தேர்தல் என்று வந்துவிட்டாலே நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தேனாறும் - பாலாறும் ஓட வைப்போம்' என்ற ரீதியிலான அரசியல்கட்சிகளின் வாக்குறுதிகளுக்கு பஞ்சமிருக்காது. இந்த வகை வாக்குறுதியளிப்பதில் இந்தியாவில் உள்ள எந்த அரசியல் கட்சியும் விதிவிலக்கல்ல. இந்நிலையில், உ.பி. மாநில தேர்தலையடுத்து பல்வேறு கட்சிகளும் வழக்கமான வாய்ப்பந்தல் போட்டதைப்போல், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித், 'உ.பி. யில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு ஒன்பது சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று தேர்தல் பிரச்சாரத்தில் பேச அது பரபரப்பை உண்டாக்கியது.

இதற்கிடையில் சல்மான் குர்ஷித் தேர்தல் விதிமுறைகளை மீறிவிட்டார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதிக்கு தேர்தல் கமிஷன் பரிந்துரைக்க, ஜனாதிபதியோ உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்திய பாரதீய ஜனதா கட்சியின் அத்வானி முதல், நம்ம ஊரு பொன்.ராதாகிருஷ்ணன் வரை, சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமுறித் தீர்த்து விட்டார்கள். சம்மந்தப்பட்ட சல்மான் குர்ஷித்தோ, நான் தேர்தல் அறிக்கையில் உள்ளதைத்தான் பேசினேன் என்று தனது தனது தரப்பு நியாயத்தை சொல்கிறார். பிறகு ஒரு கட்டத்தில் என்ன நெருக்கடியோ தெரியவில்லை. தனது பேச்சுக்கு சல்மான் குர்ஷித் தேர்தல் கமிஷனிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதியை பிரச்சாரத்தில் சொல்வது எந்தவகை விதிமீறலோ நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை சல்மான் குர்ஷித் பேச்சு விதிமீறல் என்றால், அதே உ.பி.யில் முலாயம் சிங், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 18 சதவிகிதம் இடஒதுக்கீடு தருவோம் என்று சொல்லியுள்ளாரே! அவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என்ற கேள்வியை தமிழக காங்கிரஸ் பிரமுகர் இதயதுல்லாஹ் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பினார். அதே போன்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயில் எழுப்புவோம் என்று கூறும் பாஜகவின் உளறல்கள் தேர்தல் கமிஷனின் காதுகளை மிகவும் தாமதமாக சென்றடைந்துள்ளது.

ராமர் கோயில் விவகாரத்தை பாஜக பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று அகில பாரதிய ஹிந்து மகாசபா, அகில பாரதிய சந்த் சமிதி, சந்த் மகா சபா போன்ற ஹிந்து அமைப்புகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தன. சல்மான் குர்ஷித் விசயத்தில் பாய்ந்து கிளம்பிய தேர்தல் கமிசன், பாஜக விசயத்தில் புகார் கிளம்பும் வரை பரம சாதுவாக நடந்து கொண்டது சந்தேகத்தை கிளப்புகிறது. இந்நிலையில், சல்மான் குர்ஷித் பின் வாங்கினாலும் தேர்தல் கமிஷனை நான் விட்டேனா பார் என்று சீறிக் கிளம்பியுள்ளார் மத்திய உருக்குத்துறை மந்திரி பெனி பிரசாத் வர்மா.

இவர் பரூக்காபாத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது, "முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தப்படும். தேர்தல் கமிஷன் எனக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பினால் அனுப்பட்டும். நான் அதை வரவேற்கிறேன். முஸ்லிம்களுக்கு ஆதரவாக சல்மான் குர்ஷித் நேர்மையாக போராடி வருகிறார். உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு கூடுதல் இட ஒதுக்கீடுக்கு ஆவண செய்வோம்...'' என்று கர்ஜித்துள்ளார். சல்மான் குர்ஷித் பிரச்சினை ஓய்ந்த நிம்மதியில் இருந்த தேர்தல் கமிஷனுக்கு பெனிபிரசாத்தின் இந்த திடீர் சவால் தலைவலியை தந்துள்ளது.

Pin It