுக்கு வைத்தி ருக்கும் வரையறைப்படி இஸ்மாயிலுக்கான தண்டனைக் காலம் 3 வருடங்களுக்கு மிகாது என்கின்றனர் குற்றவியல் வழக்குகளை கவனிக்கும் சென்னை உயர் நீதி மன்ற வழக்குரைஞர்கள்.

எப்படி இருப்பினும் மாணவர்கள் தரும் தகவலின்படி அன்பாக நடந்து கொள்ளும் உமா டீச்சர், படிப்பு விஷயத்தில் மிக கண்டிப்பானவராகவும் இருந்திருக்கிறார். மாணவன் இஸ்மாயில் சரியாக படிக்காத காரணத்தால் அவன் மீது உமா டீச்சர் காட்டிய அதீத கண்டிப்பு அல்லது தீவிர அக்கறை - அதன் காரணமாக அவர் மேற்கொண்ட அணுகுமுறை, ஏனைய மாணவர்கள் மத்தியில் இஸ்மாயிலுக்கு தாழ்வு மனப்பான்மையும், பழி உணர்ச்சியும் ஏற்பட்டு இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

மாணவர்களுக்கு மன உளைச்சலை உண்டாக்கக் கூடாது!

ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைச் சம்பவத்தையடுத்து ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்து பல்வேறு கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. அதில் ஆசிரியர்கள் மாணவர்களை மன அழுத்தத்திற்கு உள்ளாக்குகின்றனர் என்ற கருத்து பிரதானமாக பெற்றோர் தரப்பிலிருந்து முன் வைக்கப்படுகிறது.

மாணவர்களின் மன அழுத்தத்திற்கு இன்றைய கல்வி முறையும் ஒரு காரணமாகிறது. சுமக்க முடியாத அளவிற்கு மாணவர்கள் மீது பாடங்களைத் திணிக்கின்றனர் ஆசிரியர்கள். பாலர் வகுப்பில் படிக்கும் குழந்தைகள் மூட்டையைப் போன்று புத்தகப் பையை சுமந்து செல்வதை பார்க்கவே பரிதாபமாக உள்ளது.

"புத்தகப் பையை சுமக்க முடியாமல் பெண் குழந்தைகள் பூப்பெய்தி விடுகின்றனர்' என்று இன்றைய கல்வி முறைத் திணிப்பை கவிதையாக பாடுகிறார் வைரமுத்து.

பெரும்பாலான பள்ளிக் கூடங்கள் தேர்வு விகிதத்தை காண்பிப்பதற்காக மாணவர்களுக்கு கூடுதல் பாடங்கள் கொடுத்து, ஸ்பெஷல் கிளாஸ் என்று பள்ளி முடிந்த பின்பும் மாணவர்களை தங்க வைத்து அவர்களின் மன உளைச்சலை அதிகப்படுத்துகின்றனர். இதனால் மாணவர்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

மாணவர்கள் மீதான சில ஆசிரியர்களின் அதிகபட்ச அக்கறை செயற்கைத்தனமாக வெளிப்பட்டு மாணவர்களை வெறுப்புக்குள்ளாக்குகிறது.

முன்பெல்லாம் மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்றால் அவனை ஆசிரியர்கள் லேசாக அடிப்பார்கள். அதை மாணவர்கள் ஒரு பொருட்டாக கருத மாட்டார்கள். ஆனால் இப்போது கால மாற்றம், சுற்றுச் சூழல், கல்வி முறை, நவீனமயம் ஆகியவை அடுத்தடுத்த தலைமுறையின் மனதில் மாற்றங்களை ஏற்படுத்தியதால் ஆசிரியர்கள் அடிப்பதை ஜீரணித்துக் கொள்ளும் மனோபாவம் அற்றவர்களாக வளர்ந்திருக்கிறது மாணவர் சமுதாயம்.

சில ஆசிரியர்கள் கண் மூடித்தனமாக மாணவர்களை அடிப்பதால் அது பிரச்சினையை உருவாக்கி விடுகிறது. இதன் காரணமாகவே மாணவர்களை அடிக்கக் கூடாது என அரசு சட்டம் இயற்றியது. இத னால் ஆசிரியர்கள் தங்களின் கோபத்தை, மாணவர்களை திட்டுதல், மற்ற மாணவர் கள் முன் கேவலமாகப் பேசுதல், மரியாதைக் குறைவாக நடத்துதல், மதிப்பெண்க ளைக் குறைத்தல், பெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டுதல், ரிப்போர்ட் கார்டில் வேண்டுமென்றே குறிப்பு எழுதுதல், பள்ளி முடிந்த பின்பும் காத்திருக்க வைத்து வீட்டுக்கு அனுப்புதல் என வேறு வகையில் வெளிப்படுத்தும் போக்கு பெரும்பாலான ஆசிரியர்கள் மத்தியில் நிலவுகிறது.

ஆசிரியர் - மாணவர்களுக்கு இடையே உள்ள உறவு சிதைவடைந்து போக இவை காரணங்களாகின்றன. இவை தாழ்வு மனப்பான்மையை, பழிவாங்கும் உணர்வுகளை மாணவர்களின் மனதில் பதிய வைக்கின்றன.

இன்னொருபுறம் பெற்றோரும், படி படி என்று பிள்ளைகளை படுத்தி எடுப்பது மாணவர்களின் மன அழுத்தத்தை கூட்டுகிறது. இதுபோன்ற நடத்தைகள் களையப் பட்டு மாணவர்களின் மனதில் புத்துணர்ச்சியைப் பாய்ச்சும் நடவடிக்கைகளை ஆசிரியர்களும், பெற்றோரும் மேற்கொள்ள வேண்டும். அதோடு பெண் பிள்ளைகளைக் கண்காணிப்பதைப் போலவே ஆண் பிள்ளைகளின் நடவடிக்கைகள், அவர்களின் நட்பு வட்டாரம் ஆகியவற்றையும் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.

ஆசிரியை உமா மகேஸ்வரியின் கொலைச் சம்பவம் தந்த படிப்பினையின் காரணமாக "மாணவர்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கும் தண்டனைகள் கூடாது' என்று மெட்ரிகுலேஷன் இயக்கம் தெரிவித்துள்ளதோடு, மாணவர் - ஆசிரியர் இடையே பிரச்சினை வராதவாறு கண்காணிக்கவும் அந்த இயக்கம் முடிவு செய்திருப்பது வரவேற்க வேண்டிய முடிவுதான். மன உளைச்சலை ஏற்படுத்துவதும்கூட ஒரு வகையில் கொலைதான். உள்ளத்தைக் கொலை செய்வதுதான்!

Pin It